நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 24...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.24.. வனமேகினார் அண்ணல்!..!.

Related image

ஸ்ரீராம சீதா கல்யாண மஹோத்சவம் நிறைவடைந்ததும், அங்கிருந்து அயோத்திக்குப் புறப்பட்ட ஸ்ரீராமரை, பரசுராமர் வழிமறித்தார்.   பின், தம் பலத்தை ஸ்ரீராமரிடம் அர்ப்பணம் செய்து விட்டுச் சென்றார். ஸ்ரீராமர், சீதையுடனும், தன் தந்தை, சகோதரர்கள், பரிவாரங்களுடனும் அயோத்தியை அடைந்தார்!!!.. அழகே உருவெடுத்த ஸ்ரீராமர், அங்கு, தன் மனங்கவர்ந்த மனையாளுடன் இன்புற்று வாழ்ந்து வந்தார். ஒரு சமயம், பரதன், சத்ருக்னனுடன் தன் மாமன் இல்லத்திற்குச் சென்ற வேளையில், தசரதரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீராம பட்டாபிஷேகம், கேகய மன்னனின் புதல்வியால் தடுக்கப்பட்டு நின்று விட்டது!!!!!..

தந்தையின் சொற்படி, தம்பியுடனும், மனைவியுடனும், கரத்தில் வில்லேந்தி வனம் புறப்பட்ட அண்ணல், தன் கூட வந்த நகர மாந்தர்களை திரும்பிப் போகுமாறு செய்து விட்டு, குகனுடைய இடத்தை அடைந்தார்!!!.. ஜடாமுடி, மரவுரி தரித்த கோலத்துடன் அண்ணல் படகில் ஏறி, கங்கையைக் கடந்து சென்று, பரத்வாஜ முனிவரை  வணங்கி , அவருடைய சொற்படி சித்ரகூடத்திற்குச் சென்று, அங்கு இன்பமாக வசிக்கலானார்.

( தாதோக்த்யா யாதுகாமோ வனமனுஜவதூ⁴ஸம்ʼயுதஸ்²சாபதா⁴ர​:
பௌரானாருத்⁴த‌ய மார்கே³ கு³ஹனிலயக³தஸ்த்வம்ʼ ஜடாசீரதா⁴ரீ | 
நாவா ஸந்தீர்ய க³ங்கா³மதி⁴பத³வி புனஸ்த்வம்ʼ ப⁴ரத்³வாஜமாரான்
நத்வா தத்³வாக்ய ஹேதோரதிஸுக²மவஸஸ்²சித்ரகூடே கி³ரீந்த்³ரே || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

Related imageதன் தந்தை, புத்திர சோகத்தினால் ஸ்வர்க்கமடைந்ததை பரதன் வாயிலாகத் தெரிந்து கொண்டு, தந்தையின் பிரிவால் தவித்து, அவருக்குத் தர்ப்பணம் முதலானவைகளைச் செய்து, பரதனிடம் தன் பாதுகைகளையும் ராஜ்யத்தையும் ஒப்புவித்தார். 

( தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.(குலசேகராழ்வார்)).

அதன் பின், மேலும் வனத்தினுள்ளே சென்று, அத்ரி முனிவரை வணங்கி விட்டு,  தண்டகாரண்யம் புகுந்தார். பயங்கரமான சரீரம் படைந்த விராதன் வதம் செய்யப்பட்டான். சரபங்க முனிவருக்கு உரியதான மோக்ஷம், அண்ணலால் அருளப்பட்டது!!..

இவ்விதம், வெகு வேகமாக, நிகழ்வுகளை நகர்த்திச் செல்கிறார் ஸ்ரீபட்டத்திரி!!.. ஆயினும் எந்த ஒரு முக்கியக் கட்டமும் விடுபடவில்லை.. ஆங்காங்கே தென்படும் அழகான, நுணுக்கமான வர்ணனைகள், பாராயணத்தின் போது, மெய்மறக்கச் செய்கின்றன!!. உதாரணமாக, அழகே உருவெடுத்த ஸ்ரீராமர், மனங்கவர்ந்த தன் மனையாளுடன் இன்புற்று வாழ்ந்தார் (காந்தயா காந்தமூர்த்தே!) எனச் சொல்வது. இவ்வரியிலேயே சீதாதேவியின் அழகும் புலப்பட்டு விடுகிறது!!..அது போல், ' சரபங்க முனிவருக்கு உரியதான மோக்ஷம்' என்னும் இடத்தில், சரபங்க முனிவருடைய தபோ பலத்தின் உன்னதம் புரிகிறது!!.

தம் அவதார நோக்கத்தை  நிறைவு செய்வதற்காக அண்ணல் வனம் நோக்கி அடியெடுத்து வைக்கிறார். வனமங்கும் தம் திருவடிகள் நோக, உலாவி, ரிஷிகளை தரிசிக்கும் நோக்கில், அவர்களுக்கு தம் தரிசன பாக்கியத்தை அருளுகிறார்.  அதே சமயத்தில், ஸ்ரீராமர் ஆசிரம வாசல் வழியே வந்தும், வினைப் பயனால் அவரது தரிசன பாக்கியத்தைத் தவற விட்டு, சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த மாண்டகர்னி முனிவர் குறித்த செய்திகளும், வால்மீகி இராமாயணத்தில் நமக்குக் கிடைக்கின்றன. விதி வழி மதி செல்லும்!..

அடுத்த பகுதியில், அண்ணல் பஞ்சவடி அடைதலும், சூர்ப்பனகை சூழ்ச்சியால், ராவணன் சீதையை சிறையெடுத்தலும்!!..

ஸ்ரீராம ஜெய ராம!!..

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..