ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், , பெரியோர்களால் நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.. தினம் ஒரு தசகமாக, நாராயணீயம் பாடித் துதித்த ஸ்ரீபட்டத்திரி, கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், ஸ்ரீமந் நாராயணீயத்தை நிறைவு செய்ய, அன்றே ஸ்ரீ குருவாயூரப்பன் தன் திவ்ய தரிசனத்தை அவருக்கு அளித்தருளினான்!!!!.. பெரியோர்கள் பலரும், கார்த்திகை மாதம் 28ம் நாளை 100வது தினமாகக் கொண்டு, அதற்கு முன்பாக 100 தினங்களை எண்ணி வைத்துக் கொண்டு, தினம் ஒரு தசகமாகப் பாராயணம் செய்து, கார்த்திகை மாதம் 28ம் நாள், 100வது தசகத்தைப் பாராயணம் செய்து நிறைவு செய்வது வழக்கம். மஹான்கள் பலரும் இவ்விதம் செய்து ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்றமையை அவர்கள் திவ்ய சரிதங்களின் வாயிலாக நாம் அறியலாம். இன்றே பவித்ரமான அந்த நாள்!.. ஸ்ரீ குருவாயூரப்பனையும், பட்டத்திரியையும் போற்றித் துதி செய்து, ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை நாம் தியானிக்கலாம்!..ஸ்ரீமந் நாராயணீயத்தை, ராகத்துடன் பாடுகையில். ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடுவது வழக்கம்..குகைக்குள் (பிலத்தில்) இருந்து மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு வரும் சிம்மம் போல், பரமாத்மா, தன் தாயின் திருவயிற்றில் இருந்து இவ்வுலகில் அவதரிக்கும் மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடித் துதிப்பர்!.
எம்பெருமானின் அவதார காலம் நெருங்கிய போது, வானவெளியானது, பகவானின் கரிய திருமேனியிலிருந்து கிளம்பிய ஒளிக்கூட்டத்தை ஒத்த கரிய மேகங்களால் மறைக்கப்பட்டு, இருண்டு விளங்கியது!!...மழை நீரால், எல்லா திக்குகளும் நன்கு குளிர்ந்தன!!..
நல்லோர் மனங்களெல்லாம், தாம் எண்ணிய விருப்பம் கைகூடுவதை உணர்ந்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிய வேளையில், நடு இரவில் மூவுலகின் துன்பங்களனைத்தையும் தீர்க்கும் பரமாத்மா, இப்பூவுலகில் அவதரித்தருளினார்!!!!...
(ஆஸா²ஸு ஸீ²தலதராஸு பயோத³தோயை
ராஸா²ஸிதாப்திவிவஸே²ஷு ச ஸஜ்ஜனேஷு |
நைஸா²கரோத³யவிதௌ⁴ நிஸி² மத்⁴யமாயாம்ʼ
க்லேஸா²பஹஸ்த்ரிஜக³தாம்ʼ த்வமிஹா(அ)விராஸீ: || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
வடிவில் குழந்தையாயிருந்தாலும், ஈஸ்வர லக்ஷணங்களை உடையவராய், ஒளிவீசும் கிரீடம், கங்கணம், தோள்வளை, ஹாரம் முதலிய பிரகாசிக்கும் ஆபரணங்களையெல்லாம் தரித்த திருமேனியுடன், சக்கரம், கதை, தாமரை மலர் இவைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் கூடியவராக, நீலமேக சியாமள வண்ணனாக, பிரசவ அறையாக மாறிய சிறைச்சாலையில் பிரகாசித்தார்....நாராயண நாராயண நாராயண நாராயணா!!!...
'அகலகில்லேன்' என்று, அகலாது எம்பெருமானின் திருமார்பில் நித்யவாசம் புரியும் திருமகளும் அவரது திருமேனியில் ஒளிவீசினாள்!!!.
எம்பெருமானது குழந்தை வடிவிலான திருமேனி, அதில் ஆபரணங்களும், சர்வாயுதங்களும்... அவரது திருமார்பில், மிகச் சிறிய, அழகிய வடிவில் தாயார் லக்ஷ்மி தேவி!... பார்க்கவே பரவசமானது தேவகிக்கும் வசுதேவருக்கும்..
லக்ஷ்மி தேவி, எம்பெருமானின் திருமார்பில் இருந்த படியே திசையெங்கும் நோக்கினாள்!!...எம்பெருமானின் அவதார இடம், அவளது புகுந்த வீடும், அதாவது அவள் இடமும் அல்லவா?!..இது என்ன, இது இப்படி இருக்கிறது??!!...ஒரே இருட்டு!.. சுத்தக் குறைவான சிறைச்சாலை!!...பார்க்க முடியவில்லையாம் அவளுக்கு!!!.. தன் இடமல்லவா!!.. தன் திருவிழி நோக்காலேயே எல்லா இடமும் பெருக்கி சுத்தம் செய்தாளாம்... அந்த இடமெங்கும் காணப்பட்ட, துஷ்டனாகிய கம்சனால் ஏற்படுத்தப்பட்ட அலக்ஷ்மீகரம் அகற்றப்பட்டு, ஒரே நொடியில் அந்த இடமெல்லாம் லக்ஷ்மீகரம் பொங்கப் பிராகாசித்தது!!!!..அங்கே மங்களகரமாகக் காட்சியளித்தான் பரமாத்மா!!..
(மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே. (பெரியாழ்வார்) ).
பரமாத்மாவை, கேசாதி பாதம் தரிசிக்கும் பேறு பெற்றார் வசுதேவர்!!. ஞானிகளான முனிவர்களின் மனதிற்கும் எட்டாத பகவானின் திருவடிகளை தம் விழிகளால் தரிசித்து, பேரானந்தமடைந்தார். ஆனந்தக் கண்ணீர் பெருக, மெய்சிலிர்க்க, அன்பினால் உருகி நெகிழும் குரலுடையவராகி, மனங்கனிந்து, பூவிருக்கும் தேன் போன்று இனியவரான பரமாத்மாவை வசுதேவர் துதித்தார்!!!.
நாம், நம் வினைகளால் பிணைக்கப்பட்டு, கைதி போலவே இவ்வுலகமாகிய சிறைச்சாலையில் வசிக்கிறோம்!.. அஞ்ஞானத்தால் இருண்ட நம் மனக்குகையில் உள்ளே, அகண்ட ஜோதி போல் பிரகாசிக்கும் பரமாத்மாவை உள்ளபடி உணரும் நன்னாளில், விலங்குகள் நீங்கி விடுதலையாவோம்!!.. அந்த பாக்கியத்தை அருள வேண்டி நாமும் எம்பெருமானைப் பிரார்த்திப்போம்!!..
தொடர்ந்து தியானிக்கலாம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..