நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.....SONG # 8. ..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 8.


திருச்சிற்றம்பலம்:

பாடல்:

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலில் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை  வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

இந்தப் பாடலில், 'ஞாலம் மிக' என்பதை முதலாவதாகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. 

'உலகம் உய்யும்படியாக, உயர்ந்த கயிலை மலைச் சிகரத்தினின்று, நிலவுலகில் இறங்கி  வந்து, 'வந்தி' தந்த பிட்டினை, அமுதாக உண்டும், வலைஞனாக, கடலில் கட்டுமரத்தின் மீது ஏறி மீன் பிடித்தும், குதிரைகளின் மீதேறி பரிமேலழகனாக வந்தும் நமையாண்ட இறைவன்,


நல்லொழுக்கம்   விளங்குகின்ற‌ திருவுத்தரகோசமங்கைத் தலத்தில் எழுந்தருளியுள்ளான். திருமாலும் காணுதற்கரியவனான அந்த எம்பிரானை, நாம் வாயாரப் பாடி, உடல் பூரித்து, பக்தி மேலீட்டால் மனங்குழைந்து  பொன்னூஞ்சல் ஆடுவோம்!'

சற்றே விரிவாக:

'கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு ..........................'

உயர்ந்த கயிலை மலை உச்சியிலிருந்து, நிலவுலகில் இறங்கி வந்து, வந்தியின் கூலியாளாய், அவள் தந்த பிட்டினை அமுதென உகந்து உண்ட இறைவனின் பெருங்கருணையை வியந்து போற்றுகிறார் வாதவூரார்......'குடுமி' என்பது உச்சி எனப் பொருள்படும் இங்கு. இறைவனது இந்தத் திருவிளையாடலை, 

திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு 
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் 
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட 
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ (திருப்பூவல்லி)

என்றும் பாடியருளுகின்றார் வாதவூரார். திருவிளையாடற் புராணம், இந்தத் திருவிளையாடலை, மிக அழகாக எடுத்தியம்புகிறது.

பிட்டு இடுவேன் உனக்கு என்றாள் அதற்கு இசைந்து  
                                   பெரும் பசியால்  
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த  
                                   எலாம்  
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்  
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார்.  

தெள்ளி அடு சிற்றுண்டி சிக்கடைந்த பொதி நீக்கி  
அள்ளி எடுத்து அருந்தப்பா என்று இட்டாள் அரைக்கு  
                                   அசைத்த  
புள்ளி உடைத் துகில் நீத்தார் புறத்தானை விரித்து ஏந்தி  
ஒள்ளியது என்று அவன் அன்பும் உடன் கூட்டி  அமுது  
                                   செய்வார்.  

'தாழ்கடலில் மீதெழுந்து'‍‍....

'வலை வீசின படலம்' இங்கு உரைக்கப் பெற்றது.. சுறாவிடமிருந்து பரதவர் குலத்தைக் காக்கும் பொருட்டு, இறைவன், மீனவனாக வடிவம் தாங்கிய விளையாடலைப் புகழ்கிறார் வாதவூரார். இறைவனின் எளிவந்த தன்மை இங்கு புலப்படுத்தப்பட்டது.. இறைவன், வலைஞனாக வடிவு கொண்டது,  திருவிளையாடற்புராணத்தில் பின்வருமாறு உரைக்கப்படுகின்றது.

 கருகிருள் முகந்தால் அன்ன கச்சினன் கச்சோடு ஆர்த்த 
சுரிகையன் தோள்மேல் இட்ட துகிலின் குஞ்சி சூட்டும் 
முருகு கொப்பளிக்கும் நெய்தல் கண்ணியன் மூத்த 
                                     வானோர் 
இருவரும் மறையும் தேடி இளைப்ப ஓர் வலைஞன் 
                                     ஆனான்.

"பரிமேற் கொண்டு நமையாண்டான்".. 

வாதவூராருக்காக, இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல் இங்கு உரைக்கப்படுகின்றது.. இறைவன், அவ்விதம் செய்ததோடு அல்லாமல், வேதத்தையே ஒரு குதிரையாக்கி, அதன் மேல், 'பரிமேலழகனாய்', குதிரை வாணிகனாக ஆரோகணித்து வந்தான்.. அவ்வாறு வந்த அண்ணலின் அழகைக் கண்ட பெண்கள், கீழ்வருமாறு கூறி நெட்டுயிர்த்தனர்..

காமன் இவனே கொல் அறு கல் உழு கடப்பந்  
தாமன் இவனே கொல் பொரு தாரகனை வென்றோன்  
மாமன் இவனே கொல் மலை வன் சிறகு அரிந்த  
நாமன் இவனே கொல் என நாரியர் அயிர்த்தார். (திருவிளையாடற் புராணம்).

'ஞால மிக'...இதற்கு இருவிதமாகப் பொருள் உரைக்கின்றனர். 'உலகம் உய்யும்படியாக' என்பது ஒரு பொருள். 'அனைத்துலகங்களிலும் மண்ணுலகமே மேலானது' என்பது மற்றொரு பொருள். முக்தியடையும் பொருட்டு, தேவர்களும் மனிதப் பிறவியையே வேண்டுகிறார்கள்.. 'ஆகவே மண்ணுலகமே சிறந்தது.   சிறந்த மண்ணுலகில்,  இறைவன், நம்பால் கருணை கொண்டு ஆட்கொண்டருளுகின்றான் என்கிறார் வாதவூரார்.

'சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை  வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ......'

இறைவன் திருமாலும் காணுதற்கு அரியவன்.. ஆயினும், நல்லொழுக்கம் விளங்குகின்ற திருவுத்தரகோசமங்கையுள், நம் பொருட்டு எழுந்தருளியிருக்கிறான். இவ்வாறு உரைப்பதன்  மூலம், இறைவன், நல்லொழுக்கம் நிறைந்தவர் இருக்குமிடத்து இருக்கிறான் என்னும் உண்மையை தெளிவுபடுத்தினார்.  

'மாலுக்கரியானை' என்றது, இறைவனின் காணுதற்கு அரிய தன்மையையும், இறைவன், உயர்வற உயர்ந்தவன் என்பதையும் எடுத்துரைக்க. இறைவன், கருணை மேலீட்டால், தன் உயர்ந்த தன்மையையும் விடுத்து,  கூலியாளாகவும், வலைஞனாகவும், குதிரை வாணிகனாயும் அடியாருக்காக வந்தருளிய எளிமையைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்..

இங்கு 'பூரித்து' என்பது 'பூலித்து' எனத் திரிந்தது. இறைவனது கருணையை வாயாரப் போற்றிப் பாடி, இறைவனது பெருமையை எண்ணி உடல் பூரித்து, பக்தி மேலீட்டால் மனங்குழைந்திருக்க, இறைவனது அருள் கிட்டும்.. உயிர், அருட்சுத்தி அடையும்.. இதுவே இறைவனது திருவிளையாடல்களைப் போற்றிப் பாடுவதால் கிடைக்கும் பேறு!..

அத்தகைய பெரும் பேறை அடையும் பொருட்டு, 'இறைவனது திருவிளையாடல்களைப் பாடி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோமாக' என்று ஊஞ்சலாடும் மகளிர் பாடுவதாக உரைக்கிறார். நாமும் இறைவனது  திருவிளையாடல்களைப் போற்றிப் பாடி அருள் பெறுவோம்!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..