விதூய க்லேசான் மே குருசரணயுக்மம் த்ருத ரஸம்
பவத்க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜந விதௌ
பவன்மூர்த்யா லோகே நயனம் அததே பாததுலஸீ
பரிக்ராணே க்ராணம் ச்ரவணம் அபி தே சாருசரிதே
ஹே க்ருஷ்ணா!!, என் துயரங்கள் அனைத்தையும் கருணையுடன் போக்கி அருள்வாயாக. என் கால்கள் உன் திருக்கோயிலையே நாடும்படிக்கும், என் கரங்கள், உன் திருவடிகளையே பூஜிக்கும்படிக்கும், என் கண்கள், உன் திருமேனி எழிலை மட்டுமே காணும்படிக்கும், என் நாசி, உன் திருவடிகளில் அர்ச்சித்த துளசியையே நுகரும்படிக்கும், என் காதுகள், உன் மகிமை வாய்ந்த லீலைகள் அடங்கிய சரிதங்களையே செவிமடுக்கும்படிக்கும் அருள்வாயாக". (ஸ்ரீமந் நாராயணீயம், 3 வது தசகம்).
கபில மாமுனிவரின் தாயாகிய தேவஹூதிக்கும், கபிலருக்கும் நடந்த சம்வாதமாக, ஸ்ரீமத் பாகவதம் கூறும் சாங்கிய யோகத்தின் முதல் பகுதியை இந்தப் பதிவில் பார்க்கலாம். கபிலமாமுனிவரின் அமுத மொழிகளே, சாங்க்ய காரிகை என்னும் நூலாக உருப்பெற்றது. ஸ்ரீ க்ருஷ்ணரும், கீதையில், சாங்க்ய யோகத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். ஆனால் இது கபிலரின் சாங்க்ய யோகத்திலிருந்து சிறிது வேறுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 'ஸங்கியை' என்றால் 'கணக்கெடுப்பது' என்று ஒரு பொருள் உண்டு. அது போல், பிரபஞ்சம் சம்பந்தமான தத்துவங்களை கணக்கெடுத்துச் சொல்வதால் 'ஸாங்கியம்' என்ற பெயர் ஏற்பட்டது. நமது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளின் போது செய்ய வேண்டிய மத ரீதியான சடங்குகளின் தொகுப்பை 'சாங்கியம்' என்று சொல்வதும் இவ்வாறு ஏற்பட்டதேயாம்.
இனி, தேவஹூதி, கபிலர் சம்வாதத்தைப் (உரையாடலை) பார்க்கலாம்.
இனி, தேவஹூதி, கபிலர் சம்வாதத்தைப் (உரையாடலை) பார்க்கலாம்.
தேவஹூதி கபிலராக திருஅவதாரம் செய்துள்ள பகவானைப் பார்த்து,
'தாங்களே ஆதிபுருஷன். ஜீவர்களுக்கு ஈஸ்வரனாக விளங்குபவர். அஞ்ஞான இருளில் பார்வையிழந்திருக்கும் உலகுக்கு பார்வையளிக்கும் சூரியன் நீரே. ஆகையால், அடியார்களின் ஸம்ஸார விருக்ஷத்திற்குக் கோடாரி போன்றவரும், ஞானமார்க்கத்தை அறிந்தவர்களின் தலைவராக விளங்குபவரும், சரணடைதற்குரியவரும் ஆன உம்மைப் ப்ரக்ருதி, புருஷ விவேகத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு நான் சரணடைகிறேன்' என்று கூறினாள்.
அதைக் கேட்ட கபிலர், பின்வருமாறு கூறலாயினார்.
- எதை அறிந்தால், இயற்கைக் குணங்களின் கட்டிலிருந்து ஜீவனாகப் பட்டது விடுதலையடையுமோ, அந்தத் தத்துவத் தொகுதியின் லக்ஷணங்களை இப்போது நான் தனித்தனியே விளக்கிக் கூறுவேன்.
- இவ்வுலகு முழுவதும், வியாபித்துள்ளவன் எவனோ, யார் நிர்க்குணனாக, பிரகிருதிக்கு அப்பாலுள்ளவனோ, யார் ஒவ்வொருவரின் இதயத்துள்ளும் உறைபவனோ,ஸ்வயம் பிரகாசனாக,(தானே பிரகாசிப்பவனாக) விளங்குபவன் எவனோ, யாருக்கு ஆதியில்லையோ, அவனே "புருஷன்" எனப்படுபவன்.
- (மாயையே ப்ரக்ருதி என்று குறிப்பிடப்படுகிறது. பிரபஞ்சம், ப்ரகிருதியைச் சேர்த்து 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது. காரிய காரண முதலானவற்றிற்கு, பிரகிருதியைக் காரணமாகவும், இன்ப துன்ப நுகர்ச்சிக்கு 'புருஷன்' காரணமென்றும் கூறப்படுகிறது. 24 தத்துவங்களில், ப்ரக்ருதியே முதல் தத்துவம்).
- பஞ்ச பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியங்கள் (மெய்,வாய், கண், மூக்கு, காது ஆகியன) ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், தன்மாத்திரைகள் (தொடு உணர்ச்சி, சுவை, ரூபம், வாசனை, சப்தம் அதாவது, ஞானேந்திரியங்களின் செயல்பாடுகள் சார்ந்திருப்பவை)ஐந்தும், ப்ரகிருதி, ப்ரகிருதியின் புத்தியான மஹத், அகங்காரம், ஜீவனின் மனம் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து,மொத்தம் 24 தத்துவங்கள். காலம் என்பது 25வது தத்துவம்.
- வெளியே கால ரூபமாயிருப்பது எதுவோ அதுவே உள்ளே புருஷ ரூபமாயிருப்பதும். அந்த பகவத் தத்துவம், தன் மாயா சக்தியால், சகல உயிரினங்களின் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிறது.
- சலனத்தை அடைந்த ப்ரகிருதியிடம், பரம பருஷன், தன் சக்தியாகிய வீர்யத்தை வைக்க, அதன் காரணமாக, பொன் போலொளிரும் 'மஹத்' தத்துவம் பிறந்தது.
- இந்த மஹத் தத்துவம் மாறுதலை அடைந்தபோது, கிரியாசக்தியைப் பிரதானமாகக் கொண்ட மூன்றுவித அகங்காரங்கள் தோன்றின. அவை
- வைகாரிகம்,
- தைஜஸம்,
- .தாமஸம் ஆகியன.
- வைகாரிகத்திலிருந்து மனமும், தைஜஸத்திலிருந்து இந்திரியங்களும், தாமஸத்திலிருந்து, பஞ்ச பூதங்களும் உற்பத்தியாயின. இவ்விதமாய், விரிந்த அஹங்காரத் தத்துவத்தையே, ஆயிரம் தலை படைத்த அனந்தனாக, ஸங்கர்ஷண புருஷனாகக் கூறுகின்றனர்.
- சத்வ குணத்தால் சாந்தியும், ரஜோ குணத்தால் சாந்தியிழத்தலும், தமோ குணத்தால் அறிவின்மையும் அகங்காரத்தின் வடிவங்களாகும். வைகாரிக தத்துவம் (சாத்துவிகாஹங்காரம்) மலர்ந்ததன் காரணமாக, மனஸ் தத்துவம் தோன்றியது. அதிலிருந்து, சங்கல்ப, விகல்ப வடிவான ஆசை தோன்றியது.
- மனஸ் தத்துவத்தையே இந்திரியங்களை ஆள்பவரான அநிருத்தன் என்றும் அவரையே மனதை அடக்குவதற்கு, நீலோத்பலம் போன்ற சியாமள வண்ணன் ரூபத்தில், யோகிகள் தியானிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
- தைஜஸ தத்துவம்(ராஜஸாஹங்காரம்) மலர்ந்ததால், புத்தி தத்துவம் தோன்றியது. அதன் மூலம், பொருள்களைப் பற்றிய அறிவும், இந்திரியங்களால் அவற்றை உணரும் (நுகரும்) சக்தியும் உண்டாகியது.
- தாமஸ அஹங்காரம் மலர்ந்ததால், சப்த தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ஆகாயமும், சப்தத்தை உணரும் சுரோத்திரேந்திரியமும் (செவியும்) உண்டாயின. ஆகாயத்தின் சப்த தன்மாத்திரையிலிருந்து நாளடைவில் தோன்றியது ஸ்பர்ச(தொடு உணர்ச்சி) தன்மாத்திரை. பின்னர், வாயுவும், ஸ்பர்சத்தை உணரும் த்வக் இந்திரியமும்(மெய்) தோன்றியது.
- வாயுவின் ஸ்பர்ச தன்மாத்திரையிலிருந்து, காலத்தின் தூண்டுதலால், ரூப தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ஒளியும், ஒளியை உணரும் கண்ணும் உருவாயின.
- அவ்வாறே, ரூப தன்மாத்திரையிலிருந்து, ரஸ(சுவை) தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து அப்புவும்(நீரும்) சுவையை உணரும் நாக்கும் தோன்றின.
- ரஸ தன்மாத்திரையிலிருந்து, கந்த(வாசனை) தன்மாத்திரை உண்டாகியது. அதிலிருந்து ப்ருத்வி(பூமி)யும், வாசனையை உணரும் மூக்கும் உண்டாயின.
- மஹத்தத்துவம், அஹங்காரம், பஞ்ச பூதம் முதலான ஏழும் ஒன்று சேராமல் ஆதியில் இருந்த போது, பரமாத்மா, காலம், கருமம் குணம் இவைகளுடன் அவற்றில் பிரவேசித்து, அவற்றுள் ஊடுருவி ஒன்று சேர்த்தார். அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட மஹதாதிகளிலிருந்து ஜடமான அண்டம்(பிரபஞ்சம்) தோன்றியது. அதிலிருந்து விராட் புருஷனானவர் தோன்றினார்.
- இந்த நிகழ்வு ஸ்ரீமந் நாராயணீயத்தில், கீழ்க்கண்டவாறு விவரிக்கப்படுகிறது.ஏதோ பூதகணா: ததேந்திரிய கணா:தேவாஸஜாதா: ப்ருதங்நோ சேகு: புவனாண்ட நிர்மிதிவிதௌ தேவை: அமீபிஸ்ததாத்வம் நானாவித ஸூக்திபி: நுதகுண:தத்வாதி அமூந் யாவிசன்னுசேஷ்டா சக்திம் உதீர்ய தானிகடயன்னு ஹைரண்ய மண்டம் வ்யதா:"ஹே குருவாயூரப்பா!!, இவ்வாறு தோன்றிய பஞ்சபூதங்கள் முதலானவைகளும் அவற்றின் தேவதைகளும் தனித்தனியே இருந்தன. அவற்றால் இவ்வித ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது அந்தத் தேவதைகள் உன்னையும் உன் கல்யாண குணங்களையும் ஸ்தோத்திரம் செய்தன. உடனே நீ மஹதாதி தத்துவங்களின் உட் புகுந்து உண்டாக்கும் சக்தியை அளித்தாய். அதன் மூலம் பொன் மயமான பிரம்மாண்டம் உருவானது." (5வது தசகம்).
இந்த அண்டமானது, அதற்கு முன்பே உருவான நீரில் ஆயிரம் வருடங்கள் இருந்தது. பரமாத்மா அதனைப் பிளந்து, பதினான்கு லோகங்களின் ரூபம் கொண்டு விராட் புருஷன் என்ற உருவம் கொண்டார்.
(பகவானின் கல்யாண குணங்களைப் போற்றும் ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஸ்லோகங்களுக்கு இங்கு சொடுக்கவும்.)
விராட் புருஷ உருவம்:
பதினான்கு லோகமாக ரூபம் கொண்ட, விராட் புருஷனின் உள்ளங்கால்கள் பாதாள லோகம் என்றும் கால்களின் மேற்புறம் ரஸாதலம் என்றும், கணுக்கால்கள் மஹாதலம் என்றும் இருக்கின்றன. இவை மூன்றும் கீழ் லோகங்கள்.
கணுக்கால்களிலிருந்து முழங்கால்கள் வரை தலாதலமாகவும், முழங்கால்கள், ஸூதலமாகவும், இரு தொடைகளும் விதலம், மற்றும் அதலமாகவும் இடுப்பு பூலோகமாகவும், தொப்புள் வானமாகவும், மார்பு ஸ்வர்கமாகவும் கூறப்படுகிறது. தலாதலம், ஸூதலம், விதலம், அதலம் ஆகியவையும் கீழ் லோகங்கள்.
விராட் புருஷனின் கழுத்து, மஹர் லோகம், தலை பிரம்ம லோகமாகவும் இருக்கின்றது.
விராட் புருஷனின் தலை உச்சி, வேதங்கள். தலை முடிகள் மேகங்கள். இரு புருவங்களும் ப்ரும்மாவின் வீடு. இரு கண் இமைகள் இரவும் பகலும். கண்கள் சூரியனாகும்.
இந்த உலக சிருஷ்டியானது, விராட் புருஷனின் அருட்கடாக்ஷப் பார்வையே. காதுகளோ திசைகள். நாசிகள் அஸ்வினி தேவர்கள். கீழ் உதடு என்பது லோபம். மேல் உதடு வெட்கம். பற்களோ நட்சத்திரங்கள். தெற்றுப்பல் யமதர்மராஜாவாகக் கூறப்படுகிறது.
விராட் புருஷனின் மூச்சு வாயு, நாக்கு நீர், வாக்கு பறவைகளின் கூட்டம். ஸ்வரங்கள் சித்தர்களின் கூட்டம். வாயானது அக்னி, கைகள் தேவர்கள். இரு ஸ்தனங்களும் தர்ம தேவதையாகக் கூறப்படுகிறது.
அவரது உடலின் பின்புறம் அதர்ம தேவதை, மனமோ சந்திரன், இதயமானது பிரக்ருதி, வயிறோ சமுத்திரங்கள், அணிந்துள்ள ஆடை சந்தியாகாலம், ஜனனேந்திரியம் ப்ராஜாபதி, அண்ட கோசங்கள் இரண்டும் மித்ர தேவதை. காலில் உள்ள நகங்கள், யானை குதிரை போன்றவை. அவரது கம்பீர நடையே காலம்.
அவரது தாமரை போன்ற முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்தே நான்கு வருணத்தவரும் உற்பத்தியாயினர்.
விராட் புருஷனின் செயல்களே பிறப்பு, இறப்பு என்பவை. அவரது வீர தீரம் அசுரர்கள். அவரது எலும்புகள் மலைகள், நாடி நரம்புகள் நதிகள். அவரது ரோமங்கள் மரங்கள் ஆகும்.
இத்தகைய உருவம் கொண்ட விராட் புருஷனின் உருவத் தியானம் எத்தகைய பலனைத் தர வல்லது என்று ஸ்ரீ நாராயண பட்டத்திரி, ஸ்ரீமந் நாராயணீயத்தில் கீழ்க்கண்டவாறு அருளுகிறார்.
ஈ த்ருக் ஜகன்மய வபு: தவ கர்ம பாஜாம்
கர்மா வஸான ஸமயே ஸ்மரணீய மாஹூ:
தஸ்யந்தராத்ம வபுஷே விமலாத்மனே தே
வாதால யாதிப நமோஸ்து நிருந்த்தி ரோகான்
"அனைத்துயிரினங்களிலும், அந்தர்யாமியாகவும், எங்கும் நிறைந்து, நிர்மலமாகவும் உள்ள இறைவா!!, உன்னுடைய இந்த விராட் புருஷ உருவம், தன் கர்மங்களை சரியாக நிறைவேற்றுபவர் யாரோ அவர்களுக்கு, அந்த கர்மங்கள் நிறைவுறும் நேரத்தில்(இறுதிக்காலத்தில்) தியானிக்கத் தக்கது என்று சொல்கிறார்கள். (அதாவது, இறைவனடி சேரும் காலத்தில், யாரொருவர் இந்த உருவத்தில் இறைவனைத் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் கிட்டும் என்பது உட்பொருள். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமே ஸ்ரீமந் நாராயணீயம்). இத்தகைய மகிமை வாய்ந்த உனது திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள். எனது வியாதிகளை நீ தான் போக்கி அருள வேண்டும்.
இதன் தொடர்ச்சியை இனி வரும் பதிவில் பார்க்கலாம்.
வெற்றி பெறுவோம்!!!!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.