நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

SRI GURU GITA......ஸ்ரீ குரு கீதை.


குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர: |
குருரேவ பரம் ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவே ப்ரஹ்மா, குருவே விஷ்ணு, குருவே அனைத்திற்கும் தேவனான பரமேச்வரன். குருவே சாக்ஷாத் பரப்ரம்மம். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.

ந குரோரதிகம் தத்த்வம் ந குரோரதிகம் தப: |
ந குரோரதிகம் ஞானம் தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவைக் காட்டிலும் உயர்ந்த தத்வம் ஒன்றில்லை. குருவைக் காட்டிலும் உயர்ந்த தவம் ஒன்றில்லை.குருவைக் காட்டிலும் உயர்ந்த ஞானமொன்றில்லை.அப்பேர்ப்பட்ட ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.
(ஸ்ரீகுரு கீதை)

 'கீதை' என்னும் சொல் பொதுவாக ஸ்ரீமத் பகவத் கீதையையே குறிக்கும். ஆனால் 26 வகையான கீதைகள் இருக்கின்றன. அவற்றில் சில, கபில கீதை (இதன் சாரத்தை, சாங்கிய யோகம் பதிவில் காணலாம்), வியாச கீதை, உத்தவ கீதை, குரு கீதை, ஹம்ஸ கீதை, சிவ கீதை முதலானவை.  இவற்றில் ஸ்ரீகுரு கீதையைப் பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் காணலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர், நம்மைப் பெறாமல் பெற்று, ஞானாசானாக நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை நமக்குக் காட்டிக் கொடுத்து, நம் வாழ்வின் பயனை அடையச் செய்யும் சத்குருநாதனே ஆவார். குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

நமக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் அனைவரும் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள்.   ஆனால் யாரொருவர் 'நாம் யார்?' என அறியும் ஞானப் பாதையின் கதவுகளை ஒருவருக்குத்  திறந்து வைக்கிறாரோ அவரே 'ஸத்குரு' என்னும் திருநாமத்தால் அறியப்படுபவர்.

நம் ஆன்ம முன்னேற்றத்திற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் ஞான குருமார்கள் நம்மைக் காக்கும் கவசம் போன்றவர்களே.

நல்ல குருவை அடைவது என்பது நிச்சயம் நம் பூர்வ புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும். அப்பேர்ப்பட்ட சத்குருவை அடைந்தவர்கள், நிச்சயம் பாக்கியவான்களே. நல்ல குருவுக்கான தேடல், நம் ஆழ்மனதில் ஆழப் பதிந்திருக்கும் பட்சத்தில், நம் கர்மவினைக் கட்டுக்கள் உடைந்து, நல்ல குருவை கண்டடையும் பேறு தானாக சித்திக்கும்.

'குரு' என்பவர், தந்தைக்குச் சமானமாகவும், குருவின் மனைவி, தாய்க்குச் சமமாகவும், குருவின் குழந்தைகள், சகோதர சகோதரியருக்குச் சமானமாகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பது வேதவாக்கியம். அகக்கண்களைத் திறந்து வைத்து, அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் உள்ளத்தில் ஞான ஒளியேற்றி, இகபர நலன்களனைத்தும் ஒருவருக்குக் கிடைக்க உதவுபவர் குருவே ஆவார்.

நம் இந்து தர்மத்தில், ஆசாரியர்களுக்கும், குருமார்களுக்கும் இருக்கும் சிறப்பு அளவிடமுடியாதது. குரு சிஷ்ய பரம்பரை, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில்,  குலதெய்வம் போல் குருபீடமும் இருக்கிறது.  நம் சனாதன மதத்தின் நிலையான தூண்களான வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள்,  தரிசனங்கள் யாவும், குருமுகமாகவே, வழிவழியாக உபதேசிக்கப்பட்டு, நம்மை அடைந்துள்ளன. பழங்காலத்தில், குருவின் இல்லத்திலேயே சிஷ்யர்கள் தங்கியிருந்து, குருவுக்கு பணிவிடைகள் செய்து, அவர்களிடமிருந்து கல்வி கற்பது வழக்கம். 


நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச் சக்கரங்களில், சஹஸ்ராரத்திற்கு 
(பதிவைக் காண்க)சற்றுக் கீழாக அமைந்துள்ள ஒரு சக்கரத்தின் திருநாமம் 'குரு'. இது பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. இது மத்தியில், ஸ்ரீகுருவின் மஹாமந்திரமும், திருவடிகளும் விளங்குகிறது. இந்தச் சக்கரத்தை அடைந்த பின்பே, சஹஸ்ராரத்தை அடைந்து, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப நிலையை அநுபவிக்க முடியும்.

சொல்லில் அடங்கா மகிமை பொருந்திய குருவின் சிறப்புகள், அவரைப் பூஜிக்கும் முறை, சத்குருவை அடைந்தவர்  பெறும் நன்மைகள் என அனைத்தையும் தெளிவாக உரைக்கும் நூலே 'ஸ்ரீ குரு கீதை'. இது வியாச மகாமுனிவரால் இயற்றப்பட்டது. இது புராணங்களில் பெரியதான 'ஸ்காந்த புராணத்'தில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ உமாமகேஸ்வர சம்வாத(உரையாடல்) ரூபமாக அமைந்துள்ளது. 182 ஸ்லோகங்களைக் கொண்டதாக ஸ்ரீகுருகீதை அமைந்துள்ளது.

ஸ்ரீ குருகீதையை, ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்கு, அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், உபதேசித்தார். அவர்கள் மூலமாக, இந்த அரிய துதியானது உலகமெங்கும் பரவலாயிற்று.

'தினமும் காலையில், நம் ஆன்ம முன்னேற்றத்திற்காக, நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் சத்குருநாதரை, நம் சிரத்தில், வரத, அபய முத்திரைகளோடு கூடிய கரங்களை உடையவராக தியானிக்க வேண்டும். அவரையே எல்லா தேவர்களின் ஸ்வரூபமாகக் கருதி, மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். அவருடைய பாதாரவிந்தங்களில் இருந்து பெருகி ஓடும் தீர்த்தம், சதா சர்வகாலமும் நம் சிரத்தில் விழுந்து கொண்டு இருப்பது போலக் கருதி வணங்க வேண்டும். அந்த தீர்த்தமானது, நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துவதாகப் பாவனை செய்ய வேண்டும். இதனால், உள்ளம் துலங்கி, மாசு மறுவற்ற ஸ்படிகம் போல் ஆகிறது' என்று குருகீதையின் த்யான ஸ்லோகம் கூறுகிறது.

இனி, ஸ்ரீகுருகீதையில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனுக்கு இடையில் நடந்த உரையாடல் ரூபமாக இருக்கும் சில ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

திருக்கயிலையில், பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம், 'ஸ்வாமி, சரீரத்தில் பற்றுதல் இருக்கும் ஜீவன், எந்த சாதனத்தினால், பரம்ம ஸ்வரூபத்தை அடைவான்?. அதை எனக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் தங்களை அடிபணிகிறேன்' என வேண்ட, ஸ்ரீ பரமேஸ்வரனும், உலக நன்மைக்காக மலைமக‌ளால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியால் மிகுந்த சந்தோஷமடைந்து, பின்வருமாறு கூறலானார்.

யோ குரு: ஸ சிவ: ப்ரோக்தோ ய: சிவ: ஸ குரு; ஸ்ம்ருத:
"யார் குருவோ அவரே ஈஸ்வரன். யார் ஈஸ்வரனோ அவரே குரு"

இவ்வாறு, துவங்குகிறார், அகிலத்தின் முதல் குருவான சாக்ஷாத் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீபரமேஸ்வரன்.  தொடர்ந்து அவர் திருவாய்மலர்ந்தருளும் அமுத மொழிகளில் சில.

சோஷணம் பாபபங்கஸ்ய தீபனம் ஞான தேஜஸ: |
குரோ: பாதோதகம் தேவி ஸ்ம்ஸாரார்ணவதாரகம் ||

தேவி!!, ஸத்குருவினுடைய பாதோதகம்(பாதங்களை அலம்பிய நீர்) பாவம் என்னும் சேற்றை வற்ற அடிக்கிறது. ஞான தேஜஸை விளக்குகிறது. ஸம்ஸார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கிறது.

குருமூர்த்திம் ஸம்ரேந்நித்யம் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோராக்ஞாம் ப்ரகுருவீத குரோரந்யம் ந பாவயேத் ||

குருவின் திருவுருவை எப்போதும் ஸ்மரணை செய்ய வேண்டும். குருவின் திருநாமத்தை எந்நேரமும் ஜபிக்க வேண்டும். குருவின் கட்டளைப்படியே நடக்க வேண்டும். குருவைத் தவிர வேறொன்றையும் நினைக்கலாகாது.

அநேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மகோடி விதாஹினே |
ஞானானலப்ரபாவேன தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||

யார் தன்னுடைய ஞானாக்னியின் மகிமையினால், சிஷ்யர்கள் தங்கள் ஜென்மஜென்மாந்திரங்களில் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான கர்மாக்களை தகிக்கிறாரோ அத்தகைய ஸ்ரீஸத்குருவிற்கு நமஸ்காரம்.

த்யானமூலம் குரோர்மூர்த்தி: பூஜாமூலம் குரோ:பதம் |
மந்த்ரமூலம் குரோர்வாக்யம் மோக்ஷமூலம் குரோ: க்ருபா ||

தியானத்திற்கு மூலம் குருவின் திருவுருவம். பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள். மந்திரங்களுக்கு மூலம் குருவின் உபதேச மொழிகள். மோக்ஷத்திற்கு மூலம் குருவின் கிருபையே ஆகும்.

இவ்வாறு பலப்பல ஸ்லோகங்களால் குருவின் மகிமை விளக்கப்பட்டு, இறுதியில், பரப்பிரம்ம ஸ்வரூபமே குரு என்பதாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் ஸ்ம‌ராமி
ஸ்ரீமத் ப்ரப்ரம்ஹ குரும் பஜாமி |
ஸ்ரீமத்பரப்ரம்ஹ குரும் வதாமி 
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் நமாமி ||

ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை ஸ்மரணை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை பஜனை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவின் விஷயமாகவே பேசுகிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை நமஸ்கரிக்கிறேன்.

நித்யம் சுத்தம் நிராபாஸம் நிராகாரம் நிரஞ்ஜனம் |
நித்யபோத சிதானந்தம் குரும் ப்ரஹ்ம நமாம்யஹம் ||

நித்யமானவரும், சுத்தனும், மாறுபாடற்றவரும், உருவம் அற்றவரும், நிர்மலமானவரும், நித்யபோதரூபனும்,  சிதானந்த ஸ்வரூபமாக விளங்குபவருமான ஸ்ரீஸத்குரு எனும் பரம்பொருளை வணங்குகிறேன்.

அதன் பின், குருவை தியானிக்கும் முறை, அவரிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து உபதேசிக்கிறார் எம்பெருமான்  . அவற்றுள் சில...

ஹூங்காரேண ந வக்தவ்யம் ப்ராஜ்ஞை: சிஷ்யை; கதாசன |
குரோரக்ரே ந வக்தவ்யமஸத்யம் ச கதாசன ||

சிஷ்யர்கள், மிகப்பெரிய வித்வான்களாக இருப்பினும், குருவின் எதிரில் 'ஹூம்' காரத்தினால் பேசலாகாது (கர்வம் கொண்டு பேசலாகாது என்பது கருத்து). குருவின் சந்நிதானத்தில், சத்தியமல்லாததை ஒருபோதும் பேசலாகாது.

பாதுகாஸன சய்யாதி குருணா யததிஷ்டிதம் |
நமஸ்குர்வீத தத்ஸர்வம் பாதாப்யாம் ந ஸ்ப்ருசேத் க்வசித் ||

குரு உபயோகிக்கும் பாதுகைகள், படுக்கை, இருக்கை முதலானவற்றுக்குக் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும். அவைகளை ஒருபோதும் காலால் மிதிக்கலாகாது.
நிறைவாக, ஸ்ரீ பரமேஸ்வரன், பார்வதி தேவியிடம், 'தேவி, இதுவரை, நான் முக்தனுடைய இலக்கணம், குரு பக்தி, தியானம் ஆகியவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் என் இருதயத்தில்,  சதாசிவத்தை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை  சதா அனுஸந்தானம் செய்து கொண்டிருக்கிறேன். நீயும், குருவான என்னை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை பக்தியுடன் சொல்லுவாயாக' என்றுரைக்கின்றார்.

குரு கீதையின் பலஸ்ருதி(பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்) பற்றியும் பரமேஸ்வரனானவர் கீழ்வருமாறு கூறுகிறார்.

'மனிதர்களால், இந்த குரு கீதை பக்தியோடு கேட்கப்பட்டால் அல்லது பாராயணம் செய்யப்பட்டால், அல்லது தானம் செய்யப்பட்டால், ஸம்ஸார பந்தம் அடியோடு நீங்கிவிடும். குரு கீதையின் ஜபத்தினாலேயே அநேக விதமான பலன்கள் கிட்டும். மற்ற மந்திர ஜபங்களுக்கு இதன் மகிமையில் பதினாறில் ஒரு பங்கு அளவு கூட இல்லை. இது அனைத்துப் பாவங்களையும் நீக்குகிறது. எல்லா சித்திகளையும் தர வல்லது. இதை புருஷர்கள், ஸ்த்ரீகள் யாவரும் பாராயணம் செய்யலாம். பஞ்சாயதன மூர்த்திகளில் (கணபதி, சிவன், அம்பிகை, சூர்யன், விஷ்ணு, முருகன்) யாரை உபாசித்தாலும்,  இதைப் பாராயணம் செய்யலாம்'.

மேலும் என்னென்ன பலன்களை விரும்புவோர் எந்த விதமான முறையில் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் விளக்கமாகக் கூறுகிறார். உதாரணமாக, உள்ள அமைதியை விரும்புவோர் வெண்மை நிற ஆடையை அணிந்து குருகீதையை ஜபிக்க வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது.

யாரையெல்லாம் குருவாக ஏற்கக் கூடாதென்றும் குரு கீதையில் கூறப்பட்டுள்ளது.

'ஞானமில்லாதவனும், 'தானே குரு' என்பதாக நினைத்துக் கொண்டிருப்பவனும், பொய் சொல்பவன், மோசம் செய்பவன், முதலானோர்களும் ஆத்ம ஞானத்தை அடைய முடியாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறரை ஞான மார்க்கத்தில் செலுத்த முடியும்?. ஆகவே இவர்களை குருவாக ஏற்கக் கூடாது' என்று சொல்கிறது குரு கீதை.

இவ்விதம் குருவின் மகிமை குறித்து விளக்கமாக உரைக்கிறது ஸ்ரீ குரு கீதை.

இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது, ஸ்ரீகுருவின் சரணாரவிந்தங்களே. எத்தனையோ குருமார்கள் இந்த ஞான பூமியிலே. அவரவர் மனதிற்கு இசைந்த வழிகளில், சத்குருவை தேர்ந்தெடுத்து, பின் அவரை விடாது பின்பற்றினோமானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனின் திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம்.
தெளிவு குருவின் திருமேனி காணல் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம் 

குருவருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

3 கருத்துகள்:

 1. குருவருளால்
  உண்மையை
  உணர்வோம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////குருவருளால்
   உண்மையை
   உணர்வோம்////

   நன்மை பெறுவோம்
   நலமடைவோம்

   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..