நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 26 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL.. SONG # 9....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'.. பாடல் # 9.



திருச்சிற்றம்பலம்.

பாடல்;

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"விளக்கம் பொருந்திய, ஆபரணங்களை அணிந்த தனங்களையுடைய பெண்களே!.. தென்னை மரங்கள் பரவியுள்ள திருவுத்தரகோசமங்கையில், தங்குதல் பொருந்திய, சோதி வடிவான, ஒப்பற்ற திருவுருவமுடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியை அறுத்து, எம் போன்றவரையும் ஆட்கொள்ளும் பொருட்டு, திருமேனியின் ஒரு பாகத்தில் பொருந்திய மங்கையும்(உமாதேவியும்) தானுமாய்த் தோன்றி,


எம் குற்றேவலைக் கொண்டருளினான். அவ்வாறு அருளிய‌,  மணந்தங்கிய கொன்றை மாலையணிந்த சடையையுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்."

சற்றே விரிவாக:

தெங்கு= தென்னை மரம்.. இப்பாடலில் 'உலவு' என்ற சொல், அதனுடனான சொற்களைப் பொறுத்து, 'பொருந்திய' அல்லது 'நிறைந்த' என்னும் பொருள் தந்தது. முதல் வரியில், 'தெங்குலவு சோலை' என்ப‌தில், உலவு என்பது, தென்னை மரங்கள் நிறைந்து பரவிய என்ற பொருள் தந்தது.

'தங்குலவு சோதித் தனியுருவம் '...

'தங்குலவு' என்பதற்கு 'தங்குதல் பொருந்திய' என்பது பொருள்.. 'சோதித் தனியுருவம்' என்றது அருவுருவான இலிங்க வடிவத்தை.. வாதவூரடிகள், திருவுத்தரகோசமங்கைத் திருத்தலத்திற்குச் சென்று, அங்கு குருநாதனாக  தமக்கருள் செய்த‌  இறைவனைக் காணாமல் வருந்தினார். அத்தலத்து இலிங்க மூர்த்தி  முன் நின்று,  ' நீத்தல் விண்ணப்பம்' என்னும் திருப்பதிகத்தால் இறைவனைத் துதிக்க,  இறைவன் முன்போலவே ஆசிரியத் திருமேனியுடன் எழுந்தருளி வந்து அருள் செய்தான். இதையே, ''வந்தருளி...' என்று குறித்தார்.

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக்
கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம்
பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற்
றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக்
கடையவனே(நீத்தல் விண்ணப்பம்)

தனக்கென்று ஓர் உருவமற்ற பரம்பொருள், தம் அடியார் பொருட்டு, உருவம் தாங்கி வந்து ஆட்கொண்டருளுகின்றது.. உருவமற்ற பரம்பொருளை,  உயிர்களால் பற்ற முடியாது. உள்ளத்தால் நினைக்க, துதிக்க‌ இயலாது. ஆகவே உயிர்கள் தன்னை  உணர்ந்துய்ய வேண்டும் என்னும் கருணையினாலேயே இறைவன் உருவம் கொள்ளுகின்றான். இறைவனது உருவம், அவனது சக்தியினால் உண்டானது. நம் உருவம் போல், மாயையால் ஆன உருவம் அல்ல அது.

நிர்க்குண பரம்பொருள், சகுண நிலையில், அருவுருவமாகிய இலிங்கத் திருமேனியாகிறது.. அடியாருக்கு அருள் செய்வதற்காக, உருவு கொண்டு, மாதொரு பாகனாகவும், பிறை சூடிய பெம்மானாகவும் அருள் சுரக்கிறது. இவ்விதம் இறைவன், அடியார் பொருட்டு வந்தருளிச் செய்தலை, இப்பாடலில் குறித்தார் வாதவூரடிகள்.

'எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்'...   

'ஆட்கொள்வான்' என்பதற்கு 'ஆட்கொள்ளும் பொருட்டு' என்பது பொருள்.

தம் பிறப்பறுத்து ஆட்கொள்ளும் பொருட்டு, இறைவன் மாதொரு பாகனாகத் தோன்றி, தம்மை பணி கொண்டு அருளியமையை இங்கு உரைத்தார்.. இங்கு 'பணி கொண்ட' என்பது, வெளிப்படையாக, 'தம் குற்றேவலைக் கொண்ட' என்ற பொருள் தருகிறது. இதன் உட்பொருள் சற்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

இறைவனுக்கென்று தனியானதொரு பணியில்லை.. பிரபஞ்ச இயக்கத்தையே இறைவன் விளையாடலாகச் செய்தருளுகிறான். அவ்வாறிருக்க, அவன் 'இப்பணி தனது' என்று சொல்லி, அதைச் செய்யுமாறு, உயிர்களைக் குற்றேவல் கொள்ளுதல் எவ்வாறு?

உயிர்கள், இறைவனை முழுமையாகச் சார்ந்து, அவன் செயலே எல்லாம் எனத் தெளிந்து, 'இறைவன் விருப்பமே தன் விருப்பம்' என்று முழுமையாகத் தம்மை இறைவனிடம் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.. அவ்விதமான பக்குவ நிலை, ஆழ்ந்த பக்தியின் மூலம் சித்திக்கும்.. அந்நிலை அடையும் போது,  செய்யும் செயலெல்லாம் இறைவன் செயலென்று செய்யும் மனோநிலை வாய்க்கும்.. இறைவனது பணியாகக் கருதிக் கொண்டு எச்செயலும் செய்யும் போது, அன்பு மேலிடும். அருள் சுரக்கும்.. 'பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறையும் பரிபூரணானந்தம் எம்பெருமான்'  என்பது உணரப்படும்.. உயிருக்கு அருட்சுத்தி சித்திக்கும். அடியாருள் ஒருவராக இணைந்திருக்கும் நற்பேறு வாய்க்கும்... இறையடியாராக, எப்பணியும் இறைப்பணியே என்று உவந்து செய்யும்  பரிபக்குவ நிலையடைதலே 'பணிகொள்ளு'தல்..

'நம் பொருட்டு, உருவம் தாங்கி வந்தருளும், மணம் தங்கும் கொன்றை மாலையை அணிந்த  இறைவனது குணத்தைப் பாடிப் பரவி நாம்  பொன்னூஞ்சல் ஆடுவோமாக' என்று ஊஞ்சலாடும் மகளிர் பாடுவதாக உரைக்கிறார் வாதவூரடிகள்.. இதன் மூலம், இறைவனது குணத்தைப் பாடுதல் வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது..

'திருப்பொன்னூசலில்', இறைவன் திருவடி, கோயில் கொண்டருளும் ஊர், எழுந்தருளியிருக்கும் ஆலயம், இறைவன் புகழ், அணி, அழகு, குணம், இறைவன் திருவிளையாடல்கள் முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல், 'அருட்சுத்தி'க்கு வித்தாகும் என்பது, ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொன்றைக் குறித்துப் போற்றியமையால் புலனாகியது.

ஊஞ்சலாடும் மகளிர், இவ்வாறு பாடுவதாகக் குறித்தமையால், எச்செயல் செய்யினும் சித்தம் ஈசனிடம் இருக்க, அச்செயல் புரிதல் வேண்டும் என்பதும் புலனாகியது.. பொற்பலகையை மாட்டி ஆடும் ஊஞ்சலே 'பொன்னூசல்'. பொன்னம்பலமுடையான் திருவடியை பொழுதெல்லாம் சிந்தித்து, ஊஞ்சலாடுவது போல் ஏற்ற இறக்கமுடைய இவ்வுலக வாழ்வை நடத்தினால், ஈசன் பேரருள் பெற்று பிறவிப் பிணி நீங்கலாம் என்பது உட்கருத்து..

'திருப்பொன்னூசலு'க்குப் பொருள் எழுதும் பெரும்பணியினை நன்முறையில் நிறைவேற்றியருளிய சொக்கேசன் திருவருளை எண்ணிப் பணிகிறேன். இதன் புகழெல்லாம் ஈசனொருவனுக்கே அர்ப்பணம்.. இதில், ஏதேனும் குறைகள் இருக்குமாயின், என் சிற்றறிவை, பெரியோர்கள் அருள்கூர்ந்து மன்னித்தருள வேண்டுகிறேன்.

இதை எழுதும் போது, நல்ல பல கருத்துக்கள் சொல்லி, என்னை ஊக்கிய அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

எம்பெருமான் திருவருளால், 'திருப்பொன்னூசல்' பொருளுரையைப் படித்த, படிக்கும், படிக்கப்  போகும் அன்பர்கள் யாவரும் வேண்டுவன பெற்று வாழ்வாங்கு வாழவேண்டி, எம்பிரானைப் பிரார்த்திக்கிறேன்..

திருச்சிற்றம்பலம்!.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..