நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 15......திருவெம்பாவை... பாடல் # 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடல், அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியைப் பார்த்து, நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாக அமைந்திருக்கிறது..

வாருருவப் பூண்முலையீர்

கச்சணிந்த  அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே!!!.. 

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

ஒவ்வொரு சமயம் எம்பெருமான் திருப்பெயரை உரைப்பதில் ஆரம்பித்தவள், இப்போது எப்போதும், சிவபிரானின் புகழை ஓயாது உரைக்கும் வாயின‌ள் ஆனாள்...மனம் உருகி, ஆனந்தம் மேலிட,விழிகளிலிருந்து நீங்காது பொழியும் நீர்த்தாரைகளுடன், பூமியின் மேல் விழுந்து, எழாது சிவபிரானையே வணங்குவாள். வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள்.

பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
 வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பெரிய தலைவனாகிய சிவபிரானின் பொருட்டு, ஒருவர் பித்தாகும் விதம் இவ்வாறோ?!!!..இவ்விதம் ஒருவரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தி ஆட்கொண்டருளும் சிவபிரானது திருவடிகளைப் புகழ்ந்து பாடி,  அழகிய தோற்றமுடைய  மலர்களால் நிரம்பப் பெற்ற, பொய்கையில் குதித்து நீராடுவோமாக!!!!!!..

பெண்கள் ஒருவரை ஒருவர் முதலில் அழைத்துக் கொண்டு, அதன் பின், ஆன்மீக நிலையில் உயர்ந்த   பெண்ணைச் சுட்டிக்  காட்டிப்  பாடுவதால், 'வாருருவப் பூண்முலையீர்!!' முதலில் வந்தது.

எப்போதும் இறைவனை நினைந்து உருகும் அடியவர்களுக்கு, அவர்களது பக்தியின் பலனாக, மஹான்களின் தரிசனமும் சத்சங்கமும் கிடைக்கிறது. 

அவ்விதம் வாராது வந்த மாமணியான ஒரு பெண் துறவியை, சமாதி நிலையில் நீராடும் துறையில் கண்டு, அந்நிலை தோன்றும் வழி குறித்தும், அந்தத் துறவியைக் குறித்தும் புகழ்ந்து... நமக்கும் அந்நிலை வருதல் வேண்டும் என்ற வேண்டுதலோடு நீராடும் பான்மை கூறப்பட்டது. உள்ளுறையாக, ஆன்மீக உயர்நிலையை அடையும் விதமும் கூறப்பட்டது..

வாருருவப் பூண்முலையீர்...என்பதால் மார்பில் கட்டை விரல் அளவில் ஜோதிஸ்வரூபமாக அமையும் இறைவனை நோக்கி, தாமும் பரிபக்குவ நிலையில் உயர்நிலையை அடைய வேண்டும் என்று வேண்டி நின்றமையாகவும் இதைக் கொள்ளலாம்..

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே======= முதலில் இறைவனின் திருநாமத்தை எப்போதாவது சொல்ல ஆரம்பித்து, பின்பு, இறைவனின் மீது அன்பு சிறிது சிறிதாக அதிகரிக்கிறது..

நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் ==== இறைவனின் மீது அன்பு முதிர்ந்து பேரன்பான நிலையில், ஓயாது வாய் 'நம்பெருமான் சீர்' ஒன்றையே முழங்குகிறது.. எப்போதும் இறைநாமத்தின் மணம் வாயில் நிறைந்திருக்கிறது..

இது 'வாக்கு' முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

சித்தங் களிகூர=== நாமம் கூறக் கூற, மனம் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்குகிறது.. எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கி, தியான நிலை கை கூடுகிறது.. சித்தாகாசத்தில், இறைவனோடு மனம் முழுமையும் ஒன்றுகிறது..ஆனந்த நிலையின் அனுபவம் கிட்டுகின்றது.

இது மனம் முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்..

'பாரொருகால் வந்தனையாள்===' இறைவனையே உடலால் எந்நேரமும் தொழுது வணங்கும் நிலை..

இது, 'காயம்' அதாவது உடலால் இறைவனோடு ஒன்றும் நிலை..

இவ்வாறு வாக்கு,மனம், காயம்  ஆகிய அனைத்தாலும் இறைவனோடு ஒன்றும் நிலை வரும் போது, குருவருளால் 'சமாதி நிலை' கிட்டும்..சவிகல்ப,நிர்விகல்ப சமாதி நிலை வரும் போது, தானே அழுவது, சிரிப்பது முதலான நிலைகள் அமைவது இயல்பு. இதன் காரணமாக, மற்றவர்கள் அவர்களை 'பித்து' என்று கூறுவதும் இயல்பே!!..

நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் 
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் 
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. (புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் ==மாணிக்கவாசகப் பெருமான்)

'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே!' என்று அபிராமி பட்டர் உரைப்பதும் இதுவே..

இது சிலருக்கு ஒரு பிறவியிலும் சிலருக்கு பல பிறவிகளில் செய்யும் தொடர்ந்த முயற்சிகளின் மூலமும் கைகூடும்....

ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் உபநிஷதங்கள் வகைப்படுத்தி இருக்கின்றன... சித்தர், ஜீவன் முக்தர், பராமுக்தர் என்ற நிலைகள் கூறப்படுகின்றன. பராமுக்தர், சில தெய்வீகக் காரணங்களுக்காக, மிக அரிதாக, பூமியில் தேகமெடுக்கின்றார். எப்போதாவது நடக்கும் நிகழ்வு இது..

'பார் ஒரு கால் வந்தனை' என்பதால் அவ்விதம் எப்போதோ ஒரு முறை வரும் அவதார உருவினள் என்பதாகவும் கொள்ளலாம்.. எப்போதும் சமாதி நிலையின் பேரானந்த அனுபவத்தில் இருப்பதால், எப்போதாவது ஒரு முறை இவ்வுலக நினைவுக்கு வருகின்றாள் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

'ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்'=== அழகிய தோற்றமுடைய‌ மலர்கள் நிறைந்துள்ள உள்ளமாகிய பொய்கையில் ஆழ்ந்து நீராடி(தியானித்து), வித்தகர் தாள் போற்றுமாறு கூறுகிறார். இங்கு மலர்கள் ,' மணம் வீசும் ' என்றல்லாது, 'அழகிய தோற்றமுடைய' என்று வருகிறது. யோக நெறியில் ஒவ்வொரு படியிலும் பெம்மானின் தரிசனம் வெவ்வேறு முறையில் கிட்டும்.. அழகிய தோற்றமுடைய மலர்கள், சிவனாரின் தரிசனங்களை மறை பொருளாகக் குறித்தன.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

திங்கள், 30 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.... SONG # 14........திருவெம்பாவை.. பாடல் # 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்======காதுகளில் பொருந்திய 'குழை' என்ற ஆபரணம் ஆட, 

பைம்பூண் கலனாடக்=====பசும்பொன்னால் செய்யப்பட்ட  மற்ற ஆபரணங்கள் அசையவும்,  

கோதை குழலாட=====கூந்தலில் சூடிய நீண்ட மாலைகள் ஆடவும், 

வண்டின் குழாமாடச்=======மாலைகளை மொய்க்கும் வண்டுகளின் கூட்டம் அசையவும், 

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்

குளிர்ச்சியான நீர் பொருந்திய பொய்கையில் நீராடி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேத நாயகனான சிவபிரானைப் போற்றி, அந்த வேதப் பொருளான சிவபிரான்,  நமக்கு ஆகும் வண்ணம் பாடி (அதாவது, நாமே சிவனாகும் சிவசாயுஜ்யம்  கிட்ட வேண்டும் என்று பாடி), 

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி======சோதி உருவான இறைவனின் தன்மையைப் பாடி, 
இறைவன் திருமேனியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி,

ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்========இறைவன் அனைத்திற்கும் முதலாகிய திறனை வியந்து பாடி, இறைவன், அனைத்தையும் ஒடுக்கும் முறைமை குறித்துப் பாடி, 

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்
நம்மை நம் பக்குவ நிலைகட்கு ஏற்ப அருள் பாலித்து, ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தியருளும்,  வளையலை அணிந்த திருக்கரங்களை உடைய‌ அம்பிகையின் திருவடிகளின் தன்மையைப் பாடி ஆடுவாயாக!!

இந்தப் பாடல், நீராடும் மகளிர் இறைவனைத் துதித்துப் பாடியவாறே நீராடுதலைக் கூறுகிறது. அதோடு, இறைவனாரின் திருக்கூத்தின் மகிமையையும் புகழ்ந்துரைக்கிறது..

இதில் காணப்படும் முதல் சில வரிகள், இரு பொருள் பட அமைந்திருக்கின்றன. அவற்றை மட்டும் தருகிறேன்..

சிவபிரான், காதில் அணிந்திருக்கும்  குழையாட(குழை, தொடி என்பன இருபாலருக்கும் அணிகளாயின). 

அணிந்திருக்கும் அழகிய அணிகலனாகிய நாகங்கள் ஆட,

கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.(அப்பர் பெருமான்)

(இடப்பாகத்து உகந்த‌ உமையம்மை அணிந்திருக்கும் பசும்பொன்னாலாகிய அணிகலன்கள் அசைந்து ஆட என்றும் பொருள் கொள்ளலாம்.)

'கோதை குழலாட'===கோதை என்றால் மாலைகள் என்றும் ஒரு பொருள் உண்டு. விரிசடையில் அன்பர்கள் சூடிய மலர்மாலைகள் அசைந்தாட என்றும், கோதை = பெண் என்பதால் எம்பிராட்டி என்னும் பொருள் கொண்டு அம்பிகையின் குழலாட என்றும் பொருள் கொள்ளலாம்.

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ(று) அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்(கு) அல்லாத வேதியனை
ஐயா(று) அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். (மாணிக்கவாசகப் பெருமான்)

இதில் 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை' என்று உமையம்மையைப் போற்றும் வரியை நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம்..

முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.

உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.

மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

'மந்ததரம் என்பது, அரக்கு வெயிலில் உருகுவது போல.  மெழுகு வெய்யிலில் உருகுவது போல மந்தம்.   தீவிரம் என்பது நெய் சூட்டினால் இளகுவது போன்றது.  நெய் நெருப்பிலிட்டதும் உருகி ஒன்றுவது போன்றது தீவிரதரம்' என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள்.

இங்கு 'பேதித்து' என்பது சத்திநிபாதமாகிய இறையருள்வீழ்ச்சியையே சுட்டுகிறது..நான்கு வகைகளாக உயிரின் தன்மைக்கேற்ப நிகழும் சத்திநிபாதம், இறைவியின் பெருங்கருணையையே சார்ந்திருக்கிறது.

இதில், அரக்கு, மெழுகு,மற்றும் நெய் ஆகியவை மனிதரின் பக்குவ நிலைகளுக்கு ஒப்பிடப்படுகின்றது. இவ்வாறாக இருக்கும் வேறுபட்ட பக்குவ நிலைகளுக்கு ஏற்ப பலவித இன்பதுன்ப அனுபவங்களைத் தந்து அவர்களை உயர்த்துவது  இறைவியே!!.

ஒவ்வொரு மனிதரின் பரிபக்குவ நிலையும் வெவ்வேறு வகைப்படும். அவர்களுக்கு அருள்புரிந்து, அந்தந்த வகைகளுக்கேற்ப பல்வேறு அனுபவங்களின் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்தி, ஆன்மீக உயர்நிலையை அருளுவது அன்னை சக்தியின் செயலே!!.. மாயையின் மந்திரக்கோலை அவளன்றி வேறு யாராலும் விலக்க இயலாது.. மூடியிருக்கும் மாயையாகிய திரையை அவளே விலக்க வல்லவள். அதன் பின்னே பெருமானின் நல்லருள் வீழ்ச்சி உயிருக்குக் கிடைக்கும்..

இவ்விதம் அன்னை, உயிர்களுக்குத் தக்கவாறு அருள்புரிந்து உயர்த்துவதையே ' நம்மை வளர்த்தெடுத்து' என்றார்.

அம்மையப்பனைப் போற்றி அருள்பெறுவோம்!!..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 13.....திருவெம்பாவை.... பாடல் # 13


பாடல் # 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாடலில், நீராடும் பொய்கையையே உமையாகவும் சிவனாகவும் உருவகப்படுத்திக் கூறுகிறார் அடிகள்.

'பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்===' கரிய குவளை மலர்களாலும், செந்தாமரை மலர்களாலும் பொய்கை நிரம்பி இருக்கிறது. இது உமையம்மையின் சியாமள நிறத்தையும், சிவ னின் சிவந்த நிறத்தையும் குறிக்கிறது..குவளை மலர்கள் அம்மையின்  திருவிழிகளையும், தாமரை மலர் சிவனின் திருவிழிகளையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'======= பொய்கையில்  ஆங்காங்கு நாரை முதலான நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன...  நீராடுவோர், நீராடும் போது ஏற்படும் ஒலி, அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் ஏற்படுத்தும் ஒலி, ஐந்தெழுத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி இவ்வாறாக, மேலும் மேலும் எழும்பும் ஒலியலைகளாலும் நிரம்பி இருக்கின்றது பொய்கை .

இதையே  'அங்கு அங்கு உருகும் இனத்தால்'  என்று விரித்து, பொய்கையில் , ஆங்காங்கே பக்தி  மேலிட உருகி நிற்கும் தொண்டரினத்தால் என்றும் பொருள் கொள்ளலாம்..

'குருகு' என்பது உமையம்மையின் 'வளையலை'யும் குறிக்கும். 'பின்னும் அரவத்தால்' என்பதை, பெருமானின் திருமேனியெங்கும் ஆபரணமாக ஊர்ந்து விளையாடும் நாகங்களையும் குறிக்கும்.

'தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்'===மலம் என்பது இவ்விடத்தில்  'அழுக்கு' எனப் பொருள்படும்.. தங்கள் அழுக்குகளை நீக்கிக் கொள்ள குளத்தில் மூழ்குதற்காக வந்து சேர்கிறார்கள் மானிடர்கள்.

மும்மலங்களாகிய, 'ஆணவம், கன்மம், மாயை' ஆகியவற்றை நீக்குதற் பொருட்டு, அம்மையப்பனின் இணையடி சேர்பவர்களையும் இது குறிக்கிறது.. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'திரிபுர சம்ஹார'த்தின் தத்துவ விளக்கம் இதுவே!!.

'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த' இவ்வாறான ஒற்றுமைகளினால், குளமானது, அம்மையைப்பனை ஒத்திருக்கிறது.

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

ஊற்றிலிருந்து பொங்கும் நீரானது, மேலும் மேலும் அலையலையாய்  எழும்பி வரும் மடுவில், நாம் மூழ்கி, நம் சங்கு வளையல்களும், சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் படியாக,

'கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.'=== இறைவனது நினைவால் நம் மார்புகள் பூரித்து விம்ம, பொங்கி வரும் நீரையும் தாமரை மலர்களையும் உடைய இந்தப் பொய்கையில் நாம் மூழ்கி நீராடுவோமாக.

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்!!.. பிரபஞ்ச இயக்கம் இறைவனாரின் திருக்கூத்து.. இறைவனும் இறைவியுமாக, இந்தக் கூத்தில் பங்காற்றுகிறார்கள்..
 
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.(திருமந்திரம்)

ஆகவே, அம்மையையும் அப்பனையும் சேர்ந்தே துதிக்கின்றனர் பாவை மகளிர்.

இப்பாடலும் யோகநெறிகளுள் சிலவற்றைத் தன்னகத்தே மறைபொருளாகக் கொண்டிருக்கிறது..

'பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்' என்றது ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுதலைக் குறித்தது. இவ்வாறு ஈடுபட்டு, சிவனருளால் மும்மலங்கள் நீங்கப் பெறுதல் வேண்டும்.

'வளை' என்பது முன் சொன்ன பாடலில் சொன்னது போல் உடல் உணர்வையும், 'அரவம்' குண்டலினி சக்தியையும் குறிக்கிறது..குண்டலினி,ஒவ்வொரு சக்கரத்தை அடையும் போதும் ஒவ்வொரு வித ஒலி கேட்கும்...

'கொங்கைகள்' என்று குறித்தது, மார்பில்  இருக்கும் 'அநாஹத'. சக்கரத்தை.

அநாஹத மையம், அன்பு, இரக்கம், படைப்பாற்றல்,சேவை மனப்பான்மை போன்ற நேர்மறை எண்ணங்களின் ஆதாரச்சக்கரமாகும். இந்தச் சக்கரம் தூண்டப்படும் போது, நம் எண்ணங்கள் நம் கைக்குள் வந்து, அன்பு, இரக்கம் போன்ற நேர்மறை உணர்வுகள் வலுப்பெறும். புலனடக்கம் சித்தியாகும். ஆன்மீக வளர்ச்சிக்கு இந்தச் சக்கரமே அடிப்படை.  அந்நிலையை எட்டும் பொழுது, பார்க்குமொரு இடமெங்கும் பரமனையே காணுதல் இயல்பு..அத்தகைய பக்தியின் மிகுதியால், நீராடும் பொய்கையையும் சிவசக்தி ஸ்வரூபமாகவே காண்கின்றனர் மகளிர்.

இந்தச் சக்கரத்தில் எந்நேரமும் கடல‌லைகளின் பெருமுழக்கம் போன்ற ஒலி கேட்பதாகவும் " ஓம் " எனும் ஓங்காரமே அவ்வாறு ஒலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 'பின்னும் அரவம்' என்றும், 'பொங்குதல்' என்றும் அலையலையாகப் பொங்கும் இந்த ஒலியே இங்கு குறிக்கப்படுகின்றது.

அநாஹதத்திற்கு குண்டலினி வந்து விட்டால், அதற்கு மேல் கீழிறக்கமில்லை.  அநாஹதத்தை, முறையான பயிற்சியின் மூலம் அடைந்துவிட்டால், சாதகனின் செயல்கள், விதி கர்மம் இவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையை அடையும்.

அநாஹதச் சக்கரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, இங்கு சொடுக்கவும்!!

பங்கயமாகிய சஹஸ்ராரத் தாமரையில் குண்டலினி சேரும் போது, சிவசக்தி ஐக்கிய நிலையைத் தரிசிக்கும் பேறு கிட்டும்.

சஹஸ்ராரத் தாமரையிலிருந்து பொழியும் அம்ருத தாரையே 'பங்கயப் பூம்புனல்'.

அநாஹத நிலையை அடைந்த சாதகர்கள், மேன்மேலும் முயற்சித்து, சஹஸ்ராரத் தாமரையை அடையவேண்டுமென்பதையே 'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர்' என்றருளினார்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

சனி, 28 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI...SONG # 12 ......திருவெம்பாவை பாடல் # 12


பாடல் # 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொருள்:

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்

நம்மைப் பந்தித்த பிறவியாகிய துயர் நீங்குவதற்காக, நாம் சேர்ந்து,மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் இருப்பவன். இங்கு பிறவியாகிய துயர், வெப்பமாகக் கருதப்படுகின்றது.. அது நீங்க.. இறைவனாகிய தீர்த்தத்தில் மூழ்கி எழுதல் வேண்டும் என்பது பொருள்.

நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்

சிற்றம்பலமாகிய தில்லையில், ஒரு திருக்கரத்தில் அனலேந்தி ஆடுகின்ற கூத்த பிரான். 

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய 

விண்ணுலகு, மண்ணுலகு உள்ளிட்ட எல்லா உலகங்களையும், காத்தும், படைத்தும், நீக்கியும் விளையாடுபவனாகிய இறைவனது புகழைப் பேசி, வளையல்கள் ஒலிக்க, அணிந்திருக்கும் நீண்ட அணிமணிகள் அசைந்து ஓசை எழுப்ப,  

அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பொய்கையில் நிறைந்துள்ள, வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்கள், நம் அழகிய கருங்கூந்தல் மேல் விளங்க, நீரைக் குடைந்து, நம்மை உடையவனாகிய இறைவனது பொற்பாதத்தைத் தொழுது ஏத்தி, பெரிய மலைச்சுனை நீரில் மூழ்கி நீராடுவாயாக. (குளத்துள் மூழ்கும் போது, பொய்கையின் மலர்கள் கூந்தலைச் சேருதல் இயல்பு. வண்டுகள் ஆர்க்கும் அந்த மலர்கள், கூந்தலைச் சேர்ந்ததை, 'அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் ' என்று வருணித்தார்.)

'ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்'=== 'ஆர்த்த' என்ற சொல்,இங்கு இரு இடங்களில், இரு வேறு பொருளில் கையாளப்படுகின்றது. 'பந்தித்த, பிணித்த' என்ற பொருளில் முதலில் கையாளப்படுகின்றது..'நம்மைப் பிணித்த பிறவித் துயர் கெட நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால், நாம் ஈசனாகிய தீர்த்தத்தில் மகிழ்ந்து ஆடுதல் வேண்டும்' என்றார். 

இங்கு ஆளுடைய பிள்ளையின் 'பச்சைப் பதிகம்' நினைவு கொள்ளத் தக்கது.

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

'தீர்த்தன்' என்ற சொல்லால் இறைவனைக் குறித்தது, இறைவனின் புனிதத்தன்மையை விளக்குதற்காம்... இறைவனின் அபிடேக நீரைத் தீர்த்தம் என்போம். மிகச் சிறந்த ரிஷிகள்,முனிவர்கள், பக்தர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளும் அவர் தம் சக்தியை உள்வாங்கி 'தீர்த்தம்' எனப்படுகின்றது.. ஆகவே, புனிதனான இறைவனைச் சேர்ந்து, மகிழுவதால் நாமும் புனிதமடைந்து, நம் பிறவிப் பிணி அகலும் என்பது உணர்த்தப்படுகின்றது.

'நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்'==ஞானாகாசமாகிய சிற்றம்பலத்தினுள் இறைவன் கூத்தாடுகின்றான்.. பிரபஞ்ச இயக்கமே இறைவனது திருக்கூத்து, ..நற்றில்லைச் சிற்றம்பலத்தினுள் என்று குறிப்பாகச் சொன்னமைக்கு கீழ்க்கண்ட பாடலை விளக்கமாகக் கொள்ளலாம்.

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.(திருமந்திரம்),

பொன்னம்பலமாகிய தில்லையே அனைத்து அண்டங்களாகவும், ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே ஆகாயமாகவும் கொள்ளப்படுகின்றது.. ஆலயத்தின் முதல் ஆவரணத்தினுள் உள்ள திரு அம்பலமே,   ஐந்தொழில் செய்யும் சக்தியாக அமைய‌, இறைவன் திருநடனம் செய்கின்றான்.பொன்னம்பலம் என்பதை 'சிதாகாசம்' எனவும் கொள்ளலாம்.

'தில்லை' என்பது 'இருதய' ஸ்தானமாகும்.

'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.(திருமந்திரம்)

அண்டத்திலிருப்பதே பிண்டத்திலும் என்பதற்கிணங்க.. சிவனார், அண்டம், பிண்டம் இரண்டிலும் இருக்கும் பொற்பதிகளில் நடமிடுவதை..'தீயாடுங் கூத்தன்' என்று விளக்கினார்.

'தீ' என்று குறித்தது.. இறைவனார் சங்கார(சம்ஹார) மூர்த்தியாகி,  அழித்தல் தொழில் செய்தலைக் குறித்தது.

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

ஐந்தொழிலும் சிவனார்க்கு விளையாடலே..வான், குவலயம் என்பதோடு 'எல்லோமும்' எனத் தன்மையிடத்தால் குறித்தது, 'நம் எல்லோரையும்' என்பதாக. மனிதப் பிறவி தேவர்களினும் மேம்பட்டது. தேவர்களும் மானிடப் பிறவியை விரும்புகிறார்கள்.. இறைவனால் ஆட்கொள்ளப்படும் பேறும் மனிதர்களுக்கே கிடைக்கிறது.. ஆகவே, மனித இனைத்தை உயர்வுபடுத்துவதற்காக அவ்வாறு கூறினார்.

காத்தும், படைத்தும், கரந்தும் என்று, காத்தல் தொழிலை முன்னிறுத்தியது...இறைவனது காத்தருளுதல் என்ற இரு தொழில்களையும் சேர்த்து உணர்த்துவதற்காக..அழித்தல் தொழில் முன்பே குறிக்கப்பட்டது.

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய

'வளை'   என்ற சொல், 'உடல் உணர்வைக் குறிப்பால் உணர்த்துவதற்காக, பல இடங்களில் தத்துவார்த்தமாகக் கையாளப்படுகின்றது.

நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையும் கொண்(டு)எம்
உயிரும் கொண்டுஎம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக் கண்நம்
சென்னி மின்னிப் பொலியுமே(சென்னிப் பத்து, மாணிக்கவாசகப் பெருமான் ).

இப்பாடலில், 'வளையும் கொண்டு' என்றது, உடல் உணர்வைக் கடந்ததற்கு அறிகுறியாகச் சுட்டப்படுகின்றது.

உடல் உணர்வின் காரணமாக, எழும் வெளி ஆரவாரங்களின் ஒலிகளையே ஆபரணங்களின் ஒலி என்றார். மனதை ஆழ்ந்த தியான நிலையில் ஈடுபடுத்தி(குடைந்து) நம்மை உடையவனாகிய இறைவனின் பாதங்களைச் சிந்திப்பது அவற்றை நீக்க உதவும்..(அவ்வாறு செய்து) 

'இருஞ்சுனை நீராடேலோ எம்பாவாய்'=========இருவினைகளால் ஏற்படும், பிறவியைக் கடப்பாயாக‌!! என்றருளினார்.. சமயநெறிகளில், சன்மார்க்கம் இவ்வாறாக அருளிச்செய்யப்பட்டது.

வெற்றி பெறுவோம்!!


மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI... SONG # 11...திருவெம்பாவை....பாடல் # 11

Image result for lord siva images
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.

இப்பாடல், தோழியர் எல்லாம் ஒருங்கு கூடி நீராடுங்கால்,இறைவனாரின் பெருமையைப் போற்றி உரைத்தது..

ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி 

நிறைந்து ஒளி வீசும் நெருப்பு போன்ற செந்நிறம் உடையவனே!!..வெண்மை நிறமான திருநீற்றில் மூழ்கியவனே!!...

செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா

எங்கள் செல்வமாகிய ஈசனே!!.. சிற்றிடையையும், மை பூசிய கருவிழிகளையும் உடைய மடந்தையான  உமையின் மணவாளனே!!.. அழகனே!!!..

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் 

வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்களையுடைய அகன்ற தடாகத்தில், 'முகேர்' என்ற ஒலி எழும்படி, புகுந்து, கரங்களால், குடைந்து, குடைந்து மூழ்கி எழுந்து, உன் திருவடிகளைப் பாடி, பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் வாழ்ந்தோம்..

நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

நீ எங்களை ஆட்கொண்டருளும்  பொருட்டுச் செய்யும் விளையாடல்களினால் , துன்பங்கள் நீங்கி இன்பம் பெறுபவர்கள், அவற்றை எந்தந்த வகைகளில் பெறுவார்களோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பெற்று முடித்தோம்!!..

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.

இனி மீண்டும் இந்தப் பிறவிச் சுழலில்  அழுந்தி இளைக்காமல் எங்களைக் காப்பாயாக!!!...

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.....

இப்பாடலில், பின் வரும் வரிகளில் இறைவனைப் போற்றி, விளித்தமையால், அவற்றை முன் கொண்டு பொருள் கொள்ளலாயிற்று..

 ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா....செந்நிறமுடைய உடலெங்கும் திருநீறு பூசி அருளினார் ஆதலின், 'வெண்ணீறாடி' என்றார். 'விபூதி' என்பது செல்வத்தையும் குறிக்கும்..நித்யவிபூதியையும் குறிக்கும்.. பிறவி எடுத்தவர்கள் பெற வேண்டிய செல்வம் சிவனார் ஆதலின் 'செல்வா' என்றார்.

'சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா'..முந்தைய பாடலில் உமையை 'பேதை ' என்றவர், இங்கு 'மடந்தை' என்கிறார்..பெண்களின் ஏழு பருவங்களுள் ஒன்றான 'மடந்தை' திருமணமான பெண்ணைக் குறிக்கும்..மடந்தையை மணந்தவன் என்ற குறிப்பினால், இறைவன் போக வடிவமாய் இருப்பது உணர்த்தப்பட்டது.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி=

மொய்யார் என்பதற்கு, மொய் ஆர் எனப் பிரித்து.. நெருங்குதல் என்னும் பொருளையும் கொள்ளலாம்.. நெருங்கி நீராடுதல் பொருட்டு, முகேர் என்ற ஒலி வரும்படி, பொய்கையுள் புகுந்ததாகக் கொள்ளலாம்..

கையாற் குடைந்து, குடைந்துன் கழல்பாடி==மிகவும் ஆழ்ந்து தியானிப்பதன் மூலம் இறைவன் திருவடி தரிசனம் பெறலாம்... 'குடைந்து, குடைந்து' என்பது மேன்மேலும் ஆழ்ந்து இறைவனை சிந்திப்பதைக் குறித்தது..

நீராடும் போது, இறைவனாரைத் துதிக்கின்றார்கள்.. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனாரைத் துதித்து நீராடும் பாங்கு, மானசீக பூஜைக்கு ஒத்தது.. ஆகவே  இது கிரியையாகிய சற்புத்திர மார்க்கத்தைச் சொல்வதாகும்.. 

'நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்'===இறைவனார் புரியும் ஐந்தொழில்களும் அவருக்கு விளையாட்டே..

'சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம் உயிர்க்கு'(அருணந்தி சிவாச்சாரியார்)...

ஐந்தொழில்களையும் உயிர்களை ஆட்கொண்டருளும் பொருட்டே விளையாடல் போல் இறைவனார் செய்கிறார்.

'வழியடியோம்' என்று பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் என்பதைத் தோழியர் முன்னர் குறிப்பிட்டபடியால், இவர்கள் புண்ணிய ஆத்மாக்களே!!... 'குடைந்து, குடைந்து நீராடி வாழ்ந்தோம்' என்றதால், இவர்கள் பல பிறவிகளாக சாதகர்களே என்பதும் விளங்கியது. வீடு பேறு எய்துதற்கு, செய்த புண்ணியத்துக்கான பலன்களையும் அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும்..அந்த வகையில், வெவ்வேறு உலகங்களில், இன்பங்களை பல படிகளில் நுகர்ந்து முடித்தோம் என்றார்கள்..

இந்த வரியை இன்னும் கொஞ்சம் நுட்பமாக விளக்க விரும்புகிறேன்.. மனித ஆத்மா, ஸ்தூல சூட்சும, காரண சரீரங்களுக்குள் அடைபட்டிருக்கிறது..ஸ்தூல உடலை விட்ட சாதகர்கள், தங்கள் சூட்சும கர்ம வினைகளிலிருந்து விடுதலையாக வேண்டி, புதிய சூட்சும உடலில் பிறப்பெய்தி, சூட்சும உலகத்திற்குச் செல்கிறார்கள்.. அங்கு முழுமை எய்திய பின்னர், காரண உலகத்திற்குச் செல்ல வேண்டும்.

இவ்வாறு பல பிறப்புகள் எடுத்து, பலன்களை முழுவதுமாகத் தீர்த்து விட்டோம்.. என்கிறார்கள் தோழியர்.

'உய்வார்கள்' என்பதனால், இறைவனடியாராகி, துன்பம் நீங்கப் பெற்று இன்பம் பெற்றமை தெளிவுபடுத்தப்பட்டது.

'உய்ந்து ஒழிந்தோம்' என்பதனால், பலன்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தமை புலப்படுத்தப்பட்டது.. ஆகவே, 'நீ எங்களுக்கு வீடு பேறு அருளல் வேண்டும் என்றனர்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 26 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 10......திருவெம்பாவை..... பாடல் # 10


பாடல் # 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய மகளிர், நீராடலுக்காக நீர்த்துறையைச் சென்று அடைந்து, அங்கு தமக்கு முன்பாக வந்திருந்த, திருக்கோயிலில் பணி புரியும் மகளிரைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து, இறைவன் புகழைக் கூறித் துதிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பொருள்:

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

இறைவனின்  திருப்பாத கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாக,     சொற்களால் அளவிட முடியாதவையாக‌ இருக்கின்றன.. அவனது திருமுடியும், மேலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் மேலான, முடிவான‌ இடமாய் விளங்குகிறது.

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
அவன் திருமேனி ஒரு வகையானதல்ல.. மாதொரு பாகன் அவன். 

வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

வேதங்கள் முதலாக, விண்ணுலகத்தார்,  மண்ணுலகத்தார் யாவரும் துதித்தாலும், அவன் பெருமையை ஓதி முடிக்க இயலாது. நமக்குச் சிறந்த‌ தோழன். தொண்டர்கள் நடுவில் இருப்பவன். 

கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

குற்றமொன்றில்லாத குலத்தினராகிய‌, கோயில் பணிசெய்யும் பெண்களே!!. அவன் ஊர் எது?, பேர் எது?, உற்றவர் யார்?, அயலவர் யார்?, அவனைத் தக்கவாறு புகழ்ந்து பாடும் வகை என்ன?..

 'பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்'== பாதாளம் என்று தெளிவாகக் குறித்தமையால், இது பாதாளம் ஈறான கீழ் ஏழு உலகங்களைக் (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ) குறித்தது.

'சொற்கழிவு பாதமலர்' என்றது சொல்லால் விவரிக்கவொண்ணாத பெருமையுடைய, இன்ன மாதிரியானது என்று அளவிடப்பட இயலாத திருவடித் தாமரைகள் என்பதைக் குறித்ததாம்..

இதன் மூலம் இறைவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் என்பது உணர்த்தப்பட்டது.

'போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே'==='கொன்றை முதலான  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமுடியானது, மேலுள்ள பொருள் யாவற்றிற்கும் மேலான முடிவாக அமைந்தது' என்னும் பொருளில் சொல்லப்பட்டாலும் இது சற்றே ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

திருவடிகள் கீழ் ஏழு உலகங்களைத் தாண்டியும் நின்றது. ஆகவே, 'திருமுடி' என்ற குறிப்பினால், மேலிருக்கும் திருமுடியானது, மேலுலகங்கள் ஏழையும் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்) கடந்து நின்றது என்று பொருள் கொள்ளலாம்.

'எல்லாப் பொருள்முடிவே' என்றதால், மேலுள்ள அதாவது, மேலானதென்று கருதத்தக்க பொருட்கள் எல்லாவற்றிலும் மேலான பெருமையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். 'திருமுடி' என்ற குறிப்புச் சொல்லால், எல்லாவற்றிலும் உயர்ந்தவன் இறைவன் என்பது புலனாயிற்று..முடிந்த முடிவான மெய்ப்பொருள் இறைவனே!!

முதலில் பாதாளம் என்று உலகங்களை மட்டும் உணர்த்தியவர், இம்முறை எல்லாப் பொருள் என்று முடித்தது, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் வியாபகத் தன்மையை உணர்த்த.

'வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்'

வார்த்தைகளால் ஓதி முடிக்க முடியாத‌ (உலத்தல்==முடிதல்), பெரும் சிறப்புடைய ஒரு தோழன் என்றது, இறைவனாரைக் காட்டிலும் சிறந்த தோழன் இல்லை என்பதை உணர்த்திற்று. இதன் மூலம், சமய நெறிகளுள்  ஒன்றாகிய 'சகமார்க்கம்' குறிப்பாக உணர்த்தப்படுகின்றது.

சிவநெறியில், யோகத்தை, சகமார்க்கம் அதாவது ஒத்து நிற்கும் தோழமை நெறி என்று கூறுவர். இறைவடிவை ஒத்தநிலை கிட்டச் செய்யும் நெறியாதலின் தோழமை நெறி எனப்பட்டது. யோகம் என்பது இங்கு அட்டாங்க யோகமே.

சன்மார்க்கமாகிய சுத்த ஞானத்தின் தன்மையை உடையது சகமார்க்கம்.

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.(திருமூலர்)

'தொண்டருளன்' இதை அடியார்கட்கு நடுவில் இருப்பவன் என்றும் அடியார்தம் உள்ளத்து இருப்பவன் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்..

இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.(ஔவையார்)

'கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்'==== முற்காலத்தில், பெண்கள், திருக்கோயிலில் பணிசெய்து வாழும் வாழ்வினை விரும்பி ஏற்கும் வகை இருந்தது. அப்படி விரும்புவாராயின், அவர்கள், திருக்கோயில் அருகில் இருக்கும் கன்னி மாடத்தில் வசிப்பர். இறைவன் திருக்கோயில் பணிகளான விளக்கிடுதல் முதலியவற்றை மேற்கொள்வர்..கோயிலிலிருந்து அளிக்கப்படும் உணவையே உண்டு வாழ்வர்.

இவ்வாறு வாழும் வாழ்வினை மேற்கொண்டவர்கள், பின்னாளில் இல்லறம் ஏற்க விரும்புவாராயின் அதற்குத் தடை ஏதுமில்லாதிருந்தது..நம்பிஆரூரரை மணந்த சங்கிலியார் முதலில் இவ்வாறு கன்னிமாடத்தில் வாழ்ந்து, பின் ஆரூரரை மணந்தார் என்ற கூற்று இருக்கிறது.

கோயிலுக்குப் பிணையானவர்கள், கோயிலோடு பிணைக்கப்பட்டவர்கள்  ஆதலினால் கோயில் பிணாப்பிள்ளைகாள் என்றார். 

இதற்கு, 'குற்றமொன்றில்லாத குலத்தையுடைய சிவனாரின் திருக்கோயில் பணி செய்யும் பெண்களே'  என்றும் ஒரு பொருள் கொள்ளலாம்.

ஏதவனூர்== 'அவனுக்கென்று ஒரு ஊர் இல்லை.. எல்லா ஊரும் அவன் ஊரே!!.. இவ்வுலகம் எல்லாம் அவனுடையது' என்ற பொருளில் இது, இறைவனின் எல்லாமான தன்மையைப் பேசுகிறது.

ஏதவன்பேர்==== 'அவனுக்கென்று ஒரு திருப்பெயரில்லை.. ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை உடையவன்' என்ற பொருளில், இது இறைவனின்  அளவில்லாத பெருமையை வியந்து கூறியது..

ஆருற்றார்==='அவனுக்கு உற்றவர்கள், உறவினர்கள் யார்?' என்ற பொருளில் இது அனைத்துலகமும்   இறைவனுக்கு உள்ளிருப்பவை. உறவாக நிற்பவை என்பதை உணர்த்திற்று. உயிர்களுக்கு உற்றவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு பொருளாம். உயிர்களுக்கு இறைவன் உறவு ஆதலின், இறைவனுக்கும் உயிர்களே உறவு..

'’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’(அப்பர் சுவாமிகள்)

'ஆரயலார்'===இறைவனுக்கு அந்நியர் யார்? என்ற பொருளில், அந்நியர் யாருமில்லை என்பதை அறிவித்து, அவனைக் கடந்ததொரு பொருளில்லை என முடிந்தது.

"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.” (திருத்தெள்ளேணம்1)

'ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.'அத்தகைய சிறப்புப் பொருந்திய இறைவனைப் பாடும் வகை என்ன? என்று கோயிற் பணி செய்யும் பெண்களிடம் வினவுகிறார்கள் பாவை நோன்பு நோற்பவர். இறைவனுக்கு அருகே இருந்து பணி செய்யும் பெண்கள் என்பதால், அவனைப் பாடும் வகையை இறைவனார் அருளியிருக்கக் கூடும் என்று நினைத்து வினவுகின்றார்கள்... 'இறைவனைக் குறித்துச் சிறந்த வகையில் போற்றிப் பாடுவது என்பது இயலாத ஒன்று' என்று வியந்து கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!!!

'திருத்தெள்ளேணம்' பாடலை நினைவுபடுத்திய தோழி மேகலாவிற்கு என் மனமார்ந்த நன்றி

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்