நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI.. SONG..# 8...திருப்பள்ளியெழுச்சி....பாடல் # ..8

Image result for lord siva images
பாடல்  #  8

முந்திய முதல்நடு இறுதியு மானாய் 
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்  
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்  
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்  
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் ‍ ===அனைத்திற்கும் முற்பட்ட காலத்தில், அனைத்துப் பொருட்களின் முதலும் நடுவும் முடிவும் ஆனாய்!


மூவரும் அறிகிலர் - மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்.

யாவர்மற்று அறிவார் - வேறு யாவர் அறியக்கூடியவர்?

பந்தணை விரலியும் நீயும் - பந்தினை ஏந்திய விரல்களையுடைய உமையம்மையும் நீயுமாக.

நின்அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே - உன்னுடைய அடியார்களுடைய பழமையான‌ வீடுகள் தோறும் எழுந்தருளிய பரமனே!

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி - சிவந்த நெருப்பை ஒத்த நினது திருவடிவத்தையுங்காட்டி.

திருப்பெருந்துறையுறை கோயிலும்காட்டி- திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி.

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ‍===அருளாளனாதலையுங்காட்டி வந்து ஆட்கொண்டவனே!

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே ‍ ==அமுதைப் போன்றவனே!..ப‌ள்ளி  எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

முந்திய முதல் என்றது முத்தொழில்களுள் முற்பட்டதாகிய படைத்தலைக் குறித்தது. ந‌டு இறுதி' என்றது  நிலைபேறு(காத்தல்), இறுதி(அழித்தல்) ஆகியவற்றைக் குறிக்கின்றது

மாயை,சுத்த மாயை அசுத்த மாயை மிச்சிரமாயை என  மூவகைப்படும். சுத்தமாயையைத் தொழில் படுத்தும்போது சிவபிரான் தானே அயன் அரி அரன் என மூன்று நிலைகளையும் அடைந்து நிற்பார்.. இதுவே சம்பு பட்சம்..

அசுத்த மாயையின் கீழ் வரும் பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்தும் போது, பக்குவப்பட்டு, உயர்நிலையை அடைந்த உயிர்களாகிய, அயன், அரி, அரன் என்பவர்கள், எம்பிரானின் ஆணைப்படி, படைத்தல்,காத்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்வர்.. இது அணு பட்சம்..

சம்பு பட்சத்தில் முத்தொழில்கள் நடைபெறும் போது, பரமனே முத்தொழிலையும் செய்கிறான்...சம்=இன்பம், பு= உண்டாக்குபவன்.. உலகுக்கு இன்பம் உண்டாகும் பொருட்டு முத்தொழிலையும் பரமன் செய்வதால் இது சம்பு பட்சம்.

ஆனால் அணு பட்சத்தில் அவரது ஆணைப்படி, மும்மூர்த்திகளால் இம்மூன்றும் நடைபெறுகின்றன. பரமன் ஆணைப்படி முத்தொழில்களையும் செய்யும் இவர்களை, மாணிக்கவாசகர், 'சேட்டைத் தேவர்' என்று குறிப்பிடுகிறார்.

ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
    ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
    நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
    காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.  (செத்திலாப் பத்து)

இவர்கள் பிறப்பிறப்பிற்கு உட்படுவர் என்பது விதி..

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)

ஆக, இவ்விதம் அணுபட்சத்தில் தொழிற்படும் மூவரே.. ஆணவ மலத்திற்கும் உட்பட்டு, இறைவனை அறியா நிலை எய்துவர்.. 

இங்கு 'மூவரும் அறியார்...' என்று குறிப்பது, சம்பு பட்சத்தில் தொழிற்படுபவரை அல்ல.. அணுபட்சத்தில் தொழிற்படும் மூவரையே..

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
  பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே///

'பந்தணை விரலி' யின் தத்துவ விளக்கம் ஆழமானது.. உமையவள் திருக்கரத்திருக்கும் பந்து,   உயிர்களே!!.  சைவ சித்தாந்தப்படி, இறைவன் எப்படியோ, அப்படி உயிர்களும் அநாதியானவை.. அவற்றை யாரும் உண்டாக்கவில்லை..ஆனால் அவை அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையன.. இறைவி தம் திருக்கரத்தில், அவற்றைப் பந்தினைப் போல் தாங்கியருளுகிறாள்..இறைவனின் அருள், இறைவியின் மூலமாகவே உயிர்களுக்குக் கிடைக்கிறது.. அந்த அருளை இறைவன் நம் மீது பொழியும் பொருட்டு, உயிர்களை தம் திருக்கரத்தில் ஏந்தி அருளுகிறாள் உமையம்மை..

சீர்காழி குளக்கரையில் 'அழுது அருளிய' குழந்தைக்கு, இறைவன் அருளிய ஞானத்தை, உமையம்மை பாலாக ஊட்டி, ஆளுடைய பிள்ளையாய், ஞானசம்பந்தப் பெருமானாய் ஆக்கியருளிய பான்மை இதற்குச் சான்று.

மேலும் 'பழங்குடில்' என்பது, பழமையான குடிலாகிய உயிர்களோடு உறைதலைச் சுட்டுவதாம்...

அரக்கொடு சேர்த்தி அணைத்தஅக் கற்போல் 
உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித் 
தானே உலகாந் தமியேன் உளம்புகுதல் 
யானே உலகென்பன் இன்று.    (சிவஞான போதம்)

இறைவன், ஆதியில் இருந்த நிலை மீண்டும் வருதற்கும், திரோதான சுத்தி கிடைத்தற் பொருட்டும், தம் ஆன்மாவாகிய பழங்குடிலில் இறைவனை எழுந்தருள வேண்டுகிறார்..

முன்னைப் பழம்பொருட்கும் முன்னவனான இறைவனைப் போல், உயிர்களும் அநாதி என்பதால், உயிர்கள் பழங்குடில் ஆயிற்று இங்கு.

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
  திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி 
 அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் - இவ்வரிகளில் இறைவன் தன்னைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய நிகழ்வினைக் குறித்துள்ளார் வாதவூரடிகள். (இறைவன் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக – அந்தணர் வடிவில் வந்து வாதவூரருக்கு ஞானோபதேசம் செய்தான்  

தம்முள் சோதி வடிவாக, அருவுருத் திருமேனியில் இறைவன் அருட்காட்சி தந்ததை, திருவெம்பாவையில் பல இடங்களில் குறித்திருக்கிறார்.. இங்கும் அதையே, 'செந்தழல் புரைதிரு மேனி' என்று குறிக்கிறார். அருவுருவத் திருமேனி, சதாசிவத் திருமேனி என்றே குறிக்கப்படுகின்றது.. உயிர்களின் பாவங்களை நீக்கி நற்பலன்களைத் தருவது சதாசிவமே!!.. ஆலயங்களின் கருவறையில் காணப்படும் இலிங்கத் திருமேனியும் சதாசிவ மூர்த்தம் என்றும் மற்ற திருவடிவங்கள் மகேசுவர மூர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன..

ஆதலின், ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கும் தன்மையதான அருவுருவத் திருமேனியும், சிவயோகத்தை அருளிய குரு நாதன் உருவில், தம்மை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட பான்மையையும் சொல்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்..

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே ‍ 

சிவ நிந்தனை கேட்டதன் காரணமாக, படாத பாடு பட்ட தேவர்களுக்கும், அமுதமாய் நின்று, அவர்களை மன்னித்து, குமரக் கடவுளை அவர்தம் துயர் தீர்க்க அருளிய காருண்ய மூர்த்தி எம்பிரான்.. அவரை ஆரமுதென்று அழைத்தலே சிறப்பன்றோ!!!..

அரனடி நினைத்தார் அவனருள் பெற்றாரே!!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..