நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 26 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI.. SONG # 10......திருவெம்பாவை..... பாடல் # 10


பாடல் # 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய மகளிர், நீராடலுக்காக நீர்த்துறையைச் சென்று அடைந்து, அங்கு தமக்கு முன்பாக வந்திருந்த, திருக்கோயிலில் பணி புரியும் மகளிரைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து, இறைவன் புகழைக் கூறித் துதிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பொருள்:

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

இறைவனின்  திருப்பாத கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாக,     சொற்களால் அளவிட முடியாதவையாக‌ இருக்கின்றன.. அவனது திருமுடியும், மேலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் மேலான, முடிவான‌ இடமாய் விளங்குகிறது.

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
அவன் திருமேனி ஒரு வகையானதல்ல.. மாதொரு பாகன் அவன். 

வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

வேதங்கள் முதலாக, விண்ணுலகத்தார்,  மண்ணுலகத்தார் யாவரும் துதித்தாலும், அவன் பெருமையை ஓதி முடிக்க இயலாது. நமக்குச் சிறந்த‌ தோழன். தொண்டர்கள் நடுவில் இருப்பவன். 

கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

குற்றமொன்றில்லாத குலத்தினராகிய‌, கோயில் பணிசெய்யும் பெண்களே!!. அவன் ஊர் எது?, பேர் எது?, உற்றவர் யார்?, அயலவர் யார்?, அவனைத் தக்கவாறு புகழ்ந்து பாடும் வகை என்ன?..

 'பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்'== பாதாளம் என்று தெளிவாகக் குறித்தமையால், இது பாதாளம் ஈறான கீழ் ஏழு உலகங்களைக் (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் ) குறித்தது.

'சொற்கழிவு பாதமலர்' என்றது சொல்லால் விவரிக்கவொண்ணாத பெருமையுடைய, இன்ன மாதிரியானது என்று அளவிடப்பட இயலாத திருவடித் தாமரைகள் என்பதைக் குறித்ததாம்..

இதன் மூலம் இறைவன் எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் என்பது உணர்த்தப்பட்டது.

'போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே'==='கொன்றை முதலான  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமுடியானது, மேலுள்ள பொருள் யாவற்றிற்கும் மேலான முடிவாக அமைந்தது' என்னும் பொருளில் சொல்லப்பட்டாலும் இது சற்றே ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

திருவடிகள் கீழ் ஏழு உலகங்களைத் தாண்டியும் நின்றது. ஆகவே, 'திருமுடி' என்ற குறிப்பினால், மேலிருக்கும் திருமுடியானது, மேலுலகங்கள் ஏழையும் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்) கடந்து நின்றது என்று பொருள் கொள்ளலாம்.

'எல்லாப் பொருள்முடிவே' என்றதால், மேலுள்ள அதாவது, மேலானதென்று கருதத்தக்க பொருட்கள் எல்லாவற்றிலும் மேலான பெருமையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். 'திருமுடி' என்ற குறிப்புச் சொல்லால், எல்லாவற்றிலும் உயர்ந்தவன் இறைவன் என்பது புலனாயிற்று..முடிந்த முடிவான மெய்ப்பொருள் இறைவனே!!

முதலில் பாதாளம் என்று உலகங்களை மட்டும் உணர்த்தியவர், இம்முறை எல்லாப் பொருள் என்று முடித்தது, அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் வியாபகத் தன்மையை உணர்த்த.

'வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்'

வார்த்தைகளால் ஓதி முடிக்க முடியாத‌ (உலத்தல்==முடிதல்), பெரும் சிறப்புடைய ஒரு தோழன் என்றது, இறைவனாரைக் காட்டிலும் சிறந்த தோழன் இல்லை என்பதை உணர்த்திற்று. இதன் மூலம், சமய நெறிகளுள்  ஒன்றாகிய 'சகமார்க்கம்' குறிப்பாக உணர்த்தப்படுகின்றது.

சிவநெறியில், யோகத்தை, சகமார்க்கம் அதாவது ஒத்து நிற்கும் தோழமை நெறி என்று கூறுவர். இறைவடிவை ஒத்தநிலை கிட்டச் செய்யும் நெறியாதலின் தோழமை நெறி எனப்பட்டது. யோகம் என்பது இங்கு அட்டாங்க யோகமே.

சன்மார்க்கமாகிய சுத்த ஞானத்தின் தன்மையை உடையது சகமார்க்கம்.

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.(திருமூலர்)

'தொண்டருளன்' இதை அடியார்கட்கு நடுவில் இருப்பவன் என்றும் அடியார்தம் உள்ளத்து இருப்பவன் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்..

இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.(ஔவையார்)

'கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்'==== முற்காலத்தில், பெண்கள், திருக்கோயிலில் பணிசெய்து வாழும் வாழ்வினை விரும்பி ஏற்கும் வகை இருந்தது. அப்படி விரும்புவாராயின், அவர்கள், திருக்கோயில் அருகில் இருக்கும் கன்னி மாடத்தில் வசிப்பர். இறைவன் திருக்கோயில் பணிகளான விளக்கிடுதல் முதலியவற்றை மேற்கொள்வர்..கோயிலிலிருந்து அளிக்கப்படும் உணவையே உண்டு வாழ்வர்.

இவ்வாறு வாழும் வாழ்வினை மேற்கொண்டவர்கள், பின்னாளில் இல்லறம் ஏற்க விரும்புவாராயின் அதற்குத் தடை ஏதுமில்லாதிருந்தது..நம்பிஆரூரரை மணந்த சங்கிலியார் முதலில் இவ்வாறு கன்னிமாடத்தில் வாழ்ந்து, பின் ஆரூரரை மணந்தார் என்ற கூற்று இருக்கிறது.

கோயிலுக்குப் பிணையானவர்கள், கோயிலோடு பிணைக்கப்பட்டவர்கள்  ஆதலினால் கோயில் பிணாப்பிள்ளைகாள் என்றார். 

இதற்கு, 'குற்றமொன்றில்லாத குலத்தையுடைய சிவனாரின் திருக்கோயில் பணி செய்யும் பெண்களே'  என்றும் ஒரு பொருள் கொள்ளலாம்.

ஏதவனூர்== 'அவனுக்கென்று ஒரு ஊர் இல்லை.. எல்லா ஊரும் அவன் ஊரே!!.. இவ்வுலகம் எல்லாம் அவனுடையது' என்ற பொருளில் இது, இறைவனின் எல்லாமான தன்மையைப் பேசுகிறது.

ஏதவன்பேர்==== 'அவனுக்கென்று ஒரு திருப்பெயரில்லை.. ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை உடையவன்' என்ற பொருளில், இது இறைவனின்  அளவில்லாத பெருமையை வியந்து கூறியது..

ஆருற்றார்==='அவனுக்கு உற்றவர்கள், உறவினர்கள் யார்?' என்ற பொருளில் இது அனைத்துலகமும்   இறைவனுக்கு உள்ளிருப்பவை. உறவாக நிற்பவை என்பதை உணர்த்திற்று. உயிர்களுக்கு உற்றவன் இறைவன் ஒருவனே என்பது மற்றொரு பொருளாம். உயிர்களுக்கு இறைவன் உறவு ஆதலின், இறைவனுக்கும் உயிர்களே உறவு..

'’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’(அப்பர் சுவாமிகள்)

'ஆரயலார்'===இறைவனுக்கு அந்நியர் யார்? என்ற பொருளில், அந்நியர் யாருமில்லை என்பதை அறிவித்து, அவனைக் கடந்ததொரு பொருளில்லை என முடிந்தது.

"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.” (திருத்தெள்ளேணம்1)

'ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.'அத்தகைய சிறப்புப் பொருந்திய இறைவனைப் பாடும் வகை என்ன? என்று கோயிற் பணி செய்யும் பெண்களிடம் வினவுகிறார்கள் பாவை நோன்பு நோற்பவர். இறைவனுக்கு அருகே இருந்து பணி செய்யும் பெண்கள் என்பதால், அவனைப் பாடும் வகையை இறைவனார் அருளியிருக்கக் கூடும் என்று நினைத்து வினவுகின்றார்கள்... 'இறைவனைக் குறித்துச் சிறந்த வகையில் போற்றிப் பாடுவது என்பது இயலாத ஒன்று' என்று வியந்து கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!!!!!

'திருத்தெள்ளேணம்' பாடலை நினைவுபடுத்திய தோழி மேகலாவிற்கு என் மனமார்ந்த நன்றி

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்

3 கருத்துகள்:

 1. குற்றாலத்துறை ஈசனை நினைவுபடுத்தியதும்
  குளிர்ந்தது மனம்.. பனித்தன கண்கள்..

  தொடருங்கள்.. பின்
  தொடருகிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இறைவனுக்கு சொல்லுங்கள்..
   நாங்கள் உங்களுக்கு சொல்கின்றோம்,,

   இறைவனை எங்கள்
   இதயத்தில் கொண்டு நிறுத்துவதற்கு..

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..