நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ANNABHISHEGAM .(29/10/2012)....அன்னாபிஷேகம்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை, மாணிக்கவாசகப் பெருமான்)

தென்னாடுடைய சிவனே போற்றி!, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று விண்ணோரும் மண்ணோரும் போற்றித் தொழுதேத்தும் பரமன், ஐப்பசி பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கண்டருளுகிறார்.

அன்னம் பிராணமயம் என்பது பிரபலமான வாக்கியம். அன்னதானமே தானங்கள் அனைத்திலும் சிறந்தது. உண்டி கொடுத்தோ உயிர் கொடுத்தோரே. அன்னத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம். அன்னம் இல்லாமல் இருக்கவும் இயலாது. ஒரு அளவிற்கு மேல் போதும் என்று திருப்தி ஏற்படுத்துவதும் அன்னம்தான். அன்னமே அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரம். அன்னம் மும்மூர்த்திகளின் சொரூபம். அன்னமே ஜீவன்.

திருக்கயிலை மலை வாழும் அபிஷேகப்பிரியரான எம்பெருமான், அன்னத்தையே அபிஷேகம் செய்வதை மனம் உகந்து ஏற்கிறார்.

ஐப்பசி மாதம் அடைமழை மாதம். குளிர்ச்சி பொருந்திய மாதம். குளிர்ச்சி பொருந்திய பனிமலையில் வாழும் பரமனுக்கு இந்த மாதம் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. எத்தனையோ அபிஷேகங்கள், எல்லா கடவுளருக்கும் செய்யப்பட்டாலும், அன்னாபிஷேகம் எம்பெருமானுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.

பௌர்ணமி தினமே மிகவும் சிறப்பானது. சித்தர் பெருமக்கள் அனைவரும், சந்திர பகவானை, பௌர்ணமி தினத்தில் தரிசிப்பதாக ஐதீகம். ஆகவே, அன்று, சந்திர தரிசனம் செய்வது சித்தர் பெருமக்கள் அனைவரையும் தரிசிக்கும் நற்பலனைக் கொடுக்கும். அன்று, சந்திர பகவான், தனது 16 கலைகளுடன், பூர்ணமாகப் பிரகாசித்து, அமிர்த தாரையைப் பொழிகிறார்.

'பித்தா, பிறைசூடி' என்று நம்பி ஆரூரர் போற்றும் நாயகர், சந்திரனுக்கு சாப விமோசனம் தந்து, சந்திர கலையை சிரசில் சூடியருளிய எம்பெருமான், சந்திரனுக்குகந்த பௌர்ணமி நன்னாளில், துலா மாதமாகிய ஐப்பசியில் ஐம்பூதங்களின் வடிவாகிய அன்னாபிஷேகம் கண்டருளுகிறார்.

அரிசி,நிலத்தில் நெல்லாக விளைவது. நெல் விளைவதற்கு, ஆகாயத்திலிருக்கும் கருமேகம், காற்றின் உதவியுடன் மழையாகப் பொழிய வேண்டும். பின், இடித்து, குற்றி அரிசியானவுடன், நீரோடு சேர்ந்து, நெருப்பின் உதவியுடன் பக்குவமான அன்னமாகிறது.  அன்னத்தை அம்பிகை பாகனுக்கு அபிஷேகம் செய்வதில் அற்புதமான உண்மை மறைந்திருக்கிறது.

\
பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வதில் பல தத்துவங்கள் மறைந்திருக்கின்றன. உதாரணமாக, பால் அபிஷேகம் செய்வதன் பலன், வாழ்வில்,சுகம் உண்டாகும் என்று அனைவரும் அறிந்திருப்பீர்கள். பால், மன அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. கொதிப்பான மனநிலையில், ஒரு டம்ளர் பால் அருந்தினால், மனம் ஒரு சமநிலைக்கு வரும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா!!!!. ஆகவே, மனமது சந்தோஷமானால், எல்லாம் சந்தோஷமாக, சுகமாகத்  தெரியும், எந்த பிர்ச்னையும் பெரிய அளவில் தெரியாது.  இது மறை பொருள். இதை குறிப்பால் உணர்த்துவதற்காகவே பால் அபிஷேகம் செய்கிறோம். இன்னொரு தத்துவமும் உள்ளது. நம் அனைவருடைய உள்ளத்துள்ளும் ஆத்ம ஸ்வரூபமாகிய இறைவன் உறைகிறார். கர்மவினைகளால் கட்டப்பட்டு, பிறவி எடுத்திருக்கும் நம் அனைவரையும் நம்முள் இருந்து, கண்காணித்துக் காக்கிறார் இறைவன். கோவிலில் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் அபிஷேக ஆராதனைகளின் மூலம், நம் ஆத்மாவும் புனிதமடைகிறது.

அன்னாபிஷேகம் செய்வதால், உணவுப் பஞ்சம் என்பதே வராது. தேசம் சுபிட்சமாகும். தான்ய விருத்தி ஏற்படும் என்று சிவாகமம் கூறுகிறது.  மாதொரு பாகனாகி மறைகள் போற்றும் எம்பெருமான் சிவனாரின் லிங்கத் திருமேனிகளுக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.அன்னாபிஷேக நன்னாளில், பகலில், எல்லா அபிஷேகங்களும் முறையாகச் செய்யப்பட்டு, பின், நிறைவாக, சுத்த அன்னத்தால், இறைவன் திருமேனி அலங்கரிக்கப்படுகிறது. இறைவன் திருமேனி முழுவதும், அன்னம் சாற்றப்பட்டு,  கண்களாக, திராட்சைப்பழங்கள், நெற்றித் திலகமாக, உளுந்து வடை, இரண்டு பெரிய புடலங்காயை இணைத்து  மாலை  என்று அழகாக அம்மையப்பனை அலங்கரித்து தீபாராதனைகள் நடைபெறும். பின், இரவு சுமார், 7.30 மணியளவில் அலங்காரம் கலைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுவது பெரும்பாலான கோவில்களில் நடைமுறையில் உள்ளது.

ஆனால், என் பிறந்த ஊரான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை சத்தியகிரீசுவரப் பெருமானுக்கு, பகலே அன்னாபிஷேக அலங்காரம் செய்வது வழக்கம்.  (இறைவன், திருமுருகன் சன்னதியில், முருகப்பெருமானுக்கு, இடப்புறம் தனிச்சன்னதியில் கோவில் கொண்டுள்ளார்). என் முன்னோர்கள், அத்திருத்தலத்தில், சிவத்தொண்டு புரிந்தவர்கள்.  சிவார்ப்பணமாக, வருடத்தில் ஒரு நாள் ஐப்பசி பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து பிராத்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்போதும் அந்தத் திருப்பணி தொடர்கிறது.

அங்கு, அன்னாபிஷேகம் முடிந்து, நண்பகலில் ஆவுடையார் மேலிருக்கும் அன்னத்தை மட்டும் பிரசாதமாக வழங்குவர். லிங்கத்தின் மேலிருக்கும் அன்னம், கோவில் திருக்குளத்திலும், சரவணப்பொய்கையிலும் கரைப்பார்கள். ஐயனின் அருள் அனைத்துயிருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வார்கள்.

தில்லைச் சிற்றம்பலத்தில் இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு தினந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதனால், அது அன்ன க்ஷேத்திரம் என்று சிறப்பிக்கப்படுகிறது. அன்னாபிஷேக நாள் அங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

அன்னாபிஷேக தினத்தில், லிங்கத்தின் மேலிருக்கும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவ ஸ்வரூபம். ஆகவே, அன்றைய தினம் லிங்கத்தை தரிசிப்பது, கோடி லிங்க தரிசன பலனைக் கொடுக்கும்.

அன்று முழுவதும் உபவாசமிருந்து, அன்னாபிஷேக அலங்காரத்தைத் தரிசித்து, பின் பிரசாதத்தை உண்பது, மிகுந்த நற்பலன்களை அளிக்கக் கூடியது. வாழ்நாள் முழுவதும் உணவுக்கு குறையே ஏற்படாது. குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், பிரசாதத்தை உண்ண, ஈசனருள் முன்னிற்கும்.

இப்போது, அன்னம் மட்டுமல்லாமல், பலவகை பட்சணங்கள், காய், கனிகளாலும் எம்பெருமானுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு விதமாக அற்புதமாக அலங்காரம் நடைபெறுகிறது.

அம்மையும் அப்பனுமாகி அறியொணாப் பொருளுமான எம்பெருமானை அன்றைய தினம் காணக் கண் கோடி வேண்டும். சந்திரனுக்கு உகந்த தூய வெண்ணிறத்தில், சந்திர மௌலீசுவரரான‌ இறைவனைத் தரிசிப்பது சிறப்பு.

மெய்யன்பர்கள் சிலருக்கு கண் பார்வை குறைபாடுகள் சில இருக்கலாம். அவை தீர கண் பதிகம் சொல்லி வழிபடுவது இறையருளைப் பெற்றுத் தரும்.  தம்பிரான் தோழரென்று போற்றப்படும், நம்பிஆரூரப் பெருமான், திருவொற்றியூரில், தம் மனைவியான சங்கிலியாரைப் பிரிவதில்லையன எம்பெருமான்  மேல் வாக்குக் கொடுக்கிறார். ஆனால், சில நாட்களிலேயே, திருவாரூருக்குச் செல்லும் ஆவல் முன் நிற்க, புறப்பட்டு விடுகிறார். ஊர் எல்லையைத் தாண்டிய மாத்திரத்திலேயே, பார்வை பறிபோய் விடுகிறது.    திருவெண்பாக்கம், ஊன்றீஸ்வரர் கோவிலில், இறைவன், ஊன்று கோல் அளித்து, 'உளோம், போகீர்!!' என்று அருள,  காஞ்சி நகர் வந்தடைகிறார்.

திருக்கச்சி ஏகம்பனை பணிந்து சுந்தரர் பெருமான் இயற்றியதே கண்பதிகம். கண் பதிகத்திற்கு இங்கு சொடுக்கவும்.அன்னாபிஷேக நன்னாளில் சிவாலயங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருட்களை வழங்குவது அளவில்லாத புண்ணியங்களை நல்கும். அன்பே சிவம். அன்பொடு வழங்கப்படும் அன்னம் பகவத் பிரசாதம். எனவே, அன்றைய தினம்   அன்னதானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும்.

அன்னாபிஷேக நன்னாளில் பரமனடி பணிந்து, இறைவனைப்போற்றும் துதிகளை மகிழ்ந்து பாடி, சிவாலய தரிசனம்  செய்து,

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

PART 4 NAVARATHIRI POOJA (16/10/2012 TO 24/10/2012).......நவராத்திரி பூஜா முறைகளும் பலன்களும்.

சென்ற மூன்று பதிவுகளில், நவராத்திரி தினங்களின் மகிமை, கொலு வைக்கும் முறை, செய்ய வேண்டிய நிவேதனங்கள், கோலங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இந்தப் பதிவில், நவராத்திரி பூஜையைச் செய்யும் முறை, மற்றும் பலன்களைப் பார்க்கலாம். இது 'தேவி பாகவதத்தில்' விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பூஜைக்கான காலம்:
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் இடம் பெறுகின்றன. அவற்றுள், மிக முக்கியமானது, சித்திரை மாதத்தில் வசந்த ருதுவில் வரும் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில், சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரியும் ஆகும். வசந்தருதுவும், சரத் ருதுவும்,  யமதர்மராஜனுடைய இரண்டு கோரைப் பற்களுக்கு சமமாகும். அதனால், அந்தக் காலங்களில், இறையருள் கிடைப்பதற்கு இடையூறாக, பகை, நோய் முதலியவை ஏற்படும். ஆகவே, இந்த இடையூறுகளுக்கு இடம் கொடாமல் தேவியைப் பூஜிக்க வேண்டும்.

மஹாளய அமாவாசையன்றே, பூஜைக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். பிரதமை திதி முதல் பூஜை துவங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்து முறையாகப் பூஜிக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியது:
மேடு பள்ளம் இல்லாத சமதரையில், பசுஞ்சாணம் கொண்டு மெழுகி, செம்மண் தடவி வைக்க வேண்டும். பின், நான்கு மூலைகளிலும், பதினாலு முழமுள்ள, கொடிகளோடு கூடிய கம்பங்களை நட்டு, அழகான மண்டபம் அமைக்க வேண்டும். அதன் மத்தியில், நான்கு முழ நீளமும், ஒரு முழ அகலமும் இருக்கும் அழகிய மேடையை அமைக்க வேண்டும். மண்டபத்தை பூக்களாலும் தோரணங்களாலும் நன்றாக அலங்கரிக்க வேண்டும்.

வேத விதிகளை நன்குணர்ந்தவர்களைத் துணையாகக் கொண்டு, பூஜை துவங்க வேண்டும். பிரதமையன்று அதிகாலையில் நீராடுதல் முதலிய கடமைகளை முடித்து, வேதகோஷம் செய்து கொண்டே, மண்டபத்தின் நடுவில் இருக்கும் மேடை மீது, வெண்பட்டை விரித்து, அழகிய சிம்மாசனம் இட்டு, அம்பிகையின் திருவுருவை, சதுர்புஜங்களோடு கூடியதாகவோ, பதினாறு கரங்களுடனோ எழுந்தருளச் செய்து, மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் நன்கு அலங்கரித்து, அருகில், தூய நீர் நிரப்பி, ரத்தினம் முதலியவை சேர்த்த கலசத்தையும் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

பின் பூஜை நல்ல விதமாக நடந்தேற, அம்பிகையைப் பிரார்தித்து, நவாவர்ண பூஜை செய்து, வாசனையுள்ள மலர்கள், நிவேதனங்கள் முதலியவற்றை விதிப்படி, தேவிக்கு பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு நாளும், மூன்று காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். பூஜிப்பவர்கள், பகல் முழுவதும் உபவாசம் இருந்து, இரவு பூஜை முடிந்த பின்னரே உணவு கொள்ள வேண்டும். தரையில் தான் படுக்க வேண்டும்.

இவ்வாறு பூஜித்த பின்னர், ஒவ்வொரு நாளும், 2 வயது முதல் 10 வயது வரை உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.

கன்யா பூஜை குறித்த தகவல்களுக்கும், அப்போது சொல்ல வேண்டிய தியான ஸ்லோகத்துக்கும் இங்கு சொடுக்கவும்.

இவ்வாறு பூஜிப்பது மிக மிகச் சிறந்தது. ஆனால், மாறி வரும் உலகில், இவ்வாறு செய்வதற்கு இயலாதவர்களும் உள்ளனர். அவர்கள், அஷ்டமியன்று தேவியைப் பூஜிக்கலாம்.  தக்ஷனின் யாகத்தை அழித்தவளான, அன்னை ஸ்ரீ பத்ர காளி, திருஅவதாரம் செய்த தினமே அஷ்டமி. மேற்கூறியவாறு, முறையாக, சப்தமி,அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் பூஜித்தால் ஒன்பது நாள் பூஜித்த பலனும் கிடைக்கும்.

நவராத்திரி விரத மகிமை:
அம்பிகை, நினைத்த மாத்திரத்திலேயே, மகிழ்ந்து அதிக வரங்களைத் தரக் கூடியவள். தேவிக்கு உகந்த இந்த விரதத்தைப் போல், உத்தமமான பலன்கள் தரக் கூடிய விரதம் வேறு இல்லை. இதை முழுமையாக உணர்ந்து, விதிப்படி அனுஷ்டிக்கிறவர்கள்,  எல்லா நலன்களையும் பெற்று சுக வாழ்வு வாழ்வார்கள். பூஜையின் போது, 'ரக்த சந்தனம்' என்றழைக்கப்படும், செந்நிற சந்தனத்தை, வில்வத்தில் தோய்த்து தேவிக்கு  அர்ச்சனை செய்பவர், அரச வாழ்வைப் பெறுவர்.

இவ்விரதம் சம்பந்தமான புராணக் கதை:
கோசல தேசத்தில் சுசீலன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் வறுமையால் வாடினான். அவன் குழந்தைகள், பசியினால் துன்புற்று தினம் அழுவார்கள். அவன் மிகுந்த சிரமத்திற்கிடையில் கொண்டு வந்த பொருளைக் கொண்டு, அவன் குடும்பத்தார் ஒருவேளை மட்டுமே, உணவு அருந்த முடிந்தது.

இத்தகைய வறுமை நிலையிலும், சுசீலன், தர்ம நெறியில் தவறாது, வாழ்ந்து வந்தான். கோபம் கொள்வதோ, சண்டை செய்வதோ அவனிடம் இல்லை. தன் தினசரிக் கடமைகளிலும் தவறாது இருந்து வந்தான்.

ஒரு நாள், அவனுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.  மனம் மிக வருந்திய நிலையில், அங்கே வந்த ஒரு அந்தணரை அணுகி, 'ஐயா, என்னை மிகவும் துன்பப்படுத்தி வருகின்ற இந்த வறுமை நிலை நீங்க ஒரு உபாயம் சொல்ல வேண்டும். நான் ஏராளமாக பணம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல.  அன்றாடம் நிம்மதியாக  சாப்பிட்டு அன்றைய பொழுதைக் கழிக்கும் அளவுக்கு, எனக்கு பணம் கிடைத்தால் போதும். இன்று என் குடும்பத்திற்கு பிடி அரிசி கூட இல்லாத நிலை இருக்கிறது. என் மகளுக்கு திருமண வயது கடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இந்த நிலை மாற ஏதேனும் விரதம், மந்திரங்கள் இருப்பின் தயவு கூர்ந்து தெரிவிக்க வேண்டும்
என்று பிரார்த்தித்தான்.

அந்தணர், சுசீலனுக்கு நவராத்திரி விரதத்தை உபதேசித்தார். மேலும் "இதை பக்தியுடன் அனுஷ்டித்தால் துயரங்கள் அனைத்தும் நீங்கும், இதை விட மேலானதொரு விரதமில்லை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்துப் பலன் அடைந்த விரதம் இது" என்றும் கூறினார்.

சுசீலன், மிகுந்த பக்தியுடன், இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தான். ஒன்பது வருடங்கள் இடைவிடாது அனுஷ்டித்து வந்தான். ஒன்பதாவது வருடத்தில், அஷ்டமியன்று இரவில், அம்பிகை தரிசனம் தந்து, அவனுக்கு சகல நலன்களையும், நிறைந்த பொருட்செல்வத்தையும் மகிழ்ச்சியான வாழ்வையும் அனுக்கிரகித்து மறைந்தாள். சுசீலன், இந்த விரதத்தை தொடர்ந்து செய்து இறுதியில், அம்பிகையின் திருவடிகளை அடைந்தான்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி நவராத்திரி விரதம் அனுஷ்டித்த விதம்:
ஸ்ரீராமர், தம் வனவாசத்தில், சீதா தேவியைப் பிரிந்து துன்புற்ற போது, நாரத மஹரிஷி, அவரைச் சந்தித்தார். அவர் "ஸ்ரீ ராமா, இராவணனுக்கு மரணம் நெருங்கி விட்டது. அதனால் தான் சீதையை அபகரித்துச் சென்றிருக்கிறான். அவனை வதம் செய்வதே, உன் அவதார நோக்கம். இவ்வாறு அவன் செய்தது, பூர்வ ஜென்மத் தொடர்பால் ஆகும். சீதை ஸ்ரீலக்ஷ்மியின் அம்சம். முற்பிறவியில், சீதை, ஒரு முனிவருடைய மகளாகப் பிறந்து, தவம் செய்து கொண்டிருந்த பொழுது, அவளைக் கண்ட இராவணன், அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் மறுக்கவே, அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட்டான்.  அவள் மிகுந்த கோபத்துடன், 'ஏ மூடா, உன்னை கொல்வதற்காகவே, அயோநிஜையாக(பெண் வயிற்றில் பிறக்காமல்) பிறவி எடுப்பேன்' என்று சாபம் தந்து விட்டு அக்னியில் பாய்ந்து உயிர் துறந்தாள்.

அதை நிறைவேற்றவே ஜனகர், பொன்னேர் பூட்டி உழும் போது, பூமியில் கிடைத்த பெட்டியில் சீதை தோன்றினாள். அவளை நீயும் மணந்தாய். இப்போது அவள் பதிவிரதா தர்மத்தில் சிறிதும் குறைவு வராமல் வாழ்கிறாள். தேவேந்திரன், காமதேனுவின் பாலை ஓர் பாத்திரத்தில் நிரப்பி அனுப்பியிருக்கிறான். அதைப் பருகியே அவள் வாழ்கிறாள். ஆகவே, இராவணனை வதம் செய்வதற்கான வழியைக் கேட்பாயாக. இது ஐப்பசி மாதம். பகவதியான தேவியினுடைய திருப்திக்காக, நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால், அன்னையின் அருள் உனக்குக் கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து, தேவி பூஜை மற்றும் ஹோமத்தை செய்து வந்தால், எல்லா சித்திகளும் அடையலாம்.

இந்த விரதத்தை  திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனாரும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர் " என்று கூறி, விரதத்தின் விதிமுறைகளை ஸ்ரீராமருக்கு உபதேசித்தார். ஸ்ரீ ராமரின் வேண்டுகோளுக்கிணங்கி விரதத்தை உடனிருந்து நடத்தி வைக்கவும் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ ராமரும் வனத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, பக்தியுடன் விரதத்தை அனுஷ்டித்தார். அஷ்டமி அன்று இரவில், ஒரு மலை உச்சியில், அனைத்துலகையும் காத்து ரட்சிக்கும் லோகமாதாவான அம்பிகை, சிம்ம வாஹினியாக, ஸ்ரீராமருக்கு தரிசனம் அளித்தாள். 'ஹே ராமா, நீ பக்தியுடன் அனுஷ்டித்த விரதத்தால் திருப்தியடைந்தேன்' என்று அருளியதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான். அயோத்தி திரும்பி, பதினாயிரம் வருடம் ராஜ்ய பரிபாலனம் செய்து, பின் பரமபதம் அடைவாய்' என வரமருளினாள்.

அவ்விதமே, ஸ்ரீ ராமர், இராவணனை வதம் செய்து, சீதையை சிறை மீட்டு, அயோத்தி திரும்பி, நல்லாட்சி நடத்தி மகிழ்ந்திருந்தார்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை:
மேற்கூறிய விதத்தில் விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள், இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம். பூஜை முடிவில் யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தரலாம். அன்னைக்கு நாம் அனைவரும் குழந்தைகளே. அதனால், பக்தி ஒன்றே அம்பிகை நம்மிடம் வேண்டுவது.  

ஒன்பதாவது நாள், மஹா நவமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்கி தொழும் தினமாதலால், சரஸ்வதி பூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது.அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பார்கள். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கு மரியாதை செய்வார்கள். ஆகவே, 'ஆயுத பூஜை' தினம் என்றும் பெயர் வந்தது. 

அன்று,புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம்.  அன்று, வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும் சந்தனம் குங்குமம் இடுவது வழக்கம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜை அவசியம் செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து, பொட்டு வைத்து, பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் கூட ஆயுத பூஜை நடத்துவார்கள். 

பூஜைக்குத் தேவையானவற்றில் கருப்பு நூல் கலக்காத ரவிக்கைத் துணி முக்கியமானது. வெள்ளையில் பூக்கள் போட்ட ரவிக்கைத் துண்டு விசேஷம் என்று கருதப்படுகிறது. வீட்டில் பெண்குழந்தைகள் இருந்தால், குழந்தைக்கு புது உடை வாங்கி, அதை சரஸ்வதிக்கு சாற்றி விட்டுக் கொடுக்கலாம். வீட்டில் பிறந்த பெண்கள்(நாத்தனார்கள்) உள்ளூரில் இருந்தால், சாப்பிட அழைத்துத் தாம்பூலம் தருவது விசேஷம். புடவை வைத்துக் கொடுத்தல் மிகச் சிறந்ததது.
அன்று நிவேதனங்களோடு, வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என விருந்தாக சமைப்பது வழக்கம். சில வீடுகளில் சொஜ்ஜி அப்பம் அல்லது சுகியன் செய்து நிவேதனத்திற்கு வைப்பார்கள்.

விஜய தசமி:
அம்பிகை மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாகக் கொண்டாடப்படும் விஜய தசமியன்று காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும். தியானம், ஆவாஹனம் முதலியவை ஏற்கெனவே செய்திருப்பதால், சுருக்கமாக, மற்ற உபசாரங்களைச் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி, வீட்டு வழக்கப்படி, சுத்த அன்னம், சுக்கு நீர் முதலியவற்றையோ அல்லது மஹாநைவேத்தியத்தையோ நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி, பிரதட்சிண நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்து விட்டு, பூஜையின் போது ஏற்பட்டிருக்கும் குற்றம் குறைகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டும்.

பூஜை முடிந்த உடனோ, அல்லது மாலையிலோ, சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டு கொலுவை எடுத்து வைத்து விடலாம். சில ஊர்களில், ஸ்வாமி அம்பு போடும் வழக்கம் உண்டு. அம்பு போடப் புறப்பட்டுவிட்டு, திரும்பும் முன் பொம்மைகளைப் படுக்க வைப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்துச் செய்து கொள்ளவும்.

முறையாக கலசஸ்தாபனம் செய்து பூஜிப்பவர்கள், விஜயதசமியன்று, சுமங்கலி பூஜை, வடுக பூஜை முதலானவற்றை நடத்திவிட்டு, விருந்தினர்களுக்கு உணவளித்த பின்பே சாப்பிடுவார்கள்.

நம் பண்டிகைகள், கலாசாரம் இவற்றில் இருக்கும் அழகியலைப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாகக் கொண்டாடுவதோடு, அவற்றில் மறைந்திருக்கும் தத்துவத்தை, நம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லி, அவற்றை விடாமல் பேணுவதே இந்நாளில் நம் முக்கியக் கடமையாகும். கலைகள் வளர்வதற்கும், உறவுகள் சிறப்பதற்கும் உதவும் இந்தப் பண்டிகை, பெண்மையைப் போற்றும் ஒரு அற்புத விழாவாகும். இந்த நல்ல நாட்களில், அம்பிகையைக் கொண்டாடி, வணங்கி,

வெற்றி பெறுவோம்!!!

திங்கள், 15 அக்டோபர், 2012

PART 3, NAVARATHIRI GOLU (16/10/2012 TO 24/10/2012)....நவராத்திரி கோலங்களும் நிவேதனங்களும்.சென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி.............


நவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. தினமும் பூஜை செய்வதோடு, இயன்றவர்கள்,தாம்பூலத்தில் கீழ்க்கண்டவற்றை வைத்துத் தருவது சிறப்பு:

ஒன்பது நாளும், தாம்பூலத்தில், வாழை, மா, பலா, கொய்யா, மாதுளம்பழம், நாரத்தை, பேரீச்சம்பழம், திராட்சை முதலிய பழங்களை வைத்துத் தரலாம்.

இரண்டு, மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, முறுக்கு, சூரணம், திரட்டுப்பால், வடகம், வறுவல் ஆகியவற்றைத் தந்து உண்ணச் செய்வது, தேவி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை மகிழ்வித்து எல்லா நலன்களையும் பெற்றுத் தரும். 

நவராத்திரி முதல் மூன்று தினங்கள் ஸ்ரீ துர்க்கையாகவும், அடுத்த மூன்று தினங்கள் ஸ்ரீ லக்ஷ்மியாகவும், நிறைவான மூன்று தினங்கள் மஹாசரஸ்வதியாகவும் அம்பிகை பூஜிக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். நவராத்திரி முதல் நாள், அஸ்த நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அன்றைய தினம் அம்பிகையை பூஜிப்பது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரவல்லது என்று 'தேவி பாகவதம்' சொல்கிறது. மூல நட்சத்திரம், ஸ்ரீ சரஸ்வதிக்குரியதென்பதால் அன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்வது வழக்கம்.

நவராத்திரி பூஜையின் போது ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியின் அர்க்கள ஸ்தோத்திரம் சொல்வது மஹாஸ்தோத்திரம் படித்த நன்மையைத் தரும் என்று பலஸ்ருதி கூறுகிறது. ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.


பூஜையின் போது,புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தன‌ம், அகில்பட்டை, பன்னீர் ஆகிய வாசனைப்பொருட்களை சமர்ப்பிப்பது சிறப்பு. இவையே 'அஷ்டகந்தம்' என்று சிறப்பிக்கப்படுகின்றன. இவற்றை, வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு தருவது பல மடங்கு நற்பலன்களைத் தரும். நவராத்திரி விரதம் இருக்க நினைப்பவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். மஹா நவமி அன்று பால் பழம் மட்டு அருந்தி, விஜய தசமி அன்று, பூஜை முடித்த பிறகு, விருந்தினர்களுக்கு உணவளித்து விட்டு உணவு கொள்வது சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாளும் போட வேண்டிய கோலங்கள், செய்ய வேண்டிய நிவேதனங்கள் இவற்றைப் பார்க்கலாம்.
 முத்தாரத்தி என் கைவண்ணத்தில்


   நாள்        கோலம்
முதல் நாள் அரிசி மாவினால் புள்ளிக் கோலம்.
இரண்டாம் நாள் கோதுமை மாவினால் கட்டங்கள் கோலம்.
மூன்றாம் நாள் முத்து கொண்டு மலர்க்கோலம் .
நான்காம் நாள் அக்ஷதையினால் படிக்கட்டுகள் கோலம்.
ஐந்தாம் நாள் கடலையினால்  பறவைக் கோலம்.

ஆறாம் நாள் துவரம் பருப்பினால் தேவியின் திருநாமம்.
ஏழாம் நாள் பூக்களினால் திட்டாணிக் கோலம்.
எட்டாம் நாள் காசுகளினால் பத்மக் கோலம்.
ஒன்பதாம் நாள்  கற்பூரத்தால் ஆயுதக் கோலம்.
இவற்றில் முத்துக்களினால் மலர்க்கோலம் இப்போது இயலாத ஒன்று (இயன்றவர்கள் செய்யலாம்). எனவே, அதற்குப் பதிலாக, பாசிமணி முத்துக்களாலோ, அல்லது ஊற வைத்த ஜவ்வரிசி கொண்டோ கோலமிடலாம்.     

ஒரு சுத்தமான தாம்பாளத்தில், கோலத்தை வரைந்து கொண்டு, காது குடையும் பட்சினால் (buds),  ஜவ்வரிசிப் பசையை லேசாகத் தடவ வேண்டும். பின், ஊற வைத்த ஜவ்வரிசியை கோணி ஊசியால் ஒவ்வொன்றாக எடுத்து கோலத்தின் மேல் வைக்க வேண்டும். நன்றாக ஒட்டிக் கொள்ளும். காய்ந்த பின், விருப்பமானால் கலர் கொண்டு அலங்கரிக்கலாம்.  இவ்வாறு மலர்க் கோலம் போட்டு, அதன் நடுவில் கற்பூரம் வைத்து ஏற்றி, ஆரத்தி காண்பிப்பது சிறப்பு.

திட்டாணி என்பது, மரத்தைச் சுற்றி அமைக்கப்படும் வட்ட வடிவ மேடை. அந்த வடிவத்தில் கோலமிடுவதே திட்டாணிக் கோலம்.

நவராத்திரி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நிவேதனங்களை, கிழமை வாரியாகவும், திதி வாரியாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். சௌகர்யப்படி செய்து கொள்ளவும். எந்த அட்டவணையைப் பின்பற்றினாலும் அதையே முறையாகப் பின்பற்றவும்.

கிழமை நிவேதனம்
திங்கள்   அக்காரவடிசல்
செவ்வாய்  ஜவ்வரிசி பாயசம்.
புதன் புதினா, கொத்துமல்லி சாதம்
வியாழன் எலுமிச்சை சாதம்.
வெள்ளி ரவா லட்டு, அவல் பாயசம்
சனி  எள் சாதம்
ஞாயிறு கோதுமை அல்வா/ போளி


இந்த வருடம், நவராத்திரி, செவ்வாயன்று தொடங்குகிறது. ஆகவே, மற்றொரு செவ்வாய் கிழமை மஹா நவமியன்று சரஸ்வதி பூஜை. அன்று முப்பருப்பு வடை, எல்லா வகையான‌ கலவை சாதங்கள் செய்வது வழக்கம். சில வீடுகளில்,  விஜய தசமியன்று, மஹாநைவேத்தியமும், வெண்ணை, இலை வடகம் ,சுக்கு வெந்நீரும் நிவேதனமாக வைக்கிறார்கள்.


திதி நிவேதனங்கள் சுண்டல்
பிரதமை நெய் சாதம், வெண்பொங்கல் மூக்குக் கடலை சுண்டல்
துவிதியை வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கல் பாசிப்பருப்பு சுண்டல்
திரிதியை புளியோதரை, பால் பாயசம். கடலைப்பருப்பு சுண்டல்
சதுர்த்தி கற்கண்டு சாதம், பிடி கொழுக்கட்டை. மொச்சை சுண்டல்
பஞ்சமி தயிர் சாதம், பஞ்சாமிர்தம். வேர்க்கடலை சுண்டல்
ஷஷ்டி எள் சாதம், தேன் சேர்த்த நிவேதனம். எள் பொடி
சப்தமி தேங்காய் சாதம், பனங்கற்கண்டு சேர்த்த பால். (வெண்) காராமணி சுண்டல்
அஷ்டமி எலுமிச்சை சாதம், சொஜ்ஜி அப்பம். பாசிப்பயறு சுண்டல்
நவமி பால் சாதம், கோசுமல்லி, நீர் மோர் பட்டாணி சுண்டல்
தசமி நவதானிய வடை/அடை, மாவிளக்கு


இரண்டு நிவேதனங்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில், சௌகரியத்தைப் பொறுத்து, இரண்டுமோ அல்லது ஒன்று மட்டுமோ செய்து கொள்ளலாம்.

ஒன்பது நாளும் பூஜிக்க வேண்டிய பூக்கள், ரத்தினங்கள், அதற்கு மாற்றாகக் கொடுக்க வேண்டியவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். ரத்தினங்கள் கொடுப்பது இப்போது இயலாது. ஆகவே, அவை உங்கள் தகவலுக்காக. ரத்தினங்களுக்கு மாற்றுப் பொருட்களை, இயன்றவர்கள், ஒருவருக்கேனும் வைத்துக் கொடுப்பது நல்லது.

நாள்  மலர்கள்  ரத்தினங்கள்  ரத்தினங்களுக்குப் பதிலாக‌
முதல் நாள்
மல்லிகை, வில்வம் மாணிக்கம் சோழி
இரண்டாம் நாள்  துளசி, முல்லைப்பூ முத்து குன்றிமணி
மூன்றாம் நாள் செண்பகப்பூ, மரு பவழம் தட்டைப்பவளம்
நான்காம் நாள் ஜாதி மரகதம் கிளிஞ்சல்
ஐந்தாம் நாள் வாசனைத் தைலங்கள் கனக புஷ்பராகம் செப்பு
ஆறாம் நாள் பாரிஜாதம், செம்பருத்தி வைரம் பதுமை
ஏழாம் நாள் தும்பை நீலம் அம்மானை
எட்டாம் நாள் மருதோன்றி கோமேதகம் பந்து 
ஒன்பதாம் நாள். தாமரைப்பூ வைடூரியம் கழற்சிக்காய்.


அடுத்த பதிவில்,   இவ்வாறு நவராத்திரி தினங்களில், அம்பிகையை முறையாகப் பூஜிப்பதால்    ஏற்படும் நற்பலன்களைப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

PART 2.NAVARATHRI GOLU (16/10/2012 TO 24/10/2012).....கொலு வைக்கும் முறை

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்.
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
(மஹாகவி பாரதியார், மஹாசக்தி வெண்பா)

சென்ற பதிவின் தொடர்ச்சி......

அன்னையின் அருளாற்றல் அபரிமிதமாகப் பரவியிருக்கும் தினங்களே நவராத்திரி. எப்படி, கதவுகள், ஜன்னல்களைத் திறந்து வைத்தால், சூரிய ஒளி வீட்டை நிறைக்குமோ, அது போல், உள்ளக் கதவுகளைத் திறந்து வைத்து, முறையாக வழிபாடுகள் செய்தால், அன்னையின் பேரருளாற்றல் நம் மீது நிறைவதை உணரலாம்.
முதல் முறையாக கொலுவைப்பவர்கள் கவனத்திற்கு:
நவராத்திரி தினங்களில், கொலு வைத்து வழிபடுவது நம் மரபு. ஓரறிவு உயிரினத்திலிருந்து, எல்லையில்லாப் பேராற்றல் உடைய தெய்வ உருவங்கள் வரை கொலுவிலிருத்தி பூஜிக்கிறோம். சில இல்லங்களில் கொலுவைத்து வழிபடும் வழக்கம் இல்லாதிருக்கலாம். 

முதன் முதலாக, கொலுவைத்து வழிபட நினைப்பவர்கள், இல்லத்துப் பெரியோர்களின் ஒப்புதலைப் பெறுவது முக்கியம். பிறகு, ஒரு செட் மரப்பாச்சி பொம்மை, விநாயகர், முப்பெருந்தேவியர் பொம்மைகள் முதலியவை வாங்கி, அவற்றை ஏதேனும் ஒரு கோவிலில், ஸ்வாமி பாதத்தில் வைத்துத் தரச் சொல்லி,   பின், எடுத்து வந்து வீட்டில் கொலுவாக வைக்கலாம். குறைந்தது மூன்று படிகள் வைப்பது வழக்கம்.  ஒன்பது படிகள் வைப்பது சிறப்பு.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

PART 1, NAVARATHIRI GOLU (16/10/2012 TO 24/10/2012)......நவராத்திரி மகிமை.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
(மஹாகவி பாரதியார்).
பெண்மை போற்றுதலுக்குரியது. துதிக்கத் தகுந்தது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவப்பெருமான் போற்றிப் புகழ்கிறார். உலகில் உயிர்களின் தோற்றம் நிகழ்வது பெண்மையாலேயே.

இவ்வுலகமனைத்தும் ஒரு ஒழுங்கில் இயங்குகிறது.  ஒவ்வொரு இயக்கமும், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்குவதற்குக் காரணமான‌ ஆற்றலின் பிரவாகத்தை, சக்தியின் சொரூபத்தை பெண்வடிவில் தொழுது போற்றும் மார்க்கமே சாக்தம் ஆகும்.

நாம் வாழும் பூமி, அதில் ஓடும் நதிகள், பேசும் மொழி, உண்ணும் உணவு என எதையும் பெண்ணின் அம்சமாக, பூமாதா, கங்கையம்மன், காவிரித்தாய், அன்னைத் தமிழ், அன்னபூரணி, அன்னலட்சுமி என்று சிறப்பித்துக் கூறுவது நமது மரபு

நமது மரபில் 'அன்னை' என்ற உறவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' நாம் மிக உயர்வாக வைத்து மதிக்க வேண்டியவை.

உயிர்களின் தோற்றத்திற்குக் காரணம் அன்னை. 'கெட்டமகன் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை' என்பது நிதர்சன உண்மை. குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் த‌கைமை தாய் ஒருத்திக்கே உண்டு. உலகிற்கு நம்மைத் தருவதிலிருந்து, உணவூட்டிப் பாதுகாத்து, நரைகூடி கிழப்பருவம் எய்தினாலும் தன் மக்கள் நலமே பெரிதென நினைத்துத் தியாகத்தின் மொத்த உருவமாய் வாழும் தாய்மார்களைப் பெரிதெனப் போற்றும் பாரம்பரியம் நம்முடையது.

தாய்மையின் மிக உன்னத, உயரிய வடிவாக, கருணைமழை பொழியும் கற்பக விருட்சமாக, உலகனைத்தும் தோன்றக் காரணமான பரம்பொருளாக, ஜகன்மாதாவாக, உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நின்று உலகை இயங்கச் செய்யும் ஆற்றலின் பெருவடிவாக, அம்பிகையை போற்றி வழிபடுகிறார்கள் சாக்தர்கள்.

'சக்தியில்லையேல் சிவமில்லை' என்பது சாக்தர்களின் துணிபு. ச‌லனமற்றிருக்கும் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சக்தி எனும் ஆற்றலின் முழுவடிவமாய் இவ்வுலகனைத்தையும் தோற்றுவித்து, காத்து, பின் முடிவில் உலகனைத்தும் ஒடுங்கும் இடமாய்த் திகழ்கிறது.

பிரபஞ்சமுழுவதும் உள்ளும் புறமும் ஊடாடி நின்று உலகனைத்தையும் நன்றாய் இயங்கச் செய்து காத்து ரட்சிக்கும் சக்தியின்வழிபாடு, ஷண்மதங்கள் (காணபத்யம், சௌரம், கௌமாரம், சாக்தம், சைவம், ஸ்ரீ வைணவம் எனும் ஆறு பிரிவுகளே ஷண்மதங்கள்) அனைத்திலும் வியாபித்து நிற்பது கண்கூடு.

சைவத்தில் சக்தி சிவனாரின் பத்தினி. திருமாலின் தங்கை. விநாயகர், முருகப்பெருமானின் தாய். ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, 'தாயார்' என்றே போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளும் சக்தி சொரூபமான தேவியரின் துணை கொண்டே, முத்தொழில்களைப் புரிகிறார்கள்.
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;  . (அபிராமி அந்தாதி)

என்று அபிராமி பட்டர், மும்மூர்த்திகளையும் படைத்த பரம்பொருளான ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே, முப்பெருந்தேவியர் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

'த்ரயாணாம் தேவாநாம் ' எனத் தொடங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரபகவத் பாதர், "சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் வடிவமாகத் தோன்றிய மும்மூர்த்திகளும் உனது திருவடிகளுக்குப் பூஜை செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, உனது திருவடிகளைத் தொழுதால், மும்மூர்த்திகளையும் தொழுவதாக ஆகிவிடுமன்றோ" என்று அம்பிகையின் மும்மூர்த்திகளுக்கும் மேலான தன்மையைப் புகழ்கிறார்.

அம்பிகையின் கருணை அளப்பரியது. அடியவர்களை அதிகம் சோதிக்காது, வேண்டுவனவற்றை அப்பொழுதே தரும் தன்மையுடையது. இதை சௌந்தர்ய லஹரியில்,  'பவாநி த்வம் தாஸே' எனத் தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், "பவானி, உன் கருணையுடன் கூடிய கடைக்கண் பார்வையைத் தந்து அருள்வாயாக எனக் கேட்க நினைக்கும் ஒருவன், 'பவானி' எனத் தொடங்கும் முன்பே, மும்மூர்த்திகளின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பட்ட உன் திருவடிகளை உடைய உனது மேலான சாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்" என்று புகழ்கிறார்.

"கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே."
என எங்கும் நிறைப் பரம்பொருளாக அம்பிகையைப் போற்றித்துதிக்கிறார் அபிராமி பட்டர்.

அம்பிகையே 'ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனி' யாக உலகனைத்தையும் படைக்கிறாள். தன் கடைக்கண் பார்வையாலேயே உயிரினங்களைக் காக்கிறாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள  "உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ" என்ற திருநாமம், தேவி இமை கொட்டாமல் உலகைக் காக்கும் தன்மையை வியந்து போற்றுகிறது. இமை கொட்டுகிற அந்த சிறு துளி நேரம் கூட அம்பிகையின் குழந்தைகளான நமக்கு அவள் பார்வையின் பாதுகாப்பு  கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்ற தாய்மையின் தவிப்போடு நம்மைக் காக்கிறாள் அம்பிகை.

உலகில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மஹாகாளியாக அசுரர்களை சம்ஹரித்து அருளுகிறாள். மஹாமாயையாக, உலகனைத்தையும் வசப்படுத்தி, ஆள்கிறாள். அஞ்ஞான இருளில் மூழ்கி ஜீவர்கள் தவிக்கும் போது, தன் வற்றாத பெருங்கருணையால் முக்தியை அருள்கிறாள்

சக்தி வழிபாட்டின் வேர் மிகப் பழமையானது. தாய் வழிபாடும் கன்னி வழிபாடும் மெல்ல மெல்ல ஒருங்கிணைந்தே சாக்தமாகத் தோற்றம் கொண்டது என்றொரு கூற்று உண்டு.ஆதிகாலத்தில், உயிர்களைத் தோற்றுவிக்கும் அதிசய சக்தியாகப் பெண்மையை மதித்த மனிதன், தன் கூட்டங்களுக்குப் பெண்ணின் தலைமையை ஏற்று நடந்தான். காலமாற்றத்தால், இந்நிலை மாறியபோது கூட, பெண்மையின் மகிமையை உணர்ந்து போற்றும் மார்க்கம் மனிதனால் சாக்தமாகப் பேணப்பட்டே வந்திருக்கிறது.

'சக்தி' என்ற சொல்லை உச்சரிக்கும் போதே, நாடி நரம்புகளெல்லாம் பரவும் சிலிர்ப்பு, அந்தச் சொல்லுக்குரிய மகிமையைப் புலப்படுத்தும். ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இந்த உலகைக் காக்கும் அன்னையைத் தொழுது போற்றும் ஒன்பது நாட்களே 'நவராத்திரி'. 

சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம். பாலா, கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, ஸூவாஸினி பூஜை என அனைத்தும் சாக்தத்தில் முக்கிய இடம் பெறுகிறது. முக்கியமாக, அம்பிகைக்கு உகந்த தினங்களான 'நவராத்திரியில்' இப்பூஜைகள் செய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.

கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும் செல்வத்தின் தலைவியாக, ஸ்ரீ லக்ஷ்மியையும் வீரத்தின் அதிதேவதையாக பார்வதியையும் போற்றும் சாக்தத்தில் நவராத்திரிப் பண்டிகை, அமைதியும் காருண்யமும் பொருந்திய அம்பிகை, அநீதி மேலோங்கும் போது துர்க்கையாக, மஹாசண்டியாக, மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை வென்றதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது புரட்டாசி மாதத்தில் பத்து தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிரவும், வசந்த நவராத்திரி, சியாமளநவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆகியவையும் சாக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

ஆயினும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே, நாடெங்கும் திருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனிதமான பாரத நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதத்தில் அன்னை மிகச் சிறப்பாக ஆராதிக்கப்படுகிறாள். வங்காளத்தில், 'துர்க்கா பூஜா' மிக முக்கியமான பண்டிகை. கயிலையில் வாசம் செய்யும் மலைமகளான அன்னை, பிறந்தகம் வந்து செல்வதாக ஐதீகம். பெரும் பந்தல்களில், துர்கா தேவியின் திருவுருவச்சிலைகளை வைத்து, பூஜிக்கிறார்கள். இதற்காகவே, சிறப்பாகத் தயாரிக்கப்படும் அன்னையின் உருவச் சிலைகள், சஷ்டியன்று இரவு, பந்தல்களுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இரவு முழுவதும், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்த தினங்களில் பூஜைகள் விமரிசையாக நடக்கின்றன. தசமி அன்று, அன்னையை வழியனுப்புவதாகக் கருதி, கங்கையில் பிரதிமைகளைக் கரைத்து விடுகிறார்கள்.

குஜராத்தில், மிகச் சிறப்பாக, அன்னையைக் கொண்டாடுகிறார்கள். அங்கு நவராத்திரியின் சிறப்பே, 'டான்டியா' எனப்படும் கோலாட்டம், கும்மி ஆகிய நடனங்கள் தான். பார்வைக்கு வெறும் நடனங்களாகத் தோன்றினாலும், அவற்றின் பின் இருக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் பிரமிக்கத் தக்கது.

நவராத்திரி பண்டிகை, வர்ஷருது என்று சொல்லப்படும், புரட்டாசி, ஐப்பசி மாதக் காலங்களில் வருகிறது. இதமான தட்பவெப்பம் நிலவும் இக்காலகட்டத்தில், காஸ்மிக் எனர்ஜி, பூமியின் மேல் படுவதால், அதை நம் உடல் கிரகித்துக் கொள்ளும் பொருட்டே, மாலை வேளையில் வெளியில் சென்று தாம்பூலம் வாங்குதல், பெரிய திறந்தவெளியில் கோலாட்டம், கும்மி ஆடுதல் ஆகிய பழக்கங்கள் ஏற்பட்டன. கோலாட்டக் கோல், மிகச் சரியான அளவில் காஸ்மிக் எனர்ஜியை நம் உடலுக்குச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கோலாட்டக் கோலை சுழற்றி, சுழன்று ஆடுவதால், இந்த எனர்ஜி உடல் முழுவதும் சீராகப் பரவி உடலுக்கு நன்மை தரும். 
கைகளைத் தட்டி, ஆடும் கும்மி, நம் உடலில் இருக்கும் இருவேறு சக்தி நிலைகளை(பாட்டரி செல்லின் இருபுறமும் இருப்பதைப் போல்) ஒருங்கிணைத்து உடல் நலத்தைச் சீராக்கும். நடுவில் தீபம் ஏற்றி வைத்து, அதைச் சுற்றி ஆடப்படும் கர்பா நடனமும், இவ்வகையைச் சார்ந்ததே. மேலும், தேவியை ஒளிரூபமாக தியானித்து, நடனத்தினால் ஆராதிக்கும் ஒரு முறையே அது.  கர்நாடகாவில், மைசூரில், தசரா உலகப் பிரசித்தம். மேலும், ஒவ்வொரு வீட்டிலும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. உ.பியில், ராவணவதம் நிகழ்ந்த தினமாக  விஜயதசமி கொண்டாடப்படுகிறது. டில்லி, ராம்லீலா மைதானத்தில், ராவணனின் பொம்மைகளைச் செய்து வைத்து, அதை அம்பு விட்டு எரிப்பார்கள்.

பஞ்சாபில், 'விஷால் பகவதி பூஜை' என்று நவராத்திரி சிறப்பிக்கப்படுகிறது. மிகுந்த நியமத்துடன், உபவாசம் இருந்து பூஜிக்கிறார்கள். எட்டாவது நாள், கன்யா பூஜை மிகச் சிறப்பான ஒன்று. அன்றைய தினம், கன்யா குழந்தைகளை(பூப்படையாத பெண் குழந்தைகள்) மணையில் அமர்த்தி, மருதாணி, பூ முதலியவை அளித்துப் பாத பூஜை செய்கிறார்கள். ஜரிகை வேலைகள் செய்த, துப்பட்டாவை அவர்களுக்குப் போர்த்தி, நமஸ்கரித்து, தக்ஷிணை, பூரி, ஹல்வா, பர்பி, சுண்டல் என்று வழங்கி மகிழ்விக்கிறார்கள்.

மும்பையில், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நித்ய வாசஸ்தலமாக விளங்கும் மும்பையில்,அன்னை மகாலக்ஷ்மிக்கு அன்றன்றைய  திதிக்கேற்ப ஒன்பது நிறங்களில் புடவைகள் அணிவிக்கப்படுகின்றன. அதன்படியே, அன்னையை வழிபடும், மும்பை  வாழ் பெண்மணிகளும் அணிவதாகச் சொல்கிறார்கள்.

பிரதமை=பச்சை, திவிதியை=சாம்பல், திரிதியை= பிங்க், சதுர்த்தி=வெள்ளை, பஞ்சமி= சிவப்பு, சஷ்டி=நீலம், சப்தமி=மஞ்சள், அஷ்டமி= ஊதா, நவமி=மயில் கழுத்து பச்சை ஆகிய நிறங்களில் வஸ்திரங்கள் சார்த்தப்படுகின்றன. இங்கும் கன்யா பூஜையும், டான்டியா, ராஸ் நடனங்களும் சிறப்பாக நடக்கின்றன.
எங்க வீட்டு கொலு
நம் தமிழ்நாட்டில், அற்புதமான கொலு கலாசாரம் இருக்கிறது. உயிரினங்கள் அனைத்தையும், புல் பூண்டு முதற்கொண்டு கொலுவாக வைத்துப் பூஜித்து, படைப்பின் அருமையை, வாழ்வின் பெருமையை, இவ்வாழ்வை நமக்களித்த சக்தியின் மகிமையைப் போற்றி, முப்பெருந்தேவியரையும் பூஜித்து, விழாஎடுக்கிறோம்.

நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள், துர்கா தேவியையும், இரண்டாவது மூன்று தினங்கள் லக்ஷ்மி தேவியையும், நிறைவான மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும், பூஜிக்கிறோம்.

ஸ்ரீதுர்கா தேவியைப் பூஜிக்க உதவும் ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.

ஐந்தாம் நாளான, ஸ்ரீலலிதா தேவியின் திருஅவதார தினத்தில், கன்யாகுழந்தைகளை வீட்டுக்கு அழைத்து,  பாத பூஜை செய்து, ஆடை, அணிமணிகள் தந்து மகிழ்விக்கிறோம். இது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு அளிக்கப்படும் பொருட்கள், ருத்ர லோகத்தைச் சேர்ந்து, பல ஆயிரம் ஆண்டுகள் அங்கேயே இருந்து, இவ்வாறு பூஜித்த குடும்பத்தை வாழ்விக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு விஸ்தாரமாகப் பூஜிக்க இயலாதவர்கள், குழந்தைகளுக்கு, புத்தகம், பென்ஸில் பாக்ஸ் முதலிய்வற்றை இனிப்புடன் வழங்கலாம்.

இவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்படும் நவராத்திரியில் கொலு வைக்கும் முறையையும், ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் அடுத்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!!.

அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ASWATHTHA PRATHATCHINAM, AMASOMA VIRATHAM, (15/10/2012), அஸ்வத்தப்(அரசமர) பிரதட்சணம், அமாசோம விரதம்.


ஜயது ஜயது தேவோ தேவகீ நந்தநோsயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஸ‍‍---- -_ப்ரதீப:  |
ஜயது ஜயது மேகஸ்யாமள: கோமளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வீ _பாரநாஸோ முகுந்த:  (ஸ்ரீ முகுந்தமாலை, ஸ்ரீ குலசேகராழ்வார்).

"தேவகி மைந்தனுக்கு வெற்றி உண்டாகட்டும். ஆயர் குலத்தின் அணிவிளக்கான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, ஜெயம் உண்டாகட்டும். மேகம் போல் கருநிறம் கொண்டவனும், மென்மையான அங்கங்களை உடையவனுமாகிய கண்ணனுக்கு ஜெயம் உண்டாகட்டும். பூபாரம் நீக்கிய முகுந்தனுக்கு வெற்றி உண்டாகட்டும்."

நம் முன்னோர், மழை தரும் மரங்களையும்  தெய்வாம்சமாக நினைத்துப் பூஜித்து வழிபட்டனர் .  மரங்களின் அரசனாக விளங்குவது அரசமரம்.

'மரங்களில் நான் அரசமரம்' என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே, கீதையில் அருளுகிறார் என்றால் (அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³:|), அரச மரத்தின் பெருமையினை விவரிக்கத் தேவையில்லை. மரங்களின் அரசன் என்பதாலேயே 'அரசமரம்' என்று அழைக்கப்படும் இம்மரம்,  கரியமில வாயுவை உள்வாங்கி, மற்ற மரங்களை விடவும் மிக அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை படைத்தது.

திங்கட்கிழமையும்(சோமவாரம்), அமாவாசையும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும். இதுவே 'அமாசோம விரதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்து, பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.

இவ்வருடம், மஹாளய அமாவாசை தினமான, 15/10/2012 அன்று அமாசோம விரதம் வருகிறது. அமாவாசை தினங்களில் மஹாளய அமாவாசை தினம் மிகச்சிறப்பு வாய்ந்தது. பித்ரு காரியங்களுக்கு உகந்த தினமான, அன்றைய தினத்தில் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அரசமரத்தின் மருத்துவ குணங்கள்:
அதிகாலை வேளையில் அரசமரத்தைச் சுற்றும் போது, அதிலிருந்து வரும் காற்று, நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி செயல்பட வைக்கும் வலிமையுடையதாக இருக்கிறது. மேலும்,பித்த சம்பந்தமான நோய்களையும், சரும நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. அரசமரப்பட்டை, வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடிசெய்து கஷாயமாகவோ, அல்லது பால் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினாலோ, பெண்களுக்கு, மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள், கருப்பைக் கோளாறுகள் முதலியவை நீங்கும்.

சிறப்பான இருதய வடிவம் கொண்ட இம்மரத்தின் இலைகளை நல்லெண்ணெய் தடவி, நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கொளியில் காட்டினால் பழுப்பு நிறமடையும். அதை உடம்பில் ஏற்படும் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் விரைவில் குணம் தெரியும். அதிகாலையில் இம்மரத்தைச் சுற்ற,  இரத்த ஓட்டம் சீர்ப்படும். மனஅழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.
ஆன்மீக ரீதியாக, அரசமரத்தின் முக்கியத்துவம்:
அரசமரத்திற்கு அஸ்வத்த மரம் என்றும் பெயர் உண்டு. ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து எனும் சொல், அரசங்குச்சிகளையே குறிக்கும். அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் போது வெளிவரும் புகை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான ப்ரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது. காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியும் அந்தப் புகைக்கு உண்டு. ஆனால் சமித்துகளுக்காக அன்றி வேறெந்தக் காரணத்துக்காகவும் அரசமரத்தை வெட்டலாகாது. அவ்வாறு செய்தால் அது பெரும் பாவமாகும்.

இம்மரம் ஸ்ரீ விஷ்ணுவின் வலக்கண்ணில் இருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது. அரசமரத்தின், வேரில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புத்தர் ஞானஒளி அடைந்த போதிமரம் எனப்படுவது அரசமரமே என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரைகளிலும் அரசமரத்தை நட்டு வளர்ப்பார்கள்.  ஏனெனில், அம்மரத்தின் நிழல் பட்ட நீர் நிலைகளில் நீராடுவது, பிரயாகையில்(திரிவேணி சங்கமத்தில்) நீராடுவதற்குச் சமம்.

திருவாவடுதுறை, திருநல்லம் போன்ற சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி ஆகிய வைணவத் திருத்தலங்களிலும் தல விருட்சமாக அரசமரமே விளங்குகிறது. இவ்வாறு கோவிலுக்குள் இருக்கும் அரசமரம் பன்மடங்கு அருட்சக்தி உடையதாக விளங்குகிறது. நாகதோஷ நிவர்த்திக்காக, அரசமரத்தின் அடியில் நாகர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வைப்பது வழக்கம். இம்மரத்தின் அடியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, பெண்கள், மஞ்சள் குங்குமத்தை இம்மரத்தின் அடியில் தூவி வழிபடுவதைக் காணலாம்.

அரசமரத்தின் கன்றை ஒரு நல்ல நாளில் ஊன்றி வைத்து, நீர் வார்த்து, கவனமுடன் வளர்க்க வேண்டும். பின், ஏழு வருடம் கழித்து, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போலவே, உபநயனம் செய்வித்து, ஒரு வேப்பங்கன்றை அதனருகில் நட்டு, இரண்டிற்கும் திருமணம் செய்வித்து வளர்த்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும், முன்னோர்கள் முக்தி நிலை எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்கும் இடங்களில் மிகுந்த சாந்நித்யம் நிலவுவது கண்கூடு. மேலும், இம்மரம் இருக்கும் இடத்திலிருந்து முப்பது மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் கோவிலில் மிகுந்த சாந்நித்யமும் அதன் விளைவாக, மன அமைதியும் கிட்டும் என்று கூறப்படுகிறது.
அஸ்வத்த நாராயண விரதமும் பூஜையும்:
திங்கட்கிழமையும் அமாவாசையும் சேரும் நாட்களில், விரதமிருக்கும் போது, அதற்கு அங்கமாக, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். இதை சுமங்கலிகள், புத்ர சந்தானமும், தீர்க்க ஸௌமாங்கல்யமும் ஏற்பட இதைச் செய்வது அவசியம். இந்தப் பூஜையை அரசமரத்தின் அடியில் செய்யலாம். அல்லது,  பூஜை அறையில் அரசமரக் கொத்தை வைத்துப் பூஜிக்க வேண்டும். 

இந்த விரதம் சம்பந்தமாக வழங்கப்படும் புராணக்கதை:
மகாபாரதத்தில், பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு, இவ்விரத மகிமையைக் கீழ்வருமாறு கூறினார்.

காஞ்சி நகரத்தில், தேவஸ்வாமி என்பவர், தனவதி என்னும் மனைவியுடனும், ஏழு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஏழு ஆண் மக்களுக்கும் திருமணமாகியது. ஒரு நாள், வேத வேதாந்தங்களில் கரை கண்ட ஒரு அந்தணர், தேவஸ்வாமியின் வீட்டுக்கு பிக்ஷையின் பொருட்டு வருகை புரிந்தார். 

அவரைத் தகுந்த முறையில் உபசரித்த தேவஸ்வாமி, தன் மனைவி, மருமகள்கள், மற்றும் மகளை, அவரிடம் ஆசி பெறச் செய்தார். மற்றவர்கள் நமஸ்கரிக்கும் போதெல்லாம், 'தீர்க்க சுமங்கலி பவ' எனும் நல்லாசி கூறிய அவர், குணவதி என்னும் பெயர் கொண்ட, தேவஸ்வாமியின் மகள் நமஸ்கரிக்கும் போது மட்டும், 'திருமணம் நடக்கும் போது, சப்தபதி நேரத்தில், இப்பெண், கணவனை இழப்பாள்' என்றுரைக்க, அதிர்ந்த தேவஸ்வாமி தம்பதியினர், இந்தப் பெருந்துயரம் ஏற்படாதிருக்க வழி கேட்டுப் பிரார்த்திக்க, சிம்ஹள தேசத்திலிருந்து, சோமவதி என்னும் பெண்ணை, திருமணத்திற்கு அழைத்து வந்தால், அப்பெண்ணின் உதவியால் துயர் தீரும் என நல்வழி கூறினார்.

இதைக் கேட்ட, தேவஸ்வாமியின் கடைசிப் புதல்வனான, சிவஸ்வாமி என்பவன், பெற்றோரிடம் அனுமதி பெற்று,  தன் தங்கையாகிய குணவதியையும் அழைத்துக் கொண்டு, சிம்ஹள தேசம் நோக்கிப் பயணமானான். இரவில், ஒரு பெரிய ஆலமரத்தினடியில் இருவரும் தங்கினார்கள். அம்மரத்தில் அண்ட பேரண்ட பக்ஷி என்னும் மிகப்பெரிய பக்ஷியின் கூடு இருந்தது.  இரவு கூட்டை அடைந்த தாய்ப்பறவை, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டத் தொடங்கியது.  ஆனால், குஞ்சுகளோ உணவை ஏற்காமல்,  'அம்மா, இம்மரத்தடியில் இருவர் பசித்திருக்க நாங்கள் மட்டும் எப்படி உணவை ஏற்க முடியும்?'  என்று வினவின.  தாய்ப்பறவை, 'அவர்களுக்கும் உணவளித்து, அவர்கள் வந்த காரியத்தையும் நிறைவேற்றி வைக்கிறேன்!' என்று உறுதியளித்த பின்பே,  அவை உணவுண்டன.  

பின், தாய்ப்பறவை, சிவஸ்வாமிக்கும் குணவதிக்கும் உணவுதந்து உபசரித்து,பின் அவர்கள் வந்த காரியத்தை விசாரித்து, இருவரையும் சிம்ஹளதேசம் கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்கு சோமவதியைக் கண்டு விவரம் கூறியதும் அவளும் உடனே கிளம்பி, அவ்விருவருடன் காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

தேவசர்மா என்பவரின் மகன் ருத்ர சர்மா என்பவருக்கும், குணவதிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  திருமண தினத்தன்று, சப்தபதி நேரத்தில் ருத்ரசர்மா இறந்து விழ, அனைவரும் பதறித் துடித்தனர். இதைக் கண்ட சோமவதி, 'கவலை வேண்டாம். நான் இது நாள் வரையில் கடைபிடித்து வந்த 'அமாசோம விரதத்'தின் பலனைக் குணவதிக்குத் தருகிறேன்' என்று கூறித் தாரை வார்த்துக் கொடுத்தாள். உடனே, ருத்ரசர்மா, உறக்கம் நீங்கி எழுந்தவன் போல் எழுந்தான். சோமவதியும், இவ்விரதத்தைச் செய்யும் முறையை குணவதிக்கு உபதேசித்து,  விடைபெற்றுத் தன் ஊர் சேர்ந்தாள்.

இக்கதையால், அக்காலத்தில், நீதி, தர்மம் முதலியவை எவ்வாறு தழைத்தோங்கியிருந்தது என்பதை அறியலாம். தனக்கு பிக்ஷையிட்ட இல்லத்தில் நேரவிருக்கும் துன்பத்தை அறிந்து, அதைத் துடைக்க வழி செய்த அந்தணர், நன்றி மறவாமைக்கு நல்லதொரு உதாரணமாகிறார். தன் மரத்தடியில் வந்து தங்கிய அதிதிகளை உணவளித்து உபசரித்ததோடு, அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்ற பறவையின் செயல், விருந்தினரை உபசரிக்க வேண்டிய முறையை, அக்காலத்தில் பறவைகளும் கடைப்பிடித்து வந்ததை எடுத்துக் காட்டுகிறது. மேலும், அதன் குஞ்சுகளும், விருந்தினர் உண்ணும் முன் தாங்கள் உண்ணுதல் கூடாது என்று மறுத்தது எத்தனை சிறப்பு?. முன்பின் அறியாதவராயினும், அவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம், தன்னால் நீங்குமென்றால், தன்னாலான உபகாரத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு, சோமவதி திருமணத்திற்கு வருகை புரிந்தாள். மேலும், தன் விரதப்பலனை தாரை வார்த்துக் கொடுக்கிறாள். பரோபகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை. புராணக்கதைகளை, கட்டுக்கதைகள் என்று எண்ணாமல், அதில் இருக்கும் நீதிகளை, வாழ்வில் கடைப்பிடிப்பது நல்லது.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறை: 
இதை விரதமாக எடுத்தால், ஒவ்வொரு வருடமும், அமாவாசையும் திங்கட்கிழமையும் வரும் நாளில், அரசமரத்தைப் பூஜை செய்து, பிரதட்சிணம் செய்ய வேண்டும். விரதம் எடுக்கும் வருடத்தில், நூற்றெட்டு அதிரசங்களைச் செய்து, நூற்றி எட்டு கிழங்கு மஞ்சள்கள் வாங்க வேண்டும். அரசமரத்தின் அடியில் முறைப்படி, வைதீகரை வைத்து, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். பூஜையும் பிரதட்சணமும் நிறைவடையும் வரை உபவாசம் இருக்க வேண்டும்.  அதன் பின், ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுதல் சிறப்பு.

பூஜை  நிறைவடைந்த பிறகு,
மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே |
அக்ரத: சி'வரூபாய விருக்ஷராஜாய தே நம: ||
என்ற மந்திரத்தைச் சொல்லி, மரத்துக்கு நூற்றி எட்டு பிரதட்சணங்கள் செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளும் , ஒரு அதிரசமும் போட வேண்டும். மரத்தின் முன் ஒரு தட்டையோ, பாத்திரத்தையோ வைத்து, இவ்வாறு போடலாம். 

விரதம் எடுப்பதற்கு, அதிரசம் செய்ய சௌகர்யப்படாவிட்டால், மஞ்சளை மட்டும் போடலாம். அல்லது முதல் சுற்றுக்கு மஞ்சள், இரண்டாவது சுற்றுக்கு குங்குமச்சிமிழ், மூன்றாவதற்கு, வெற்றிலை பாக்கு, நான்காவதற்கு பூ இவைகளை வரிசையாகப் போட்ட பிறகு, மீதிச்சுற்றுக்களுக்க்கு சௌகரியம்போல் எதை வேண்டுமானாலும் போடலாம். இனிப்புப் பண்டங்கள் தான் வேண்டுமென்பதில்லை. 108 கண்ணாடி, சீப்பு முதலியவற்றைக் கூடப் போடலாம். 

இயலாதவர்கள், 108 பூக்கள் அல்லது வெல்லக்கட்டிகளைச் சமர்ப்பிக்கலாம்.

பிரதட்சணம் செய்யும் போது மரத்தைத் தொடக்கூடாது. சனிக்கிழமையன்று மட்டும் தான் மரத்தைத் தொடலாமென்றும் ஒரு கூற்று உள்ளது.  மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது.

இவ்வாறு பிரதட்சணம் செய்த பிறகு, புனர் பூஜை செய்து,மரத்திற்கு சமர்ப்பித்தவற்றில் சிலவற்றை விரதத்தை நடத்தி வைத்தவருக்கு தாம்பூலம் தட்சணையுடன் அளித்து விட்டு, மீதியுள்ளவற்றை விநியோகிக்க வேண்டும். அதன் பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

விரதம் எடுத்தவர்கள், இந்த விரதத்தை, சௌகர்யப்பட்ட வருடத்தில் அமாவாசை, திங்கட்கிழமையன்று பூரணமாக வரும் நாளில் முடித்து விடலாம். அவ்வாறு முடிப்பதற்கு, ஐந்து கலசங்கள், அரசமர உருவம் பொறித்த வெள்ளித் தகடு ஒன்று, பிரதிமைத் தகடுகள்(வெள்ளியில்)ஐந்து, கலசங்களுக்கு சுற்ற வேஷ்டி, துண்டுகள்(வஸ்திரம் ஆகியவை தேவை. மற்ற விரதங்களுக்குச் செய்வது போல், பஞ்சதானம் (வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் முதலியன) செய்ய வேண்டும். அதிரசம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

விரதத்தை நிறைவு செய்யும் வருடத்தில், எப்போதும் போல் அரசமரத்துக்குப் பூஜை செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் போட்டு பிரதட்சணம் செய்து விட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு வீடு வந்து விட வேண்டும்.  அதன் பின் ஐந்து வைதீகர்களைக் கொண்டு, கலசங்களை ஸ்தாபனம் செய்து பூஜித்த பின், பஞ்ச தானம்  செய்து, வைதீகர்களுக்கு போஜனம் அளித்து, அவர்கள் சாப்பிடும்போது இலையில் அதிரசத்தையும் போட வேண்டும். பிறகே, மீதியுள்ளவற்றை விநியோகிக்கலாம்.
இதை விரதமாக எடுக்காவிட்டால்:
இம்மரத்தைப் பிரதட்சணம் செய்தால் அனைத்துப் பாவங்களும், சாபங்களும் உடனே நீங்கும். எனவே, இதை விரதமாக எடுக்க சௌகர்யப்படாவிட்டால் கூட பிரதட்சணம் செய்வது சிறப்பு. அவ்வாறு செய்ய விருப்பப்பட்டால், நூற்றி எட்டு இனிப்புப் பண்டங்களை, அல்லது பூக்கள் , வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொண்டு, அதிகாலை நேரத்தில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒவ்வொரு இனிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுமானவரை ஏழு மணிக்குள் வலம் வருவது சிறப்பு. அந்நேரத்தில் ஓசோன் வாயுவை அதிக அளவில் அரசமரம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது. இயலாதவர்கள், பத்து மணிக்குள்ளாவது பிரதட்சணத்தை முடித்துவிடவேண்டும்.

பிறகு,  மரத்துக்கு சமர்ப்பித்தவற்றை, சிறிதளவு வீட்டுக்கு எடுத்துவைத்துக் கொண்டு, மீதியை விநியோகிக்க வேண்டும்.  பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு வந்துவிடலாம்.

மேலே  பிரதட்சணம் செய்வதற்கென்று குறிப்பிட்ட‌ மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்தவாறே சுற்றுவது சிறப்பு.

நூற்றி எட்டு முறை சுற்ற இயலாதவர்கள், இயன்ற அளவு சுற்றலாம். மூன்று முறை  சுற்றினால்,  விருப்பங்கள் நிறைவேறுதலும், ஐந்து முறை சுற்றினால், எக்காரியத்திலும் வெற்றி அடைதலும், ஒன்பது முறை சுற்றினால்,  புத்திர பாக்கியம் அடைதலும், பதினொரு முறை வலம் வந்தால்  எல்லா போக பாக்கியங்கள் கிடைத்தலும்  நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம்  செய்த பலன் அடைதலும் கிடைக்கும்  என்று புராணங்கள் கூறுகின்றன.

அமாசோம விரதத்தன்று, அரசமரத்தைப் பூஜித்து, அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெற்று, 

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 1 அக்டோபர், 2012

MAHALAYA PATCHAM ...(1/10/2012-15/10/2012)...மஹாளய பட்சம்

இன்று முதல் 'மஹாளய பட்சம்' துவங்குகிறது. பட்சம் என்றால் அரை மாதம் அதாவது 15 நாள். சூரியன் கன்யா ராசியில் இருக்கும் போது, அதாவது புரட்டாசி மாதத்தில், தேய்பிறைப் பொழுதை, 'மஹாளய பட்சம்' என்று அழைக்கிறோம். புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பிக்கப்படுகிறது. இது பித்ரு தேவதைகளின் ஆராதனைக்கு மிக உகந்த காலமாகும்.

ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும், தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின்  மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.

பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. ஏனேனின், இந்த 15 நாட்கள் அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு. 

இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள்.  வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது. அங்கிருந்து யமப்பட்டணமாகிய 'ஸம்யமனீபுரி'யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்கவாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய  சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும். ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட ப்ரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம்.
இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.

மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் ப்ரச்னைகள் தொடரும். இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது.

இவ்விடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். நம்மை பெற்றவர்களும், வளர்த்து ஆளாக்கியவர்களுமான, நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

"சிரத்தையுடன் செய்ய வேண்டும்" என்பதாலேயே, சிரார்த்தம் என்ற பெயர் வந்தது. சிரார்த்தம், முன்னோர்கள் இறைவனடி சேர்ந்த தினத்தன்றும், மஹாளய பட்சத்தின் போதும் செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு மாத அமாவாசை, மாதப்பிறப்பு( இயலாதவர்கள், விஷூப்புண்ய காலம் என்று சொல்லப்படும், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப்பிறப்புகளிலாவது) தர்ப்பணம் செய்யவேண்டும். பித்ருக்களுக்கு, மானிட சரீரமில்லாததால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீரை, இந்த  சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பெறுகிறார்கள்.

இங்கு நாம் செய்யும் கர்மாக்களில் அளிக்கப்படும் பொருட்கள், பித்ருக்களின் தேவியாகிய 'சுவதா தேவி'யால், அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.

சுவதா தேவி அவதரித்த புராணம்:
பிரம்மதேவர், ஆதியில், ஏழு பிதுர்க்களை உருவாக்கினார். இவர்களில் நால்வர், சரீரமுள்ளவர்கள். மூவர் தேஜோ ரூபமாக இருப்பவர்கள். அவர்களுக்கு, உணவாக, ஸ்ரார்த்த காலத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தையும், ஸ்நான காலத்தில் செய்யும் தர்ப்பணத்தையும்(அர்க்யம்), தேவ பூஜை செய்யும் முன்பாக செய்யும் ஸ்ரார்த்தத்தையும் (நாந்தி முதலியவை) நியமித்தார்.

ஆனால், பூலோகத்தில், இதைச் செய்யும் போது, பித்ருக்களால் அவற்றைப் பெற முடியவில்லை. அவர்கள், பசி தாகத்தால், துன்புற்று, பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மதேவர், பிரகிருதி தேவியின் அம்சமாக, நூறு சந்திரப் பிரகாசத்துடன், செண்பகப்பூவின் நிறத்துடன், புன்சிரிப்புடன் கூடியவளாகவும், அனைவருக்கும், வேண்டியதை அளிக்கும் சக்தி உள்ளவளாகவும், நூறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூவில் திருவடிகளை வைத்தவளாகவும் உள்ள 'சுவதா' என்ற பெண்ணைத் தோற்றுவித்து, பித்ரு தேவதைக்குப் பத்னி ஆகுமாறு (சில புராணங்களில், இந்த தேவி, தக்ஷப் பிரஜாபதியின் மகள் எனவும் வருகிறது) செய்தார்.

அதன் பின், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யும் போது, சுவதாவோடு கூடிய மந்திரத்தை உச்சரித்துச் செய்யலாயினர். அதன் பலனாக, ஸ்ரார்த்தக் காலத்தில் கொடுக்கப்பட்டவை, எந்த இடையூறும் இல்லாமல் பித்ரு லோகத்தை அடையலாயிற்று.

தேவர்களுக்கு, சுவாஹா மந்திரமும், பிதுர்க்களுக்கு சுவதா மந்திரமும் முக்கியமானவை. இவற்றை உச்சரிக்காமல், செய்யும் கர்மாக்களுக்கும் பலன் இல்லை. அது போல், சுவதா தேவியைப் பூஜிக்காமல் ஸ்ரார்த்தம் செய்தால், அவ்வாறு செய்தவன், ஸ்ரார்த்தம் செய்த பலனை அடையமாட்டான். இந்தப் புராணம் தேவி பாகவதத்திலும் இன்னும் பல புராண நூல்களிலும் வருகிறது.பித்ரு தேவதைகளுக்கு நாம் அளிப்பவை, சுவதா தேவியால் அவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன.

அவர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் கூட, அவர்களிடம், அவர்களுக்குத் தேவையான பொருள்களாக மாற்றி அவற்றைச் சேர்ப்பிக்கிறாள் சுவதா தேவி. உதாரணமாக, அவர்கள் வினைப்பயனால் உணவுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் நமது ஸ்ரார்த்த பலன், தக்க நேரத்தில் அவர்களுக்கு உணவாக யார் மூலமாவது கிடைக்கும்படி செய்வாள். அப்போது, அவர்கள் அடையும் திருப்தியால் ஏற்படும் புண்ணிய பலனை,  நமக்குக் கிடைக்கும்படியும் செய்வாள். ஆகவே, பித்ரு காரியங்களை விடாமல் செய்ய வேண்டும்.

சிலர், 'காசிக்குப் போய்ச் செய்து விட்டேன். ஆகவே இனி, பித்ருகர்மாக்களைத் தொடர வேண்டியதில்லை என்று கூறுகிறார்கள்'. இது, முற்றிலும் தவறான கருத்து. ஒரு நாள் விருந்து சாப்பிட்டால், மறுநாள் பட்டினி கிடப்போமா?. அது போல் பித்ருகர்மாக்களைத் தவறாமல் தொடர வேண்டும். ஏதேனும் ஆசிரமத்தில் அன்னதானத்திற்கு கொடுத்தால் மிக நல்லது. அதற்காக, அவ்வாறு கொடுத்துவிட்டேன் எனக் கூறி பித்ருகாரியத்தை நிறுத்தலாகாது. அன்னதானப்பலன் தனியாக வந்தடையும். பித்ருகாரியத்தை நிறுத்துவது தகாது.


தெய்வ காரியங்களான, சமாராதனை போன்றவற்றிற்கு முடிந்து வைத்து, தள்ளிப்போடலாம். ஆனால் சிரார்த்த காரியங்களை அவ்வாறு செய்ய முடியாது. தகுந்த தினத்தில், தவறாது நிகழ்த்தவேண்டும்.

தகப்பனார் இல்லாதவர்கள், திதியன்று செய்தது போக, மஹாளய பட்சத்திலும் சிரார்த்தம் செய்ய வேண்டும். திதி கொடுக்கத் தவறியவர்களும், இந்த சமயத்தில் செய்யலாம்.  சிரார்த்த திதி செய்ய முடியாமல் போனவர்கள், மஹாளயத்தில் செய்யலாம். ஆனால் மஹாளய பட்சத்தில் செய்ய முடியாமல் போனால் அதற்கு மாற்றே கிடையாது. ஆகவே கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மஹாளய பட்சத்தில், தகப்பனார் இறந்த திதி வரும் சமயத்தில் மஹாளய சிரார்த்தம் செய்ய வேண்டும். திதி, பௌர்ணமியானால், மத்யாஷ்டமியன்று(அஷ்டமி) செய்யலாம். குடும்பத்தில்,  துறவியாகி, இறைவனடி சேர்ந்த உறவின‌ர்களுக்கு,   துவாதசியன்று செய்ய வேண்டும். அதற்கு யதி மாளயம் என்றே பெயர். துர்மரணம் அடைந்தவர்க‌ளுக்கு,  மஹாளய அமாவாசையன்று செய்யலாம். சிரார்த்த திதியன்று திதி கொடுக்கத்  தவறிப்போனவர்களுக்கு, இந்தப் பதினைந்து நாட்களில் அவர்கள் திதி வரும் தினத்திலோ அல்லது அமாவாசையன்றோ செய்யலாம்.

அந்தத் திதி வரும் நேரத்தில் செய்ய முடியாதவர்கள், வேறொரு திதியில் செய்யலாம். ஏனெனில், இந்த பட்சம் முழுவதும் பித்ரு தேவதைகள் பூவுலகிலேயே இருக்கிறார்கள். ஒவ்வொரு திதியன்று செய்வதற்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.
பிரதமை: செல்வ வளர்ச்சி.
துவிதியை:  வம்சம்  விருத்தியடைதல்.
திருதியை:  நல்ல மணவாழ்வு அமைதல்.
சதுர்த்தி: பகை விலகும்.
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும்  
சஷ்டி:  நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
சப்தமி: மேலுலகோர் ஆசி.
அஷ்டமி:  அறிவு வளர்ச்சி.
நவமி: ஏழு பிறவிக்கும் நல்ல மனைவி, குடும்பம்  அமைதல்.
தசமி:  விருப்பங்கள் நிறைவேறும்.
ஏகாதசி:  கல்வி அபிவிருத்தி.
துவாதசி: ஆபரணங்கள்  விருத்தியாதல்.
திரயோதசி: நல்ல குழந்தைகள், நீண்ட ஆயுள்  கிடைக்கும். பசுக்கள் விருத்தியாகும்.
சதுர்த்தசி:  கணவன் ,மனைவியருக்குள் சச்சரவு நீங்கி ஒற்றுமை வளர்தல்.
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் பரிபூரண அருள் கிடைத்தல்.

இராமேசுவரம், காசி, அலகாபாத், நதி தீரங்கள் முதலியவற்றில் செய்யப்படும் மஹாளய சிரார்த்தம் அதிக பலனைக் கொடுக்கும். அவ்வாறு செய்யும் போது, கூட்டுக் குடும்பமாக இல்லாதவர்கள், தனித்தனியாகத் தான் செய்ய வேண்டும்.பொதுவாக, மாஹாளய பட்சத்தில், முழுமையான‌ சிரார்த்தம் செய்வது சிறப்பு. ஆனால் இப்போது, ஹிரண்ய சிரார்த்தம் செய்கிறார்கள். ஹிரண்யம் என்றால் தங்கம். முன் காலத்தில் தட்சணையாக தங்கம் வைத்துக் கொடுத்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

ஹிரண்ய சிரார்த்தம் செய்யும் போது, வைதீகர்களுக்கு, நல்ல உயர்ந்த அரிசி பருப்பு, பெரிய பசுமையான‌ வாழைக்காய் முதலியவற்றைத் தரவேண்டும. தரமும் அளவும் குறைந்த அரிசி முதலியவற்றைத் தரக் கூடாது. நாம் அளிப்பதைப் பொறுத்தே பலனும் என்பதை நினைவு கொள்ள வேண்டும். சிரார்த்த காலத்தில், பெரியோர்களின் நினைவைப் போற்றியெ பங்கு கொள்ள வேண்டும். கேளிக்கைப் பேச்சுக்களைப் பேசக்கூடாது. சிரார்த்தம் முடியும் வரை உபவாசம் இருக்க வேண்டும். வைதீர்களுக்கு உணவளிப்பது சாலச் சிறந்தது. சமாராதனை சமையலாகச் செய்து, பாயசம், வடை, போளி, பட்சணங்கள் இவற்றுடன் உணவளிக்கலாம்.  இரவு திரவ உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.

சில சமயம், தவிர்க்க முடியாத காரணத்தால், மஹாளய அமாவாசைக்குள், சிரார்த்தம் செய்யத் தவறிவிட்டால், அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி திதிக்குள், ஹிரண்ய சிரார்த்தம் செய்து விட வேண்டும். தவறக் கூடாது.சிரார்த்தம் செய்ய இயலாத நிலையில் இருப்போர், தர்ப்பணமாவது செய்ய வேண்டும். அதுவும் இயலாத நிலையில் இருப்போர், மனமுருகி ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாலே, போதும். பித்ருக்கள், நிச்சயம் ஆசி கூறுவர்.

இந்தப் பதினைந்து நாட்களும் செய்ய வேண்டியவை:
வீடு சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சண்டை சச்சரவுகள், குறிப்பாக, இறந்தவர்களை நிந்திக்கக் கூடாது.  'என் அப்பா எனக்கு என்ன செய்தார்?' என்றோ, மறைந்த‌ மாமியார் மாமனார்களைத் திட்டியோ பேசக்கூடாது. அவர்கள் செய்தது நியாயமல்ல என்றாலும் அதற்கு நம் கர்மவினைகளும் ஒரு காரணம் அல்லவா?. மாமிசம் உண்போர் அதைத் தவிர்த்தலும், மற்றவர்கள், வெங்காயம், பூண்டு முதலியவற்றைத் தவிர்த்தலும் அவசியம். கூடுமானவரை கேளிக்கைகளைத் தவிர்த்தல் நலம். 

பித்ரு ஆராதனைக்கு உகந்த இந்த தினங்களில் அவர்களை ஆராதித்து, ஆசி பெற்று, 

வெற்றி பெறுவோம்!!!!