நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 21 நவம்பர், 2013

SRI LAKSHMI GURUVARA VIRATHAM.. PART 2..ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம்..பகுதி 2

அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!

ஸ்ரீலக்ஷ்மி புராணம்:

இதை குருவார விரத பூஜை நிறைவுற்றதும் படிக்க வேண்டும். குருவார விரத பூஜை பற்றிய தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்..

ஸ்ரீலக்ஷ்மி புராணத்தை இயற்றியவர், ஸ்ரீபலராம தாஸர். இவர் ஒரிய மொழி இலக்கியத்தின் தன்னிகரற்ற பெரும் கவிஞர்.

இந்தப் புராணம், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உயரிய நெறியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ஒரிசாவில் இருக்கும் பூரி ஜகந்நாதர் ஆலயத்தோடு தொடர்புடையதாகவும் அமைந்துள்ளது. தெய்வங்கள், மானிடர்களைப் போல் லீலைகள் புரிவது எல்லாம், நமக்கு நல்வழி காட்டவே அல்லவா!!.. இந்த பேருண்மையை உணர்த்தும் விதமாக, ஸ்ரீஜகந்நாதராகிய கிருஷ்ண பரமாத்மா நடத்தியதொரு லீலையே இந்தப் புராணம். இது, ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கருணையை விளக்குவதாக அமைந்திருப்பதால், ஸ்ரீலக்ஷ்மி புராணம் என்றே வழங்கப்படுகின்றது.

ஸ்ரீலக்ஷ்மி புராணத்தின் சாரத்தை இங்கு தந்திருக்கிறேன். பூஜையின் நிறைவில் இதைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும்.

நாரத முனிவரும், பராசர முனிவரும், ஒரு நாள் இணைந்து தேச சஞ்சாரம் மேற்கொண்டனர். அப்போது இருவரும் ஒரு கிராமத்தின் வழியாக வருகையில், அங்கு அனைவரும் எவ்வித பேதமும் இன்றி இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதித்து பூஜைகள் செய்வதைப் பார்த்தனர்.

அப்போது நாரதர், பராசரரிடம், 'இன்று என்ன விசேஷம்?' என்று வினவ, 'இன்று (வட இந்தியர்களின்) மார்கழி மாத  குரு வார லக்ஷ்மி விரதம்' இது என்று கூறி விட்டு, இந்த விரதம் தோன்றியதைப் பற்றி விவரித்துக் கூற ஆரம்பித்தார்.

ஒரு நாள் லக்ஷ்மி தேவி, ஜகந்நாதரிடம், 'இன்று என் விரத தினமானதால் (அன்று வியாழக்கிழமை, வட இந்தியர்களுக்கு, வியாழக்கிழமையே, ஸ்ரீலக்ஷ்மி பூஜைக்கு உகந்த தினம்), தேச சஞ்சாரம் செய்து விட்டு வருகிறேன்!' என்று அனுமதி கேட்டாள். ஸ்ரீலக்ஷ்மி தேவியின் மூலமாக ஒரு லீலையை நடத்தத் திட்டமிட்டிருந்த  பெருமாளும் அதற்கு அனுமதித்தார். அதன் பின், ஒரு முதிய சுமங்கலி உருவத்தில், தேவி, தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினாள். முதலில் ஒரு வணிகரின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு விரதத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. அதைக் கண்ட தேவி, அந்த வணிகரின் மனைவியிடம், விரதம்  மேற்கொள்ளும் முறைகளை உபதேசித்து, அவ்வாறு விரதமிருப்போருக்கு அஷ்ட ஐச்வரியங்களும் கிடைக்கும் என்று அருளினாள். 

மேலும், விரதம் இருக்கும் காலத்தில், மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் (வீட்டையும் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். சமையல் பாத்திரங்களை சுத்தமாகத் தேய்த்துக் கழுவ வேண்டும், படுக்கையை நேராக மடித்து வைக்க வேண்டும், கணவனிடம் பிரியமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும், வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள்).

அதன் பின், லக்ஷ்மி தேவி,தாழ்த்தப்பட்ட இனம் என்று அந்தக் காலத்தில் அறியப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இல்லத்திற்குச் சென்றாள். ஸ்ரியா என்ற பெயருடைய அந்தப் பெண், அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள்.  தன் பக்தியின் சக்தியால், ஸ்ரீலக்ஷ்மி தேவியை அடையாளம் கண்டு கொண்ட அந்தப் பெண்,  தேவியை இன்முகத்துடன் வரவேற்று, தன் பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டினாள்.

மனமகிழ்ந்த லக்ஷ்மி தேவி, அவள் கோரிய வரங்களை அளித்து, அவள் அன்போடு அளித்த நிவேதனங்களையும் ஏற்றுக் கொண்டாள்.

இதை அறிந்த, லக்ஷ்மி தேவியின் மைத்துனர் பலராமர், மிகக் கடுமையான கோபம் கொண்டார், அவர், ஜகந்நாதரிடம், ' உன் மனைவி, எப்படி அவர்களின் இல்லத்திற்குச் சென்று உணவு ஏற்கலாம்?' என்று கடிந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட ஸ்ரீஜகந்நாதர், லக்ஷ்மி  தேவியை, இல்லத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை.  மன வேதனையடைந்த‌ லக்ஷ்மி தேவி, தன் தந்தையின்(வருணன்) இல்லத்திற்குச் சென்றாள். செல்லும் முன்பு, ஸ்ரீஜகந்நாதரும், பலராமரும் உண்ண உணவும், நீரும் இல்லாமல், பன்னிரண்டு ஆண்டுகள் துன்புறுவார்கள் என்று சாபமிட்டு விட்டுச் சென்றாள். அதன்படி, லக்ஷ்மி தேவி விலகியதும், ஜகந்நாதரும், பலராமரும், மிகவும் துன்பங்கள் அனுபவித்தனர். அதன் பின், லக்ஷ்மி தேவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக, ஸ்ரீலக்ஷ்மி தேவி, அவர்களை மன்னித்து, தம் இல்லம் சேர்ந்தார்.

இந்தப் புராணத்தைப் படித்தாலும் கேட்டாலும், பாவங்கள் அனைத்தும் நீங்கும். வெற்றிகள் குவியும். கோடிக்கணக்கான பசுக்களைத் தானம் செய்த பலன் கிட்டும். தொடர்ந்து இந்தப் புராணத்தைப் பாராயணம்  செய்பவர்கள், திருமகள் அருளால் முக்தியை அடைவார்கள்.

இவ்வாறு, பராசரர், நாரதருக்கு எடுத்துரைத்தார்.

ஸ்ரீலக்ஷ்மி தேவியைப் பூஜித்து, வேண்டும் வரங்களைப் பெற்று, 

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

SRI LAKSHMI GURUVARA VIRATHAM PART 1....ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம் பகுதி 1


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!..

நாம், நம் பாரத நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் விரதங்கள் பற்றித் தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில், இந்தப் பதிவில், மஹாராஷ்டிரா, ஒடிசா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்படும் 'ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம்' பற்றிக் காணலாம். ஆந்திராவின் சில பகுதிகளிலும்(விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் முதலிய பகுதிகள்) இது கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்த விரதம் குறித்து 'ஸ்ரீபத்ம புராணத்தில்' கூறப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். வட இந்தியர்கள், இந்த விரதத்தை மிகவும் சிரத்தையுடன் செய்கிறார்கள்.

இந்த விரதம்,நம் கார்த்திகை மாதம், வட இந்தியர்களின் மார்கழி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் செய்யப்படுகின்றது. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து வியாழக்கிழமைகள்  செய்கிறார்கள்.

இவ்வருடம் இந்த விரதம், நவம்பர் 21, நவம்பர் 28, டிசம்பர் 5, டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் செய்யப்படுகின்றது.

இந்த பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெறலாம். இம்மாதத்தின் அனைத்து வியாழக்கிழமைகளிலும் பூஜை செய்து, பின், வருட முழுவதும், வியாழக் கிழமையில் விரதக் கதையை மட்டும் படிக்க வேண்டும்.

விரதம் அனுசரிக்கும் விதம்:

விரத தினத்தில் அதிகாலையில்  எழுந்து, நீராடி,  பூஜைக்கு அமரவும். 

1.ஒரு சுத்தமான இடத்தில் சாணமிட்டு மெழுகி, ஸ்வஸ்திக் கோலம், ரங்கோலி போட்டு, ஒரு பலகையை அதன் மேல் வைக்க வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் கோலமிட வேண்டும். பலகையின் மேல் கோதுமையைப் பரப்பி, அதன் மேல் மஞ்சள் குங்குமத்தால் கோலமிடவும்.

2.ஒரு தாமிர/செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதனுள், அருகம்புல், கொட்டைப் பாக்கு, நாணயம் போட வேண்டும்.

3. ஐந்து வித  மரக்கிளைகள், சின்ன அளவில் கலசத்தினுள் செருக வேண்டும். மா,பலா, ஆல், அரசு, அத்தி மரக் கிளைகளை வைக்கலாம். வேறு கிளைகளும் வைக்கலாம்.

4. ஒரு மட்டைத் தேங்காய் அல்லது தேங்காயை கலசத்தின் மேல் வைத்து, சந்தனம், குங்குமம்,வஸ்திரத்தினால் அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் அருகில், ஸ்ரீமஹாலக்ஷ்மி யந்திரம் அல்லது யந்திரத்துடன் கூடிய ஸ்ரீலக்ஷ்மி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.

5. கலசம், படத்தின் அருகில் ஒன்றரை ரூபாய் சில்லறையாக வைக்கவும்.

6. இனிப்புகள் நிவேதனம் செய்வது விசேஷம்.

7. அம்பிகைக்கு,பஞ்சோபசார பூஜை (இதில் ஐந்துவகையான உபசாரங்கள் இருக்கும்.  சந்தனம்(கந்தம்) புஷ்பம், தூபம், தீபம் நைவேத்தியம் ஆகியவை).

8.இனிப்புகளுடன், வாழைப்பழம்,  மற்ற பழவகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பசும்பால் அவசியம் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை முடிவில், விரதக் கதை படித்து, ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகமும் படிக்க வேண்டும்.

ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும்..

மாலை வேளையில் மீண்டும் கலசத்திற்கு பூஜை செய்ய வேண்டும். காலையில் செய்தது போலவே பஞ்சோபசார பூஜை செய்து, இனிப்பு, மற்ற நிவேதனங்கள் அளிக்கவும்..நிவேதனம் செய்தவற்றிலிருந்து கொஞ்சமும், தாம்பூலத்தில் வைத்த வெற்றிலையும், தனியே எடுத்து வைத்து, பிறகு பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்). பூஜை முடிவில், ஸ்ரீலக்ஷ்மி நமனாஷ்டகம் சொல்லி நமஸ்கரித்து, ஆரத்தி எடுக்கவும்.

மறுநாள், வெள்ளியன்று காலையில், பூஜைக்குப் பயன்படுத்திய ஐந்து வித மரக்கிளைகளையும் வீட்டின் மூலைகளில் வைக்கவும். பூஜையில் வைத்த தேங்காய், பாக்கு, நாணயத்தை தனியே வைக்கவும். இதையே அனைத்து வியாழக்கிழமைகளிலும் பயன்படுத்த வேண்டும். வியாழக்கிழமைகளில் பூஜையை நிறைவு செய்த பின், இவற்றை கிணற்றிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கலாம்.

அனைத்து வியாழக்கிழமைகளிலும் பூஜித்த மலர்களை தனியே சேகரித்து வைக்கவும். அதையும், பூஜைகள் நிறைவுற்ற பின், நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி புராணம் என்று போற்றப்படும் புராணத்தை விரத நிறைவில் படிக்க வேண்டும். பெரும் மஹானான பலராம் தாசர் இயற்றியது இந்தப் புராணம். இது குறித்து, அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 20 நவம்பர், 2013

SAUBHAGYA SUNDARI VIRATHAM..(20/11/2013)...சௌபாக்கிய சுந்தரி விரதம்!!


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!..

நம் பாரத நாட்டில், பெண்கள், கணக்கற்ற விரதங்களை,  கணவன், குழந்தைகள் நலனுக்காகவும், குடும்பம் செழித்து விளங்கவும் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள். அவ்வகையில், அன்னை பார்வதி தேவியைக் குறித்துச் செய்யப்படும் ஒரு விரதமே, 'சௌபாக்கிய சுந்தரி விரதம்'. மிகப் பழங்காலத்தில் அனுசரிக்கப்பட்டு வந்த விரதங்களுள் ஒன்று இது. இது 'சௌபாக்கிய கௌரி விரதம்' எனவும் வழங்கப்படுகின்றது...

ஒரு பெண்ணை வாழ்த்தும் போது, 'சௌபாக்கியவதியாக இரு' என்று வாழ்த்துவது வழக்கம். 'சௌபாக்கியம்' என்பது, நல்ல கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளும், எல்லா வகையான செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ்வதே ஆகும்.    அத்தகைய  நிறை வாழ்வு வாழும் பாக்கியத்தைத் தரும் இந்த விரத பூஜையில், அன்னை பார்வதி தேவியை, 'சௌபாக்கிய சுந்தரி' என்னும் திருநாமத்தால், சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.  இந்த விரதம் இருப்பதால், பார்வதி தேவி மனமகிழ்ந்து, எல்லா நலன்களும் அருள்வாள்.

வாழ்வில் தோன்றும் எல்லா விதமான இன்னல்களையும் நீக்கும் மகிமை பொருந்திய விரதம் இது. இதை முறையாகக் கடைபிடிப்போரின் சகல தோஷங்களும் நீங்கி, நலம் பெருகும்.

இந்த விரதம் அனுசரிப்பது காலமாற்றத்தினால் குறைந்து விட்ட போதிலும், சில பரிகார காரணங்களுக்காக அனுசரிக்கப்படுகின்றது. குறிப்பாக, திருமணத் தடை விலகவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த விரதம் அனுசரிப்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும். அங்காரக தோஷம் இருக்கும் ஜாதகர்கள், இந்த விரதத்தை தோஷ நிவர்த்திக்காக அனுசரிக்கலாம்.

விரதம் அனுசரிக்கும் தினம்:

கார்த்திகை மாதம், தேய்பிறை திருதியை, அதாவது திருக்கார்த்திகை பௌர்ணமிக்குப் பின் வரும் திருதியை திதியில் இந்த விரதம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம் நாளை(நவம்பர் 20ம் தேதி) இந்த விரதம் வருகிறது. இது சித்திரை  மாதம், வளர்பிறை திருதியை அன்றும் அனுசரிக்கப்படுகின்றது.

'அகண்ட வரதானம்' பெற்றுத் தரும் விரதங்களுள் ஒன்றான, இதை, தக்ஷனின் மகளாக அவதரித்த சதி தேவி கடைபிடித்து, சிவனாரை தன் மணாளனாக அடைந்தாள்.

சில காலம் சென்ற பின்னர், சில யோகினிகள், பார்வதி தேவியின் தோழியராகிய ஜயா, விஜயாவிடம், 'பார்வதி தேவியை மகிழ்வித்து வரம் பல பெற்றுத் தரும் சுலபமான நோன்பு எது?' என்று கேட்க, அவர்களும், 'சௌபாக்கிய சுந்தரி விரத'த்தைப் பற்றியும், அதைக் கடைபிடிக்கும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். இதை முறையாக அனுசரிக்க, வாழ்வின் இன்னல்கள் அனைத்தும் தீரும் என்பதை விளக்கினார்கள். குறிப்பாக, திருமணமான பெண்கள் அனுசரிக்க, குடும்பம் செழித்து விளங்கும் என்று கூறினார்கள்.

விரதம் அனுசரிக்கும் விதம்:

குடும்ப ஒற்றுமை மற்றும் திருமணத் தடை நீக்கும் விரதமாதலால், சிவன், பார்வதி இருவரையும் சேர்த்தே வழிபாடு செய்ய வேண்டும். 

விரத தினத்தில் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். முறையாக, விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

மலர் மாலைகள், பூஜைப் பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து கொள்ள வேண்டும். நிவேதனத்திற்காக, இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

திருமணமான பெண்களுக்கு, முக்கியமானவையாகச் சொல்லப்படும் பதினாறு வகையான மங்கலப் பொருட்களால் (மஞ்சள், குங்குமம், மருதாணி, கண்மை, தாம்பூலம், சேலை, ரவிக்கைத் துணி, கொலுசு, மெட்டி, போன்றவை) 

அம்பிகையை ஆராதிக்க வேண்டுவது முக்கியம். ஆகையால் அவற்றையும் தயாராக வைக்க வேண்டும்.

பூஜையை, காலையில் அல்லது மாலையில் செய்யலாம். மாலையில் செய்வது சிறப்பு..

பூஜை செய்யும் இடத்தில், ஒரு பலகை அல்லது தாம்பாளத்தில், சிவ, பார்வதி விக்கிரகங்களை அல்லது படத்தை, சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரித்து வைக்க வேண்டும். அகல் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்..

முதலில் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். அதன் பின், இயன்றால் நவக்கிரக பூஜையும் செய்ய வேண்டும்.

இறைவனுக்கும் இறைவிக்கும் தூப தீபங்களுடன், ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும். விக்ரகங்களாயின், பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம்  செய்து பூஜிக்கலாம்.. நிவேதனங்களை பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும். தாம்பூலத்துடன், உலர் பழங்களும் நிவேதனம் செய்ய வேண்டும்.

பூஜையின் நிறைவில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

யாரேனும் ஒருவருக்கு உணவளித்து, தக்ஷிணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறந்தது. இரவில், பால், பழம் அருந்தலாம். இயலாதவர்கள், பூஜை நிறைவுறும் வரையிலாவது உபவாசம் இருக்கலாம்.

மிகக் கடுமையான தோஷங்களுக்கும் இந்த விரதம் மிகச் சிறந்த பரிகாரமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. உமையும், உமையொரு பாகனும், தம்மை வணங்குவோர் வாழ்வில் நலம் சிறக்க நல்லருள் புரிவது திண்ணம்...

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன், பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 16 நவம்பர், 2013

DEV DIWALI!!!!... (17/11/2013)...தேவ தீபாவளி!!!!. ..


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!..

தென்னிந்தியாவில், திருக்கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபமாகச் சிறப்பிக்கப்படுவது போல், வட இந்தியாவில், 'தேவ தீபாவளி' என்று சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி திதியன்று, சிவனார் திருமுடி சேர்ந்து, அவரது பெருங்கருணையினால் பூவுலகம் வந்து நம் பாவங்கள் தீர்க்கும் கங்கைக் கரையோரங்களில் 'தேவ்தீபாவளி' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வட இந்தியாவில் தீபாவளி அமாவாசைக்கு மறு தினமே கார்த்திகை மாதம் பிறந்து விடுகிறது.. அவர்கள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து, மாதப் பிறப்பைக் கணக்கிடுவதால் இப்படி!..தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தை, கார்த்திகை பௌர்ணமி என்று கொண்டு, பல்வேறு பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தேவ தீபாவளி துவங்கி, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...

1.தேவ் தீபாவளி (அ) தேவ தீபாவளி:

மானிடர்களாகிய நாம் நரகசதுர்த்தசி தினத்தன்று 'தீபாவளி' கொண்டாடுவதைப் போல், தேவர்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர்!!!!. தேவர்கள்,  தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமி தினத்தன்று, பூவுலகின் நீர்நிலைகளில் குடியிருந்தருளி நம்மை ஆசீர்வதிக்கும் நன்னாளே தேவ் தீபாவளி.

அன்றைய தினமே, தேவர்கள், அசுரர்களை வென்றதாக ஐதீகம்.

 தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமி தினத்தன்று, அனைத்து தேவர்களும், பூமியில் உள்ள நீர்நிலைகளில் வாசம் செய்ய வருகிறார்கள். ஆகவே, அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, 'கார்த்திகை ஸ்நானம்' என்று சிறப்பிக்கப்படுகின்றது.

அதிலும் கங்கையில், காசியில் நீராடுவது மிகப் புண்ணியம் தரும் செயலாகப் போற்றப்படுகின்றது. அவ்விதம் நீராடுவது, ஒருவரைப் பாதிக்கும் எதிர்மறை சக்திகளிடமிருந்து அவருக்கு விடுதலை அளித்து, நிம்மதி அளிக்கும் என்பது ஐதீகம்.

கங்கா மாதாவுக்கு தேவ தீபாவளி தினத்தன்று செய்யப்படும் ஆரத்தியைக் காண, கண் கோடி வேண்டும். பக்தர்களும் எண்ணற்ற தீபங்களை கங்கை நீரில் மிதக்க விட்டு, கங்கைக்கு தீப ஆரத்தி செய்கின்றனர்.

வாரணாசியில், தேவ தீபாவளியை ஒட்டி, 'கங்கா மஹோத்சவ்' நடத்தப்படுகின்றது. கார்த்திகை ஸ்நானமும் தீப தானமும் தேவ தீபாவளியின் முக்கிய அங்கங்களாகும். லட்சக்கணக்கான பக்தர்கள், தேவ தீபாவளியன்று அதிகாலை கார்த்திகை ஸ்நானமும், மாலையில் தீபோத்சவமும் செய்கின்றனர். மண் அகல்களில் தீபங்கள் ஏற்றி கங்கைக் கரையோரங்களை அலங்கரிப்பதே தீபோத்சவம் (தீப + உற்சவம்).

2. ஆந்திரப் பிரதேசத்திலும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும், சிவபெருமான் திருக்கோயில்களில் 'சிவலிங்க மஹாஜல அபிஷேகம்' நடத்தப்படுகின்றது. அனைத்து வித அபிஷேக திரவியங்களாலும் சிவனாருக்கு அபிஷேகம் செய்து, நிறைவாக, கும்ப நீராலும் அபிஷேகம் செய்யப்படுகின்றது. சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், சிவபெருமானைக் குறித்து, 'பக்தேஸ்வர விரதம்' கடைபிடிக்கப்படுகின்றது.

இந்த விரதத்தை திருமணமான பெண்கள், தம் கணவரின் நலனுக்காகச் செய்கிறார்கள். இந்த விரதம் குறித்த புராணக் கதை சுருக்கமாகப் பின்வருமாறு..

ஒரு பெண், தன் கணவனுக்கு, 'அஹால ம்ருத்யு தோஷம்' இருப்பதைத் தெரிந்து கொண்டாள். தன் கணவனின் உயிரைக் காக்க, கார்த்திகை மாதம், பௌர்ணமியன்று, கடுமையான உபவாசம் இருந்து, தாமரை மலர்களால் சிவனாரை அர்ச்சனை செய்து வழிபட்டாள். அவளது வழிபாட்டால் மனமகிழ்ந்த சிவபிரான், அவளது கணவனின் உயிரைக் காத்தார். அன்று தொட்டு, கார்த்திகை பௌர்ணமி தினத்தில், பக்தேஸ்வர விரதம் கடைபிடிப்பது வழக்கத்தில் வந்தது..

பக்தேஸ்வர விரதம் இருப்பவர்கள், மார்க்கண்டேய புராணத்தைப் பாராயணம் செய்வது கட்டாயமாகக் கடைபிடிக்கப்படுகின்றது.

3.ஆந்திராவிலும், கர்நாடகாவின் சிலபகுதிகளிலும்  தீபாவளியை அடுத்து வரும்  பௌர்ணமியன்று கொண்டாடப்படும் மற்றொரு பண்டிகை, ஜ்வாலாதோரணம்'. இது சிவாலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

இரண்டு, தடிமனான மரக் கழிகள்  நடப்பட்டு, இரண்டுக்கும் குறுக்காக, இரண்டையும் இணைக்கும் விதத்தில், மற்றொரு மரக் கழி கட்டப்படுகின்றது. இதுவே தோரணம் ஆகும். நடுவில் இருக்கும் கழியில், காய்ந்த புல்லை நன்றாகச் சுற்றிக் கட்டுகின்றனர். மாலையில் திருக்கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு, இந்தப் புல்லை ஏற்றுகின்றனர். இது பெரும் தீபம் போல் பிரகாசமுடன் எரிகிறது. இதுவே 'ஜ்வாலா தோரணோத்சவம்' என்றும் வழங்கப்படுகின்றது. தமிழகத்தின் சொக்கப்பனை கொளுத்துதலை இதனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது.

4. தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமியை ஒட்டிய மற்றுமொரு பிரம்மாண்ட நிகழ்வு, 'புஷ்கர் மேளா'. ராஜஸ்தானில் இருக்கும் ஒரு சிறிய நகரமே 'புஷ்கர்' (தமிழில் புஷ்கரம்). கார்த்திகை பௌர்ணமி தினத்தை ஒட்டி,  ஆசியாவிலேயே பிரம்மாண்ட கால்நடை சந்தை பத்து தினங்கள் நடைபெறுகிறது. உலகிலேயே பெரிய ஒட்டகச் சந்தை புஷ்கர் மேளாவில் இடம் பெறுகிறது. இதை ராஜஸ்தான் அரசாங்கமே நடத்துகிறது.

புஷ்கரின் மற்றொரு சிறப்பம்சம், புஷ்கர் ஏரி. இந்த ஏரியின் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

PUSHKAR LAKE
இந்த ஏரி 'தீர்த்தராஜ்' என்றே சிறப்பிக்கப்படுகின்றது.  ஒருமுறை வஜ்ர நாபன் எனும் அரக்கனை தாமரை மலரினால் பிரம்மா வதம் செய்தபோது, அந்தத் தாமரை மலரிலிருந்து மூன்று இதழ்கள் கீழே விழுந்தன. அதில் ஒரு  இதழ் புஷ்கர் நகரில் விழுந்து, புஷ்கர் ஏரியாக உருமாறியது என்பது புராணம்.

5.இந்த ஏரியில் ஸ்நானம் செய்ய, நோய் நொடிகள் அகலும். அத்தகையதொரு சிறப்பம்சம் பொருந்தியது இந்த ஏரி!!!. தீபாவளியை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தன்று இங்கு செய்யப்படும் 'கார்த்திகை ஸ்நானம்' மிகுந்த மகத்துவம் பொருந்தியது. அதிகாலையில் கார்த்திகை ஸ்நானம் செய்கிறார்கள் பக்தர்கள்.அதன் பின்,  பிரம்மாவின் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள்.

மாலையில், தீபங்களை ஏற்றி, இலையில் வைத்து, இந்த ஏரி முழுவதும் மிதக்க விட்டு வழிபடுகின்றார்கள்.

6.சிவனாரைப் போற்றும் தினமான இது, 'திரிபுராரி பௌர்ணமி' என்றும் சிறப்பிக்கப்படுகின்றது. சிவபெருமான், திரிபுரத்தை எரித்து, திரிபுராசுரர்களை வதம் செய்த தினமாக இது கொண்டாடப்படுகின்றது. ஒரே அம்பினால், திரிபுரர்களை வதம் செய்த சிவனார், இந்த வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாக, இந்த தினத்தில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

7.பகவான் ஸ்ரீவிஷ்ணு, மச்சாவதாரம் எடுத்ததும் இந்த தினத்தில் தான். மச்சாவதாரம் குறித்த புராணக் கதைக்கு இங்கு சொடுக்கவும்..

நாமும் 'திருக்கார்த்திகை தீபம்' கொண்டாட இருக்கிறோம்!. திருக்கார்த்திகை தீபம்  பற்றிய செய்திகளையும் தீபம் ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சென்ற வருடப் பதிவில் விளக்கமாகச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன். பதிவைப் பார்க்க விருப்பமெனில்.   கீழே சொடுக்கவும்.....


அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் திருக்கார்த்திகை தீபத் திருநாள் ந‌ல்வாழ்த்துக்களை முன்கூட்டியே  தெரிவித்துக் கொள்கிறேன்...

சிறப்புகள் பல பொருந்திய  இந்த‌ தினத்தில், தீபங்கள் ஏற்றி, திருவிளக்கு பூஜை முதலான வழிபாடுகள் செய்து,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 9 நவம்பர், 2013

SRI JAGADHATHRI DEVI PUJA...ஸ்ரீ ஜகத்தாத்ரி தேவி பூஜை (9/11/2013---12/11/2013)


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!.

நாம் ஒவ்வொரு பண்டிகைகள், மற்றும் ஆன்மீகக் கட்டுரைகளோடு, ஒவ்வொரு மாநிலத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பூஜைகள், பண்டிகைகள் மற்றும் விரதங்களையும் பார்த்து வருகிறோம். அம்மாதிரி, மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீஜகத்தாத்ரி பூஜையை இந்தப் பதிவில் காணலாம்....அகில உலகமும் காத்தருளும் அன்னை பராசக்திக்குத் தான் எத்தனை எத்தனை திருநாமங்கள்!!. அன்னையின் அளப்பரிய கருணையைப் போற்றும் விதமாக எத்தனை எத்தனை வழிபாடுகள்.. பூஜை முறைகள்.. இந்த ஜகத்தை ஆளும் ஜகதம்பிகையான 'ஜகத்தாத்ரி தேவி'யைப் போற்றும் வழிபாடே ஜகத்தாத்ரி பூஜை. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகள், இந்தியாவின் கிழக்குப் பகுதி மாகாணங்களில்  ஜகத்தாத்ரி பூஜை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சப்தமி தினம் துவங்கி, வரிசையாக அஷ்டமி, நவமி, தசமி தினங்களில் ஜகத்தாத்ரி பூஜை கொண்டாடப்படுகின்றது. ஆனால் பூஜையின் முக்கிய தினம், நவமி தினமே ஆகும்.

இந்த பூஜை, தாத்ரி பூஜை, ஜகதம்பா பூஜை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. ஜகத்தாத்ரி தேவி, ஸ்ரீதுர்கா தேவியின் மற்றொரு திருஅவதாரமாகவே கருதப்படுகிறார். தாந்த்ரீக முறைப்படி, ஸ்ரீதுர்கையும், காளி மாதாவும், ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களின் உருவகமாகக் கருதப்படுகின்றனர். ஜகத்தாத்ரி தேவி, சத்வ குணம் நிரம்பிய அன்னையாகக் கருதப்படுகிறார்.

இந்த  உலகத்தை ஆளும் அன்னை, பெற்ற தாயினும் பெரிதுவந்து, தன் மக்கள் மீது பேரருங்கருணையைப் பொழிபவள். தம் மக்களின் குற்றம் பொறுத்து, குணத்தைப் பெரிதுவப்பவள். அன்னை துர்க்கையின் ஆனந்தமான திருவடிவினள் ஜகத்தாத்ரி. இந்த ஜகத்தைத் தரிப்பதால்(தாங்குவதால்) ஜகத்தாத்ரி தேவியாக வழிபடப்படுகிறாள் அன்னை.

அன்னை, அதிகாலைச் சூரியனின் நிறமுடையவள். முக்கண்ணும், நான்கு திருக்கரங்களும் கொண்டருளும் வடிவினள். நான்கு திருக்கரங்களிலும், சங்கு, சக்கரம், வில், அம்பு முதலியவற்றைக் கொண்டருளுபவள். செவ்வாடை அணிந்து, அற்புதமான ஆபரணங்களுடன், நாகராஜரை யக்ஞோபவீதமாகக் கொண்டருளுபவள். சிம்ம வாஹினி.

குப்ஜிகா தந்திரம், காத்யாயினி தந்திரம் ஆகியவை அன்னையைப் பற்றி புகழ்ந்துரைப்பதாகக்  கூறுகிறார்கள். அன்னைக்கு 'த்ரிசந்த்யா வியாபினி' என்ற திருநாமமும் உண்டு. தர்ம ,அர்த்த, காம மோக்ஷம் என்னும் நான்கு வித புருஷார்த்தங்களையும் அருளுபவள் அன்னை ஜகத்தாத்ரி.

தேவியின்  திருஅவதாரம் குறித்த புராணக் கதை:

மஹிஷாசுர வதம் முடிந்ததும், மகிழ்வடைந்த தேவர்கள் அன்னையின் திருமுன் ஒன்று கூடினர். ஆனால் அனைவர் மனதிலும், தத்தம் சக்தியாலும் ஆயுதங்களாலுமே அன்னை வெற்றியடைய முடிந்தது என்னும் எண்ணம் மேலோங்கியிருந்தது. தேவர்களின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரம்பொருள், ஒளி பொருந்திய யக்ஷனின் வடிவில் அவர்கள் முன் தோன்றினார்.

ய‌க்ஷனைக் கண்டதும், வாயு பகவான், யக்ஷனின் முன் வந்து நின்றார். யக்ஷன், வாயுவிடம், 'தாங்கள் யார்?' என்று வினவ, அதற்கு வாயு பகவான், 'நான் வாயு, பெரும் மரங்களையும், மலைகளையும் வேரோடு பெயர்த்தெறிய வல்ல பராக்கிரமம் பொருந்தியவன் நான்!!' என்றார்.

உடனே யக்ஷன் ஒரு சிறு புல்வெளியை உருவாக்கி, அதைப் பெயர்க்கச் சொன்னான். ஆனால் வாயு, தன் முழு பலத்தையும் பிரயோகித்தும் அதை அணுவளவும் அசைக்க இயலவில்லை.

அக்னி பகவானால், அந்தப் புல்வெளியைத் தீண்ட இயலவில்லை. மற்ற தேவர்களாலும் ஏதும் செய்ய இயலவில்லை.
நிறைவாக, பரம்பொருள், 'காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படைப்புகள் அனைத்தும் ஜகத்தாத்ரி தேவியினுடையதே!!. தேவர்களும் அன்னையால் படைக்கப்பட்டவர்களே!!, தேவர்களின் சக்தியனைத்தும் அன்னையால் உலகநன்மையின் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டதே!!' என்னும் உண்மையை தேவர்கள் உணருமாறு செய்தார். இப்படி, அனைத்தையும் படைத்து, காத்தருளும் வடிவினளாகத் துதிக்கப்பட்டவளே ஜகத்தாத்ரி.

ஆணவமற்ற உள்ளங்களே அம்பிகை உறையும் திருக்கோயில்கள் என்பதை உணர்த்தும் இந்தப் புராணக் கதையை ஒட்டியே வேறொரு புராணக் கதையும் வழங்கப்படுகின்றது.

முற்காலத்தில், வானவர்கள், தானவர்கள், மானிடர்கள் யாவரும் ஆணவ மேலீட்டால் தர்மத்தை மறந்து வாழ்ந்தனர். அம்பிகை அவர்களுக்கு நல்லறிவு புகட்ட திருவுளம் கொண்டாள். பேரொளிப் பிழம்பாக அவர்கள் முன் தோன்றினாள். கோடானுகோடி சூரிய சந்திரர்களின் பேரொளியை விஞ்சியது அம்பிகையின் திருவுருவம். அனைவரும் பயந்தனர். தத்தம் திறனொடுங்கினர்.

பேரொளி, இவ்வுலகனைத்தையும் அழித்து விடுமோ என்று அஞ்சி நடுங்கி, ஸ்ரீதுர்கையைப் பணிந்து துதித்தனர். அம்பிகை மனமிரங்கினாள். அந்தப் பேரொளிப் பிழம்பு ஸ்ரீஜகத்தாத்ரி தேவியாக திருவுருவுக் கொண்டது.

தேவியின் திருஅவதாரம் பற்றிய வேறொரு புராணக் கதையும் உள்ளது. இது முதல் கதையிலேயே சிறு மாற்றத்துடன் சொல்லப்படுகின்றது.

இதில், யக்ஷனாகத் தோன்றியவர் பிரம்மதேவர் என்று கூறப்படுகின்றது. பிரம்மதேவர், தேவர்களுக்கு மெய்யறிவை உணர்த்திய போது அவதரித்தவளே அன்னை ஜகத்தாத்ரி.

ஸ்ரீ ஜகத்தாத்ரி பூஜை:

இந்த பூஜை, மேற்கு வங்காளம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், சந்தன் நகோர் ,ரிஷ்ரா ஆகிய இடங்களே ஜகத்தாத்ரி பூஜையின் முக்கிய கேந்திரங்களாக கருதப்படுகின்றன.

இந்தப் பூஜை செய்வதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று கூறுகிறார்கள். ஆகவே, இது செல்வந்தர்கள் இல்லங்களிலோ அல்லது குழுவாகச் சேர்ந்தோ நடத்தப்படுகின்றது.

ஆனால் இது மெய்யல்ல என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வு, அருள்நிறை அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் திவ்ய சரிதத்தில் கூறப்படுகின்றது.

அன்னையின் தாயார் திருமதி.சியாமாசுந்தரி, மிகுந்த தெய்வ பக்தி நிரம்பியவர்.  ஒரு முறை, காளி பூஜையை ஏழ்மையின் காரணமாக செய்ய இயலாத அவர், அருகில் ஒருவர் செய்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள எண்ணி, தம்மால் இயன்ற பொருட்களை அளிக்கச் சென்றார். ஆனால் அந்த நபர், ஒரு பழைய பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு வாங்க மறுத்திருக்கிறார். வருத்தம் நிரம்பிய மனதுடன் உறங்கிய சியாமாவின் கனவில், கால் மேல் கால் போட்ட தோற்றத்துடன் ஒரு தேவி தோன்றினாள். 'காளிக்காக நீ வைத்திருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்!!' என்று அமுத வாக்களித்தாள்.

மறுநாள், சாரதா தேவியாரிடம், இது குறித்துத் தெரிவித்து, 'அம்மாதிரி தோற்றத்துடன் தோன்றும் தேவி யார்?' என்று வினவினார் தாய். 'ஜகத்தாத்ரி தேவி' என்று பதிலுரைத்தார் சாரதா தேவியார். சியாமா சுந்தரியார், இதன் காரணமாக தம்மால் இயன்ற அளவு அன்னையின் பூஜையை சிறப்பாகச் செய்தார். குடும்பம் ஏழ்மையில் இருந்து பெருமளவு விடுதலை பெற்றது.

மறுவருடம் இந்தப் பூஜை செய்ய சியாமா சுந்தரியார் விரும்பினார். ஆனால் சாரதா தேவியார் சம்மதிக்கவில்லை. இம்முறை கனவு வந்தது சாரதைக்கு. தம் தோழியரான, ஜயா, விஜயா ஆகியோர் புடை சூழ  வந்த ஜகத்தாத்ரி தேவி, 'அப்படியானால் நாங்கள் போக வேண்டியதுதானா?' என்று வினவ,  சாரதா தேவியார், 'நீங்கள் இங்கேயே இருங்கள்' என்று பதிலளித்தாராம்.. அது முதல் ஆண்டு தோறும், ஜகத்தாத்ரி பூஜை அன்னையால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாம்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும், அன்னை, பூஜையைத் தவிர்க்க எண்ணினார். அப்போதும் மீண்டும் கனவு வரவே, தொடர்ந்து பூஜையை நடத்தி வந்தார். 

இப்போதும், ஸ்ரீஇராமகிருஷ்ணா மடத்தின் சார்பில், அன்னையின் திருஅவதார ஸ்தலமான ஜெயராம்பாடியிலும் மற்ற இடங்களிலும் ஸ்ரீஜகத்தாத்ரி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
பூஜை செய்யப்படும் முறை:

அன்னையின் திவ்ய சரிதத்தில் இவ்வாறு குறித்திருந்தாலும், இன்றளவும், பொதுவாகவே பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு சமூக விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. மிக அழகாக, கலையம்சத்துடன் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோயில் போன்ற அமைப்புக்களில், அன்னையின் பிரதிமைகளை மிக‌ அற்புதமாக அலங்கரித்து, கொலுவிருக்கச் செய்கிறார்கள். பட்டாடைகள், அழகான ஆபரணங்கள், மலர்கள் சூடி அன்னை அருளுகிறாள்.

இந்தப் பந்தல்களின் அலங்கார அழகு வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவ்வளவு அற்புதமாக இருக்கும்..பழங்காலத்திய மற்றும் தற்கால கலை நுணுக்கங்களின் சங்கமமாகவும், வங்காளத்தின் பிரத்தியேக கலையம்சத்தின் அத்தனை பரிணாமங்களும் நிறைந்துள்ள இடமாகவும் இந்தப் பந்தல்கள் காட்சியளிக்கின்றன.

அன்னையின் பிரதிமைகளும், வெவ்வேறு வடிவங்களில், தோழியருடன் சேர்ந்தோ அல்லது சிம்ம வாஹினியாகவோ, அமர்ந்த நிலையிலோ அழகுற செய்யப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

அன்னையை மூன்று தினங்கள் கொலுவிருக்கச் செய்கிறார்கள். மூன்று தினங்களும், மிக விமரிசையாக தூப தீப ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அனைத்து விதமான நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மாலை, இரவு வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன.பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பந்தலுக்கு வந்து தேவியை வழிபட்டு வலம் வரலாம். பந்தலில் எவ்வித பயமும் இல்லை. மேலும் சேவை செய்பவர்கள் நட்புணர்வுடன் சேவை செய்வதால் யாவரும் சௌகரியமாகப் போய் தரிசித்து வரலாம்.

வெளிநாட்டு யாத்ரீகர்கள் வருகையால், தற்போது இரவு முழுவதும் நடத்தப்படும் பூஜைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தசமியன்று, துர்கா பூஜைக்குச் செய்வது போல், அன்னையின் பிரதிமைகளை கங்கையிலோ அல்லது நதிகளிலோ விஸர்ஜனம் செய்கிறார்கள்.

ஸ்ரீஜகத்தாத்ரி தேவியை இல்லங்களில் பூஜிக்க விரும்புவோர், நவமி தினத்தில் (11.11.2013) மாலை வேளையில், அன்னையின் திருவுருவை அமைத்து, இயன்ற அளவில் பூஜிக்கலாம். ஸ்ரீ ஜகத்தாத்ரி பூஜையின் போது, பாராயணம் செய்ய வேண்டிய ஸ்ரீஜகத்தாத்ரி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும். அன்னையை பூஜிக்க இயலாதவர்களும், இந்த ஸ்தோத்திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்து, அன்னையின் அருள் பெறலாம்.

அன்னை ஸ்ரீஜகத்தாத்ரி, பக்தர்களின் குற்றங்களை பெரிதாக எண்ணாதவள். யாராயிருப்பினும், தன் மக்களென்றே அருளுபவள். அன்னை ஸ்ரீசாரதாதேவியார், ஜகத்தாத்ரி தேவியின் திருஅவதாரமென்றே கருதுகிறார்கள். அன்னையின் திவ்யசரிதம், யாவரையும் தம் மக்களாக அரவணைத்துச் செல்லும் அன்பு நிறை உளப்பாங்கை அற்புதமாக எடுத்தியம்புகிறது..

இந்த ஜகத்தை தாங்கி நிற்கும் அன்னை ஸ்ரீ ஜகத்தாத்ரி தேவியைப் பணிந்து அருள் பெறுவோம்...

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

SURYA SHASTI VRAT.. CHHAT PUJA....சூர்ய சஷ்டி விரதம், சட் பூஜா, சத் பூஜா...(8/11/2013)

அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!

தீபாவளியை அடுத்து வரும் சுக்ல பக்ஷ சஷ்டி திதி, தமிழகத்தில் ஸ்கந்த சஷ்டித் திருவிழாவாக, குன்று தோறும் குடிகொண்டருளும் குமரக் கடவுள் சூரனை வதைத்த தினமாக, சூரசம்ஹாரப் பெருவிழாவாக  கொண்டாடப்படுகின்றது.

இந்த சுக்ல பக்ஷ சஷ்டியை, பெரும்பாலான வட இந்தியர்கள், சூர்ய சஷ்டி /  சட் பூஜாவாகக் கொண்டாடுகின்றார்கள். 

இந்த விரதம்,  சூரிய சஷ்டிக்கு இரு நாட்கள் முன்பே துவங்கி,  சஷ்டிக்கு மறுநாள்  சப்தமியன்றே   நிறைவுறுகிறது. ஆயினும், சூர்ய சஷ்டி தினமே, முக்கிய விரத தினம் என்பதால் சூர்ய சஷ்டி முக்கியத்துவம் பெறுகிறது.

நான்கு தினங்களை உள்ளடக்கிய  இந்த விரதம் பெரும்பாலும் பீகாரிகளால் கொண்டாடப்பட்டாலும், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிசா, அஸ்ஸாம் மாநிலங்களிலும், மொரிஷியஸிலும்  கூட கொண்டாடப்படுகின்றது. போஜ்புரி மொழி பேசும் மக்களாலும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த விரத பூஜையின் முக்கிய வழிபடு தெய்வம், பிரத்யக்ஷ தெய்வமான சூரியன். இங்கு ஒரு விஷயத்தை நாம் ஒப்பு நோக்கலாம்... சூரியனின் உள்ளிருப்பது பிரகாசமான ஒளி தரும் அக்னி பகவானே... ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கை சேர உதித்தருளியவன் ஞானப் பேரொளிப் பிழம்பான‌ ஆறுமுகப் பெருமான்.. கார்காலமான இந்த காலக்கட்டத்தில், ஒளி வழிபாடே தீபாவளி, சட் பூஜை, திருக்கார்த்திகை தீபம் என பல்வேறு விதமாகப் பரிணமித்திருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. 

சூரிய பகவான், அவரது மனைவியரான உஷா, பிரத்யுஷா தேவியருடன் இணைத்துத் துதிக்கப்படுகின்றார். உஷா தேவி  சத் மையா என்றே வணங்கப்படுகிறாள். உஷா என்பது சூரிய பகவான் உதிக்கும் போது அவரிடமிருந்து தோன்றும் முதல் ஒளிக்கதிர் எனவும், பிரத்யுஷா, சூரியன் மறையும் போது வெளிப்படும் கடைசி ஒளிக்கதிர் எனவும் கருதுகிறார்கள். நான்காம் நாள் சூர்யோதய அர்க்ய தினத்தில் உஷா தேவியும், மூன்றாம் நாள் சந்த்யா அர்க்ய தினத்தில் பிரத்யுஷா தேவியும் பிரார்த்திக்கப்படுகின்றார்கள்.

சட் பூஜா சம்பந்தமான புராணக் கதைகளை முதலில் நாம் காணலாம்..

புராணக் கதைகள்:

இந்த பூஜை, மஹாபாரத காலத்திலிருந்தே துவக்கப்பட்டதாகத் தெரிகிறது. திரௌபதி, சூர்ய பகவானின் பக்தை. தௌம்ய மஹரிஷியின் அறிவுரைப்படி சூர்ய சஷ்டி விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து, பெரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி பெற்றிருந்தாளாம் திரௌபதி. 

அது போல் தான வீரனான கர்ணன், சூர்ய சஷ்டி விரதத்தை தவறாது அனுஷ்டித்து, ஒப்பில்லாப் புகழ் பெற்றான்.

செல்வம், ஆரோக்கியம்,புகழ் என அனைத்து நலங்களும் வழங்கும் மகிமை பொருந்திய விரதமாகத் திகழ்கிறது சட் பூஜா.

இந்த விரதம் சம்பந்தமான கர்ண பரம்பரைக் கதை:

முற்காலத்தில், பிந்துசார நகரில் மஹிபாலன் என்பவன் வாழ்ந்து வந்தான். தெய்வ நம்பிக்கை இல்லாத அவன், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை இகழ்ந்தும், இறைவழிபாடுகளைக் கேலி செய்தும் வாழ்ந்து வந்தான். 

உலகிற்கு ஒளி தந்து வாழ வைக்கும், சூரிய சந்திரர்களுக்கு நேராக, இயற்கை உந்துதல்களை தீர்க்கக் கூடாதென்பது விதி. ஆனால் மஹிபாலன், வேண்டுமென்றே அவ்வாறு செய்தான். அதனால் கோபம் கொண்ட சூரிய பகவான், அவன் கண்பார்வை நீங்குமென சபித்து விட்டார்.

மெல்ல மெல்ல அவன் கண்பார்வை மங்கலாயிற்று. மிகவும் மனமுடைந்த மஹிபாலன், கங்கையில் குதித்து உயிர் விடத் திட்டமிட்டான். அவ்வாறே செய்ய, கங்கையை நோக்கி நடந்த வேளையில், அவன் எதிரே நாரத முனிவர் வந்தார். யாரோ வரும் ஓசை கேட்டு, மஹிபாலன் ஓசை வந்த திசையை வணங்கினான். நாரதமுனிவர், மஹிபாலனின் நிலை கண்டு இரங்கி, ஞானதிருஷ்டி மூலம் நடந்தது அனைத்தையும் அறிந்தார். மஹிபாலனத் தேற்றி, அவனை சூரிய சஷ்டி விரதம் இருக்குமாறும், அதன் மூலம் கண்பார்வையைத் திரும்பப் பெறலாம் என்றும் கூறினார். சூரிய பகவானிடம், மனமுருகி மன்னிப்புக் கேட்குமாறும் சொன்னார்.

சூரிய சஷ்டி தினத்தன்று முறைப்படி உபவாசம் இருந்து, சூரிய பகவானை வணங்கினான் மஹிபாலன். அதன் பலனாக, கண்பார்வையை திரும்பப் பெற்றான்.

சூரிய சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை;

இந்த விரதம் ஒரு வருடத்தில் இரண்டு முறை அனுசரிக்கப்பட வேண்டும் என்பது விதி. கோடை காலமான சித்திரை மாதத்திலும் கார்காலமான தீபாவளியை அடுத்து வரும் சுக்ல  சஷ்டியிலும் இந்த விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். தற்போது, கால மாற்றத்தால், தீபாவளியை அடுத்து வரும் சுக்ல சஷ்டியிலேயே இது அனுஷ்டிக்கப்படுகிறது.

முற்காலத்தில் பெரும் ரிஷிகள் இந்த விரதத்தை கடைபிடித்தனர். ஸ்தூல உணவு இல்லாமல், பிரபஞ்ச வெளியில் இருந்து உடல் இயங்கத் தேவையான சக்தியைப் பெறும் ஒரு மார்க்கமாகவே இந்த விரதத்தைக் கருதினர். இந்த வழிமுறைப்படியும் உயிர்கள் வாழ இயலும் என்கிற மகத்தான உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் முகமாகவும் இந்த நீண்ட 36 மணி நேர விரதம் இன்றளவும்  கடைபிடிக்கப்படுகின்றது.

பீகாரில் பெண்களே விரதம் இருக்கின்றனர். தரையில் படுத்து உறங்குவது உள்ளிட்ட விதிகளை தவறாது நியமத்துடன் பின்பற்றுகின்றனர். ஆண்களும் விருப்பமெனில் விரதம் கடைபிடிக்கின்றனர்.

இந்த விரதம், நான்கு தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. முதல் தினம் நாஹா கா அல்லது நஹாய் காய் என்று வழங்கப்படுகிறது. அன்றைய தினம், வீடு மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மை செய்யப்படுகின்றன.

அன்று,  சூரியோதயத்திற்கு முன்பாக, நதிகளில் ஸ்நானம் செய்து, நீர் எடுத்து வந்து உணவு தயாரிக்கின்றனர். அரிசி,  சன்னா (கொண்டைக்கடலை), சுரைக்காய், பூசணிக்காய்  போன்ற காய்கறிகள் சேர்த்து சமைக்கப்பட்ட உணவை உட்கொள்கின்றனர். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர். 

இதன் நோக்கம், விரதத்திற்கு உடலை தயார் செய்வதாகும்.  இந்த காலநிலையில் கிடைக்கக் கூடிய   காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு, சத்து மிகுந்ததாக, எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருப்பதோடு, 36 மணி நேர விரதத்திற்கு உடலை தகுதிப்படுத்துகிறது.

மெய் ஞானம் நிரம்பிய முன்னோர்கள், இந்த விரதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன காய்கறிகளுக்கு  விஞ்ஞான அடிப்படையிலான காரணங்களை தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்!!!

சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது. உடலில் சோடியம்,பொட்டாசியம் சமநிலையை விரத தினங்களில் தக்கவைப்பதற்காக. விட்டமின் சி நிரம்பிய காய்கறிகள்  நெடுநேரம் நீரில் நின்று பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு, ஜலதோஷம், இருமல் முதலியவை வராமல்  காப்பதற்காக. நீர்ச்சத்து நிரம்பிய பூசணி, பக்தர்களுக்கு விரதத்தினால் உடலில் நீர்ச்சத்து இழப்பு வராமல் காப்பதற்காக என்று அறிஞர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விரதத்தின் இரண்டாவது  நாள், கர்னா என்று வழங்கப்படுகிறது. சூரிய உதயத்தில் ஆரம்பிக்கும் உபவாசம், அன்று மாலை சூரிய அஸ்தமனத்தோடு நிறைவடைகிறது.  சூரிய சந்திரரை வழிபாடு செய்து,  அரிசி பாயசம், பூரிகள்,  இனிப்புகள், பழங்கள் என்று பலவும்  நிவேதனமாகப்  படைக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடையே பிரசாதமாக விநியோகிக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன.

ARGYA
அதன் பின், 36 மணி நேர விரதம் துவங்குகிறது. நீர் கூட அருந்தாமல் நியமத்துடன் விரதம் இருக்கின்றனர். மறு நாள் படைக்க வேண்டிய நிவேதனங்களை சிரத்தையாகச் செய்கின்றனர். மூன்றாம் நாள் இரவு, நதி நீரில் நின்றுகொண்டு, பால் மற்றும் நீரால்  சத்  சந்த்யா  அர்க்யம் சமர்ப்பிக்கின்றனர்.  சூர்யபகவானுக்கு தீபங்கள் ஏற்றி, நதிகளில் மிதக்க விட்டு வழிபாடு செய்கின்றனர்.

நான்காம் நாள் காலை, சூரியோதயத்திற்கு முன்பாக, மக்கள் சாரி சாரியாக, நதிக்கரையை நோக்கிச் செல்கின்றனர். கோதுமை, பால், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், காய்கறிகள்,  பாயசம், இனிப்புகள், பூரிகள், முதலிய நிவேதனங்கள்  சூரிய பகவானுக்குப் படைப்பதற்காக எடுத்துச் செல்கின்றனர். வெங்காயம், பூண்டு, உப்பு முதலியவை நிவேதனங்களில் சேர்க்கப்படுவதில்லை.    

அதிகாலை நேரத்தில், கூப்பிய கரங்களுடன், பொன்னொளி வீசும் பகலவனை தரிசிக்கக் காத்திருக்கின்றனர்.  சூரியபகவானுக்கு, பால், மற்றும் நீரால் சத் சூர்யோதய‌ அர்க்யம் சமர்ப்பித்து, பூஜைகள் செய்கின்றனர். நிவேதனங்களை சமர்ப்பித்து வணங்குகின்றனர். அதன் பின், நிவேதனங்கள், உறவினர்கள் நண்பர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. விரதம் இருந்தோரும் பிரசாதத்தை உண்டு விரத நிறைவு செய்கின்றனர்.

சத் பூஜா பிரசாதம் மிக விசேஷமானதாகக் கருதப்படுகின்றது. ஆகவே, விரதம் இருப்போருடன், அவர்களது உறவினர்கள் நண்பர்களும் நதிக்கரைக்குச் சென்று, பிரசாதம் பெறுவது வழக்கம்.

இந்த பூஜையும் விரதமும் தலைமுறையாக விடாது செய்வது முக்கியமாகக் கருதப்படுகின்றது. இந்த விரதம் துவங்கி விட்டால், அதன் பின், குடும்பத்தினர் இதை விடாது செய்ய வேண்டும் என்கின்றனர்.

சட் பூஜா, சூரிய பகவானின் பெருங்கருணையைப் பெற்றுத் தந்து, அதன் காரணமாக, மானிட வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், கொடுந்துயரங்கள் முதலியவற்றை விலக்குவதோடு, பெரும் நோய்கள், கண் பார்வைக் குறைபாடு முதலியவற்றையும் நீக்கி, எல்லா நலமும் வளமும் பெருக்கும்..

இந்த மகத்தான தினத்தில் தவறாது இறைவழிபாடு செய்து,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 7 நவம்பர், 2013

SAUBHAGYA PANCHAMI / LABH PANCHAMI...சௌபாக்கிய பஞ்சமி / லாப பஞ்சமி (7/11/2013)...தேக்க நிலை மாற்றும் வழிபாடு


வட இந்தியர்களின் கார்த்திகை மாதமான இந்த மாதத்தில், தீபாவளி அமாவாசையை அடுத்து வரும், சுக்ல பக்ஷ பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி/லாப பஞ்சமி.

குஜராத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று லாப பஞ்சமி. புதிய தொழில் அல்லது முயற்சிகளை இன்றைய தினம் துவங்க, கட்டாயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. குஜராத்தில், லாப பஞ்சமி  தினம், தீபாவளி பண்டிகை தினங்களுடன் இணைத்தே கொண்டாடப்படுகின்றது.

இது 'பாண்டவ பஞ்சமி' என்றும் சிறப்பிக்கப்படுகின்றது. பாண்டவர்கள், பன்னிரண்டு வருட வனவாசம் மற்றும் ஒரு வருட அஞ்ஞாத வாசம் நிறைவு செய்த தினமாக இது கருதப்படுகின்றது.

கடபஞ்சமி, ஞான பஞ்சமி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த  தினம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தினத்தில், புதிதாக திருமணமானவர்கள், சௌபாக்கிய கௌரி விரத பூஜை செய்கிறார்கள். திருமண வாழ்வில் நலமும் வளமும் அன்னையின் அருளால் பெருக வேண்டி, தம்பதியாகவோ, அல்லது புதுமணப் பெண் மட்டுமோ இந்த பூஜையைச் செய்யலாம்.

நிறுவனங்களில், புதுக் கணக்கு துவங்குவதற்கு உகந்த தினம் இது. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று, சென்ற வருடத்திய கணக்குகளை முறையாக நிறைவு செய்து, புதுக்கணக்குகளை துவங்காதவர்கள், லாப பஞ்சமி தினத்தன்று செய்கிறார்கள்.

தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தில், சாரதா பூஜை செய்யாதவர்கள், லாப பஞ்சமி தினத்தன்று செய்கிறார்கள்.

தொழிலகங்களில் புதுக்கணக்குப் புத்தகங்களுக்குப் பூஜை செய்வது, 'சாரதா பூஜை' என்று வழங்கப்படுகிறது. புதுக்கணக்குப் புத்தகங்களுக்கு ஸ்வஸ்திக் சின்னம், சுபம், லாபம் முதலிய மங்கலச் சின்னங்கள் வரைந்து பூஜிக்கிறார்கள். பொதுவாக, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இதைச் செய்வார் (குஜராத்தில் பொதுவாக, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, தொழிலை குடும்ப உறுப்பினர்களே நிர்வகிப்பது வழக்கம்).  தொழில் முனைவோர் அல்லாதோரும், தத்தம் வங்கிக் கணக்குப் புத்தகம் போன்றவற்றை வைத்துப் பூஜிக்கிறார்கள். ஸ்ரீசரஸ்வதி தேவியின் மற்றொரு திருநாமமே 'சாரதா'. ஆகவே, மாணவர்கள், தமது பாடப் புத்தகங்களையும் பூஜையில் வைப்பது வழக்கம்.

பூஜையின் போது, பளிச்சிடும் வண்ணங்களில் ரங்கோலி வரைந்து, தீபங்கள் ஏற்றுகிறார்கள். பூஜை நிறைவுற்றதும், பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறார்கள்.

அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், புது முயற்சிகளுக்கும் உகந்த நன்னாள் லாப பஞ்சமி என்பதால், நிறுவனங்களில், தொழிலில் ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வகையில், மிக விமரிசையாக ஸ்ரீவிநாயகருக்குப் பூஜை செய்கிறார்கள். திருமகளைப் போற்றும் வகையில் ஸ்ரீலக்ஷ்மி பூஜையும் நடத்தப்படுகின்றது.

லாப பஞ்சமி தினத்தன்று, உறவினர், நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி, இனிப்புகள் தருவது வழக்கம்.  ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், லாப பஞ்சமி தினத்தை ஒட்டி நடைபெறுகின்றன.

சில சமயம், வாழ்வில் திடீரென தேக்க நிலை ஏற்படலாம். இந்த நிலை மாற, லாப பஞ்சமி தினத்தன்று உபவாசம் இருந்து பூஜித்தல் சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகின்றது. அம்மாதிரி உபவாசம் இருப்போர், ஸ்ரீவிநாயகரையும், சிவபெருமானையும் பூஜை செய்கிறார்கள்.

பூஜிக்கும் முறை:

அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, நீராடி, பூஜைக்கு அமர வேண்டும். விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு, சூரியனுக்கு அர்க்கியம் (ஒரு செம்பு அல்லது பாத்திரத்தில், நீர் எடுத்துக் கொண்டு, சூரியனை நோக்கி, ஒருமித்த மனதுடன், நீரைப் பொழிந்து செய்யும் பூஜை முறை) சமர்ப்பித்து, பூஜை துவங்க வேண்டும். 

தூய்மையான இடத்தை பூஜைக்குத் தேர்ந்தெடுத்து, அதில் விநாயகர், சிவபெருமான் திருவுருவங்களையோ அல்லது திருவுருவப்படங்களையோ அழகாக அலங்கரித்து வைக்க வேண்டும். தீபங்கள் ஏற்றவும். இயன்றவர்கள் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.

அக்ஷதை, பூக்கள், அருகம்புல், சந்தனம் முதலியவற்றால் விக்னேசுவரரை அர்ச்சிக்க வேண்டும்.

பூஜையின் போது பாராயணம் செய்ய, சகல சௌக்கியங்களையும் அருளும், 'ஸர்வ சௌக்யப்ரத கணபதி ஸ்தோத்ர' த்திற்கு இங்கு சொடுக்கவும்..

அதன் பின், சிவனாருக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, வெண்ணிற வஸ்திரம் சாற்றி, வெண்ணிற மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

மோதகம், பால், இயன்ற பழங்களை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

ஆரத்தி செய்து வணங்கி, க்ஷமா பிரார்த்தனை (பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக மன்னிப்புக் கோருதல்) யுடன் பூஜை நிறைவு செய்ய வேண்டும். பிரசாதங்களை விநியோகிக்க வேண்டும்.

உபவாசத்தை மறு நாள் பாரணையுடன் முடிக்க வேண்டும். இயலாதவர்கள், அன்றைய தினம் மாலை, சந்திர தரிசனத்துக்குப் பின் நிறைவு செய்யலாம்.

அன்றைய தினம் முழுவதும், ஸ்ரீகணேசரின் துதிகளையோ, மந்திரங்களையோ உச்சாடம் செய்தவாறு இருப்பது சிறப்பான பலன்களைத் தரும்.

இந்த நாள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களால், 'ஞான பஞ்சமி' தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.

இன்றைய தினம், பெரும்பாலான ஜைனர்கள் உபவாசம் இருக்கிறார்கள். ஞானம், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இரண்டாவது சூரியன், மூன்றாவது கண்(ஆஜ்ஞா). பெறற்கரிய ஞானத்தைப் பெற வேண்டியே, இவ்வரிய விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. ஜைனர்கள், தேவ வந்தனம், தியானம் முதலியவை செய்து, ஞான ஒளியை வேண்டுகிறார்கள்.

பெரும்பாலானவர்கள், ஒவ்வொரு மாதமும், சுக்ல பஞ்சமியன்று விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு, ஐந்து வருடமும் ஐந்து மாதமும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

 லாப பஞ்சமி தினத்தில் மேற்கொள்ளும் இறைவழிபாடுகள், மிக அதிக அளவில் நற்பலன்களை அளிப்பவையாக அமைந்திருப்பது கண்கூடு.

வாழ்வின் தேக்க நிலை மாற்ற உதவும் இந்த அற்புதமான தினத்தில், முறையான வழிபாடுகளை மேற்கொண்டு,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

DIWALI(2/11/2013)...SRI LAKSHMI GUBERA PUJA..தீபாவளி... ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை.


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!

கருணைக் கடலான திருமகள், திருமாலை மணந்த தினமாக, தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. அன்றைய தினம், திருமகளையும், செல்வத்துக்கு அதிபதியும், சிறந்த சிவபக்தனுமான குபேரனையும் வழிபடுவது, சிறப்புகள் பல தர வல்லது.

ஸ்ரீலக்ஷ்மி, பொருட்செல்வம் மட்டுமல்லாது நம் வாழ்விற்குத் தேவையான சகல நலன்களையும் அள்ளி வழங்கும் அன்னை. அஷ்டலக்ஷ்மியாக அருள் மழை பொழியும் அவளே, தீப ஒளித் திருநாளில், குத்து விளக்கின் முத்தொளியில் தீப லக்ஷ்மியாகப் பிரகாசிக்கின்றாள்.

தீபாவளி கொண்டாடும் முறைகள் பற்றி என் சென்ற வருட, தீபாவளிப் பதிவில் எழுதியிருக்கிறேன். பதிவுக்கு இங்கு சொடுக்கவும்.

எண்ணற்ற தீபங்கள், பொன்னொளி வீசும் நன்னாளில், ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்வது மிக நல்லது. எளிய முறையில், இந்தப் பூஜையைச் செய்யும் முறையை இப்போது காணலாம்.

பூஜை விதிகள்:

1.பூஜையை காலை அல்லது மாலை வேளையில் செய்யலாம்.  பூஜை செய்யும் போது, வெளியில் இருக்கும் இறைத்திருவுருவங்களுக்கு மட்டுமல்லாமல், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் சேர்த்தே பூஜை 
செய்கிறோம். ஆகவே, பூஜை செய்யும் போது, நல்ல முறையில் அலங்கரித்துக் கொண்டு பூஜையில் அமர வேண்டும்.

ஸ்ரீலக்ஷ்மி பூஜை செய்வதற்கு அமரும் போது, சிவப்பு, பிங்க், அல்லது மஞ்சள் நிற உடை உடுத்திக் கொண்டு அமர்வது சிறப்பு.

2.ஸ்ரீலக்ஷ்மி, விநாயகர் திருவுருவங்கள் அல்லது படங்களை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். குபேர யந்திரத்தையும் துடைத்து, அலங்கரிக்கவும்.

ஒரு பலகையில், கோலமிட்டு, சிவப்பு/மஞ்சள்/பச்சை  நிறத் துணியை விரித்து, அதில் லக்ஷ்மி தேவி, விநாயகர் திருவுருவங்களை வைக்கவும். விநாயகருக்கு வலப்புறமாக லக்ஷ்மி தேவி இருக்க வேண்டும். திருவுருவங்கள், கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். வெள்ளி, தங்க நாணயங்கள் இல்லத்தில் இருக்குமாயின் அவற்றையும் தனித் தட்டில் பூஜைக்கு வைக்கலாம். வடக்குப் பார்த்தாற்போல் ஒரு கோலமிட்ட சிறு பலகை/ ஒரு தாம்பாளம் வைத்து அதில் குபேர யந்திரம் வைக்கவும். யந்திரம் இல்லாவிட்டால், ஸ்ரீலக்ஷ்மி குபேரரின் படம் வாங்கி வைத்து, யந்திரத்தை, அரிசி மாவினால் கோலமாக வரையலாம்.

ல‌க்ஷ்மி தேவியின் முன்பாக, ஒரு சிறு தட்டில், அரிசி,பருப்பு, மங்கலப் பொருட்கள் நிரம்பிய பித்தளை/தாமிரச் செம்பை வைத்து, அதை, மாவிலை, மஞ்சள் பூசிய தேங்காய் முதலியவற்றால் அலங்கரிக்கவும். படங்களுக்கும் கலசத்துக்கும் பூமாலைகள் அல்லது சரங்கள் சாற்றவும்.

ல‌க்ஷ்மி தேவி, விநாயகர் திருமுன்பாக, இரு உயரமான குத்து விளக்குகளை வைத்து, நெய்யால் தீபமேற்றவும். குபேரருக்கு அருகிலும் ஒரு சிறு காமாட்சி விளக்கு வைத்து, நெய் தீபம் ஏற்றவும்.

பூஜை துவக்கும் முன்பாக, ஊதுபத்தி ஏற்றி வைத்து, நறுமணம் கமழும் சூழலை உருவாக்க வேண்டும்.

3. பூஜைக்கு, சிவந்த நிற மலர்கள், காசுகள் பயன்படுத்துவது நல்லது. நாணயங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். புதிய நாணயங்கள் பயன்படுத்த இயலுமாயின் செய்யலாம்.

பூஜைக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும். கரங்களை சுத்தம் செய்து கொண்டு, திருவிளக்கு ஏற்றவும். விளக்கு ஏற்றும் போது மனதுள் லக்ஷ்மி தேவியைத் தியானித்து, 'ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி' என்று சொல்லி ஏற்றவும்.

குபேரனின் திருவுரு முன்பாக, பதினோரு விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.

முதலில் விநாயகர் துதியைச் சொல்லி, விநாயகருக்கு, மலர்/அருகம்புல் தூவி வழிபாடு செய்யவும். பின்பு, ஸ்ரீலக்ஷ்மி தேவியை மனதுள் உருவகித்து, தியானித்து, விக்ரகத்தில் எழுந்தருளப் பிரார்த்திக்கவும்.

வெள்ளி தங்க நாணயங்களுக்கு, பாலால் அபிஷேகம் செய்து, அதன் பின் நீரால் அபிஷேகம் செய்து, துடைத்து பொட்டு வைத்து, மலர்கள் சமர்ப்பிக்கலாம்.

ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உபசார பூஜைகள் செய்யவும். விவரங்களுக்கு எளிய முறை பூஜை பதிவினைக் காண்க..

ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, சிவந்த நிற மலர்கள் அல்லது காசுகளால் அர்ச்சனை செய்யவும்.

பூஜையின் போது பாராயணம் செய்ய, விஸ்வஸார தந்த்ரோக்த ஸ்ரீலக்ஷ்மீ கவசத்திற்கு இங்கு சொடுக்கவும்.

அதன் பின், ஸ்ரீகுபேரனுக்குப் பூஜை செய்ய வேண்டும். குபேர யந்திரத்தின் மீது, படத்தில் காட்டியபடி நாணயங்கள் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கும் போதும் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வைக்கவும். ஒவ்வொரு கட்டத்திற்கும், புஷ்பம், அக்ஷதை சமர்ப்பிக்கவும்.

"ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய 
தனம் தான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம் மே 
தேஹி தேஹி தாபய ஸ்வாஹா"

அதன் பின் குபேர அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

தூப, தீப ஆராதனைகள் செய்து, நிவேதனம், தாம்பூலம் சமர்ப்பிக்கவும். நிவேதனமாக இனிப்புகள் சமர்ப்பிப்பது நல்லது. பாலினால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது பாயசம் விசேஷமாகக் கருதப்படுகின்றது.

கையில் பூ, அக்ஷதை எடுத்துக் கொண்டு, மும்முறை ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும். தேவியிடம் மனம் உருகப் பிரார்த்திக்கவும்.

மங்கலமான பாடல்களைப் பாடிக் கொண்டு ஆரத்தி எடுக்கவும்.

பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக, தேவியிடம், மன்னிப்புக் கோரி, பூஜையை நிறைவு செய்யவும்.

புனர் பூஜை;

மறு நாள், திருவுருவங்களுக்கு, தூப தீபம் காட்டி, இயன்றவற்றை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கி நமஸ்கரித்து, புஷ்பம் அக்ஷதை போட்டு, இருப்பிடம் எழுந்தருளப் பிரார்த்தித்து, சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும்.

மனம் ஒன்றி, இம்மாதிரி பூஜைகள் செய்வது, நிச்சயம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி முதலியவற்றைத் தரும். ஒற்றுமையான, சச்சரவுகளற்ற குடும்பத்தில், திருமகள் நித்தமும் வாசம் செய்கிறாள். நமக்குத் தேவை என்பதே ஏற்படாத வண்ணம் நல்லருள் புரிகின்றாள்.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

இறையருளால் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்....