நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI... SONG # 5....திருப்பள்ளியெழுச்சி....பாடல் # 5


பாடல் 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
  போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
  கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
  சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால் ‍===  பஞ்ச‌ பூதங்களிலும் நீ நின்றுறைகிறாய் என்று பலரும் சொல்வதும் அல்லது.
 
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் ‍==பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று நின்னை அறிவுடையோர்.
 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் ‍== கீதங்கள் பாடி, ஆனந்தக் கூத்தாடி துதிப்பதும் அல்லது.
 
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை ‍=== நின்னை உள்ளவாறு அறிந்தவர்களை நாங்கள் கேட்டும் அறிந்ததில்லை.
 
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா ==குளிர்ச்சி பொருந்திய வயல் வெளிகள் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே!
 
சிந்தனைக்கும் அரியாய் ‍== சிந்தித்து அறிவதற்கும் அரியவனே.
 
எங்கள் முன்வந்து - எங்கள் முன் எழுந்தருளி வந்து.
 
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டருள் புரியும் ‍==எமது குற்றங்களைப் போக்கி
எங்களை ஆட்கொண்டருளுகின்ற.
 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எமது தலைவனே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்===இறைவன் பஞ்ச பூதங்களில் நிறைந்திருக்கிறான்... ஐந்தெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதி வழிபடும் அன்பர் நெஞ்சில் பொருந்தி அருளுவான் எம்பெருமான்.. பஞ்சாக்ஷர ஸ்வரூபன் ஐயன். இறைவனது பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஒவ்வொரு அக்ஷரமும், பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைக் குறிக்கின்றன. 

`ம ய ந வா சி` என்பன முறையே நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றைக் குறிப்பதாக‌ வரும்.

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. (திருமந்திரம்

பஞ்சபூதத்தால் ஆனது நம் உடல்.. நீரிலிருந்து சுவையை உணருகிறோம். சுவையை உணரச் செய்யும் உறுப்பாக இருப்பது நாக்கு.. ஆகாயத்திலிருந்தே ஒலி பிறந்தது.. பிரணவ ஒலி நிறைந்தது ஆகாயம். இதை உணரச் செய்யும் உறுப்பு செவி..நிலத்திலிருந்து மணம் உணரப் பெறுகிறது..நாசி, இதற்கான உறுப்பு..காற்றிலிருந்து, ஸ்பரிசம்(தொடும் உணர்வு) பெறப்படுகின்றது..மெய்(உடல்)மூலம் தொடும் உணர்வு அறியலாம்.. நெருப்பிலிருந்து ஒளி பிறக்கிறது.. விழிகள் வெளிச்சத்தைக் காணுகின்றன..

அண்டத்திலிருப்பது பிண்டத்திலும் இருக்கிறது.

ஆக, பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகத்தில் 'நமசிவாய எனும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தின் மூலம் நிறையும் பரமன், சிவாய நம என்னும் சூக்கும பஞ்சாக்ஷரத்தின்  மூலம்,  நம் நெஞ்சத்துள்ளும்  குருவருளால் துலங்கும் போது, கர்மவினைகள் பொசுங்கி, திரோதான சுத்தி கிடைக்கப் பெறுகிறது.

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து 
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் 
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல் 
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.(சிவவாக்கியர்).

இந்தப் பாடலை, சித்தாந்த அடிப்படையில், திரோதான சுத்திக்கு வழிகோலுவதாகச் சிந்தித்தால், சைவ நாற்பாதங்களுள் ஒன்றான 'சரியை' விளக்கப்பட்டிருப்பதை அறியலாம்..

முதலில் சரியை என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

சிவனார் உறையும் திருக்கோயில்களில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்தல்,  மாலை தொடுத்த‌ல், அலகிடல் மெழுகல், துதிகளைப் பாடுத‌ல், இறைவன் எழுந்தருளும் வாகனங்களைச் சுமத்தல், முதலிய இறைபணிகளைச் செய்தல், சரியை எனப்படும். இது தாச மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றது.

திரோதான சுத்தி, இறையருளாலேயே நிகழும் என்பதை அறிவோம்.. பரமன் அருளைப் பெற, சரியை முதல் படி..

சரியை நெறியில் நிற்க சமய தீட்சை அவசியம்.. அந்த சமய தீட்சையின்  மூலம், சைவசமயத்தில் நிற்கும் உரிமை கிடைக்கும்..ஸ்தூல பஞ்சாட்சரத்தை, அறிந்து, செபிக்கும் உரிமையும் கிடைக்கும்..இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.

இறைவனுக்குச் செய்யும் தொண்டுகள், சிவ புண்ணியம் சேர்க்கும்..

சரி, சரியை நெறியில் நின்று, இறைவனுக்குத் தொண்டு செய்வதால் எப்படி பரமனருள் கிட்டும்?

பரமனருள் கிட்டும் முன் இருவினை ஒப்பு நிகழுதல் வேண்டும்.

இரு வினை ஒப்பு : நாம் செய்த நல்வினையின் காரணமாக, இன்பம் வரும் போது மகிழாமலும், தீவினையின் பயனாக, துன்பம் வருங்கால் துவளாமலும் இரண்டையும் ஒன்றாகவே நினைக்கும் பற்றற்ற மனநிலையை அடைதலே இருவினை ஒப்பு..

இது சரியை முதலிய சிவபுண்ணியத்தாலேயே உண்டாகும்.. இவ்வினையொப்பு முற்றும் வேளையில், இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றி தன்னை விளக்கியருள்வான்..அதுவே சத்தி நிபாதம். பரமனருள் .

இங்கு கூறப்படுதல், இருவினை ஒப்பு முற்றாத நிலை.. இறைவனை அறியத் துடிக்கும் ஆன்மாவின் பிறவிக் கதறல் இது.. 'அஞ்செழுத்தை உச்சரித்து, சரியை நெறியில் நின்று, இறைவனைத் தொழுது, கீதங்கள் பாடி ஆடி வணங்குதல், என‌ என்னென்னவோ செய்து விட்டேன்.. இன்னமும் திருவுளம் இரங்கவில்லையோ ' என்று அன்பர்கள் பதறுகையில், அடுத்த படிக்கான கதவு திறக்கும்.. முற்றாக அன்பு மயமானவர்களுக்கே இறைவனை அறிதல் கை கூடும் என்ற உண்மை புலப்படும்.. அன்பே சிவம் என்று அறியும் போது கிடைக்கும் பரிசினை மாணிக்கவாசகப் பெருமான் இப்படிச் சொல்கிறார். 

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர்கைம் மாறே

பெருந்துறையான் திருப்பாதம் பணிந்தேத்தி நலம் பெறுவோம்!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..