நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

SUKRAVARA LAKSHMI PUJA/ SHAAKA VIRATHAM...சுக்ரவார லக்ஷ்மி பூஜை/ ஷாக விரதம்!!.....

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!

திருமகளின் அருள் நாடி, பற்பல விரதங்களையும் பூஜைகளையும் நாம் செய்கிறோம்!.. பொருட்செல்வம் மட்டுமின்றி, வாழ்வில் நாம் விரும்பும் அனைத்து விதமான நற்பேறுகளையும் ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதிப்பதால் நாம் பெறலாம்.

தூயது அனைத்திலும் தேவியைக் காண்பது நமது மரபு... குத்து விளக்கின்  முத்துச் சுடரில், தூய ஆடைகளில், மணம் வீசும் மலர்களில், சுத்தமான இருப்பிடங்களில் எல்லாம் ஸ்ரீதேவி வாசம் செய்கிறாள்.. நல்லனவற்றையே விரும்பி, பேசி, செய்பவர்கள் உள்ளங்களிலெல்லாம் உறைகிறாள்..

தம் இல்லம் செழிக்க விரும்புவோர் தேவியைத் துதித்து பலன் பெறுகிறார்கள்.. தினமும் பூஜை செய்ய இயலாதவர்கள் கூட, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் துதித்து, பலன் பெறுகிறார்கள்..விரத காலங்களிலும், முக்கிய பண்டிகை தினங்களிலும் ஸ்ரீலக்ஷ்மி பூஜை, விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது..

கஜகரி லக்ஷ்மி விரதம், வரலக்ஷ்மி விரதம், குருவார லக்ஷ்மி விரதம் போன்ற பல விரதங்களை ஸ்ரீலக்ஷ்மி தேவையைக் குறித்து நாம் அனுஷ்டிக்கிறோம்.

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி, இது ஆஷாட(ஆடி) மாதம்..நம் நாட்டின் பெரும்பாலான பண்டிகைகள், இந்தப் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்!.. 

இந்த சுக்ர(வெள்ளி)வார விரதமும் இதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றது..

இந்த விரதம், மொத்தம் நான்கு வாரங்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும்.. இந்த வருடம் (2014), விரத தினங்கள் ஜூலை4, ஜூலை 11, ஜூலை 18, ஜூலை 25 ஆகியவை. இது பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் அனுசரிக்கப்படுகின்றது.. இந்த விரதத்தை ஷாக விரதம் என்றும் அழைக்கிறார்கள்.

இந்த விரதத்தை இருவிதமாக அனுஷ்டிக்கிறார்கள்.. வெள்ளிகிழமைகள் மட்டும் செய்வது ஒரு முறை..எதிர்வரும் தசமி திதி,(ஜூலை 7) துவங்கி, அடுத்த வளர் பிறை தசமி வரை(ஆகஸ்ட் 8, வரலக்ஷ்மி விரத தினம்) தினமும் அனுஷ்டிப்பது மற்றொரு முறை.. சிலர், இந்த வளர்பிறை தசமி தினங்களுக்கு இடைப்பட்ட வெள்ளிகிழமைகளில் மட்டும் அனுசரிக்கிறார்கள்.

குடும்பநலம் மற்றும் குடும்பத்தினர் நலம் வேண்டி இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆகவே இதை பெண்களே அனுஷ்டிக்கிறார்கள்.

விரத விதிமுறை:

இந்த விரதத்திற்கென்று கடும் நியமங்கள் இல்லை.. பூஜை நிறைவுறும் வரை உபவாசம் இருந்தால் போதுமானது.. அன்று முழுவதும் சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

சிலர் விரத காலம் முழுவதும் தானிய வகைகள், பருப்பு வகைகள், பால் தயிர் முதலியவற்றையே உண்கிறார்கள்.. செடி, கொடி வகைகளிலிருந்து பெறப்படும் காய் கனிகள், கீரை வகைகள் உண்பதைத் தவிர்க்கிறார்கள்.

பூஜிக்கும் முறை:

அதிகாலையில் எழுந்து நீராடி, அம்பிகையின் திருமுன் அமர்ந்து, பூஜை நல்லமுறையில் நிறைவடைய வேண்டி, பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.

 பூஜை செய்யும் இடமும் பூஜைப் பொருட்களும் சுத்தமாக இருத்தல் அவசியம். பூஜையறையில், ஒரு சுத்தமான மணைப்பலகை அல்லது மந்தஹாசத்தில், கோலங்கள் இட்டு அழகுபடுத்த வேண்டும். அம்பிகையின் பிரதிமை அல்லது படத்தை, பூஜைக்கு பயன்படுத்தலாம். பிரதிமை/படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து, மணையின் மேல் வைக்க வேண்டும்.. மலர்கள் சாற்றி, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.. இயன்றால் சின்ன அம்மன் பாவாடை அல்லது வஸ்திரம் அணிவிக்கலாம்.

பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர வேண்டும். பூஜையின் இடையில் எழுந்து செல்லாதிருத்தல் நலம்.. கைபேசி அழைப்புகளைத் தவிர்த்தல் நலம்..

பூஜைக்கு இயன்ற நிவேதனங்கள் சமர்ப்பிக்கலாம். இயன்ற இனிப்பு நிவேதனங்கள் அல்லது பழங்கள், தேங்காய் வெற்றிலை பாக்கு ஆகியவை சமர்ப்பிக்கப்படுகின்றன.

பூஜை செய்யும் இடத்தை, தீபங்களால் அலங்கரிப்பது சிறப்பு.. அம்பிகையின் திருமுன் உள்ள தீபத்தை முதலில் ஏற்றி, தீபஜோதியை வணங்க வேண்டும்.
பின், விக்னேஸ்வர பூஜை செய்து, பூஜை துவங்க வேண்டும்.. இயலாதவர்கள் தெரிந்த விநாயகர் துதியைப் பாடி, பூஜை துவக்கலாம்.. குருபகவானை வந்தனை செய்யும் துதிகளையும் சொல்ல வேண்டும்..

பின் முறைப்படி பூஜையைச் செய்ய வேண்டும்.. சாதாரணமாக, லக்ஷ்மி பூஜை செய்வதைப் போலவே இந்த பூஜையையும் செய்யலாம்!.. முறையாக பூஜிக்க இயலாதவர்கள், இந்த எளியமுறை பூஜை பதிவினைப் பாருங்கள்..

பூஜையின் போது, 'ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரநாமம்' சொல்லி, பூஜை செய்வதை சிறப்பாகச் சொல்கிறார்கள்.

தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனப் பொருட்களை சமர்ப்பித்து, தீபாராதனை செய்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.. வேண்டுதல்களை அம்பிகையிடம் கூறி வணங்க வேண்டும்.  பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக, மன்னிப்புக் கோர வேண்டும்..

அம்பிகைக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.. நிவேதனப் பொருட்களை விநியோகித்தல் ந்லம்.. குறைந்த பட்சம் ஒரு சுமங்கலியை அம்பிகையாகப் பாவித்து, இல்லத்திற்கு வரவழைத்து, மணையில் அமரச் செய்து, தாம்பூலம் தர வேண்டும். தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழம், மஞ்சள், குங்குமம், இயன்ற தக்ஷிணை வைத்துத் தர வேண்டும்.

சிலர் பூஜை நிறைவுறும் நாளில், தெரிந்தவர்களை இல்லத்திற்கு வரவழைத்து, தாம்பூலம் தருகிறார்கள்.

பூஜை செய்த பின், அம்பிகையை அன்று மாலையோ அல்லது மறு நாள் காலையிலோ, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனங்கள் செய்து, யதாஸ்தானம்(இருப்பிடம் எழுந்தருளச் செய்தல்) செய்து விடலாம். பூஜை தினம் வெள்ளிக்கிழமையாக இருந்தால், மறு நாளே இவ்வாறு செய்வது வழக்கம்.. அம்பிகை நம் வீட்டுப் பெண் போல என்பதால், வெள்ளிக்கிழமை இருப்பிடம் எழுந்தருளச் செய்வதில்லை.

ஸ்ரீலக்ஷ்மியைத் துதிக்கும் விரத பூஜைகள் தான் எத்தனை எத்தனை!... ஸ்ரீகிருஷ்ணரின் ஆலோசனைப்படி,  ஸ்ரீலக்ஷ்மி தேவியைத் துதித்தே, பாண்டவர்கள், தம் சாம்ராஜ்ய லக்ஷ்மியைத் திரும்ப அடைந்தனர். வறியவர்களையும் வாழ்வாங்கு வாழச்  செய்வது, அன்னையின்  பெருங்கருணையே!.

இத்தனை விதமாக அம்பிகையைத் துதித்தாலும், அன்னை விரும்புவது, நம் உள்ளத்தின் நேர்மையையும் பக்தியையுமே.. அன்பால் உருகி, 'அம்மா' என்றழைக்கும் குரலுக்கு வேண்டுவன அருளும் ஆதி சக்தி அவள்.

ஸ்ரீதேவியைத் துதித்து, சீரான வாழ்வு பெறுவோம்!.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

9 கருத்துகள்:

  1. விரத பூஜைகளின் விளக்கங்கள் அனைத்தும் அருமை.... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. விரதங்கள் பற்றி விரிவான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..