நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 18 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 2..மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' பாடல் # 2


திருச்சிற்றம்பலம்!

பாடல்:

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

மயில் போன்ற சாயலும், அன்னம் போன்ற நடையழகும் உடைய பெண்களே!....மூன்று விழிகளை உடையவனும்,



கெடுதல் என்பது இல்லாத , விண்ணுலகில் தங்கி வாழும் தேவர்களும் காண்பதற்கு அரிய, மலரடிகள்  தேன் போலும் இனிமை பொருந்தி,  அமுதமாக ஊறி, தெளிந்து விளங்கி, அது உடம்பினில் தங்கி நின்று உருக்குமாறு அருளும் திருஉத்தரகோசமங்கைக்குத் தலைவனும் ஆகிய இறைவன் தங்கியருளும் திருவிடைமருதூரைப் பாடி, நாம் பொன்னூஞ்சலில் ஆடுவோமாக!.

சற்று விரிவாக:

பெண்களின் தோற்றத்துக்கு உவமையாக மயிலையும், நடையழகுக்கு உவமையாக அன்னத்தின் நடையழகையும் கூறுவது கவி மரபு. அது பற்றியே 'குலமஞ்ஞைபோன்றங் கனநடையீர்' என்றார். 'குலமஞ்ஞை' என்பது உயர்ந்த, சிறப்பு பொருந்திய மயில்' என்று பொருள்படும். இதை மகளிரின் குணச்சிறப்புக்கும் பொருத்திப் பொருள் கொள்ளலாம்.


'மூன்றங் கிலங்கு நயனத்தன்' என்பதை, 'அங்கு இலங்கு மூன்றாகிய நயனத்தன்'  என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.. 'மூன்று' என்பது, சந்திரன், சூரியன், அக்னி ஆகிய  மூன்று சுடர்களைக் குறிக்கும்... எம்பெருமானது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி .
'அங்கு' என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அக்னி, நிலத்தில் உள்ளதாயினும், சந்திரனும், சூரியனும் ஆகாயத்தில் இலங்குவதால், மூன்றனையுமே 'அங்கு' என்ற சொல்லால் குறித்தார். 'வானில் இலங்கும் மூன்று  சுடர்களை விழிகளாக‌ உடையவன்' என்பது பொருள்.

'மூவா' என்பது 'கெடாத' என்ற பொருளில் வரும்.. இதனை 'மூவாத திருவடிகள்' என்று பொருள் கொள்ள வேண்டும்.. மூவா என்பது விண்ணுலகினைக் குறிப்பதல்ல.. பிரளய காலத்தில் அண்ட சராசரமும் ஐயனுள் ஒடுங்கும் ஆதலால், 'மூவா' என்பது இறைவனது திருவடிகளின் தன்மையையே குறிக்கும்.

தேவர்கள், மனிதர்களைக் காட்டிலும் உயர்நிலையை அடைந்த உயிர்கள். அவர்களும் காண்பதற்கு அரியவை எம்பெருமானது திருவடிகள்..  ஐயன் திருவுளம் உகந்தால், கர்மவினைகள் நீங்கி, உயிர்களுக்கு திருவடிப்பேறு கிட்டும்.. ஆக, தேவராயினும், மனிதராயினும், இறைவனது கருணை ஒன்றே அவர்தம் பிறவிப்பெருங்கடலை நீக்கியருள வல்லது. உயிர்களின் பாசத்தை நீக்கி, 'அருட்சுத்தி' தர வல்லது..  அதைக் குறிக்கும் பொருட்டே 'வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்' என்றார்.

எம்பெருமானை எப்போதும் எண்ணித் துதிக்கின்ற அடியவர்களுக்கு, அவர்தம் திருவடிகள் தேனாகத் தித்தித்து, அமுதாக ஊறித் தெளிந்து விளங்குமென்றார்..தித்திக்கும் பொருட்கள் எத்தனையோ இருக்க, குறிப்பாக 'தேன்' என்று கூறியது அதன் கெடாத தன்மை குறித்தும், தேனை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் நோக்கம் குறித்துமாகும்.. இறைவனது திருவடிகள் 'மூவாத திருவடிகள்' என்பதால், தேனாகத் தித்தித்து என்றார்.. மேலும், எவ்வாறு தேனீக்கள், தாம் முனைந்து, மலர் தோறும் சென்று சேகரித்த தேனை,  'நான், எனது' என்னும் எண்ணம் சிறிதும் இன்றி, நமக்குத் தருகின்றனவோ, அவ்வாறு 'நான், எனது' என்னும் எண்ணம் நீங்கி, முழுவதும் இறைவனையே சார்ந்திருக்கும் நிலையடையும் பொருட்டே நாம் இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்கின்றோம்..  அவ்வாறு, இறைவனைச் சார்ந்திருக்கும் உயிர்களை இறைவனும் உய்விப்பான் அதாவது பிறவா பெருநிலையை அடையச் செய்வான் என்பதையே பிறவா நிலையளிக்கும் 'அமுதாக ஊறி' என்றார்.

தேனும் அமுதும் பேரானந்த நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

திருவடிகள், அவ்வாறு தெளிந்து விளங்குவதோடு  ஊனினையும் நின்று உருக்கியது என்றார்.

இறைவனால் ஆட்கொள்ளப்படும் நிலையில், முதலில் உடல் புளகாங்கிதம் அடைவது முதலான மாற்றங்கள், அன்பு மேலீட்டால் தோன்றும்...அதன் பின்னரே, உள்ளத்தில் ஞான ஒளி தோன்றி, இறை அனுபவம் உண்டாகும்..  இறைவனது சிறப்புப் பொருந்திய திருவடிகள், தமக்கு அத்தகைய நிலையை அளித்தன என்றார்.  இந்தக் கருத்தையே,

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனையப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். (திருஅம்மானை)

என்றும் அருளினார்..முன்வினையின் விளைவாகவே இப்பிறவி அமைந்ததாதலால், ஊன் உருகுதல், வினைப்பயன் விலகுதலையும் குறிக்கும்..

இவ்விதம் தம்மை ஆட்கொண்ட, திருவுத்தரகோசமங்கையின் தலைவனாகிய இறைவன், எழுந்தருளியிருக்கும் 'திருவிடைமருதூரை'ப் பாடி, நாம் பொன்னூசலாடுவோம் என்றார். திருவிடைமருதூர், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புப் பெற்ற திருத்தலமாகும்..இறைவன், அகத்தியர் முனிவர் வேண்டுதலுக்கிணங்க எழுந்தருளியதோடு, தம்மைத் தாமே பூசித்து, தம்மை அர்ச்சிக்கும் முறைகளை  அருளிய திருத்தலம் இது.. 'தாமே தம்மைப் பூசித்தது ஏன்?' என்று உமையம்மை வினவ, 'பூசித்ததும், பூசிக்கப்படுவதும் யாமே' என்றருளி, அனைத்தும் தாமே என்பதை உணர்த்தினார்.. எங்கும் இறைவனே நிறைந்திருக்கிறான் என்ற ஞானத்தை உயிர்கள்  அடைய வேண்டுவதன் பொருட்டு, 'திருவிடைமருதூரைப்' பாடுவோம் என்றருளினார்..

இறைவன் எழுந்தருளிய தலங்களைப் பாடுதலும், இறையருளைப்  பெறுவதற்கான மார்க்கங்களில் ஒன்று என்பதும் இதனால் புலப்படுத்தப்பட்டது.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!


வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..