நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

NAM THEGAME SRICHAKRAM.....ந‌ம் தேகமே ஸ்ரீசக்ரம்.


'சக்ர ராஜம்' என்று போற்றப்படும் ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பற்றி, தேவியின் திருவடி,பாகம் 2, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பதிவில் எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்தப் பதிவினைக் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

என்று பாடுகிறார் திருமூலர் பெருமான். நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன.

'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ... என்று சட்டைமுனிவர் பெருமான் பாடுகிறார்.

இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான   இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது. இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும், ஜீவன், பிராணன், சுக்கில தாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன. சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம்.

அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள்(நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்), ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகுப்பாகும். இதில் பஞ்சபூதங்களும் சக்தி மூலங்கள். மற்ற நான்கும் சிவ மூலங்கள் என அறியப்படுகின்றன.

ஆக, சிவ, சக்தி கோணங்கள்(மூலங்கள்) சேர்ந்த ஸ்ரீ சக்ரம், இந்த அண்டத்தையும், நம் உடலையும் ஒரு சேரக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அண்ட பேரண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் சக்தியே, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ லலிதா பரமேச்வரி. நம் உடலிலும் உலகிலும் வியாபித்திருக்கும் மஹாசக்தி அவளே.

ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அன்னையவள் அருட்காட்சியை காணும் பேறு பெற்றோரே மகான்கள்.  அம்பிகையின் திருவடிகளின் பால் திடமான பக்தி இருப்பின், நம் வினை எத்தகையதாக இருந்தாலும் அது அவளது அருட்புனலால் அடித்துச் செல்லப்பட்டு நிலையான ஆனந்தப் பெருவாழ்வினை நமக்கு வழங்கும்.

இந்த மாபெரும் பிரபஞ்சத் தத்துவமே ஸ்ரீசக்ரம். நம் உடலும் ஸ்ரீ சக்ரமும் ஒன்றே.  நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை இந்தப் பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1. ஸ்ரீ சக்ரத்தின் மையப்புள்ளியே பிந்து ஸ்தானம். இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள்செய்யும் அன்னை பராசக்தி ஆனந்த வாசம் புரிகிறாள். ஒன்றாய் அரும்பி பலவாய் விரியும் ஆதியும் அந்தமும் இல்லா அம்பிகை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அருளாட்சி செய்யும் இடமே பிந்து ஸ்தானம்.  இந்த பிந்து ஸ்தானம் சிவமூலமாக அறியப்படுகிறது. நம் உடலில், இந்த பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலை உச்சி. நம் உடலில் அமைந்துள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களின்படி பார்க்கும் பொழுது,  ஆஜ்ஞை,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..6)  ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானமாகக் கருதப்படுகிறது.

2.ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது ஆவரணமாகிய த்ரிகோணம்(முக்கோணம்) 'ஸர்வ ஸித்தி ப்ரத சக்கரம்' என்ற பெயருடன் விளங்குவதைப் பார்த்தோம். இது ஸ்ரீ சக்ரத்தின் 43வது முக்கோணம்.

இதில் 'அதிரஹஸ்ய யோகினிகள்' எனத் துதிக்கப்படும் மஹா காமேச்வரி, மஹா வஜ்ரேஸ்வரி, மஹா பகமாலினி என்ற திருநாமங்களுடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள். இவர்களின் நாயகியாக, 'திரிபுராம்பா' என்ற திருநாமத்துடன் கூடிய தேவி ரத்தின சிம்மாசனத்தில் அருளுகிறாள்.

'அதி ரஹஸ்ய யோகினிகள்' மூவரும் முறையே, இச்சாசக்தி, ஞானசக்தி கிரியாசக்தி, ஸ்வரூபிணியாக விளங்குகிறார்கள். ஸாதகனின் நியாயமல்லாத இச்சைகளை, (விருப்பங்களை) நீக்கி, ஞான ஆற்றலை மேம்படுத்தி, அம்பிகையின் அருளாற்றலைப் பெற தகுதிப்படுத்தும் சக்திகள் இவர்கள்.

நம் உடலில் தலை(சிரசு) த்ரிகோணமாக உருவகிக்கப்படுகிறது. யோக நெறியில் பார்க்கும் போது 'இந்திர யோனி'(உள்நாக்குப் பகுதி) த்ரிகோணம் என்று கருதப்படுகிறது.

அம்பிகை சிவ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பினும், ஸ்ரீ சக்ரத்தில், சிவகோணங்கள், சக்தி கோணங்கள் என இருப்பதை அறிவோம். இந்த த்ரிகோணம், சக்தி அம்சமுள்ளதாகக் கருதப்படுகிறது.

3.ஸ்ரீ சக்ரத்தின் ஏழாவது ஆவரணமான, எட்டுக்கோணங்களை உடைய ஸர்வ ரோக ஹர சக்கரத்தில் வாக்தேவதைகள், ரஹஸ்ய யோகினிகளாக வசித்து வருகிறார்கள். இவர்களின் தலைவியாக, திரிபுரஸித்தா தேவி மஹாபீடத்தில் அருளுகிறாள்.

இந்த ரஹஸ்ய யோகினிகள், ஜனனம் மரணம், பந்தபாசங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். ஆன்மாவின் ஞானமற்ற தன்மையே 'ரோகம்' எனக் குறிக்கப்படுகிறது. இந்த ரோகத்தை(நோயை) நீக்கி, 'அஹம் பிரம்மாஸ்மி' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால் இது 'ஸர்வ ரோக ஹர சக்கரம்' எனப் பெயர் பெற்றது.

ரஹஸ்ய யோகினிகளிடமிருந்தே, காவியம், இசை, நாடகம் முதலியவை தோன்றுவதால் இவர்கள் 'வாக்தேவதைகள்' என அழைக்கப்படுகிறார்கள். 'அ' முதல் 'க்ஷ' வரையிலான அக்ஷரங்களின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள் இவர்களே. ஆகவே இவர்கள், 'மாத்ருகா ஸ்வரூபிணிகள்' எனவும் துதிக்கபடுகிறார்கள்.

நம் உடலில், 'நெற்றி' அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது. இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில், ஆதாரச்சக்கரங்களின் வழி பார்க்கும் போது, விசுத்தி,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..5) ஸ்ரீசக்ரத்தின் அஷ்டகோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.

4. ஸ்ரீ சக்ரத்தில், 'அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம் 'ஸர்வ ரக்ஷாகர சக்கரம் என்ற பெயர் பெற்றுத் திகழ்கிறது. இது ஆறாவது ஆவரணமாக அமைந்துள்ளது. இங்கு 'நிகர்ப்ப யோகினிகளும்' அவர்களின் நாயகியாக, 'திரிபுராமாலினியும்' வீற்றிருந்து அருளுகிறார்கள். இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

நம் உடலில், இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி,  உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது. ஆதாரச் சக்கரங்களில், அநாஹதம் (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..4) ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

5. ஸ்ரீசக்ரத்தில், ஐந்தாவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் 'பஹிர்த்தசாரம்' என அழைக்கப்படுகின்றன. இதில் வாசம் செய்யும் 'குலோத்தீர்ண யோகினிகளுக்கு' 'திரிபுராஸ்ரீ' என்ற திருநாமமுடைய தேவி தலைவியாக இருக்கிறாள். இந்த அம்பிகை, தங்கமயமான சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள். இந்த சக்கரம், சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும், குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. சத்குரு ஒருவரே, பரப்பிரம்ம ஸ்வரூபியாகிய தேவியை அடையும் மார்க்கத்தைக் காட்ட வல்லவர். ஆகவே, குருவை அடைதல், ஞான மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குலோத்தீர்ண யோகினிகளை, குலம், உத்தீர்ணம், யோகினிகள் என்று பதம் பிரிக்கலாம். இதில் குலம் என்பது, ஞான மார்க்கத்திற்குத் தேவையான குரு சிஷ்யப் பரம்பரையே. உத்தீர்ணம் என்பது நல்ல முறையில் விருத்தி செய்வது. யோகினிகளை தேவிகள் எனக் கொள்ளலாம். ஆக, குரு சிஷ்யப் பரம்பரையின் விருத்திக்கு அருளுவதால் இந்த தேவிகளுக்கு இத்தகைய திருநாமம் ஏற்பட்டது எனக் கொள்ளலாம். சிஷ்யனுக்கு எப்படி குரு முக்கியமோ அப்படியே, குருவுக்கும் நல்ல சிஷ்யர்கள் அவசியம். இந்த ஐந்தாவது ஆவரண பூஜை, அப்படிப்பட்ட சத்சிஷ்யர்களை குருவிடம் சேர்ப்பிப்பதோடு, குரு சிஷ்ய இணக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.

மனித உடலில், கழுத்துப் பகுதி, வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. யோக நெறியில், மணிபூரகச் சக்கரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..3) ஸ்ரீசக்ரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
6.ஸ்ரீசக்ரத்தில் நான்காவது ஆவரணமாகிய  சதுர்தச கோணம்(14 முக்கோணங்கள்), சக்தி சக்கரமாகும். இந்த பதினான்கு முக்கோணங்களும் பூபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே சாதகன், ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை. சதுர்தச கோணம், ஈரேழு பதினான்கு உலகங்களையும் குறிப்பதாக  அமைந்திருக்கிறது.

 மாயையை அகற்றி ஆத்ம ஞானத்தை அருளுவதால் 'ஸர்வ சௌபாக்கிய தாயக சக்கரம்' என்றும் அறியப்படும் இதில், 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்னும் பதினான்கு சக்திகள் வசிக்கிறார்கள். இவர்களின் நாயகி, 'த்ரிபுரவாஸிநீ' தேவி. தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமமுடைய பரமேஸ்வரனே ஆதிகுருவாக அறியப்படுகிறார். அவர் தாமாகவோ அல்லது  குருவடிவாகவோ தோன்றி, ஜீவன் ப்ரஹ்மம் இரண்டும் ஒன்றே என்ற பேதம் இல்லாத நிலையை அருளுவதே 'ஸம்ப்ரதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்த சக்கரத்தில் வசிக்கும் சக்திகளுக்கு 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் உடலில் இதயப் பகுதி, சதுர்தச கோணத்தைக் குறிப்பதாக அறியப்படுகிறது. யோக நெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம்,  (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..2)ஸ்ரீ சக்ரத்தின் சதுர்தச கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

7. ஸ்ரீசக்ரத்தின் மூன்றாவது ஆவரணமாகிய எட்டிதழ் கமலம், அஷ்டதளபத்மம் எனப்படுகிறது. இது சிவமூலமாக அறியப்படுகிறது. 'ஸர்வ ஸம்க்ஷோபண சக்ரம்' என்றும் அறியப்படும் இதில், 'குப்ததர யோகினிகளான' எட்டு சக்திகள் வாசம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, 'த்ரிபுர ஸூந்தரி' என்ற திருநாமமுடைய தேவி. இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள்.  இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே, ப்ரகிருதி,மஹத் தத்வம், அகங்காரம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச பூதங்கள், கர்ம,ஞானேந்திரியங்கள், அந்தக‌ரணம், புருஷன்(ஆத்மா) ஆகிய யாவும் இருக்கின்றன. இந்த யோகினிகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்னொரு பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில், தொப்புள், ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம்,(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..1)  ஸ்ரீசக்ரத்தின்  எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது.

8.ஸ்ரீசக்ரத்தின், இரண்டாவது ஆவரணமாகிய பதினாறிதழ் கமலம், ஸர்வாசா பரிபூரகச் சக்கரம் என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில், 'குப்த யோகினிகள்' என்ற திருநாமத்துடன் உள்ள பதினாறு சக்திகள் வசிக்கிறார்கள். சாதகன், இந்த ஜென்மத்தில் அனுபவித்தது போக மீதியுள்ள கர்மா நல்ல முறையிலான கர்மாவாக அமைய, இவர்கள் அருள்பாலிக்கிறார்கள். இவர்களின் நாயகி,'திரிபுரேசி' தேவியாவாள். இது சிவ சக்கரமாகும்.

நம் உடலில், இடுப்பு மற்றும் தொடைகள், ஷோடசதள பத்மமாக அறியப்படுகின்றன. யோக நெறியில், மூலாதாரத்திற்கும், பின் தொடைக்கும் இடைப்பட்ட பகுதி, ஷோடச தள பத்மமாகும்.

9.ஸ்ரீசக்ரத்தின் முதல் ஆவரணமாகிய மூன்று சதுரங்கள் கொண்ட பூபுரம், 'த்ரைலோக்கிய மோகனச் சக்கரம்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. இதில் வாசம் செய்யும், அஷ்டமா சித்திகள்,  ப்ராஹ்மீ, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ ஆகிய அஷ்ட மாத்ருகா தேவிகள், ப்ரகட யோகினிகள்(பத்து முத்ரா சக்திகள்) முதலானோருக்கு  'த்ரிபுரா' என்ற திருநாமமுடைய தேவியே சக்ரேஸ்வரியாக விளங்குகிறாள். இது  சிவ சக்கரமாகும்

நம் உடலில், பாதங்கள், ஸ்ரீ சக்ரத்தின் பூபுரமாக அறியப்படுகிறது. யோக நெறியில், மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதி, பூபுரமாக அறியப்படுகிறது.

பின்னொரு பதிவில், நம் மனதில் செயல்பாடுகளுக்கும், ஸ்ரீசக்ரத்திற்கும் இருக்கும் தொடர்பினை விரிவாகக் காணலாம்.

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

GAJENDRA MOKSHAM...கஜேந்திர மோக்ஷம்


தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
          அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
     கோள்முதலை துஞ்சக்  குறியெறிந்த  சக்கரத்தான்
          தான் முதலே நங்கட்குச் சார்வு’
       பேயாழ்வார் பெருமான், மூன்றாந்திருவந்தாதி - 99
இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப்பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது மிக உண்மையான வாக்கியம். துன்பம் வரும் போது, மனங்கலங்காது, இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, நம் வாழ்வைத் தொடர்ந்தால், கட்டாயம் இறைவன் நம்மைக் காத்து, வெயிலின் வெம்மை தணிக்கும் குடைபோல் உடன் வந்து, துன்பத்தைப் பொறுக்கும் சக்தியையும், துன்பத்திலிருந்து மீளும் வழியையும் அருளுகிறான்.

இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே 'பக்தி'. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால்  இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப்பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம‌ பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும்.

'அவனருளால் அவன் தாள் வணங்கி' எனபதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது. அது காமம், குரோதம் முதலிய தீய குணங்களால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவுதற்கும் இறை கருணையே கைகொடுக்கிறது. 'உன் திருவடி மறவாதிருக்க வேண்டும்' என நாளும் வேண்டுவதாலேயே ஒருவரின் ஆன்ம ஈடேற்றம் பூர்த்தியாகும் வாய்ப்புக் கிட்டும். 

கஜேந்திர மோக்ஷக் கதை நாம் யாவரும் அறிந்ததே. மேற்கூறியவற்றின் ஓர் அருமையான உதாரணமாக, கஜேந்திர மோக்ஷத்தைக் கொள்ளலாம்.

பாற்கடலில் பள்ளி கொண்டருளும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், கஜேந்திரன் என்னும் யானைக்கு வந்த துயரம் நீக்கி,  வைகுண்ட பதம் அளித்த நிகழ்வே கஜேந்திர மோக்ஷம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அருளப்பெற்றிருக்கும் கஜேந்திர மோக்ஷத்தைச் சுருக்கமாகத் தந்திருக்கிறேன். அதன்படி, முதலில் கஜேந்திரனின் முற்பிறவியைப் பற்றிப் பார்க்கலாம். 

கஜேந்திரனின் முற்பிறவி
கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு அரசனாக, இந்திரத்யும்னன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான். ஸ்ரீமந் நாராயணனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக, எப்போதும், ஸ்ரீ விஷ்ணுவின் திருவுருவையே தியானிப்பவனாக இருந்து வந்தான் இந்திரத்யும்னன்.

ஒரு முறை இந்திரத்யும்னன், மலய பர்வதம் என்னும் இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவக்கோலத்தில், ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்தான். அவ்வாறு ஆராதிக்கும் காலத்தில் மௌனவிரதமும் பூண்டிருந்தான்.

அச்சமயத்தில், அங்கு வந்த அகத்திய மாமுனிவர், அரசன் தன்னை வரவேற்காது நிஷ்டையில் இருப்பதைப் பார்த்து கோபமுற்றார். தம்மை அவமதித்ததாக எண்ணி, 'யானை போல் ஜடமான புத்தியை உடைய நீ, யானையாகவே பிறவி எடுக்கக் கடவது' என்று சபித்து விட்டார். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எத்தனை நியமங்களை ஒருவர் கைக்கொண்டாலும், மகான்களை வரவேற்று உபசரிப்பதற்காக அவற்றைக் கைவிடலாம். இதை அறியாது இந்திரத்யும்னன் இருந்ததாலேயே இந்த சாபம்.

கஜேந்திரன் முதலை வாயில் அகப்படுதல்:
சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்.

த்ரிகூடம் என்னும் மலையில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தது கஜேந்திரன். முற்பிறவியில் பகவத் சிந்தனையில் இருந்ததன் காரணமாக, ஒளி பொருந்திய தேகமும் அபரிமிதமான பலமும், தேஜஸூம்  கொண்டதாக விளங்கியது கஜேந்திரன்.

அந்த மலையின் தாழ்வான பகுதியில், வருணபகவானுக்கு உரியதான, ருதுமத் எனப் பெயர் கொண்ட ஒரு உத்தியான வனம் இருந்தது. கஜேந்திரனும் அவனது யானைக் கூட்டமும், அந்த வனத்தில் இருந்த மரம் செடி கொடிகளை எல்லாம், சிதறடித்துக் கொண்டு சஞ்சாரம் செய்து வந்த போது, தாகம் மேலிட்டதன் காரணத்தால், அருகிருந்த ஒரு தடாகக் கரையை அடைந்தன.

தாமரை மலர்கள் நிறைந்த அந்த குளத்தில், கஜேந்திரனும் மற்ற யானைகளும், துதிக்கையால், நீரை எடுத்து அருந்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற யானைகளின் மேல் வாரி இறைத்தும், நீரை மேல் நோக்கிப் பொழிந்தும் விளையாடத் தொடங்கின.
அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு முதலை, சினம் கொண்டு, கஜேந்திரனின் காலைப் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அந்த முதலையும் ஒரு சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியை அடைந்து இருந்தது. ஹூஹூ என்ற பெயருடைய ஒரு கந்தர்வன், தம் மனைவிமாருடன், இந்தக் குளக்கரையில் நீராடிய போது, நீருள் இருந்து தவம் புரிந்து வந்த 'தேவலர்' என்ற முனிவரின் காலைப் பற்றி அறியாமல் இழுத்துவிட்டான். தவம் கலைந்த முனிவர், கடும் கோபத்துடன், முதலையாகப் பிறக்க வேண்டுமென்று அவனுக்கு சாபம் கொடுத்து விட்டார். அறியாமல் செய்த தவறாகையால், பக்த சிரோமணி ஒருவருடைய காலைப் பற்றும் போது விமோசனம் கிடைக்கும் என்று சாப விமோசனமும் அருளினார்.

கஜேந்திரனும் தன் பலத்தை எல்லாம் திரட்டி, முதலையின் வாயில் இருந்து விடுபட முயற்சித்தது. ஒரு நாள் இருநாள் அல்ல. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது.

தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு, அக்கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், மனம் உருகி, வேதனை தாங்காமல் கதறின. பலங்கொண்ட மட்டும் கஜேந்திரனை இழுத்துப் பார்த்தன. அவற்றால் முடியவில்லை.

இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கியவாறு அந்த இடம் விட்டு அகன்றன.

நெடுங்காலமாகப் போராடிய கஜேந்திரனின், மனோபலமும் உடல் பலமும் வெகுவாகக் குறையலாயின. அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. உடனே, அந்த யானை, தன் துதிக்கையால், குளத்தில் இருந்த தாமரை மலர்களை எடுத்து,  பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது.
கஜேந்திரனின் துதி:
இந்திரத்யும்னனாக இருந்த போது கற்றுக் கொண்ட 'நிர்க்குண பரப்பிரஹ்ம ஸ்தோத்திர'த்தைக் கூறிக்கொண்டே பகவானை அர்ச்சிக்கத் துவங்கியது கஜேந்திரன்.

இதிலிருக்கும் ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஸ வை தேவாஸூர மர்த்யதிர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான்ன ஜந்து:
நாயம் குண: கர்ம ந ஸன்ன சாஸன்
நிஷேதசேஷோ ஜயதாதசேஷ:
(பொருள்: பரம்பொருள் தேவனுமல்ல, அசுரனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமும் பறவையுமல்ல, பெண்ணும் ஆணும் அலியும் அல்ல, பிறப்பு இறப்பு உடையதல்ல, குணம், கர்மம், ஸத், அஸத் முதலியவையும் அல்ல. இவை எல்லாவற்றையும் விட மேலானதான அந்தப் பரம்பொருள் எனக்கு உரியதாகி என்னைக் காக்க வேண்டும்)

இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.

"யாரால் இந்த உலகம் உருவாகி, உயிரூட்டப் பெற்றதோ, அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கிறேன்.

யாருடைய வடிவாகவே இந்தப் பிரபஞ்சம் விளங்குகிறதோ, யார் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ , அந்தப் பரம்பொருளைச் சரணடைகிறேன். யார், தேவர்களாலும் ரிஷிகளாலும் கூட அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து ரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம்,தொழில், வடிவம் முதலியவை இல்லாமல் இருப்பினும், உலகத்தின் நன்மைக்காக இவற்றை தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ,யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும் வடிவமற்றதுமான பரப்பிரம்மமோ, அவருக்கு என் வந்தனம்.

பரிசுத்தமான மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்குக் காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதவரும், சரணடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம் கொண்டவருமாக இருப்பவர் எவரோ அவருக்கு நமஸ்காரம்.

யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த‌ ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்ணால் காண்கின்றார்களோ, அந்த பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

நான் மோக்ஷத்தையே விரும்புகிறேன். மாயையால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றும் இல்லை. ஆகவே, ப்ரம்மமும் பரமபதமுமாகி விளங்கும் பகவானைச் சரணடைகிறேன்."

இவ்வாறு கூறித் துதித்தது கஜேந்திரன்.

இதை சுருக்கமாக 'ஆதிமூலமே, அநாத ரக்ஷகா, அரவிந்தா' என்று கஜேந்திரன் மனமுருகி, கதறி அழைத்ததாகக் கூறுவர். இந்த திருநாமங்களை அல்லும் பகலும் ஸ்மரிப்பவருக்கு தீராத துன்பம் என்று ஏதும் வராது என்பது நம்பிக்கை.
கஜேந்திரன் மோக்ஷமடைதல்:
யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?

கஜேந்திரனின் அபயக் குரல் பரமாத்மாவான ஸ்ரீமந் நாரயணனின் திருச்செவிகளில் விழுந்தது.

பாற்கடலில் பாம்பணை மேல் பையத் துயின்று கொண்டிருந்த கருணைப் பெருங்கடல் யானையின் குரல் கேட்ட மாத்திரத்தில், தம் இருப்பிடம் விட்டு விரைந்து எழுந்தார்.

எம்பெருமான், தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) கீழே விழுவதையும் பொருட்படுத்தாது, தம் பக்தரைக் காக்க விரைந்து பூலோகம் வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு. மற்றொன்று பிரகலாதனுக்காக(பிரகலாதனைக் காத்த லீலையை என் பக்தியின் மேன்மை பதிவில் எழுதியிருக்கிறேன்).

காக்கும் கடவுள், தம் பக்தனைக் காக்க, கருட வாகனமேறி, ககனமார்க்கமாக விரைந்து வந்து, கஜேந்திரன் இருந்த தடாகத்தை அடைந்தார்.

மிகுந்த துன்பத்திலாழ்ந்திருந்த கஜேந்திரன், பரமாத்மாவைக் கண்ணுற்று, தாமரை ஏந்திய தன் துதிக்கையை மிகுந்த சிரமத்துடன் உயரத்தூக்கி, மனமகிழ்வுடன் அவரை நமஸ்கரித்தது.

பகவான் தன் சக்ராயுதத்தால் முதலையைப் பிளந்து, முதலில் கந்தர்வனுக்கு சாப விமோசனம் கொடுத்தார். பரமபாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ இறைவன் முன்னுரிமை அளிக்கிறார்?. ஹூஹூவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து, அவரை பலவாறாகத் துதித்து வணங்கி, தன் இருப்பிடம் சேர்ந்தான்.

அதன் பின்,  வைகுண்ட பதம் அடையும் காலம் வரை, அதன் பொருட்டு துன்பத்தை அனுபவித்த கஜேந்திரனுக்கு, எல்லா தேவர்களும் சூழ்ந்திருந்து மலர் மாரி பொழிய, அனைத்துப் பதங்களிலும் சிறந்ததும் மேலானதும் ஆன்மாக்களின் உயரிய புகலிடமும் ஆன வைகுண்ட பதத்தை அளித்தருளினார்.

கஜேந்திரன், பகவானின் அனுக்கிரகத்தால் மஞ்சள் பட்டு அணிந்து, நான்கு புஜங்களை உடையவனாக, அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கிய சாரூப(பகவானின் திருவுருவடைதல்) நிலையை அடைந்தான்.

அப்போழுது பகவான் ஸ்ரீ விஷ்ணு கீழ்க்கண்டவாறு அருளினார்:

"யாரொருவர், இந்த தடாகத்தையும், உன்னையும்(கஜேந்திரனையும்), என்னையும் இந்த (த்ரிகூட)மலையையும், வனத்தையும், இதிலிருக்கும் மூங்கில்,புதர்கள், தேவவிருக்ஷங்கள் ஆகியவற்றையும், எனது மச்சாவதாரம் முதலான அவதார லீலைகளையும் சூரியனையும், சந்திரனையும் அக்னியையும், ஓங்காரத்தையும், சத்தியம், யோகமாயை,பசு, வேதம் அறிந்த அந்தணர்கள், நிரந்தரமான தருமம், தர்மம், சந்திரன், கஸ்யபர் ஆகியோருடைய பத்தினிகளான தக்ஷப் பிரஜாபதியின் புத்ரிகள்,கங்கை, சரஸ்வதி,யமுனை, ஐராவதம், சப்த ரிஷிகள், துருவன், நற்சிந்தனையுள்ள மனிதர்கள் ஆகியோரையும், விடியற்காலையில் தூய மனதோடு ஸ்மரணை செய்கிறார்களோ, அவர்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.

மேலும், இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தை பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, கேட்கிறார்களோ விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராணப் பிரயாண சமயத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அருளுகிறேன்".

இவ்வாறு அருளிவிட்டு, சங்கநாதம் முழங்க, ஸ்ரீ விஷ்ணு, கஜேந்திரனுடன், ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார்.
கஜேந்திர மோக்ஷ சரிதம், துன்பத்தால் துவளாத மனவுறுதியையும், எந்நிலையிலும் இறைவனை நம்பும் நற்சிந்தனையையும் நமக்குத் தருகிறது.

இதே போன்று, ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் போது, காட்டுத்தீயினால் சூழப்பட்ட கோபர்களின்  அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்து காப்பாற்றினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அச்சமயத்தில் கோபர்கள் துதித்த 'தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திர'மும் எத்தகைய ஆபத்தையும் நீக்கவல்ல மகிமை பொருந்திய துதியாகும். என் சக வலைப்பதிவரும் அன்புச்சகோதரருமான, திரு.ஸ்ரீகணேஷ்  அவர்கள், தமது வலைப்பூவில் பதிவிட்டிருக்கும் தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

வழிபடு தெய்வம் எதுவானாலும் நம்பிக்கையுடன் மனமுருகி வழிபட்டால், கொடுந்துன்பமும் சிறு தூசாகும். மலைபோல் இடர்வரினும் மலர் போல் மென்மையாகும்.  நெருப்பாறும் குளிர்ந்த ஓடையாகும். நீங்காமல் நம் அருகிருந்து இறைகருணை காக்கும். இறைபக்தி எந்நாளும் மேன்மை தரவல்லது.

இறைவனின் அருள் என்றென்றும் நமக்கு உண்டு. நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு!!.

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

SHYAMALA NAVARATHIRI.....சியாமளா நவராத்திரி.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மஹாகவி காளிதாஸர்.
அனைத்துயிரினங்களுக்கும் அன்னையாக, தன் கருணை மழையால் உலகை உய்விக்கும் அம்பிகையைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் வாராஹி நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், தை மாதத்தில் தை அமாவாசை மறுதினம் துவங்கி, சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.

'சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா' என்றும், 'ஸ்ரீமாதங்கி' என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது  வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத‌ மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே 'சியாமளா நவராத்திரி' யைக் கொண்டாடி வழிபடுகிறோம். இந்த அம்பிகையைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்,

"மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது. 

மேலும் 'கதம்பவனவாஸினீ' என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான‌ ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே  சியாமளா தேவிக்கு இந்த திருநாமம்.

மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு 'கடம்பவனம்' என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில்( ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
'கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)

 சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே 'பண்டாசுரன்' (உலகாயத)விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே 'விஷங்க வதம்' செய்கிறாள்.

'மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம:(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).

ஸ்ரீ லலிதோபாக்கியானம், 'சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா' என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

அம்பிகையின் திருவுருவம்:
வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக  முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

கவி காளிதாஸர் அருளிய ஸ்ரீ சியாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக,  எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது.  மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள்.  தேவியின் திருத்தோள்களில் கிளியும்  இருப்பதாகக் குறிக்கப்படுகிறது.

இதில், நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது.

அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே 'ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக' அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.

தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி:
முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.  தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது.  அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே  ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.
"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'
மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற    திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.   

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே  அவர்கள். 

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார்.  ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே  காரணம். இந்த மந்திரத்தை முறையாக‌ உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள்.  அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.

ஸ்ரீ நகரத்தில் அம்பிகையின் இருப்பிடம்.
ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில்,(ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம்,அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.

கஸ்தூரி திலகம் அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும் புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன,கதம்ப மாலை துளசி மாலை முதலியன அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம் செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை' எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.

நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி' சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.  விசுத்தி சக்கரத்தினைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

சியாமளா நவராத்திரி பூஜை:
 தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை  (இந்த வருடம்10/2/2013‍ முதல் 18/2/2013 வரை) அம்பிகையை, பூரண‌ கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். பூஜை முறைகள், என் தேவியின் திருவடி பாகம் 3....எளிய முறை பூஜை பதிவில் பதிவிடப்பட்டிருக்கிறது.

தேவியைத் துதிக்கும் ஸ்தோத்திரத்தின் காணொளி வடிவத்திற்கு இங்கு சொடுக்கவும்.

சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு,  கலைகள் அனைத்திலும்  நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் உதவி: கூகுள் படங்கள்.
ஆதார நூல்கள்: ஸ்ரீ தேவி பாகவதம், தசமஹாவித்யா தேவியர், ஸ்ரீவித்யையும் ஸ்ரீ சக்கரமும், சாக்த மஹா பாகவத புராணம்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

NAVA DURGA DEVIYAR... PART: 2, நவதுர்கா தேவியர், பகுதி 2




சென்ற பதிவின் தொடர்ச்சி........

சென்ற பதிவில், நாம் நவதுர்கையரில், வனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, சாந்தி துர்கை, சாபரீ துர்கை ஆகியோரைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில், நாம் ஜ்வாலா துர்கை, லவண துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை ஆகியோரைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜ்வாலா துர்கை:

ஸ்ரீ லலிதாம்பிகைக்கும் பண்டாசுரனுக்கும் இடையே நிகழ்ந்த பெரும் போர் இரவு பகலாகத் தொடர்ந்தது. இரவு நடந்த போர், அசுர சேனைக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. ஏனெனில், அசுரர்களுக்கு இரவு நேரத்தில் பலம் அதிகம். அதனால் அவர்கள், சக்தி சேனையை வஞ்சித்து போர் புரியலாயினர். இதைக் கண்ட, மந்த்ரிணீ தேவியாகிய ராஜ சியாமளாவும், தண்டினி தேவியாகிய வாராஹியும், ஸ்ரீ லலிதாம்பிகையிடம் முறையிட, அம்பிகையும், 'ஜ்வாலாமாலினி' என்ற மஹாசக்தியை அழைத்தாள்.
இந்த மஹா சக்தி அக்னி ரூபமானவள். அவளிடம், நூறு யோஜனை விஸ்தாரமுள்ள பூமியை வளைத்துக் கொண்டு, முன்னூறு யோஜனை உயரம் இருக்கும்படியான, அக்னி பிரகாரம்(வஹ்னி பிரகாரம்) அமைக்குமாறு கட்டளையிட்டாள். மேலும் அந்தப் பிரகாரத்தில், ஒரு யோஜனை தூரம் அளவுக்கு வாயிற்படிக்காக, ஜ்வாலையில்லாமல்  இருக்கட்டும் என்றும் கூறினாள். அன்னையின் ஆணையினை ஏற்று, இவ்வாறு பிரகாரம் அமைத்து உதவிய மஹாசக்தியே ஜ்வாலா துர்கையாக அறியப்படுகிறாள்.  இந்த துர்கையின் உதவியால், இரவு நேரத்தில் நடந்த போரில் பெரும் பிரகாசம் கிடைத்தபடியால், அசுரர்களின் வஞ்சனைப் போரை சக்தி சேனை எளிதில் முறியடித்தது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்நிகழ்வை,

'ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா'

என்று துதிக்கிறது.

லவண துர்கை:
கிருத யுகத்தில், மது என்ற பெயருடைய அசுரன் ஒருவன் இருந்தான். மிக நல்ல குணங்களுடைய அவன், சிவனை நோக்கிக் கடுமையான தவம் இருந்து,  அவர் சூலத்தை வரமாகப் பெற்றான். அந்தச் சமயத்தில், தன்னிடம் இருப்பது போல், தனக்குப் பின், தன் மகனான லவணனிடமும் அந்தச் சூலம் இருக்க வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வரம் பெற்றான்.

சிவனாரும், சூலம் கையில் இருக்கும் வரை, லவணனைக் கொல்ல யாராலும் இயலாது என வரமளித்தார்.

லவணன், தன் தந்தையைப் போல் அல்லாது, பல கொடுமைகள் புரிந்தான். ராவணனாலும் வெல்ல முடியாத மாந்தாதா சக்கரவர்த்தியை வெற்றி கொண்டான்.

இவ்வாறு அவன் கொடுமைகள் தொடர்ந்த சமயத்தில், ஸ்ரீராமர், அயோத்தியில் அரசு செலுத்திக் கொண்டிருந்தார். ரிஷிகளும், முனிவர்களும் அவரிடம் வந்து முறையிட, ஸ்ரீ ராமர், சத்ருக்னனை அழைத்து, லவணாசுரனை வென்று வரும்படி பணித்தார். சத்ருக்னன் போருக்குச் செல்லும் முன் ஸ்ரீ துர்கா தேவியை வழிபட்டார்.

ரிஷிகளிடமிருந்து, லவணாசுரனின் கையிலிருக்கும் சூலத்தைப் பற்றியும், அவன் வேட்டையாடும் சமயத்தில் சூலம் வைத்திருக்க மாட்டான் என்பதைப் பற்றியும் தெரிந்து கொண்ட சத்ருக்னன், அவன் வேட்டைக்கு வரும் சமயத்தில், அவனை வழிமறித்துப் போர் புரிந்து, ஸ்ரீ துர்கா தேவியின் அருளால் வெற்றி கொண்டார். அவ்வாறு, லவணனை அழிக்க உதவி புரிந்ததால் ஸ்ரீ துர்கைக்கு 'லவண துர்கை' என்னும் திருநாமம் ஏற்பட்டது.

லவணம் என்றால் உப்பு என்றொரு பொருள் உண்டு. கடலில் எப்படி உப்பானது கரைந்திருக்கிறதோ, அப்படி, பக்தனை பக்திக்கடலில், உப்பைப் போல் கரையச் செய்து இறைவனிடம் லயிக்கச் செய்பவள் என்பதாலும் துர்கைக்கு லவண துர்கை எனப் பெயர் ஏற்பட்டதாகக் கொள்ளலாம்.



தீப துர்கை:
நம் அனைவருள்ளும், சித் சக்தியாக, உள்ளொளியாக இருந்து பிரம்ம ஞானம் அருள்பவளே தீப துர்கை.

இந்த துர்கையின் அருளாலேயே அஞ்ஞான இருளை விரட்ட இயலும். சம்சார பந்தத்தில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கரையேற்றும் அருட்கடல் இவளே.

நாம் அன்றாடம் தீபமேற்றும் போது, நம் மனதில் அடர்ந்திருக்கும் அஞ்ஞான இருளை விரட்டுமாறு அம்பிகையை வேண்டிக் கொண்டே தீபமேற்ற வேண்டும். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தீபமாக ஒளிரும் ஜோதி ஸ்வரூபமே தீப துர்கை  என ஸ்ரீ தீப துர்கா ஜப விதானம் கூறுகிறது.

(நோய்களைத் தீர்க்கும் மகிமை வாய்ந்த, ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்.)

இந்த அம்பிகையை முறையாக உபாசிப்பவர்களுக்கு, அம்பிகையின் அருளால், தீப ஒளியில், முக்காலமும் தெரியும்  என்று கூறப்படுகிறது.

ஆசுரி துர்கை:
தூய்மையான வெண்மை நிறத்தவளாக ஆசுரி துர்கை தியானிக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது, திருமால் மோஹினி அவதாரமெடுத்து, அமுதத்தை அசுரர்கள் அடையாத வண்ணம் செய்து தேவர்களுக்கு வழங்கினார்.

இவ்வாறு, அமுதத்தை தேவர்களுக்கு வழங்கிய திருவுருவே ஆசுரி துர்கை எனப் போற்றப்படுகிறது. அசுரர்களை ஏமாற்றும் பொருட்டு வந்த மோஹினித் திருவுருவே ஆசுரி துர்கை என, ஸ்ரீ துர்கா பிரபாவம் கூறுகிறது. இந்த துர்கையை உபாசனை செய்பவர்களுக்கு அஷ்டமாசித்திகளும் வசமாகும் எனக் கூறப்படுகிறது.

இப்போது, இத்தனை துர்கை வடிவங்களுக்கும் ஆதாரமான, ஸ்ரீ மூலதுர்கையைப் பற்றியும் பார்க்கலாம்.

மூல துர்கையே, சர்வ தேவதைகளின் சக்தி அம்சங்கள் ஒருங்கிணைந்த வடிவமாகத் தோன்றியவள். ஸ்ரீ துர்கா மஹாலக்ஷ்மி, மஹிஷாசுரமர்த்தினி எனப் திருநாமங்கள் கொண்டவள். அனைத்து ஆபத்துகள், மற்றும் பயங்களிலிருந்து உயிரினங்களைக் காத்து ரக்ஷிப்பவள்.


ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில், ஸ்ரீ துர்கா உபாசனை, கன்ம மலத்தை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. கன்ம மலத்தை வெல்வதற்கு ஸ்ரீ துர்கா உபாசனையன்றி வேறொரு மார்க்கம் இல்லை. அதாவது, நாம் முன் செய்த வினைகளின் விளைவுகளையே பிறவிகள் எடுத்து அனுபவிக்கிறோம். இந்த வினைச் சுமை தீர துர்கை உபாசனையே உதவும்.

நாம் வேறொரு சந்தர்ப்பத்தில், ஸ்ரீ துர்கா தேவியின் மகிமைகளை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹாகார நாரீ லாவண்யா ஹகாரபரதேவதா
நமோ வேதாந்த ரூபாயை துர்கா தேவ்யை நமோ நம:
நமோ பக்தாதுனும்பாது துர்கா ஸ்ரீ பரதேவதா
நமோ நமோ பகவதி த்ராஹிமாம் அபராதினம்.
(ஸ்ரீ துர்கா ஸஹஸ்ரநாமம்)

அம்பிகையின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
ஆதார நூல்கள்: சிவமஹாபுராணம், ஸ்ரீ தேவி மஹாத்மியம், ஸ்ரீ தேவி பாகவதம், ஸ்ரீ துர்கா பிரபாவம்.

சனி, 2 பிப்ரவரி, 2013

NAVA DURGA DEVIYAR....நவ துர்கா தேவியர்



துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி |
தாரித்ர்ய-து: க பய-ஹாரிணி கா த்வதந்யா
ஸர்வோபகார-கரணாய ஸதார்த்ர-சித்தா ||
துர்கா தேவி!!!, உன்னை ஸ்மரிக்கும் அனைத்து ஜீவர்களுடைய பயத்தை எல்லாம் போக்குகின்றாய். நிம்மதியாய் இருப்பவர் உன்னை ஸ்மரணம் செய்தால், நல்ல எண்ணைத்தை நல்குகிறாய். வறுமை, துக்கம், பயம், ஆகியவற்றைப் போக்குபவளே!!, அனைவருக்கும் அனைத்து விதமான உபகாரங்களையும் செய்ய, தயை நிறைந்த சித்தத்துடன் இருப்பவர்கள் உன்னைத் தவிர உலகில் யார் இருக்கிறார்கள்?

மேற்கண்ட ஸ்லோகம், ஸ்ரீ துர்கா ஸப்தசதீயில் உள்ளது. இது அளவில் சிறியதாய் இருந்தாலும், துர்கா தேவியின் பிரபாவங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இது ஸப்தசதீயில் உள்ள ஸ்லோகங்கள் அனைத்துக்கும் சிகரமாய் விளங்குவதாகும். துர்காதேவியை வழிபடுவோருக்குக் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் சுருங்கக் கூறும் இந்த துதி, அனைத்துத் தியான ஸ்லோகங்களின் மூலம் எனவும் கூறப்படுகிறது.

ருத்ரயாமளம் என்ற தந்த்ரத்தில், 'துர்கா' என்ற சொல்லை, 'த,உ,ர,க,ஆ' என்ற ஐந்து வர்ணங்களின் கூட்டாகச் சொல்லியிருக்கிறது.

இதில் த என்பதற்கு அசுரர்களை அழித்தல், 
என்பதற்கு தடைகளை முறியடித்தல்,
ர் என்பதற்கு, நோய்களை நீக்குதல்,
என்பதற்கு பாவங்களை நீக்குதல்,
என்பதற்கு பயம், எதிரிகள் ஆகியவற்றை அழித்தல் எனப் பொருள் கூறுகிறது ருத்ரயாமளம்.

இந்த ஐந்து அக்ஷரங்களும், ஸ்ரீ துர்கா பஞ்சாக்ஷரீ என்றே போற்றப்படுகின்றன.

துர்கை வழிபாடு, மிகத் தொன்மையானது. சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக  துர்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். துர்கை என்பது பரப்பிரஹ்மத்தின் சகுண சக்தியின் ரூபம். துர்கையின் திருக்கரங்களில் இருக்கும் சூலம் ஞானத்தையும், சிம்மம் தர்மத்தையும், திருப்பாதங்களின் அடியில் இருக்கும் மஹிஷன், காம, குரோதங்களையும், அம்பிகையின் முக்கண்கள் மூன்று காலங்களையும் குறிக்கின்றன.

கணபதியின் ஒரு திருவடிவம், துர்கா கணபதி என்பதாகும். 'ஸ்கந்தமாதா' என்பது துர்கையின் திருநாமங்களில் ஒன்று.  ஜ்வாலா துர்கா மந்திரத்தில் ஸ்ரீதுர்கை, 'ஆதி விஷ்ணு ஸோதரி' என்று அழைக்கப்படுகிறாள். ஸப்தசதீ ஸ்லோகத்தின் மூலமாக, சிவ, சக்தி ஐக்கிய பாவம் நன்கு விளங்கும். ஆகவே, துர்கையின் உபாசனையால் அனைத்துத் தெய்வங்களும் மகிழ்ச்சியடைகின்றன என்பது நன்கு புலனாகும்.

இந்தப் பதிவில் நாம் நவதுர்கா தேவியரைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவாக, சைலபுத்ரி, பிரம்மசாரினீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்பனவே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன.

குமாரி பூஜா முறையின்படி, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்ரா என்பவையே நவதுர்கை வடிவங்களாகக் குறிக்கப்படுகின்றன.

இந்தத் திருவடிவங்கள் குறித்து, நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, அதிகம் பேசப்படாத, வேறு வகையான நவதுர்கை வடிவங்களைப் பார்க்கலாம்.

 அதன்படி, கீழ்க்கண்ட மூர்த்திகளே நவதுர்கை வடிவங்கள்.
  1. வனதுர்கை,
  2. சூலினி துர்கை,
  3. ஜாதவேதோ துர்கை,
  4. சாந்தி துர்கை,
  5. சபரி துர்கை,
  6. ஜ்வாலா துர்கை,
  7. லவண துர்கை,
  8. தீப துர்கை,
  9. ஆசுரி துர்கை.
இவற்றிற்கெல்லாம் ஆதாரமான மூல துர்கா வடிவம் தனியாக உபாசிக்கப்படுகிறது. நவதுர்கைகளும் இணைந்த திருவடிவமாக, அன்னை ஸ்ரீ மூகாம்பிகை கருதப்படுகிறாள்.
வனதுர்கை:
அகத்திய மாமுனி, விந்திய மலையில் கர்வத்தை வனதுர்கா தேவியின் துணை கொண்டே அடக்கினார். அகத்தியர், சிவபெருமான் ஆணையை ஏற்று, தென் திசை நோக்கி வந்தபோது, விந்திய பர்வதம், அவரது பயணத்திற்கு இடையூறாய் நின்றது. அகத்தியர் வழி விடுமாறு  கேட்ட போதும் அது வழி விடவில்லை. ஆகவே, வனதுர்கா தேவியை தியானித்து, தனக்கு சக்தி வழங்குமாறு பிரார்த்தித்தார். வனதுர்கா தேவியும் அருள் செய்தாள். அகத்தியர், தன் கரத்தை, விந்தியத்தின் கொடுமுடி வரை நீட்டி, அதை கீழே அமுங்குமாறு செய்தார். இவ்வாறு, விந்திய வனத்தில், அகத்தியருக்கு அருள் செய்ததால், வனதுர்கா எனப் பெயர் பெற்றாள் துர்கை. தன்னைச் சரணடைந்தவர்களை, சம்சாரமாகிய காட்டில் இருந்து காப்பவள் என்பதாலும் வனதுர்கை என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் கருதலாம்.

மேலே கண்ட ஒன்பது துர்கையரின் வடிவமாக, நவதுர்காத்மிகாவாகத் திகழ்கிறாள்  வனதுர்கை. வன என்பதைத் திருப்பிப் போட்டால் 'நவ' என்றே வரும். வனதுர்கை மிகவும் அழகு படைத்த சாந்த தேவதையாகவே அறியப்படுகிறாள். 'கொற்றவை' எனப் பழந்தமிழர்கள் வழிபாடு செய்த தேவதை வனதுர்கையே.   ஸ்ரீ  பாஸ்கரராயர் அருளிய 'ஸௌபாக்கிய பாஸ்கரம்' என்னும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தில், மஹா ஸ்ரீ வித்யா, வனதுர்கையின் உபாசனையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில், கதிராமங்கலம் என்னும் திருத்தலத்தில் வனதுர்கா தேவி கோவில் கொண்டு திருவருள் புரிகிறாள்.
சூலினி துர்கை
சிவனாரின் திரிபுர ஸம்ஹாரத்தின் பொழுது, சூலம் ஏந்திய கரத்தினளாக அவருக்குத் துணை நின்றவளே சூலினி துர்கை.  திரிசூலம் என்பது மும்மூன்றாக உள்ள தத்துவங்களை எல்லாம் குறிப்பிடுவதாகும் (உதாரணம்: இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, சத்வ, ரஜோ, தமோ குணங்கள்).

சூலினி யந்த்ர பூஜை மிக மகிமை வாய்ந்தது. த்ரிபுர ஸ்ம்ஹாரம், அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான திருவதிகையில் நிகழ்ந்ததாக ஐதீகம். அங்கு உள்ள அம்மனின் திருநாமம் திரிபுரசுந்தரி. இவர் சூலினி துர்கையின் அம்சமாகவே வழிபடப்படுகிறார்.
ஜாதவேதோ  துர்கை:
அக்னிக்கு ஆதாரமாக உள்ள சக்தியே ஜாதவேதோ துர்கை. தேவர்களுடைய உக்ரமான சங்கல்பத்தில் அவர்களுடைய தேஜஸ்ஸூகளெல்லாம் ஒன்றிணைந்து சண்டி பரமேஸ்வரியாக, ஜாதவேதோ துர்கையாக  என‌ உருவெடுத்தது புராணங்கள் கூறுகின்றன.

திருமுருகன் அவதார நேரத்தில், சிவனாரின் ஆறு திருமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை, கங்கையில் சேர்க்குமாறு, பரமன் அக்னிபகவானுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவரோ, அந்த தீப்பொறிகளின் கனத்தையும் வெப்பத்தையும் தாங்க மாட்டாமல் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

அப்போது சிவனார், அந்தத் தீப்பொறிகளைத் தூக்க அக்னி பகவானுக்கு வலிமையை அருளினார். அக்னி பகவானும், இலகுவாக அவற்றைத் தூக்கிக் கொண்டு கங்கையிடம் சென்றார். உண்மையில் அக்னிபகவான் அவற்றைத் தூக்கும் முன்பாக, துர்கா தேவி அத்தீப்பொறிகளுள் பிரவேசித்தாள். ஜாதவேதோ துர்கையே அக்னி ஸ்வரூபமாய் இருந்து அத்தீப்பொறிகளைத் தூக்கிச் சென்றாள். அதனாலேயே துர்கா தேவிக்கு 'ஸ்கந்தமாதா' என்னும் திருநாமம் ஏற்பட்டது.

சாந்தி துர்கை:
இன்றைய அன்றாட வாழ்வின் அவசியத் தேவையான நிம்மதியை, மனச்சாந்தியை அருளுபவள் சாந்தி துர்கையே. துர்வாச முனிவர், சாந்தி துர்கையின் வழிபாட்டினாலேயே கோபத்தைக் கைவிட்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சாந்தி துர்கையை வழிபடுவதன் மூலம், கடன், நோய், செய்வினை தோஷங்கள் போன்ற பல ப்ரச்னைகள் நீங்கும். பட்டீஸ்வரத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ துர்கா தேவி சாந்தி துர்கையாகவே கருதப்படுகிறாள்.

சபரி துர்கை(சாபரீ துர்கை):
 அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறத் தவம் இருந்த போது, அவன் தவத்தை கலைக்க வேண்டி, துரியோதனன் முகன் என்ற அசுரனை அனுப்பினான். அவனை  அழிக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நான்கு நாய்கள் ரூபமாக ஆக்கிக்கொண்டு, சிவனார் வேட்டுவக்கோலத்துடனும், அம்பிகை வேட்டுவச்சியின் கோலத்துடனும் சென்று அந்த அசுரனை வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

மேலும், இறைவன், பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனனுக்குத் தகுதி இருக்கிறதா எனச் சோதனை செய்யும் எண்ணத்துடன் வந்ததால், அவனை, சிவனார் அதிகமாக சோதனை செய்யாவண்ணம் தடுப்பதற்காக, கருணை உள்ளம் கொண்டு அன்னையும் உடன் வந்தாள்

அப்படி, வேட்டுவச்சியின் திருக்கோலத்துடன் வந்த‌  அம்பிகை ஸ்ரீ சபரி துர்கையாகத் தியானிக்கப்படுகிறாள். மயிற்பீலியை தலையில் சூடிக்கொண்டு, திருக்கரங்களில் வில் அம்பு ஏந்தி, காதுகளில் பனை ஓலை(தாடங்கம்) அணிந்து,  மரவுரி அணிந்த திருக்கோலத்தில் அம்பிகையை தியானம் செய்வது தீராத வினை தீர்க்கும் என்பது ஐதீகம். சாபரீ துர்கை எனவும் இந்த துர்கை வழங்கப்படுகின்றாள்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்...

அம்பிகையின் அருளால்,

வெற்றி பெறுவோம்!!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
தகவல்கள் உதவி: சிவ மஹா புராணம், தேவி பாகவதம், ஸ்ரீ துர்கா பிரபாவம்.