நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 30 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.... SONG # 14........திருவெம்பாவை.. பாடல் # 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்======காதுகளில் பொருந்திய 'குழை' என்ற ஆபரணம் ஆட, 

பைம்பூண் கலனாடக்=====பசும்பொன்னால் செய்யப்பட்ட  மற்ற ஆபரணங்கள் அசையவும்,  

கோதை குழலாட=====கூந்தலில் சூடிய நீண்ட மாலைகள் ஆடவும், 

வண்டின் குழாமாடச்=======மாலைகளை மொய்க்கும் வண்டுகளின் கூட்டம் அசையவும், 

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்

குளிர்ச்சியான நீர் பொருந்திய பொய்கையில் நீராடி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேத நாயகனான சிவபிரானைப் போற்றி, அந்த வேதப் பொருளான சிவபிரான்,  நமக்கு ஆகும் வண்ணம் பாடி (அதாவது, நாமே சிவனாகும் சிவசாயுஜ்யம்  கிட்ட வேண்டும் என்று பாடி), 

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி======சோதி உருவான இறைவனின் தன்மையைப் பாடி, 
இறைவன் திருமேனியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி,

ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்========இறைவன் அனைத்திற்கும் முதலாகிய திறனை வியந்து பாடி, இறைவன், அனைத்தையும் ஒடுக்கும் முறைமை குறித்துப் பாடி, 

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்
நம்மை நம் பக்குவ நிலைகட்கு ஏற்ப அருள் பாலித்து, ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தியருளும்,  வளையலை அணிந்த திருக்கரங்களை உடைய‌ அம்பிகையின் திருவடிகளின் தன்மையைப் பாடி ஆடுவாயாக!!

இந்தப் பாடல், நீராடும் மகளிர் இறைவனைத் துதித்துப் பாடியவாறே நீராடுதலைக் கூறுகிறது. அதோடு, இறைவனாரின் திருக்கூத்தின் மகிமையையும் புகழ்ந்துரைக்கிறது..

இதில் காணப்படும் முதல் சில வரிகள், இரு பொருள் பட அமைந்திருக்கின்றன. அவற்றை மட்டும் தருகிறேன்..

சிவபிரான், காதில் அணிந்திருக்கும்  குழையாட(குழை, தொடி என்பன இருபாலருக்கும் அணிகளாயின). 

அணிந்திருக்கும் அழகிய அணிகலனாகிய நாகங்கள் ஆட,

கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.(அப்பர் பெருமான்)

(இடப்பாகத்து உகந்த‌ உமையம்மை அணிந்திருக்கும் பசும்பொன்னாலாகிய அணிகலன்கள் அசைந்து ஆட என்றும் பொருள் கொள்ளலாம்.)

'கோதை குழலாட'===கோதை என்றால் மாலைகள் என்றும் ஒரு பொருள் உண்டு. விரிசடையில் அன்பர்கள் சூடிய மலர்மாலைகள் அசைந்தாட என்றும், கோதை = பெண் என்பதால் எம்பிராட்டி என்னும் பொருள் கொண்டு அம்பிகையின் குழலாட என்றும் பொருள் கொள்ளலாம்.

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ(று) அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்(கு) அல்லாத வேதியனை
ஐயா(று) அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். (மாணிக்கவாசகப் பெருமான்)

இதில் 'பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை' என்று உமையம்மையைப் போற்றும் வரியை நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம்..

முத்தி அடைய வேண்டும் என்கிற ஆவல் உயிர்க்கு ஏற்படவேண்டும். இந்த ஆவல் பெருகப் பெருக, அது உயிருக்கு, மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனி மூலமாக உயிருக்கு ஞானம் ஏற்படும்.

உயிரின் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நீங்கும் நிலை அடைதலே மலபரிபாகம்.

மலபரிபாகத்தின் பயனாக, இன்பத்தின் பால் விருப்பும், துன்பத்தின் பால் வெறுப்பும் கொள்ளாது இவற்றைச் சமமாகப் பாவிக்கும் இருவினை ஒப்பு ஏற்படும். இந்த நிலை எய்திய பின், சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

'மந்ததரம் என்பது, அரக்கு வெயிலில் உருகுவது போல.  மெழுகு வெய்யிலில் உருகுவது போல மந்தம்.   தீவிரம் என்பது நெய் சூட்டினால் இளகுவது போன்றது.  நெய் நெருப்பிலிட்டதும் உருகி ஒன்றுவது போன்றது தீவிரதரம்' என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள்.

இங்கு 'பேதித்து' என்பது சத்திநிபாதமாகிய இறையருள்வீழ்ச்சியையே சுட்டுகிறது..நான்கு வகைகளாக உயிரின் தன்மைக்கேற்ப நிகழும் சத்திநிபாதம், இறைவியின் பெருங்கருணையையே சார்ந்திருக்கிறது.

இதில், அரக்கு, மெழுகு,மற்றும் நெய் ஆகியவை மனிதரின் பக்குவ நிலைகளுக்கு ஒப்பிடப்படுகின்றது. இவ்வாறாக இருக்கும் வேறுபட்ட பக்குவ நிலைகளுக்கு ஏற்ப பலவித இன்பதுன்ப அனுபவங்களைத் தந்து அவர்களை உயர்த்துவது  இறைவியே!!.

ஒவ்வொரு மனிதரின் பரிபக்குவ நிலையும் வெவ்வேறு வகைப்படும். அவர்களுக்கு அருள்புரிந்து, அந்தந்த வகைகளுக்கேற்ப பல்வேறு அனுபவங்களின் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்தி, ஆன்மீக உயர்நிலையை அருளுவது அன்னை சக்தியின் செயலே!!.. மாயையின் மந்திரக்கோலை அவளன்றி வேறு யாராலும் விலக்க இயலாது.. மூடியிருக்கும் மாயையாகிய திரையை அவளே விலக்க வல்லவள். அதன் பின்னே பெருமானின் நல்லருள் வீழ்ச்சி உயிருக்குக் கிடைக்கும்..

இவ்விதம் அன்னை, உயிர்களுக்குத் தக்கவாறு அருள்புரிந்து உயர்த்துவதையே ' நம்மை வளர்த்தெடுத்து' என்றார்.

அம்மையப்பனைப் போற்றி அருள்பெறுவோம்!!..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. ஆன்மிக அலைவரிசையே உம்மை
  அன்போடு வணங்குகின்றோம்

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள பார்வதி,
  உங்கள் தமிழ் புலமை என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் எத்தனை விரிவாக திருவெம்பாவைக்கு விளக்கம் கூறி வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் இந்த சீரிய பணி.
  வாழ்த்துக்கள்.
  வல்லமை குழு மடலில் படித்துவிடுவதால் இங்கு உங்கள் பக்கத்திற்கு இவ்வளவு நாள் வரவில்லை. இன்று வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று. உங்களது மற்ற பதிவுகளையும் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..