‘தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக் குறியெறிந்த சக்கரத்தான்
தான் முதலே நங்கட்குச் சார்வு’
பேயாழ்வார் பெருமான், மூன்றாந்திருவந்தாதி - 99
இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப்பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது மிக உண்மையான வாக்கியம். துன்பம் வரும் போது, மனங்கலங்காது, இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, நம் வாழ்வைத் தொடர்ந்தால், கட்டாயம் இறைவன் நம்மைக் காத்து, வெயிலின் வெம்மை தணிக்கும் குடைபோல் உடன் வந்து, துன்பத்தைப் பொறுக்கும் சக்தியையும், துன்பத்திலிருந்து மீளும் வழியையும் அருளுகிறான்.
இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே 'பக்தி'. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால் இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப்பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும்.
'அவனருளால் அவன் தாள் வணங்கி' எனபதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது. அது காமம், குரோதம் முதலிய தீய குணங்களால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவுதற்கும் இறை கருணையே கைகொடுக்கிறது. 'உன் திருவடி மறவாதிருக்க வேண்டும்' என நாளும் வேண்டுவதாலேயே ஒருவரின் ஆன்ம ஈடேற்றம் பூர்த்தியாகும் வாய்ப்புக் கிட்டும்.
கஜேந்திர மோக்ஷக் கதை நாம் யாவரும் அறிந்ததே. மேற்கூறியவற்றின் ஓர் அருமையான உதாரணமாக, கஜேந்திர மோக்ஷத்தைக் கொள்ளலாம்.
பாற்கடலில் பள்ளி கொண்டருளும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், கஜேந்திரன் என்னும் யானைக்கு வந்த துயரம் நீக்கி, வைகுண்ட பதம் அளித்த நிகழ்வே கஜேந்திர மோக்ஷம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் அருளப்பெற்றிருக்கும் கஜேந்திர மோக்ஷத்தைச் சுருக்கமாகத் தந்திருக்கிறேன். அதன்படி, முதலில் கஜேந்திரனின் முற்பிறவியைப் பற்றிப் பார்க்கலாம்.
கஜேந்திரனின் முற்பிறவி
கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு அரசனாக, இந்திரத்யும்னன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான். ஸ்ரீமந் நாராயணனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக, எப்போதும், ஸ்ரீ விஷ்ணுவின் திருவுருவையே தியானிப்பவனாக இருந்து வந்தான் இந்திரத்யும்னன்.
ஒரு முறை இந்திரத்யும்னன், மலய பர்வதம் என்னும் இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவக்கோலத்தில், ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்தான். அவ்வாறு ஆராதிக்கும் காலத்தில் மௌனவிரதமும் பூண்டிருந்தான்.
அச்சமயத்தில், அங்கு வந்த அகத்திய மாமுனிவர், அரசன் தன்னை வரவேற்காது நிஷ்டையில் இருப்பதைப் பார்த்து கோபமுற்றார். தம்மை அவமதித்ததாக எண்ணி, 'யானை போல் ஜடமான புத்தியை உடைய நீ, யானையாகவே பிறவி எடுக்கக் கடவது' என்று சபித்து விட்டார். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எத்தனை நியமங்களை ஒருவர் கைக்கொண்டாலும், மகான்களை வரவேற்று உபசரிப்பதற்காக அவற்றைக் கைவிடலாம். இதை அறியாது இந்திரத்யும்னன் இருந்ததாலேயே இந்த சாபம்.
கஜேந்திரன் முதலை வாயில் அகப்படுதல்:
சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்.
த்ரிகூடம் என்னும் மலையில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தது கஜேந்திரன். முற்பிறவியில் பகவத் சிந்தனையில் இருந்ததன் காரணமாக, ஒளி பொருந்திய தேகமும் அபரிமிதமான பலமும், தேஜஸூம் கொண்டதாக விளங்கியது கஜேந்திரன்.
அந்த மலையின் தாழ்வான பகுதியில், வருணபகவானுக்கு உரியதான, ருதுமத் எனப் பெயர் கொண்ட ஒரு உத்தியான வனம் இருந்தது. கஜேந்திரனும் அவனது யானைக் கூட்டமும், அந்த வனத்தில் இருந்த மரம் செடி கொடிகளை எல்லாம், சிதறடித்துக் கொண்டு சஞ்சாரம் செய்து வந்த போது, தாகம் மேலிட்டதன் காரணத்தால், அருகிருந்த ஒரு தடாகக் கரையை அடைந்தன.
தாமரை மலர்கள் நிறைந்த அந்த குளத்தில், கஜேந்திரனும் மற்ற யானைகளும், துதிக்கையால், நீரை எடுத்து அருந்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற யானைகளின் மேல் வாரி இறைத்தும், நீரை மேல் நோக்கிப் பொழிந்தும் விளையாடத் தொடங்கின.
அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு முதலை, சினம் கொண்டு, கஜேந்திரனின் காலைப் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அந்த முதலையும் ஒரு சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியை அடைந்து இருந்தது. ஹூஹூ என்ற பெயருடைய ஒரு கந்தர்வன், தம் மனைவிமாருடன், இந்தக் குளக்கரையில் நீராடிய போது, நீருள் இருந்து தவம் புரிந்து வந்த 'தேவலர்' என்ற முனிவரின் காலைப் பற்றி அறியாமல் இழுத்துவிட்டான். தவம் கலைந்த முனிவர், கடும் கோபத்துடன், முதலையாகப் பிறக்க வேண்டுமென்று அவனுக்கு சாபம் கொடுத்து விட்டார். அறியாமல் செய்த தவறாகையால், பக்த சிரோமணி ஒருவருடைய காலைப் பற்றும் போது விமோசனம் கிடைக்கும் என்று சாப விமோசனமும் அருளினார்.
கஜேந்திரனும் தன் பலத்தை எல்லாம் திரட்டி, முதலையின் வாயில் இருந்து விடுபட முயற்சித்தது. ஒரு நாள் இருநாள் அல்ல. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு, அக்கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், மனம் உருகி, வேதனை தாங்காமல் கதறின. பலங்கொண்ட மட்டும் கஜேந்திரனை இழுத்துப் பார்த்தன. அவற்றால் முடியவில்லை.
இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கியவாறு அந்த இடம் விட்டு அகன்றன.
நெடுங்காலமாகப் போராடிய கஜேந்திரனின், மனோபலமும் உடல் பலமும் வெகுவாகக் குறையலாயின. அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. உடனே, அந்த யானை, தன் துதிக்கையால், குளத்தில் இருந்த தாமரை மலர்களை எடுத்து, பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது.
கஜேந்திரனின் துதி:
இந்திரத்யும்னனாக இருந்த போது கற்றுக் கொண்ட 'நிர்க்குண பரப்பிரஹ்ம ஸ்தோத்திர'த்தைக் கூறிக்கொண்டே பகவானை அர்ச்சிக்கத் துவங்கியது கஜேந்திரன்.
இதிலிருக்கும் ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.
ஸ வை தேவாஸூர மர்த்யதிர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான்ன ஜந்து:
நாயம் குண: கர்ம ந ஸன்ன சாஸன்
நிஷேதசேஷோ ஜயதாதசேஷ:
(பொருள்: பரம்பொருள் தேவனுமல்ல, அசுரனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமும் பறவையுமல்ல, பெண்ணும் ஆணும் அலியும் அல்ல, பிறப்பு இறப்பு உடையதல்ல, குணம், கர்மம், ஸத், அஸத் முதலியவையும் அல்ல. இவை எல்லாவற்றையும் விட மேலானதான அந்தப் பரம்பொருள் எனக்கு உரியதாகி என்னைக் காக்க வேண்டும்)
இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.
"யாரால் இந்த உலகம் உருவாகி, உயிரூட்டப் பெற்றதோ, அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கிறேன்.
யாருடைய வடிவாகவே இந்தப் பிரபஞ்சம் விளங்குகிறதோ, யார் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ , அந்தப் பரம்பொருளைச் சரணடைகிறேன். யார், தேவர்களாலும் ரிஷிகளாலும் கூட அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து ரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம்,தொழில், வடிவம் முதலியவை இல்லாமல் இருப்பினும், உலகத்தின் நன்மைக்காக இவற்றை தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ,யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும் வடிவமற்றதுமான பரப்பிரம்மமோ, அவருக்கு என் வந்தனம்.
பரிசுத்தமான மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்குக் காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதவரும், சரணடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம் கொண்டவருமாக இருப்பவர் எவரோ அவருக்கு நமஸ்காரம்.
யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்ணால் காண்கின்றார்களோ, அந்த பரம்பொருளுக்கு நமஸ்காரம்.
நான் மோக்ஷத்தையே விரும்புகிறேன். மாயையால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றும் இல்லை. ஆகவே, ப்ரம்மமும் பரமபதமுமாகி விளங்கும் பகவானைச் சரணடைகிறேன்."
இவ்வாறு கூறித் துதித்தது கஜேந்திரன்.
இதை சுருக்கமாக 'ஆதிமூலமே, அநாத ரக்ஷகா, அரவிந்தா' என்று கஜேந்திரன் மனமுருகி, கதறி அழைத்ததாகக் கூறுவர். இந்த திருநாமங்களை அல்லும் பகலும் ஸ்மரிப்பவருக்கு தீராத துன்பம் என்று ஏதும் வராது என்பது நம்பிக்கை.
கஜேந்திரன் மோக்ஷமடைதல்:
யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?
கஜேந்திரனின் அபயக் குரல் பரமாத்மாவான ஸ்ரீமந் நாரயணனின் திருச்செவிகளில் விழுந்தது.
பாற்கடலில் பாம்பணை மேல் பையத் துயின்று கொண்டிருந்த கருணைப் பெருங்கடல் யானையின் குரல் கேட்ட மாத்திரத்தில், தம் இருப்பிடம் விட்டு விரைந்து எழுந்தார்.
எம்பெருமான், தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) கீழே விழுவதையும் பொருட்படுத்தாது, தம் பக்தரைக் காக்க விரைந்து பூலோகம் வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு. மற்றொன்று பிரகலாதனுக்காக(பிரகலாதனைக் காத்த லீலையை என் பக்தியின் மேன்மை பதிவில் எழுதியிருக்கிறேன்).
காக்கும் கடவுள், தம் பக்தனைக் காக்க, கருட வாகனமேறி, ககனமார்க்கமாக விரைந்து வந்து, கஜேந்திரன் இருந்த தடாகத்தை அடைந்தார்.
மிகுந்த துன்பத்திலாழ்ந்திருந்த கஜேந்திரன், பரமாத்மாவைக் கண்ணுற்று, தாமரை ஏந்திய தன் துதிக்கையை மிகுந்த சிரமத்துடன் உயரத்தூக்கி, மனமகிழ்வுடன் அவரை நமஸ்கரித்தது.
பகவான் தன் சக்ராயுதத்தால் முதலையைப் பிளந்து, முதலில் கந்தர்வனுக்கு சாப விமோசனம் கொடுத்தார். பரமபாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ இறைவன் முன்னுரிமை அளிக்கிறார்?. ஹூஹூவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து, அவரை பலவாறாகத் துதித்து வணங்கி, தன் இருப்பிடம் சேர்ந்தான்.
அதன் பின், வைகுண்ட பதம் அடையும் காலம் வரை, அதன் பொருட்டு துன்பத்தை அனுபவித்த கஜேந்திரனுக்கு, எல்லா தேவர்களும் சூழ்ந்திருந்து மலர் மாரி பொழிய, அனைத்துப் பதங்களிலும் சிறந்ததும் மேலானதும் ஆன்மாக்களின் உயரிய புகலிடமும் ஆன வைகுண்ட பதத்தை அளித்தருளினார்.
கஜேந்திரன், பகவானின் அனுக்கிரகத்தால் மஞ்சள் பட்டு அணிந்து, நான்கு புஜங்களை உடையவனாக, அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கிய சாரூப(பகவானின் திருவுருவடைதல்) நிலையை அடைந்தான்.
அப்போழுது பகவான் ஸ்ரீ விஷ்ணு கீழ்க்கண்டவாறு அருளினார்:
"யாரொருவர், இந்த தடாகத்தையும், உன்னையும்(கஜேந்திரனையும்), என்னையும் இந்த (த்ரிகூட)மலையையும், வனத்தையும், இதிலிருக்கும் மூங்கில்,புதர்கள், தேவவிருக்ஷங்கள் ஆகியவற்றையும், எனது மச்சாவதாரம் முதலான அவதார லீலைகளையும் சூரியனையும், சந்திரனையும் அக்னியையும், ஓங்காரத்தையும், சத்தியம், யோகமாயை,பசு, வேதம் அறிந்த அந்தணர்கள், நிரந்தரமான தருமம், தர்மம், சந்திரன், கஸ்யபர் ஆகியோருடைய பத்தினிகளான தக்ஷப் பிரஜாபதியின் புத்ரிகள்,கங்கை, சரஸ்வதி,யமுனை, ஐராவதம், சப்த ரிஷிகள், துருவன், நற்சிந்தனையுள்ள மனிதர்கள் ஆகியோரையும், விடியற்காலையில் தூய மனதோடு ஸ்மரணை செய்கிறார்களோ, அவர்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.
மேலும், இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தை பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, கேட்கிறார்களோ விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராணப் பிரயாண சமயத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அருளுகிறேன்".
இவ்வாறு அருளிவிட்டு, சங்கநாதம் முழங்க, ஸ்ரீ விஷ்ணு, கஜேந்திரனுடன், ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார்.
கஜேந்திர மோக்ஷ சரிதம், துன்பத்தால் துவளாத மனவுறுதியையும், எந்நிலையிலும் இறைவனை நம்பும் நற்சிந்தனையையும் நமக்குத் தருகிறது.
இதே போன்று, ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் போது, காட்டுத்தீயினால் சூழப்பட்ட கோபர்களின் அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்து காப்பாற்றினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அச்சமயத்தில் கோபர்கள் துதித்த 'தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திர'மும் எத்தகைய ஆபத்தையும் நீக்கவல்ல மகிமை பொருந்திய துதியாகும். என் சக வலைப்பதிவரும் அன்புச்சகோதரருமான, திரு.ஸ்ரீகணேஷ் அவர்கள், தமது வலைப்பூவில் பதிவிட்டிருக்கும் தாவானல ஸம்ஹரண ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.
வழிபடு தெய்வம் எதுவானாலும் நம்பிக்கையுடன் மனமுருகி வழிபட்டால், கொடுந்துன்பமும் சிறு தூசாகும். மலைபோல் இடர்வரினும் மலர் போல் மென்மையாகும். நெருப்பாறும் குளிர்ந்த ஓடையாகும். நீங்காமல் நம் அருகிருந்து இறைகருணை காக்கும். இறைபக்தி எந்நாளும் மேன்மை தரவல்லது.
இறைவனின் அருள் என்றென்றும் நமக்கு உண்டு. நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு!!.
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்கம் முடிந்தவுடன் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை சகோதரி குறைத்து விட்டார். மனமார்ந்த நன்றிகள். தாவானல சம்ஹார ஸ்தோத்ரத்தின் பதிவு பற்றிய குறிப்பிற்கும், பதிவு லிங்க் கொடுத்துமைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குசகோதரி இன்று ஞான கணேசாவில் தொடங்கி கஜேந்திர மோட்சத்தில் முடித்திருக்கிறார். மிக அருமை.
/////kshetrayatraa said...
பதிலளிநீக்குகஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்கம் முடிந்தவுடன் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை சகோதரி குறைத்து விட்டார். மனமார்ந்த நன்றிகள். தாவானல சம்ஹார ஸ்தோத்ரத்தின் பதிவு பற்றிய குறிப்பிற்கும், பதிவு லிங்க் கொடுத்துமைக்கும் மிக்க நன்றி.
சகோதரி இன்று ஞான கணேசாவில் தொடங்கி கஜேந்திர மோட்சத்தில் முடித்திருக்கிறார்.//////
அண்ணாவின் பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களது வலைப்பூவில் கஜேந்திர மோக்ஷம் ஸ்தோத்திரத்தை விரைவில் பதிவிடக் கேட்டுக் கொள்கிறேன். பதிவிட்டதும் மீண்டும் லிங்க் கொடுக்கிறேன். மிக்க நன்றி அண்ணா.
கஜேந்திர மோட்சம் ஸ்தோத்திரம் தினசரி காலையில் கண்விழிக்கும் போது ஸ்தோத்தரித்தல் மிகவும் விசேஷம் ..
பதிலளிநீக்குநாராயணா அகில குரு பகவன் நமஸ்தே .. !
அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்..
/////இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குகஜேந்திர மோட்சம் ஸ்தோத்திரம் தினசரி காலையில் கண்விழிக்கும் போது ஸ்தோத்தரித்தல் மிகவும் விசேஷம் ..
நாராயணா அகில குரு பகவன் நமஸ்தே .. !
அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்../////
தங்களின் பாராட்டுதல்களுக்கும் ஊக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா.
சரி..
பதிலளிநீக்குசரி..
தொடருங்கள்..
தொடருகிறோம்...
Excellent . Thanks
பதிலளிநீக்குமிக்க நன்றி!.
பதிலளிநீக்கு