நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2013

PARANKUNDARATHU PERUMAN (AADI KIRUTHIGAI (31/7/2013) SPECIAL POST).....பரங்குன்றத்துப் பெருமான்(ஆடி கிருத்திகை (31/7/2013) சிறப்புப் பதிவு)

பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே". (சம்பந்தர்)

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆடி கிருத்திகை சிறப்புப் பதிவுக்கென எழுத அமர்ந்த போது,   'நம் ஊரைப் பற்றி ஓர் தனிப்பதிவு இடலாமே...' என்று உறவினர் ஒருவரால் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இறைவன் திருவுளம் இது எனத் தோன்றவே இம்முறை, திருப்பரங்குன்றம் திருத்தலத்தைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சென்ற வருடம், ஆடி கிருத்திகை சிறப்புப் பதிவான கௌமாரம் பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

மிக முன்பே பல்வேறு பதிவுகளில் பரங்குன்றம் மேவிய பிரானைப் பற்றி எழுதியிருந்தாலும் தனிப்பதிவு எனச் செய்ததில்லை. எழுத நினைத்து தகவல்களைச் சேகரித்தால் மலைத்துப் போனேன்.... ஒரு பதிவு நிச்சயம் போதாது. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி அளிக்கிறேன். பரங்குன்றநாதர் எனக்கு அந்த ஆற்றலை அருள்வாராக.

பெயர்க்காரணம் 
முதலில் 'திருப்பரங்குன்றம்' பெயர்க்காரணத்தைப் பார்க்கலாம். திரு + பரம் + குன்றம் எனப் பிரித்தால், பரம்பொருளாகிய எம்பெருமான் உறையும் குன்றம் எனப் பொருள்படும். 'திரு' என்பதை, சிறப்பைக் குறிக்கும் அடைமொழி எனவும் கொள்ளலாம். திரு, அதாவது அழியாப் பெருஞ்செல்வமாகிய பரம்பொருள் உறையும் குன்றம் எனவும் பொருள் கொள்ளலாம்.

திருப்பரங்குன்றம் கோயில் அமைப்பு:
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாவதாக அறியப்படுகின்றது.  மலையே சிவமாக அமைந்த பெருமையுடையது.

நம் உடலில் அமைந்துள்ள ஆதார சக்கரங்களுள் மூலாதார சக்கரத்திற்கான திருத்தலமாக விளங்குகிறது இது. முருகப்பெருமான், தெய்வானை அம்மை திருக்கல்யாணம் நடந்த திருத்தலம். ஆகையால் முருகன் எப்போதும் திருக்கல்யாண கோலத்தில், புன்னகை மிளிரும் திருவதனத்துடன், சந்தோஷம் பொங்கக் காட்சியளித்து, வேண்டுவோருக்கு வேண்டுவன அருளுகிறார். மன மகிழ்வே ஆனந்தமயமான‌ ஆண்டவனை அடைய முதல்படி.  ஆகவே, திருக்கல்யாணக் கோலத்தில் மன மகிழ்வோடு இருக்கும் கந்தப் பெருமான் அருளும் இத்தலம் மூலாதாரத்தலம் என்று கூறப்படுகின்றது.

இது குடைவரைக் கோயில் வகையைச் சேர்ந்தது. ஆகவே, இத்திருக்கோயிலில் பிரகாரம் இல்லை. மேலும் மூல மூர்த்தங்களுக்கு அபிஷேகம் இல்லை. வேலுக்கே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றது.

இங்கே முருகப்பெருமான் மட்டும் தனிச்சந்நிதியில் அருளவில்லை. அருகே, அம்மை, அப்பன், மாமன், அண்ணன் என்று அனைவரோடும் சேர்ந்தே அருளுகிறார். தெற்கு நோக்கிய‌ மூலஸ்தானத்திற்குள் சென்றால், நடுநாயகமாக, மகிஷன் தலைமேல் விஷ்ணு துர்க்கை அருட்கோலம் தந்து ஆட்கொள்ளுகிறாள். அம்மையை வன துர்க்கை என்றும் கூறுவதுண்டு. ஆயினும் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் முதலியவை தாங்கி அருளுகின்றாள். துர்க்கையின் இடப்புறத்தில் விநாயகப் பெருமான் கற்பக விநாயகர் என்ற திருநாமத்தோடு அருளுகின்றார். விநாயகரின் வலது கீழ்ப்புறத்தில், அனுமன் அருளுவது சிறப்பு. ஆதி அந்த மூர்த்தியாக அமைந்தருளுகிறார்.

விநாயகரின் இடப்புறத்தில் கிழக்கு நோக்கி, சத்தியகிரீஸ்வரப் பெருமான் என்று வடமொழியிலும், பரங்கிரிநாதர் என்று தமிழிலும் போற்றப்படும் எம்பெருமான் லிங்க உருவில் அருளுகின்றார். அவருக்குப் பின் புடைப்புச் சிற்பமாக, சோமாஸ்கந்தர் அமைந்தருகின்றார். சம்பந்தப் பெருமானும், சுந்தரரும் பரங்கிரிநாதரை பதிகங்கள் பாடிப் போற்றியுள்ளனர். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை(ஆவுடைநாயகி). அம்மை, மூலஸ்தான மண்டபத்திற்கு கீழே,  தனி மண்டபத்தில் சந்நிதி கொண்டருளுகிறாள்.

சிவனாருக்கு நேர் எதிர்புறம், ஸ்ரீலக்ஷ்மி உடனுறை பவளக்கனிவாய்ப் பெருமாள் அருளுகின்றார்.

துர்க்கைக்கு வலப்புறம், வடிவேல் தாங்கி வரமருளும் முருகன், தெய்வானை, நாரத முனிவர் உடனிருக்க அருளுகிறார். முருகப் பெருமானின் திருக்கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. திருமணக் கோலமெனினும், முருகன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவரது இடப்புறம், தெய்வானை அம்மை, முழங்காலிட்டு அமர்ந்தருளுகிறார். அவ்வண்ணமே வலப்புறம் நாரத முனிவர் அமர்ந்திருக்கிறார்.

முருகனுக்கு மேலே இரு புறமும், சூரியர் சந்திரர், கீழே  ஐராவதம், முருகனின் வாகனங்களுள் ஒன்றான ஆடு (இது குறித்து, கீழே விளக்கியிருக்கிறேன்), அண்டராபரணர்,  உக்கிரமூர்த்தி என்னும் திருநாமங்களுடைய துவாரபாலகர் ஆகியோரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

மூலஸ்தான மண்டபத்தின் கீழ், அர்த்த மண்டபத்தின் இரு புறமும், ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீஅன்னபூரணி தேவி ஆகியோரின் சந்நிதானங்கள் இருக்கின்றன.

இத்திருத்தலத்தில் நவக்கிரகத்திற்கென தனியாக சந்நிதி இல்லை. ஆயினும், மூலஸ்தான மண்டபத்திற்கு கீழ்,   அர்த்த மண்டபத்தில், சுற்றாக அமைந்திருக்கும் இறை மூர்த்தங்களில், சூரியன், சந்திரன், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் அருளுகின்றனர். செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோரின் அதிதேவதைகள் மூலஸ்தானத்தில் (முருகன், அம்பிகை, பெருமாள்) அருளுகிறார்கள். சனி பகவான், தனியாக  சந்நிதானம் கொண்டருளுகிறார். அவரருகில் ராகுபகவானும் கேது பகவானும் நாக உருவில் அருளுகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள்:

மூர்த்தி, தலம் தீர்த்தம் இம்மூன்றாலும் பிரசித்தி பெற்ற தலம் இது. இத்திருத்தலத்தில் தீர்த்தம் லக்ஷ்மி  தீர்த்தம் மற்றும் ஓம் வடிவில் அமைந்துள்ள, முருகப் பெருமான் தன் வேல் கொண்டு உருவாக்கிய சரவண ப் பொய்கை. இதற்கு பிரம்ம கூபம் என்னும் பெயரும் உண்டு. சரவணப் பொய்கை அருகே, நக்கீரர் பெருமானை முருகன் அடைத்து வைத்த 'நக்கீரர் குகை' உள்ளது. இங்கிருந்தே நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனருள் பெற்றார் என்பர்.  ல‌க்ஷ்மி தீர்த்தம் திருக்கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது. சரவணப் பொய்கை, கிரி வலப் பாதையில் அமைந்திருக்கிறது.

அக்னி ஸ்வரூபமாக முருகப்பெருமான் அருளுவதால் முருகப்பெருமானுக்கு அஜ(ஆடு)வாகனம் சிறப்பு.  இத்திருத்தலத்தில், தனிச் சந்நிதியில் அருளும் ஆறுமுகப் பெருமான் ஐம்பொன்னால் அமைந்த திருவுருவாயினும் அவரே அக்னி ஸ்வரூபம். வருடத்திற்கொரு முறை, வைகாசி விசாகப் பெருவிழாவின் போது மட்டும், அவரை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் சாரி சாரியாக ஏந்தி வரும் பாற்குடங்களால் அபிஷேகித்து, குளிர்விக்கின்றனர்.

தேவேந்திரன் மகளாகிய தேவசேனையை(தெய்வானை)மணந்து, தேவசேனாபதியாக அருளுவதால், இந்திரனின் வாகனமான ஐராவதம் முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. இத்திருத்தலத்தின் பிரம்மோற்சவமான பங்குனித் திருவிழா ஐந்தாம் நாள், யானை வாகனம், கை பாரம் பிரசித்தி பெற்றது.

படம் நன்றி: தினமலர்.காம்
ஐந்தாம் நாள் விழாவின் போது, முருகப்பெருமானை, மிகுந்த எடையுடன் கூடிய வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, பலர் சேர்ந்து, கைவரல்களை மட்டும் பயன்படுத்தி, யானை வாகனத்தைத் தூக்கி வருவார்கள். முருகப்பெருமானின்  திருக்கோவில் முன்பாக, யானை வாகனத்தை முன்னும் பின்னுமாக விரல்களால் தூக்கி ஆடியவாறே, 'வாகனம், வாகனம் கனத்த வாகனம்' என்று துவங்கும் பாடலை உற்சாகத்துடன் பாடுவார்கள். அதிக அளவிலான மக்கள் இந்தக் கோலாகலத்தைப் பார்க்கக் கூடுவார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருகே நாயன்மார்களுடன் அமர்ந்தருளும் வித்யா கணபதி, மிகுந்த பிரசித்தி பெற்றவர். தேர்வுக்கு முன்னால் இவரை வழிபட, பெரும் சிறப்புகளுடன் கூடிய வெற்றி நிச்சயம். அது போல் சனிபகவானுக்கு அருகே அருளும் ஜூர தேவரும் மிகுந்த சாந்நித்யம் உடையவர். நோய் தீர்க்கும் பிரான்.

கோயிலின் க்ஷேத்ர பாலகர் கருப்பண்ண சாமி. இவருக்கு கட்டுச் சோறு கட்டி வைத்த பின்பே எந்த ஒரு நல்ல காரியமும் துவங்கும் வழக்கம் பல குடும்பங்களில் இருக்கிறது.  ஆஸ்தான மண்டபத்தில், முதலில் இவரையே தரிசிக்க வேண்டும்.

கோயில் வரலாறு
சிவனார், உமாதேவியாருக்கு பிரணவப் பொருளை உபதேசிக்கும் பொழுது, உமாதேவியாரின் மடியில் முருகன் அமர்ந்திருந்ததால், அவரும் பிரணவப் பொருளை அறிந்தார். இறைவனும் முருகனும் வேறு வேறு இல்லாவிட்டாலும், முறையாக உபதேசம் பெறாமல், பிரணவப் பொருளை அறிந்ததற்கு பிராயச்சித்தம் தேடி, இத்திருத்தலத்தில் முருகன் தவமியற்றினார். மைந்தனின் தவத்திற்கு மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அருளினார் (ஆகவே, இங்கு, முருகனைத் தரிசிப்பதற்கு முன்னால் சத்தியகிரீஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்).

பின், சூரனை வதைத்ததும், தேவசேனையை இத்திருத்தலத்திலேயே மணம் கொண்டருளினார் முருகப் பெருமான். கந்த புராணத்தோடு, நிரம்ப அழகிய தேசிகர் அருளிய திருப்பரங்கிரி புராணமும் இந்நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்கிறது.

திருமுருகன் திருக்கோவிலாக பொதுவாக இது அறியப்பட்டாலும், வரலாறு கூறும் செய்திகளை கூர்ந்து நோக்கினால், இது சிவன் கோவிலாகவும் அதற்கு முன்னர் சக்தியின் திருத்தலமாகவும் விளங்கியிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

பிரகாரங்களில்லாத, அடுக்கடுக்காக அமைந்த மண்டபங்களுடன் (ஆஸ்தான மண்டபம், திருவாசி மண்டபம், கம்பத்தடி மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் என்கிற அமைப்பில்) கூடிய கட்டுமான அமைப்பு, சக்தியின் கோவில்களுக்கான பிரத்தியேக அமைப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. நடுநாயகமான தெய்வமாக துர்க்கை அமைந்திருப்பதும் இக்கருத்திற்கு வலுச்சேர்க்கிறது. ஆக இது முதலில் சக்தியின் திருக்கோவிலாக அமைந்து, பின் சைவம் தழைத்தோங்கிய காலத்தில் சிவனாரின் தலமாக மாறியிருக்கலாம்.

அது போல‌ சேவற்கொடியோனாகிய சுப்பிரமணியப் பெருமானின் இந்தத் தலத்தில், விழாக்கள் தோறும் சிவனாருக்குரிய ரிஷபக் கொடியே ஏற்றப்படுகின்றது.

சத்தியகிரீஸ்வரப் பெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி தோறும் நடைபெறும் அன்னாபிஷேகம் காணக் கண் கோடி வேண்டும். சிவராத்திரி பெருவிழா பெரும் சிறப்பு. இத்திருக்கோயிலின் முன்பாக இருக்கும் சொக்க நாதர் கோயிலில் முதல் ஜாம பூஜை, கிரிவலப் பாதையில் இருக்கு பால்சுனை கண்ட நாதருக்கு இரண்டாம் ஜாமப் பூஜை, மலைமேல் இருக்கும் திருக்கோவில் ஸ்வாமிக்கு மூன்றாம் ஜாமப் பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சத்தியகிரீசருக்கு நான்கு ஜாமங்களிலும் பூஜை நடைபெறுகிறது. இப்படி கோயிலைச் சுற்றிலும் சிவத்தலங்கள் அமைந்திருப்பது பெரும் சிறப்பே.

பால்சுனை கண்ட நாதர், சித்தர்க‌ள் வழிபடும் பெருமான். நானறிந்து இவர் நடத்திய ஒரு உன்னத அற்புதத்தை மிக விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். இறைவனின் சாந்நித்யத்தை கண்முன் கண்ட அனுபவம் அது.

தென்பரங்குன்றம்
முருகனுக்குரிய விழாக்களில், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி மாதம் கந்தசஷ்டி பெருவிழா, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தைபூசம்(தெப்பத் திருவிழா), தை  கிருத்திகை, பங்குனி பிரம்மோற்சவம் போன்றவை பெரும் சிறப்பு. இவை தவிர, மாதந் தோறும் விழாக்கள் நடைபெறுகின்றன. தற்போது ஒவ்வொரு பௌர்ணமிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.  ஆடி கிருத்திகை தினத்தில் பெருமானின் திருவீதி உலா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கென்றே உள்ள மண்டபத்தில் மண்டகப்படியும் நடைபெறுகிறது.

மலையின் பின்னால், தென்பரங்குன்றத்தில், கல்வெட்டுக்களுடன் கூடிய குகைக் கோயில் உள்ளது. இறையுருவங்கள் சிதிலமான நிலையில் உள்ளன.

பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், முக்கிய நிகழ்வு, திருமுருகன் திருக்கல்யாணம். இதுவே  திருப்பரங்குன்றத்தில் பெரும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. இங்கு பங்குனி சுவாதி நக்ஷத்திரத்தில் திருக்கல்யாணமும், விசாகத்தன்று தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. திருக்கல்யாண தினத்தில், சுவாமியும் அம்பாளும் சந்திப்பு மண்டபத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வரவேற்று, எதிர்கொண்டு கோவிலுக்கு அழைத்து வருகின்றனர். அதன் பின்பே திருமஞ்சனம் ஆகி கன்னி ஊஞ்சல் நடைபெறுகிறது.  இறைவனின் திருமுன்பாக திருக்கல்யாணம் நடைபெற்று, பின், அன்றிரவு, சுப்பிரமணியர் வெள்ளி ஹௌதா யானை வாகனத்திலும், தெய்வானை அம்மை ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி, பதினாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பிரியா விடை கொடுக்கின்றனர். 'சொக்கர் ராத்தங்கார்' என்பதால் இரவே மதுரைக் கோயில் திரும்புகிறார். அற்புதமான நிகழ்வு இது.

திருப்பரங்குன்றம் அமைவிடம்:
மதுரையிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம், திருநகர் செல்லும் பேருந்துகளும், திருப்பரங்குன்றம் வழி செல்லும். புகைவண்டி நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகள், தங்குமிடங்கள் உள்ளது.

அன்பர்கள் இயலும் போது  இத்திருத்தலம் சென்று, முருகப்பெருமானின் திருவருள் பெற வேண்டுகிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

DEITY’S POSTURES IN TEMPLES ..ஆலயங்களில் இறைவனின் திருவடிவங்கள்


நம் பாரத தேசத்தில், நம் கலாசாரத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்பவை கோயில்கள். ஆண்டவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களின் சிறப்புகள் சொல்லில் அடங்குவதில்லை.

இறைவன் தூணிலும் துரும்பிலும் இருப்பவராயினும், ஆலயம் என்னும் உயரிய கட்டுமானத்தில் இறை சக்தியை பூரணமாக எழுந்தருளச் செய்து வழிபடுவதற்கு பல அருமையான காரணங்கள் இருக்கின்றன.

கோயில்களின் கலசங்களை ஸ்தாபனம் செய்யும் பொழுது, அவற்றின் அடியில், நவதானியங்கள், நவரத்தினங்கள் முதலியவற்றை வைத்து,அவற்றின் மேல் கலசஸ்தாபனம் செய்வார்கள். இந்தக் கலசங்கள், இடி விழுந்தால் அவற்றின் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவை. அக்காலத்தில், கோயில் கோபுரத்திற்கு மேல் வீடுகளின் உயரம் இருக்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் உண்டு.

அது போல், மூலஸ்தானத்தின் மேல் இருக்கும் விமானமும் பிரத்தியேகமான அமைப்பை உடையது. பிரபஞ்சத்தின் அதி உன்னதமான தெய்வீக சக்தியை ஈர்த்து நமக்கு அளித்து நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்  மகிமை பொருந்தியவை ஆலய விமானங்கள்.விமானங்களுள், தூங்கானை மாடம்(கஜபிருஷ்ட விமானம்), இந்திர விமானம் போன்ற பல அமைப்புகள் உண்டு.

அது போல், ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தங்களின்   வடிவங்களுக்கும் ஆழ்ந்த பொருளுண்டு. சிற்ப சாஸ்திரம், மிகவும் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு இறை மூர்த்தங்களுக்கும் பிரத்யேகமான ஆசன முறைகளை வடிவமைத்திருக்கிறது. இவற்றில் பல, யோகாசனத்திலும், நாட்டிய சாஸ்திரத்திலும் கையாளப்படுகின்றன.

இந்தப் பதிவில் , ஆலயங்களில் இறை மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கும்  பொதுவான‌ சில திருவடிவங்களைக் குறித்துக் காணலாம்.


ஸ்தானகம்
ஆலயத்தில் இறை மூர்த்தங்கள் சமஸ்திதியில் நின்று அருள் புரியும் திருவடிவையே 'ஸ்தானகம்' என்கின்றோம். இதை 'சமபாத ஸ்தானகம்' என்றும் கூறுவது வழக்கம். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நின்ற திருக்கோலத் திருமேனிகள் இவ்வாறே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஸ்ரீகுருவாயூரப்பனின் திருமேனி அழகான உதாரணம். இறைவன் திருமேனியில் எவ்வித வளைவுகளுமில்லாமல், சமச்சீராக இருக்குமாறு அமைப்பார்கள்.மிகுந்த வரப்பிரசாதியான அம்பிகை திருமேனிகளும் இவ்வாறு அமைந்திருப்பதைப் பார்க்கலாம். மிகுந்த கனிவோடு, வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கும் சாந்த மூர்த்தியாக இறைவன் எழுந்தருளுகிறார் என்பதன் வெளிப்பாடே  ஸ்தானகத் திருக்கோலம்.






லலிதாசனம்:
இறைமூர்த்தங்களைப் பொறுத்தவரை, ஆசனம் என்றாலே பீடத்தில் அமர்ந்துள்ள நிலை என்றே பொருள்படும். ஒரு  காலை மடித்து, பீடத்தில் நேராக ஊன்றி, பின் மறு காலை, சற்று மடித்தாற் போல் பக்கவாட்டில் வைத்து, சௌகரியமாக அமர்ந்தாற் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் திருவடிவே லலிதாசனம். பால கணபதியின் திருவடிவம், இந்த நிலையிலேயே அமைந்துள்ளது.புத்த பகவானின் திருவடிவங்கள் சிலவும் இந்த நிலையிலேயே அமைந்துள்ளன.


ஒரு காலை மடித்து நேராக ஊன்றி, மறுகாலை தொங்கவிட்டு, திருமேனி ஒரு புறமாக நளினமாக சாய்ந்து இருக்கும் திருக்கோலமும் லலிதாசன வடிவே. புத்தமத வழிபாட்டுக் கடவுள்களில் ஒன்றான, வசு தாராவின் திருவடிவம் இதற்கு உதாரணம்.




சுகாசனம்
இறைவனது திருமேனியில் எந்தவித வளைவுகளும் இல்லாமல், திருமேனி நேராக, எந்தப் புறமும் சாயாமலும் இருக்குமாறும், ஒரு காலை மடித்து, மறு காலை சாதாரணமாக தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் திருக்கோலத்திலும் இருக்கும் நிலையே சுகாசனம். இது பொதுவாக, சில சிவ,விஷ்ணு திருமேனிகளில் காணப்படுகிறது. சிவனாரின் திருவடிவங்களில் 'சுகாசன மூர்த்தி' என்ற திருவடிவம் மிகச் சிறப்புடையது. உமா தேவி, சிவாகமங்களது தத்துவங்களை உபதேசிக்குமாறு சிவனாரிடம் வேண்டிக்கொள்ள, அதற்கிணங்கி, சிவபெருமான் சுகாசனத்தில் அமர்ந்து உபதேசித்த திருக்கோலமே சுகாசன மூர்த்தி.சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் மூர்த்தங்களை வழிபடுவோர், வாழ்வின் எல்லா சுகங்களையும் அடைந்து இன்புறுவர்.



உத்குடிகாசனம்:
இறைவன் திருமேனி, ஒரு காலை நேராக மடித்து பீடத்தில் ஊன்றி, மறுகாலை நேராகத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் நிலையே உத்குடிகாசனம். இறைவன் திருமேனி நேராகவும் கம்பீரமாகவும் அமைந்திருக்கும். யோக தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீஅய்யனார் ஆகியோரது திருமேனிகள் இவ்வாறு அமைந்திருக்கக் காணலாம். மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய வழிபாட்டு முறைகள் மேற்கொள்ள வேண்டிய இறையுருவங்கள் என்பதைக் குறிக்கும் ஆசனம் இது என்று கூறப்படுகின்றது.







யோகாசனம்:

இரு கால்களையும் மடித்து, ஒன்றுக்கொன்று குறுக்காகவோ, நேராகவோ பீடத்தில் ஊன்றி அமர்ந்திருக்கும் நிலையே யோகாசனம். இரு பாதங்களும், திருமேனியின் உடலோடு யோகப்பட்டத்தால் பிணைக்கப்பட்டிருக்கும். வலது கரம் ஞான அல்லது சின்முத்திரையோடும், மற்ற திருக்கரம், மணிக்கட்டு முழங்காலில் ஊன்றி, தண்டத்தைத் தாங்குவது போன்ற நிலையிலும் அமைந்திருக்கும். வாழ்வின் குறிக்கோளான பரம்பொருளோடு ஒன்றிணைந்த பேரானந்த நிலையை அருளும் மூர்த்தம் என்பதைக் குறிக்கும் ஆசனமே இது. சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருமேனி இதற்கு மிகச் சரியான உதாரணம். யோகிகளின் திருச்சந்நிதி சிலவும் இம்முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.யோகிகளின் மனநிலை மிகுந்த ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் பேரானந்த நிலை குறித்த ஒருமித்த குறிக்கோளோடு இயங்குவது. பரம்பொருளோடு ஒன்றிணைந்த பேரானந்த நிலையில் அவர்களது நிலை(யோகநிலை) யோகாசனத்தில் அமர்ந்திருப்பதாகவே காணப்படுகின்றது.




பத்மாசனம்:
அநேகமாக, அனைவரும் அறிந்த ஆசனம் இது. தலை உச்சியில் அமைந்துள்ள சஹஸ்ர தள பத்மத்தை குறிப்பதான ஆசனம் இது. இதை கமலாசனம் என்றும் அழைப்பதுண்டு. இறைத் திருமேனி, தன் இரு கால்களையும் இரண்டு தொடைகளின் மீதும் குறுக்காக மடித்தபடி அமர்ந்திருக்கும் திருக்கோலமே இது.
காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன், கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் ஆகிய இருவரும் பத்மாசனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றார்கள். இறை மூர்த்தம் பிரபஞ்ச சக்தியின் ஒருங்கிணைந்த வடிவம் என்பதை உணர்த்தும் திருக்கோலம் இது.






வீராசனம்:
ஒரு காலை மடித்து, மறு தொடை மீது வைத்து மறு காலை நேராகத் தொங்கவிட்டாற் போல அமைந்திருக்கும் திருவடிவே வீராசனம். திருமேனி, நேராகவும் கம்பீரமாகவும் அமைந்திருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் திருமேனி, ஸ்ரீவாராஹியின் திருமேனி இந்த திருவடிவிற்கு உதாரணம். இந்தத் திருவடிவம், ஞானம், வாக்குவன்மை,எடுத்த காரியங்களில் துணிவாக ஈடுபட்டு செயலாற்றும் தன்மை போன்றவற்றை அருளும் மூர்த்தங்கள் என்பதை குறிப்பதாகும்.

இறை மூர்த்தங்கள் திருக்கரங்களில் இருக்கும் முத்திரைகளுக்கும் விசேஷமான அர்த்தங்கள் உண்டு. அவற்றைக் குறித்து பின்னொரு பதிவில் காணலாம்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 13 ஜூலை, 2013

AANI THIRUMANJANAM (14/7/2013)...ஆனி திருமஞ்சனம்

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டு ஆர்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை)
'திருமஞ்சனம்' என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.  இதை, திரு+மஞ்சனம்(புனித நீராட்டுதல்) எனப் பிரிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் இறை மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும், சில குறிப்பிட்ட நாட்களில், அபிஷேகம் என்னும் உபசாரம் விரிவுபடுத்தப்பட்டு, மஹாஅபிஷேகமாக, திருமஞ்சனமாக நடத்தப்படுகிறது.  கலச ஸ்தாபனம் செய்து, மந்திர உச்சாடனங்களால், கலச நீருக்கு தெய்வீக அதிர்வலைகள் ஊட்டப்படுகின்றன. அதன் பின்னாக, இறைமூர்த்தங்களுக்கு, பலத்த வேதகோஷத்துடன், சகல அபிஷேக திரவியங்களாலும், நிறைவாக, கும்ப நீர் கொண்டும் நன்னீராட்டு நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தன்று, இப்பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் முகமாக திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானுக்கு, பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் திருத்தலமாக விளங்கும், தில்லை(சிதம்பரம்)யில் நடைபெறும் திருமஞ்சனம், அவசியம் தரிசித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்று. ஆடல் வல்லானுக்கு அன்றைய தினம் அனைத்து விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டும் அற்புதமாகத் திருமஞ்சன வைபவம் நடைபெறுகிறது.

இறை மூர்த்தங்களுக்கு திருமஞ்சன வைபவங்கள் நிகழ்த்துவதன் காரணம்:
பொதுவாகவே, அன்றாட வாழ்வில் நமக்கு நாம் செய்து கொள்ளும் செயல்களை (குளிப்பது, ஆடை உடுப்பது, உண்பது போன்றவை), இறைவனுக்கு உபசாரங்களாக செய்து சமர்ப்பிக்கின்றோம். ஆயினும், நீராட்டுதல் என்பது, பக்தனுக்கு, இறைவனோடு பரிபூரண மன ஒருமைப்பாடு விளைவிக்கும் செயலாகவே அமைந்திருக்கிறது.

இறைவனுக்கு பல்வேறு விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வதில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் மறைந்துள்ளன. அவற்றை, ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இப்போது பார்க்கலாம்.

ஆன்மீக ரீதியாகப் பார்க்கப் போனால், இறைவனுக்கு ஒவ்வொரு வித அபிஷேகப் பொருட்களைச் சமர்ப்பிப்பதனால், ஒவ்வொரு விதப் பலன் கிட்டுகிறது. அநேகமாக, இதை அனைத்து ஆலயங்களிலும் எழுதியே வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சற்று யோசித்தோமானால், இதில் மறைந்துள்ள மறைபொருட்களை உணர முடியும்.

உதாரணமாக, பால் அபிஷேகம் செய்தால் சுகம் கிட்டும் என்பது பலன். பால் என்பது மன அமைதியைக் கொடுக்கக் கூடியது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சமயங்களிலும், சிறிது பால் அருந்தினால், அது உடனடியாக, மனதுக்கு ஒரு வித அமைதியைத் தருவதை உணர முடியும். அபிஷேகம் செய்த பாலை பிரசாதமாக அருந்தும் போது, அது, இறைவனின் தெய்வீக அலைகளையும் தாங்கி வருவதால், மனம் அபரிமிதமான சாந்தியை அடைகிறது. உள்ளத்தின் அமைதியைக் காட்டிலும், உண்மையான சுகம் வேறெது?.

விபூதி அபிஷேகம் ஞானத்தைக் கொடுக்கும், நல்லறிவைப் பெருக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு விபூதியை அபிஷேகிக்கும் போது, 'முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்' எனும் நிலையாமைத் தத்துவம் நினைவுக்கு வருகிறது. சிறு பொறியெனத் தோன்றும் அந்த நினைவு, முடிவில் தெளிந்த ஞானத்தீயை வளர்க்கிறது.

உண்மையில், ஆலய மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் நடத்துவது, நம் உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு நாம் செய்ய வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்துவதே. உள்ளத் தூய்மையை நாம் அடைய வேண்டியே அபிஷேக ஆராதனைகள் நடத்துகிறோம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தோமானால், நம் ஆலயங்களில் அமைந்திருக்கும் சிலா மூர்த்தங்கள், பஞ்சலோகத்தாலோ, சிலை அமைப்பதற்கேற்ற தகுதிகள், லட்சணங்களுடன் அமைந்திருக்கும் கற்களாலோ, நவபாஷாணத்தாலோ அமைக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, திருவேங்கடமுடையான் திருமேனி, 'சிலாதாரணம்' என்னும் 250 கோடி வருடங்கள் பழமையான கற்பாறைகளால் உருவாக்கப்பட்டது. இத்தகைய கற்பாறைகளை, திருப்பதிக்கருகில் இன்றும் காணலாம். பழனி திருமுருகன் திருமேனி, நவபாஷாணாத்தால் உருவாக்கப்பட்டது.  இத்தகைய திருமேனிகளுக்கு அபிஷேகங்கள் நிகழும் போது, முதலில், அவை, எண்ணை,   பஞ்சகவ்யம் முதலியவற்றால் முதலில் சுத்திகரிக்கப்பட்டு பின், பால் முதலானவற்றால் அபிஷேகிக்கப்படுகின்றன. அந்த அபிஷேக தீர்த்தத்தை பிரசாதமாக உட்கொள்ளும் போது, அந்த சிலைகளில் மறைந்திருக்கும் மருத்துவத் தன்மையும் கிடைக்கிறது. பிரசாத தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாக மாறுவதன் மகத்துவம் இதுவே.

மேலும் அபிஷேகங்கள் செய்வதால், அந்தத் திருமேனிகள், கால மாறுபாட்டால் ஏதேனும் மாறுதலுக்கு உள்ளாகாமல் இருக்கின்றன. கற்பாறைகள், மற்றும் உலோகங்களின் அணுக்கள், காலமாறுபாட்டாலும், உஷ்ணத்தாலும் விரிவடையும் தன்மை பொருந்தியவை. அத்தகைய   திருமேனிகளுக்கு அபிஷேகங்கள் செய்யும் போது, அவை குளிர்ச்சியடைவதால், அந்த மாறுபாடு தவிர்க்கப்படுகிறது.

ஆனந்த நடனத்தின் சிறப்பு:

தில்லையில் நடராஜப் பெருமான் நிகழ்த்தும் ஆனந்தத் திருநடனத்தின் சிறப்புகள் குறித்து, அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம் பதிவில் விளக்கியிருக்கிறேன். தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கும் பொருட்டு, அவர்கள் வேள்வி செய்து ஏவிய பூதத்தை அழித்து, அகில உலகுக்கும் நலமளிக்க வேண்டி நடந்த இந்த ஆனந்த தாண்டவம், பின்னர், ஆதிசேஷனின் அவதாரமாகிய பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாத முனிவர் ஆகியோரது பிரார்த்தனைக்கு இணங்கி, தில்லையில் மார்கழி திருவாதிரை நன்னாளில் மீண்டுமொரு முறை நிகழ்த்தப்பட்டது.

நடராஜப் பெருமானின் ஒவ்வொரு திருநடனமும் தனிச்சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல. நுணுக்கமான ஆன்மீக ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவரது தாண்டவங்கள் அனைத்தும்(ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாரத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம்) யோக முறையில் குண்டலினியானது, நம் உடலில் சூக்ஷ்மமாக அமைந்துள்ள ஆதாரச் சக்கரங்கள் ஒவ்வொன்றிற்கும் செலும் போது நம் மூச்சுக் காற்று அசையும் நிலைகளைக் குறிப்பனவாக அமைந்துள்ளன (இது சப்தவிடங்கத் திருத்தலங்களில் நடத்திய திருநடனங்களின் மறைபொருளெனவும் கூறுவார்கள்).

ஆனந்த தாண்டவம், சஹஸ்ராரத்தை குண்டலினி அடையும் போது நாம் காணும் பேரானந்தத்தைக் குறிப்பது. ஆகவே, அது பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தெரிவிப்பதாகக் கருதப்படுகின்றது.

சிவனாரின் எட்டு விதமான வீரச்செயல்களின்    அம்சமும் ஆனந்தத் திருநடனத்தில் ஒருமை அடைகிறது. இந்த எட்டு வித வீரச்செயல்களும், யோக முறையில், குண்டலினி ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்தை அடையும் போதும், சாதகனுக்கு ஏற்படும் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம் (எமது ஆறாதாரமும் மூலாத‌ரமும்....பாகம் 3, மணிபூரகம் பதிவில் இது குறித்துக் காணலாம்).

ஆகையால் எம்பெருமானின் ஆனந்தத் திருநடனம், சொல்லில் அடங்கா சிறப்புகள் உள்ளது. ஆகவே, ஆனந்த நடனம் நிகழ்த்தப்பட்ட தில்லையில் ஆனி திருமஞ்சனம் மற்ற எல்லா திருத்தலங்களையும் விட சிறப்புப் பெற்று திகழ்கிறது.

ஆனி திருமஞ்சனத்தின் சிறப்பு:
சிவனார் உஷ்ணமான திருமேனியை உடையவர் என்று அறியப்படுகின்றார். ஆகவே, குளிர்ச்சி பொருந்திய திருக்கயிலை அவரது வாசஸ்தலமாக அறியப்படுகின்றது. 'அபிஷேகப் பிரியர்' என்றே போற்றப்படும் சிவனார், தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் உளங்கனிந்து, வேண்டுவன அருளும் அற்புதன். கோடையின் கடும் வெப்பம் மறைந்து, இதமான தட்பவெப்பம் துவங்கும் காலம் ஆனி மாதமே. ஆகவே, அகில உலகுக்கும் நாயகனான சிவனாரின் திருமேனியை குளிரச் செய்யும் பொருட்டு, வெம்மையின் நாயகனான, சூரிய பகவான் ஆதிபத்தியம் பொருந்திய நட்சத்திரங்களுள் ஒன்றான  உத்திர நட்சத்திரத்தில், திருமஞ்சனம் செய்விக்கப்படுகின்றது. பேரொளி மயமான இறைவனது திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம்.

பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் ஆனந்த திருநடனம் புரியும் தில்லை நடராஜப் பெருமான், ஆனி மாதமான தக்ஷிணாயன புண்யகாலத்தில் திருமஞ்சன வைபவம் கண்டருளுகிறார். தில்லையில் மட்டுமின்றி, திருவாரூர், உத்தரகோச மங்கை, ஆகிய திருத்தலங்களிலும், இந்த வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. 'திருத்தவத்துறை' என்ற இலால்குடித் தலத்திலும் ஆனந்த நடராஜரின் திருமஞ்சன வைபவம் சிறப்புற நடத்தப் பெறுகிறது.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறு தினங்களில் மட்டுமே, நடராஜப் பெருமானை சிற்றம்பலத்தை விட்டு வெளியே தரிசிக்க இயலும்.

ஆனி திருமஞ்சன  தினத்தன்று, தில்லை நடராஜப் பெருமானின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும்.  அதன் பின், இறை மூர்த்தங்களை, திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். நூறு தீக்ஷிதர் பெருமக்களால் ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெற்று, அதன் பின், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு, பெருமளவிலான அபிஷேகத் திரவியங்களால், மஹா அபிஷேகம் நடைபெறும். நிறைவாக, பல்வேறு விதமான மலர்களால், புஷ்பாபிஷேகமும் நிகழ்த்தப் பெறும்.  அதன் பின், அலங்காரம் முடிந்து, மஹா தீபாராதனை ஆன பின், அம்மையும் அப்பனும் ஆனந்த திருநடனம் புரிந்தவாறே சிற்சபைக்குச் செல்லும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இது பெரும் புண்ணியங்களை அளிக்க வல்லது.

இதைத் தரிசிப்போர் வேண்டும் வரங்களையும் பிறவிப் பயன்களையும் பெற்று இன்புறுவர் என்று புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை தில்லையில் சென்று தரிசிக்க இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனம் உருகித் துதித்து வணங்கினாலும், சிவனார் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பது நிச்சயம்.

ஆனி திருமஞ்சன தரிசனம் கண்டு, இறையனார் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 6 ஜூலை, 2013

AASHADA NAVARATHRI (9TH JULY 2013 TO 18th JULY 2013).....ஆஷாட நவராத்திரி


'சக்தி வழிபாடு' தொன்று தொட்டு நம் நாட்டில் நிலவி வருவது. நம் உடலில் சக்தி இல்லையேல் செயல்பாடு ஏது?. இவ்வுலக இயக்கமும் ஏது?. எங்கும் நிறைந்த சக்தியின் ஸ்வரூபத்தை, நம்மைப் பெற்றெடுத்த அன்னையாக, இவ்வுலகனைத்திற்கும் தாயாகக் கருதி வழிபடுகின்றோம்.

ஒவ்வொரு வருடமும், சக்தி வழிபாட்டுக்கென சில குறிப்பிட்ட தினங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அந்த சிறப்பு வாய்ந்த தினங்களில், பூவுலகில் அதிக அளவில் அம்பிகையின் அருட்பேரலைகள் பிரகாசிக்கின்றன. அந்த தினங்களில் செய்யப்படும் வழிபாடு அதிக பலனளிக்கும் என்பதாலேயே அந்த குறிப்பிட்ட தினங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அம்பிகையைப் போற்றுவதெற்கென அமைந்த தினங்களில் மிக முக்கியமானவை நவராத்திரி தினங்கள். ஒரு வருடத்தில், நான்கு நவராத்திரிகள், பருவ கால மாறுதலை ஒட்டி, கொண்டாடப்படுகின்றன. வசந்த காலமான சித்திரை மாதத்தில், ஸ்ரீராம நவமியை ஒட்டி வசந்த நவராத்திரியும், தக்ஷிணாயனப் புண்யகாலம் துவங்கும் ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும், கார்காலத் துவக்கமான புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,  வேனிற்காலத் துவக்கமான, உத்தராயணப் புண்யகாலம் துவங்கும் தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன.

இந்த வருடம் ஆஷாட நவராத்திரி, வரும் செவ்வாய் கிழமை(ஜூலை 9, 2013) துவங்கிக் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீலலிதாம்பிகையின் சேனைத் தலைவியாகிய வாராஹி தேவியைப் போற்றும் விதமாகவே இந்த ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வட இந்திய நாட்காட்டிகளின்படி, ஆஷாட மாதம் ஆனி மாத அமாவாசைக்கு மறு நாளே வருவதால், அன்று துவங்கி இது அனுசரிக்கப்படுகின்றது.

நாம் முன்பே வசந்த நவராத்திரியைப் பற்றியும், சியாமளா(அ)மாதங்கி நவராத்திரியைப் பற்றியும் பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் வாராஹி தேவியின் மகிமைகளையும், இந்த நவராத்திரியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் காணலாம்.

வாராஹி தேவியின் மகிமைகள்:
வராஹ(பன்றி)யின் முகம் தாங்கியவளாதலால் வாராஹி எனும் திருநாமம் கொண்ட இந்த அன்னை, தாந்த்ரீக முறைப்படி வழிபாடு செய்ய‌ப்படும் தெய்வங்களில் மிக முக்கியமானதொரு சக்தி ஆவாள்.இந்த அம்பிகை வராக மூர்த்தியின் சக்தியின் அம்சமாகவும் போற்றப்படுகின்றாள். தாந்த்ரீக உபாசகர்களால் மிகவும் போற்றிக் கொண்டாடப்படும் சக்தி வாராஹி. 'வாக்குக்கு வாராஹி' என்பது மிகப் பிரபலமானதொரு வாக்கியம். வாராஹியை உபாசிக்க, வாக்பலிதம் ஏற்படும் என்பதும், அவ்வாறு உபாசிக்கிறவர்களிடம் வெற்றி பெறுவது என்பது இயலவே இயலாது என்பதும் உண்மை. மேலும் வாராஹி வழிபாட்டில் நேரம் தவறாமை என்பது மிக முக்கியமானதொரு அம்சமாகும்.

ஏராளமாய்ச் செல்வம் தன்மடியில் ஏற்றவளாம்
வாராஹி வாராஹி வாராஹி என்றே உன்னை
சீரான அன்புடன் மனமுருகி நான் அழைத்தால்
வாராது இருப்பாளோ வாராஹி எனும் என் தாய்(நன்றி:பழனி திரு.பால இரவிச்சந்திரன்)

என்று கோடானு கோடி பக்தர்கள் போற்றித் தொழுதிடும் வாராஹி தேவி, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் தாந்த்ரீக ரூபமாவாள். ஸ்ரீலலிதாம்பிகையின் பஞ்ச பாணத்தினின்றும் தோன்றியவள். தேவியின் கிரியா சக்தியின் ஸ்வரூபம்.

ஸ்ரீலலிதாம்பிகையின் சக்தி சைன்யத்தின்(போர்ப்படைகளுக்கு தண்டம் என்றும் பெயர், தண்டநாயகர் என்பது சேனாதிபதியைக் குறிக்கும்) தலைவியானதால் தண்டினீ தேவி என்றும், தண்டநாதா என்றும் தந்த்ரிணீ என்றும் போற்றப்படும் வாராஹி தேவி, பண்டாசுர வதத்தின் போது, கிரிசக்ரத் தேரில் (ஐந்து தட்டுக்களாலான தேர்)ஏறி அம்பிகையைப் பணிந்து,  சேனைகளை வழிநடத்தினாள். இதை,

 'கிரிசக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா'  என்று, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்  போற்றுகிறது.

விசுக்ர ப்ராணஹரண வாராஹீவீர்ய நந்தி தாயை நம: என்னும் திருநாமம், தண்டினீ தேவி செய்த விசுக்ர வதத்தால் அம்பிகை மகிழ்ந்தாள் என்று உரைக்கின்றது. விசுக்ரன், பண்டாசுரனின் சகோதரன்.

சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், ஜீவனின் அஞ்ஞான வடிவே விசுக்ரன். ஜீவனின் அறிவை இழக்கச் செய்பவன். அவனை வீழ்த்துகிறாள் அன்னை. இது போல் சாதகர்களுக்கு, அவர்களின் யோக சாதனைகளில் நேரும் பேரிடர்களை மாய்க்க வல்லவள் வாராஹி. பெரும் ஆபத்துகளில் இருந்து பக்தர்களைக் காப்பவள்.

அம்பிகையின் திருக்கோலம், சங்கு, சக்ரம், கதை, பத்மம், உலக்கை, கலப்பை(ஏர்) ஆகியவற்றுடன் கூடிய ஆறு திருக்கரங்களுடன் கூடியதாக, வீராசனத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதாகவே பெரும்பாலான புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாராஹி தேவிக்கு 'வார்த்தாளி' என்ற திருநாமமும் உண்டு. இது தமிழ் வார்த்தையான 'ஒறுத்து அழி' என்பதிலிருந்து வந்ததாகக் கருதுகிறார்கள்.   புலன்களினால் ஏற்படும் தூண்டுதலில் இருந்தும் தீமைகளில் இருந்தும் சாதகனைக் காப்பவள் வாராஹி அன்னையே. இந்து தர்மத்தில் மட்டுமல்லாது, பௌத்தத்திலும் இதன் காரணமாகவே அன்னை போற்றப்படுகின்றாள். புத்த மதத்தில், வஜ்ரவாராஹி, ஹீருகா, மற்றும் மரீசி ஆகிய மூன்று விதமான திருவடிவங்களில் அன்னை ஆராதிக்கப்படுகின்றாள்.

வாராஹி தேவி, பூமி சம்பந்தமான பிரச்னைகள் எதுவாயினும் அதை அறவே நீக்கும் சக்தி உடையவள். வீடு, நிலம் ஆகியவை வாங்குவது, விற்பது ஆகியவற்றில் ஏதேனும் பிரச்னைகள், வாழும் வீட்டில் நிம்மதியில்லாமல் ஏதேனும் தொந்தரவுகள் முதலியவை இருப்பின் , வாராஹியை முறையாகத் தொழுது வர கட்டாயம் அகலும். மேலும் விரலி மஞ்சளை, 21,51,108 ஆகிய எண்ணிக்கையில் வாங்கி, மஞ்சள் கயிறில் (தடிமனான நூலை, மஞ்சளில் நனைத்தும் கட்டலாம்) மாலையாகக் கட்டி, செவ்வாய் கிழமைகளில் வாராஹிக்கு அணிவிக்க, அற்புத நற்பலன்கள் நிகழ்வதைக் காணலாம். இது என் சொந்த அனுபவம்.

பஞ்சுத் திரியை, குங்குமத்தில் தோய்த்து, அதை உபயோகித்து தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றி வர, குடும்பத்தில் மனக்கசப்புகள் மறைந்து அமைதி நிலவும். இது வாராஹி அன்னைக்கு மிக உகந்த பரிகாரமாகும்.

அம்பிகைக்கு உகந்த மலர் செவ்வரளி. அம்பிகை, காய் கனிகளை விட, பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கிழங்கு வகைகள். குறிப்பாக, மாகாளிக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, பனங்கிழங்கு முதலியவற்றையே விருப்பமுடன் ஏற்கிறாள். கறுப்பு உளுந்தால் செய்யப்படும் வடை, பானகம் முதலியவை பிரதான நிவேதனம்.

தென்னாட்டில், தனிச் சிறப்போடு கூடிய அன்னையின் வழிபாடு தற்போதே பிரபலமடைந்து வருகிறது. இதற்கு முன்பாக, வெகு காலத்திற்கு முன்பே, சப்தமாதர்களுள் ஒரு சக்தியாக அன்னை சிறப்பிக்கப்பட்டு வழிபடப்படுகின்றாள்.

பிராமி, மாகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்த மாதர்கள். அநேகமாக, எல்லா சிவாலயங்களிலும் தேவியின் ஆலயங்களிலும் சப்தமாதர்களின் திருவடிவங்களைக் காணலாம். அமர்ந்த திருக்கோலத்தில், ஆயுதங்கள் தாங்கிய திருவடிவங்களாக, ஒரே கல்லிலோ அல்லது, தனித்தனியாகவோ சப்தமாதர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

மதுரை மீனாட்சி, சியாமளா தேவியின் திருவடிவாக அறியப்படுவதைப் போல், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன், வாராஹியின் அம்சமாகவே அறியப்படுகின்றாள். அங்கு சந்தன அபிஷேகத்தின் போது அம்பிகையின் தண்டினி அம்சம் மிக அற்புதமாக வெளிப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரியின் முக்கியத்துவம்:
பெரும்பாலும், சாக்த உபாசகர்களாலும், 'வாமாசாரம்' எனப்படும் தாந்த்ரீக முறைகளைப் பின்பற்றுவோராலுமே ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது எனினும் வடநாட்டில் இது முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றாகும். வாராஹி நவராத்திரி, காயத்ரி நவராத்திரி, குப்த நவராத்திரி என்றும் வழங்கப்படும் இது, ஹிமாசலப் பிரதேசத்தில், குஹ்ய நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கு அசைவ உணவுகளை முழுவதும் விலக்கி, குழுக்களாகச் சேர்ந்து அம்பிகையை இந்த தினங்களில் வழிபடுகின்றனர்.

ஆஷாட நவராத்திரி தினங்களில், அம்பிகையின் திருவுருவப் படத்துக்கோ, விக்ரகம் இருப்பின் விக்ரகத்துக்கோ சிவப்பு வண்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களை அணிவித்து, வாராஹி துதிகளைக் கூறி, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். இயன்றவர்கள் கலச ஸ்தாபனம் செய்தும் பூஜை செய்யலாம்.

வாராஹி வழிபாடு முறைப்படி செய்ய வேண்டிய ஒன்றாகும். ஆகவே முறையாகப் பூஜிக்க எண்ணுபவர்கள், குருவின் வழிகாட்டுதலோடு செய்ய வேண்டும்.

துர்கா சப்த சதீ பாராயணம், ஹோமம், சண்டி ஹோமம், தேவி பாகவத   பாராயணம்  முதலியவை அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீலலிதோபாக்கியானம் கூறும் ஸ்ரீநகர வர்ணனையில், வாராஹி தேவியின் இருப்பிடம் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.

'மரகத கற்களால் இழைக்கப்பட்ட தூண்களுடைய மணி மண்டபத்தின் நடுவிலுள்ள‌, தங்கமயமான பீடத்தின் மேல் மலர்ந்த தாமரை மலர் ஒன்று இருக்கிறது. அதன் மத்தியில், மந்த்ர ராஜம் என்ற இடத்தில் ஸ்ரீமஹாவாராஹி தேவி கொலுவிருக்கிறாள்.

வராஹ முகத்துடனும், தாமரை இதழ்களையொத்த திருவிழிகளுடனும், தங்கமயமான மேனியுடன், சந்திரனை சிரத்தில் தரித்து, வெளிர் சிவப்பு வஸ்திரம்  அணிந்து, மிகுந்த அழகுடன், செந்நிற மலர்களாலான மாலைகள் அணிந்து,கலப்பை, உலக்கை, சங்கம், சக்கரம், பாசம், அங்குசம், அபயம், வரதம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் தாங்கி அருளும் வாராஹி தேவி, கெட்டவர்களுக்கு பயத்தைத் தரக் கூடியவளாகவும், நல்லவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவளாகவும் விளங்குகிறாள்.'

வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் தடைகளையும் நீக்கி, நிம்மதியையும் ஆனந்தத்தையும் பெற, ஆஷாட நவராத்திரி தினங்களில் அன்னையை வழிபட்டு அவள் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.