நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 22 மார்ச், 2014

EKNATH SHASTI...ஏக்நாத் சஷ்டி...(22/3/2014)

Related image

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நம் புண்ணிய பாரத பூமியில் உதித்த கணக்கற்ற மஹான்களில் ஒருவர் ஏகநாதர். ஏகநாதர், மஹாராஷ்டிர மாநிலம் தந்த மஹான்களுள் ஒருவர்.. மராட்டிய மஹான்களின் வரிசையில்,ஞானதேவருக்கு அடுத்தபடியாகவும்,துக்காராம், ராம்தாஸ் போன்றோருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.

இன்றைய பைத்தான் நகர் அன்று  பிரதிஷ்டானபுரம்  என்று அழைக்கப்பட்டது.. 


அந்த நகரத்தில், கி.பி.1553ல், அந்தணக் குடும்பத்தில், உத்தம தம்பதியரான, சூரிய நாராயணன், ருக்மிணி  ஆகியோருக்கு மகனாகப்  பிறந்த ஏகநாதர், இளமையிலேயே பெற்றோரை இழந்தார். தன் தாத்தாவான சக்ரபாணி என்னும் உத்தமரால் கவனமுடன் வளர்க்கப்பட்டார்.

பக்த சிரோமணியான பானுதாசர்., இவரது கொள்ளுப்பாட்டனார். அதாவது, ஏக்நாத் மஹராஜின் தாத்தா சக்ரபாணியின் தந்தையார். பக்தி மார்க்கத்தில் இளமையிலிருந்தே பற்றுதலுடன் இருந்த ஏகநாதர், தம் தாத்தா சக்ரபாணியால் , அந்த உயர்ந்த பாதையிலிருந்து சிறிதும் வழுவாமல், கட்டுப்பாட்டுடனும், அனுஷ்டானங்களுடனும் வளர்க்கப்பட்டார்.

தேவகிரி என்னும் இடத்தில் வசித்து வந்த ஸ்ரீ ஜனார்த்தன ஸ்வாமி,  இவரது குரு.  குருகுல வாசம் முடிந்து, தம் குருவின் கட்டளைப்படி, ஊருக்குத் திரும்பி,  த‌ம் இருபத்தைந்தாவது வயதில்,  கிரிஜா பாய் என்பவரை மணம் புரிந்து கொண்டார்..பல இடங்களுக்கு யாத்திரை சென்று திரும்பினார்.. நாம சங்கீர்த்தனம், ஹரிகதை, தம் இல்லம் நாடி வருவோர் அனைவருக்கும், எந்த பேதமும் இல்லாமல் அன்னதானம்..என்று ஏகநாதரின் இறைபணி தொடர்ந்தது.

மராத்திய இலக்கியத்திற்கு அரும்பணி ஆற்றியவர் ஏகநாதர். அவரது முதல் நூல், அவரது குருவின் ஆணைக்கிணங்க அவரது 22வது வயதில் எழுதப்பட்டது.. சதுஸ்லோகி பாகவதம் என்ற அந்த நூலுக்குப் பிறகு, ஏகநாத பாகவதம் என்ற, பாகவதத்தின் முழுமையான உரை நூலையும் எழுதினார். ஏகநாத பாகவதம், வர்க்காரி சம்பிரதாயத்தில், இரண்டாவது பிரஸ்தானமாகக் கருதப்படுகின்றது.

அவரது நூல்களுள் முக்கியமானது பாவார்த்த இராமாயணமாகும்.. இது மற்ற இராமாயணங்களைப் போல், வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பல்ல. பலவற்றை மாற்றியும், திருத்தியும், சேர்த்தும் அமைத்திருக்கிறார். உதாரணம், காளிகாபுராணத்தில் இருக்கும், சீதையின் முற்பிறவி குறித்த கதை இதில் இணைக்கப்பட்டிருக்கிறது..

பாவார்த்த இராமாயணம்,  ஸ்ரீமத் பாகவதம், உபநிஷதங்கள், நாரதபக்தி சூத்திரங்கள்,  யோகவாசிஷ்டம், ஸ்ரீகீதை முதலான பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் உயரிய கருத்துக்களையும், ஆனந்த இராமாயணம், அத்யாத்ம இராமாயணம் முதலான பல இராமாயண நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் இணைத்து எழுதப்பட்டது..இதில் யுத்தகாண்டம் 44வது அத்தியாயம் வரையில் ஏகநாதரால் எழுதப்பட்டது.. பின்னர் அவர் காலமானதால், அவரது சீடர் கௌபா, இந்த நூலை எழுதி நிறைவு செய்தார்.

புகழ் பெற்ற, ஞானேஸ்வரி கீதையில் இருந்த பிழைகளை நீக்கி, பதிப்பித்தவர் ஏகநாதரே!.. தம் கனவில் வந்து ஞானதேவர் இட்ட‌ ஆணையின்படி, அவரது சமாதியை, 1583ல் செப்பனிட்டார் ஏகநாதர்.

விட்டலனின் ஜப தியானமொன்றே தம் வாழ்வின் லட்சியமாகத் திகழ்ந்தவர் ஏகநாதர். அவர் எழுதியுள்ள அபங்கங்கள் அநேகம். ஏகநாதர், கி.பி.1599ல், கோதாவரி நதியில், ஜலசமாதியடைந்தார். அவர் ஜலசமாதியடைந்த தினம் இன்று.. அதாவது பால்குண மாதம் கிருஷ்ண பக்ஷ சஷ்டி தினம்.. இதை 'ஏகநாத சஷ்டி'யாக மஹாராஷ்டிர மாநிலம் முழுவதும் சிறப்பிக்கின்றனர்.

ஏகநாதரின் குருபக்தி:

ஏகநாதர், தன் குரு ஜனார்த்தன் ஸ்வாமியின் குருகுலத்தில், பல்லாண்டு காலம் தங்கி, குருவுக்கு சேவைகள் செய்து வந்தார்.. சமையல், ஆசிரம வரவு செலவுகள், குருவுக்குத் தேவையான கைங்கரியங்கள் அனைத்தும் அவரே செய்து வந்தார்.

ஒரு நாள் நள்ளிரவு வரை, அவர் தீவிரமாக, வரவு செலவு கணக்கு விஷயத்தில் இருந்த பத்து பைசா குறைபாடு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்ததை அறிந்த குருநாதர், அவருக்கு சத்விஷயத்தில் ஈடுபாடு வர வேண்டும் என்று நினைத்தார்.

மறுநாள், ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த ஏகநாதர், அரச மரத்தடியில், குருவருளால் தத்தாத்ரேயரின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றார். தத்தரை வணங்கி விட்டு, மீண்டும் ஆசிரமம் வந்து சமையல் வேலையை ஆரம்பித்தார். இதைக் கண்ட குரு, அவரிடம் வந்து, அன்று அவர் அடைந்த தரிசனம் குறித்து வினவினார்.. தெய்வீகக் காட்சி கிடைத்த பின்னும், தன் சீடன், தன் நிலையில் மாற்றம் இல்லாது இருப்பதைக் கண்ட குருவின் உள்ளம் வேதனை அடைந்தது.

ஆனால் ஏகநாதரோ, தமக்கு, தெய்வம் என்றும் குரு என்றும் பேதமில்லை..தெய்வம் காட்சி கொடுத்து விட்டு மறைந்து விடும். ஆனால், குருநாதரோ எப்போதும் அருகிலேயே இருக்கிறார். அவருக்குக் கைங்கரியங்கள் செய்ய முடிகிறது.. தேவையெனில் குருநாதரே மீண்டும் இறைக் காட்சியைக் காட்டுவிப்பார்.. என்றெல்லாம் கூறி, கண்கண்ட தெய்வம், தம் குருநாதரே என்று பணிவுடன் தெரிவித்தார்.

இத்தகைய குருபக்தி இருந்ததால் தான், ஸ்ரீ கண்ணபிரான் இவருக்குத் தொண்டு செய்தார்.

இத்தகைய மகிமை பொருந்திய மஹான் ஏகநாதர், ஜலசமாதியின் மூலம் இறைவனோடு இணைந்த புண்ணிய நன்னாள் இன்று!..அந்த உயர்ந்த மஹானின் திருவடிகளை நினைந்து வணங்கி, அசஞ்சலமான பக்தி உண்டாக வேண்டிப் பிரார்த்திப்போம்!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. என்னே குரு பக்தி...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இவர் எழுதிய அபங்கங்கள் கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கிறது என்ற தகவல் தர இயலுமா ?

    சுப்பு தாத்தா.
    98404 61667

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கே தான் போகணும் என்கிறார்கள்!.. இங்கே ஸ்லோக க்ளாஸில், வாய்மொழியாக சில பாடல்கள் கற்றுத் தருகிறார்கள்..

      நீக்கு
  3. https://www.youtube.com/watch?v=VUZjuYpjqA8
    i have been able to spot one. just Divine.
    subbu thatha.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..