நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

CHITHRA POURNAMI POOJA(25/4/2013)....சித்ரா பௌர்ணமி பூஜை.சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நன்னாளே சித்ரா பௌர்ணமி. 

மற்ற எல்லா பௌர்ணமி தினங்களை விடவும் சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

சித்ராபௌர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

சித்ரகுப்தர் புராணம்:
ஒரு சமயம், கயிலையில்  பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார்.   அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து  தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சிவபெருமான், மானிடர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியை அவருக்கு வழங்கினார். சித்ர குப்தரும் அவ்வாறே செய்யலானார்.

இவ்வாறு சித்ரகுப்தர் தோன்றிய தினமே சித்ரா பௌர்ணமி.

'சித்' என்றால் மனம், 'குப்த' என்றால் மறைவு எனவும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவபுண்ணியங்களைக் கண்காணிப்பதாலும் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.

பின்னொரு சமயம், தேவேந்திரனின் தவத்திற்கு மெச்சி, சிவபெருமான், சித்ரகுப்தரை, தேவலோகப் பசுவான காமதேனுவின் வயிற்றில் உதிக்குமாறு பணித்தார். அதன் படி, சித்ரகுப்தரும், காமதேனுவுக்கு மகனாகப் பிறந்தார்.   அவரை, யமதர்மராஜருக்கு உதவியாக, ஜீவராசிகளின் பாவபுண்ணியங்களைக் கணக்கிடும்படி சிவனார் பணிக்க, சித்ரகுப்தரும், அவ்வாறே செய்து வருகிறார்.

இது குறித்த மற்றொரு புராணக்கதை.

யமதர்மராஜர்,  தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக் கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர். அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன் தோன்றினார். காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர். அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், யமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார். இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.

சித்ரா பௌர்ணமி பூஜை:
சித்திரை மாதம் பௌர்ணமி பெரும்பாலும் சித்திரை நட்சத்திர தினத்தன்றே வரும். சித்ரா பௌர்ணமியன்று  அதிகாலை, வீடு வாசலை மெழுகி, மாக்கோலமிட வேண்டும். இல்லத்தில், தெற்கு பார்த்து வாசற்கதவு அல்லது ஜன்னல் இருந்தால் திறந்து வைத்து, அந்த இடத்தை ஒட்டி, பூஜை செய்யும் இடத்தை அமைத்தல் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தில், ஒரு ஆள் அமர்ந்திருப்பது போல, சித்ரகுப்தர் உருவை மாக்கோலமிட வேண்டும். அவரது திருக்கரங்களில் ஏடும் எழுத்தாணியும் இருப்பது போல் வரைய வேண்டும். பழங்காலத்தில், ஏட்டையும் எழுத்தாணியையும் பூஜைக்கு வைப்பார்களாம். சில வீடுகளில் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை, மாக்கோல மாவால் பாதங்கள் வரைவதும் வழக்கம்(ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு வரைவது போல்). ஆனால், சித்ரகுப்த பூஜைக்கு, 8 வடிவம் வரைந்து அதன் மேல் விரல்கள் இருக்குமாறு வரைவார்கள்.

சித்ரகுப்தரது படம் இருப்பின் அதனையும் வைத்துப் பூஜிக்கலாம்.சௌகரியப்பட்டால், கலசம் வைத்துப் பூஜிக்கலாம். இல்லாவிட்டால், சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தூப தீபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டி மனமுருகி வழிபட வேண்டும். ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவராதலால், வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், சித்ரகுப்தருக்குப் பலவண்ண வஸ்திரம் சாற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.நிவேதனத்துக்கு, தயிர்சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவை நிவேதனம் செய்ய வேண்டும்.

காமதேனுவின் திருவயிற்றில் உதித்தவராதலால், பசும்பால், தயிர் முதலியவற்றை சித்ரகுப்தருக்கு நிவேதிப்பதில்லை. அன்றைய தினம் விரதமிருப்போர், உப்பு, பசும் பால்,  தயிர் முதலியவற்றை உட்கொள்வதுமில்லை. எருமைப் பால், எருமைத் தயிர் முதலியவையே நிவேதனம். அபிஷேகத்திற்கும் பசும் பால் உபயோகிப்பதில்லை. அன்றைய தினம் எருமைத் தயிர் உபயோகித்து செய்த தயிர் சாதத்தை  பிரசாதமாக‌ விநியோகிப்பது வழக்கம்.

பூஜையுடன் கூட விரதமும் எடுப்பதானால், பெரும்பாலும் ஹவிஸையே நிவேதனத்துக்குப் பயன்படுத்துவார்கள். 'ஹவிஸ்' என்பது, சாதம் கொதிக்கும் பொழுது அதில் ஒரு கரண்டி நெய்யை ஊற்றித் தயாரிக்கப்படுவது. இது மிகவும் விசேஷமான நிவேதனமாகும். விரதம் எடுக்காவிட்டால் கூட, இதை நிவேதனத்திற்குப் பயன்படுத்தலாம்.

பூஜை முடிந்ததும், நெல், கோதுமை, எள், பயறு, உளுந்து, கடலை, காராமணி, துவரை அல்லது துவரம் பருப்பு, கொள்ளு முதலிய நவ தானியங்கள், மட்டைத் தேங்காய், கொத்துடன் மாங்காய் அல்லது இரண்டு மாங்காய்கள், தாம்பூலம் தக்ஷிணை முதலியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். சித்ரகுப்தரது புராணத்தை வாசிப்பது பூஜையின் முக்கிய அம்சமாகும்.

அன்று மாங்காய், மாம்பழம், வாழைப்பழம் முதலியவற்றை உணவில் சேர்க்கலாம். சிறியவர்கள், பெரியவர்கள் யாரானாலும், பூஜை செய்ய இயலாதவர்களானாலும் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது மிகச் சிறப்பு.

சித்ரா பௌர்ணமி விரதம்:
சித்ரா பௌர்ணமி விரதம் எடுப்பதானால், ஒரு சித்ராபௌர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு மாதமும், பௌர்ணமியன்று மேற்கூறியவாறு பூஜை செய்து உப்பில்லாமல் சாப்பிட்டு விரதமிருக்க வேண்டும்(மொத்தம் பன்னிரண்டு பூஜைகள்). அடுத்த சித்ரா பௌர்ணமியன்று விரதத்தை முடிக்கலாம். சௌகரியப்படாவிட்டால், நடுவில் ஏதேனும் ஒரு பௌர்ணமி தினத்தில் முடிக்கலாம்.

விரதம் எடுப்பதற்கு என விசேஷமாகப் பூஜைகள் இல்லை. மேற்கூறியவாறே பூஜை செய்து ஆரம்பிக்கலாம். ஆனால் விரத நிறைவு தினத்தன்று, வழக்கமாகச் செய்யும் பூஜையைச் செய்து விட்டு, ஐந்து கலசங்களை வைத்து, கலச பூஜை செய்ய வேண்டும்.  ஐந்து வைதீகர்களுக்கு பஞ்ச தானம்(வேஷ்டி, தீர்த்த பாத்திரம், தீபம், மணி, புத்தகம்) முதலியவற்றைத் தானம் செய்து விட்டு அவர்களுக்கு உணவிட வேண்டும்.

சித்ரா பௌர்ணமி விரத மகிமை:
சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் வழிபாடுகள், எல்லா தேவர்களையும் திருப்தியடையச் செய்கின்றன. சித்ரகுப்தர், இந்த பூஜையால் அகமகிழ்ந்து, அதன் காரணமாக, பூஜை செய்பவரது பாவ புண்ணியங்களை பரிவுடன் தீர்மானிக்கிறார். இதை விளக்கும் ஒரு புராணக் கதை பின்வருமாறு.....

ஒரு சிறுவனுக்கு முரட்டுத் தனம் அதிகமாக இருந்தது. அவனுக்குப் படிப்பும் வரவில்லை.  நாளாக ஆக அவன் கெட்ட பழக்கங்களும் கூடிக் கொண்டே போயின. அவன் தாய் மிகக் கவலை கொண்டாள். மகனை அழைத்து, 'மகனே!!, சித்ரகுப்தய நம: எனத் தினமும் சொல்லி வா. சித்ரகுப்தர் உனக்கு நல்வழி காட்டுவார்' என்று கூறினாள். அவனும் அவ்வாறே கூறி வந்தான். அவன் வளர்ந்து பெரியவனானான். அவனுக்கு, அந்திமக் காலம் நெருங்கியது. சித்ரகுப்தர் அவன் ஏட்டைப் புரட்டினார். தனது பெயரைக் கூறிய ஒரு நல்ல செயலைத் தவிர அவன் ஏதும் செய்யவில்லை என அறிந்தார். அவன் மேல் இரக்கம் கொண்டார். அவனுக்கு இன்னும் ஏழு நாளில் மரணம் சம்பவிக்க இருந்தது.

சித்ரகுப்தர் அவன் கனவில் தோன்றி,' நீ உன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியமும் செய்யவில்லை.  இன்னும் ஒரு வாரமே உனக்கு ஆயுள். ஆகவே, நீ உன் நிலத்திலொரு குளம் வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் உனக்கு33/4 நாழிகை சொர்க்க வாசம் உண்டு. நிறைய மாடுகள் நீர் அருந்தினால் சொர்க்க வாசம் நிரந்தரமாகும். பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் நித்யவாசம் செய்கிறார்கள். நீ இறந்ததும், தர்மராஜரின் சபைக்கு அழைத்து வரப்படுவாய். நீ முதலில் சொர்க்க வாசம்  அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசம் அனுபவிக்கிறாயா? என்று யமதர்மராஜர் கேட்பார். நீ, சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொல்லிவிடு' என்று கூறினார்.

சித்ரகுப்தரின் அறிவுரைப்படி அவனும் ஒரு குளம் வெட்டினான். ஆறு நாட்கள் வரை அதில் நீர் வரவில்லை. அவன் செய்த பாவங்கள் அவனுக்குத் தடையாக நின்றன. ஏழாம் நாள், சித்ரகுப்தரின் கருணையால், அதில் ஒரு ஊற்று தோன்றியது. சித்ரகுப்தரே, ஒரு மாடாக ஓடி வந்தார். அதன் கரையில் நின்று, 'மா' என்று குரல் கொடுத்தார். உடனே, நிறைய  மாடுகள் ஓடி வந்தன. அதில் ஒரு மாடு அந்த குளத்து நீரை அருந்தியது.

உடனே, அந்த பாவியின் உயிர் பிரிந்தது. அவன் தர்மராஜ சபைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் பாவ புண்ணியக் கணக்குகளை அறிந்த யமதர்மராஜர், அவனை 'முதலில் சொர்க்க வாசம் அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசமா?' எனக் கேட்க, அவனும் தான் முதலில் சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொன்னான்.

அதன்படி, முதலில் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். பூவுலகில் அவன் வெட்டிய குளத்தில் நீர் ஊற ஊற மாடுகள் வந்து நீர் குடித்த வண்ணம் இருந்தன. அவன் புண்ணியக் கணக்கும் ஏறிக் கொண்டே இருந்தது. அவன் சொர்க்கத்திலேயே நிரந்தரமாக இருக்கலானான்.

தன் நாமத்தை உச்சரித்ததற்காக மட்டுமே ஒருவனுக்கு சொர்க்க வாசம் வழங்கினாரென்றால்,  சித்ரகுப்தரது கருணையையும் சித்ரகுப்த பூஜையைச் செய்வதன் மகிமை எத்தகையது என்பதையும்  நாம் உணரலாம்.

புனர் பூஜை:
பூஜை முடிந்த தினத்தன்றோ அல்லது மறுநாள் காலையிலோ, இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம், கற்பூரம் காட்டி, சித்ரகுப்தரை இருப்பிடம் சேர வேண்டிப் பிரார்த்தனை செய்து, பூஜை செய்த படத்தை அல்லது கலசத்தை வடக்காக நகர்த்தி வைக்கவும். சித்திரத்தில் பூஜை செய்திருந்தால், நகர்த்துவது போல் பாவனையாகச் செய்யவும்.

இவ்வாறு முறையாகப் பூஜிப்பவர்களுக்கு, சித்ரகுப்தர் அருளால், இகபர நலன்கள் யாவும் கிடைப்பது உறுதி.

சித்ரா பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு.
அம்பிகையின் அம்சமாக, சந்திர பகவான் கருதப்படுவதால், பொதுவாக,  எல்லா பௌர்ணமி தினங்களிலுமே, அம்பிகைக்கு பூஜைகள், வழிபாடு முதலியவை செய்வது வழக்கம்.  சித்ரா பௌர்ணமி தினம், அம்பிகைக்கு உகந்த ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி முதலியவை பாராயணம் செய்து பூஜிப்பது சிறப்பு. திருவிளக்கு பூஜையும் செய்யலாம். திருவிளக்கு பூஜை செய்யும் முறைக்கு இங்கு சொடுக்கவும்.

கடம்பவனம் எனப் புகழ்பெற்ற மதுரையில், தன் பாவச் சுமை நீங்கும் பொருட்டு, இந்திரன் சிவனாரை வழிபாடு செய்த நன்னாளே சித்ராபௌர்ணமி. அங்கு எழுந்தருளியிருக்கும் சுயம்பு மூர்த்தியின் விமானத்திற்கு இந்திர விமானம் என்றே  பெயர்.

சித்ராபௌர்ணமி தினத்தில் சிவனாரை வழிபடுவது அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். அன்றைய தினத்தில் சிவனாருக்கு, வில்வம், மருக்கொழுந்து முதலியவைகளால் அர்ச்சனை செய்து சுத்த அன்னம் நிவேதித்து வழிபடுவது சிறப்பு. பெரும்பாலான சிவத் தலங்களில் அன்றைய தினம், ஐப்பசி பௌர்ணமி தினம் போல அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் ஜெயந்தி மகோத்சவமும் சித்ராபௌர்ணமி தினத்தன்றே கொண்டாடப்படுகின்றது.

ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரையின் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணும் பொருட்டு, கள்ளழகர் பெருமான், வைகையாற்றில் இறங்கும் நன்னாள் சித்ராபௌர்ணமியே. அன்றைய தினம் அழகர் பெருமான் அணிந்திருக்கும் பட்டின் நிறமே, அந்த வருடத்தின் மழைப் பொழிவையும், விவசாயத்தையும் கணிப்பதற்கு உதவுகிறது. பச்சை வண்ணப் பட்டில் அழகர் பெருமான் வைகையாற்றில் இறங்கினால், மழை பொழிவு சிறந்து, விவசாயம் செழிப்பதாக ஐதீகம். வெண்பட்டு, அமைதியையும் சுபிட்சத்தையும் குறிக்கிறது.


இவ்வாறு சிறப்புகள் பல பொருந்திய சித்ராபௌர்ணமி தினத்தன்று இறைவழிபாடு செய்து, நலம் பல பெறுவோம்.

இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

SRI RAMA NAVAMI (19/4/2013).... ஸ்ரீராம நவமி.

 மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னிநன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
ஸ்ரீகுலசேகராழ்வார்
ஸ்ரீராமாவதாரம் நிகழ்ந்த திருநாளே ஸ்ரீராம நவமி. சூரிய குலத் தோன்றலாய், சக்கரவர்த்தித் திருமகனாய் அவதரித்து, சனகமாமன்னர் திருமகளை மணந்து, சகிக்கவொண்ணா கொடுமைகள் புரிந்த இராவணனை சம்ஹரித்து, சகம் புகழும் புண்ணியமூர்த்தியாய், தாரகமந்திரத்தின் ஸ்வரூபமாய் விளங்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார நன்னாளை பெரும் உற்சவமாகவே கொண்டாடுவது வழக்கம்.

பெரும்பாலான இல்லங்களில் பூஜைகள் செய்து வணங்குவது வழக்கம். ஸ்ரீராமர் கோவில் கொண்டருளும் திருக்கோவில்களில் மட்டுமல்லாது, ஸ்ரீராமபக்த ஹனுமானின் திருக்கோவில்களிலும், ஸ்ரீராமாவதார  மஹோத்சவம், ஸ்ரீசீதாகல்யாண மஹோத்சவம் முதலியவை சிறப்புற நடைபெறுகின்றன.

மிகப் பெரிய அளவில், பூஜைகள், பஜனைகள் முதலியன செய்து வழிபட இயலாதோரும், எளியதொரு வழியில் இறையருளைப் பெறலாம். அதுவே 'நாம சங்கீர்த்தனம்' என்னும் எளிய ஆனால் மகத்தானதொரு சாதனம்.

கிருத யுகத்தில் தியானம் செய்வதாலும், த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்வதாலும், த்வாபர யுகத்தில் விக்ரகங்களை பூஜித்து வழிபடுவதாலும்,  கிடைக்கும் பலன்  கலி யுகத்தில் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே எளிதில் கிடைக்கும்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில்,
யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ'ஸ்மி (யக்ஞங்களில் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன்)என்று அருளியிருக்கிறார்.

ஸ்ரீராம நவமியன்று, 'ராம, ராம' என்று ஜபித்தல், ஸ்ரீராமனது புகழைப் போற்றும் நாம சங்கீர்த்தனம், மனதுள் ராம நாமத்தை உச்சரித்தவாறே ஸ்ரீராமஜெயம் எழுதுதல் என ஸ்ரீராமனை பலவாறு வழிபடலாம்.

தாரக மந்திரம் எனப் போற்றப்படும் இராமநாமத்தின் பெருமை சொல்லில் அடங்காது. எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையனைத்தும் இந்த ஈரெழுத்து மந்திரத்திற்கும் உண்டு.

'ராம, ராம, ராம ' என்று மூன்று முறை உச்சரித்தால் அது எம்பெருமான் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களுக்குச் சமம் என்று சாக்ஷாத் ஸ்ரீ ஈஸ்வரனே  அம்பிகையிடம் கூறுகிறார்..


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே!...

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
      மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
      பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
      மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
      கண்களின் தெரியக் கண்டான். எனக் கம்பர் பெருமான் தெரிவிக்கிறார்.

மூவுலகுக்கும் ஆதாரமாகப் பொருந்திய மந்திரம் ஸ்ரீராம நாமமே,  ஸ்ரீராமநாமத்தை ஜபித்து, தம்மை வழிபடுவோருக்கு இறைவன் தம்மையே தருகிறார் அதாவது சாயுஜ்ய நிலையைத் தந்தருளுகிறார். அப்பேர்ப்பட்ட உயர்வுமிக்க திருநாமம் ஸ்ரீராமநாமமே. இப்பிறவி மற்றும் எழுகின்ற ஒவ்வொரு பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குவது ஸ்ரீராம நாமமே என்கிறார் கம்பர்பிரான்.

காசி க்ஷேத்திரத்தில், தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரின் காதுகளில், ஸ்ரீஈஸ்வரனே, 'ராம ராம' என்னும் தாரக மந்திரத்தை உச்சரித்து பிறவிப் பெருங்கடலில் இருந்து அவர்களைக்  கரையேற்றுவதாக ஐதீகம்.

வேடனாக இருந்த ஒருவர், நாரத முனிவரிடமிருந்து, ராம நாம உபதேசம் பெற்று, பின் அதை விடாது ஜபம் செய்தே வால்மீகி முனிவரானார், இராம காதையையும் இயற்றி அருளினார்.

இராம காதையில் பெருமானின் திருநாம மகிமை பற்பல இடங்களில்  பரக்கப் பேசப்படுகிறது.

அஞ்சனை மைந்தன், அரும்பெரும் வீரன், அன்புமிக்கதோர் ஸ்ரீராமபக்தன், 'எந்தையும் தாயும் நீயே' எனச் சிந்தையில் ராமனை வைத்துச் சிறந்த ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, ஸ்ரீராம நாமத்தை உச்சரித்தே கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்தார். சுந்தரனான அனுமனின் பிரபாவம் கூறும் சுந்தரகாண்டம், ஸ்ரீராம நாமத்தின் மகிமையால்  ஹனுமான் செய்த அரும்பெரும் சாதனைகளை விளக்குகிறது.

தம்மைச் சூழ்ந்திருந்த வானரர்களை ஸ்ரீராம நாமத்தை உச்சரிக்கச் சொல்லி, தாமும் உச்சரித்தே, சம்பாதி தன் சிறகுகளைப் பெற்றார்.
எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; - நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!'

இக்கலியுகத்திலும், ஸ்ரீ துளசி தாசர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகய்யர் பெருமான் போன்ற எத்தனையோ மகான்கள், இந்த தாரக மந்திரத்தின் துணை கொண்டு அரும் பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய துதிகள்:
இராமாயணம் முழுவதும் பாராயணம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள், நாம இராமாயணம், திவ்யப் பிரபந்த பாசுர இராமாயணம் முதலியவை பாராயணம் செய்யலாம். சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மிகச் சிறந்த நற்பலன்களை அளிக்கும்.

ஸ்ரீராம நவமியன்று, கம்ப இராமாயணத்தில், ஸ்ரீராமரது திருஅவதாரப்படலத்தில் உள்ள கீழ்க்கண்ட பாடலைப் பாராயணம் செய்யலாம். இதை, ஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளும், தம் 'தெய்வத்தின் குரலில்' அருளியிருக்கிறார்.

ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரும் புவி மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண் உேளார் புகழ்
தூய கர்க்கடகமும் எழுந்து துள்ளவே.
சித்தரும் இயக்கரும் தரெிவைமார்களும்
வித்தக முனிவரும் விண் உேளார்களும்
நித்தரும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

ஒரு பகல் உலகு எலாம்
    உதரத்து உள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும்
    அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில்
    காட்டும் சோதியைத்,
திரு உறப், பயந்தனள்
    திறம் கொள் கோசலை.(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்)

இல்லங்களில்,ஸ்ரீராம நவமி பூஜையின் போது செய்ய வேண்டிய நிவேதனங்கள் குறித்தும், ஸ்ரீ ராமபக்த ஹனுமானின் பெருமைகளைக் குறித்தும் அறிய இங்கு சொடுக்கவும்.

வால்மீகி இராமாயணத்தை, ஸ்ரீ குலசேகராழ்வார் பைந்தமிழ் பாசுரங்களாகப் பாடி அருளியிருக்கிறார். அவை, 'குலசேகர இராமாயணம்', 'ஸ்ரீராமாயண சங்க்ரஹம்' என்றே சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அதிலிருக்கும் கீழ்க்கண்ட பாசுரத்தைப் பாராயணம் செய்யலாம்.
அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே!
(இறையருளால், சித்ரகூடம் திருத்தலத்தை தரிசிக்கும்  பாக்கியம் கிடைக்கப்பெற்றேன். அது உங்களுக்கும் கிடைக்க, அங்கு எடுத்த புகைப்படத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்).
'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்றார் தமிழ் மூதாட்டி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பூஜிப்பதோடு, ஸ்ரீராம பக்தசிரோன்மணியும் வாயு மைந்தனும், சிரஞ்சீவிகளுள் ஒருவருமான, ஸ்ரீஹனுமானது பிரபாவங்களைப் பாடிப் போற்றுவது, ஸ்ரீராமரது அருட்பிரவாகத்தை எளிதில் நமக்குக் கிடைக்கச் செய்யும். ஸ்ரீதுளசிதாசர் போன்ற மகான்கள், ஸ்ரீஹனுமானது அருட்கடாட்சம் பெற்று, அதன் மூலமே ஸ்ரீராம தரிசனம் பெற்றார்கள்.

ஸ்ரீஹனுமானது துதிகளில் குறிப்பிடத் தகுந்தது,ஸ்ரீஹனுமான் சாலீஸா. ஸ்ரீ துளசிதாசர் அருளிய இந்தத் துதியையும், இதன் மகிமை, பொருள், பாராயணம் செய்ய வேண்டிய முறை ஆகியவற்றைப் பற்றி, மிக அருமையான முறையில் தன் வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார் என் சக வலைப்பதிவரும் சகோதரருமான உயர்திரு.ஸ்ரீகணேஷ்.  அந்தச் சுட்டிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். அன்பர்கள் முறையாக இதனைப் பாராயணம் செய்து இறையருளைப் பெறக் கோருகிறேன்.
இக்கலியுகத்தில், சொல்ல முடியாத துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு அவதியுறுவோர் அனைவரும், பாராயணம் செய்ய வேண்டிய மகா காவியம் ஸ்ரீமத் இராமயணம். சீதைக்கும்,ஸ்ரீராமருக்கும் நேர்ந்த துன்பங்கள் எத்தனை... எத்தனை... அத்தனை சோதனைகளையும் வென்று புறங்கண்டு, தர்மம் தவறாது வாழ்ந்த சத்தியச் செம்மலையும், சீதாதேவியையும்  நினைத்தாலும் போதும் நாம் வென்று விடலாம்.

ஸ்ரீராம நவமியன்று, நம் உள்ளத்திலும், இல்லத்திலும், இவ்வுலகனைத்திலும், தர்மநெறி தழைத்தோங்க வேண்டுவதே நம் முதல், முக்கிய வேண்டுதலாக இருக்கட்டும். சக்கரவர்த்தித் திருமகன், அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்.

ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராம!!!

இறையருளால்
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

HAPPY TAMIL NEW YEAR(14/4/2013).....இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 'ஸ்ரீவிஜய' வருடம் ந‌ம் வாழ்வில்  வெற்றிகள் பல அள்ளி வழங்குவதாக அமையட்டும்.
புத்தாண்டில் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் அருள் பொன் மழை போல் பொழிய வேண்டி, ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தின் காணொளியைத் தந்திருக்கிறேன். திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீகக் குரலில், கனகதாரா ஸ்தோத்திரனை கேட்கலாம். இதை வலையேற்றிய அன்பருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

சித்திரை முதல் நாளின் மேன்மைகளையும், அன்று செய்ய வேண்டியவை பற்றிய குறிப்புகளையும், என் 'நலம் தரும் நந்தன ஆண்டு' பதிவில் காணலாம்.

இந்த விஜய வருடத்திற்கு அதிபதி, ஸ்ரீகுரு பகவான். இவ்வருடத்தின் மந்திரி ஸ்ரீசூரிய பகவான் ஆவார்.

விஜய வருடத்திய பலன் வெண்பா,

மண்ணில் விசய வருட மழை மிகுதி
எண்ணு சிறு தானியங்களெங்குமே-நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நட்டு

'விஜய வருஷத்தில் நல்ல மழை பெய்யும். சிறு தான்யங்கள் நல்ல விளைச்சல் காணும். எங்கும் பயத்தோடு கூடிய சூழலே நிலவும். அதனால் வேதனை ஏற்படும். மக்களும் கால்நடைகளும் வாடும் சூழல் ஏற்படும்.'
எத்தகைய சூழலிலும் இறைவழிபாடால் நலம் காணலாம். ஸ்ரீகுரு பகவானைத் தொழுது வர, எந்தச் சூழலிலும் நன்மையே நடந்து மேன்மை அடையலாம்.

ஸ்ரீவிஜய வருடம், விஜயம் செய்யும் இந்நன்னாளில், அனைவரும், இறையருளால் எல்லா வளங்களும் நலங்களும் பெற்றுப் பெரு வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

SRI GURU GITA......ஸ்ரீ குரு கீதை.


குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர: |
குருரேவ பரம் ப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவே ப்ரஹ்மா, குருவே விஷ்ணு, குருவே அனைத்திற்கும் தேவனான பரமேச்வரன். குருவே சாக்ஷாத் பரப்ரம்மம். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.

ந குரோரதிகம் தத்த்வம் ந குரோரதிகம் தப: |
ந குரோரதிகம் ஞானம் தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||
குருவைக் காட்டிலும் உயர்ந்த தத்வம் ஒன்றில்லை. குருவைக் காட்டிலும் உயர்ந்த தவம் ஒன்றில்லை.குருவைக் காட்டிலும் உயர்ந்த ஞானமொன்றில்லை.அப்பேர்ப்பட்ட ஸ்ரீசத்குருவிற்கு நமஸ்காரம்.
(ஸ்ரீகுரு கீதை)

 'கீதை' என்னும் சொல் பொதுவாக ஸ்ரீமத் பகவத் கீதையையே குறிக்கும். ஆனால் 26 வகையான கீதைகள் இருக்கின்றன. அவற்றில் சில, கபில கீதை (இதன் சாரத்தை, சாங்கிய யோகம் பதிவில் காணலாம்), வியாச கீதை, உத்தவ கீதை, குரு கீதை, ஹம்ஸ கீதை, சிவ கீதை முதலானவை.  இவற்றில் ஸ்ரீகுரு கீதையைப் பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் காணலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர், நம்மைப் பெறாமல் பெற்று, ஞானாசானாக நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை நமக்குக் காட்டிக் கொடுத்து, நம் வாழ்வின் பயனை அடையச் செய்யும் சத்குருநாதனே ஆவார். குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

நமக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் அனைவரும் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள்.   ஆனால் யாரொருவர் 'நாம் யார்?' என அறியும் ஞானப் பாதையின் கதவுகளை ஒருவருக்குத்  திறந்து வைக்கிறாரோ அவரே 'ஸத்குரு' என்னும் திருநாமத்தால் அறியப்படுபவர்.

நம் ஆன்ம முன்னேற்றத்திற்கான பாதையில் நம்மைச் செலுத்தும் ஞான குருமார்கள் நம்மைக் காக்கும் கவசம் போன்றவர்களே.

நல்ல குருவை அடைவது என்பது நிச்சயம் நம் பூர்வ புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும். அப்பேர்ப்பட்ட சத்குருவை அடைந்தவர்கள், நிச்சயம் பாக்கியவான்களே. நல்ல குருவுக்கான தேடல், நம் ஆழ்மனதில் ஆழப் பதிந்திருக்கும் பட்சத்தில், நம் கர்மவினைக் கட்டுக்கள் உடைந்து, நல்ல குருவை கண்டடையும் பேறு தானாக சித்திக்கும்.

'குரு' என்பவர், தந்தைக்குச் சமானமாகவும், குருவின் மனைவி, தாய்க்குச் சமமாகவும், குருவின் குழந்தைகள், சகோதர சகோதரியருக்குச் சமானமாகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பது வேதவாக்கியம். அகக்கண்களைத் திறந்து வைத்து, அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் உள்ளத்தில் ஞான ஒளியேற்றி, இகபர நலன்களனைத்தும் ஒருவருக்குக் கிடைக்க உதவுபவர் குருவே ஆவார்.

நம் இந்து தர்மத்தில், ஆசாரியர்களுக்கும், குருமார்களுக்கும் இருக்கும் சிறப்பு அளவிடமுடியாதது. குரு சிஷ்ய பரம்பரை, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில்,  குலதெய்வம் போல் குருபீடமும் இருக்கிறது.  நம் சனாதன மதத்தின் நிலையான தூண்களான வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள்,  தரிசனங்கள் யாவும், குருமுகமாகவே, வழிவழியாக உபதேசிக்கப்பட்டு, நம்மை அடைந்துள்ளன. பழங்காலத்தில், குருவின் இல்லத்திலேயே சிஷ்யர்கள் தங்கியிருந்து, குருவுக்கு பணிவிடைகள் செய்து, அவர்களிடமிருந்து கல்வி கற்பது வழக்கம். 


நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச் சக்கரங்களில், சஹஸ்ராரத்திற்கு 
(பதிவைக் காண்க)சற்றுக் கீழாக அமைந்துள்ள ஒரு சக்கரத்தின் திருநாமம் 'குரு'. இது பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. இது மத்தியில், ஸ்ரீகுருவின் மஹாமந்திரமும், திருவடிகளும் விளங்குகிறது. இந்தச் சக்கரத்தை அடைந்த பின்பே, சஹஸ்ராரத்தை அடைந்து, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப நிலையை அநுபவிக்க முடியும்.

சொல்லில் அடங்கா மகிமை பொருந்திய குருவின் சிறப்புகள், அவரைப் பூஜிக்கும் முறை, சத்குருவை அடைந்தவர்  பெறும் நன்மைகள் என அனைத்தையும் தெளிவாக உரைக்கும் நூலே 'ஸ்ரீ குரு கீதை'. இது வியாச மகாமுனிவரால் இயற்றப்பட்டது. இது புராணங்களில் பெரியதான 'ஸ்காந்த புராணத்'தில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ உமாமகேஸ்வர சம்வாத(உரையாடல்) ரூபமாக அமைந்துள்ளது. 182 ஸ்லோகங்களைக் கொண்டதாக ஸ்ரீகுருகீதை அமைந்துள்ளது.

ஸ்ரீ குருகீதையை, ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்கு, அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், உபதேசித்தார். அவர்கள் மூலமாக, இந்த அரிய துதியானது உலகமெங்கும் பரவலாயிற்று.

'தினமும் காலையில், நம் ஆன்ம முன்னேற்றத்திற்காக, நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் சத்குருநாதரை, நம் சிரத்தில், வரத, அபய முத்திரைகளோடு கூடிய கரங்களை உடையவராக தியானிக்க வேண்டும். அவரையே எல்லா தேவர்களின் ஸ்வரூபமாகக் கருதி, மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். அவருடைய பாதாரவிந்தங்களில் இருந்து பெருகி ஓடும் தீர்த்தம், சதா சர்வகாலமும் நம் சிரத்தில் விழுந்து கொண்டு இருப்பது போலக் கருதி வணங்க வேண்டும். அந்த தீர்த்தமானது, நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துவதாகப் பாவனை செய்ய வேண்டும். இதனால், உள்ளம் துலங்கி, மாசு மறுவற்ற ஸ்படிகம் போல் ஆகிறது' என்று குருகீதையின் த்யான ஸ்லோகம் கூறுகிறது.

இனி, ஸ்ரீகுருகீதையில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனுக்கு இடையில் நடந்த உரையாடல் ரூபமாக இருக்கும் சில ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

திருக்கயிலையில், பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம், 'ஸ்வாமி, சரீரத்தில் பற்றுதல் இருக்கும் ஜீவன், எந்த சாதனத்தினால், பரம்ம ஸ்வரூபத்தை அடைவான்?. அதை எனக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் தங்களை அடிபணிகிறேன்' என வேண்ட, ஸ்ரீ பரமேஸ்வரனும், உலக நன்மைக்காக மலைமக‌ளால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியால் மிகுந்த சந்தோஷமடைந்து, பின்வருமாறு கூறலானார்.

யோ குரு: ஸ சிவ: ப்ரோக்தோ ய: சிவ: ஸ குரு; ஸ்ம்ருத:
"யார் குருவோ அவரே ஈஸ்வரன். யார் ஈஸ்வரனோ அவரே குரு"

இவ்வாறு, துவங்குகிறார், அகிலத்தின் முதல் குருவான சாக்ஷாத் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீபரமேஸ்வரன்.  தொடர்ந்து அவர் திருவாய்மலர்ந்தருளும் அமுத மொழிகளில் சில.

சோஷணம் பாபபங்கஸ்ய தீபனம் ஞான தேஜஸ: |
குரோ: பாதோதகம் தேவி ஸ்ம்ஸாரார்ணவதாரகம் ||

தேவி!!, ஸத்குருவினுடைய பாதோதகம்(பாதங்களை அலம்பிய நீர்) பாவம் என்னும் சேற்றை வற்ற அடிக்கிறது. ஞான தேஜஸை விளக்குகிறது. ஸம்ஸார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கிறது.

குருமூர்த்திம் ஸம்ரேந்நித்யம் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோராக்ஞாம் ப்ரகுருவீத குரோரந்யம் ந பாவயேத் ||

குருவின் திருவுருவை எப்போதும் ஸ்மரணை செய்ய வேண்டும். குருவின் திருநாமத்தை எந்நேரமும் ஜபிக்க வேண்டும். குருவின் கட்டளைப்படியே நடக்க வேண்டும். குருவைத் தவிர வேறொன்றையும் நினைக்கலாகாது.

அநேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மகோடி விதாஹினே |
ஞானானலப்ரபாவேன தஸ்மை ஸ்ரீகுரவே நம: ||

யார் தன்னுடைய ஞானாக்னியின் மகிமையினால், சிஷ்யர்கள் தங்கள் ஜென்மஜென்மாந்திரங்களில் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான கர்மாக்களை தகிக்கிறாரோ அத்தகைய ஸ்ரீஸத்குருவிற்கு நமஸ்காரம்.

த்யானமூலம் குரோர்மூர்த்தி: பூஜாமூலம் குரோ:பதம் |
மந்த்ரமூலம் குரோர்வாக்யம் மோக்ஷமூலம் குரோ: க்ருபா ||

தியானத்திற்கு மூலம் குருவின் திருவுருவம். பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள். மந்திரங்களுக்கு மூலம் குருவின் உபதேச மொழிகள். மோக்ஷத்திற்கு மூலம் குருவின் கிருபையே ஆகும்.

இவ்வாறு பலப்பல ஸ்லோகங்களால் குருவின் மகிமை விளக்கப்பட்டு, இறுதியில், பரப்பிரம்ம ஸ்வரூபமே குரு என்பதாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் ஸ்ம‌ராமி
ஸ்ரீமத் ப்ரப்ரம்ஹ குரும் பஜாமி |
ஸ்ரீமத்பரப்ரம்ஹ குரும் வதாமி 
ஸ்ரீமத் பரப்ரம்ஹ குரும் நமாமி ||

ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை ஸ்மரணை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை பஜனை செய்கிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவின் விஷயமாகவே பேசுகிறேன். ஸ்ரீமத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீகுருவை நமஸ்கரிக்கிறேன்.

நித்யம் சுத்தம் நிராபாஸம் நிராகாரம் நிரஞ்ஜனம் |
நித்யபோத சிதானந்தம் குரும் ப்ரஹ்ம நமாம்யஹம் ||

நித்யமானவரும், சுத்தனும், மாறுபாடற்றவரும், உருவம் அற்றவரும், நிர்மலமானவரும், நித்யபோதரூபனும்,  சிதானந்த ஸ்வரூபமாக விளங்குபவருமான ஸ்ரீஸத்குரு எனும் பரம்பொருளை வணங்குகிறேன்.

அதன் பின், குருவை தியானிக்கும் முறை, அவரிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து உபதேசிக்கிறார் எம்பெருமான்  . அவற்றுள் சில...

ஹூங்காரேண ந வக்தவ்யம் ப்ராஜ்ஞை: சிஷ்யை; கதாசன |
குரோரக்ரே ந வக்தவ்யமஸத்யம் ச கதாசன ||

சிஷ்யர்கள், மிகப்பெரிய வித்வான்களாக இருப்பினும், குருவின் எதிரில் 'ஹூம்' காரத்தினால் பேசலாகாது (கர்வம் கொண்டு பேசலாகாது என்பது கருத்து). குருவின் சந்நிதானத்தில், சத்தியமல்லாததை ஒருபோதும் பேசலாகாது.

பாதுகாஸன சய்யாதி குருணா யததிஷ்டிதம் |
நமஸ்குர்வீத தத்ஸர்வம் பாதாப்யாம் ந ஸ்ப்ருசேத் க்வசித் ||

குரு உபயோகிக்கும் பாதுகைகள், படுக்கை, இருக்கை முதலானவற்றுக்குக் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும். அவைகளை ஒருபோதும் காலால் மிதிக்கலாகாது.
நிறைவாக, ஸ்ரீ பரமேஸ்வரன், பார்வதி தேவியிடம், 'தேவி, இதுவரை, நான் முக்தனுடைய இலக்கணம், குரு பக்தி, தியானம் ஆகியவற்றைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் என் இருதயத்தில்,  சதாசிவத்தை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை  சதா அனுஸந்தானம் செய்து கொண்டிருக்கிறேன். நீயும், குருவான என்னை தியானம் செய்து கொண்டு, இந்த குரு கீதையை பக்தியுடன் சொல்லுவாயாக' என்றுரைக்கின்றார்.

குரு கீதையின் பலஸ்ருதி(பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்) பற்றியும் பரமேஸ்வரனானவர் கீழ்வருமாறு கூறுகிறார்.

'மனிதர்களால், இந்த குரு கீதை பக்தியோடு கேட்கப்பட்டால் அல்லது பாராயணம் செய்யப்பட்டால், அல்லது தானம் செய்யப்பட்டால், ஸம்ஸார பந்தம் அடியோடு நீங்கிவிடும். குரு கீதையின் ஜபத்தினாலேயே அநேக விதமான பலன்கள் கிட்டும். மற்ற மந்திர ஜபங்களுக்கு இதன் மகிமையில் பதினாறில் ஒரு பங்கு அளவு கூட இல்லை. இது அனைத்துப் பாவங்களையும் நீக்குகிறது. எல்லா சித்திகளையும் தர வல்லது. இதை புருஷர்கள், ஸ்த்ரீகள் யாவரும் பாராயணம் செய்யலாம். பஞ்சாயதன மூர்த்திகளில் (கணபதி, சிவன், அம்பிகை, சூர்யன், விஷ்ணு, முருகன்) யாரை உபாசித்தாலும்,  இதைப் பாராயணம் செய்யலாம்'.

மேலும் என்னென்ன பலன்களை விரும்புவோர் எந்த விதமான முறையில் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் விளக்கமாகக் கூறுகிறார். உதாரணமாக, உள்ள அமைதியை விரும்புவோர் வெண்மை நிற ஆடையை அணிந்து குருகீதையை ஜபிக்க வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது.

யாரையெல்லாம் குருவாக ஏற்கக் கூடாதென்றும் குரு கீதையில் கூறப்பட்டுள்ளது.

'ஞானமில்லாதவனும், 'தானே குரு' என்பதாக நினைத்துக் கொண்டிருப்பவனும், பொய் சொல்பவன், மோசம் செய்பவன், முதலானோர்களும் ஆத்ம ஞானத்தை அடைய முடியாதவர்கள். இவர்கள் எவ்வாறு பிறரை ஞான மார்க்கத்தில் செலுத்த முடியும்?. ஆகவே இவர்களை குருவாக ஏற்கக் கூடாது' என்று சொல்கிறது குரு கீதை.

இவ்விதம் குருவின் மகிமை குறித்து விளக்கமாக உரைக்கிறது ஸ்ரீ குரு கீதை.

இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது, ஸ்ரீகுருவின் சரணாரவிந்தங்களே. எத்தனையோ குருமார்கள் இந்த ஞான பூமியிலே. அவரவர் மனதிற்கு இசைந்த வழிகளில், சத்குருவை தேர்ந்தெடுத்து, பின் அவரை விடாது பின்பற்றினோமானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனின் திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம்.
தெளிவு குருவின் திருமேனி காணல் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம் 

குருவருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.