நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU...PART 23..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.23.. ஸ்ரீராம ஜெய ராம!.

Image result for birth of God sri rama

பட்டத்திரி, புருஷோத்தமரான ஸ்ரீராமரின் திவ்ய சரிதத்தை, அடுத்ததாகச் சொல்லத் துவங்குகிறார். அகண்டு பரந்து விளங்கும் அன்பெனும் சாகரத்தை, எவ்விதம் இருபது பாடல்களுள் அடக்க இயலும்?!.. ஆனால், பகவானின் திருவருள், எதையும் சாதிக்கும் வல்லமையுடையது!.. வாமனனின் திருவுருவே திரிவிக்ரமனாகவும் வளர்ந்தது!.. அது போல், இரு தசகங்களில், பவ சாகரத்தைத் தாண்டுவிக்கும் எம்பெருமானின் அவதார மகிமை பட்டத்திரியால் சொல்லப்படுகிறது!..

ஸ்ரீமந் நாராயணீய பாராயணத்தின் போது, ஸ்ரீராமாவதார வைபத்தை துவங்குவதன் முன்பாக, தியான ஸ்லோகங்கள் சில சொல்வது வழக்கமாக இருக்கிறது. இனியதிலும் இனியதான ஸ்ரீராம நாமம் நிலைத்திருக்கும் உள்ளம், பால் போன்ற வெண்மையுடன் களங்கமற்றிருக்கும் என்பதை உணர்த்துவதைப் போல், பால் பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது!!. 

ராவண வதத்தின் பொருட்டு, தேவர்கள் பகவானைத் துதிப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது, ஸ்ரீ ராமரின் அவதார மஹோத்சவம்!.. மங்களமாக, ராவண வதத்தின் பொருட்டு, ஸ்ரீமந் நாராயணனைப் பிரார்த்திக்கிறார்கள் தேவர்கள். கோசல தேசத்தில், தசரதரின் புத்திர பாக்கியத்திற்காக, ரிஷ்ய ச்ருங்கர், புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தார். தசரத மன்னரிடம், மகிமை பொருந்திய பாயசமானது அளிக்கப்பட்டது.  அதை அருந்தி, ஒரே சமயத்தில் கருவுற்ற தசரதரின் மூன்று பட்டத்து ராணிகளிடத்தில், லக்ஷ்மண, பரத சத்ருக்னர்களுடன், ஸ்ரீராமராக, பரமாத்மா  அவதாரம் செய்தருளினார்!!.

( கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய் 
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ 
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே 
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ. (குலசேகராழ்வார்) ) .

தந்தையின் கட்டளைப்படி, விச்வாமித்திரரின் யாகத்தைக் காக்க, லக்ஷ்மணருடன் வில்லேந்திச் சென்றார். வழியில், விச்வாமித்திரர் உபதேசித்த இரு மந்திரங்களின் மூலமாக, களைப்பு நீங்கினார்!.. முனிவரின் கட்டளைக்கிணங்க, தாடகையை வதம் செய்தருளினார். விச்வாமித்திரரிடம், பல அஸ்திர மந்திரங்களை உபதேசமாகப் பெற்று, சித்தாசிரமம் எனப் பெயர் பெற்ற, அவரது தபோ வனத்தை அடைந்தார்!!..

முனிவரது யாகத்தின் துவக்கத்தில், பாணங்களால் மாரீசனைத் துரத்தி, மற்ற அரக்கர்களை வதம் செய்த பின், ( மிதிலை மன்னரான) ஜனகரின் யாகத்திற்குப் போகும் வழியில், பாத தூளியால், அகலிகையைப் புனிதம் செய்து, ஜனகரின் அரண்மனையை அடைந்து, சிவ தனுசை முறித்து, பூதேவிப் பிராட்டியின் திருமகளாக அவதரித்திருந்த ஸ்ரீலக்ஷ்மி தேவியை மணந்து, மனைவிகளுடன் கூடிய மூன்று சகோதரர்களுடன் தம்  நாட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்டார்!!!.

மாரீசம்ʼ த்³ராவயித்வா மக²ஸி²ரஸி ஸ²ரைரன்யரக்ஷாம்ʼஸி நிக்⁴னன்
கல்யாம்ʼ குர்வன்னஹல்யாம்ʼ பதி² பத³ரஜஸா ப்ராப்ய வைதே³ஹகே³ஹம் | 
பி⁴ந்தா³னஸ்²சாந்த்³ரசூட³ம்ʼ த⁴னுரவனிஸுதாமிந்தி³ராமேவ லப்³த்⁴வா
ராஜ்யம்ʼ ப்ராதிஷ்ட²தா²ஸ்த்வம்ʼ த்ரிபி⁴ரபி ச ஸமம்ʼ ப்⁴ராத்ருʼவீரை​: ஸதா³ரை​: || (ஸ்ரீமந் நாராயணீயம்).

ஸ்ரீராம ஜெயம்!.

​(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..