நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.. SONG NO : 20...திருவெம்பாவை.....பாடல் எண் : 20


பாடல் எண் : 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொருள்:
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

எல்லாப் பொருள்களுக்கும் முதலாக ஆதியாக‌ இருக்கின்ற உன் திருவடி மலர்களுக்கு வணக்கம்!... (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

அனைத்துப் பொருள்களுக்கும் முடிவாக இருக்கின்ற  செந்நிறமான தளிர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.. ( இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்

போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற பொன்னை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்..

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

எல்லா உயிர்களும் நிலைபெறும் இடமாக‌ இருக்கின்ற பூப் போன்ற மென்மையான, ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளுக்கு வணக்கம்.


போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

எல்லா உயிர்களுக்கும் முடிவு எய்துவதற்குக் காரணமாக இருக்கின்ற இணையடிகளுக்கு வணக்கம்.

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

திருமாலும் பிரம்ம தேவனும் எவ்வளவு முயற்சித்தும் காண  முடியாத திருவடித் தாமரைகளுக்கு வணக்கம்.

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

நம் அனைவரையும் ஆட்கொண்டருளும் பொன்மலர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

இவ்விதமாக இறைவனைப் போற்றி   நாம் அனைவரும் மகிழ்ந்து மார்கழி நீராடுவோமாக!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதியாகிய இறைவனது இணையடிகளைப் போற்றுவது என்பது மானிடப் பிறவி எடுத்ததன் மிக உயர்ந்த பயனாகச் சொல்லப்படுகிறது..இவ்வாறு போற்றுதல் ஒன்றே பிறவிப் பயனைப் பெற்றுத் தரும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

என்கிறார் திருவள்ளுவர்.. இறைவனது திருவடிகளைப் போற்றுவது மிக உயரிய செயல்

'இறைவனைப் போற்றுகிறோம்' என்று சொல்லாமல், குறிப்பாக, இறையனாரின் இணையடிகளைப் போற்றுவதற்குக் காரணம் உள்ளது..இறைவனை எத்தனை உருவில் நாம் வழிபட்டாலும், எத்தனை முகங்களுடையவராய், திருக்கரங்கள் உடையவராய் நாம் துதித்தாலும், அவரது இணையடிகள்  மட்டும் இரண்டு.. மானிடர்களாகிய நாம், நம் இருகரங்களால் 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு உதவும்படிக்கு திருவடிகள் இரண்டு மட்டுமே..

நாம் ஒருவரது ஆசிகளைப் பெற விரும்பினால், அவர்களது பாதங்களைத் தொட்டுத் தான் வணங்குகின்றோம். பாதங்களைத் தொட்டு வணங்குவது என்பது, ஆணவம் நீங்கிய நிலை... இறுமாப்பு இல்லாமல், பிறரது வாழ்த்துக்களைப் பெறும் பொருட்டு அவரது பாதங்களைத் தொடுகிறோம்..

ஆக, ஆணவமற்ற நிலையில், இறைவனின் அருட்புனலில் ஆடும் பொருட்டு, பாவை மகளிர், இறைவனின் திருவடிமலரிணையைப் போற்றித் துதிப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. 

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்.... 

'போற்றி' என்ற சொல்லுக்கு, போற்று என்றும் பொருள் கொள்ள இயலும்..போற்றுக என்றால் காப்பாயாக என்றும் பொருள்... இங்கு போற்றி அருளுக என்னும் போது, உன் திருவடிகளைப் போற்றுகின்றோம். அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் என்பது பொருள்

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்...   அவனே அனைவருக்கும் ஆதி ஆயினான். எல்லாப் பொருட்களுக்கும் முதல் ஆவது இறைவன் இணையடிகளே..

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்.

எல்லாப் பொருட்களுக்கும் முதல் யாரோ அவரே முடிவும். அவரது இணையடிகளே முடிவாக, எல்லாப் பொருட்களும் சென்று சேரும் இடமாக  இருக்கின்றன.. அவற்றை செந்தளிர்கள் என்றது, பரம்பொருளின், 'அழித்தல்' என்னும் சம்ஹாரத் தொழிலைப் புகழ்ந்து.. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிறம் குறியீடாகக் குறிக்கப்படுகின்றது.. ஐம்பூதங்களின் வடிவாய் இருப்பவன் இறைவன்.. இதனையே'நிறங்களோர் ஐந்துடையாய்என்று போற்றுகிறோம்.

அதன் படி, பஞ்ச பூதங்களில் நெருப்புக்க்குரிய நிறம் சிவப்பு.. சம்ஹாரத்தைச் செய்யும் அனலை தம் ஒரு திருக்கரத்தில் ஏந்தியே கூத்தாடுகிறார் எம்பிரான். அந்த சிவப்பு நிறத்தைக் குறித்தே 'செந்தளிர்கள்' என்றார். முடிவுக்குக் காரணமான திருவடிகள் என்பதால் 'செந்தளிர்கள்' ஆயிற்று.
சேவடி(செம்மையான நிறம் பொருந்திய திருவடிகள்) தொழுவோருக்கு மனோவிகாரங்கள் அற்ற நிலை வாய்க்கும்.

'போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்'==== 'ஆதி' என்பது எல்லாவுலகும் தோன்றக் காரணனாய் நிற்கும் நிலையைக் குறித்தது..(அதாவது, ஆதி, அந்தம் என்னும் 'காரண நிலை' முதல் இரு வரிகளில் வந்தது. அடுத்த வரிகளில் 'காரிய நிலை' வருகிறது.)

'தோற்றமாம்' என்பதன் மூலம் படைப்புத் தொழில் விளக்கப்பட்டது..

இறைவன் 'பொன்னார் மேனியன்'.. ஆக, இறைவனது திருப்பாதம் பொற்பாதம்.. பொன்னை ஒத்த நிறமும், பிரகாசமும் உள்ள பாதம் எனவும் பொருள் கொள்ளலாம். மேலும் பஞ்ச பூதங்களில் பூமிக்கான நிறமாகக் குறிப்பது பொன்னிறத்தை..அதனாலும் படைப்புத் தொழிலைச் செய்யும் பாதம் பொற்பாதம் ஆனது.

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார்
எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது.(உண்மை நெறி விளக்கம்)

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்== இதில், இறைவனார், உயிர்களைக் காக்கும் பான்மை கூறப்பட்டது.. எல்லா உயிர்களும் நிலைபெறுவது இறையனாரின் திருவடி மகிமையாலேயே..கழல்கள் அணிந்த பூப்போன்ற மென்மையான சேவடிகள் என்று உரைப்பது, இறைவ ன்  தன் கருணையால் உயிர்களைக் காத்தருளுதலைக் குறிப்பதற்காக.

போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்== ஈறு என்பதை முடிவு என்றும் கொள்ளலாம்.. நிறைவு என்றும் கொள்ளலாம்.. இங்கு இறையனார் உயிர்களுக்கு அருட்பேறு தந்து ஆட்கொண்டு, மீண்டும் பிறவாநிலையளித்தலால் அவரது திருவடிகளை இணையடிகள் என்றார். அத்திருவடிகளில் சேர்ந்து விட்டால் ,ஆதி, அந்தம், தோற்றம், போகம் எதுவும் இல்லை.. எல்லாம் நிறைந்து முடிந்தது.. ஆகவே 'ஈறு' என்ற சொல்லால், நிலைத்த ஒடுங்குதலை, முக்திப் பேறைக் குறித்தார்.

இணையடிகள் என்பதால், அம்மை, அப்பன் இருவரது திருவருளையும் பெற்றாலே முக்திப் பேறு கிட்டும் என்பதைக் குறித்தார். அர்த்தநாரீஸ்வரனான இறைவனின் திருவடிகளில் ஒன்று உமையம்மையுடையதல்லவா!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.( அப்பர் பெருமான்)

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்== 'காணாத' என்ற சொல், இங்கு இறைவனின் மறைத்தல் தொழிலைப் புலப்படுத்துகிறது. ஐயனின் 'திரோதானம்' இங்கு வருகிறது.. இறைவனது அருட்சக்தியின் ஒரு கூறே திரோதான சக்தி. மறைத்தல் என்பது இறைவன் தன்னை அறிய விடாது உயிர்களின் அறிவை மறைத்தல். உண்மையில் மறைப்பது ஆணவம்.ஆணவ மலம் செயற்படச் செயற்படத்தான் அதன் சத்தி படிப்படியாகத் தேயும். அதன் சக்தி தேயும் போது, உயிரறிவு மறைப்பு நீங்கி விளக்கம் பெறும். இறைவனை உணரும் தகுதி ஏற்படும்.

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்=== இவ்விடத்தும் இறைவனது திருவடிகளை 'பொன் மலர்கள்' என்று குறித்தார். முன்பு 'பொற்பாதம்' என்றவிடத்து, பிரகாசமும் நிறமும் குறித்தவர், இங்கு மலரொத்த மென்மையைக் குறிக்கின்றார். மென்மை, கருணையைக் குறிக்கும்..கருணையோடு கூடிய அருட்சக்தியால் தக்க சமயத்தில் உயிர்களை ஆட்கொண்டருளுகிறார் இறையனார்.

'எம்மை, அடிமையாகக் கொண்டு ஆட்கொண்டருளுக' என்ற பாவை மகளிரின் வேண்டுதலாகவும் இதைக் கொள்ளலாம்.

இதன் மூலம், ஆதி, அந்தம் இல்லாத இறைவன், ஆதியும் அந்தமும் ஆகி, உயிர்களைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து,  அருளும் ஐந்தொழில் திறன் கூறப்பட்டது.

இதையே மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில்,

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
நேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி என்று போற்றுகிறார்.

திருமூலர் திருமந்திரத்தில்,

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே என்று போற்றுகின்றார்.

இப்பிரபஞ்ச இயக்கத்துக்கே காரணமான ஐயனின் திருவருளைப் போற்றிப் புகழ்ந்து,

முதலும் முடிவும் அவனே!
முத்தமிழ் தந்ததும் அவனே
மும்மலம் தீர்ப்பதும் அவனே
முழுமுதல் கடவுள் அவனே

என்று தென்னாடுடைய சிவன் பதம் போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவனைத் தொழுது, அவனருளாலே இயன்ற இச்சிறு பணியை அடியார்கள் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குகிறேன்..

திருவெம்பாவை நிறைவுற்றது..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. புத்தகம் (ஆக) எப்போது வெளிவரும்?
  புதுமையாக மின் புத்தகமாக உங்கள்

  கணினி மூலமே வெளியிடலாம்
  கண்டு மகிழ youtube பயன் படுத்திக் கொள்ளலாம்

  காத்திருக்கின்றோம் புத்தகத்தை
  காண்பதற்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்த தங்கள் நல்லாதரவுக்கு நன்றி ஐயா!.. இறைவன் திருமுன் வேண்டுகோள் சமர்ப்பித்திருக்கிறேன். திருவுளம் எப்படியோ!!.. நலமே நிகழப் பிரார்த்திப்போம் ஐயா!

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..