பாடல் 10
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
புவனியில் போய்ப் பிறவாமையின் – பூமியில் சென்று பிறவாமால்
நாம் அவமே நாள் போக்குகின்றோம் – யாம் வீணாகவே காலத்தைக் கழிக்கின்றோம்.
இந்தப் பூமி - இந்தப் பூமியானது.
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி - சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்ளுகின்ற இடமென்று உணர்ந்து,
திருப்பெருந்துறையுறைவாய் - திருப்பெருந்துறையில் அருள்பவனே!
திருமாலாம் அவன் - திருமாலாகிய அவன்.
விருப்பு எய்தவும் - விரும்பவும்.
மலரவன் ஆசைப்படவும் - பிரமன் ஆசைப்படவும்
நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் - உனது முழுமையான, உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாக.
அவனியில் புகுந்து - பூமியில் எழுந்தருளி வந்து.
எமை ஆட்கொள்ள வல்லாய் - எங்களை ஆட்கொள்ள வல்லவனே!
ஆரமுதே -- அமுதம் போன்றவனே!
பள்ளி எழுந்தருளாயே - திருப்பள்ளி எழுந்தருள்வாயாக!
இப்பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்கள் குறித்து,.....
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்===
'புவனி' என்பது, இங்கு 'தனு, கரண , புவன , போகங்கள்' என்பனவற்றில் வரும், 'புவனம்' என்பதாகக் கையாளப்படுகின்றது. தேவர்களும், மூவர்களும், உயர்நிலையை அடைந்த ஆன்மாக்களாக இருப்பினும், 'பராமுக்தர்கள்' என்னும் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தும் உயிர்களாக இருப்பினும் அவர்கள் விருப்பப்படி, பூவுலகில் வந்து பிறத்தல் இயலாது..இறைவனது விருப்பம் இருந்தால் மட்டுமே அவர்களால் பூவுலகு வருதல் இயலும்... திருவுளம் இரங்கும் காலத்தை எதிர்நோக்கியிருக்கும் அவர்கள், தம் காலம் வீணே கழிகிறது என்று எண்ணிக் கவலை கொள்கிறார்கள்..
இதிலிருந்து இன்னொன்றும் புலப்படுகின்றது.. தமது உயர் வாழ்வு குறித்து, அவர்கள் மகிழவில்லை.. பெருமான் திருவடிகள் சேரும் பேரானந்த வாழ்வையே அவர்களும் விரும்புகிறார்கள்.ஆகவே பூமியில் பிறத்தலை விரும்புகிறார்கள்..
ஆணவமலத்தால், 'நாம் இன்னும் பூமியில் பிறக்கவில்லையே..' என்கிறார்கள்.. நடப்பது யாவும் ஈசன் செயலென்னும் 'திரோதான சுத்தி' இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது கண்கூடு..
' சிவன் உய்யக் கொள்கின்ற ' என்று சிறப்பாக, 'சிவ' நாமம் சொல்லப்படுவதிலும் ஒரு பொருளுண்டு..
தமிழில் உயிரெழுத்துக்கள் 'சக்தி அக்ஷரங்கள்' என்றும், மெய்யெழுத்துக்கள் 'சிவ அக்ஷரங்கள்' என்றும் குறிக்கப்படும் மரபுண்டு..அதிலும் குறிப்பாக, 'இ', 'ஈ' இரண்டு அக்ஷரங்களும் சக்தி பீஜங்களாகவே குறிக்கப்படுகின்றன.
ஆக, நிர்க்குண பிரம்மமான எம்பெருமான் திருநாமத்தில், சக்தி பீஜம் சேரும் போது, அது 'சிவம்' என்னும் மங்களத்தைத் தரும் திருநாமமாகிறது.. பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாகிறது. சிவத்திலிருந்து 'இ'காரத்தைப் பிரிக்க, அது வேறு பொருள் தரும்.
இறைவனும் இறைவியுமாக வந்து, அருள் செய்ய வேண்டும் என்பதையே இங்கு குறிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்==
இங்கு 'திருப்பெருந்துறையுறைவாய்' என்று தம் உள்ளத்தில் கோயில் கொண்ட பெருமானைக் குறிப்பிடுகிறார்.
மிகப் பல பாடல்களில், 'திருமாலும் பிரமனும் காணா' என்கின்ற பயன்பாடு வருவதைப் பார்க்கலாம்.. இதன் பொருள் நுண்மையானது..
பிரமன் என்பது அறிவின் குறியீடு...அறிவின் சிகரமான நாமகள் அவர் நாவில் பொருந்தி இருக்கிறாள்.. பிரமனால் அறிய முடியாது என்பதை அறிவினால் , தர்க்க வாதங்களினால் அறிய முடியாது என்று கொள்ள வேண்டும்..'அறிவரியான்' என்று மாணிக்கவாசகப் பெருமான், முன்பு அருளியதை நினைவில் கொள்ளலாம்.
திருமால்== உலக நிலை பெறுதலுக்கு, காத்தல் தொழிலுக்கு அதிபதி.. உலகாயத வஸ்துக்கள் அவராலேயே நிலை பெறுகின்றன... ஆக, உலகியல் பொருட்களின் நுகர்ச்சியால் இறைவனை அடைய இயலாதென்பது பொருள்..
ஆயினும், சத்வ குண சம்பந்தம் இருப்பதால் , திருமால் விரும்புகிறார்.. பிரமனோ ஆசைப்படுகின்றார். இவ்விரு வார்த்தைகளுக்கும் இருக்கும் வேறுபாடு நாம் அறிந்ததே..
ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் என்னும் திருமூலர் வாக்கு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
'வேண்டத்தக்க தறிவோய் நீ' என்றில்லாமல், தன் பால் முதன்மை ஏற்றும் குற்றம் ஆணவம் கலந்த அறிவுக்கு உண்டென்பது பெரியோர் கருத்து.
ஆகவே, மலரவன் ஆசைப்படுகின்றான் என்றார்.
அலர்ந்த மெய்க்கருணை== அன்பர்கள் பால், முழுமையாக (மலர்ந்த), மெய்ப்பொருளான தன்னை அறிவிக்கும் கருணை கொள்ளுதலை விவரித்தார்.
நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்== என்று குறித்ததால், எம்பிரானின் கருணாசக்தியாகிய எம்பிராட்டியும் எம்பிரானும், இணைந்து அருள் செய்தலைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.==== 'புவனி' என்று முதலில் சொல்லி, புவனத்தைக் குறித்தவர், இப்போது, 'அவனி' என்கிறார்... அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் என்பதற்கிணங்க.. தம்முள் புகுந்து, தம்மை ஆட்கொண்ட வித்தகத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
'என் உளமே புகுந்த அதனால்' என்று ஆளுடையப் பிள்ளை குறிப்பதையும் இங்கு பொருத்தலாம்.
எம்பெருமான் ஆட்கொண்டால் பிறவா பெருநிலை கிட்டும்.. 'ஆரமுது' என்று பிறவா பெருநிலை அளித்தலைக் குறிப்பிட்டார்..
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பதற்கிணங்க..இறைவனின் தொண்டர்களையே இறைவனாகப் பாவித்துத் தொண்டு செய்வோரையும் இறைவன் பெரிதுவந்து ஆட்கொண்டருளுகின்றான்.
பெருமிழலை என்ற ஊரில் வாழ்ந்து வந்த குறும்பர் என்னும் சிவபக்தர் சுந்தரரைப் பணிந்து போற்றி வந்தார். தமது யோக சக்தியால், சுந்தரர் திருவஞ்சைக் களத்திலிருந்து கைலாயம் செல்ல இருப்பதைத் அறிந்து, தியானத்தில் அமர்ந்து, சுந்தரருக்கு முன்பே கயிலை போய்ச் சேர்ந்தார்.
சிறைநன் புனல்திரு நாவலூர்
ஆளி செழுங்கயிலைக்(கு)
இறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடிய அடியடை
வேன்என்(று) உடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே. (திருத்தொண்டர் திருவந்தாதி, நம்பியாண்டார் நம்பி).
திங்களூரில் பிறந்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரையே தன் தெய்வமாகக் கொண்டு அவர் பேரிலேயே தண்ணீர்ப் பந்தல் முதலியவற்றை வைத்து நடத்தி வந்தார். அவரை வணங்கியே அப்பூதியபடிகள் நற்கதி பெற்றார்.
தனமா வதுதிரு நாவுக்(கு)
அரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்(து)
ஆங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அன்னமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே.(திருத்தொண்டர் திருவந்தாதி ,நம்பியாண்டார் நம்பி).
நம்முள் ஆன்ம ஸ்வரூபமாக இறைவன் உறைகிறான். ஆன்மா விழிப்புற்று, உண்மை நிலை அறிதலே 'திரோதான சுத்தி'.. அதனை விழிக்கச் செய்யும் பொருட்டுப் போற்றிப் பாடுதலே 'திருப்பள்ளியெழுச்சி'..
'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கு உருகார்'. பொன்னார் மேனியன், மின்னார் செஞ்சடையோன் பதம் பாடிப் போற்றுவதும் அவனருளே!!... பெருங்கருணைப் பேராறான இறைவன் கருணை இடையறாது நம் மீது பொழியப் பிரார்த்திக்கிறேன்!!
நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. வள்ளலார் பெருமான்.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!
அன்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..