நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI... SONG 2..திருவெம்பாவை!!.. பாடல்..2 ....பாசம் பரஞ்சோதிக்கென்பாய்!!


பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், தோழியர், தம் தோழி ஒருத்தியை, துயில் நீங்கி எழுமாறு அழைத்தலும், அதற்கு, எழுப்பப்பட்டவளின் மறுமொழியும் அமைந்துள்ளன.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்

'சீரான, நேர்த்தியான ஆபரணங்களை அணிந்த பெண்ணே, நாம் இரவும் பகலும் பேசிக் கொண்டிருக்கும் போது, 'என் பாசம் எல்லாம் அந்த சோதி வடிவான இறைவனுக்கே!' என்பாய். ஆனால் அதை ஏன் இப்போது அருமையான பஞ்சணையின் மேல் வைத்தாய்?!!' என்று தோழியர் கேட்க, 

நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ

அதற்கு, எழுப்பப்பட்ட பெண், 'சீசீ, நீங்கள் கேலியாகப் பேசும் மொழிகளில் இவையும் சில என்று கருதத் தகுமோ?!! என்னோடு விளையாடுவதைப் போல் என்னை ஏசும் இடம் இதுவோ?' என்று பதிலுரைத்தாள்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

இதற்கு எழுப்பியவர்கள், 'சிவனாரின் பொற்பாதங்களைத் தொழுவதற்கு தேவர்கள் விரும்புகிறார்கள்.ஆயினும், அதைத் தொழுவதற்கேற்ற தம் தகுதி பற்றி ஐயம் கொண்டு நாணுகிறார்கள். அத்தகைய மலர்ப்பாதங்களை, நாம் தொழுவதற்காக, தந்தருள எழுந்தருளும் ஒளி வடிவினன், சிவ லோகத்தை உடையவன்,, தில்லைச் சிற்றம்பலமாகிய சிதம்பரத்துள்ளிருக்கும் ஈசனுக்கு அன்பர்களாகிய நாங்கள் யார்?, உனக்கு அயலார் அல்ல என்று தெரிந்து தெளிவாயாக' என்று பதில் கூறினார்கள்.

இந்த இரண்டாவது பாடலில், முழுமுதற்கடவுளான இறைவனின் அருவுருத் தன்மையும், பிரபஞ்ச இயக்கத்தை அவர் நடத்துதலும் சூட்சுமமாகக் கூறப்படுகின்றது.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்== முதற் பாடலில், 'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி' என்றவர், இப்போது 'பரஞ்சோதி' என்று சிவப் பரம்பொருளைக் குறிக்கிறார். இதே பாடலில், 'தேசன்' என்ற சொல்லால், ஒளி வடிவினன் என்பதாக இறைவனைக் குறிக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

'சோதி' என்கின்ற சொல், மிகுந்த பொருளாழம் உடையது.

'அலகில் சோதியன்'  என்றும்

சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
ஆதி மாலயன் காணா வளவின. என்றும் சேக்கிழார் பெருமானும்,

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. (திருமந்திரம் – 131)

என்று திருமூலரும்  போற்றிப் பரவுகிறார்கள்.

சோதி என்பது இவ்விடம், ஞான ஒளியைக் குறிக்கும். இறைவன் எல்லாம் கடந்து நிற்கும் பரஞ்சோதியானவன் என்பது கருத்து.

சோதி என்பது, இறைவனின் அருவுருவத் தன்மையை சூக்குமமாகக் குறிக்கிறது. அதாவது அருவம்= உருவமில்லா, உருவம்= உருவோடு கூடிய, ஆகிய இவ்விரண்டு தன்மைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது இறைவனாரின் சோதிப் பிழம்பான உருவம். லிங்கத் திருமேனியும் அவ்வாறே. இவ்வுரு குறிப்பது, சுத்த மாயையில் நிகழும் படைப்புத் தொழிலை.

உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த  
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது  
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங்  
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.  - சிவஞானசித்தியார்

நேர் இழையாய் என்பதை, சிறந்த நேர்த்தியான ஆபரணங்கள் என்று மட்டுமல்லாது, ஒரு ஆன்மாவிற்குச் சிறந்த ஆபரணங்களாய் அமையும் நேர்மை முதலான குணங்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் என்றது, தேவர்கள் ஏதேனும் காரணம் பற்றியே இறைவனைத் தொழுவார்கள் என்பதை உணர்த்துவதற்காக. எவ்வித ஆசைகளும் இன்றி, இறைவனை மட்டுமே வேண்டித் தொழும் மானிடர்களுக்கு அவன் எளியவன்.

தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் =====,பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலமும், பரந்த ஞானப் பெருவெளியைக் குறிப்பதாகிய சிதம்பரத்துள் இருக்கும் ஈசன் என்று இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். பிரபஞ்ச இயக்கத்தைக் குறிப்பதே நடராஜர் தத்துவம். 'தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்' என்று   இறைவனைக் குறிப்பதும் இதன் காரணம் பற்றியே.

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.===
இறைவனுக்கு அடியாராகிய நாம் ஒருவரை ஒருவர் எள்ளி நகையாட மாட்டோம் என்பதை உணர்ந்து, எழுந்து வருவாயாக என்பது கருத்து.  சில நேரம், ஆன்மீக உயர்நிலையை அடைந்தோர் பரிபக்குவமில்லாத ஆன்மாக்களை  இடித்துரைத்தல், அவர்களை உயர் நெறியில் திருப்பும் பொருட்டேயாம். அதனைப் பெரிதாக எண்ணலாகாது என்பது உட்கருத்து.

மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!..

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..