நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 2 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI... SONG # 17....திருவெம்பாவை..... பாடல் # 17.பாடல்  # 17

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

கொங்குண் கருங்குழலி 

மணம் வீசும் அழகிய, கருங்கூந்தலை உடைய பெண்ணே!!

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்

செந்நிறமான விழிகளையுடைய திருமாலிடத்தும், பிரம்மனிடத்தும், தேவர்களிடத்தும் இல்லாத‌ ஓர்  பேரானந்தம் நம்மிடத்துப் பொருந்தும்படியாக, 

நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

நம்மைச் செம்மைப்படுத்தி, நம் இல்லங்கள் தோறும்  (தானே உவந்து) எழுந்தருளி,

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிமலர்களைத் தந்தருளும் வீரனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

எப்போதும் சுரக்கும் அருளால் அழகு பெற்ற திருவிழிகளை உடைய அரசனை, அடியார்களுக்கு அமுதம் போன்றவனை,

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 

நம் தலைவனாகிய எம்பிரானைப் பாடி, நலம் திகழ, தாமரை மலர்களால் நிறைந்துள்ள பொய்கையில் குதித்து நீராடுவோமாக!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

பேரானந்த நிலையில் இறைவனோடு ஒன்றுதலாகிய இன்பம், நம் போல்வருக்கு மட்டுமே கிட்டும்..தேவர்கள் நினைத்தாலும் அவர்களால் அடைய முடியாத இன்பம் இது... யோக நெறியைப் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டுமே இதை உணர முடியும்!.. அதனாலேயே 'மானிடப் பிறவி அரிது' என்று போற்றப்படுகின்றது. 

பேரானந்த நிலைக்கு ஈடு இணை இல்லையாதலால் 'எங்கும் இலாததோர் இன்பம்' எனப்பட்டது. 'கருங்குழல்' என்று சிரம் குறிக்கப்பட்டது. சஹஸ்ரதள பத்மம், சஹஸ்ராரம், துரியம், தசஷடதள பத்மம், அதோமுக மஹாபத்மம், சஹஸ்ராரம்புஜம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சஹஸ்ராரம், நம் உச்சந்தலையில் அமைந்துள்ளது.

‘நம் தம்மைக் கோதாட்டி’ என்பதை, 'நம்மைப் பெருமைப்படுத்தி' எனவும் சில உரையாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கோது என்பது குற்றம் என்ற பொருளிலும் வருவதால், நம்மிடம் இருக்கும் குற்றங்களை நீக்கிச் செம்மைப்படுத்துவதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். மும்மலங்கள் நீக்கப்படுவது இங்கு உள்ளுறையாகக் குறிக்கப்படுகின்றது.

'இங்கு நம் இல்லங்கள் தோறும்' என்றது, ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே அருள் செய்யும் பான்மையையே!..

'எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை'== வெளிப்படையாகப் பார்க்கும் போது, இறைவன் அடியார்கள் மேல் அருள்கூர்ந்து அவர்களுக்கு அருள் செய்யும் பான்மை விளக்கப்பட்டது.. அடியார்கள் மேல் கருணை மீதூற அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த எம்பிரானின் பெருங்கருணைப் பேராறு குறித்து, இங்கு சொல்லப்படுகின்றது.

யோக நெறியில் பார்க்கும் போது, இது,  இறைவன் நமக்குக் குருவாகும் பான்மையைச் சுட்டுகின்றது. சஹஸ்ராரத்திற்குக் கீழாக இருக்கும் 'குரு' என்ற சக்கரம்,வெண்ணிற பூர்ணசந்திர வடிவத்துடன், பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. மத்தியில் ஸ்ரீகுருவின் மஹா மந்திரமும் அவரது திவ்யத் திருவடிகளும் விளங்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு குரு உருவாகி இறைவன் அருள் செய்கிறான். இந்தச் சக்கரத்தை அடைந்த பிறகே சஹஸ்ராரத்தை அடைய முடியும்.'குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்' எனச்சொல்லப்படுவது இதனாலேயே.

இங்கு இறையருள் பெற்ற பின்னர், சஹஸ்ராரத்தை நோக்கிச் செல்ல இயலும்.. 

பங்கயப் பூம்புனல் என்று ஈற்றடியில் குறிப்பிடுவது,  ஆயிரம் இதழ் தாமரையாகிய சஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அம்ருத தாரையே...யோகிகளுக்கு இது மழையெனப் பொழிவதால் அது பூம்புனல் எனப்பட்டது..

பிறவாநிலையருளும் யோக மார்க்கம், மிக நுட்பமாக இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது. தக்கதொரு குருமுகமாக,  இதன் நுட்பங்களை அறிவது மிகவும் நன்மை பயக்கும். 

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..