நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 14 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU..PART 26..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.26. அன்னையைக் கண்டான்!..அக மகிழ்ந்தானே!!.

Related image

ஹனுமாரால் ஸ்ரீராமருக்கு, சுக்ரீவனுடன் தோழமை ஏற்பட்டது. துந்துபி என்ற அரக்கனின் மலை போன்ற எலும்புக் கூட்டை, தம் கால் கட்டை விரலால் உந்தி எறிந்தும், ஒரே பாணத்தால் ஏழு ஆச்சா மரங்களைத் துளைத்தும், ஸ்ரீராமர், சுக்ரீவனுக்கு தம் பலத்தின் மேலிருந்த ஐயத்தைப் போக்கினார். அவன் தமையனான வாலியை, மறைவாக இருந்து கொன்று விட்டு, சீதையின் பிரிவாற்றாமையால் வருத்தமுற்ற ஸ்ரீராமர், மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் மழைக் காலத்தைக் கழித்தார்.

அதன் பிறகு, லக்ஷ்மணர் கூறிய வார்த்தையைக் கேட்டு அஞ்சி, ஸ்ரீராமரிடம் வந்த சுக்ரீவனால் அனைத்துத் திக்குகளிலும் சீதா தேவியைத் தேடுவதற்காக அணிவகுத்து வந்த வானர சேனையைப் பார்த்து மகிழ்வுற்ற ஸ்ரீராமர், வாயு புத்திரனிடம் தூதுச் செய்தியைச் சொல்லி, தம் கணையாழியையும் அளித்தார்.

வானரர்கள் மிகவும் முயற்சி செய்து, ஒவ்வொரு பகுதியிலும் ஸ்ரீராம பத்தினியைத் தேடலானார்கள்.

ஸ்ரீராம சரிதத்தைக் கேட்ட ஸம்பாதி என்ற கழுகரசன், (எரிந்து போயிருந்த) தன் சிறகுகள் முளைக்கப் பெற்றான். ஸம்பாதி கூறியதைக் கேட்ட ஹனுமார், கடலைத் தாண்டி, கடல் நடுவிலிருந்த நகரில் சீதையைக் கண்டு, கணையாழியை அளித்தார். ( சீதை இருந்த) அசோகவனைத்தை அழித்து, (அதனை அடுத்து நடந்த) போரில், ( ராவணனின் புதல்வனான) அக்ஷய குமாரனைக் கொன்று, (இந்திரஜித்தின்) பிரம்மாஸ்திரக் கட்டைப் பொறுத்து, ராவணனைச் சந்தித்து, லங்கையை எரித்து, சீக்கிரமே திரும்பி வந்து ஸ்ரீராமரிடம் சூடாமணியைக் கொடுத்தார்.

( த்வத்³வார்தாகர்ணனோத்³யத்³க³ருது³ருஜவஸம்பாதி, ஸம்பாதி வாக்ய
ப்ரோத்தீர்ணார்ணோதி⁴ரந்தர் ந‌க³ரி ஜனகஜாம்ʼ வீக்ஷ்ய த³த்த்வா(அ)ங்கு³லீயம் | 
ப்ரக்ஷுத்³யோத்³யான - மக்ஷக்ஷபணசணரண​: ஸோட⁴ப³ந்தோ⁴ த³ஸா²ஸ்யம்ʼ
த்³ருʼஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம்ʼ ஜ²டிதி ஸ ஹனுமான் மௌலிரத்னம்ʼ த³தௌ³ தே || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).

(இந்த ஸ்லோகம், சுந்தர காண்டம் முழுவதையும் ஒருங்கே தருகிறது. அதனால், இது, நாராயணீயத்தின் 'ஏக ஸ்லோகீ சுந்தரகாண்டம்' என்று போற்றப்படுகிறது. இதைப் பாராயணம் செய்ய, சுந்தர காண்டம் பாராயணம் செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை ).

( மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே(குலசேகராழ்வார்) ).

ஸ்ரீராமர், சுக்ரீவன், அங்கதன் முதலியவர்களுடன் கூடிய பிரம்மாண்டமான வானர சைன்யத்துடன், சமுத்திரக் கரையை வந்தடைந்தார். அரக்க மன்னுடைய தம்பி (விபீஷணன்) ஸ்ரீராமரைச் சரணடைந்து கூறிய ரகசியமான சத்ரு விருத்தாந்தத்தைக் கேட்டார். சமுத்திர ராஜனிடம் கடலைக் கடக்க வேண்டுகோள் வைத்து, அது பலிக்காததால், கோபமடைந்து அக்னி அஸ்திரத்தை ஏவ முற்பட்டார். அது கண்டு அஞ்சிய சமுத்திர ராஜன், பின் கூறிய மொழிகளால், சமுத்திரத்தின் நடுவில் வழியை அடைந்தவரானார்.

(தொடர்ந்து தியானிப்போம்).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!.

2 கருத்துகள்:

 1. கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் தினமும் சொல்லி வந்தால், முழு இராமாயண பாராயணமும் செய்த பலன் உண்டாம்.

  ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
  சிவதனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்தகரம்
  அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்ஸனகரம்
  ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம்
  வானர சைன்ய சேவிதம்
  சர்வ மங்கல கார்யானுகூலம்
  சததம் ஸ்ரீ ராமசந்திர பாலயமாம்
  ஸ்ரீராம் ஜயராம் ஜெயஸ்ரீ ராம் !


  [ இதனைச் சொல்லியுள்ளது ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் ]

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..