நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 21 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 4...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 4.


திருச்சிற்றம்பலம்!!!!...

பாடல்:

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாய் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே!....விடம் அமர்ந்த‌ கண்டத்தை உடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற,  உயர்ந்த மாடங்களை உடைய,




அழகிய உத்தரகோசமங்கையில், இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடி, அடியவர்கள் நெஞ்சுள்ளே நிலைத்து நின்று, பேரானந்த அமுதம் சுரந்து, தன் கருணையால், பிறப்பு, இறப்பை அறுப்பவனுமாகிய, இறைவனது தூய புகழைப் பாடி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோம்".

சற்று விரிவாக:

முன் வந்த பாடல்களைப் போலவே, இதிலும் ஈற்றடியையே முதலில் வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.. "தொகுதியாகப் பொருந்திய, வெண்மை நிறமுடைய சங்கினால் ஆன வளையல்களை அணிந்த பெண்களே!" என்று பெண்களை விளிக்கிறார் வாதவூரார்.. திருவெம்பாவை உரையில் நாம் முன்பு பார்த்தது போல், 'வளை' என்கிற சொல், உடல் உணர்வை, குறிப்பால் உணர்த்துவதற்காக கையாளப்படுகின்றது.  'வளை கொள்ளுதல்' என்பது உடல் உணர்வைக் கடந்து நிற்றல் என்னும் பொருள் தரும்.. இதனை பெரியோர் பலரும் தம் பதிகங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.. 

நீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே (ஞானசம்பந்தப் பெருமான்).

காயோ டுடனாய் கனல்கை ஏந்திக் 
காடே இடமாக் கணங்கொண்ட 
பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர் 
பித்தப் பெருமான் திருமகனார் 
தாயோ டுறழும் தணிகா சலனார் 
தகைசேர் மயிலார் தனிவேலார் 
வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என் 
வெள்வளை கொண்டார் வினவாமே. (திருஅருட்பா)

 வெள்வளை, அதை அணிந்துள்ள பெண்களது உயர்ந்த குணநலன்களைக்  குறிக்கிறது எனலாம். மேலும் சத்வ குணத்தையும் அது குறிக்கிறது. தொகுதியாக அதை அணிந்து ஆடுதல் என்னும் செயலால், பெண்கள் இன்னமும் உடல் உணர்வைக் கடந்து பரமனுள் ஒன்றவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அந்த உயர் நிலை வேண்டியே பரமனைப் புகழ்ந்து பாடுகின்றார்கள் என்றும் கொள்ளலாம்.

'நஞ்சமர் கண்டத்தன்'‍‍‍‍‍.....நஞ்சை அருந்தியதால், கறுத்த கழுத்தினை உடையவன் எம்பிரான். இங்கு 'அமர்' என்ற பதத்தால், நஞ்சு எம்பெருமானால் விரும்பி அருந்தப்பட்டது என்பதை உணர்த்தினார்.. நஞ்சினை, விரும்பி அருந்தி, தம் கண்டத்தில் அம்மையின் மூலம் அமர்த்தினார் நீலகண்டர்.

அண்டத்தவர்...மேலுலகத்தவர்.. தேவர்கள்.. அவர்களுக்கெல்லாம் தலைவன் எம்பிரான்..அவனே,  மேகங்கள் தொடும் மாடங்களை உடைய, அழகிய உத்தரகோசமங்கையில் உமையொடு கூடி, எழுந்தருளியிருக்கின்றான் என்கிறார்.. 'விண்ணோர்களின் தலைவன்' என்று எம்பிரானைக் குறித்தவர், 'விண்ணில் உலாவும் மேகங்கள் படியும் மாடங்கள் கொண்ட திருக்கோயில்' என்று குறித்ததன் மூலம், இறைவன், விண்ணோர்களுக்கும் தலைவன், மண்ணுலகத்தோரும்  தன்னை எளிதில் தொழும் வண்ணம், விண்ணை அளாவிய மாடங்கள் அமைந்த திருவுத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் உமாதேவியுடன் எழுந்தருளியிருக்கிறான் என்றருளினார். . 

உத்தரகோசமங்கையில், வாதவூராருக்கு, உமாதேவியாருடன், அம்மையப்பனாகக் காட்சி தந்தருளியதையே 'அம்சொலாள் தன்னொடுங் கூடி' என்றார். இதில் இறைவியின் மொழி இனிமையும் குறிக்கப்பெற்றது..

"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே" என்று அபிராமி பட்டரும் இறைவியைப் போற்றுவதை நினைவு கூரலாம்..

அவ்வாறு இறைவன் அம்மையப்பனாக எழுந்தருளியது மட்டுமல்லாது, அமுதம் போன்ற‌ பேரானந்த நிலை தந்தருளியதோடு, தன் பெருங்கருணையால், பிறப்பு, இறப்பு சுழலை அறுத்தருள் செய்தார் என்கிறார். இங்கு 'தமக்கு' எனக் குறிக்காது, 'அடியவர்கள்' என்று குறித்ததன் மூலம், தம்மை அடியவருள் ஒருவனாக இறைவன் இருத்தியதைச் சொன்னதோடு, மெய்யடியார்களுக்கு அருள் செய்யும் பான்மையில், தமக்கும் அமுதூறி, கருணையால் அருள் செய்தான் இறைவன் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். 

'அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம்' 

என்ற வரிகள், உமாதேவியோடு கூடி , நெஞ்சில் நிலைத்த அருட்காட்சி தந்ததை குறிப்பதோடு அல்லாமல், 'நெஞ்சுளே நின்றமுதம்' என்று தனியாகப் பிரிக்குங்கால், இறைஅனுபவம் பெற்ற தன்மையைச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்.

இறைவனது புகழே குறைவில்லாதது.. ஆதலின் அதைத் 'தூயபுகழ்' என்றார்..

இவ்விதம், இறைவனது புகழைப் பாட, அம்மையப்பனது அருட்காட்சி கிட்டும், இவ்வுடல் உணர்வழிந்து, பேரானந்த நிலையை எய்தலாம் என்று, ஊஞ்சலாடும் மகளிர் பாடி ஆடுவதாக உரைத்தார்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..