இந்த தசகத்தில், மகாத்மாவும் பக்த சிரேஷ்டனுமான துருவனின் திவ்ய சரித்திரம் உரைக்கப்படுகின்றது. பக்தர்களின் சிறந்தவரும், பகவானின் கருணைக்கு அதிவிரைவில் பாத்திரமானவருமான துருவனின் சரித்திரம், படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பகவானின் மேல் அசையாத பக்தியை உருவாக்க வல்லது!..
தேவரிஷியான நாரதர், 'வேறு எவராவது இப்பூவுலகில் பல ஆண்டுகளிருந்த போதிலும், துருவன் அடைந்த பதவியை (பதத்தை) அடைய ஆசையாவது கொள்வானா?' என்று துருவனின் புகழை உயர்த்திக் கூறுகின்றார் (ஸ்ரீமத் பாகவதம்).
'இதனை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுள் தானாகவே ஆனந்தானுபவம் பெற்று சித்தியடைவான்' என்று சொல்கிறது ஸ்ரீமத் பாகவதம்..
துருவ சரித்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாக உள்ளது. நாம் இங்கு பட்டத்திரியின் திருநோக்கின் வழியாக துருவ சரித்திரத்தைப் பார்க்கலாம்!.