நட்பாகத் தொடர்பவர்கள்

திருவெம்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவெம்பாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.. SONG NO : 20...திருவெம்பாவை.....பாடல் எண் : 20


பாடல் எண் : 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொருள்:
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

எல்லாப் பொருள்களுக்கும் முதலாக ஆதியாக‌ இருக்கின்ற உன் திருவடி மலர்களுக்கு வணக்கம்!... (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

அனைத்துப் பொருள்களுக்கும் முடிவாக இருக்கின்ற  செந்நிறமான தளிர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.. ( இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்

போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற பொன்னை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்..

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

எல்லா உயிர்களும் நிலைபெறும் இடமாக‌ இருக்கின்ற பூப் போன்ற மென்மையான, ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளுக்கு வணக்கம்.


போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

எல்லா உயிர்களுக்கும் முடிவு எய்துவதற்குக் காரணமாக இருக்கின்ற இணையடிகளுக்கு வணக்கம்.

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

திருமாலும் பிரம்ம தேவனும் எவ்வளவு முயற்சித்தும் காண  முடியாத திருவடித் தாமரைகளுக்கு வணக்கம்.

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

நம் அனைவரையும் ஆட்கொண்டருளும் பொன்மலர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

இவ்விதமாக இறைவனைப் போற்றி   நாம் அனைவரும் மகிழ்ந்து மார்கழி நீராடுவோமாக!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதியாகிய இறைவனது இணையடிகளைப் போற்றுவது என்பது மானிடப் பிறவி எடுத்ததன் மிக உயர்ந்த பயனாகச் சொல்லப்படுகிறது..இவ்வாறு போற்றுதல் ஒன்றே பிறவிப் பயனைப் பெற்றுத் தரும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

என்கிறார் திருவள்ளுவர்.. இறைவனது திருவடிகளைப் போற்றுவது மிக உயரிய செயல்

'இறைவனைப் போற்றுகிறோம்' என்று சொல்லாமல், குறிப்பாக, இறையனாரின் இணையடிகளைப் போற்றுவதற்குக் காரணம் உள்ளது..இறைவனை எத்தனை உருவில் நாம் வழிபட்டாலும், எத்தனை முகங்களுடையவராய், திருக்கரங்கள் உடையவராய் நாம் துதித்தாலும், அவரது இணையடிகள்  மட்டும் இரண்டு.. மானிடர்களாகிய நாம், நம் இருகரங்களால் 'சிக்'கெனப் பிடித்துக் கொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கு உதவும்படிக்கு திருவடிகள் இரண்டு மட்டுமே..

நாம் ஒருவரது ஆசிகளைப் பெற விரும்பினால், அவர்களது பாதங்களைத் தொட்டுத் தான் வணங்குகின்றோம். பாதங்களைத் தொட்டு வணங்குவது என்பது, ஆணவம் நீங்கிய நிலை... இறுமாப்பு இல்லாமல், பிறரது வாழ்த்துக்களைப் பெறும் பொருட்டு அவரது பாதங்களைத் தொடுகிறோம்..

ஆக, ஆணவமற்ற நிலையில், இறைவனின் அருட்புனலில் ஆடும் பொருட்டு, பாவை மகளிர், இறைவனின் திருவடிமலரிணையைப் போற்றித் துதிப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. 

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்.... 

'போற்றி' என்ற சொல்லுக்கு, போற்று என்றும் பொருள் கொள்ள இயலும்..போற்றுக என்றால் காப்பாயாக என்றும் பொருள்... இங்கு போற்றி அருளுக என்னும் போது, உன் திருவடிகளைப் போற்றுகின்றோம். அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும் என்பது பொருள்

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்...   அவனே அனைவருக்கும் ஆதி ஆயினான். எல்லாப் பொருட்களுக்கும் முதல் ஆவது இறைவன் இணையடிகளே..

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்.

எல்லாப் பொருட்களுக்கும் முதல் யாரோ அவரே முடிவும். அவரது இணையடிகளே முடிவாக, எல்லாப் பொருட்களும் சென்று சேரும் இடமாக  இருக்கின்றன.. அவற்றை செந்தளிர்கள் என்றது, பரம்பொருளின், 'அழித்தல்' என்னும் சம்ஹாரத் தொழிலைப் புகழ்ந்து.. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிறம் குறியீடாகக் குறிக்கப்படுகின்றது.. ஐம்பூதங்களின் வடிவாய் இருப்பவன் இறைவன்.. இதனையே'நிறங்களோர் ஐந்துடையாய்என்று போற்றுகிறோம்.

அதன் படி, பஞ்ச பூதங்களில் நெருப்புக்க்குரிய நிறம் சிவப்பு.. சம்ஹாரத்தைச் செய்யும் அனலை தம் ஒரு திருக்கரத்தில் ஏந்தியே கூத்தாடுகிறார் எம்பிரான். அந்த சிவப்பு நிறத்தைக் குறித்தே 'செந்தளிர்கள்' என்றார். முடிவுக்குக் காரணமான திருவடிகள் என்பதால் 'செந்தளிர்கள்' ஆயிற்று.
சேவடி(செம்மையான நிறம் பொருந்திய திருவடிகள்) தொழுவோருக்கு மனோவிகாரங்கள் அற்ற நிலை வாய்க்கும்.

'போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்'==== 'ஆதி' என்பது எல்லாவுலகும் தோன்றக் காரணனாய் நிற்கும் நிலையைக் குறித்தது..(அதாவது, ஆதி, அந்தம் என்னும் 'காரண நிலை' முதல் இரு வரிகளில் வந்தது. அடுத்த வரிகளில் 'காரிய நிலை' வருகிறது.)

'தோற்றமாம்' என்பதன் மூலம் படைப்புத் தொழில் விளக்கப்பட்டது..

இறைவன் 'பொன்னார் மேனியன்'.. ஆக, இறைவனது திருப்பாதம் பொற்பாதம்.. பொன்னை ஒத்த நிறமும், பிரகாசமும் உள்ள பாதம் எனவும் பொருள் கொள்ளலாம். மேலும் பஞ்ச பூதங்களில் பூமிக்கான நிறமாகக் குறிப்பது பொன்னிறத்தை..அதனாலும் படைப்புத் தொழிலைச் செய்யும் பாதம் பொற்பாதம் ஆனது.

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார்
எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது.(உண்மை நெறி விளக்கம்)

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்== இதில், இறைவனார், உயிர்களைக் காக்கும் பான்மை கூறப்பட்டது.. எல்லா உயிர்களும் நிலைபெறுவது இறையனாரின் திருவடி மகிமையாலேயே..கழல்கள் அணிந்த பூப்போன்ற மென்மையான சேவடிகள் என்று உரைப்பது, இறைவ ன்  தன் கருணையால் உயிர்களைக் காத்தருளுதலைக் குறிப்பதற்காக.

போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்== ஈறு என்பதை முடிவு என்றும் கொள்ளலாம்.. நிறைவு என்றும் கொள்ளலாம்.. இங்கு இறையனார் உயிர்களுக்கு அருட்பேறு தந்து ஆட்கொண்டு, மீண்டும் பிறவாநிலையளித்தலால் அவரது திருவடிகளை இணையடிகள் என்றார். அத்திருவடிகளில் சேர்ந்து விட்டால் ,ஆதி, அந்தம், தோற்றம், போகம் எதுவும் இல்லை.. எல்லாம் நிறைந்து முடிந்தது.. ஆகவே 'ஈறு' என்ற சொல்லால், நிலைத்த ஒடுங்குதலை, முக்திப் பேறைக் குறித்தார்.

இணையடிகள் என்பதால், அம்மை, அப்பன் இருவரது திருவருளையும் பெற்றாலே முக்திப் பேறு கிட்டும் என்பதைக் குறித்தார். அர்த்தநாரீஸ்வரனான இறைவனின் திருவடிகளில் ஒன்று உமையம்மையுடையதல்லவா!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.( அப்பர் பெருமான்)

போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்== 'காணாத' என்ற சொல், இங்கு இறைவனின் மறைத்தல் தொழிலைப் புலப்படுத்துகிறது. ஐயனின் 'திரோதானம்' இங்கு வருகிறது.. இறைவனது அருட்சக்தியின் ஒரு கூறே திரோதான சக்தி. மறைத்தல் என்பது இறைவன் தன்னை அறிய விடாது உயிர்களின் அறிவை மறைத்தல். உண்மையில் மறைப்பது ஆணவம்.ஆணவ மலம் செயற்படச் செயற்படத்தான் அதன் சத்தி படிப்படியாகத் தேயும். அதன் சக்தி தேயும் போது, உயிரறிவு மறைப்பு நீங்கி விளக்கம் பெறும். இறைவனை உணரும் தகுதி ஏற்படும்.

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்=== இவ்விடத்தும் இறைவனது திருவடிகளை 'பொன் மலர்கள்' என்று குறித்தார். முன்பு 'பொற்பாதம்' என்றவிடத்து, பிரகாசமும் நிறமும் குறித்தவர், இங்கு மலரொத்த மென்மையைக் குறிக்கின்றார். மென்மை, கருணையைக் குறிக்கும்..கருணையோடு கூடிய அருட்சக்தியால் தக்க சமயத்தில் உயிர்களை ஆட்கொண்டருளுகிறார் இறையனார்.

'எம்மை, அடிமையாகக் கொண்டு ஆட்கொண்டருளுக' என்ற பாவை மகளிரின் வேண்டுதலாகவும் இதைக் கொள்ளலாம்.

இதன் மூலம், ஆதி, அந்தம் இல்லாத இறைவன், ஆதியும் அந்தமும் ஆகி, உயிர்களைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து,  அருளும் ஐந்தொழில் திறன் கூறப்பட்டது.

இதையே மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில்,

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
நேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி என்று போற்றுகிறார்.

திருமூலர் திருமந்திரத்தில்,

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே என்று போற்றுகின்றார்.

இப்பிரபஞ்ச இயக்கத்துக்கே காரணமான ஐயனின் திருவருளைப் போற்றிப் புகழ்ந்து,

முதலும் முடிவும் அவனே!
முத்தமிழ் தந்ததும் அவனே
மும்மலம் தீர்ப்பதும் அவனே
முழுமுதல் கடவுள் அவனே

என்று தென்னாடுடைய சிவன் பதம் போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவனைத் தொழுது, அவனருளாலே இயன்ற இச்சிறு பணியை அடியார்கள் திருப்பாதங்களில் சமர்ப்பித்து வணங்குகிறேன்..

திருவெம்பாவை நிறைவுற்றது..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 4 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.... SONG # 19...திருவெம்பாவை.....பாடல் எண் : 19



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

பொருள்:

எங்கள் பெருமான்!

எங்கள் தலைவனே!

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
உனக்கொன் றுரைப்போம்கேள்

"உன் கையில் இருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலமாகும்" என்று பலகாலமாக வழங்கி வருகின்ற பழமொழியைப் புதுப்பிக்கிறோம் என்று அஞ்சிக் கொண்டே உன்னிடம் ஒன்று சொல்வோம், கேட்பாயாக.

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

எம் கொங்கைகள் உன் அன்பர்கள் அல்லாதாரின் தோள்களைச் சேராதிருக்கட்டும். எம் கரங்கள், உனக்கன்றி, மற்றொருவருக்கு, எந்தப் பணியும் செய்யாதிருக்கட்டும். இரவும் பகலும், எம் விழிகள், உன்னையன்றி,  வேறொரு பொருளைக் காணாதிருக்கட்டும்.. 

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

இந்த உலகில், இவ்விதமான எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றுவாயாகில், சூரியன் எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

///உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்///

ஒரு குழந்தையைப் பெற்ற தாயிடம் சென்று, 'உன் கையிலிருக்கும் உன் குழந்தை உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளது, அதை நீ கருத்துடன் காக்க வேண்டும்' என்று சொல்லத் தேவையேயில்லை.. அதை அவளே நன்கு அறிவாள்.  அதனால் அவ்வாறு சொல்வது பொருளற்றது..

இறைவனிடம், 'நாங்கள் உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளோம்' என்று சொல்வதும் அவ்வாறே.. இப்போது பாவை மகளிர் இறைவனிடம் வேண்டும் பொருளும் இத்தன்மையதே என்பதால், 'இவ்வாறு பொருளின்றி நாங்கள் கூறுவதற்காக கோபம் கொள்ளாதே' என்று வேண்டுகோள் வைத்தனர்.'

நாங்கள் சொல்வது, 'உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்னும் இந்தப் பொருளற்ற பழமொழி போன்றது' என்பது உட்பொருள்... இதற்காக, இறைவன் கோபம் கொள்வாரோ என்று தாங்கள் அஞ்சுவதையே  'அச்சத்தால்' என்று தெரிவித்தனர். 'கோபம் வேண்டாம்' என்று மறைமுகமாகக் கோரினர்.

இறைவன், பாவை மகளிரின் கோரிக்கைகள் அனைத்தையும் அறிவான். அவர்கள் தன் மீது வைத்த பக்தியினை அறிந்திருப்பதால், அந்த வழியினின்றும் அவர்களைத் தவற விடான். இருப்பினும், பாவை மகளிருக்கு, 'தம் ஊழ்வினையால் இறைநெறியைத் தவற விட்டு விடுவோமோ' என்ற அச்சம் அறியாமையால் தோன்றியது..(இதனால் கோரிக்கை வைப்பவர்கள் பக்குவமற்ற ஆன்மாக்கள் என்பதும், அவர்கள் பரிபக்குவ நிலையை நாடுகிறார்கள் என்பதும் அதன் விளைவே இந்த வேண்டுகோள் என்பதும் புலப்படும்)

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

திருமணம் ஆன பின்னர், கணவனின் மனப்போக்கையே மனைவி அனுசரிப்பது இல்லற தர்மம். இறைநெறியில் செல்லும் கணவன் வாய்த்து விட்டால் அதையன்றி மனைவி பெறக் கூடிய பேறு வேறு இல்லை..

இறைவனையே நாடி, அனுதினம் தொழுது பூசிக்கும் கணவனுக்குத் துணை நிற்பது ஒன்றே மனைவிக்கு வீடு பேறு வாய்க்கச் செய்து விடும்.. உள்ளும் புறமும் இறை நாமம் துலங்குவது சற்றும் சிரமமின்றி நடைபெறும். தன் முயற்சியால், 'இறைவனைத் தொழ வேண்டும்' என்றில்லாமல் தொண்டர் பணி செய்தலே இறை பணியுமாகி விடும்.

உலகியல் வழியிலும், ஆன்மீக வழியிலும் இவ்விதம் கணவனும் மனைவியும் ஒத்து நடப்பது போற்றத் தகுந்ததொரு நிலை. அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்பது பாவை மகளிரின் வேண்டுகோள்..

'இறை நெறியில் நிற்பவரே எமக்குக் கணவராக வர வேண்டும்..' என்பது முதல் வேண்டுகோளாயிற்று..

எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

'எங்கள் கரங்கள் உமக்கல்லாது பிறருக்குப் பணி செய்யாதிருக்கட்டும்' என்பதை சற்று சிந்திக்கலாம். 'இறைவனுக்கு மட்டுமே பணி' என்றால் இல்லறத்தின் பிற கடமைகள் என்னாவது?' என்ற கேள்வி இங்கு எழும்..இறைநெறியில் நிற்பவரே கணவர் என்னும் போது, அவர் செய்யும் எந்தச் செயலும் இறையனார்க்கான பூசனையாகவே திகழும்.. அவரது செயல்களுக்கு உதவுவதே இறைவனுக்கான பணி.

இதை வேறொரு விதமாகவும் சிந்திக்கலாம்..

இதற்கு முந்தைய பாடலில், இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறித்துப் பாடினர் மகளிர். ஆகவே, இல்லறமும், இறைவனின் இருப்பிடமே..

இல்லறக் கடமைகளை, இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி  நிறைவேற்றுவது, இறை பணியாகவே அமையும்..

இதன் மூலம், செய்யும் எந்தச் செயலையும், இறைவனுக்கான பணியாகக் கருதிச் செய்ய வேண்டும் என்பதும் புலப்படுகிறது. இப்படி இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் போது 'நான், எனது' என்ற ஆணவம் அழிந்து, உயிருக்கு நற்பேறு கிட்டுகிறது. 'பகவத் கீதை' சொல்லும் கர்மயோகம் இதுவல்லவா?

'கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க'== இவ்விதமாக, இறைபணியாகவே கருதி, ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, எங்கும், எதுவும் இறைவனாகவே தோற்றமளிக்கக் கூடிய நிலை வாய்க்கும்.. 

உதாரணமாக, அடியார்களுக்கு அன்னமிடும் போது, 'அடியார் இறைவனே' என்ற எண்ணம் மீதூற, அந்தப் பணியைச் செய்வதால், அடியார்கள் இடத்தில் ஆண்டவனே குடிகொண்டிருப்பது போன்ற பாவனை ஏற்படும்..'யத் பாவம் தத் பவதி' (நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய்) என்பதை ஒட்டி, இது உண்மையாகி, அகத்தில் உறைந்திருக்கும் ஆன்ம ஸ்வரூபம் புறத்திலும் தன் தன்மையைக் காட்டியருளும்.

இதுவே 'ஆன்ம போதக் காட்சி'... எல்லாப் பொருட்களிலும் இறைவனே நிறைந்திருப்பதை மனமார உணரும் போது, இரவும், பகலும், கண்கள் எதை நோக்கினாலும் அதில் இறைவனே தென்படுவான்.

அந்நிலை தமக்கு வாய்க்க வேண்டுமென்று வேண்டுகின்றனர் பாவை மகளிர்.

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்...

'இவ்விதமாக நாங்கள் வாழும் முறைமை எங்களுக்கு நீ அருள் செய்தாயென்றால், எங்கள் பிறவித் துயர் ஒழியும்.. உன்னோடு இணைந்திருக்கும் சாயுஜ்ய நிலை கிட்டும்.. அந்நிலை வந்த பின், ஞாயிறு உதிப்பதும் மறைதலும் இயல்பாகிய இவ்வுலகைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையேயில்லை.. அது பற்றி, பிறவிச் சுழலில் ஆட்படுவோர் அல்லவா கவலைப்பட வேண்டும்' என்கின்றனர் பாவை மகளிர்.. இரவும் பகலும் இறைவனையே கண்டு, இறைபணியையே செய்யும் நிலை வாய்க்கும் போது, இறுதியில் இறைவனோடு ஒன்றும் முக்திப் பேறு வாய்ப்பது மிக இயல்பு.. அந்த 'சிவசாயுஜ்ய' நிலை கிட்ட வேண்டும் என்பதே உட்பொருள்..

இப்பாடலில், 'சிவனாரன்றி வேறு யாருக்கும் தாம் ஆட்படாதிருக்க வேண்டும்' என்ற தம் உள்ளக் கிடக்கையையே இவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றனர் பாவை மகளிர்.

இக்கருத்தையே

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு  
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்

என்று அற்புதத் திருவந்தாதியில் காரைக்கால் அம்மையும்,

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

என்று திருத்தாண்டகத்தில் அப்பர் சுவாமிகளும்

புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
    புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
    ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
    எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
    கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன். 

என்று சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியாரும் உரைக்கின்றார்கள்..

அடியார் உள்ளம், திருவுள்ளம் அறியும் எனினும், அறியாமையால் இவ்விதம் கேட்கத் தலைப்பட்டனர். இவ்வாறு தாம் கேட்பது பொருளற்றது என்பதை உணர்ந்தே.. 'வெகுளி வேண்டா' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பாவை மகளிர், தம் கோரிக்கைகளை, 'வேண்டும்' என்று நேர்நிலை தோன்றக் கேட்காமல், 'சேரற்க, செய்யற்க' என்று எதிர்நிலை தோன்றுமாறு கேட்டது, தம் நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக.

அடியார்க்கிரங்கும் பெருமான் அகலாது நம் நெஞ்சத்துறைவானாகுக!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI...SONG # 18...திருவெம்பாவை....பாடல் எண் : 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்

அண்ணாமலையாரின் திருவடி மலர்களை, தேவர்கள் தொழுகின்றனர். இறைவனின் திருவடிகளின் பிரகாசத்தில், தேவர்கள் சிரத்தில் அணிந்திருக்கின்ற கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் ஒளியிழந்து விடுகின்றன.

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்==== கண்களுக்கு நிறைவான சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்து இருளை நீக்கும் போது, குளிர்ச்சியான ஒளி பொருந்திய நட்சத்திரங்கள், ஒளி மங்கி மறைகிறது..

அந்த வைகறைப் பொழுதில், 

'பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்'=== பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் ஆகி, ஒளி நிரம்பிய ஆகாயமாகி, இந்நிலவுலகு முழுதுமாகி, இவை அனைத்திலிருந்து நீங்கியும் விளங்குகிற.

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.====நம் அகக்கண்ணால் கண்டு மகிழத்தக்க அமுதமாய் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பாடி, பெண்ணே, பூக்களால் நிரம்பியுள்ள இந்தப் பொய்கையில் மகிழ்ந்து நீராடுவாயாக!!

இப்போது சற்று விளக்கமாகப் பார்க்கலாம்..

தேவர்கள் அண்ணாமலையாக, ஜோதி ஸ்வரூபமாக நின்ற இறைவனின் திருவடி மலர்களை விழுந்து வணங்கும் போது, அவர்கள் சிரத்தில் அணிந்துள்ள கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்களின் ஒளி மங்கியதாகச் சொல்வது, தேவர்கள், தம்மைப் பற்றிய பெருமிதம் நீங்கப் பெற்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.

தேவர்கள், நான், எனது என்னும் ஆணவம் நீங்கப் பெறாதவர்கள். இறைவனின்றும் தம்மை வேறுபட்டவனாய் நினைத்து, ஏதேனும் பலனை வேண்டியே இறைவனை வழிபடுகின்றவர்கள்.

வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனநின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மையெலாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான்
யானுமுன்னைப் பரவுவனே.(திருச்சதகம், மாணிக்கவாசகப் பெருமான்)

இறைவனின் திருவடி மலர்களின் பிரகாசம் என்பது இறைவனின் ஜோதி தத்துவத்தைக் குறிக்கிறது.சிவலிங்கத்தின் மேல்பாகம் சிவஜோதி என்றும், அடிபாகம் ஆத்ம ஜோதி என்றும் கூறப்படுகின்றது..

சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர
முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி சிவசிவ(திருவருட்பா)

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்== அறியாமையாகிய இருள் நீங்குவதற்காக, ஞான ஒளியாகிய சூரியன் வந்து உதிக்கிறது... அறியாமையால் ஏற்படும் ஆரவாரங்களாகிய தாரகைகள் ஒளி இழக்கின்றன. அஞ்ஞானம் நீங்கி ஞான ஒளி பரவுவதைக் குறிக்கின்றது இது.

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்===றைவனின் சர்வ வியாபகத் தன்மையைக் குறிக்கிறது இது.. 

'பிறங்கொளி சேர் விண்ணாகி' என்பதையே

'விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்== என்று சிவபுராணத்திலும் உரைக்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

'இத்தனையும் வேறாகிக்'===இவ்வுலகப் பொருள்கள் அனைத்தினுள்ளும் நிறைந்து, அதனினும் நீங்கி நிற்பது பரம்பொருளின் வியக்கத் தகுந்த‌ தன்மை..

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதல் பூதமே.(திருமூலர்) என்ற திருமந்திரப் பாடல் 
இதற்கு விளக்கம் தரும்.

'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் ' என்ற அபிராமி அந்தாதிப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. (அப்பர் சுவாமிகள்)

என்ற தேவாரப் பாடலும்  இதையே உரைக்கின்றது.

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். ===இங்கு 'கண்' என்பது அகக்கண்ணைக் குறிக்கும். நம் எல்லோருடைய உள்ளத்திலும் உறையும் இறைவனை அகக்கண்ணால் காண இயலும்.. அவ்வாறு காண்பதற்கும் இறைவனி கருணை வேண்டும். அந்தக் கருணையைப் பெற, இறைவனின் கழல்கள் ஒலிக்கின்ற திருவடியைப் பாடிப் பக்தி செய்தல் வேண்டும்..

அவ்வாறு அகக்கண்ணால் காணும் போது, இறைவனின் கருணையால், அமுதாகிய பிறவா பெருநிலை கிட்டும்...

கீழ்க்கண்ட பாடலைப் பொருத்திப் பார்க்கையில், இப்பாடலின் உள்ளுறை புலப்படும்..

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.



மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 2 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI... SONG # 17....திருவெம்பாவை..... பாடல் # 17.



பாடல்  # 17

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

கொங்குண் கருங்குழலி 

மணம் வீசும் அழகிய, கருங்கூந்தலை உடைய பெண்ணே!!

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்

செந்நிறமான விழிகளையுடைய திருமாலிடத்தும், பிரம்மனிடத்தும், தேவர்களிடத்தும் இல்லாத‌ ஓர்  பேரானந்தம் நம்மிடத்துப் பொருந்தும்படியாக, 

நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

நம்மைச் செம்மைப்படுத்தி, நம் இல்லங்கள் தோறும்  (தானே உவந்து) எழுந்தருளி,

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிமலர்களைத் தந்தருளும் வீரனை

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை

எப்போதும் சுரக்கும் அருளால் அழகு பெற்ற திருவிழிகளை உடைய அரசனை, அடியார்களுக்கு அமுதம் போன்றவனை,

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 

நம் தலைவனாகிய எம்பிரானைப் பாடி, நலம் திகழ, தாமரை மலர்களால் நிறைந்துள்ள பொய்கையில் குதித்து நீராடுவோமாக!

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்..

பேரானந்த நிலையில் இறைவனோடு ஒன்றுதலாகிய இன்பம், நம் போல்வருக்கு மட்டுமே கிட்டும்..தேவர்கள் நினைத்தாலும் அவர்களால் அடைய முடியாத இன்பம் இது... யோக நெறியைப் பற்றி ஆழமாக அறிந்தவர் மட்டுமே இதை உணர முடியும்!.. அதனாலேயே 'மானிடப் பிறவி அரிது' என்று போற்றப்படுகின்றது. 

பேரானந்த நிலைக்கு ஈடு இணை இல்லையாதலால் 'எங்கும் இலாததோர் இன்பம்' எனப்பட்டது. 'கருங்குழல்' என்று சிரம் குறிக்கப்பட்டது. சஹஸ்ரதள பத்மம், சஹஸ்ராரம், துரியம், தசஷடதள பத்மம், அதோமுக மஹாபத்மம், சஹஸ்ராரம்புஜம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சஹஸ்ராரம், நம் உச்சந்தலையில் அமைந்துள்ளது.

‘நம் தம்மைக் கோதாட்டி’ என்பதை, 'நம்மைப் பெருமைப்படுத்தி' எனவும் சில உரையாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கோது என்பது குற்றம் என்ற பொருளிலும் வருவதால், நம்மிடம் இருக்கும் குற்றங்களை நீக்கிச் செம்மைப்படுத்துவதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். மும்மலங்கள் நீக்கப்படுவது இங்கு உள்ளுறையாகக் குறிக்கப்படுகின்றது.

'இங்கு நம் இல்லங்கள் தோறும்' என்றது, ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே அருள் செய்யும் பான்மையையே!..

'எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை'== வெளிப்படையாகப் பார்க்கும் போது, இறைவன் அடியார்கள் மேல் அருள்கூர்ந்து அவர்களுக்கு அருள் செய்யும் பான்மை விளக்கப்பட்டது.. அடியார்கள் மேல் கருணை மீதூற அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்த எம்பிரானின் பெருங்கருணைப் பேராறு குறித்து, இங்கு சொல்லப்படுகின்றது.

யோக நெறியில் பார்க்கும் போது, இது,  இறைவன் நமக்குக் குருவாகும் பான்மையைச் சுட்டுகின்றது. சஹஸ்ராரத்திற்குக் கீழாக இருக்கும் 'குரு' என்ற சக்கரம்,வெண்ணிற பூர்ணசந்திர வடிவத்துடன், பன்னிரு வெண்தாமரை இதழ்களாலானது. மத்தியில் ஸ்ரீகுருவின் மஹா மந்திரமும் அவரது திவ்யத் திருவடிகளும் விளங்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு குரு உருவாகி இறைவன் அருள் செய்கிறான். இந்தச் சக்கரத்தை அடைந்த பிறகே சஹஸ்ராரத்தை அடைய முடியும்.'குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்' எனச்சொல்லப்படுவது இதனாலேயே.

இங்கு இறையருள் பெற்ற பின்னர், சஹஸ்ராரத்தை நோக்கிச் செல்ல இயலும்.. 

பங்கயப் பூம்புனல் என்று ஈற்றடியில் குறிப்பிடுவது,  ஆயிரம் இதழ் தாமரையாகிய சஹஸ்ராரத்திலிருந்து பெருகும் அம்ருத தாரையே...யோகிகளுக்கு இது மழையெனப் பொழிவதால் அது பூம்புனல் எனப்பட்டது..

பிறவாநிலையருளும் யோக மார்க்கம், மிக நுட்பமாக இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது. தக்கதொரு குருமுகமாக,  இதன் நுட்பங்களை அறிவது மிகவும் நன்மை பயக்கும். 

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

புதன், 1 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.. SONG. # 16.....திருவெம்பாவை....பாடல் எண் # 16


பாடல் எண்  #  16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

பொருள்:

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை 

மேகமே!! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேலே எழும்பி, எம்மை உடையவளாகிய உமையவளின் திருமேனி போல் கருநீல வண்ணம் கொண்டாய்.

ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் 

ம்மை அடிமை கொண்டவளின் சின்னஞ் சிறிய சிற்றிடை போல் மின்னி விளங்கி, எங்கள் பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியிலிருக்கும் சிலம்பின் ஒலி போல் இடித்து,

திருப்புருவம்
என்னச் சிலைகுலவி 

அம்பிகையின் திருப்புருவம் போல் வானவில் இட்டு,

நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

ந‌ம்மை அடிமை கொண்ட அம்பிகையைப் பிரியாத எம் தலைவனாகிய சிவபிரானின் அடியார்களுக்கும், 

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

நமக்கும், அவள் உள்ளம் உவந்து, முந்திச் சுரக்கின்ற இன்னருள் போல, ( மழையாகப்)பொழிவாயாக!..

இந்தப் பாடலில், இறைவன் அம்பிகையின் மூலமாகவே உயிர்களுக்கு அருளுவான் என்பது குறிக்கப்பட்டது.. ஐயனின் அருள் அம்பிகையின் மூலமாகவே முதலில் கிடைக்கப்பெறும். அதாவது அம்பிகையே முதலில் அருளுபவள். அதன் பின்னரே எம்பிரான் அருள் கிடைக்கும்.

இந்தப் பாடல் 'எதிர்நிலை உவமம் (விபரீதோபமாலங்காரம்) கையாளப்பட்டிருக்கிறது..பாடு பொருளை, உவமிக்கப்படும் பொருளாகக் கூறுவது மரபு. அங்ஙனம் இன்றி, இங்கு மாற்றிக் கூறப்படுகின்றது. உதாரணமாக, அம்பிகையின் திருமேனி கார்மேகம் போல் திகழ்கிறது என்றுரைக்காது, மேகம், அம்பிகையின் திருமேனி போல் திகழ்கிறது என்கிறார்.

 பாவை நோன்பு, பெரும்பாலும் மழை வேண்டியே கடைபிடிக்கப்படுவதால், பாவையர் மழை வேண்டிப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. 

உள்ளுறையாக, உமையம்மையின் அருள் மழை பொழிய வேண்டுவதாகவும் இது அமைந்திருக்கிறது.

இப்பாடலில் வரும் 'உடையாள்' என்ற பதத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம்.

முதல் முறை வரும் உடையாள்== அனைத்துலகத்தையும் உடையவள் என்ற பொருளில் வரும்.

எம்மை ஆளுடையாள்== இது, அம்மை, முழுமையாக ஆட்கொண்டருளி, இவ்வுலக விடயங்களிலிருந்து(மாயையிலிருந்து) நீக்கி, தன் வழியில் சேர்த்துக் கொள்பவள் என்பதைக் குறிக்கும்.

நந்தம்மை ஆளுடையாள்== நம்தம்மை ஆளுடையாள்..இப்போது நம் அனைவரையும் உடையவள் என்பது, எல்லாப் பொருள்களிடத்தும், ஆன்ம ஸ்வரூபமான இறைவனையே  காணும் ஆன்ம போதக் காட்சியைப் பெற்று விட்டமையைக் குறிக்கிறது. அம்பிகையின் அருளால், மாயத் திரை விலகி, சிவனருள் சித்திக்கப்பெற்றது.  

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
    வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
    பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
    சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
    காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.(மாணிக்கவாசகப் பெருமான்).

இதில் சூக்குமமாக, சாதகர்களுக்கு அம்பிகை அருள் செய்யும் பான்மை விளக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்..'நந்தம்மை' என்ற சொல்லை ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும் என்றும் குறிக்கின்றனர்.

பெரிய ஐந்தெழுத்தாகிய(ஸ்தூல பஞ்சாட்சரம்) 'நமசிவாய' மந்திரத்தின் மகிமையைத் துதிப்போம்!!..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

அன்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வரும் ஆண்டு நமக்கு எல்லா விதத்திலும் சிறந்த ஆண்டாக அமைய, இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

ருத்ராம்சமான ஸ்ரீஆஞ்சநேயரின் திருஅவதார தினம், 'ஸ்ரீஹனுமத் ஜெயந்தி' இன்று!!.. ஸ்ரீஆஞ்சநேயரின் திருவருட்பிரசாதம் நம் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 15......திருவெம்பாவை... பாடல் # 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடல், அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியைப் பார்த்து, நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாக அமைந்திருக்கிறது..

வாருருவப் பூண்முலையீர்

கச்சணிந்த  அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே!!!.. 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

ஒவ்வொரு சமயம் எம்பெருமான் திருப்பெயரை உரைப்பதில் ஆரம்பித்தவள், இப்போது எப்போதும், சிவபிரானின் புகழை ஓயாது உரைக்கும் வாயின‌ள் ஆனாள்...மனம் உருகி, ஆனந்தம் மேலிட,விழிகளிலிருந்து நீங்காது பொழியும் நீர்த்தாரைகளுடன், பூமியின் மேல் விழுந்து, எழாது சிவபிரானையே வணங்குவாள். வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள்.

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
 வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பெரிய தலைவனாகிய சிவபிரானின் பொருட்டு, ஒருவர் பித்தாகும் விதம் இவ்வாறோ?!!!..இவ்விதம் ஒருவரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தி ஆட்கொண்டருளும் சிவபிரானது திருவடிகளைப் புகழ்ந்து பாடி,  அழகிய தோற்றமுடைய  மலர்களால் நிரம்பப் பெற்ற, பொய்கையில் குதித்து நீராடுவோமாக!!!!!!..

பெண்கள் ஒருவரை ஒருவர் முதலில் அழைத்துக் கொண்டு, அதன் பின், ஆன்மீக நிலையில் உயர்ந்த   பெண்ணைச் சுட்டிக்  காட்டிப்  பாடுவதால், 'வாருருவப் பூண்முலையீர்!!' முதலில் வந்தது.

எப்போதும் இறைவனை நினைந்து உருகும் அடியவர்களுக்கு, அவர்களது பக்தியின் பலனாக, மஹான்களின் தரிசனமும் சத்சங்கமும் கிடைக்கிறது. 

அவ்விதம் வாராது வந்த மாமணியான ஒரு பெண் துறவியை, சமாதி நிலையில் நீராடும் துறையில் கண்டு, அந்நிலை தோன்றும் வழி குறித்தும், அந்தத் துறவியைக் குறித்தும் புகழ்ந்து... நமக்கும் அந்நிலை வருதல் வேண்டும் என்ற வேண்டுதலோடு நீராடும் பான்மை கூறப்பட்டது. உள்ளுறையாக, ஆன்மீக உயர்நிலையை அடையும் விதமும் கூறப்பட்டது..

வாருருவப் பூண்முலையீர்...என்பதால் மார்பில் கட்டை விரல் அளவில் ஜோதிஸ்வரூபமாக அமையும் இறைவனை நோக்கி, தாமும் பரிபக்குவ நிலையில் உயர்நிலையை அடைய வேண்டும் என்று வேண்டி நின்றமையாகவும் இதைக் கொள்ளலாம்..

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே======= முதலில் இறைவனின் திருநாமத்தை எப்போதாவது சொல்ல ஆரம்பித்து, பின்பு, இறைவனின் மீது அன்பு சிறிது சிறிதாக அதிகரிக்கிறது..

நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் ==== இறைவனின் மீது அன்பு முதிர்ந்து பேரன்பான நிலையில், ஓயாது வாய் 'நம்பெருமான் சீர்' ஒன்றையே முழங்குகிறது.. எப்போதும் இறைநாமத்தின் மணம் வாயில் நிறைந்திருக்கிறது..

இது 'வாக்கு' முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

சித்தங் களிகூர=== நாமம் கூறக் கூற, மனம் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்குகிறது.. எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கி, தியான நிலை கை கூடுகிறது.. சித்தாகாசத்தில், இறைவனோடு மனம் முழுமையும் ஒன்றுகிறது..ஆனந்த நிலையின் அனுபவம் கிட்டுகின்றது.

இது மனம் முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

'பாரொருகால் வந்தனையாள்===' இறைவனையே உடலால் எந்நேரமும் தொழுது வணங்கும் நிலை..

இது, 'காயம்' அதாவது உடலால் இறைவனோடு ஒன்றும் நிலை..

இவ்வாறு வாக்கு,மனம், காயம்  ஆகிய அனைத்தாலும் இறைவனோடு ஒன்றும் நிலை வரும் போது, குருவருளால் 'சமாதி நிலை' கிட்டும்..சவிகல்ப,நிர்விகல்ப சமாதி நிலை வரும் போது, தானே அழுவது, சிரிப்பது முதலான நிலைகள் அமைவது இயல்பு. இதன் காரணமாக, மற்றவர்கள் அவர்களை 'பித்து' என்று கூறுவதும் இயல்பே!!..

நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. (புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் ==மாணிக்கவாசகப் பெருமான்)

'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!' என்று அபிராமி பட்டர் உரைப்பதும் இதுவே..

இது சிலருக்கு ஒரு பிறவியிலும் சிலருக்கு பல பிறவிகளில் செய்யும் தொடர்ந்த முயற்சிகளின் மூலமும் கைகூடும்....

ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் உபநிஷதங்கள் வகைப்படுத்தி இருக்கின்றன... சித்தர், ஜீவன் முக்தர், பராமுக்தர் என்ற நிலைகள் கூறப்படுகின்றன. பராமுக்தர், சில தெய்வீகக் காரணங்களுக்காக, மிக அரிதாக, பூமியில் தேகமெடுக்கின்றார். எப்போதாவது நடக்கும் நிகழ்வு இது..

'பார் ஒரு கால் வந்தனை' என்பதால் அவ்விதம் எப்போதோ ஒரு முறை வரும் அவதார உருவினள் என்பதாகவும் கொள்ளலாம்.. எப்போதும் சமாதி நிலையின் பேரானந்த அனுபவத்தில் இருப்பதால், எப்போதாவது ஒரு முறை இவ்வுலக நினைவுக்கு வருகின்றாள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

'ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்'=== அழகிய தோற்றமுடைய‌ மலர்கள் நிறைந்துள்ள உள்ளமாகிய பொய்கையில் ஆழ்ந்து நீராடி(தியானித்து), வித்தகர் தாள் போற்றுமாறு கூறுகிறார். இங்கு மலர்கள் ,' மணம் வீசும் ' என்றல்லாது, 'அழகிய தோற்றமுடைய' என்று வருகிறது. யோக நெறியில் ஒவ்வொரு படியிலும் பெம்மானின் தரிசனம் வெவ்வேறு முறையில் கிட்டும்.. அழகிய தோற்றமுடைய மலர்கள், சிவனாரின் தரிசனங்களை மறை பொருளாகக் குறித்தன.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.