நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

PERUKI VARUM KAAVIRI (AADI PERUKKU..3/8/2014) ...... பெருகி வரும் காவிரி (ஆடிப் பெருக்கு, 3/8/2014).

அன்பர்களுக்கு வணக்கம். ஆடி பெருக்கு தினத்தில் காவிரித் தாய் பொங்கிப் பெருகுவதைப் போல் நம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நலமும் வளமும் பொங்கிப் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

 முந்தைய வருடங்களில், ஆடி பெருக்குக்கான சிறப்புப் பதிவில், காவிரி ஆறு தோன்றிய புராணம், ஆடி பெருக்கில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் என்று பார்த்தோம்.   பதிவிற்கு இங்கு சொடுக்கவும்.

காவிரியை ஒரு 'ஆறு' என்ற அளவில் மட்டும் நம் தமிழ் மக்கள் நினைப்பதில்லை. பழங்காலத்திலிருந்து, ஒரு பெண்ணாய், சோறூட்டும் அன்னையாய், ஒரு பெரிய கலாசாரத்திற்கு வித்தாய், வாழ்வாதாரமாய்


எல்லாவற்றிற்கும் மேலாக, 'காவிரி அம்மன்' என்று தெய்வமாய் மதித்து வணங்குபவர்கள் நாம்.

கங்கையைப் போலவே நம் பாவங்கள் தீர்க்கும் புண்ணிய நதி காவிரி. அக்கால சோழ மன்னர்கள், காவிரியாலேயே சோழ வளநாடு செழித்தது என்னும் உண்மை உணர்ந்து பொன்னி நதியைப் போற்றி மகிழ்ந்தனர்.

கரிகாற் சோழ மாமன்னர் கட்டிய கல்லணை காலத்தை வென்று சோழர் புகழ் பாடி மிளிர்கிறது. சோழர் பரம்பரையில் வந்த விஜயாலய சோழ மாமன்னரின் மகன் ஆதித்த சோழன், காவேரி நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுத்துச் சிறப்பித்தார்.

கொள்ளிடம் என்று பெயர் பெற்ற வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் எழுபத்து நான்கு கணவாய்களை உடைய வீரநாராயண ஏரியை கட்டி நீர் வளத்தை அதிகப்படுத்தினார். இதனால், காவிரி, தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான கூறாக விளங்கி வருகிறாள்.

காவிரியின் தோற்றம் பற்றிய கதையை நாம் அனைவரும் அறிவோம். விஷ்ணுமாயையின் அம்சமான லோபமுத்ரா தேவியின் நீர் வடிவமே காவிரி.

லோபமுத்ரா தேவி:
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் முந்தைய பதிவின் சுட்டியில், லோபமுத்ரா தேவியின் சரிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லோபமுத்ரா தேவி, ஸ்ரீவித்யா உபாசனை செய்தவர்களில் மிக முக்கியமானவர். 'லோபமுத்ரா வித்யா' லோபமுத்ரா தேவியால் அருளப்பட்டது. அகத்திய முனிவரே, லோபமுத்ரா தேவியிடமிருந்து தான் ஸ்ரீவித்யா உபாசனை செய்யும் முறையைக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள்..

இன்றைய தினம், நீர் நிலைகளுக்கு மரியாதை செலுத்தி, வழிபடும் நாளாதலால், கிராம, நகர வேறுபாடின்றி, எல்லா இடங்களிலும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகின்றது. நகர வாழ்க்கையில், நீர் நிலைகளுக்கு அருகில் இப்பண்டிகை கொண்டாடப்படும் வாய்ப்பு இல்லையெனினும், இல்லங்களில், ஒரு செம்பில் நீர் நிறைத்து, காவிரி அன்னை அதில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து, பூஜை செய்து, கலந்த சாத வகைகள் நிவேதனம் செய்கின்றனர். சென்ற வருடம், ஒரு வீட்டில், நல்ல தண்ணீர் வரும் குழாயில், பொட்டிட்டு, பூச்சூட்டி வழிபாடு செய்திருந்ததைப் பார்த்தேன்..

ஆடிப்பெருக்கன்று, நல்ல விஷயங்கள் துவங்க, அவை பெருகும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.. அதனால், இறைவழிபாடு, புதிய முயற்சிகள் ஆகியவற்றை இன்று தொடங்கலாம்.. எளியோருக்கு இயன்ற அளவில் உதவுவதும் நல்லது.  (சமீப காலமாக, இதன் அடிப்படையில், தங்கம் வாங்குவதும், நிலம் வாங்குவதும் அதிகரித்திருக்கிறது என்பது அதிர்ச்சி தகவல்!.. இது எங்கு போய் முடியும்?!).

ஆடிப்பெருக்கன்று, சில பகுதிகளில், நீத்தார் வழிபாடும் செய்கிறார்கள்..  பாரதப் போர், ஆடி ஒன்றாம் தேதியிலிருந்து, பதினெட்டாம் தேதி வரை நடைபெற்றதாகவும், போர் நிறைவடைந்த ஆடி பதினெட்டு அன்று, போரில் வீர சொர்க்கம் அடைந்தவர்களுக்காக, இந்த வழிபாடு செய்யும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள்..

நீர் வளம் குறைந்து வரும் இந்நாட்களில்,  இம்மாதிரி பூஜைகள் செய்வதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்த உறுதி கொள்வதும் அவசியம். வரும் தலைமுறையினருக்கு, நம் பண்பாடு, கலாசாரம், பண்டிகைகள் கொண்டாடும் அவசியம் இவற்றை கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டும்.. அதோடு, இயற்கையன்னை நமக்கு அளித்துள்ள வளங்களை, முறையாகப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கும் அவற்றின் நன்மைகளை விட்டுச் செல்வது குறித்து சொல்லித் தர வேண்டுவது காலத்தின் கட்டாயம்..

ஆடிப்பெருக்கை இன்பமாகக் கொண்டாடி, காவிரி அன்னையைப் போற்றுவோம்!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..