நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI..SONG # 9...திருப்பள்ளியெழுச்சி...பாடல் # 9

Image result for lord bala siva images


பாடல் 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

  விழுப்பொரு ளேயுன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
  வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
  கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


விண்ணகத் தேவரும் - விண்ணில் வாழும் தேவர்களும்

நண்ணவும் மாட்டா - அணுகவும் முடியாத

விழுப்பொருளே - மேலான பொருளே!

உன்தொழுப்பு அடியோங்கள் – உனக்குச் செய்யும் தொண்டையே பெரிதாக நினைக்கின்ற  அடியார்களாகிய எங்களை.  

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே - மண்ணுலகில்  வந்து வாழச் செய்தவனே.

வண்திருப்பெருந்துறையாய் ‍= வளம் பொருந்திய திருப்பெருந்துறையில்  இருப்பவனே!

வழியடியோம் - பரம்பரை அடியாராகிய எங்களுடைய.

கண்ணகத்தே நின்று களிதரு தேனே - கண்ணில் நின்று களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே.

கடல்அமுதே - பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே.

கரும்பே - கரும்பின் இன்சுவை போன்றவனே!

விரும்புஅடியார் எண்ணகத்தாய் - அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் நிறைந்து இருப்பவனே.

உலகுக்கு உயிர்ஆனாய் - உலகமனைத்துக்கும் உயிரானவனே.

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே -  எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா== இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். 
விண்ணுலகில் வாழும் அமரர்களும் அணுகவும் இயலாதவன் பரமன்.. 

விண்ணவர் என்று எப்போதும் அமரரை உயர்வுபடுத்தி, அவராலும் அறிய முடியாதவர் இறைவன் என்ப‌தற்குக் காரணம் உண்டு. மண்ணுலகத்தோர் போலன்றி ,இறைவனின் சகளத் திருமேனி(வடிவுடன் கூடிய திருமேனி)யைக் காணும் பேறு பெற்றவர்கள் அமரர்கள்..அவர்களுக்காக எம்பிரான் எண்ணற்ற லீலைகள் புரிந்து, அவர்களைக் காத்தருளியிருக்கிறான்..ஆயினும் அவர்களால் பெருமானை அடைவது என்பதல்ல....அணுகுதலும் இயலாது...

இறைவன், தம் திருவுளம் உகந்தாலே அவரை அடைதல் இயலும்..

அகளமாய் யாரும் அறிவு அரிது அப்பொருள்
சகளமாய் வந்தது என்று உந்தீபற
தானாகத் தந்ததுஎன்று உந்தீபற(திரு உந்தியார்).

///மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே ====இறைத்தொண்டை விடாது செய்து அப்பரமனின் திருவடி நிழலை அடைவதற்கு இம்மண்ணுலகினும் பொருத்தமான இடமில்லை என்பதே காரணம்./////

முற்றிலும் உண்மை..ஆன்மீக உயர் நிலையை அடைந்த உயிர்களே தேவர்கள். அமுதம் உண்டதால், பிரளய காலத்தில் அன்றி அவர்களுக்கு அழிவு இல்லை.. ஆயினும அவர்களால் முக்திப் பேறு அடைய இயலாது.. ஆணவ மலம் அவர்களிடமிருந்து முற்றிலும் நீங்காததே அதற்குக் காரணம்.

சித்தாந்த அடிப்படையில், இறைவன், கேவல(தனிமை) நிலையில், ஆணவத்தால் மறைப்புண்ட உயிர்களுக்கு, அது விளக்கம் பெறும் பொருட்டு, மாயையைத் தொழிற்படுத்தி, தனு, கரண புவன போகங்களை உண்டாக்குகிறான்..

தனு= உடல்,

கரணம்=விழி முதலான புறக்கருவிகளும், மனம் முதலான உட்கருவிகளும்.

புவனம்= உலகம்

போகம்=நுகர்தலுக்கு உரிய பொருட்கள்,

மாயையின் காரியங்களாகிய இவற்றின் துணையினால் உயிர்கள் ஆணவமல மறைப்புச் சிறிது நீங்கப் பெற்று, அதற்கேற்பச் சிறிதளவு அறிவும் செயலும் கொண்டு,  உலக வாழ்க்கையை மேற்கொள்ளும்.

கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம் 
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு-- ஒட்டி 
அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது 
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு. (சிவஞான போதம்)

இறையருள் சித்திக்குமாயின்,உயிர்களுக்கு, 'நாம் ஏன் பிறந்தோம், இவ்வாழ்வு ஏன் வந்தது?' என்கிற கேள்விகள் கேட்கும் ஞானம் உண்டாகும். மண்ணுலகில், நமக்கு முன்பாகத் தோன்றி, நமக்கு நல்வழி காட்டியருளிய மஹான்கள், பெரியோர்கள் ஆகியோரின் உபதேச மொழிகளையும் வழிகாட்டுதலையும் கொண்டு, உயிர்கள், நன்னெறியில் சென்று, இறையருளை வேண்டி நிற்கும் போது, பரமன் கருணையினால் திரோதான சுத்தி கிட்டும்..

இது வரை போகாத ஊருக்குப் போகும் போது வழிகாட்டும் பலகைகள் அல்லது நபர்கள் தேவை.. புரியாத வழியில், யாரும் துணையின்றிப் போனால் போகக் கூடாத ஊருக்குத் தான் போவோம்.. நமக்கு முன்பாகச் சென்ற பெரியோர்கள் வழியில், அவர்கள் காட்டிய நெறியில் செல்லும் போது பயணம் சுலபமாகும்.. பாதையும் சுகமாகும்..பெற்ற தாயைப் பெரிதும் நம்புகிறது குழந்தை... இந்த உணவை ஏன் கொடுத்தாய்? என்றெல்லாம் கேள்விகள் கேட்பதில்லை.. தாய் தன் நலம் நாடுபவள் என்று அதற்குப் புரிகிறது.. கொடுத்ததை உண்கிறது. மஹான்களின் உபதேச மொழிகளும் அவ்வாறே.. அவை மன்னுயிர்களின் நலம் வேண்டித் தரப்படுவது.. 

இவ்விதம் மண்ணுலக வாழ்வு, மும்மலங்கள் நீங்குவதற்குக் காரணமாதலின் விண்னவர்களும் மண்ணுலக வாழ்வை விரும்புகின்றனர்

வண்திருப்பெருந்துறையாய் ==உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குத் துணையாக, பெரும் துறையாக இருப்பவனே!..

வழியடியோம்  
 கண்ணகத்தே நின்று களிதரு தேனே ‍ ====அடியார்கள் பார்க்குமொரு இடந்தோறும் நீக்கமற நிறைந்து பரமனே திருக்காட்சி தருகின்றான்.. எங்கெங்கும் பரமன் திருவுருவே காண்கின்றனர் அடியார். ஆன்ம போதக் காட்சி இது.. எல்லாப் பொருட்களிலும், பரமனின் அம்சமே தென்படுகின்றது..

கண்ணகத்தே என்பதை== இதனை அகக் கண் என்றும் மூன்றாவது கண் என்று யோக மார்க்கத்தில் சொல்லுகிற 'ஆஜ்ஞை' என்றும் பொருள் கொள்ளலாம்.

இதை,

ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை 
கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில் 
விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப் 
பண்ணாம நின்றது பார்க்கலுமாமே.”(திருமூலர்)

 சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினைநின் றிருப்பாதப் 

போதுக்காக்கி 
வந்தனையு மமலர்க்கே யாக்கிவாக்குள்(ஆதத்துடைய - சூரத்துள்) மணி வார்த்தைக் காக்கியும் புலன்களார 
வந்தனை யாடகொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னைத் 
தந்தனை செந்தாமரைக் காடனையமேனித் தனிச் சுடரே யிரண்டுமிலிதனிய னேற்க்கே.” 

[மணிவாசகப்பெருமான்] மொழிகளிலிருந்து அறியலாம்.

விரும்புஅடியார் எண்ணகத்தாய் = இறைவன், தன்னை எண்ணத்தில் நிறைக்கும் அடியாருக்கு அருள்பவன்.. இங்கு வாயிலார் நாயனாரின் புராணத்தைச் சிந்திக்கலாம்...

புறப்பூசை அங்கங்களான கோயில், பஞ்சசுத்தி, தூபம், தீபம், அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவற்றை, இவை  அனைத்திற்கும் சமதையான ஒவ்வோர் அகச்சூழ்நிலையால் பாவனா ரூபமாக அமைத்துக் கொண்டு சித்தத்தைச் சிவலிங்கமாகக் கண்டு பூசிக்கும் அகப்பூசை முறையைக் கைக்கொண்டு, சிவனடி சேர்ந்து இன்புற்றார் வாயிலார் நாயனார்..

மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி   
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி   
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி  
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்(கறைக் கண்டன் சருக்கம், பெரிய புராணம்)

உலகுக்கு உயிர்ஆனாய் ‍ தனு, கரண புவன போகங்களைப் படைத்து, ஐந்தொழில்களைப் புரிந்து, பிரபஞ்ச இயக்கத்தை ஆனந்தத் திருக்கூத்தாக நடத்தும் பரமனன்றி ஓரணுவும் அசையாது.

தில்லையில் கூத்தாடும் சிவபெருமன் பதம் பணிவோம்!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..