நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 31 டிசம்பர், 2012

HAPPY NEW YEAR 2013.......வரம் தருவாய் புத்தாண்டே!!!இன்ப ஒளி பரவட்டும்
எண்ணமெல்லாம் நிறையட்டும்
கண்களிலே எதிர்காலம்
வண்ணமயமாய்த் தெரியட்டும்
எங்கும்  மகிழ்ச்சி பொங்கட்டும்
இனியவாழ்வு மலரட்டும்
சிந்தையிலே நல்லதெல்லாம்
பெருக வைப்பாய் புத்தாண்டே!!!
வந்தனைகள் செய்கின்றோம்
வாழ்விப்பாய் புத்தாண்டே!!!!
நல்லதெல்லாம் எம்  வாழ்வில்
நடத்திவைப்பாய் புத்தாண்டே
நாள் தோறும்  முன்னேற்றம்
காண வைப்பாய் புத்தாண்டே!!

நிறைபொருளும் திருவருளும்
குறைவில்லாத குருவருளும்
மறைகளுறை திருவடியில்
மகிழ்ந்திருக்கும் மனநிலையும்
கொடுத்திடுவாய் புத்தாண்டே!!!
குதித்து வரும் புத்தாண்டே!!!
அன்பு நிறை மனம் வேண்டும்
அழகு நிறை எண்ணம் வேண்டும்
நோயில்லாத உடல் வேண்டும்
நோக வைக்கா வாக்கு வேண்டும்
நெஞ்சினிலே அமைதி வேண்டும்
நினைவெல்லாம் நல்லதாக வேண்டும்.

இனிய இவ்வுலகெலாம் 
இன்பமழை பொழிய வேண்டும்
வேற்றுமைகள்  போக  வேண்டும்
வெற்றியெல்லாம் சேர வேண்டும்
குற்றங்கள், குறைகள் நீங்கி
குதூகலம் நிறைய வேண்டும்
பெண்ணினத்தின் நிம்மதியை
பரிசாய் நீ தரவேண்டும்.
அன்னைத் தமிழ் மடியினிலே
அனுதினமும் ஆட வேண்டும்
அவள் பொழியும் அருளாலே
அவள் புகழைப் பாடவேண்டும்
வையத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வளம் பெருக நலம் நிறைய‌
வரம் தருவாய் புத்தாண்டே!!!!

.................பார்வதி இராமச்சந்திரன்.
வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களது ஆசியாலும், தொடர்ந்து நீங்கள் தரும் நல் ஆதரவாலும் மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து வரும் ஆண்டிலும், 'ஆலோசனை'க்கும் 'ஆலோசனைத் தொகுப்பு'க்கும் உங்கள் மேலான அன்பையும் ஆதரவையும் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். 

மிக்க நன்றியுடனும் அன்புடனும்

பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 27 டிசம்பர், 2012

ARUDRA DHARISANAM (28/12/2012)....அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம்.......

ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!


உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய எம்பெருமான், இவ்வுலகனைத்தும் படைத்து, காத்து, மறைத்து, அருள் தந்து, பிரளயகாலத்தில் ஒடுக்கும் செயலனைத்தும் பிள்ளை விளையாட்டாகவே செய்கிறான். இப்பிரபஞ்ச இயக்கத்தை விளக்குவதே நடராஜமூர்த்தியின் திருநடனம்.

தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடும் எம்பிரானின் திருக்கூத்து, அவரது ஐந்தொழில்களுக்கு விளக்கமாக அமைகிறது. அவரது திருக்கரங்களில் இருக்கும் டமருகத்தில் ஒலி, ஸ்ருஷ்டி ஏற்படக் காரணமாக அமைகிறது, அபயக்கரம், ஸ்திதி எனும், காத்தல் தொழிலுக்கும், மற்றொரு கரத்திலிருக்கும் அக்னி, அழித்தல் தொழிலுக்கும், முயலகனின் மேல் ஊன்றியிருக்கும் வலது பாதம், மறைத்தல் தொழிலுக்கும், தூக்கிய திருவடி, முத்தியருளும் கருணைக்கும் விளக்கமாக அமைகிறது.

பஞ்சாட்சர மஹாமந்திரத்தின் ஸ்தூல வடிவமே நடராஜ மூர்த்தி. பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜப் பெருமானது திருநடனம் உணர்த்துகிறது. சமீபக் கண்டுபிடிப்பான, கடவுள்  அணு, அதன் அசைவு ஆகியவை நடராஜப் பெருமானது திருநடனத்தை ஒத்திருப்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது.
நீரிச்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் நம்பும் விஷயம் விஞ்ஞானம்.  செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 2004 ஜூன் 18 அன்று, 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணிக்கப்பட்டது. இதன் காரணம், பின் வருமாறு.....(நன்றி: கடவுள் அணுவும் சிவனின் நடனமும் --எஸ்.குருமூர்த்தி, http://idlyvadai.blogspot.in/2012/07/blog-post_18.html).

ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி, 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.

காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.
nataraja-theory-of-creation-3
http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/
ஆருத்ரா தரிசன மகிமை:
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷப் பெருமானின் திருவுள்ளத்தில் ஒரு ஆவல் தோன்றியது. இவ்வுலகனைத்தையும் இயக்கும்  பரம்பொருளான சிவபெருமானின் திருநடனத்தைக் காண வேண்டும் என்பதே அது. இதை அறிந்த ஸ்ரீமந் நாராயணனும், அவர் ஆவல் நிறைவேற திருவருள் புரிந்தார்.

அதன்படி, இப்பூவுலகில் பதஞ்சலி முனிவராக அவதரித்த ஆதிசேஷன், எம்பெருமானை நோக்கித் தவம் இயற்ற, சிவனார் அவர் முன் தோன்றி, தில்லைச் சிற்றம்பலத்தை(சிதம்பரத்தை) அடையுமாறு கூறி, அங்கு அவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் தன் திருநடனக்காட்சியை அருளுவதாக வரமளித்தார். அவ்வாறே, உலகெலாம் மகிழ, தன் ஆனந்த நடனத்தை தில்லையில் நடத்தியருளிய தினமே, மார்கழி, திருவாதிரை நன்னாள்.

கோவில் என்ற சொல், சிறப்பாக, இரண்டு ராஜர்கள் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களை மட்டுமே குறிக்கும். ஒன்று, நடராஜப் பெருமான் கோவில் கொண்டுள்ள சிதம்பரம். மற்றொன்று, ஸ்ரீ ரங்கராஜர் கோவில் கொண்டுள்ள ஸ்ரீரங்கம். பஞ்சபூத க்ஷேத்திரங்களில், ஆகாய க்ஷேத்திரம் சிதம்பரம்.

சிதம்பரம் என்ற சொல், எம்பெருமானது திருக்கோவிலையும், தில்லை என்பது ஊரின் பெயரையும் குறிக்கும். சித்+அம்பரம்=சிதம்பரம் . “சித்” என்பது அறிவு. “அம்பரம்” என்பது “பரவெளி” அதாவது ஞானவெளி.  அறிவைப் பயன்படுத்தி, ஆன்மாக்களின் உண்மை நிலை அறியும் போது, அந்த ஞானம் கைகூடும்போது, அந்த  ஞானவெளியில் இறைவன் ஆனந்தக் கூத்தாடுகிறான் என்பதே தத்துவம்.

'ஆருத்ரா' என்பது திருவாதிரை நட்சத்திரத்தின் வடமொழிப்பெயர். ருத்ரனான சிவனாரின் நட்சத்திரம் ஆருத்ரா. மார்கழி மாதம் வரும் ஆருத்ரா நட்சத்திரம், பெரும்பாலும், சிவனாரின் குனித்த சடைமேல் ஒளிரும்  பனி தரும் திங்களான சந்திர பகவானின் கலைகள் முழுமையாகப் பிரகாசிக்கும் பௌர்ணமி நன்னாளிலேயோ அல்லது அதை மிக ஒட்டியோ வரும். ஆதிரை என்ற கற்புக்கரசியே வானில் சிவனருளால், திருவாதிரை நட்சத்திரமாகப் பிரகாசிக்கிறாள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம், விரதமிருந்து, எம்பெருமானுக்கு களியும், எழுகறிக்கூட்டும் நிவேதிப்பது அளவில்லா நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

 ,

திருவாதிரைக்குக் களி நிவேதனம் ஏன்?:
தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர், விறகு வெட்டும் தொழிலைச் செய்து வந்தார். தினம் சிவ ஆராதனை செய்து, சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே உணவு கொள்வார்.

இறைவன் அவரைச் சோதித்து, அவர் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணினார். ஒரு சமயம், திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள், நிற்காமல் தொடர்ந்து கடும் மழை பொழிந்தது. அதனால், சேந்தனாருக்கு விறகு வெட்டப் போக முடியவில்லை. விறகு வெட்டி விற்று வந்த பொருளைக் கொண்டே அவர் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை  நடந்து வந்தது. மிகுந்த கவலையுடன் இருந்த சேந்தனாரின் கவலையை அதிகப்படுத்தும் விதமாக, 'சம்போ மகாதேவா...' என்ற குரல் கேட்டது. ஒரு சிவனடியார், அவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். சேந்தனார் மனதில் 'இவருக்கு எவ்வாறு உணவளிப்பது?' என்ற கவலையிருந்தாலும், அவர், அதை வெளியே காட்டாது,  சிவனடியாரை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார். சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசிமாவில் வெல்லம் சேர்த்து, களி செய்தார். அதை, இருவரும் மகிழ்வுடன் சிவனடியாருக்கு உண்ணக் கொடுத்தனர்.சிவனடியாரும் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றார்.

மறுநாள், தில்லையில், கோவில் கதவைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், திருச்சன்னதியில் களி சிதறியிருப்பதைப் பார்த்து வியப்புற்றார்கள். அச்சமயம், இறைவனைத் தரிசனம் செய்ய வந்த சேந்தனாரும், அவர் மனைவியும், இதைக் கண்டு மகிழ்ந்து, அந்தணர்களிடம், தம் வீட்டுக்கு சிவனடியார் வந்த விபரம் கூற,  இது நடராஜப் பெருமானது திருவிளையாடலே என்பதை உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள், சேந்தனாரின் பக்தியின் பெருமை உணர்ந்து அவரை வணங்கினர்.

திருவாதிரைக் களியை உண்பவர்கள் சொர்க்கத்தையே அடைவர். அன்று விரதமிருப்பதோடு, இரவு கண்விழிப்பதையும் செய்வார்கள். திருவாதிரை விரதம், பெண்களுக்கு மிக நன்மை தருவது. எம்பெருமானது திருநடனம், அருணோதய காலத்தில் (அதிகாலை 4 மணி)  நடைபெற்றதாக ஐதீகம். ஆகவே, அருணோதய காலத்தில், எம்பெருமானுக்கு களி நிவேதனம் செய்ய வேண்டும். தானிய விருத்திக்காகவும், எல்லாம் இறைவனே என்பதை உணர்த்தும் பொருட்டும், எழுகறிக்கூட்டு(ஏழு காய்கறிகள் சேர்த்து செய்த கூட்டு) நிவேதனம் செய்கிறோம். பொதுவாக, நாட்டுக் காய்களை மட்டுமே சேர்ப்பது வழக்கம்.

அதிகாலையில் நீராடி, இறைவனை, அஷ்டோத்திர, சஹஸ்ரநாமங்களால் பூஜித்து, வாழை இலையில், களியும் கூட்டும் படைத்து, வெற்றிலை பாக்கு, தேங்காயுடன் நிவேதனம் செய்வது வழக்கம்.

திருவாதிரை நன்னாளில் பாராயணம் செய்ய, அருணாசலீசர் பதிகத்துக்கு இங்கு சொடுக்கவும்.

மதுரையிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும், திருவாதிரை நன்னாளில் அதிகாலையில், இறைவனைப் பூஜித்து, களி நிவேதனம் செய்த பிறகு, பெண்கள், கழுத்தில் பூக்கோர்த்த மஞ்சள் சரடு அணியும் வழக்கம் உண்டு(காரடையான் நோன்புக்குச் செய்வது போல்). இவ்வாறு அணிவதால், சுமங்கலிப் பெண்கள் தாலிபாக்கியமும், கன்னிப் பெண்கள் நல்ல கணவரையும் இறையருளால் அடைவார்கள் என்பது ஐதீகம்.

திருவாதிரை விரதமிருப்பவர்கள், ஒரு வாய்க் களியை மட்டும் பிரசாதமாக உட்கொண்டு அன்று முழுவதும் உபவாசமிருந்து, மறுநாள் அதிகாலை பாரணை செய்வார்கள். திருவாதிரையன்று இரவு கண்விழிப்பது சிறப்பு.

திருவாதிரை நன்னாள், தில்லையில் மட்டுமல்லாது, சிவனார் உறையும் எல்லாத் திருத்தலங்களிலும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. 'ஆதி சிதம்பரம்' என்று போற்றப்படும், திரு உத்திரகோசமங்கையில், மரகத நடராஜருக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, ஆருத்ரா தரிசன தினத்தன்றே, சந்தனக் காப்பு நீக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு, பின் மீண்டும் சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மட்டுமே, மரகத நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்க முடியும். இவர் ஆதி நடராஜர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவாதிரை அன்று விரதமிருந்து, எம்பெருமானை வழிபட்டு, இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

VAIKUNDA EKADASI....வைகுண்ட ஏகாதசி

Image result for vaikunta ekadasi

பண்டை நான்மறையும் கேள்வியும் கேள்விப் பதங்களும்
பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும்
ஏழுமாமலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான்
அரங்கமாநகர் அமர்ந்தானே!
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ஒரு மாதத்திற்கு, வளர்பிறையில் ஒன்றும் தேய்பிறையில் ஒன்றுமாக, இரண்டு ஏகாதசி திதி வரும். ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளில், மிகவும் மகிமை வாய்ந்தது, முக்கோடி ஏகாதசி என்று சிறப்பிக்கப்படும் வைகுண்ட ஏகாதசி.

இது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும். இது மோட்ச ஏகாதசி என்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம்:
முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் என்பதாலும், கோடிக்கணக்கான நற்பலன்களைத் தரவல்ல விரதம் என்பதாலும், மூன்று கோடி ஏகாதசிகள் விரதம் இருந்த பலனைத் தரவல்லது என்பதாலும், 'முக்கோடி ஏகாதசி' என்று வைகுண்ட ஏகாதசி சிறப்பிக்கப்படுகிறது.சிலர் நினைப்பதைப்போல், ஏகாதசியன்று அன்னம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே விரதமில்லை. முழு உபவாசம் இருப்பதே சிறந்தது. துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். பொதுவாக, உடலில் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பதற்காகவே விரதங்கள் ஏற்பட்டன. அதற்காக அடிக்கடி விரதம் இருப்பதும் தவறு. விரதம் இருப்பது, மனக்கட்டுப்பாட்டை அதிகரிக்க வல்லது. இயல்பாகவே புலனடக்கம் நிகழ உதவுவது விரதங்களே.

வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள் வரும் தசமி திதியில் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம். மறு நாள், உபவாசம் இருந்து, கோபப்படாமல், இறைநாமங்களை ஜபித்து இறைச்சிந்தனையில் கழிக்க வேண்டும். இரவு முழுவதும், தூங்காமல் விழித்திருக்க வேண்டும். அடுத்த நாள் துவாதசியன்று, சூரிய உதயத்துக்குள் பாரணை (அதாவது, விரதம் நிறைவு செய்தல்) செய்ய வேண்டும். முதலில் துளசி தீர்த்தம் அருந்திப் பின் உணவு உட்கொள்ள வேண்டும்.பொதுவாக, சுண்டைக்காய் வற்றல், அகத்திக்கீரை, நெல்லிப்பச்சடி முதலியவை செய்து உண்ணுவார்கள். முதல் நாள் முழுவதும் விரதம் இருந்ததால் வயிற்றுக்கு குளுமை தர வேண்டி இவற்றைச் செய்வது வழக்கம்.  அன்றும் பகல் வேளையில் தூங்கக் கூடாது. இரவில் அன்னம் சாப்பிடக் கூடாது.

ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம் போஜ நத்வயம்மி
சுத்தோபவாஸ:ப்ரதம: ஸத்கதாச்ரவணம் தத:மிமி

ஏகாதசி திதியில், பகல், இரவு ஆகிய இருவேளைகளிலும், உபவாசம் இருத்தல், ஸத்கதாச்ரவணம் என்று சொல்லப்படுகின்ற இறைநாமங்கள், ஸ்லோகங்கள் மற்றும் புராணங்களைப் பாராயணம் செய்தல் ஆகிய இரண்டை மட்டுமே செய்தல் வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருளாகும்.

ஏகாதசி அன்று பாராயணம் செய்ய,  தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சிக்கு இங்கு சொடுக்கவும்.

ஏகாதசியன்று அன்னதானம் செய்யக் கூடாது. முன்னோர்களின் சிரார்த்தம் வந்தால், துவாதசியன்று தான் செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசியன்று, மிக மிகப் புண்ணியசாலிகளுக்கே இறைவன் திருவடி நிழலை அடையும் பாக்கியம் கிடைக்கும். அதனால் அன்று இறைவன் திருவடி சேர்பவர்கள், பிறப்பில்லா நிலையை அடைவதாக ஐதீகம்.

ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்காந்தத்தில், அம்பரீஷச் சக்கரவர்த்தியினுடைய சரிதம் ஏகாதசி விரதத்தின் மகிமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

ஒரு சமயம், துர்வாச மஹரிஷி, தவறாது ஏகாதசி விரதம் இருந்து வந்த அம்பரீஷனை, சந்தித்து, துவாதசி பாரணையின் போது தானும் வருவதாகச் சொன்னார். அம்பரீஷனும் ஏற்றுக் கொண்டார். ஏகாதசி விரதம் இருந்த பலன், மறுநாள், குறித்த காலத்தில் பாரணை செய்வதாலேயே கிட்டும். துர்வாச மஹரிஷி குறித்த நேரத்திற்குள் வராததால், அம்பரீஷன், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்திப் பாரணை செய்தார். இதை அறிந்த துர்வாச மஹரிஷி, கோபம் கொண்டு, ஒரு பிசாசை ஏவ, ஸ்ரீமந் நாராயணின் ஸூதர்சன சக்கரம், தன் பக்தனைக் காக்க வேண்டி, பிசாசைத் துரத்தியது. ஒரு நிலையில், பிசாசு, சோர்வடைந்து, துர்வாச மஹரிஷியையே விரட்டத் துவங்க, அவர், அனைத்துத் தேவர்களையும், முடிவில்,ஸ்ரீவிஷ்ணுவையும் சரணடைந்தார். அவரோ, அம்பரீஷனையே சரணடையுமாறு சொல்ல, அதன் படி, அவர் அம்பரீஷனைச் சரணடைந்தார். அம்பரீஷனும், தன் பக்தியின் மகிமையால், பிசாசை அடக்கி, ஸூதர்சன சக்கரத்தையும் ஸ்தோத்திரம் செய்து சாந்தி அடையும்படி செய்து, மஹரிஷியைக் காப்பாற்றினார்.  ஏகாதசி விரதம், இறைவனை அடையும் வழியை மிகச் சுலபமாக்கித் தரும் கருவியாகும்.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி.
பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் பெருமானுக்கு பரமபதம் அருளுவதற்காக, திருவைகுண்டத்தின் பரமபத வாசல் திறக்கப்பட்ட தினமே வைகுண்ட ஏகாதசி.     அன்று திருவரங்கத்தில், கோடானுகோடி பக்தகோடிகள் 'ரங்கா, ரங்கா' என்று பக்தியுடன் கோஷிக்க, நம்பெருமாள், கிளிமாலை, ரத்தின அங்கி, பாண்டியன் அளித்த கொண்டையுடன் விருச்சிக லக்னத்தில்    மூலஸ்தானத்தில் இருந்து, புறப்பாடாகி  சிம்ம கதியில், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

பரமபத வாசலின் அடியில் விரஜா நதி (வைகுண்டம் அடையும் வழியில் உள்ள திவ்ய தீர்த்தமே விரஜாநதி. மோட்சம் பெறும் ஆன்மாக்கள், இந்நதியில் நீராடிய பின்னரே,  வைகுண்டம் சேர்வதாக ஐதீகம்)சூட்சுமமாக ஓடுவதால், அந்தப் புண்ணிய தினத்தில், பரமபத வாசல் வழியாக வரும் பக்தர்கள், இந்நதியில் நீராடி, பின், வைகுண்டம் சேர்வதாக நம்பிக்கை. ஆகவே, அன்றைய தினம், கோடானுகோடி பக்தர்கள், பரமபத வாசலைக் கடக்கிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில், பகல்பத்து உற்சவம் நிறைவுற்று, இராப்பத்து உற்சவம் துவங்கும் நாளில் ஏகாதசி வருகிறது. அன்று தொடங்கி, பத்து நாட்கள், திருவாய்மொழி பாசுரங்கள் இசைக்கப்பட்டு, நிறைவு நாளில், நம்மாழ்வார் பெருமான் பரமபதம் அடையும் நிகழ்வு நடத்திக் காட்டப்படுகிறது.

திருவரங்கத்தில் மட்டுமல்லாது, பெரும்பாலான வைணவத்திருத்தலங்களில், வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு சிறப்புற நடைபெறுகிறது. 

சிவனாருக்கும் உரிய ஏகாதசி:
பாற்கடல் கடைந்த போது, வெளிப்பட்ட ஆலாகல விஷத்தை உலக நன்மையின் பொருட்டு அருந்தி, சிவனார் அருள் புரிந்த நாள் ஏகாதசி. அதனால், ஏகாதசி சைவர்களுக்கும் உரியதென்று கூறுகிறார்கள். சைவத்தில், இது 'நஞ்சுண்ட ஏகாதசி' என்று சிறப்பிக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பதால், நம் விருப்பங்கள் நிறைவேறும்.  மானிடப்பிறவி எடுத்ததன் நோக்கமான, மோட்சப் பிராப்தி, வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதன் பலன்களில் தலையாயது.

வைகுண்ட ஏகாதசியன்று இறைச்சிந்தனையுடன் விரதம் இருந்து,  எம்பெருமான் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம் !!!!

திங்கள், 17 டிசம்பர், 2012

MARGAZHI THINGAL....மார்கழித் திங்கள்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்
வாசல் எங்கும் பூத்துக் குலுங்கும் வண்ணக் கோலங்களுடன் மார்கழி துவங்கி விட்டது. இன்று மார்கழி இரண்டாம் நாள்.

மானிடர்களின் ஒரு வருட காலம், தேவர்களுக்கு ஒரு நாள். அதில், மார்கழி மாதம், தேவர்களின் அதிகாலையாக, பிரம்ம முகூர்த்தமாகக் கருதப்படுகிறது. பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று அருளியிருக்கிறார்.

("ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: ||")

சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால், தனுர் மாதம் எனச் சிறப்பிக்கபடும் மார்கழி மாதத்தில், ஓசோன் மிக அதிக அளவில் அதிகாலையில்  பூமியில் பெறப்படுகிறது.  ஓசோன் வாயுவின் நன்மைகளை நாம் அடைவதற்காகவே, அக்காலத்தில், ஆண்கள், விடிகாலையில், தெருக்களில், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாசுரங்களைப் பாடி, இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும், பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசல்களில் பெரிய கோலங்களிட வேண்டுமென்றும் வழக்கங்கள் ஏற்பட்டன.

இயல்பாகவே குளிர் மிகுந்த இக்கால கட்டத்தில், விடிகாலையில், வாசலில் பெரிய கோலங்களிட்டு, நடுவில், சாணத்தில் பூசணிப்பூவை வைத்து, பின், வீட்டு நிலை வாசல்படிகளில் விளக்குகள் ஏற்றுவது நம் சம்பிரதாயம். பனியை விரட்டுவதற்கும், இருள் பிரிய சற்று நேரமாவதால், தெருக்களில் நடமாடுவோருக்கு வெளிச்சம் தருவதற்காகவும் இதைச் செய்கிறோம். கார்த்திகை மாதம், மாலை வேளைகளில் வீட்டு நிலைப்படியில் விளக்கு ஏற்றுவதைப் போல், மார்கழி அதிகாலையில் செய்ய வேண்டும். கோலங்களின் நடுவில்  வைக்கப்படும் சாணத்தை உபயோகித்து, எருவராட்டிகளைத் தட்டி,  தைப் பொங்கல் திருநாளில்,பொங்கல் செய்யும் போது உபயோகப்படுத்துவார்கள்.

பீடு உடைய மாதங்களுள்(பீடை மாதம் அல்ல) ஒன்றான மார்கழி, இறைவழிபாட்டுக்கு மிக உகந்த மாதம். அதிகாலையில், பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் தினந்தோறும் நடைபெறுகிறது.

நமது இந்து தர்மத்தின், முக்கிய விரத நாட்களான, வைகுண்ட ஏகாதசி, மற்றும் ஆருத்ரா தரிசனம் இரண்டும், இம்மாதத்தில் வருகிறது. எல்லா வைணவத் திருத்தலங்களிலும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் துவங்கி நடைபெறுகின்றன. திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள்  இசைக்கப்படுகின்றன.

சைவத்திருத்தலங்கள் தோறும், சிவபெருமானுக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள்    பக்தியுடன்  ஒலிக்கின்றன.

(மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த 'திருப்பள்ளியெழுச்சி'க்கு இங்கு சொடுக்கவும்.)

பொதுவாகவே, நாம் செய்யும் வழிபாடுகள், நமக்கு மட்டும் நன்மை தருவதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்ச வெளி முழுவதும், நாம் பாராயணம் செய்யும் பாசுரங்களின் ஒலி அலைகள் பரவுவதால், 'நெகடிவ் எனர்ஜி ' எனப்படும் எதிர்மறை பாவனைகள் நீக்கப்பட்டு, பாஸிடிவ் எனர்ஜி பரவுகிறது. இது உலகத்துக்கே மகத்தான நன்மை அளிக்க வல்லது. அதனாலேயே, கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும், சத்சங்கங்களுக்கும், நம் இந்து தர்மத்தில், பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பலர் கூடும் இடமான கோவில்களில், இந்த நேர்மறை சக்திகள் மிக அபரிமிதமான அளவில் நம்மை அடையும். அதனால் தான், கோவில்களில் வழிபாடு செய்யும் போது, ஒருமைப்பட்ட மனத்துடன், இறைச்சிந்தனைகளில்  மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற விதி இருக்கிறது.

மார்கழி மாதத்தில், செய்யும் எந்த விதமான இறைவழிபாட்டுக்கும் மிக அதிகப் பலன் உண்டு. இதனாலேயே  கோவில்களில் இந்த மாதம் வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பாவை நோன்பு:
இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த நோன்பு. கன்னிப் பெண்கள், நல்ல கணவனை அடைவதற்காகவும், மழை வளம் பெருக வேண்டியும் இந்த நோன்பு நோற்கப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள், பாவை நோன்பு நோற்றே, வைகுண்ட வாசனான எம்பெருமானைத் தன் மணாளனாக அடைந்தாள்.

இந்த நோன்பு நோற்கும் பெண்கள், அதிகாலையில், குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடி, ஆற்று மணலில் அல்லது ஈர மணலில், ஒரு பெண்ணை (பாவை) போன்ற உருவம் செய்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள், பார்வதி தேவியாகவும், வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள், (காத்யாயினி) கௌரி தேவியாகவும் பாவையை வழிபாடு செய்வார்கள். நெய், பால் முதலியவை சேர்ந்த உணவை உண்ணமாட்டார்கள். மையிட்டு மலர்கள் சூட்டி அலங்காரம் செய்து கொள்ள மாட்டார்கள்.  மனதை நல்வழியில் செலுத்துவர்.
இவ்வாறு மார்கழி முப்பது நாளும் நோன்பிருந்து, வழிபாடு செய்வார்கள். நோன்பு நிறைவுற்ற பின், முன்போல் அலங்காரம் செய்து கொண்டு, நெய், பால் முதலியவை சேர்ந்த உணவுகளைச் சாப்பிடுவார்கள்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவையும், தலைவி,தன் தோழியரை ஒவ்வொருவாராக எழுப்பி, பாவை நோன்பு நோற்க அழைத்து, நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி வழிபாடு செய்வதாகவே அமைந்துள்ளது. பாவை நோன்பு நோற்கும் முறைகளும், நோற்பதால் அடையும் பலன்களும் அவற்றில் அற்புதமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

பாவை நோன்பு பற்றிய குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தில் , ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி பின்வருமாறு கூறுகிறார்.

"ஹேமந்த ருதுவின் துவக்க காலமான மார்கழி மாதத்தில், கோகுலத்துப் பெண்கள், ஹவிஸ்ஸை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, காத்யாயனி விரதத்தை அனுஷ்டித்தார்கள். அப்பெண்கள், அருணோதய காலத்தில் எழுந்து, யமுனை நீரில் நீராடி, யமுனைக் கரையில், மணலால் காத்யாயனி உருவத்தை அமைத்து, சந்தனத்தாலும், வாசனைப் புஷ்பங்களாலும் தூப தீபங்களாலும் அக்ஷதை மற்றும் சிறந்த நிவேதனங்களாலும், பூஜையைச் செய்தார்கள்.

'தேவி காத்யாயனி!, மஹாமாயே!, மஹா யோகினி!, அனைத்தையும் ஆளும் ஈஸ்வரியாகிய  உனக்கு நமஸ்காரம். நந்த கோபனின் குமாரனையே கணவனாக அருளுவாய்' (காத்யாயனி மஹாமாயே  மஹாயோகே மஹேஸ்வரீ, நந்தகோப சுதம்  தேவி பதிம் மே குருதே நம:) என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே அவர்கள் பூஜை செய்தார்கள்."

இந்த மந்திரத்தை திருமணமாகாதவர்கள் தினந்தோறும் இயன்ற தடவைகள் ஜெபிக்க, அம்பிகையின் அருளால் விரைவில் திருமணம் கைகூடும்.

மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  போன்ற திவ்யப் பாசுரங்களைப் பாராயணம் செய்வது மிக மிக நல்லது. இல்லங்களிலும், அதிகாலை மிக விரைவில் நீராடி, எட்டு மணிக்குள் பூஜை செய்வது குலதெய்வத்தின் அருளைப் பெற்றுத் தரும். விரிவாகப் பூஜை செய்ய இயலாவிட்டாலும், பூஜை அறையில், விளக்கேற்றி, தினம் ஒரு பாசுரத்தைப் பாடி வழிபாடு செய்து, இயன்ற நிவேதனம் செய்து வந்தாலே போதுமானது. இயன்றவர்கள், தினம் சர்க்கரைப்பொங்கல் அல்லது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

மார்கழி மாத அதிகாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம், சிவ சஹஸ்ரநாமப் பாராயணம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கத் துவங்கினால் அது நம்மைச் சுற்றி இருக்கும் சூழலையே மாற்றும் அற்புதத்தைச் செய்யும். சுத்தமான மனம் ஒன்றே இறைவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது. நாம பாராயணம், நாம சங்கீர்த்தனம் இரண்டும் நம் உள்ளும் புறமும் சுத்தம் செய்து, இறைவனிடம் நம்மை ஒன்றச் செய்யும் சக்தி படைத்தவை. மார்கழி மாதத்தில் இவ்வாறு பாராயணம் செய்யத் துவங்கினால், இறையருளால், தொடர்ந்து பாராயணம் செய்யும் வழக்கத்தை நாம் பின்பற்ற முடியும்.
சம்பாசஷ்டி:
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி 'சம்பாசஷ்டி' (சம்ஹார சஷ்டி) என்று சிறப்பிக்கப்படுகிறது. சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்றாலும், சம்பாசஷ்டி விசேஷமாகப் பைரவருக்கு உகந்த தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை பின்வருமாறு.....

மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் இரு அசுரர்கள் உயிரினங்களை மிகுந்த துன்பத்துக்கு உள்ளாக்கினர். மக்கள் படும் துயர் தாளாத மலைமகள், சிவனாரிடம் முறையிட, அவர் தம் நெற்றிக் கண்ணில் இருந்து பைரவரை அவதரிக்கச் செய்தார். பைரவர், அவ்விரு அசுரர்களையும் சம்ஹரித்த நாளே சம்பாசஷ்டி. இவ்வருடம் சம்பாசஷ்டி நாளை(டிசம்பர் 18) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பைரவருக்கு, வடைமாலை, முந்திரி மாலை, ஏலக்காய் மாலை முதலியவை சாற்றி, மிளகு தீபம், பூசணி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. ஒரு மஞ்சள் துணியில், ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மிளகுகளை வைத்து முடிச்சிட்டு, அதைத் திரியாக்கி, நல்லெண்ணை அல்லது இலுப்ப எண்ணை விட்டு, அகல் விளக்கு ஏற்றுவதே மிளகு தீபம்.  வெண்பூசணியை இரண்டாக வெட்டி, நடுவில் இருக்கும் விதையை நீக்கி விட்டு, ஒரு சிறு குழி போலச் செய்து, அதில் நல்லெண்ணை அல்லது இலுப்பை எண்ணையை ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றுவது பூசணி தீபம்.

இவ்வாறு வழிபாடு செய்வதால், தீராத நோய் நீங்குதல், கடன், எதிரிகள், ஏவல், சூனியம் முதலியவை நீங்குதல் ஆகியவை கிட்டும். பால் பாயசம் செய்து நிவேதனம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.


வழிபாடுகளுக்கு உகந்த மாதமான மார்கழியில், இறைவழிபாட்டினை முறையாகச் செய்து, இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

வியாழன், 13 டிசம்பர், 2012

PART 2, SUMANGALI PRARTHANAI....சுமங்கலிப் பிரார்த்தனை (பகுதி 2)

படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

சுமங்கலிப் பிரார்த்தனை தினத்தன்று அதிகாலையில், பூஜை அறையில் விளக்கேற்றி,  புடவைக்கலத்திற்கென்று வாங்கியிருக்கும் புடவை, ரவிக்கைத் துணியை, கோலம் போட்ட மணையில், ஒரு தட்டு அல்லது தாம்பாளத்தின் மீது வைக்க வேண்டும். மடிப்பைக் கலைத்து விட்டு, சுமாராக மடித்து வைக்கலாம். புடவைத் தலைப்பின் நுனி சற்று வெளியில் இருக்க வேண்டும் (எண்ணை வைக்க).

ஒரு தட்டில், எண்ணை, சீயக்காய், மஞ்சள், குங்குமம், வாசனைப்பொடி இவற்றை வைக்க வேண்டும். மற்றொரு தட்டில், அட்சதை, புதிதாகக் கரைத்த வாசனை சந்தனம், வெற்றிலை பாக்கு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

பிறகு, வீட்டுக்கு மூத்த சுமங்கலிப் பெண்மணி, மணையில் வைத்திருக்கும் புடவைத் தலைப்பின் நுனியில், மூன்று சொட்டு எண்ணை வைக்க வேண்டும். பிறகு, புடவையின் மேலாக, மஞ்சள், வாசனைபொடி இவற்றைத் தூவி, குங்குமம் வைத்த பின், அட்சதை, கரைத்த சந்தனம் இவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாகக் கூறி, 'எல்லோரும் வந்து, பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி, அட்சதையைப் பரவலாகப் புடவையின் மீது தெளித்து, நமஸ்கரிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு, வீட்டு மருமகள்கள் ஒவ்வொருவராக நமஸ்கரிக்க வேண்டும். வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் பெயர் தெரியாவிட்டால், 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்'  என்று கூறி நமஸ்கரிக்கலாம்.

யாருக்கு புடவை கொடுக்கப்பட இருக்கிறதோ, அந்தப் பெண்ணை முதலில் மணையில் அமர்த்தி, அவருக்கு சந்தனம், குங்குமம் கொடுத்து, உச்சந்தலையில், மூன்று முறை எண்ணை வைக்க வேண்டும். எண்ணை வைப்பவர், தன் இரு கட்டை விரல்களை மட்டும் உபயோகித்து எண்ணை வைக்க வேண்டும். சிலர் வலக்கை மூன்று விரல்களாலும் எண்ணை வைப்பார்கள். பிறகு, அவருக்கு, எண்ணை, சீயக்காய் பொடி, வாசனைப் பொடி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். பிறகு, மற்ற பெண்களுக்கு எண்ணை வைக்கலாம். இவ்வாறு வைப்பதை, வீட்டு மருமகள்கள் செய்ய வேண்டும்.

புடவைக் கலப் புடவையை, நனைக்கும் போது, முதலில், தலைப்பை விட்டு நனைக்க வேண்டும். தலைப்பு கிழக்கு நோக்கி இருக்குமாறு உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது, கவனமாக உலர்த்த வேண்டும். கம்பிகளில் புடவை சிக்கி விடக் கூடாது. தரையில் அல்லது கைப்பிடிச் சுவரில் உலர்த்துவதானால், அது சுத்தமாக இருக்க வேண்டும். துளி ஈரம் இல்லாமல் புடவை காய வேண்டியது முக்கியம். ரவிக்கைத் துணியையும் உடன் உலர்த்த வேண்டும்.

பிறகு, அழைத்திருக்கும் பெண்களின் புடவைகளை எல்லாம் (வாங்கி வந்திருந்தால்) நனைத்து உலர்த்த வேண்டும். வீட்டு மருமகள்கள் உடுத்த வேண்டிய புடவைகளையும் உலர்த்த வேண்டும். சில வீடுகளில், வீட்டு ஆண்களின் உடைகளையும் நனைத்து உலர்த்துகிறார்கள். பெண்டுகள் தினத்தன்று காலையில் இவ்வாறு உலர்த்துவது தான் சிறப்பு. முன் தினம் செய்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

வீட்டு மருமகள்கள் உட்பட எல்லோரும் எண்ணைக் குளியல் செய்வது அவசியம். குளித்து விட்டு, உலர்த்தி வைத்திருக்கும் உடைகளை அணிய வேண்டும்.

வீட்டில்,  சுமங்கலிகளை உட்கார்த்துவதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் அறை அல்லது ஹாலை இருமுறை துடைக்க வேண்டும். கிழக்குப் பார்த்த இடமாகத் தேர்ந்தெடுத்து, அங்கு சற்றுப் பெரிதாக மாக்கோலமிட்டு, பெரிய பலகையைப் போட்டு அதற்கும் கோலமிட வேண்டும்.

சுமங்கலிகளை  உட்கார வைக்கும் இடத்தில், சின்ன சின்ன மாக்கோலமிடவேண்டும். எல்லாக் கோலத்திற்கும் காவி இட வேண்டும். புடவைக் கலமும் அதன் அருகில், அதை வாங்கிக் கொள்பவர் சாப்பிடும் இடமும் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். மற்ற பெண்கள் இலை, கிழக்கு, மேற்காக இருப்பது சிறப்பு. வடக்குப் பார்த்தும் இருக்கலாம்.

பலகையில் மாக்கோலம் காய்ந்ததும், அதன் மேல் உலர்ந்த புடவைக்கலப் புடவையை கொசுவி வைக்க வேண்டும். அதாவது, புடவையைக் கொசுவம் வைத்து, தலைப்பால்,  கொசுவத்தைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, அதன் மேல் ரவிக்கைத் துணியைக் கட்டி, ஒருவர் அமர்ந்திருப்பது போல் மணையின் மேல் வைக்க வேண்டும். அதற்கு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். மஞ்சள் பொடியைப் பிசைந்து, மூக்கு போல் செய்து, அதை புடவையின் மேற்புறத்தில் வைத்து, அதில், மூக்குத்தி வைக்க வேண்டும். தங்கச் சங்கிலி, இயன்ற ஆபரணங்கள் சாற்றி, பூமாலைகள் சாற்ற வேண்டும். இரட்டை மாலையாக சாற்றுவது சிறப்பு. மல்லிகை போன்ற வாசனை மாலைகளையே சாற்ற வேண்டும்.

புடவையின் பின்னால், கண்ணாடி ஒன்றை வைத்து, அதற்கும், பொட்டு வைத்து, பூச்சரம் சாற்றலாம். கலத்தின் இருபுறமும், ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றவும். எல்லாம் நிறைவடையும் வரை விளக்கு எரிவது அவசியம்.

கலத்தின் அருகில், செம்பு அல்லது பாத்திரங்களில், பானகம், நீர்மோர், ஆகியவற்றைக் கரைத்து வைக்க வேண்டும்.

சுக்கு வெல்லம் இரண்டையும் சேர்த்து தட்டி, பிசைந்து உருண்டை செய்து   ஒரு தட்டில்  அதை வைத்து, அதையும் கலத்தின் அருகில் வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பாக நடத்தும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், மணமகளின் புடவை, நகைகள் முதலியவற்றையும் கலத்தின் முன் வைக்கிறார்கள்.

ஒரு தட்டில் மஞ்சள் பொடியைப் பிசைந்து கொள்ளவும். பிசைந்ததில் கொஞ்சம் எடுத்து, எத்தனை பெண்கள் வந்திருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையில்,  சின்னச் சின்ன மஞ்சள் உருண்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும். மீதியை நலங்கு இட வைத்துக் கொள்ளலாம். நலங்கு (மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்தது) தயார் செய்யவும்.

பூச்சரத்தில், தாம்பூலத்திற்குக் கொடுக்க நறுக்கி வைத்துக் கொண்டு, அது தவிரவும் , சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதைக் கால் அலம்பிய பின் கொடுக்க வேண்டும். தாம்பூலம் கொடுக்கத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில், சாப்பிட்ட பின் போடுவதற்கு, வாசனைப் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியவற்றை எடுத்து வைக்கவும். பானகம், நீர்மோர் கொடுக்க , சின்ன டம்ளர்கள் எடுத்து வைக்கவும்.

புடவைக் கலத்திற்கு அருகில், ஒரு தட்டில், வெற்றிலை பாக்கு, பழங்கள், சந்தனம், குங்குமம் அட்சதை, ஊதுபத்தி அல்லது சாம்பிராணி,ஒரு தட்டில் கற்பூரம் (கொஞ்சம் பெரிய கட்டியாக இருந்தால் நல்லது. இல்லையென்றால், பக்கத்தில் கொஞ்சம் கற்பூரம் வைத்துக் கொண்டு சேர்த்துக் கொண்டு வரலாம்).

ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைக்கவும்.

உதிரிப்பூக்களையும் ஒரு தட்டில் வைக்கவேண்டும். மேற்கூறியவை, கலத்தின் அருகில் இருக்க வேண்டும். கலத்தின் முன்பாக இலை போடுவதால், அருகிலேயே தான் வைக்க வேண்டும்.

இவை எல்லாம் செய்த பின்னரே, சுமங்கலிகளை அழைக்க வேண்டும். அவர்களைக் காக்க வைக்கக் கூடாது.

அழைத்திருக்கும் பெண்கள் (பெண்டுகள்) அனைவரும் குளித்துத் தயாரான பின், ஒவ்வொருவரையும் அமரச் செய்து, சந்தனம் குங்குமம் தரவும். பின், சின்ன உருண்டைகளாக்கி வைத்திருக்கும் மஞ்சளைக் கொடுத்து, கால்களில் பூசி அலம்பி வரச் சொல்லவும். சிறு துண்டுகளாக்கி வைத்திருக்கும் பூச்சரம் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொல்லவும்.

கலத்தின் முன்பும், சாப்பிடும் இடத்தில் போட்டிருக்கும் கோலங்களின் மேலும், இலை போட்டு பரிமாற வேண்டும். கலத்தின் முன் இரட்டையாக நுனி வாழை இலை போடவேண்டும். மற்றவர்களுக்கு ஒற்றை இலை போடலாம். சில வீடுகளில் அனைவருக்குமே இரட்டை இலை போடுவார்கள். முதலில், அன்ன சுத்தியாக, சிறிது நெய் விட்டு விட்டு, பரிமாற ஆரம்பிக்கவும். முதலில் கலத்திற்கு பரிமாறி விட்டே, மற்ற இலைகளுக்குப் பரிமாற வேண்டும். முடிக்கும் போது தெற்கே முடிக்காமல் மற்ற திசைகளில் முடிக்கவும். அதற்குத் தகுந்தாற்போல் இலை போட வேண்டும்.

எல்லாம் பரிமாறி, கொஞ்சம் அன்னமும் பரிமாறி, மீண்டும் கொஞ்சம் நெய் ஊற்றிய பின், பெண்டுகளை, வீட்டு வராந்தாவிலோ அல்லது சாப்பிடும் ஹாலின் வெளியேயோ(சௌகரியப்படி) நிற்க வைக்க வேண்டும்.அவர்கள் நிற்கும் இடத்தின் முன்பாக, கதவுகள் இருக்க வேண்டியது அவசியம். பின், கதவை மூடி விட்டு, வீட்டு மருமகள்கள், கைகளைத் தட்டி, வீட்டில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிகள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும். நிறைவாக, 'தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர் என சுமங்கலியாக இந்த இல்லத்தில் வாழ்ந்து மறைந்த அனைவரும் வந்து ஆசீர்வதிக்க வேண்டும்' என்று கூறி விட்டு, கதவைத் திறந்து விடவும். அனைவரையும் உள்ளே வந்து அமரச் சொல்லவும்.

சில வீடுகளில், பரிமாறும் முன்பே, பெண்டுகளை வெளியே நிற்க வைத்து, கதவுகளை மூடிவிட்டு, பின் பரிமாறி முடித்து, அதற்குப் பிறகு கைகளைத் தட்டி அழைப்பார்கள்.   சில வீடுகளில், கலத்திற்குக் கற்பூரம் ஏற்றிய பின்பே பெண்டுகளை அமர்த்துவதும் வழக்கமாக இருக்கிறது.

பெண்டுகள் எல்லோரும் வந்து அமர்ந்த பிறகு, வீட்டு மருமகள்களில் மூத்தவர், அல்லது மாமியார், புடவைக் கலத்திற்கு, சந்தனமும் அட்சதையுமாகக் கரைத்துத் தெளித்து விட்டு, பின் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி ஏற்றி, காண்பிக்க வேண்டும். அதன் பின், இலையில் உள்ளதை நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றி, முதலில் கலத்திற்கு சுற்றிக் காண்பித்து விட்டு, அமர்ந்திருப்பவர்கள் முன்பாகக் காட்டவும்.அதன் பின், கற்பூரத்தை கலத்தின் முன் வைத்து, நீர் சுற்றி, பூ, அட்சதையும் சுற்றிப் போட்டு வணங்கவும். அதற்கு பின், தட்டை எல்லோருக்கும்(பெண்டுகள் உட்பட) காட்டி கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொல்லலாம்.

வீட்டில் இருப்போர்(ஆண்களும்) அனைவரும், பூ, அட்சதை போட்டு கலத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன் பின், கலத்திற்கு ஆரத்தி எடுத்து விட்டு, பெண்டுகளுக்கும் காண்பிக்கவும். அவ்வாறு செய்யும் போது, வீட்டில் யாராவது ஐந்து மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் அவர்கள் நிற்கக் கூடாது.

பஞ்சபாத்திர உத்திரிணியில் நீர் எடுத்து, முதலில் கலத்தில் சிறிதளவு நீர் விட்டு, அதற்கு பின், பெண்டுகள் அனைவரையும் ஒன்று போல் கை நீட்டச் சொல்லி, நீர் வார்க்கவும். இதற்கு தத்தம் குற்றுவது என்று சொல்வார்கள்.
வீட்டின் மூத்த மருமகளோ அல்லது மாமியாரோ தான் இதைச் செய்வது வழக்கம். பெண்டுகள், அந்த நீரால் இலையைச் சுற்றிய பின் சாப்பிடச் சொல்லவும். இவ்வாறு தத்தம் குற்றும் வேளை, ராகு காலம் இல்லாமல் இருக்க வேண்டும். 'இருந்து நிதானமாகச் சாப்பிடுங்கள்' என்று சொல்லவும். இலையைப் பார்த்துப் பரிமாறவும். கேட்கும் வரை வைத்துக் கொள்ளக் கூடாது. 'எல்லாம் ருசியாக இருக்கிறதா?' என்று கேட்பது சரியல்ல.

சாப்பிட்டு முடித்த பின், கலத்திற்கு உத்தரா போஜனத்திற்காக நீர் வார்த்து விட்டு,  பெண்டுகளை இடது கையை நீட்டச் சொல்லி நீர் வார்க்கவும். பின் மீண்டும் வலக்கையில் நீர் விட்டு அருந்திய பின், கை அலம்பச் சொல்லி உபசரிக்கலாம்.

  
அதன் பின், அனைவரையும் பாய் அல்லது ஜமக்காளம் விரித்து அமரச் சொல்லி, பானகம், நீர் மோர், சுக்கு வெல்லம் ஆகியவற்றைத் தரவும். ஒவ்வொருவர் கால்களிலும், பிசைந்த மஞ்சளைப் பூசி, நலங்கு இடவும
சந்தனம், குங்குமம் கொடுத்து, தாம்பூலம் தரவும்.  இவ்வாறு செய்யும் போது, கலத்திற்கும் துளித் துளி, பானகம் நீர் மோர் ஊற்றி, தாம்பூலத்தில் ஒரு செட் வைக்க வேண்டும். பிறகு அனைவரையும் வரிசையாக நிற்கச் சொல்லி, அட்சதை தந்து, வீட்டில் உள்ளோர் அனைவரும் நமஸ்கரிக்கவும். அவர்கள் கையில் தரும் அட்சதையிலேயே கொஞ்சத்தை தனியாக வாங்கி பத்திரப்படுத்தி வைத்தால், பெண்டுகளுக்கு வர இயலாத உறவினர்களுக்கு அனுப்பச் சௌகரியமாக இருக்கும்

  
வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றைத் தந்து போட்டுக் கொள்ளச் சொல்லவும். வெற்றிலை போட்டு சிறிது நேரம் ஆன பின்பே பெண்டுகளுக்கு உட்கார்ந்தவர்கள் ஒன்பது கஜப் புடவையை மாற்றலாம். பெண்டுகளுக்கு அமர்ந்தவர்கள் இரவில் பலகாரம் தான் சாப்பிட வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடும் போது, புடவைக் கலத்தின் முன் வைத்த இலையை, சற்று வடக்குப் பார்த்து இழுத்து விட்டுவிட்டு, அந்த இலையை வீட்டு மருமகள்கள் சாப்பிட உபயோகிக்கலாம். இரு இலைகள் இருப்பதால் இருவர் சாப்பிடலாம். வீட்டு ஆண்களும் சாப்பிடலாம். அதில் இருக்கும் பிரசாதத்தை அனைவருக்கும் கொஞ்சம் போட்டு சாப்பிடச் சொல்லவும்.

எல்லாம் ஆனதும், சிறிது நேரம் கழித்து, மீண்டும் கலத்தின் முன் விளக்கேற்றி, புடவை வாங்கும் பெண்ணை மணையில் அமர்த்தி, சந்தனம் குங்குமம் கொடுத்து, கலத்திற்கு போட்ட மாலையைப் போட்டு, ஒரு தாம்பாளத்தில், கலத்தில் வைத்த புடவையையும், தாம்பூலத்தையும் தரவும். அவர் அதை அணிந்து கொண்டு வந்து பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். கலத்திற்கு போட்ட மாலையை, வீட்டில் திருமணமாகாத பெண் இருந்தால் அவளுக்குப் போட்டு ஸ்வாமியை நமஸ்கரிக்கச் சொல்லலாம். புடவை வாங்கும் பெண்ணுக்கு பூச்சரம் அணிவிக்கலாம்.
மேலே பொதுவான முறைகளே கூறப்பட்டிருக்கிறது. அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு தேவையான மாற்றங்களுடன் அனுசரிக்கவும்.புடவையை நனைக்காமல் அப்படியே வைக்கும் வழக்கம் இருந்தாலும் கூட, புடவைக் கலம் அலங்கரிக்கும் முறை மட்டும் மாறும். அதாவது, அப்படியே புதுப்புடவையை வைத்து, பூ,சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்றவை எல்லாம் மேற்கூறியவை போல் தான்.

பூவாடைப்பானை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால்,  பானைக்குள் வைத்த பாவாடை சட்டையை ஒரு கன்யாப் பெண் குழந்தைக்குத் தருவார்கள். மற்றபடி, பெண்டுகளை அழைப்பது, உணவளிப்பது எல்லாம் முன் சொன்னது போல் தான் செய்வது வழக்கம்.

பொதுவாக, வீட்டுப்பெண்ணின் திருமணம் என்றால் திருமணத்திற்கு முன்பாகவும், பிள்ளைக்குத் திருமணம் என்றால், திருமணம் முடிந்த பின், மருமகள் வீட்டுக்கு வந்த பின்பே சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

நம் குடும்ப வழக்கப்படி செய்யும் முன்னோர் வழிபாட்டு முறைகளை தவறாது அனுசரிப்பது, குடும்பத்தைக் காத்து வாழையடி வாழையாக வளரச் செய்யும். ஆகவே, அவற்றைத் தவறாது அனுசரித்து,

வெற்றி பெறுவோம்!!!

SUMANGALI PRARTHANAI, PART 1......சுமங்கலிப் பிரார்த்தனை.


நம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இடம் உண்டு. திருமணம் போன்ற மிக முக்கியமான சுபகாரியங்களின் முன்பாக, முன்னோர்களுக்கு படையலிடுதல் (மூதாதையர் படைப்பு), சுமங்கலிப் பிரார்த்தனை  என‌ செய்து அவர்களின் ஆசியைப் பெறுவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அவரவர் சார்ந்துள்ள இனம், மற்றும் குடும்ப வழக்கத்தின்படி இது செய்யப்படுகிறது.

நம் குடும்பத்தில், சுமங்கலியாக வாழ்ந்து மறைந்த பெண்களைக்  குறித்துச்  செய்யப்படும்  சுமங்கலிப் பிரார்த்தனை , முன்னோர் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், பண்டிகையாகவே செய்யப்படுகிறது.  சுமங்கலியாக வாழ்ந்து மறைந்த பெண்கள், ஸ்ரீ லலிதாம்பிகையின் சன்னதியை அடைந்து, அம்பிகையின் சாரூபம் பெறுவதாக ஐதீகம். ஆகவே அவர்களை தெய்வத்திற்குச் சமமாகக் கருதுவதால், இது பண்டிகையாகவே நடத்தப்படுகிறது. வீட்டில் எந்த ஒரு முக்கிய நிகழ்வின் முன்பாகவும், சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது   முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நெடுநாட்களாக, என்னைப் பலர் எழுதுமாறு கேட்டிருந்த விஷயம் இது.  இந்தப் பதிவில், சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதைப்  பற்றிப்  பார்க்கலாம்.
சுமங்கலிப் பிரார்த்தனை செய்யப்படும் முறைகள். :
சாதார‌ணமாக, புதுப்புடவையை நனைத்து, காய வைத்து, கொசுவம் வைத்து, மணையில் அலங்கரித்து, அதை அம்பிகையாக வைத்துப் பூஜிப்பது ஒரு முறை. ஒரு பானையில், சித்தாடை எனப்படும், பாவாடை சட்டையை வைத்து (பூவாடை பானை) வழிபடுவது ஒரு முறை. வீட்டில் கன்னிப் பெண் இறைவனடி சேர்ந்திருக்கும் பட்சத்தில் இவ்வாறு செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. கல்யாண மண்டபங்களில், பெண்களை உபசரித்து உணவளிப்பது ஒரு வகை. இது 'அதிசயப் பெண்டுகள்' என்று கூறப்படுகிறது. இதற்கு விசேஷமான ஆசாரமுறைகள் தேவையில்லை. இது குறித்து, கூறப்படும் ஒரு கர்ணபரம்பரைக் கதை பின்வருமாறு.........


ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில், ஏழு மருமகள்கள் இருந்தார்கள். அவர்களின்  மாமியார், மிகக் கடினமான சுபாவம் உள்ளவர். மருமகள்களை கடுமையாக வேலை வாங்குவதோடு, வயிறார உணவும் வழங்குவதில்லை அந்த மாமியார். ஒரு நாள், அவள் வெளியூர் சென்றிருந்த போது, அத்தனை  மருமகள்களும், ஆசை தீர விதவிதமாகச் சமைத்தார்கள். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டுமென்று திட்டமிட்டு, முதலில் இலை போட்டு பரிமாறி  முடித்தார்கள். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது, வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டு, ஒருத்தி சென்று, ஜன்னல் வழியாகப் பார்த்த போது, மாமியார் வந்து விட்டது தெரிந்தது. உடனே, அவள் வந்து சொல்ல, எல்லா மருமகள்களும் பதறிவிட்டார்கள். உடனே, பூஜை அறைக்கு வந்து இறைவியை வேண்ட, அவர்கள் எல்லோரும் காற்றில் கரைந்த கற்பூரம் போல் அம்பிகையுடன்  ஒன்றிவிட்டார்கள்.

இவ்வாறு, தேவியுடன் இணைந்த அந்த பெண்களின் வழி வந்தவர்களே, அதிசயப் பெண்டுகள் செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு அழைக்கப்படும் பெண்கள், திருமணம் முதலிய விசேஷங்களுக்கு உடுத்துவது போல், பட்டுப்புடவையோ, மற்ற புடவைகளோ (ஆறு கஜம்) உடுத்தலாம். கல்யாணத்திற்கு சமைப்பப்பது போல் இதற்கும் சமைக்கலாம். பெண்களை வரிசையாக உட்கார வைத்து, பரிமாறி, தத்தம்(கையில் நீர் வார்த்தல்) கொடுத்த பின், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பிறகு, மற்றவர்களும் சாப்பிடலாம். அவசரமாகச் சமைத்து, சாப்பிடும் வேளையில், அது இயலாமல் போன அந்த மருமகள்கள் நினைவாகச் செய்யப்படுவதால், எந்த கண்டிப்பான, சட்டதிட்டங்களும்  இதற்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள்.

பொதுவான விதிகள்:
பொதுவாக எல்லா சுமங்கலிப் பிரார்த்தனைகளுக்கும் (இதைச் சுருக்கமாக, பெண்டுகள் என்று அழைப்பது வழக்கம்)வீட்டில் பிறந்த பெண்கள்(நாத்தனார்கள் அல்லது அத்தைகள்) ஆகியோருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம்.

விசேஷங்களுக்கு முன் செய்யப்படும் சுமங்கலிப் பிரார்த்தனையாக இருந்தால், சுமங்கலிப்  பிரார்த்தனை செய்யும் தினத்தை முடிவு செய்த பின், அம்பிகையை வேண்டிக் கொண்டு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனை நிறைவடைந்த பிறகு அதை கோவிலில் சேர்க்கலாம்.

ஏதாவது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், விசேஷங்களின்  முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய சௌகரியப்படாவிட்டால், தெய்வத்திற்கு முடிந்து வைக்க வேண்டும்.  அதாவது, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை , மஞ்சள் துணியில் முடிந்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து, கற்பூரம் காட்ட வேண்டும். கட்டாயம், சுமங்கலிப் பிரார்த்தனை பிற்பாடு செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டில் யாரேனும் இறைவனடி சேர்ந்திருந்தால், ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்யலாம். ஆனால் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதில்லை. அம்மாதிரி சந்தர்ப்பங்களில் இதை போல் செய்யலாம். முடிந்து வைப்பதை, ஏதாவது ஒரு நாள் காலையில் நீராடிய பிறகு செய்யலாம்.

வீட்டில், மாமியார் சுமங்கலியாக வாழ்ந்து மறைந்திருந்தால், மருமகள்கள் கட்டாயம் வருடாவருடம் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மாமியாரின் திதிக்கு அடுத்த நாள் இதைச் செய்வது உத்தமம். அன்று இயலாவிட்டால், குறைந்தது ஒரு வாரத்திற்குள் செய்ய வேண்டும்.

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தால், இருவரும், இதைச் சேர்ந்து செய்வது சிறப்பு.  பொதுவாக, தனித்தனியே செய்வதில்லை. சில வீடுகளில், சிரார்த்தம் தனித்தனியாகச் செய்வதால், சுமங்கலிப் பிரார்த்தனையும் தனியாகச் செய்கிறார்கள்.

தாயாதிகள்(பங்காளிகள்) குடும்பத்தில், யாராவது ஒருவர் சுமங்கலிப் பிரார்த்தனை செய்தால், ஆறு மாத காலம் கழித்தே, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு முறை, பித்ருக்கள் பூலோகம் வந்து பின், அவர்கள் இருப்பிடம் சேர, ஆறு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.  இடையில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் கூட, முடிந்து வைத்து, ஆறு மாத காலம் முடிந்த பின்பே செய்ய வேண்டும்.

செவ்வாய், சனி, ஞாயிறு தவிர மற்ற கிழமைகளில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நாள், கரிநாளாக இருக்கக் கூடாது.

அலங்கரித்து வைக்கும் புடவையை, கலம் அல்லது புடவைக் கலம் என்று சொல்வது வழக்கம். பெண்டுகளுக்கு, ஒன்பது கஜம் புடவையைத்தான்  புடவைக் கலத்தில் வைப்பார்கள்.  சில வீடுகளில், புடவைக் கலத்தில் வைக்கப்படும் புடவையை, வீட்டு மருமகள்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், புடவையை நனைப்பதில்லை. மடித்து வைத்து வழிபாடு செய்து விட்டு, மருமகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். சில வீடுகளில், நனைத்துக் காயவைத்துவிட்டு, மடித்து வைத்துக் கொடுப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து, செய்து கொள்ளவும்.

ஐந்து, அல்லது ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிகளை அழைப்பது வழக்கம். அவ்வாறு கணக்கிடும்போது, புடவைக் கலத்தையும் கணக்கில் சேர்த்து எண்ண வேண்டும். வீட்டுப் பெண்கள் எத்தனை பேர், வெளியில் அழைக்க வேண்டியவர்கள் எத்தனை பேர் என்பதை முன்பே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

புடவைக் கலத்தில் வைக்கும் புடவையை மூத்த பெண்ணுக்குத்தான் கொடுக்க வேண்டும். மற்ற பெண்களுக்கு, புடவையை நனைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே, புடவைக்கலத்தில் அருகில் வைத்து, பூ, சந்தனம் குங்குமம் முதலியவை இட்டு அலங்கரித்து, வழிபாடு முடிந்ததும் கொடுத்து விடலாம்.

ஒரு வீட்டில், சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தும்  போது, நாத்தனார்களுக்குத் தான் புடவைக் கலத்தில் வைத்த புடவை கொடுக்க வேண்டும். ஆனால், பெண்ணுக்குத் திருமணமானதும், பெண்ணுக்குத் தான்  அதைக் கொடுக்க வேண்டும். ஆனால், நாத்தனார்களைக் கட்டாயம் அழைக்க வேண்டும். சௌகரியப்படி, அவர்களுக்கு வேறு புடவை எடுக்கலாம்.

மதுரைப்பக்கத்தில், வீட்டுப் பெண்கள் அனைவருக்கும ஒன்பது கஜப் புடவை வாங்குவார்கள். சில வீடுகளில், மூத்த பெண்ணுக்கு மட்டும் புடவைக் கலத்தில் வைக்கும் ஒன்பது கஜம் கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு ஆறு கஜம் வாங்குவார்கள்.  சில வீடுகளில்,   அழைக்கப்படும் பெண்கள் அனைவருக்குமே புடவைகள் வாங்குவார்கள். சௌகரியப்படாவிட்டால், வீட்டுப் பெண்ணுக்கு மட்டும் புடவை வாங்கி, மற்றவர்களுக்கு ரவிக்கைத் துணிகள் வாங்கலாம். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளலாம். ஆனால், புடவை ரவிக்கைகள், கறுப்பு நூல் கலக்காததாக இருப்பது கட்டாயம்.

சில குடும்பங்களில், சுமங்கலிகளோடு ஒரு கன்யா பெண் குழந்தையையும் அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது. அப்படியிருந்தால், அந்தக் குழந்தைக்கும் உடைகள் வாங்க வேண்டும்.

முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஒரு குடும்பத்தில் மாமியார், மருமகள் இருவரையும் அழைப்பதில்லை. ஒருவரை, அநேகமாக மாமியாரை மட்டுமே அழைப்பார்கள். விதிவிலக்காக, மருமகள், மாமியார் இருவருமே வீட்டுப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அழைக்கலாம்.

தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க வாங்க வேண்டியவை:
புடவை, ரவிக்கைத் துணிகள், குறைந்தது இருபது வெற்றிலைகள்,  பாக்கு, தேங்காய், பெரிய வாழைப்பழங்கள் இரண்டு, கண்ணாடி, சீப்பு, மஞ்சள் குங்கும டப்பாக்கள், மருதாணி(கோன்), சற்று நீளமாக நறுக்கிய பூச்சரம், கண்ணாடி வளையல்கள், தட்சணையாக ரூபாய்கள்(வசதிப்படி) ஆகியவை வைக்க வேண்டும். இவற்றைக் கவரிலோ அல்லது, தட்டு, கூடைகளில் வைத்துக் கொடுக்கலாம். எவர்சில்வர் தட்டு தவிர்ப்பது நல்லது.

சமையலில் சேர்க்க வேண்டியவை:
சிரார்த்த காரியங்களுக்கு இருப்பதைப் போல்,இதற்கு எல்லாம் சேர்க்கக் கூடாது என்பதில்லை. இங்கிலீஷ் காய்கறிகள் எனக் குறிப்பிடப்படும், முட்டைக் கோஸ், பீன்ஸ், நூல்கோல், இவற்றோடு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.

பொடி வகைகளில், புதிதாக அரைத்த குழம்புப் பொடி, மிளகாய்ப் பொடி, வரட்டு அரிசி மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம். சர்க்கரை, கேசரிப்பவுடர், முந்திரிப்பருப்பு, தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கலாம். வறுத்து அரைத்து சமைக்கலாம். சிலர் கேசரிப்பவுடர் சேர்ப்பதில்லை. வனஸ்பதி கூட சில வீடுகளில் உபயோகிக்கிறார்கள். 

பொதுவாக, பாசிப்பருப்பு பாயசம், வெள்ளரி, வெண்டைக்காய் அல்லது தேங்காய் மட்டும் அரைத்து தயிர்ப்பச்சடி, மாங்காய் அல்லது விளாம்பழம் போட்டு இனிப்புப் பச்சடி, வாழைக்காய் அல்லது கத்தரிக்காய் காரம் போட்ட பொரியல்,  புடலை, அவரைக்காய், கொத்தவரங்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் போட்டு, தேங்காய் போட்ட பொரியல், பிட்லை(ரசவாங்கி), வெண்பூசணி அல்லது புடலை பொரித்த கூட்டு, மோர்க்குழம்பு, தக்காளி ரசம், கலந்த சாத வகைகள் இரண்டு, கறிவேப்பிலை அல்லது இஞ்சித் துவையல், வடை(உளுந்து), அப்பம் அல்லது அதிரசம் (அவரவர் வீட்டு வழக்கப்படி) ஆகியவை பொதுவாகச் செய்வது வழக்கம். 

இவற்றோடு, வாழை, மா, பலா ஆகிய பழவகைகளில், எல்லாவற்றையுமோ அல்லது கிடைப்பவற்றையோ  போடலாம். திராட்சையும் போடலாம். இப்போது, ஆப்பிள், ஆரஞ்சு  எல்லாம் போடுகிறார்கள்.
பொதுவாக, இரண்டு பொரியல், கூட்டு (பிட்லை உள்பட) ஆகியவை செய்வது வழக்கம். சில வீடுகளில், நான்கு வித வெல்லக் கூட்டுகள் செய்கிறார்கள். உப்பு, இனிப்பு கோசுமல்லி, வறுவல், தேங்குழல் அல்லது உளுந்து அப்பளம்(புதிதாக இட்டு ஈரமாகப் பொரித்தது) போடுவதும், வேப்பிலைக் கட்டி, புதிதாகச் செய்த ஊறுகாயையும்  போடுவதும், சில வீடுகளில் வழக்கமாக இருக்கிறது. இனிப்புப் பச்சடிக்கு பதிலாக, புளிப்பச்சடி போடுவதும் உண்டு.

அப்பம் அல்லது அதிரசத்திற்குப் பதிலாக, போளி, கோதுமை அல்வா,சுகியன் ஆகியவை போடுவதும் சில வீடுகளில் வழக்கத்தில் உள்ளது.

பிட்லையில் கத்தரிக்காய் தான் போடுவது வழக்கம். பொதுவாக, பாகற்காய் சேர்ப்பதில்லை.

கலந்த சாத வகைகளில், தேங்காய், எலுமிச்சை, புளியோதரை ஆகியவற்றில் இரண்டு வகை செய்வது வழக்கம். சில வீடுகளில், தயிர்சாதமும் செய்கிறார்கள்.

சிரார்த்த தினத்திற்கு மறுநாளோ அல்லது அதை ஒட்டியோ, சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதாக இருந்தால், எள்ளுருண்டை கட்டாயம் செய்ய வேண்டும். விசேஷங்களை ஒட்டிச் செய்வதாக இருந்தால் பொதுவாக, எள்ளுருண்டை சேர்ப்பதில்லை. மேற்கூறிய யாவற்றையும், அவரவர் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுக் கொண்டு செய்து கொள்ளவும்.

புடவையைக் கொசுவம் வைத்து, அலங்கரித்து வழிபடும் முறை:

1. முதல் நாள் செய்ய வேண்டியவை;
இதற்கு, அழைக்க வேண்டிய சுமங்கலிகள் உள்ளூரில் இருந்தால், மஞ்சள், குங்குமம், நல்லெண்ணை, சீயக்காய், வாசனைப்பொடி  இவற்றோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களை மணையில் அமர்த்தி, குங்குமம் இட்டு, மஞ்சள் முதலியவைகளைக் கொடுத்து, 'எங்கள் இல்லத்தில், பெண்டுகளுக்கு வந்து, பெரியவர்களாக இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்' என்று கூறி நமஸ்கரிக்க வேண்டும். இதற்கு, 'சுமங்கலிப் பெண்டுகளை வரிப்பது'  என்று பெயர்.  அவர்கள், மறுநாள் வீட்டுக்கு வந்து குளிப்பதாக இருந்தால், குங்குமம் வைத்து அழைத்து விட்டு வந்து விடலாம். மறுநாள் வீட்டுக்கு வந்ததும், எண்ணை சீயக்காய் ஆகியவற்றைக் கொடுக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், முதல் நாளே, அவர்கள் உடுத்த வேண்டிய ஒன்பது கஜம் புடவையை வாங்கி வந்து விட வேண்டும். மறுநாள் காலையில் நனைத்து உலர்த்த சௌகரியமாக இருக்கும்.

அழைக்க வேண்டிய சுமங்கலிகள் வெளியூரில் இருந்தால், பெண்டுகள் தினத்தன்று காலையில், வெளியூரிலிருந்து வந்தவர்களை  வரிக்கலாம்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

சனி, 1 டிசம்பர், 2012

VIBHUTHI MAHIMAI........விபூதி மகிமை

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

"நீறில்லா நெற்றி பாழ்" என்று பெரியவர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம் நாம். நெற்றியில், அவரவர் சம்பிரதாயத்தைப் பற்றி விபூதியோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது நம் இந்து தர்மத்தில் கட்டாயம். பெண்கள் கட்டாயம் திலகமிட்டுக் கொள்ள வேண்டும். சிவனாரை முழுமுதற்கடவுளாகக் கொண்டாடும் சைவர்கள் விபூதி பூச வேண்டியது மிகக் கட்டாயமான ஒன்று. இந்தப் பதிவில்,  திருநீறு, பஸ்மம் என்றெல்லாம் வழங்கப்படும் விபூதியின் மகிமையைப் பார்க்கலாம்.

புராணங்கள் பலவற்றிலும், விபூதியின் மகிமை விரிவாகப் பேசப்படுகிறது. அம்பிகையின் பிரபாவங்களை பேசும் தேவி பாகவதம், விபூதி அணிந்தவன், அம்பிகையின் திருவருளுக்குப் பாத்திரமாகி, பிறவிக்குக் காரணமான பாசம் நீங்கி, சிவலோகம் அடைவான் என்று போற்றுகிறது.

விபூதி, பசுவின் சாணத்தை, நெருப்பில் தகிப்பதால் உண்டாகும் பஸ்மமே ஆகும். விபூதி தரிப்பதையே சிரோ விரதம் என்று வேதங்கள் புகழ்கின்றன.

விபூதி பூசுவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அப்படியே பூசுவது. இதை உத்தூளனம் என்பார்கள். இரண்டாவது திரிபுண்டரம். அதாவது, மூன்று கோடுகளாக அணிவது. நீரில் குழைத்து இவ்வாறு பூசுவார்கள்.

சைவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று விபூதி தரித்தல். திருஞானசம்பந்தப் பெருமான், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பின் எஞ்சுவது நீறு என்று அருளியிருக்கிறார்.  மாசுகளற்ற  நிலைக்கு ஒரு குறியீடாக விபூதி கூறப்படுகிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால், இந்த உடல் இறந்த பின் வெந்து சாம்பலாகப் போகிறது என்னும் வாழ்வின் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லும் செயலாகவும் விபூதி பூசுதலைக் கொள்ளலாம். ஆணவமில்லாமல், இறைத் தத்துவத்தை ஏற்று நடத்தலை, நமக்குப் போதிப்பதே விபூதி பூசுதல்.

விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, நெற்றில் விபூதி பூசுவதால், தலையில் நீர் கோத்துக் கொள்ளும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம்.

விபூதியின் மகிமையை விளக்கும் புராணக்கதைகளுள் ஒன்று:
ஒரு சமயம் துர்வாச முனிவர் பித்ருலோகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு வாசம் செய்து வந்த பித்ருக்கள் அவரை தக்க முறையில் வரவேற்று உபசரித்தனர். அவர்களுடன் துர்வாசர் உரையாடிக்கொண்டிருந்த போது, அருகில் எங்கோ ஓர் இடத்தில் இருந்து, 'ஐயோ தாங்க முடியவில்லையே, அடிக்கிறார்களே, துடிக்கிறோமே' என்பது போன்ற ஒலிகள் கேட்டன.

துர்வாசர், இதைக் கேட்டு, பித்ருக்களிடம் காரணம் கேட்ட போது, அவர்கள், 'சமீபத்தில் தான் கும்பீபாகம் என்னும் நரகம் இருக்க்கிறது. அங்கு பாவிகள் அனுபவிக்கும் வேதனைக்குரல்களே இவை. அங்கு பாவிகள் படும் கஷ்டங்கள் சொல்ல  முடியாது. சிவத்துரோகிகள், தெய்வங்களை நிந்திப்பவர்கள், குருவைக் கோபிப்பவர்கள், தாய், தகப்பனை மதியாதவர்கள், மோக வசப்பட்டு மனம் போன போக்கில் கட்டுப்பாடின்றி நடப்பவர்கள், புராணங்களையும், வேத சாஸ்திரங்களையும் நிந்தனை செய்பவர்கள் யாவரும் இந்த நரகத்திற்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்  என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட துர்வாச முனிவர், அந்த நரகத்தைப் பார்க்க வேண்டுமென்று கருதி, அங்கு சென்றார். அதை எட்டிப் பார்த்தார். பின், திரும்ப வந்து பித்ருக்களிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்.

திடீரென்று, கும்பீபாகத்தில் கேட்டு வந்த கூக்குரல்கள் அடங்கிவிட்டன. அங்கு இருந்தவர்கள் பட்ட வேதனை இருந்த இடம் தெரியாது போயின. அங்கே தென்றல் வீசியது. இசையொலி எழுந்தது. அவர்கள், ஒருவரை ஒருவர், ஆனந்தத்தால் கட்டிக் கொண்டு ஆடிப்பாட ஆரம்பித்தனர். அங்கே ஆனந்தமே நிறைந்தது.

யம கிங்கரர்கள், இதைக் கண்டு திகைத்து, யம தர்மராஜாவுக்கு இதை அறிவித்தனர். அவரும் விரைந்து வந்து இந்த அதிசயத்தைக் கண்டார். அவரால், இதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர், இதை இந்திராதி தேவர்களுக்கு அறிவித்தார். அவர்களாலும் இயலவில்லை. இதை தேவர்கள், விஷ்ணுவுக்கு அறிவிக்க, அவர், சகல தேவர்களுடன், திருக்கைலாயத்திற்கு சென்று, பரமேஸ்வரரை வணங்கி, இதற்குக் காரணம் கேட்டார்.

இறைவனான சிவபெருமான், அவர்களைப் பார்த்து,  'இதன் காரணம், என் பக்தனும் அம்சாவதராமும் ஆன துர்வாச முனிவர், அந்த நரகத்தை எட்டிப் பார்த்த போது, அவருடைய நெற்றியில் இருந்த விபூதி, காற்றில் பறந்து நரக குண்டத்தில் விழுந்தது.அதன் மகிமையால், அங்கு இருந்த  கொடுமைகள் நீங்கி, அது  சுவர்க்கத்தை விடவும் மேலானதாக ஆகிவிட்டது. இனி அந்த இடம்,  பித்ருக்களுக்கு ஒரு புண்ணிய தீர்த்தமாக, 'பித்ருதீர்த்தம்' என்ற பெயரில் விளங்கும். அங்கு சிவலிங்கத்தையும் தேவியின் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்து பித்ருலோகவாசிகள் பூஜிப்பார்கள்.  விபூதியின் மகிமையே இது'  என்றருளினார்.

அதைக் கேட்டு யமதர்மராஜர் மகிழ்ந்து, பித்ருக்களுடன் தானும் சேர்ந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். கும்பீபாக குண்டத்திலே தோன்றிய புண்ணிய தீர்த்தத்தில், அங்கு இருந்த பாவிகள் மூழ்கி, புண்ணியசாலிகளாய், மந்திரகணங்கள் என்ற பெயருடன் திருக்கைலாயத்தை அடைந்தனர். யம தர்மராஜர், புதிய கும்பீபாகத்தை வேறிடத்தில் நிறுவினார்.

திருநீற்றின் மகிமைகள் விளக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருநீற்றுப்பதிகத்திற்கு இங்கு சொடுக்கவும்.

விபூதி பூசும் முறை:
விபூதியை கிழக்கு, வடக்கு முகமாகத்தான் நின்று அல்லது அமர்ந்து கொண்டு அணியவேண்டும். நடந்து  கொண்டோ படுத்துக் கொண்டோ பூசக் கூடாது. கீழே சிந்தக் கூடாது. சிவ சிவ என்னும் சிவமந்திரத்தை பக்தியுடன் உச்சரித்து, விபூதி இட்டுக் கொள்ள் வேண்டும். முறையாக மந்திர உபதேசம் பெற்றவர்கள், பிரசாத மந்திரத்தை உச்சரித்து, ஐந்து விரலால் சிரத்திலும், சிரோ மந்திரத்தை உச்சரித்து, மூன்று விரலால் நெற்றியிலும், சத்யோஜாத மந்திரத்தை உச்சரித்து, நடு விரலால் வலக் காதிலும், வாமதேவ மந்திரத்தை உச்சாடனம் செய்து, இடது காதிலும், அகோர மந்திரத்தை உச்சாடனம் செய்து, கழுத்திலும், இருதய மந்திரத்தை உச்சரித்து, மூன்று விரலால் இருதயத்திலும், சிகா மந்திரத்தை உச்சரித்து,  வலது கரத்திலும், கவச மந்திரத்தை உச்சரித்து இடது கரத்திலும், ஈசான மந்திரத்தை உச்சரித்து, நடு விரலால் நாபியிலும் விபூதி தரிக்க வேண்டும். விபூதி பூசும் அளவு, முறை இவை குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

விபூதி பூசுவதன் மகத்துவம்;
விபூதி பூசாத தேகம் சுடுகாட்டுக்கு சமமாகும் என தேவி பாகவதம் கூறுகிறது.  விபூதியில்லாத தேகம், சிவாலயமில்லாத கிராமம், சிவார்ச்சனை இல்லாத பிறவி, சிவனை ஆச்ரயிக்காத வித்தை இவை யாவும் வீண் என்று வேதம் சொல்கிறது. விபூதியை பக்தியுடன் தரிப்பவன், தன் உடலில் சிவனையே தரிப்பவனாகிறான். விபூதியை நிந்திப்பதும், அலட்சியப்படுத்துவதும்,  சிவனையே  நிந்திப்பதற்குச் சமம்..  

நம் நெற்றியின் நடுவில் ஆஜ்ஞா சக்கரம் இருக்கிறது. முறைப்படி மந்திரங்கள் ஜபித்துக் கொண்டு விபூதி பூசுவதை, ஆக்ஞேய ஸ்நானம் என்று  கூறுகிறார்கள். விபூதி தரிப்பதால், சந்நியாசி ஞானத்தையும், இல்லற வாசிகள், இல்லற தர்மம் சிறத்தலையும், பிரம்மச்சாரிகள், வித்தையில் வெற்றி காணுதலையும், அடைகிறார்கள்.  மந்திரங்களில் சிறந்ததான காயத்ரி ஜபிக்கும் போது ஒருவர் கட்டாயம் விபூதி பூச வேண்டும். இல்லையேல்  அவருக்கு காயத்ரி ஜபிக்கும் தகுதி கிடையாது. விபூதி இல்லாமல் சந்தியாவந்தனம் செய்வது தோஷத்தைக் கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

முக்திக்கு வழியாக உள்ளவை, சிவலிங்க பூஜை, ருத்திராக்ஷம் அணிதல், ஐந்தெழுத்தை ஓதுதல், விபூதி தரித்தல் ஆகியவை ஆகும்.

சிவமந்திரத்தைக் காட்டிலும் மேலான மந்திரமில்லை. சிவ பரத்தைக் காட்டிலும் மேலான பரமில்லை. சிவார்ச்சனையின் புண்ணியத்தை விடப் பெரிய புண்ணியம் இல்லை. அது போல், விபூதி தரித்தலைக் காட்டிலும் மேலான புண்ணிய தீர்த்த ஸ்நானம் இல்லை. ஒருவர் நீராட இயலாத நிலையில் இருந்தாலும், அவர், தன் மேனியெங்கும், விபூதியைத் தெளித்துக் கொண்டு, முறைப்படி விபூதியிட்டுக் கொள்ளுதல் (விபூதி ஸ்நானம்) கட்டாயம் செய்ய வேண்டும்.

விபூதி தரிப்பதால், சகல துக்கங்களும் பாவங்களும் நீங்கும். மரணகாலத்தில், பஸ்மஸ்நானம் எனப்படும் விபூதி ஸ்நானத்தை ஒருவன் அடைந்தால், அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகிறான். விபூதி இருக்கும் இடத்தில் துர்சக்திகள் இருக்க முடியாது. விபூதியை ரக்ஷையாகவும் தரிக்கலாம். பயணங்கள் செல்லும் போது உடன், விபூதியைக் கொண்டு செல்வது ஒரு ரக்ஷை(பாதுகாப்பு) போல் ஆகும். விபூதியை வீசி எறிவதோ அல்லது தாண்டுவதோ பெரும் பாவம்.

நாம் தினமும் நீராடுவதை, பிரகிருதி என்றும் பந்தம் என்றும் கூறுவார்கள். இந்த பந்தம் நீங்குவதற்காகவே விபூதி ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடுவது உடலின் வெளிப்புறத்தை மட்டும் தான் சுத்தம் செய்யும். ஆனால், விபூதி தரித்தலோ உடலின் உள்ளும் புறமும் சுத்தம் செய்ய வல்லது.

மனிதருக்கு விதிக்கப்பட்ட வைதீக காரியங்கள் செய்யும் வேளையில், ஒருவருக்கு இயற்கையின் உந்துதலால் இடையில் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர், கை கால்களை சுத்தம் செய்து, விபூதி தரித்துக் கொண்டு அதன் பின், காரியங்களைத் தொடர்ந்து செய்யலாம். விபூதியின்  மகிமையை விவரித்துக் கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதியே நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. 

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!
படம் நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 26 நவம்பர், 2012

THIRUKARTHIGAI DEEPAM (27/11/2012 &28/11/2012)....... ( திருக்கார்த்திகை தீபம்)

கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையின்
பண்பாரும் கார்த்திகை தீபம்.
(கார்த்திகை தீப வெண்பா)
இருள் நீக்கி ஒளி தருவது விளக்கு. இருள் சூழ்ந்த இடத்தில், இருக்கும் பொருள்களை அறிய ஒரு விளக்கை ஏற்றினால் போதும். உள்ள பொருளை நாம் காணுமாறு விளக்குவதாலேயே 'விளக்கு' என்று பெயர். அது போல், மனதில் இருக்கும் அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞ்ஞானச் சுடரை ஏற்றினால் மனதினுள் இருக்கும் 'இறைவன்' என்னும் மெய்ப்பொருள் விளங்கும். இந்த உண்மைத் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழாவே கார்த்திகை தீபப் பெருவிழா.

திருவண்ணாமலை தீபம் என்றே இந்த விழா சிறப்பித்துக் கூறப்படுகிறது. தமிழர்களின் மிக  முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று இது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், 'பெரிய கார்த்திகை' என்றே சிறப்பித்துக் கூறப்படும் இந்தப் பண்டிகை வருகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், இந்த விழா பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மலையே சிவமாக நிற்கும் பெருமையுடையது. ஒரு சமயம், திருமாலும், பிரம்ம தேவனும்,  'தாமே உயர்ந்தவர்' என்று  போட்டியிட்டுக் கொண்டபோது, சிவனார், ஒரு பெரும் ஜோதிப்பிழம்பாக, அவர்கள் முன் நின்றார். யார் அந்த ஜோதியின், அடியையும், முடியையும் தேடி, கண்டடைகிறாரோ அவரே உயர்ந்தவர் என்றார்.அந்த ஜோதியின் அடியைத் தேடி, திருமாலும், முடி(தலை, ஆரம்பிக்கும் இடம்)யைத் தேடி பிரம்மாவும் சென்றனர். அப்போது சிவனார் தலையிலிருந்து ஒரு தாழம்பூ விழுந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. பிரம்மா அதைப் பார்த்துவிட்டு, சிவனாரை உணர்ந்தாரெனினும், தாழம்பூவை, தான் அந்த ஜோதியின் முடியைப் பார்த்ததாக, சாட்சி சொல்லுமாறு பணித்தார். தாழம்பூவும் ஒப்புக் கொண்டது.

திருமாலோ, திருவ‌டியைத் தேடி, அதை அடைய முடியாமல், தம் இயலாமையை ஒப்புக் கொண்டார். சிவனார், மகிழ்ந்து, 'நாம் இருவரும் ஒருவரே' என்று அருளியதோடு, தம் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய‌ பிரம்மாவுக்கு, எவ்விடத்திலும் கோவில்கள், வழிபாடு இருக்காதென்றும், தாழம்பூ தன் பூஜைக்கு ஏற்றதல்ல என்றும், அதில் நாகம் குடிகொள்ளும் என்றும் சாபமிட்டார். ஆணவமே அழிவு என்றும் ஆணவமின்மையே பேரின்பப் பெருவாழ்வு என்றும் உலகுக்கு உணர்த்திய, அந்த உன்னத நிகழ்வு நடந்த நன்னாளே திருக்கார்த்திகைத் திருநாள்.

இதையே,
திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம். 
என்கிறார் திருவருட்பாவில் வள்ளலார் பெருமான்.

அன்றைய தினம், திருவண்ணாமலையை வலம் வருவோருக்கு அடிக்கு ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். 'நல்லக நமசிவாய விளக்கே போற்றி' என்று உள்ளம் மகிழ உச்சரித்து, திருக்கார்த்திகை மகாதீபத்தை தரிசிப்போருக்கு மறு பிறவி கிடையாது. உமையொரு பாகனாகி, சிவனார் இம்மலையின் மீதே அருட்காட்சி தந்தார் என்கிறது புராணம்.

ஸ்ரீ வைணவ மரபில் வந்தவர்களும் திருக்கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீபம், பொதுவாக, நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கத்திலும், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு மறுநாள், பாஞ்சராத்திர தீபம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நாளில் தீபத் திருநாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம், திருவரங்கத்தில் வீற்றிருந்தருள்புரியும் நம்பெருமாள், தம் ஸ்ரீபாதம் தாங்கிகளிடம், நம்மாழ்வார் பெருமானை திருவரங்கத்திற்கு  எழுந்தருளச் செய்து அத்யயன உத்ஸவம் நடத்தும்படி பணித்ததாலும், திருமங்கைஆழ்வார் பிரானின் திருநட்சத்திர வைபவம் என்பதாலும், தீபத் திருவிழாவைச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
சொக்கப்பனை:
கார்த்திகை தீபத்தன்று, ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உண்டு. ஒரு தென்னை அல்லது பனை மரத்தை கோவிலின் முன்பாக  சற்றுத் தூரத்தில் நட்டு, அதைச் சுற்றிலும் ஓலை கட்டி வைப்பார்கள். சாயங்காலம், தீபமேற்றி, ஸ்வாமி புறப்பாடு ஆனதும்,  சொக்கப்பனையின் முன்னால் ஸ்வாமிக்கு தீபாராதனை நடைபெறும்.  அந்த தீபாராதனையின் கற்பூர ஜோதியக் கொண்டே சொக்கப்பனையின் உச்சியில் தீ மூட்டப்படும். பெரும் ஜோதிப் பிழம்பாக எரியும் சொக்கப்பனையின் ஒளியில் கோபுர தரிசனம் காண்பது பிறவாப் பயனளிக்கும்.

சொர்க்கத்திற்குச் செல்ல வழிகாட்டும் பனை என்பதே மருவி சொக்கப்பனை ஆனது. சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அங்கு இருக்கும், கரிந்த குச்சிகளை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயலில் நட்டு வைப்பது வழக்கம். இவ்வாறு செய்வதால், விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இல்லங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடும் முறை:
'தீபம் ஜ்யோதி பரப்பிரஹ்மம்' அதாவது பரப்பிரம்ம ஸ்வரூபமே தீப ஜோதி. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது நம் பாரம்பரியப் பழக்கம். 'திருவிளக்கு பூஜை' என்றே ஆலயங்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்கிறோம். விளக்கின் சுடரில் பரம்பொருள் எழுந்தருளுவதாகவும், அந்தச் சமயத்தில், முப்பத்து முக்கோடி தேவர்களும் அருகிருந்து வழிபாடு செய்வதாகவும் ஐதீகம். ஆகவே, காலையும் மாலையும் குறித்த வேளைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது என்றார்கள் நம் முன்னோர்.
தீபத்தின் பெருமை உணர்ந்தும், இவ்விழாவின் பொருள் புரிந்தும் செய்வது சிறப்பு. இது சகோதரர்களின் நன்மையைப் பேணி, பெண்கள் விளக்கேற்றும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பிறந்த வீடுகளிலிருந்து, பெண்களுக்கு 'கார்த்திகை சீர்ப் பணம்' தருவது வழக்கம். கல்யாணமான முதல் வருடம் பெண்களுக்கு கார்த்திகை சீர் தருவார்கள். விளக்குகள், பொரி முதலியவற்றோடு தேன்குழல், ஏதாவது ஒரு இனிப்பு ஆகியவற்றைத் தருவது வழக்கம்.

கார்த்திகை தீபத்தன்று காலையில், வீடு வாசலை மெழுகி சுத்தம் செய்து, வாசலில், பண்டிகை தினம் என்பதால் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும்.  வீட்டில் பூஜை அறையில் மாக்கோலம் போட வேண்டும். பூஜை அறை சிறிதாக இருந்தால், விளக்கேற்றும் இடம் என்று கிழக்குப் பார்த்து ஒரு இடம் தேர்வு செய்து அங்கேயும் மாக்கோலம் போடலாம். அன்று, வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் எண்ணைக் குளியல் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம்.

சில வீடுகளில், வடை பாயசத்துடன் விருந்தாகச் சமைப்பது வழக்கம். மதுரைப்பக்கத்தில் மாலை, நிவேதனத்திற்கு வடை செய்வது சம்பிரதாயம் என்பதால் காலையில் செய்வதில்லை. நிவேதனத்திற்கு வேண்டியதைத் தயார் செய்து கொள்ளவும்.

நிவேதனம் செய்ய வேண்டியவை:
அவல் பொரி, நெல்பொரி, அப்பம், அடை அல்லது வடை ஆகியவை செய்வது வழக்கம். சில வீடுகளில் அவல் பொரி மட்டும் பாகு செலுத்தி வைப்பது உண்டு.


வெல்ல அடை செய்வதும் சில வீடுகளில் வழக்கம். வீட்டுப் பெரியவர்களைக் கேட்டு, அவரவர் வீட்டு வழக்கப்படி செய்து கொள்ளவும். அது போல், பொரியை உருண்டையாகவோ அல்லது அப்படியே நிவேதனம் செய்வதோ அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது. மற்ற எந்த நிவேதனம் செய்யவும் சௌகர்யமில்லாவிட்டால், அவல் பொரியை மட்டுமாவது பாகு செலுத்தி, வெற்றிலை பாக்கு பழத்துடன் நிவேதனம் செய்ய வேண்டும்.

ஒரு மணைப் பலகையை எடுத்து, மாக்கோலம் போட்டு வைக்கவும். வீட்டில் இருக்கும் அகல்கள், குத்து விளக்குகள், புது அகல்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து, பொட்டு வைத்து, கொஞ்சம் எண்ணை ஊற்றி, பஞ்சுத் திரி அல்லது நூல் திரி போட்டு வைக்கவும். குத்து விளக்குகளுக்கு பூ வைக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கும் பூ வைக்க வேண்டும். ஒரு போதும் உபயோகித்த துணிகளைக் கிழித்து திரி தயாரிக்கக் கூடாது.  மணையின் மேல் விளக்குகளை வைக்கவும்.

மாலை ஐந்து மணிக்கு மேல், நிவேதனப்பொருட்கள், விளக்குகள் எல்லாம் தயார் செய்து கொண்டு, ராகு காலம் இல்லாத நேரத்தில், விளக்கேற்றலாம். புது உடைகள் இருந்தால் அணிந்து கொண்டு விளக்கேற்றலாம். அவரவர் சம்பிரதாயப்படி உடை அணிந்து திருவிளக்கேற்றுவதே சிறப்பு.முதலில், ஏதாவதொரு விநாயகர் துதியைக் கூறி வேண்டிக் கொள்ளவும். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒரு சிறு அகலை ஏற்றி, பின்  வீட்டில் எப்போதும் ஏற்றும் விளக்கு, பின் குத்துவிளக்குகள், மற்ற விளக்குகள் என்று எல்லா விளக்குகளையும் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றும் போது, 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்னும் திருப்புகழைப் பாடி ஏற்றுவது சிறப்பு. திருவிளக்கு போற்றி அல்லது திருவிளக்கு அகவலையும் கூறித் துதிக்கலாம்.  திருவிளக்கு அகவல் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்.

மண் அகல்  பூமி தேவியின் அம்சம். ஆகவே, கட்டாயம், மண் அகல்களையும் ஏற்ற வேண்டும்.
பாவை விளக்கு, யானை விளக்கு ஆகியவை இருந்தால் அவற்றைக் கட்டாயம் ஏற்ற வேண்டும். கார்த்திகை சீராக விளக்குகள் கொடுக்கும் போது இந்த விளக்குகளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம்.

ஊதுபத்தி ஏற்றிக் காண்பித்து, நிவேதனப்பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கு பழம், தேங்காய் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். மலர்களைத் தூவி, தீபத்தை வழிபட்டு மஙகள ஆரத்தி காண்பித்து விட்டு, தீபத்தை நமஸ்கரிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் எல்லா அறைகளிலும் மின்சார விளக்குகளைப் போடவேண்டும்.

விளக்குகளை வாசலிலும் மற்ற இடங்களிலும் வைக்க வேண்டும். கட்டாயம்,அடுப்படியிலும், கொல்லைப்புறத்திலும்(இருந்தால்) வைக்க வேண்டும். குறைந்தது, இரவு ஏழு, ஏழரை மணி வரையிலும் விளக்குகள் எரிய வேண்டும். அவ்வப்போது பார்த்து எண்ணை ஊற்றவும். அக்கம்பக்கத்தில் உள்ளோரை அழைத்து தாம்பூலம் தருவது சிறப்பு.

சில வீடுகளில், தீபம் ஏற்றியதும், பூஜை செய்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. பூஜை முடிந்த பின், ஆரத்தி எடுத்து விட்டு, தீபங்களை வாசலில் வைப்பார்கள்.

மறுநாள், குப்பைக் கார்த்திகை என்று சொல்வார்கள். அன்றும் கொஞ்சம் விளக்குகளை ஏற்றி வாசலில் வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு பழம், பால் இவற்றை நிவேதனம் செய்வது வழக்கம்.

 கார்த்திகை தீபத் திருநாளன்று, ஆலயதரிசனம் செய்து, ஆலயங்களில் தீபமேற்றி வழிபாடு செய்யவது நல்லது. ஒரு திருக்கார்த்திகை நன்னாளில், சிவன் கோவிலில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கை, அதன் மேல் தாவிக் குதித்துச் சென்ற எலியின் வால் தூண்டிவிட்டதாம். அது பிரகாசமாக எரியவே, அதன் பலனாக, அந்த எலியே மறுபிறவியில், மஹாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்ததாம். அறியாமல் ஒரு விளக்கை கார்த்திகை தீபத்தன்று தூண்டி விட்டதற்கே உயர் பிறவி கிடைத்தது ஒரு எலிக்கு. ஆகவே, கார்த்திகை தீபத் திருநாளில் திருக்கோவில்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்வது மிக உயர்ந்த புண்ணியப் பலனை அளிக்க வல்லது.

இல்லங்களில் பரணி தீபம் அல்லது கிருத்திகா தீப வழிபாடு:
கார்த்திகை மாதம், பரணி நட்சத்திரத்தன்று, முன்னூற்று அறுபத்தைந்து திரி திரித்து,  ஒரு அகலமான அகல் அல்லது பாத்திரத்தில், நெய் அல்லது எண்ணையை ஊற்றி, கோவில் அல்லது வீட்டில் ஏற்ற வேண்டும். பூஜை அறை அல்லது கோவிலில் கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தட்டில் அரிசியை வைத்து, அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். விளக்கிற்கு பூ சாற்ற வேண்டும்.  விளக்கு மலை ஏறிய பின்(எரிந்தான பின்), அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் தட்சணையை வைத்து  தானம் செய்ய வேண்டும். மண் அகலில் ஏற்றினால், சிறிய விளக்கு அல்லது பித்தளை அகலை வாங்கி, அதனுடன் தட்சணையை வைத்துத் தானம் செய்யலாம். இது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் மகிமையுடையது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று ஏற்றுவதானால், ஆயிரத்தெட்டு திரி திரிக்க வேண்டும். மேற்கூறியபடி ஏற்றி, தானம் செய்ய வேண்டும்.

இந்த தீபங்களை ஏற்றி தானம் செய்பவர்கள், பகலில் விளக்கேற்றும் வரை உபவாசமிருந்து, ஒரு வேளை மட்டுமே உண்பார்கள்.

கார்த்திகை தீப விரதம்:
இந்த விரதத்தை, ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் கிருத்திகையன்று ஆரம்பிக்க வேண்டும். முப்பது தினங்களுக்கு, தினம் ஒரு புது விளக்கில் தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சந்தன பிம்பத்தில், ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். பிறகு, ஒரு வைதீகருக்கு தட்சணையுடன் தீபத்தை தானம் செய்ய வேண்டும். அவருக்கு உணவளிப்பது அவசியம். அவரவர் சௌகர்யப்படி, குத்து விளக்கு அல்லது அகலை வாங்கி, அதில் இந்த பூஜையைச் செய்யலாம்.

முப்பது நாட்களும் செய்ய இயலாதவர்கள், கார்த்திகை மாத அமாவாசைக்குள், ஏதாவது ஒரு நாளில், முப்பது விளக்குகளை வாங்கி, தீபம் ஏற்றி,  பூஜை செய்து, மேற்கூறியவாறு முப்பது வைதீகர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.  இந்த விரமிருப்பவர்கள், இரவு மட்டும் உண்டு செய்வது சிறப்பு. இயலாதவர்கள், ஒரு வேளை மட்டும் உண்டு, இரவு பலகாரம் சாப்பிடலாம். இம்மை, மறுமைப் பயன்களைத் தரவல்லது இந்த விரதம்.

கார்த்திகை தீப நன்னாளில், தீபமேற்றி வழிபாடு செய்து,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 24 நவம்பர், 2012

PART 2, BRINDAVANA THUVADASI VIRATHAM. (25/11/2012).....பிருந்தாவன துவாதசி விரத‌ம்..பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி...............

கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 

துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.

துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.

தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.

விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.

விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.

துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.


என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.

இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.
துளசி பூஜை செய்யும் முறை:
துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 

பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.

துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  

பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.

மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.