துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர். ஞானமும் தவமும் பணிவுடன் கூடியிருந்தாலே வணங்கத்தக்கதாகும். உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர் அம்பரீஷனையே சரணடையும்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
" பூ⁴யோ ப⁴வன்னிலயமேத்ய முனிம்ʼ நமந்தம்ʼ
ப்ரோசே ப⁴வானஹம்ருʼஷே நனு ப⁴க்ததா³ஸ: |
ஜ்ஞானம்ʼ தபஸ்²ச வினயான்விதமேவ மான்யம்ʼ
யாஹ்யம்ப³ரீஷபத³மேவ ப⁴ஜேதி பூ⁴மன் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ) ".
துர்வாஸர், உடனே அம்பரீஷர் இருக்கும் இடத்தை அடைந்து, அவரது காலைப் பற்றி, மன்னிப்புக் கோரினார். சக்ராயுதத்திடமிருந்து தம்மைக் காக்குமாறு வேண்டினார். உடனே அம்பரீஷர், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைப் போற்றித் துதி செய்தார். துர்வாஸரை விட்டு விடக் கோரி வேண்டினார். அவரது பக்திக்கு மனமிரங்கி, சக்கரத்தாழ்வாரும் சாந்தமடைந்தார்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம், துர்வாஸர் திரும்ப வருவதை எதிர்பார்த்து உணவு உண்ணாமல் காத்திருந்தார் அம்பரீஷர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. மிகச் சிறந்த பொறுமைசாலியான அம்பரீஷரை மெச்சி, துர்வாஸ மஹரிஷி, அவருக்கு எல்லா விதமான ஆசிகளையும் அளித்தார். பின் அன்புடன் அம்பரீஷர் அளித்த உணவை உண்டு, அவரிடமிருந்து விடைபெற்று, ஆகாய மார்க்கமாக பிரம்ம லோகத்தை அடைந்தார்.
துர்வாச மஹரிஷி, சாக்ஷாத் பரமேஸ்வரனின் அம்சமாகவே கருதப்படுபவர். அவர் இவ்விதமெல்லாம் நடந்து கொள்வாரா என்றால், அதற்கான பதில், பக்தர்களின் மேன்மையை உணர்த்த, பெரியோர்கள் எவ்விதப் பழியையும் ஏற்பார்கள் என்பதே. ரிஷிகள், மான அவமானம் என்னும் இருமையைக் கடந்தவர்கள். உலகத்தவர்களின் புகழ்ச்சியோ, பழிச் சொல்லோ அவர்களை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. காம, க்ரோத, லோபம் என்னும் முக்குற்றங்களையும் வென்றவர்கள் அவர்கள். வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட கோபத்துடன், அம்பரீஷனின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவே, துர்வாசர் இந்த நாடகத்தை நடத்தி, பழியையும் ஏற்றார். தாம் வந்த வேலை முடிந்தவுடன், உத்தம குணமுடையவர்கள் நிறைந்த பிரம்ம லோகத்தை அடைந்தார்.
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம். (திருமங்கையாழ்வார்).
என்பதை, முற்றிலும் உணர்ந்தவரான அம்பரீஷர், முன்பிருந்ததை விட அதிகமாக பகவானிடத்தில் பக்தி செலுத்தலானார். நாளடைவில், தம் மக்களிடம் அரசை ஒப்புவித்து விட்டு, இகலோக பந்தங்களிலிருந்து விடுபட்டு, பகவான் ஸ்ரீவாசுதேவனிடம் மனதை நிலைநிறுத்தி, மேலான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்தார்.
108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான, திருவித்துவக்கோடு என்னும் திருத்தலமே, அம்பரீஷர் முக்தி அடைந்த திருத்தலம் என்பது புராணம். இந்த அம்பரீஷ சரிதத்தைப் படிப்பவருக்கும் தியானிப்பவருக்கும் பகவான் மேல் அசையாத பக்தி உண்டாகும். குறிப்பாக, ஏகாதசி, துவாதசி தினங்களில், இந்த சரிதத்தைப் படிப்பதும் கேட்பதும் நன்மைகள் பல தரும்.
(தொடர்ந்து தியானிக்கலாம்).
(அடுத்த பகுதி... எத்தனை சொன்னாலும், எவ்வளவு கேட்டாலும், உத்தமர் உள்ளம் உருகியே கரையும். நற்றவர் மனத்துளன், பெற்ற தாயினும் பெரியவன், உற்றவன் அவன் ஒருவனே என்று போற்றுவர் பெரியோர். இக்கரை வந்தாலும் அக்கறை கொண்டு, அக்கரை ஏற்றிடும் திருநாமமுடையவன். பிறந்த பிறவிப் பயன், அவன் உறவே உறவெனும் உணர்வடைவதே என முக்தர்களும் பக்தர்களும் அல்லும் பகலும் போற்றித் துதித்திடும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஸ்ரீதிவ்ய சரிதம்).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..
இது, தமிழ் வாசல் குழுமத்திலும், அதீதம் மின்னிதழிலும் தொடராக வெளிவருகிறது!!!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..