திருச்சிற்றம்பலம்!.
பாடல்:
முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
பொருள்:
"பொன்னாலான அழகிய ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!,..ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், பலநூறு கோடி தேவர்களும், முனிவர் கூட்டமும் அவனது அருளுக்காக காத்திருக்கும் போது, தனது விபூதியை எனக்களித்து, தன் கருணை வெள்ளத்திலே, மிகுதியாக யான் ஆழ்ந்திருக்குமாறு அருளிய மணி (மாணிக்கம்) போன்ற எம்பிரான், எழுந்தருளியிருக்கும் அழகிய உத்தரகோசமங்கையில் உள்ள, ஒளி பொருந்திய,
உயர்ந்த மாடங்களையுடைய அகன்ற கோயிலைப் பாடி, நாம் பொன்னூசல் ஆடுவோம்!".
உயர்ந்த மாடங்களையுடைய அகன்ற கோயிலைப் பாடி, நாம் பொன்னூசல் ஆடுவோம்!".
சற்றே விரிவாக:
இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். இங்கு 'முன்' என்ற சொல்லின் பயன்பாடு, 'நினைக்கப்படுகின்ற' என்ற பொருளில் வரும். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், தவத்திற் சிறந்த முனிவர்கள் மற்றும் விண்ணோர்கள் நினைவில் எப்போதும் நிறைந்திருக்கின்றான்..இதையே 'முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்' என்றார். அவ்வாறு 'கருத்தால் இறைவனோடு எப்போதும் ஒன்றியிருப்பவர்களையும் காத்திருக்க வைத்து, தம் மீது கொண்ட அளப்பரிய கருணையினால், இறைவன், தம் விபூதியை எனக்கருளினார்!' என்று இறையனாரின் கருணையை வியந்து கூறுகின்றார். 'முன் ஈறும் ஆதியும் இல்லான்' என்பதை, 'ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனே எப்போதும் நினைக்கத் தகுந்தவன்' என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
'நீறு அளிப்பது' என்பது ஆட்கொள்ளும் அருட்செயலைக் குறிக்கும்.. திருநீறு, இறைவனது அருளின் வடிவாதலால், 'திருநீறு' என்று குறிக்காது, 'தன்னீறு' என்று அருளினார்.
ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே. (அப்பர் பெருமான்).
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.(ஞானசம்பந்தப் பெருமான்).
இறைவனது கருணை, ஒரு துளி பட்டாலும் போதும், திருவடிப்பேறு நிச்சயம். அவ்வாறிருக்க, இறைவனது கருணை, வெள்ளமாகவே வந்து தம்மை ஆட்கொண்டது என்றார்.. ஆட்கொண்டது மட்டுமல்லாமல், அதிலேயே தம்மை அழுத்தியது என்கிறார்.
இதையே 'பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே' என்று சிவபுராணத்திலும் குறிக்கிறார்.
மானிடர்களின் வினை மூட்டையானது சுலபத்தில் தீர்வதல்ல. ஆயினும் இறைவன் கருணை, வல்வினைகளை அகற்றி, அருட்சுத்தி தந்து, முத்தி தர வல்லது. பெரும் ஞானிகளும் வேண்டுவது எம்பெருமானது கருணையையே. வள்ளலார் பெருமான்,
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில் பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான் அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணை செய்த துரையேஎன் உளத்தே
சுத்த நடம் புரிகின்ற சித்தசிகா மணியே
என்று வேண்டுகிறார்..
நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற தீவினைகள் அனைத்தையும், நம் பால் கொண்ட கருணையால் நீக்கியருள்கிறான் எம்பிரான்.. தீவினைகள், நம்மை வாட்டுகின்ற பெரும் தீயாதலால், தன் கருணையை வெள்ளமாகத் தந்து, அந்தத் தீயை அவிக்கின்றான் அன்பெனும் மாமலை.
அவ்வாறு செய்வதோடு நில்லாமல், தன் கருணை வெள்ளத்திலேயே அழுந்துமாறும் செய்கின்றான் அந்த மாமணி. வெள்ளத்தில் அழுந்தியிருக்கும் பொருளை தீ ஒன்றும் செய்ய இயலாது. அது போல், மீண்டும் தீவினைகள் நம்மைத் தொடாதிருக்கும் திருவருளும் செய்கின்றான். இதுவே கிடைத்தற்கரிய திருவடிப்பேறு!!!..
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே.
என்று 'அற்புதப் பத்தி'லும் இதைக் கூறியருள்கிறார் வாதவூரார்.
இறைவனை 'மணி' என்று வாதவூரார் பல பாடல்களில் துதிப்பதைக் காணலாம்.. இங்கு 'மணி' என்பது 'மாணிக்கம்' என்ற பொருளில் வரும்.. 'மழபாடியுள் மாணிக்கமே' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஐயனைப் போற்றுவார்.. மாணிக்கம் செந்நிறமானது. அதன் அருகில் வெண்ணிறப் பளிங்கினை வைத்தாலும், மாணிக்கத்தின் ஒளி பட்டு அதுவும் செந்நிறமாய்த் தோன்றும்.. அது போல், அருட்சுத்தியால் நன்னிலையடைந்த உயிர்கள், இறைவனருளால் சாயுஜ்ய நிலையடையும். இதனைச் சுட்டவே, 'மன்னு மணி' என்றார். 'உத்தரகோசமங்கையுள் மன்னு மணி' என்று பொருள் கொள்ள வேண்டும்.. 'மணி உத்தரகோசமங்கை' என்றும் கொண்டு, 'அழகிய உத்தரகோசமங்கை' என்றும் பொருள் கொள்ளலாம்.
உத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கும் இறைவனது கோயிலானது ஒளி பொருந்திய, மிகவுயர்ந்த மாடங்களை உடைய, அகன்ற திருக்கோயில்.. அத்தகைய அழகிய திருக்கோயிலைப் பாடி, நாம் பொன்னூசல் ஆடுவோம்!' என்பதை,
'மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ' என்று குறித்தார்.
'வியன் மாளிகை' என்பது பெரிய, அகன்ற மாளிகை என்று பொருள்படும்.. 'மின்' என்பது ஒளி என்ற பொருள் தரும். 'மாளிகை' என்பது இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் குறித்தது. நம் உடலும் இறைவன் எழுந்தருளியிருக்கும் ஆலயமே!.. 'ஊன் உடம்பு ஆலயம்' என்பார் திருமூலர்.
ஒளி பொருந்திய இறைவன் இவ்வுடலினுள் உறைகிறான்..அதை உணர்ந்து, மானிடப் பிறவியின் மகத்துவம் அறிந்து, இவ்வுடலினுள் ஒளியாக உறைபவனே, 'மின்னேறு மாட வியன்மா ளிகை'யுள்ளும் உறைகின்றான் என்னும் ஞானம் பெறுதலின் முதல்படியே அருட்சுத்தி.
இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களைப் பாடுதலும், அவனது கருணையைப் பெறும் மார்க்கங்களில் ஒன்று..ஆலய நிர்மாணத்துக்குரிய ஆகம நெறிகள், யோக மார்க்கத்தை உள்ளடக்கியவை.. ஆகவே, திருக்கோயிலைப் பாடுதல், இறைவனைப் பாடுதலேயாம்.. ஆகவே 'வியன் மாளிகை பாடி' என்றருளினார்.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!
வெற்றி பெறுவொம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.
விரிவான விளக்கத்திற்கு நன்றி அம்மா...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பொன்னுாஞ்சல் பாடல் புகழாா் தமிழேந்தி
இன்னுாஞ்சல் காட்டும் எனக்கு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு