நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 22 மார்ச், 2014

EKNATH SHASTI...ஏக்நாத் சஷ்டி...(22/3/2014)

Related image

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நம் புண்ணிய பாரத பூமியில் உதித்த கணக்கற்ற மஹான்களில் ஒருவர் ஏகநாதர். ஏகநாதர், மஹாராஷ்டிர மாநிலம் தந்த மஹான்களுள் ஒருவர்.. மராட்டிய மஹான்களின் வரிசையில்,ஞானதேவருக்கு அடுத்தபடியாகவும்,துக்காராம், ராம்தாஸ் போன்றோருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.

இன்றைய பைத்தான் நகர் அன்று  பிரதிஷ்டானபுரம்  என்று அழைக்கப்பட்டது.. 

வெள்ளி, 7 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.. SONG # 10...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.. பதிகம் # 10.


பதிகம் # 10.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 


பொருள்:

"புன்மையான, நிலையற்ற, மாமிசத்தால் ஆன இந்த உடல், புளகாங்கிதம் எய்தி, பொன்னாலாகிய கோயிலே

வியாழன், 6 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 9... மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 9.


பதிகம் # 9

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
குழந்தையின் பசி வேளை அறிந்து, காலம் தவறாது பாலூட்டும் தாயை விடவும்


புதன், 5 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU.....SONG # 8...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'...பதிகம் # 8.

Courtesy: Google Images

பதிகம் # 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
தந்தையே!...தேவர்களாயும் தேவலோகமாயும் நின்ற முதற்பொருளே!..காலம், இடம் முதலிய எதன் பொருட்டும் முடிவில்லா ஞானவடிவே!,

செவ்வாய், 4 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU... SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 7


பதிகம் # 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
பாசத்தின் வேரை அகற்றுகின்ற, பழமையான முதற்பொருளாகிய தன்னை (சிவனை) அடையும் வழியை அடியேனுக்கு

திங்கள், 3 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU....SONG # 6.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 6.


பதிகம் # 6.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


பொருள்:
ஆதரவில்லாத அடியேனுடைய மனதையே கோயிலாகக் கொண்டு, அளவில்லாத ஆனந்தமாகிய பேரானந்த நிலையை அருளி,

ஞாயிறு, 2 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU..SONG # 5...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து'.... பதிகம் # 5.

பதிகம் # 5.

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொருள்:

தனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒரே பரம்பொருளே!, அடியேனது உள்ளத்துள் ஒளிர்கின்ற பேரொளிமயமானவனே!...உண்மையான  உயர்ந்த நிலையை அறியாத, பெருமையேதும் இல்லாத எனக்கு உயரிய பேரானந்த வாழ்வளித்த அன்பின் திருவுருவே!, சொல்லால் விளக்குதற்கு அரிய, செழுமையான சுடர்  வடிவினனே!!, அடியார்களின் செல்வமான சிவபிரானே!, இளைத்த இடத்து, உன்னைச் சிக்கெனப் பற்றிப் பிடித்தேன்!.. இனி நீ எழுந்தருளும் இடம் வேறெது?!..

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்...

இறைவன் தனக்குவமையில்லாதான்..ஆகவே 'ஒப்பு உனக்கு இல்லா' என்றார்..

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"
- திருக்குறள்,

ஒரே பரம்பொருளான இறைவன் சிவபிரானே.. ஆகையினால் 'ஒருவனே' என்று போற்றுகிறார்!...

ஒருவன் என்னும் ஒருவன் காண்க (திருஅண்டப் பகுதி)

உள்ளன்போடு, இறைவனைத் துதிப்போர் உள்ளமே இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில்..

இறைவனோ தொண்டர்தம் உள்ளத் தொடுக்கம் என்றார் ஔவை..

பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி,
`இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே.(திருச்சதகம்)

மெய்யடியார்கள், தங்கள் மனதில் பேரொளி மயமான இறைவனது தரிசனத்தை விடாமல் காண்கின்றனர். ஆதலால், 'உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே' என்றார்..

புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் இறைவன் ஒருவனே!.. ஆகையால் , தம்மை 'வீறு இலியேற்கு' என்றார்.. மானிடராய்ப் பிறந்தவர் உயரிய சிவபதம் அறிவது இயலாததால் 'மெய்ப்பதம் அறியா' என்றார்.

அவ்விதம் உயரிய நிலை அறியாத போழ்தும், இறைவன் தம் பேரன்பினால், அந்த மேன்மையான பதத்தை அளித்து அருள் செய்த பான்மையினை, ''விழுமிய தளித்ததோ ரன்பே' என்றார்..

இங்கு 'ஓர் அன்பே' என்ற பதம் மிகுந்த பொருளாழமுடையது. இவ்வுலகியல் விஷயங்களின் பால் நாம் கொள்கின்ற அன்பு நிலையானதன்று.. அதைப் போல், நம் பால், நம் உற்றார் உறவினர், நண்பர்கள் முதலானவர்கள் வைக்கும் பற்றுதலும், நிலையானதல்ல... உண்மையான அன்பு என்பது, இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், நமக்கு அன்னையும் தந்தையும் ஆகிய இறைவன் நம் பால் எப்போதும் சுரக்கின்ற பேரன்புமே... 

அந்தப் பேரன்பின் காரணமாகவே, இறைவன் பெருமையேதும் இல்லாத தனக்கு மேலான பதமளித்தமையால், 'ஓர் அன்பே' என்றார்.

இறைவன், அக இருளை நீக்கும் ஞானமாகிய சுடர் வடிவினன்..ஞானமே செழுமையானது..ஆகவே, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றார்....

பாரும் விசும்பும் அறிய வெனைப்
        பயந்த தாயும் தந்தையும் நீ
    ஓரும் போதிங் கெனி லெளியேன்
        ஓயாத் துயருற்றிட னன்றோ
    யாருங் காண வுனை வாதுக்
        கிழுப்பே னன்றியென் செய்கேன்
    சேரும் தணிகை மலை மருந்தே
        தேனே ஞானச் செழுஞ்சுடரே. (செழுஞ்சுடர் மாலை).

என்று வள்ளலார் பெருமான் பாடியருளியதை இங்கு ஒப்பு நோக்கலாம்....

'எய்ப்பிடத்து' என்பது இளைத்த இடத்தில் என்று பொருள்படும்..இளைப்பிற்குக் காரணம்..பலப் பல பிறவிகள் எடுத்தது..

'எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்று சிவபுராணத்தில் வாதவூரார் அருளியிருப்பதை இங்கு பொருத்தி உணரலாம்..

முடிவற்ற பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி, பல பிறவிகள் எடுத்தும், இறைவனருள் கிட்டாமையினால் இளைத்திருக்கும் இத்தருணத்தில்,  'ஏதாகிலும் சரி, உன்னை  நான் இனி விடேன்' என்று இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததன் காரணமாக, இறையருளும் அதன் வழியே முத்தி நிலையும் கை கூடப் பெற்றதால், இனி எம்பிரான் தனித்து எழுந்தருளுவது இயலாது என்று உரைத்தார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 1 மார்ச், 2014

PIDITHTHA PATHTHU...SONG # 4.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'பிடித்த பத்து' பதிகம் # 4

பதிகம் # 4
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொருள்

இரக்கம், பரிவுடைய சுடர் போன்றவனே!..  பக்குவ நிலையை அடைந்த கனி போன்றவனே!..பெரும் ஆற்றலை உடைய, அருமையான தவத்தினை உடையவர்க்கு அரசனே!..உண்மைப் பொருளை விளக்கும் நூலாக இருப்பவனே, புகழ்ச்சிக்கு அடங்காத, இன்பமாக இருப்பவனே!..யோகத்தின் மூலம் அடையத் தக்க பொலிவானவனே!... தெளிவினை உடைய அடியார்களது சிந்தையில் புகுந்து உறையும் செல்வமானவனே!.. சிவபெருமானே!..இருள் நிறைந்த இந்த உலகத்தில், உன்னை உறுதியாகப் பற்றிப் பிடித்தேன்.. இனி நீ எங்கு எழுந்தருளுவது?!!

சற்று விரிவாகப் பார்க்கலாம்..

அருளுடைச் சுடரே ---ஒளி தரும் சுடர் வெம்மையையும் தருவது, தீண்டுவோரைச் சுடுவது.. ஆனால் இறைவன் தாயினும் சாலப் பரிந்து அடியாரைப் பேணுதலால், 'இரக்கம் நிறைந்த சுடர்' என்னும் பொருள் வருமாறு, அருள் நிறைந்த சுடர் என்றார்..இதற்கு மற்றொரு பொருளும் கூறலாம்.. இறைவன் பேரொளி வடிவானவன், ஆயினும் அவனிடமிருந்து வெளிப்படும் ஒளியானது அடியார்களைச் சுடுவதில்லை.. தண்மையே தருகிறது.. ஆகையினாலும் இறைவன் அருளுடைச் சுடர்.

அளிந்ததோர் கனியே--நன்கு கனிந்து பக்குவமடைந்த கனி போன்றவன் இறைவன்..காயானது நன்கு பழுத்து கனிந்த பின்னரே சுவை தருவது நாம் காயினை உண்ணுவதை விடவும் கனியினை உண்ணுதலையே விரும்புவோம். இறைவன் அவ்வாறான சுவை மிகுந்த கனி போன்றவன்.. .  

இதற்கு வேறொரு பொருளும் கூறலாம்.. அடியார்கள் பரிபக்குவ நிலையை அடைந்த பின்னரே இறைவன் அவர்களுக்கு அருள் சுரப்பான்.. பரிபக்குவ நிலையை அடைந்த அடியார்களை இறைவன் மிக உயர்ந்த பரிபக்குவ‌(தன் ) நிலைக்கு உயர்த்துதல் எளிது ஆகையால், இறைவனைப் பக்குவமடைந்த, கனிந்த, கனி என்றார்..

பெருந்திறல் அருந்தவர்க் கரசே--தவநெறியின் மேன்மை இங்கு விளக்கப்படுகின்றது.. பேராற்றல் தவத்தினால் கிட்டும்..முனிவர்களது தவ ஆற்றலின் மேன்மை நாம் அறிந்ததே!.. இறைவனை அடையும் பொருட்டு, உயர்வான தவநெறியில் சென்று, மிகக் கடுமையான 'பஞ்ச தவம்' முதலானவைகளைச் செய்யும் அடியார்களுக்கு அருள் மழை பொழிபவன் இறைவன்..   ஆகையால், பெரும் திறன் படைத்த, அருமையான(அரிய, கடினமான) தவ நெறியில் செல்வோரின் அரசரே! என்றார்.

இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்... பேராற்றலாவது உள் மனதின் ஆற்றலே ஆகும்.. கடினமான தவநெறியில் செல்வது, மிகுந்த மனோபலமுள்ளவர்களாலேயே இயலும்..அவர்கள் மேற்கொள்ளும் நெறிகள், மேலும் மேலும் அவர்களது உள் ஆற்றலைப் பெருக்கி, தவநெறியின் குறிக்கோளான இறைவனை அடைவிக்கும்..அத்தகைய பேராற்றல் வாய்ந்த தவசீலர்களின் அரசர் என்று இறைவனைப் போற்றுகின்றார் வாதவூரார்.

அருந்தவ மாமுனி வர்க்கரு 
ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் 
பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர 
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு 
நாகேச் சரத்தானே(சுந்தரர் பெருமான்)

\பொருளுடைக் கலையே---இங்கு பொருள் என்பது மெய்ப்பொருளையே குறிக்கும்.. வெளிப்படையாகப் பார்க்கும் போது, மெய்ப்பொருளை விளக்கும் நூலாக இருப்பவன் இறைவன் என்று பொருள்படுகிறது இது..அதாவது, உயிர்கள் அடைய வேண்டிய, அடையத் தகுந்த மெய்ப்பொருள் இறைவன் ஒருவனே!.. அவனை அடையத் தகுந்த வழியும் அவனருளாலேயே கிட்டும்!.. இன்னும் விரிவாகப் பார்ப்போமானால், அவனே அந்த வழியாகவும் இருக்கிறான்...இதை நுட்பமாக விளக்குவது கடினம்..

வீணான, மற்ற உலகியல் விஷயங்களைத் தவிர்த்து, மெய்ப்பொருளான இறைவனையே சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக இவ்வரி உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே----இறைவனது மகிமையை, புகழை, ஓதி முடித்தல் என்பது இயலாது.. அவனது மகிமைக்கு அளவில்லை.. ஆதலால், 'புகழ்ச்சியைக் கடந்த' என்றார்.. சிற்றின்பமாகிய உலகியல் இன்பங்கள் யாவும் உண்மையில் போகமல்ல. இறைவனோடு கலந்திருத்தலாகிய பேரின்பமே 'போகம்' என்று கொள்ளத் தக்கது.. அதுவே உயிர்களுக்கு எந்நாளும் நன்மை செய்யக் கூடியது.. ஆகவே 'போகமே' என்றார்.

யோக நெறியில் நிற்போர், தங்கள் யோக சாதனைகளின் மூலம் எம்பெருமானை  மகிழ்வித்து, அவரோடு ஒன்றி நிற்றலாகிய முத்தி நிலையைப் பெறுகின்றனர்.. யோகியருக்கே அவர்களது சாதனைகளின் பலன் அனுபவ ரீதியாகப் புலப்படும்...அந்த அனுபவத்தின் வாயிலாக, அகக்காட்சியில் மட்டுமே காணக் கிடைப்பவன் ஆதலால், ' பொலிவே' என்றார். யோகியருக்கு உள்ளூரப் பொலிபவனாக விளங்குபவன் இறைவன்.

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே---அவ்வாறு யோக நெறியில் நிற்பவரது சித்தம் தெளிவுடையது.. அடைய வேண்டிய பொருள், அதற்குச் செல்ல வேண்டிய மார்க்கம் என அனைத்திலும் தெளிந்த சிந்தனை உடையவர்களாக, தம் சாதனைகளில் ஈடுபடுபவர்கள் யோகிகள்.. ஆகவே, தெளிந்த சிந்தனையுள்ள அவர்களது சிந்தையில் புகுந்து அருளும் செல்வமே என்றார்..

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. ---இருள் இடம் என்று இங்கு சொல்லப்படுவது, இவ்வுலகமே...  மாயையாகிய இருள் படர்ந்து விளங்குவதால் இவ்வுலகம் இருளின் இடமாக இருக்கிறது.. இருளை அகற்றும் மெய்ஞ்ஞானச் சுடர் இறைவனே!..

 வல்வினையேன் றன்னை. மறைந்திட மூடிய மாய இருளை.
 (சிவபுராணம்)..

தம் அகத்தே மூடிய மாய இருள் நீங்கும் பொருட்டு, தாம் இறைவனை உறுதியாகப் பற்றிப் பிடித்ததால், பெருங்கருணைப் பேராறாகிய இறைவன், முத்தி நிலையை அருளி விட்டான்.. தாம் சிவத்தோடு கலந்து விட்டதால், இனி, எம்பிரான், தனித்து வேறெங்கும் எழுந்தருள இயலாது என்று உரைக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.