நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

THIRUVEMPAAVAI... SONG # 11...திருவெம்பாவை....பாடல் # 11

Image result for lord siva images
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.

இப்பாடல், தோழியர் எல்லாம் ஒருங்கு கூடி நீராடுங்கால்,இறைவனாரின் பெருமையைப் போற்றி உரைத்தது..

ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி 

நிறைந்து ஒளி வீசும் நெருப்பு போன்ற செந்நிறம் உடையவனே!!..வெண்மை நிறமான திருநீற்றில் மூழ்கியவனே!!...

செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா

எங்கள் செல்வமாகிய ஈசனே!!.. சிற்றிடையையும், மை பூசிய கருவிழிகளையும் உடைய மடந்தையான  உமையின் மணவாளனே!!.. அழகனே!!!..

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் 

வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்களையுடைய அகன்ற தடாகத்தில், 'முகேர்' என்ற ஒலி எழும்படி, புகுந்து, கரங்களால், குடைந்து, குடைந்து மூழ்கி எழுந்து, உன் திருவடிகளைப் பாடி, பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் வாழ்ந்தோம்..

நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

நீ எங்களை ஆட்கொண்டருளும்  பொருட்டுச் செய்யும் விளையாடல்களினால் , துன்பங்கள் நீங்கி இன்பம் பெறுபவர்கள், அவற்றை எந்தந்த வகைகளில் பெறுவார்களோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பெற்று முடித்தோம்!!..

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.

இனி மீண்டும் இந்தப் பிறவிச் சுழலில்  அழுந்தி இளைக்காமல் எங்களைக் காப்பாயாக!!!...

இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.....

இப்பாடலில், பின் வரும் வரிகளில் இறைவனைப் போற்றி, விளித்தமையால், அவற்றை முன் கொண்டு பொருள் கொள்ளலாயிற்று..

 ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா....செந்நிறமுடைய உடலெங்கும் திருநீறு பூசி அருளினார் ஆதலின், 'வெண்ணீறாடி' என்றார். 'விபூதி' என்பது செல்வத்தையும் குறிக்கும்..நித்யவிபூதியையும் குறிக்கும்.. பிறவி எடுத்தவர்கள் பெற வேண்டிய செல்வம் சிவனார் ஆதலின் 'செல்வா' என்றார்.

'சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா'..முந்தைய பாடலில் உமையை 'பேதை ' என்றவர், இங்கு 'மடந்தை' என்கிறார்..பெண்களின் ஏழு பருவங்களுள் ஒன்றான 'மடந்தை' திருமணமான பெண்ணைக் குறிக்கும்..மடந்தையை மணந்தவன் என்ற குறிப்பினால், இறைவன் போக வடிவமாய் இருப்பது உணர்த்தப்பட்டது.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி=

மொய்யார் என்பதற்கு, மொய் ஆர் எனப் பிரித்து.. நெருங்குதல் என்னும் பொருளையும் கொள்ளலாம்.. நெருங்கி நீராடுதல் பொருட்டு, முகேர் என்ற ஒலி வரும்படி, பொய்கையுள் புகுந்ததாகக் கொள்ளலாம்..

கையாற் குடைந்து, குடைந்துன் கழல்பாடி==மிகவும் ஆழ்ந்து தியானிப்பதன் மூலம் இறைவன் திருவடி தரிசனம் பெறலாம்... 'குடைந்து, குடைந்து' என்பது மேன்மேலும் ஆழ்ந்து இறைவனை சிந்திப்பதைக் குறித்தது..

நீராடும் போது, இறைவனாரைத் துதிக்கின்றார்கள்.. உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனாரைத் துதித்து நீராடும் பாங்கு, மானசீக பூஜைக்கு ஒத்தது.. ஆகவே  இது கிரியையாகிய சற்புத்திர மார்க்கத்தைச் சொல்வதாகும்.. 

'நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்'===இறைவனார் புரியும் ஐந்தொழில்களும் அவருக்கு விளையாட்டே..

'சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம் உயிர்க்கு'(அருணந்தி சிவாச்சாரியார்)...

ஐந்தொழில்களையும் உயிர்களை ஆட்கொண்டருளும் பொருட்டே விளையாடல் போல் இறைவனார் செய்கிறார்.

'வழியடியோம்' என்று பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் என்பதைத் தோழியர் முன்னர் குறிப்பிட்டபடியால், இவர்கள் புண்ணிய ஆத்மாக்களே!!... 'குடைந்து, குடைந்து நீராடி வாழ்ந்தோம்' என்றதால், இவர்கள் பல பிறவிகளாக சாதகர்களே என்பதும் விளங்கியது. வீடு பேறு எய்துதற்கு, செய்த புண்ணியத்துக்கான பலன்களையும் அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும்..அந்த வகையில், வெவ்வேறு உலகங்களில், இன்பங்களை பல படிகளில் நுகர்ந்து முடித்தோம் என்றார்கள்..

இந்த வரியை இன்னும் கொஞ்சம் நுட்பமாக விளக்க விரும்புகிறேன்.. மனித ஆத்மா, ஸ்தூல சூட்சும, காரண சரீரங்களுக்குள் அடைபட்டிருக்கிறது..ஸ்தூல உடலை விட்ட சாதகர்கள், தங்கள் சூட்சும கர்ம வினைகளிலிருந்து விடுதலையாக வேண்டி, புதிய சூட்சும உடலில் பிறப்பெய்தி, சூட்சும உலகத்திற்குச் செல்கிறார்கள்.. அங்கு முழுமை எய்திய பின்னர், காரண உலகத்திற்குச் செல்ல வேண்டும்.

இவ்வாறு பல பிறப்புகள் எடுத்து, பலன்களை முழுவதுமாகத் தீர்த்து விட்டோம்.. என்கிறார்கள் தோழியர்.

'உய்வார்கள்' என்பதனால், இறைவனடியாராகி, துன்பம் நீங்கப் பெற்று இன்பம் பெற்றமை தெளிவுபடுத்தப்பட்டது.

'உய்ந்து ஒழிந்தோம்' என்பதனால், பலன்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தமை புலப்படுத்தப்பட்டது.. ஆகவே, 'நீ எங்களுக்கு வீடு பேறு அருளல் வேண்டும் என்றனர்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!!

வெற்றி பெறுவோம்!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. செம்மேனி எம்மான் என
  செந்நிற மேனியான் என

  சேர்ந்தறியா கையானை குறித்தது சிறப்புக்குரியது உங்கள் நட்பில்
  சேர்த்த இறைவனுக்கு இன்னொரு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் எப்போதும் முப்போதும் இறையானாருக்கு நன்றி தெரிவிப்போம்!!!!.. ஐயன் கருணை அளவில்லாதது!!... மிக்க நன்றி!!.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..