நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2012

HOW TO PREPARE MAA VILAKKU....மாவிளக்கு போடும் முறை

மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.

அம்பிகையின் அருளாட்சி நின்று பொலியும் ஆடி மாதத்தில் தேவியைப் பலவாறு வழிபட்டுத் துதிக்கிறார்கள் பக்தர்கள். அவற்றுள் ஒன்று மாவிளக்கேற்றுதல்.

ஜோதி வழிபாடு, நம் பாரம்பரியத்தில் தொன்று தொட்டு தொடர்ந்து வருகின்ற ஒரு வழிபாட்டு முறை. மாவிளக்கு, ஜோதித் தத்துவத்தையும், பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது.

மாவிளக்கின் தத்துவம்:

இருள் சூழ்ந்த ஓர் அறையில்  ஒரு திருவிளக்கை ஏற்றி வைத்தால், அதிலிருந்து பெருகுகிற ஒளி வெள்ளம், அந்த அறையிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் பார்வைக்குப் புலப்படுத்துவது போன்று, நம் மனமாகிய அஞ்ஞான இருள் சூழ்ந்த அறையில், ஞானமாகிய ஒளி தீபத்தை ஏற்றும் போது அதனுள் உறைந்திருக்கும் ஜோதிஸ்வரூமான அம்பிகையை  நாம் உணர்ந்தறியலாம்.

மாவிளக்கை இறைவழிபாட்டுக்கென தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் ஒரு தத்துவம் இருக்கிறது. நோக்குகிற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்  பேரொளி வடிவான இறைத்தத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.
மாவிளக்கில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருட்கள், அரிசிமாவு, வெல்லம், நெய் ஆகியன.

அரிசி(அன்னம்) பிராணமயம். அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும். உலகில் உயிர்களின் வாழ்வாதாரமாக உள்ளது அன்னமே.

வெல்லத்தின் குணம் மதுரம் அதாவது இனிமை. அம்பிகை, மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுள்ளும், மதுரமான அம்பிகையே உறைகிறாள். அண்ட சராசரங்களும் அவள்  லீலையன்றி வேறில்லை. லீலை என்று ஏன் சொல்கிறோமென்றால், இப்பிரபஞ்ச விளையாட்டை, அம்பிகை மிகுந்த விருப்போடும் சிரத்தையோடும் செய்கிறாள். விருப்பமில்லாமல் ஒரு  செயல் செய்யப்படுமானால் அது செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகச் (கடமைக்காக)செய்யப்படுவதாகிவிடும்.

அக்னிபகவான், நெய்யில் வாசம் செய்வதாக ஐதீகம். ஹோமங்களின் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருள்களை, அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறார். நெய்யை வார்த்தே ஹோமத்தீயை வளர்க்கிறோம். அக்னி பகவானின் சக்தி நெய்யிலேயே அடங்கியுள்ளது. எல்லா உயிர்களின் செயல்களுக்கும் காரணமான சக்தி அந்த ஆதி சக்தியே. ஆகவே, நெய்யினுள்ளும் அந்த ஆதிசக்தியே உறைகிறாள்.

மாவிளக்கின் ஜோதியாக நின்றொளிரும் ஜோதி ஸ்வரூபமான அம்பிகை நம் இல்லங்கள் தோறும், உள்ளங்கள் தோறும் ஆத்மஞான ஜோதியை ஏற்றி அருள் புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.

மாவிளக்கு தொடர்பான சம்பிரதாயங்கள்:

பெரும்பாலான‌ வீடுகளில், ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் மாவிளக்குப் போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். இல்லத்திலோ அல்லது கோவிலுக்கோ சென்று மாவிளக்கேற்றுவார்கள். சில அம்மன் கோவில்களில், பக்தர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கேற்றும் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யும் போது மாவிளக்கேற்றுவது சில குடும்பங்களில் வழக்கத்தில் உள்ளது.

மாவிளக்கின் வகைகள்:
மாவிளக்கு, அரிசிமாவை சலித்து போடும் மாவிளக்கு, அரிசி மாவை சலிக்காமல் போடும் மாவிளக்கு, துள்ளு மாவு (பச்சை உடைத்தல்), ஜோதிப் பிண்டி என்று பல வகைப்படும். பொதுவாக, சாந்தமான தெய்வங்களுக்கு சலித்தும், உக்ரமாக இருக்கும் மாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கு சலிக்காமலும் போடுவது வழக்கம். குலதெய்வங்களுக்கு, பிசையாமலும், மற்ற‌ தெய்வங்களுக்கு பிசைந்தும் செய்வது சம்பிரதாயம்.சில வீடுகளில் அரிசியை அரைத்துப் போடுவார்கள். பொதுவாக சாந்தமான தெய்வங்களுக்கு அரைத்துப் போடுவது வழக்கமாக இருக்கிறது. மாரியம்மனுக்கு, இடித்து/திரித்துப் போடுவது வழக்கம்.


குல தெய்வத்திற்கு மாவிளக்குப் போடும் முறை:
குலதெய்வத்திற்கு போடுவதற்கு, பொதுவாக கீழ்க்கண்ட முறைகளே பின்பற்றப்படுகின்றன.
கோவிலில் போடுவதென்றால்:

சில கோவில்களில், அந்தக் கோவிலில் சென்றே அரிசி ஊற வைப்பதிலிருந்து செய்ய வேண்டுமென்ற சம்பிரதாயம் உண்டு. அவ்வாறு இல்லையென்றால், மாவை நாமே தயாரித்து எடுத்துச் செல்லலாம்.
கோவிலுக்கு கீழ்க்கண்ட பொருட்களை எடுத்துச் செல்லவும்.

1.அரிசியை,குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, மிக்ஸி அல்லது ஈர மாவு திரிக்கும் மிஷினில் கொடுத்து மாவாக்கித் தயார் செய்து எடுத்துக் கொள்ளவேண்டும். குலதெய்வம், சாந்தமான தெய்வமா அல்லது உக்ர தேவதையா என்பதைப் பொறுத்து, மாவை, சலித்து/சலிக்காமல் உபயோகிக்கலாம்.
2.ஒரு பெரிய தாம்பாளம் அல்லது பாத்திரம். இது மாவிளக்கு ஏற்ற. கலப்பதற்குத் தனியாக ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.

3.நெய்யை உருக்கி ஒரு சம்புடம்/தூக்கில் எடுத்துக் கொள்ளவும். திரியை இதிலேயே போட்டு வைத்தால், திரி நன்றாக ஊறி, ஏற்ற வசதியாக இருக்கும்.பொதுவாக மாவிளக்குக்கு ஜோதித்திரி அல்லது கமலத்திரி தான் உபயோகிப்பது வழக்கம். பஞ்சுத்திரியும் உபயோகிக்கலாம்.

4.நாட்டுச் சர்க்கரை. அரிசி கால் கிலோ என்றால் கால் கிலோ சர்க்கரை தேவைப்படும். ஏலக்காயைப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பச்சைக் கற்பூரம் சேர்க்கும் வழக்கம் இருந்தால் அதையும் தனியே எடுத்துக் கொள்ளவும்.

5. கோல மாவு. சில வீடுகளில் மாவிளக்கு மாவையே கோலம் போட உபயோகிப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டி செய்து கொள்ளவும்.

6. வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், ஊதுபத்தி, பூ, கற்பூரம், முதலிய‌ பூஜை சாமான்கள்.

7. கற்பூரத் தட்டு, வெற்றிலை பாக்கு வைக்க ஒரு தட்டு அல்லது தாம்பாளம், ஆரத்தி எடுக்க ஒரு தட்டு.

ஆகியவை தேவை.

ஏற்றும் முறை:

கோவிலில் குலதெய்வத்தின் முன்பாக, மாவிளக்கு ஏற்றவென ஒதுக்கப்பட்ட இடத்தில் கோலமிடவும். ஒரு பாத்திரத்தில் மாவு,நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்/பச்சைக்கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை தாம்பாளம்/பாத்திரத்தில் மாற்றி, குவியலாகப் பிடித்து வைக்கவும். தேவையெனில் சிறிது நெய் சேர்க்கலாம். ஆனால் மாவு உதிர் நிலையில் இருக்க வேண்டும். தாம்பாளம்/பாத்திரத்தை கோலத்தின் மேல் வைக்கவும்.

மாவின் நடுவில் குழி செய்து உருக்கிய நெய் ஊற்றி, அவரவர் வீட்டு வழக்கப்படி ஒரு முகம் அல்லது இரு முக தீபமாக ஏற்ற வசதியாகத் திரி போடவும். பொதுவாக, கிழக்கு மேற்காக இருமுக தீபம் ஏற்றுவது சம்பிரதாயம். குடும்பத்தைக் காக்கும் தெய்வமாதலால், குடும்ப‌ ஒற்றுமையை வேண்டி இருமுக தீபம் ஏற்றுவது வழக்கம்.நான்கு முகம் ஏற்றுவதும் உண்டு.

தாம்பாளம்/பாத்திரத்தின், நான்கு பக்கமும் சந்தனம் குங்குமம் வைத்து, சுற்றிலும் பூக்கள் அல்லது பூச்சரம் வைக்கவும். பக்கத்தில் சிறு கோலமிட்டு, ஒரு தாம்பாளத்தில், வெற்றிலை பாக்கு பழம், தேங்காய் வைக்கவும். கற்பூரத் தட்டில் கற்பூரம் வைக்கவும். ஊதுபத்தி ஏற்றிக் கொள்ளவும்.

குலதெய்வத்தை மனமார வேண்டிக் கொண்டு விளக்கேற்றவும்.

பொதுவாக, மாவிளக்கு ஏற்றும் பொழுது, தீபக்காலில், கோவில் விளக்கிலிருந்து தீபம் ஏற்றிக் கொண்டு வந்து விளக்கேற்றுவது வழக்கம். வீட்டில் ஏற்றுவதானால், தீபக்கால், அல்லது கற்பூரம் ஏற்றி, அந்த ஜோதியிலிருந்து மாவிளக்கு ஏற்றவும். நான்கு முகம் ஏற்றுவதானால், நெய் குறையக் குறைய, எல்லா முகங்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நிறைவாக ஒரே முகமாக தீபத்தைக் கொண்டு  வந்து  பிரகாசமாக எரியச் செய்யலாம்.

அம்பிகையின் துதிகளைக் கூறி மனப்பூர்வமாக வழிபாடு செய்யவும். விளக்கின் ஜோதியில் அம்பிகை எழுந்தருளுவதாக ஐதீகம். ஆகவே மனம் ஒன்றிச் செய்ய வேண்டியது முக்கியம். யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்து, அம்பிகையின் அருளால் நலமடைந்ததன் காரணமாக இந்த வழிபாடு செய்யப்படுமாயின், அவரைப் படுக்க வைத்து, பாத்திரத்தை, இருவராகப் பிடித்துக் கொண்டு, அவர் தலை முதல் கால் வரை ஏற்றி இறக்கி, பின் கோலத்தின் மீது மறுபடியும் வைக்கவும்.

விளக்கில் உள்ள நெய் தீர்ந்து, விளக்கு மலை ஏறும் தருவாயில், திரியை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து, கோவிலில் எரியும் விளக்கில் சேர்த்து கோவில் விளக்கில் சிறிது நெய் ஊற்றவும்.

பின், மாவிளக்கு, உடைத்த தேங்காய், பழம் வெற்றிலை பாக்கை நிவேதனம் செய்து கற்பூரம் காட்டவும். மஞ்சள்,குங்குமம் சேர்த்த ஆரத்தி சுற்றிக் காட்டவும்.

வீட்டில் செய்வதென்றால்:
மாவிளக்குப் போடும் நாளில், வீடு, பூஜையறையை மெழுகிக் கோலமிட்டு, ஸ்வாமி படங்கள், விளக்குகளைச் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்கவும்.

வீட்டுப் பெண்கள், மங்கள(எண்ணை) ஸ்நானம் செய்து, பட்டு அல்லது, நனைத்து உலர்த்திய புடவை அணிந்து கொள்ளவும்.அவரவர் வழக்கப்படி, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, கட்டாயம் பூ வைத்துக் கொள்ள வேண்டும்.

கோவிலில் ஏற்றும் முறையிலேயே வீட்டில் ஏற்றவும். விளக்கு மலை ஏறும் தருவாயில், திரியை தீபக்காலில் சேர்க்கவும்.சில வீடுகளில், மாவிளக்கேற்றி விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்வது வழக்கம்.

பூஜையின் போது பாராயணம் செய்ய துக்க நிவாரண அஷ்டகத்துக்கு இங்குசொடுக்கவும்.

வீட்டில் மாவிளக்கு ஏற்றும் போது, பாயசம், கலந்த சாத வகைகள், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்தியங்களை, மாவிளக்குடன் சேர்த்து நிவேதனம் செய்வார்கள்.
மாவிளக்குப் பிரசாதத்தை தாம்பூலத்தோடு சுமங்கலிகளுக்குத் தருவது நல்லது. பிரசாதமாக, பக்தர்களுக்கும் விநியோகிக்கலாம்.

பொதுவாக, மாவிளக்கை வீட்டிற்கு மூத்த பெண்மணிகளே ஏற்றுவார்கள். சில வீடுகளில், வீட்டிற்குப் புதிதாக வந்த மருமகளை ஏற்றச் சொல்வார்கள். மாவிளக்குப் போடுபவர்கள், விளக்கேற்றும் முன் பால் பழம் போன்ற எளிய உணவும், இரவில் பலகாரம் (டிபன்) சாப்பிடுவதும் வழக்கம்.

மாவிளக்கு பிசைந்து செய்யும் முறை;
1. முன்பு கூறியதைப் போல், அரிசியை ஊறவைத்து, மிக்ஸியில் திரித்து மாவாக்கிக் கொள்ளவும். அரிசியின் சமஅளவு பாகு வெல்லம் (அரிசி கால் கிலோ என்றால் வெல்லமும் கால் கிலோ) தூள் செய்து கலந்து கொள்ளவும். ஈர அரிசி மாவு என்பதால், வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் உருட்டும் பதத்திற்கு வரும்.இல்லாவிட்டால், சிறிது(தேங்காயை உடைத்த) இளநீர் சேர்த்துக் கொள்ளலாம். சில வீடுகளில் தேன் சேர்ப்பார்கள்.

ஏலப்பொடி சேர்த்து, அவரவர் குடும்ப வழக்கப்படி ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். பொதுவாக அம்பிகைக்கு இரண்டு மாவு உருண்டைகளும், திருப்பதி பெருமாளுக்கு ஒரு பெரிய மாவு உருண்டையாகவும் செய்து ஏற்றுவது வழக்கம்.

தலை வாழை இலையை, நுனி அம்பிகைக்கு இடப்பக்கம் (நாம் சாப்பிடும் போதுபோடுவதைப் போல்) வருமாறு போட்டு, மாவு உருண்டைகளை வைக்கவும்.

நான்கு பக்கமும் சந்தனம், குங்குமம், பூ வைக்கவும். மத்தியில் குழி செய்து, நெய் ஊற்றி, திரியிட்டு தீபம் ஏற்றவும். தட்டில் வைத்துத் தீபம் ஏற்றும் வழக்கம் என்றால், மாவு உருண்டைகள் இரண்டையும் ஒரே தட்டில் வைக்கவும்.

2. இலையில் ஏற்றும் போது, தேங்காய், வெற்றிலை பாக்கு போன்றவற்றை இலையிலேயே வைக்கலாம். தட்டில் ஏற்றுவது என்றால் தனியாக இவற்றை மற்றொரு தட்டில் வைப்பது சிறந்தது.

ஏற்றும் முறை:
குலதெய்வத்திற்கு ஏற்றும் முறையையே இதற்கும் பின்பற்றவும்.


துள்ளு மாவு:

ஊர் காவல் தேவதைகளுக்கும், சில தெய்வங்கள் விரதம் இருப்பதாகக் கருதப்படும் காலக்கட்டத்திலும், சாந்தம் செய்வதற்காக துள்ளு மாவு படைப்பார்கள்.

உதாரணமாக, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். ஆகவே, அந்த நாளில், கோவிலிலும், மாரியம்மனைக் கும்பிடும் குடும்பங்களிலும் துள்ளு மாவு படைப்பார்கள்.

துள்ளு மாவு செய்யும் விதம்:
பிசைந்த மாவிற்குச் செய்வது போல், அரிசியை ஊற வைத்து, திரித்துக் கொள்ளவும், சலிக்கத் தேவையில்லை. இதை, ஒரு தட்டில் அல்லது துணியில் பரப்பிக் காய வைத்து, பின் சம அளவு வெல்லம்/நாட்டுச் சர்க்கரை  சேர்த்துக் கலந்து, நிவேதனம் செய்யவும். இதை மாவிளக்காக ஏற்றாமல் அப்படியே உதிர் நிலையிலேயே நிவேதனம் செய்ய வேண்டும்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, திருமலையின் மீதிருந்து திருவருள் மழை பொழியும் திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு வழிபாடு செய்வது பெரும்பாலான வைணவக் குடும்பங்களில் வழக்கமாக இருக்கிறது.

மலை ஏறி வந்து தன்னைக் காண இயலாத பக்தர்களின் இல்லங்கள் தோறும் தாமே சென்று ஜோதிஸ்வரூபமாக அருள் மழை பொழிகிறார் ஸ்வாமி ஏழுமலையான்.

இந்த வழிபாடு செய்ய சில நியமங்கள் உள்ளன.

1. இது பொதுவாக, புரட்டாசி மாதம், முதலாம், மூன்றாம், ஐந்தாம் (வருமானால்)சனிக்கிழமைகளில் (ஒற்றைப்படை எண் வரும் சனிக்கிழமைகளில்) செய்யப்படுகிறது.

2. மேலே குறிப்பிட்ட வகையில் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம். குறிப்பிட்ட சனிக்கிழமையில் திருமலையில், பிரம்மோத்ஸ்வம் அல்லது த்வஜாரோஹணம்(கொடியேற்றம்) இருந்தால் இந்த வழிபாடு வேறொரு சனிக்கிழமையில் செய்யலாம்.

மாவிளக்கு செய்வது முன்பு சொன்ன முறையில் தான். பச்சைக்கற்பூரம், முந்திரிப் பருப்பு சேர்ப்பது வழக்கம்.

சில வீடுகளில் (குலதெய்வத்திற்கு செய்வது போல்) தட்டில் அல்லது தாம்பாளத்தில் மாவைப் பரப்பி, நடுவில் குழி செய்து, விளக்கேற்றுவார்கள். சிலர் வெள்ளிப் பாத்திரத்தில், மாவை வைத்து, நிவேதனம் செய்வார்கள். சில வீடுகளில் ஏழுமலையானுக்கு பிசைந்த மாவிளக்கு ஏற்றும் சம்பிரதாயமும் இருக்கிறது.

ஏற்றும் முறை:

1. வீடு, பூஜையறையைக் கோலமிட்டுத் தயார் செய்து கொண்டு, தனி மணையில் திருவேங்கடமுடையானின் தனிப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கவும்.

2. மணையின் முன் கோலம் போட்டு மாவிளக்குப் பாத்திரத்தை வைக்கவும். மாவிளக்கில் விளக்கேற்றும் பழக்கம் இல்லாவிட்டால், பக்கத்தில் சுவாமிக்கென்று ஒரு விளக்கு நெய் விட்டு ஏற்றுவது வழக்கம்.

3.ஷோடசோபசார பூஜை செய்து திருமலையப்பஸ்வாமியை பூஜிக்கவும்.

4.சுவாமி விளக்கு மலையேறும் சமயம், "கோவிந்தா" என்று உரக்க நாமாவளி சொல்லித் துதிப்பது வழக்கம். அக்காரவடிசல், லட்டு போன்றவற்றை மாவிளக்குடன் நிவேதனம் செய்யவும்.


கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில், விசேஷமாகச் செய்யப்படும் விரத பூஜைகளின் முடிவில்(வரலக்ஷ்மி விரதம் போல) 'ஜோதிப்பிண்டி' எனும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அரிசியை ஊற வைத்துக் களைந்து, மிக்ஸியில் திரித்து மாவாக்கி, அந்த ஈர மாவுடன், பொடிசெய்த வெல்லம் ஏலம் கலந்து, நெய் சேர்த்து, சிறிய அளவில், 7 அல்லது 16 உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் ஒரு திரியை வைத்து, இவ்வாறு தயார் செய்த ஜோதிகளை மொத்தமாக ஒரு தட்டில் வைத்து ஏற்றி ஆரத்தி போல் சுற்றிக் காட்டுவார்கள். பூஜையின் முடிவில் இவ்வாறு செய்வது வழக்கமாக இருக்கிறது. வெல்லத்தை நேரடியாகக் கலக்காமல் பாகு வைத்து(ஒரு கம்பிப் பதம்) கலப்பதும் வழக்கம். இது தம்பிட்வை என்றும் அழைக்கப்படுகிறது. மராட்டியக் குடும்பங்களில் இந்த வகை மாவிளக்கு ஆரத்தி முக்கியமானதாக விளங்குகிறது.

மாவிளக்கு ஏற்றுவதால், குடும்ப ஒற்றுமை, விரோதிகள் தொல்லை நீங்குதல், நோய் நொடிகள் இல்லாதிருத்தல், துர்சக்திகளின் தாக்குதல் இல்லாதிருத்தல் ஆகியவை கிட்டும்.

மாவிளக்கு ஏற்றும் போது, அரிசி, நெய் ஆகியவற்றில் ஏற்றப்படும் தீபத்திலிருந்து வெளியாகும் புகை, துர் சக்திகள், எதிர்மறை எண்ண அலைகள்,நுண் கிருமிகள் ஆகியவற்றை அகற்றும் சக்தி கொண்டது. ஆகவே, பலர் கூடும் கோவில்களிலும், நம் இல்லங்கள் தோறும் மாவிளக்கு வழிபாடு செய்கிறோம்.

ஆடி வெள்ளிக் கிழமைகளில், மாவிளக்கு வழிபாடு செய்து, இறையருள் பெற்று

வெற்றி பெறுவோம் !!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

 1. வணக்கம்
  மாவிளகில் இத்தனை முறைகள்,
  அற்ப்புத்மாய் உள்ளது விளக்கங்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. "தம்பிட்டா "சா" திவா" என்று மராத்தியில் சொல்லப்படும் மாவிளக்கு போடுதல் பற்றி எத்தனை விவரங்கள் எத்தனை செயல்முறை விளக்கங்கள்...
  யோசித்துப்பார்த்தால் மாவிளக்கு என்ற சொல்லில் வரும் "மா" அனைத்து ஜீவராசிகளையும் ஈன்ற அன்னையை அழைக்கும் குரலாக ஒலிக்கிறது. பஞ்சபூத (அரிசி‍‍(பூமி), நெய்(நீர்),ஜோதி (நெருப்பு),ஆகாயம், காற்று (வாயு)) வேண்டுதல் எப்படி மாவிளக்கு பக்குவமாகி நாவில் இட்டதும் அமிர்தம் போல் இனிக்கிறதோ அதே மாதிரி மனதை பக்குவப்படுத்தி அன்னையின் அருளை பெற்றுத்தரும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக அறிந்துள்ளனர்.
  விவரம் அறியாமல் தேடுவோர்களுக்கு சகோதரியின் இக்கட்டுரை மிக்க உதவியாக இருக்கும். அன்னையின் அருள் தங்கள் இல்லத்தில் பன்மடங்கு பெருக என் அன்னையிடம் வேண்டி நிற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. //sriganeshh said...
  "தம்பிட்டா "சா" திவா" என்று மராத்தியில் சொல்லப்படும் மாவிளக்கு போடுதல் பற்றி எத்தனை விவரங்கள் எத்தனை செயல்முறை விளக்கங்கள்..//

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  மாவிளக்கில் பஞ்சபூதத் தத்துவங்கள் அடங்கியிருப்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மாவிளக்கின் இனிமை போல், தங்கள் தமிழினிமையும் என்னை மிகக் கவர்ந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. Udhaya Kumar said...
  //மாவிளகில் இத்தனை முறைகள், //

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குலதெய்வம் கோவிலில் மாவிளக்கு போடும் போது, மாவிளக்கு எரிந்துகொண்டிருக்கும் போதே நைவேத்தியம் செய்ய வேண்டுமா? அல்லது மலையேறிய பின் செய்யவேண்டுமா? தயவு செய்து விளக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக, மாவிளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது நிவேதிப்பது இல்லை ஐயா!.. விளக்கு மலையேறும் தருவாயில், திரியை தனியே எடுத்து ஒரு தட்டில் வைத்து, கோயில் விளக்கில் சேர்த்து சிறிது நெய் ஊற்றி விட்டு, மாவிளக்கு மாவு, தேங்காய் (உடைத்தது), பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்வதே வழக்கம்.. திரியை, விளக்கிற்கு பயன்படுத்தாத கோயில்களில், எண்ணை/நெய் ஊற்றிய‌ ஒரு அகலில், எரியும் திரியை வைத்து விட்டு இவ்வாறு செய்யலாம்.. தீபமாக எரியும் போது, மாவிளக்கு மாவை நிவேதனம் செய்வது பொதுவான வழக்கமில்லை.. தங்கள் இல்லத்துப் பெரியவர்களையும் இது குறித்துக் கேட்கவும். தங்கள் பெயரோடு கருத்துரையிடக் கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
 6. எங்கள் குலதெய்வம் ராமேஸ்வரம் அருகில் உள்ள நைனார் கோவில் என்ற தலத்தில் இருக்கும் சிவபெருமானாவார். சென்னையில் இருந்து ஈரமாவை அரைத்து எடுத்து சென்றால் இரண்டு நாட்களுக்கும் மேல் கெடாமல் கொண்டு சென்று கொண்டுவருவது எப்படி? தயவு செய்து ஆலோசனை கூறவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வாறு செய்வது சிரமமே!..போகும் இடத்தில், உறவினர் வீடுகள் இருந்தால், அவர்களது உதவியை நாடலாம். அல்லது, திருக்கோயில் அர்ச்சகர் (உங்களுக்காக, வழக்கமாக வழிபாடுகள் செய்பவரிடம்) சொன்னால், ஏற்பாடு செய்வார்கள்.. பொதுவாகவே, கோயில்களில், மாவிளக்கு இடிக்கவென தனியாக கல் உரல்கள் இருக்கும்.. அங்கு சென்று, அரிசி ஊற வைத்து, இடித்துப் பயன்படுத்தலாம். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில், அங்கு சென்று தான் அரிசி ஊற வைத்து, இடிக்க வேண்டுமென்ற வழக்கம் இருக்கிறது. இல்லையென்றால், முதல் நாளே ஊருக்குச் சென்று, அங்கு, தங்குமிடத்திலேயே அரிசி ஊற வைத்து, அருகிலிருக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளலாம். இப்போது, சில குடும்பங்களில், ஊற வைக்காத அரிசியை, மிஷினில் அரைத்துப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இது அவ்வளவு சிறப்பு என்று சொல்ல முடியாது.. தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் செய்கிறார்கள்.

   நீக்கு
 7. ஆலோசனைகளுக்கு நன்றி மேடம் !
  இப்படிக்கு
  மீரா ஜானகிராமன்

  பதிலளிநீக்கு
 8. கோவிலில் மாவிளக்கு அம்மன் தேர் பவனி யின் போது மட்டும்தான் போட வேண்டுமா?

  திருவிழா நடக்காமல் மாவிளக்கு போட கூடாதா?

  பதிலளிநீக்கு
 9. அவரவர்கள் வீட்டு வழக்கத்தை உத்தேசித்து, ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே மாவிளக்கிடும் வழக்கம் உள்ளது. பதிவிலும் தந்திருக்கிறேன்!...பொதுவாக, UNKNOWN
  என்று வரும் கருத்துரைகளை அனுமதிப்பதில்லை. தங்கள் ID யோடு இனி கருத்துரை தர வேண்டுகிறேன்!.

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..