நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 14 ஜூலை, 2012

ஆடி வரும் ஆடி


தேடியுனைச் சரணடைந்தேன், 
தேசமுத்து மாரி!!
கேடதனை நீக்கிடுவாய், 
கேட்டவரந் தருவாய்.

பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்
கோடிநலம் செய்திடுவாய்
குறைகளெல்லாம் தீர்ப்பாய் (மஹாகவி பாரதியார்)

ஆடி மாதம், பண்டிகைகள் அணிவகுத்துத் துவங்கும் மாதம். தக்ஷிணாயன புண்யகாலம் துவங்குவது ஆடி மாதம் முதலே.

அயனம் என்றால் வழி, தக்ஷிணம் என்றால் தெற்கு என்று பொருள்.சூரியன், சற்றுத் தெற்கு நோக்கி சஞ்சாரம் செய்யத் துவங்குவதால், தக்ஷிணாயனம் என்று பொருள். நமது ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும், தக்ஷிணாயனம் தேவர்களின் இரவுக் காலம் என்றும் கருதப்படுகிறது.

நாம், சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு வருடம், மாதம் கணக்கிடும் சௌரமான பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகிறோம். சூரியன் கடக இராசியில் பிரவேசிக்கும் தினத்தை  ஆடிமாதப் பிறப்பாக, பண்டிகையாகக் கொண்டாடுவது நமது மரபு. உத்தராயணத் தொடக்க காலத்தையும் (தைமாதப் பிறப்பு) பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். இவ்வருடம், ஆடிப்பண்டிகை, 16:7:2012, திங்களன்று வருகிறது.

'ஆடிப் பட்டம் தேடி விதை' என்று சொல்வது வழக்கம். ஆடி மாதம் மழைக்காலத் துவக்கம். 'நீரின்றி அமையாது உலகு' அல்லவா?. மாரிக்காலம் துவங்குவதால் அதன் காரணமாக வரும் நோய்களிலிருந்தும் வெள்ளப் பெருக்கிலிருந்தும் காக்க வேண்டி,  மழையை அருளுவதோடு, தன் வற்றாத பெருங்கருணையை பக்தர்கள் மேல் மழையெனப் பொழிவதால் 'மாரி' என்றே போற்றப்படும் மாரியம்மனுக்குத் திருவிழாக்கள் பொலியும் மாதம் ஆடி. 

ஜமதக்னி முனிவரின் தர்ம பத்தினியான ரேணுகா தேவியின் சிரத்தைத் தன் தந்தையின் கட்டளையால் துண்டித்த அவரது மைந்தன் பரசுராமர், பின் மீண்டும் தன் தாய் உயிர் பிழைக்க தந்தையிடம் வரம் வேண்டினார். ஜமதக்னி முனிவர், 'உன் தாயின், சிரத்தோடு உடலைப் பொருத்தி வைத்து, இந்தக் கமண்டல‌ நீரைத் தெளிக்க அவள் உயிர் பெறுவாள்' என வரமளித்தார். ரேணுகா தேவியோடு உயிரிழந்த மற்றொரு பெண்மணியின் உடலில், ரேணுகா தேவியின் சிரத்தை தவறுதலாக, மாற்றிப் பொருத்தி உயிர் பெறச் செய்து விட்டார் பரசுராமர்.

பின் நிலையுணர்ந்து தந்தையிடம் அவர் முறையிட, ஜமதக்னி முனிவர், அவ்வாறு உயிர் பெற்ற ரேணுகாதேவியை, மாரியம்மனாக, மக்களுக்கு அருள வேண்டி வரமளித்தார். அவ்வாறு தலையும் உடலும் 'மாறி' இருக்கும் தேவியாதலால் 'மாரி' எனப் பெயர் பெற்றாள் என்று மாரியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதை வழங்கப்படுகிறது.

(ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த நிகழ்வு சற்று மாறுபடுத்திக் கூறப்படுகிறது).
ஸ்ரீ புன்னை நல்லூர் மாரியம்மன்
ஆடி, மார்கழி இரண்டையும் பீடு (பீடு=பெருமை) உடைய மாதங்கள் என்று சொல்வது வழக்கம். அதுவே, பின்னர் திரிந்து பீடை மாதங்கள், சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல என்பதாக மாறியது. உண்மையில் இவ்விரண்டு மாதங்களும் தெய்வ காரியங்களுக்கு மிக உகந்ததென்பதால் திருமணம் முதலிய சுபகாரியங்கள் நடத்துவதில்லை.

ஆடிப்பண்டிகை துவங்கி மாதம் முழுதும் பண்டிகைகள் ஆடிப்பாடி வரும் மாதமிது. ஆடிப் பெருக்கு, திருவாடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை என அணிவகுக்கும் விசேஷங்கள். சில வருடங்களில் வரமஹாலக்ஷ்மி விரதம் ஆடி மாதத்தில் வருவதுண்டு.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், கோவில்களில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில், பல கோவில்களில் 1008 குத்து விளக்கு பூஜைகள் அற்புதமாக நடத்தப்பட்டு, கோவில் முழுவதும் அன்னையின் அருள் ஒளி வெள்ளம், தீப ஜோதியென பிரகாசிக்கும்.

பெரும்பான்மையான அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். எளிய மக்களின் உணவான கூழ் மாரியம்மனுக்கு மிக உகந்ததாகும். 

தான் பெற்ற மக்கள் அனைவரையும் ஒன்றெனவே பாவிக்கும் ஜகந்மாதாவான அன்னை, அந்த எளிய உணவையே, தன் விருப்ப‌ நிவேதனமாக உவந்து ஏற்கிறாள். கள்ளமில்லா உள்ளத்தில் வெள்ளமெனப் பெருகும் பக்தி ஒன்றையே எதிர்பார்க்கும் அந்த அன்னையை, தங்கள் வீட்டுப் பெண்ணெனக் கருதி, பொங்கலிட்டு, பூச்சொரிதல் விழா நடத்திக் கொண்டாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

வேப்பிலை ஆடை கட்டுதல், பூக்குழி இறங்குதல், பூச்சட்டி ஏந்துதல் போன்ற வேண்டுதல்கள் மூலம், அம்மனுக்கு தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துப் பணியும் பக்தர்கள், ஆடி ஞாயிற்றுக் கிழமைகளில், குடும்ப வழக்கப்படி, தங்கள் இல்லங்களில் கூழ் வார்த்தல் வைபவங்களை, தங்கள் உற்றார் உறவினர்களுடன் கூடி நடத்தி மகிழ்கிறார்கள்.

ஸ்ரீ மீனாட்சி அம்மன்
ஆடிமாதம் மதுரை மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு (முளைப்பாரி) உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இம்மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அம்மனுக்கு மட்டும் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று துவங்கி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. அம்பிகை விதவிதமான அலங்காரங்களில் அழகாக அலங்கரிக்கப்பட்டு நாயக்கர் மண்டபத்தில் அருட்காட்சி அருளுகிறாள்.

மழை வேண்டியும், வயல்வெளிகளில் நாற்றுக்கள் நல்லவிதமாக வளர்ந்து விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இந்த உற்சவத்தில் மதுரையைச் சுற்றியுள்ள ஊர் மக்கள் கலந்து கொண்டு, முளைப்பாரிகளை வளர்த்து அம்மனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். மிக உயரமாக முளைப்பாரிகள் வளர்ந்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.

விழாவின் நிறைவு நாளன்று, கும்மிப்பாடல்களைப் பாடி, பொற்றாமரைக் குளத்தில் முளைப்பாரிகளைக் கரைப்பதோடு உற்சவம் நிறைவு பெறும். 

மதுரையில் மட்டுமல்லாது, வேறு பல கோவில்களிலும் முளைக்கொட்டு உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சம்பிரதாயங்கள்:

ஆடி மாதப் பிறப்பன்று, தக்ஷிணாயன  புண்யகாலம் துவங்குவதால், தர்ப்பணம் செய்ய வேண்டும். பண்டிகை என்பதால் ஏதேனும் ஒரு இனிப்பு, வடை, பாயசத்தோடு விருந்தாகச் சமைப்பது வழக்கம்.

திருமணமான முதல் வருடம், புது மணத் தம்பதிகளை, மணமகளின் இல்லத்திற்கு விருந்திற்கு அழைத்து, சீர் வரிசைகள் செய்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் கொடுத்து உபசரிப்பது நமது மரபு.

ஆடி மாதம் முதல் மூன்று நாட்கள், எந்த நதிகளிலும் ஸ்நானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு. நதிகளில் புது வெள்ளம் பெருகும் காலமாதலால், அவ்வாறு வரும் வெள்ளத்திலிருந்து, நம் உடல் நிலையைப் பாதிக்கும் நோய்த் தொற்றுக்களிலிருந்து நம்மைக் காக்க வேண்டி கூறப்படும் கூற்று இது.

ஆடி வெள்ளிக் கிழமைகளில், சில இல்லங்களில் மாவிளக்குப் போடும் வழக்கம் உண்டு. பொதுவாக, ஆடி வெள்ளிக் கிழமைகளில், பெண்கள், தங்கள் இல்லங்களில் லக்ஷ்மி பூஜை, குத்து விளக்குப் பூஜை  போன்ற பூஜைகளை, தங்களால் இயன்ற அளவு, மிகச் சிறிய அளவிலேனும் செய்வதும், பெண்களை அழைத்துத் தாம்பூலம் தருவதும் இல்லத்துக்குச் செழிப்பைத் தரும்.

பூஜையின் போது பாராயணம் செய்ய ஸ்ரீ கௌரி தசகத்துக்கு இங்கு சொடுக்கவும்.

மேலும், நமது இல்லத்தின் வீட்டு வாயிற்படி, பூஜை அறை நிலைப்படி ஆகியவற்றில்  குலதெய்வம் கொலுவிருந்து அருளுவதால், அவற்றுக்கு, மஞ்சள் குங்குமம் இட்டு, மலர்கள், மாவிலைத் தோரணத்தால் அலங்கரிப்பது மிகவும் சிறப்பு. தினமுமே, மஞ்சள், குங்குமம் பூ வைத்து, வெள்ளிக் கிழமைகளில் மாவிலைத் தோரணத்தால் அலங்கரிப்பது, குலதெய்வப் ப்ரீதியைத் தரும். நமக்கு வினைப்பயனால் ஏதேனும் எதிர்பாராத ஆபத்து  வருமாயின், குலதெய்வமே முதலில் ஓடி வந்து நம்மைக் காப்பாற்றும். ஆகையால் இதைச் செய்வது மிகவும் நல்லது.

ஆடிப்பண்டிகை துவங்கி மாதம் முழுவதும் வரும் பண்டிகைகளை உளமகிழ்வோடு கொண்டாடி, அம்பிகையின் அருள் பெற்று, 

வெற்றி பெறுவோம்!!!

6 கருத்துகள்:

  1. ஆஹா அருமை!
    மகாகவியின் பாடலோடு துவங்கி ஸ்ரீ மாரியம்மனின் புராண கதையோடு அதனால் ஆடியின் சிறப்பையும் அன்னையவள் அந்த அடியிலே எப்படியெல்லாம் வணங்கப் படுகிறாள் அதனால் அவள் மனம் குளிர்ந்து எப்படி தனது கருணை மழைப் பொலிந்து உலக உயிர்களை உயவிக்கிறாள் என்பதையெல்லாம் மிகவும் அற்புதமான விளக்கத்தோடு சமைத்துள்ளீர்கள்!

    இந்தத் தருணத்திலே சமயபுரத்திலே வீட்டிற்க்கும் அன்னை ஸ்ரீ மாரியம்மனை துதித்து நான் எழுதியப் பாடலையும் இங்கே சமர்பிக்கிறேன் சகோதரி...

    சமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே!
    உமையவளே, உண்மைதோறும் உறைபவளே!
    அம்மையே, எமையாதரிக்க வேண்டியே - உம்மையே
    தேடிவந்தேன் ஏழைமுகம் பாராயோ!

    "எங்கெங்கு காணினும் சக்தியன்றோ" அவள்
    எங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ
    தங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்
    மங்கலமுத்துமாரி வுன்சேவடி போற்றுகின்றேன்!

    வயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை, அதனூடே
    முயலோட, நதிதனிலே கயலாட கரைதனிலே
    மயிலாட யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா
    குயல்போலே நின்புக்ழ்பாட அருள்வாயே!

    தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றேன்ம் -மஞ்ச
    நீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே - காவிரி
    ஆறோடும் கரையினிலே தேடிவந்தேன் - அம்மா
    காட்டிடுவாய் கனிமுகத்தை நேரில்வந்தே!

    பக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன்
    சக்தி உனையே யாவினிலும் காணுகிறேன்
    சத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே
    நித்தியானந்தம் அருள்வாய் தாயே!

    சக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே
    பக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்
    புத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே
    சித்தியினை தந்திடுவாய் சீக்கிரம்வந்திங்கே!

    மஞ்சளாடை உடுத்தியுமே மண்டலமும் விரதமிருந்தே
    அஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு போட்டுவந்தேன்
    தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
    நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே!

    அருமையானப் பதிவு பகிர்விர்க்கும் நன்றிகள் சகொதரியாரே!

    பதிலளிநீக்கு
  2. ஜி ஆலாசியம் said...

    //தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
    நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே!//

    மிக அருமையான கவிதை அண்ணா. தங்களின் வருகைக்கும் அன்னையவளைப்
    போற்றிப் புகழ்ந்து படைத்திட்ட அற்புதக் கவிதைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.
    ஆடி மாதம்,
    அம்பாளின் தரிசனம்,
    புண்யகால்ம்,
    ஆடியை துவக்கி,
    வெற்றி பெருவோம்.
    அருமை பெருமைகளை
    விளக்கியுள்ளீர்
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. //Udhaya Kumar said...
    ஆடியை துவக்கி,
    வெற்றி பெருவோம்.//

    தங்கள் வருகைக்கும் பாராடுதல்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆடியில் தொடர்ந்து வரும் (வரம் தரும்) பண்டிகைகள் என்ற தலைப்பிட்டு

    வரலட்சுமி விரதம்
    ஆடிக்கிருத்திகை

    என ஒவ்வொன்று பற்றியும் தனித் தனி பதிவாக எழுத வேண்டும் என விரும்புகிறோம்.. ஆவலுடன் காத்திருக்கின்றோம்..

    "ஆன்மிக அலைவரிசை"
    ஆவலை பூர்த்தி செய்யுமா..?!

    பதிலளிநீக்கு
  6. அய்யர் said...

    //ஆவலை பூர்த்தி செய்யுமா..?!//

    தங்கள் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறைவன் தனிப்பெருங்கருணை இருப்பின், நிச்சயம் தங்கள் ஆவலைப் பூர்த்தி செய்வேன். மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..