பால கோபாலன், இப்போது ஓடியாடி விளையாடி மகிழும் பருவத்தை அடைந்து விட்டான்!.. ஆனால் குறும்போ.. அப்பப்பா!.. என்னவென்று சொல்வது?!.. ஒரு நாள், தன்னுடன் விளையாடும் சிறுவர்களுடன் பழங்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்கள் சேர்த்து வைத்திருந்த பழங்களை, அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டான் கோவிந்தன்.. அவன் நாமம் சொன்னவர்களின் 'பழ' வினைகளை, அவர்களுக்குத் தெரியாமலே எடுத்துக் கொண்டு, ' முக்திப் பழ'த்தை அவர்களுக்கு அளித்து சந்தோஷிக்கும் எம்பெருமான்,என்ன காரணத்தாலோ இந்த லீலை செய்தான்!!.. அவனுக்குத் தெரியாதோ என்ன நடக்கப் போகிறதென்று.. அவன் திட்டம் செய்ததே நடந்தது!..
சிறுவர்கள், யசோதையிடம் சென்று, ' கண்ணன் மண் தின்றான்' என்று கோள் சொன்னார்கள்.
ஐம்பூதங்களையும்
பிரளய காலத்தில் உண்டு விழுங்கும் பிரான், மண்ணைத் தின்றதால் நோய்க்கு
ஆட்படுவான் என்றெண்ணினாள் கண்ணனிடம் சொல்லொணா பாசம் வைத்திருந்த யசோதா
தேவி!!..அந்த அளவற்ற பாசமே கோபமாக மூண்டது!...கண்ணனை
அதட்டினாள்....'அடங்காதவனே!.. உண்மையைச் சொல்!.. உன்னால் மண்
தின்னப்பட்டதா?' என்று எம்பெருமானை மிரட்டிக் கேட்டாள்...என்ன தவம்
செய்தாள் யசோதா!!...
இதைக்
கேட்டு, குட்டிக் கண்ணன் கொஞ்சமும் அசரவில்லை...சிரித்துத்
தீர்த்தான்!..பின்,' மண்ணைத் தின்னவில்லை!' என்று யசோதையிடம் சத்தியமும்
செய்தான்!..
கோகுலத்தில்,
கோப கோபியராக அவதரித்திருந்தவர் அனைவரும் முற்பிறவியில் பெரும்
தபஸ்விகளாக, ரிஷிகளாக இருந்தவர்கள். ராமாவதார காலத்தில், அண்ணல் அடவியில்
ஆசிரமம் ஆசிரமமாகச் சென்று, அங்கிருந்த தபஸ்வியரையெல்லாம் கண்டு வணங்கி,
தம் தரிசன பாக்கியத்தைக் கொடுத்தருளினார். பெரும் ரிஷிகளின் ஆசிரமங்களை
அண்ணல் தரிசித்த போது, ரிஷிகளுடனிருந்த எண்ணற்ற முனிவர்கள், ஸ்ரீராமரே
பரம் பொருள் என்பதை உணர்ந்திருந்தனர். ஆதலால், அவர்கள் மனங்களில், ' தரிசன
பாக்கியம் மட்டும் தானே பெற்றோம். அண்ணலால் அரவணைக்கப் பட்டு, மகிழும் பேறு
பெறவில்லையே...' என்ற ஏக்கம் தோன்றியதாம். அதைத் தீர்க்கும் பொருட்டே,
கிருஷ்ணாவதார காலத்தில், அவர்களை கோப கோபியராக அவதரிக்கச் செய்து, தன்னை தூக்கிச் சீராட்டி, கொஞ்சி மகிழும் பாக்கியத்தை அளித்தாராம் பகவான்.
'
அத்தகைய பெரும் தபஸ்விகள் நடமாடிய இடத்தில் இருப்பது எப்படி 'மண்'
ஆகும்?... அவர்களின் பாத தூளியான 'ம்ருத்திகை' அல்லவா அது? ' என்பர்
பெரியோர்!. ஆகையால் கண்ணன் சொன்னது பொய்யில்லை.. உண்மையே என்பர்.
'அனைவரும்
சொல்லும் போது, நீ மட்டும் ஒப்புக் கொள்ள மறுக்கிறாயா... வாயைத் திற!'
என்று அதட்டினாள் யசோதை.. உடனே குழந்தை உருவில் இருந்த பெரு வடிவு, தன்னை
யாரென்று வாயினுள் அடையாளம் காட்டத் திருவுளம் கொண்டது. தாமரை போன்று
மலர்ந்த தன் திருவாயைத் திறந்தருளினான் கோபாலன்!!...
ஆஹா!..
என்ன ஆச்சரியம்!.. அயர்ந்தே போனாள் யசோதை!!...வாயினுள் மண் மட்டுமா
இருந்தது?!.. விண்ணும், மண்ணும், மற்றுமுள்ள எல்லா உலகங்களும் அல்லவா ஒரு
சேரக் காட்சியளித்தது?!. ஒரு இடத்தில் காடு, ஒரு இடத்தில் கடல், ஒரு
இடத்தில் ஆகாயம், ஒரு இடத்தில், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என்று,
திருவின் மணாளனின் திவ்ய வாயில் என்னதான் காணப்படவில்லை?!
( குஹசித்³வநமம்பு³தி⁴: க்வசித் க்வ-
சித³ப்⁴ரம்ʼ குஹசித்³ரஸாதலம் |
மனுஜா த³னுஜா: க்வசித்ஸுரா :
த³த்³ருʼஸே² கிம்ʼ ந ததா³ த்வதா³நநே || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
யசோதை,
புவனங்களை மட்டுமல்ல, புவனங்களின் நாயகனான எம்பெருமானை, பாற்கடலில்
வீற்றிருப்பவராகவும், பரமபத நாதனாகவும், தன் முன்னே குழந்தை வடிவினனாகவும்,
இப்படி பல விதமாகவும் தரிசிக்கும் பேறு பெற்றாள்!.
( வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே. ( பெரியாழ்வார்) )..
இதில்
பெருவியப்பு என்னவென்றால், குழந்தையின் வாயினுள் அனைத்துலகங்களை
மட்டுமல்லாது, அதனுள்ளும் இன்னொரு குட்டிக் கண்ணனின் திருமுகமும் வாயும்
அதனுள் பிரகாசிக்கும் உலகங்களும், அவற்றினுள்ளும் ஒரு திருமுகமும் வாயும்
இப்படி பிரபஞ்சத்தின் முடிவற்ற தன்மையைக் கண்ணனால் காட்டப் பெற்றாள்
யசோதை!..
இதனால்
வியப்புத் தாளாமல், பிரமித்த யசோதை, சிறிது தத்துவ ஞானத்தை அடைந்த பொழுது,
லீலா விநோதனான எம்பெருமான் தன் லீலையை நிறுத்தி, தாயின் மடி மேல் ஏறிக்
கொண்டு, 'அம்மா,
பால் கொடு' என்றான்!.. கண நேரத்தில் அனைத்தையும் மறந்து, புத்திர
வாஞ்சையால் கட்டப் பட்டு, உலகியலுக்குத் திரும்பினாள் யசோதை!..லீலைகள் தொடர
வேண்டுமல்லவா?!!..
கண்ணனின்
திருவாயில், யசோதை ஏழுலகங்களையும் பார்ப்பது இது முதல் முறையல்ல என்கிறார்
பட்டத்திரி!.. குட்டிக் க்ருஷ்ணன், தாயின் மடியில் பாலருந்தி விட்டு,
துயில் மிகுந்து, கொட்டாவி விடும் சமயத்தில், அவனது திறந்த வாயில்
அனைத்துலகங்களையும் கண்டாள் யசோதை என்கிறார்.
இதையே
பெரியாழ்வாரும் சாதிக்கிறார்..ஆனால் வேறு விதமாக!...சின்னக் கண்ணனுக்கு
மங்கள நீராட்டி, அவன் சிறு நாக்கை வழித்து, சுத்தம் செய்வதற்காக வாயைத்
திறந்த போது, அவன் சிறு வாயில் அனைத்துலகங்களையும் தரிசிக்கும் பேறு
பெற்றாள் என்கிறார்!..
( கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே) .
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படத்துக்கு நன்றி!. கூகுள் படங்கள்
இது அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படத்துக்கு நன்றி!. கூகுள் படங்கள்
இது அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..