மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவராகி, தம் நெஞ்சாரத் துதித்துத் தொழுதார்!..'தேவ தேவனே!, துன்பக் கட்டுக்களை நீக்க வல்லானே!, கருணை நிறைந்த தங்களுடைய கடைக்கண் பார்வையால், வருத்தங்களை எல்லாம் போக்கி அருள வேண்டும்!!' என்றெல்லாம் பலவாறாகத் துதித்துத் தொழுதார் வசுதேவர்!..
தேவகியும், விழிகளில் நீர் பெருக, பரமாத்மாவின் உத்தம குணங்களைப் போற்றித் துதித்தாள்!.. அவர்கள் இருவருக்கும், பகவான் அவர்களது முற்பிறவிகளைக் குறித்த செய்தியைத் தெரிவித்து, அவர்கள் பெற்ற வரத்தினால், இப்பிறவியிலும் அவர்களுக்குத் தான் மகவாக வந்துதித்ததை அறிவித்தார் !..
ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில், தேவகி, ப்ருச்னி என்பவளாகவும், வசுதேவர், ஸூதபஸ் என்ற பெயரில், பிரஜாபதியாகவும் பிறந்திருந்தனர். அவர்கள் இருவரும் பகவானை நோக்கித் தவமிருந்து, அவர் தரிசனமும் பெற்றனர். அச்சமயம், பகவானது மாயையினால், அவர்களிருவரும் மோக்ஷத்தைக் கோரவில்லை.. பகவானை ஒத்த புத்திரனையே மும்முறை வேண்டினார்கள்!.. ஆகையால், பகவான், அந்தப் பிறவியில் அவர்களுக்கு 'ப்ருச்னி கர்ப்பன்' என்ற திருநாமத்துடன் புத்திரனாக அவதரித்தார்!...அடுத்த பிறவியில், அவர்கள், அதிதியாகவு ம் காச்யபராகவும் பிறந்திருந்த போது, வாமனனாக அவதரித்தார்!.. இந்தப் பிறவியில், ஸ்ரீ க்ருஷ்ணனாக அவதரித்தருளினார்!.
இது குறித்துத் தெரிந்து கொண்ட போதிலும், தாய் என்ற நிலையிலிருந்து மாற இயலாதவளாக, தேவகி, பகவானை, மனிதக் குழந்தை ரூபமெடுத்துக் கொள்ளும்படி வேண்ட, பகவானும் அவ்வாறே செய்தார்.
( பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண்முலை யீர்வந்து காணீரே.(பெரியாழ்வார்) ).
அதன் பின்னர், பகவானின் கட்டளைப்படி, வசுதேவர், குழந்தையை கோகுலத்தில் நந்தகோபர் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டார். யோகிகள், சதா, தம் மனத்துள் தியானிக்கும் பரமாத்மாவை, தாமரை மலர் மீதிருக்கும் அன்னப் பறவையின் குஞ்சு போன்ற் அழகிய தோற்றமுடையவரை, தம் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டார்.
( த்வத்ப்ரேரிஸ்ததத³னு நந்த³தனூஜயா தே
வ்யத்யாஸமாரசயிதும்ʼ ஸ ஹி ஸூ²ரஸூனு: |
த்வாம்ʼ ஹஸ்தயோரத்⁴ருʼத சித்தாவிதா⁴ர்யமார்யை
அம்போ⁴ருஹஸ்த²கலஹம்ʼஸகிஸோ²ரரம் யம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
பகவான் கைக்கு வந்ததும், விலங்குகள் அகன்றன. சிறைச்சாலையின் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. பகவான் வசப்பட்டால், பிறவித் தளையே அகலும் போது, இவையெல்லாம் எம்மாத்திரம்!!.. யோகமாயையின் பிரபாவத்தால், காவலர்கள் உள்பட, நகரத்திலிருந்தோர் அனைவரும், நன்றாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
கொட்டும் மழையில், ஆதிசேஷனால் குடை பிடிக்கப்பட்டு, அவர் தம் சிரத்தில் ஒளிரும் நாகரத்தினங்களால் வழிகாட்டப்பட்டு, வசுதேவர் யமுனைக் கரையை அடைந்தார். வானைத் தொடுவதைப் போன்ற உயர்ந்த நீர்ப்பிரவாகத்தை உடைய யமுனையானவள், பகவானது திருவடிகளை ஸ்பரிசித்ததும், கணுக்காலளவானாள்.
( மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். (ஸ்ரீ ஆண்டாள்) ).
கோகுல பாலனை கரங்களில், ஏந்தி, கோகுலத்தில் பிரவேசித்தார் வசுதேவர்!..அங்கும் அனைவரும் உறங்கியபடி இருந்தனர். யோக மாயையானவள், தானிருக்கும் இடத்தை, வசுதேவருக்குத் தெரியப்படுத்த வேண்டி, மெல்ல அழுதாள்!.. அழுகுரல் வந்த திசை நோக்கி நடந்த வசுதேவர், நந்தனின் இல்லத்தில் நுழைந்து, தம் கரத்திலிருந்த குழந்தையை, பிரசவ அறையிலிருந்த யசோதையின் அருகில் விட்டு விட்டு, அவளருகில் இருந்த மஹா மாயையான பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு, விரைந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்!.
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..