மாயையானவள், தேவகியின் கரம் சேர்ந்தாள்!.. விலங்குகள் தாமாகப் பூட்டிக் கொண்டன. சிறையின் கதவுகள் அடை பட்டன. பகவானின் தங்கையாகப் போற்றப்படும் யோக மாயை, பெருங்குரலெடுத்து அழுதாள்!. அந்த அழுகுரலைக் கேட்ட சிறைக் காவலர்கள், ஓடிச் சென்று கம்சனிடம், தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தியைச் சொன்னார்கள்!.. தலைவிரி கோலமாக சிறைச்சாலை நோக்கி ஓடி வந்த கம்சன், தன் தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தை இருக்கக் கண்டு கலங்கினான்!!. 'இது கபடசாலியான மதுசூதனனின் மாயையே!' என்று தீர்மானித்த அவன், தேவகியின் கரங்களிலிருந்த, பிறப்பற்றவளும் பகவானின் தங்கையுமான அந்தக் குழந்தையை, குளத்திலிருக்கும் தாமரைக் கொடியை ஒரு யானை பிடுங்குவது போல் பிடுங்கி, பாறையில் ஓங்கி அடித்தான்!!..
பகவானை பூஜிக்கும் பக்தன், எவ்விதம் யமனின் பாசக் கயிற்றிலிருந்து அதிவிரைவில் விடுபடுவானோ, அவ்விதம், அந்த யோகமாயை கம்சனின் கையிலிருந்து விடுபட்டு, தரையில் படாமல், ஆகாயத்தில் கிளம்பி, ஆயுதங்கள் பிரகாசிக்கும் எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, வேறு திருவுருவடைந்து ஆச்சரியமாக விளங்கினாள்!!..
'கொடுமை மிக்கவனே!.. என்னைக் கொல்ல முயற்சி செய்வதால் உனக்காவதொன்றுமில்லை!.. உன்னைக் கொல்பவன் எங்கோ பிறந்திருக்கிறான்!!.. உன்னுடைய நன்மையைத் தேடிக் கொள்!' என்று இரக்கமற்ற கம்சனிடம் கூறிவிட்டு, யோகமாயையானவள், மருத் கணங்களால் துதிக்கப்பட்டவளாக, புவியில், பல இடங்களிலும் கோயில் கொண்டு அருள்பவளாக, உடன் மறைந்து விட்டாள்!!.
மறு நாள் காலையில், இது குறித்துக் கேள்விப்பட்ட, பூதனை, பகன், பிரலம்பன் முதலான அசுரர்கள், தங்கள் அரசனான கம்சனைக் கொல்வதற்காக, புதிதாகப் பிறந்துள்ள குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தார்கள். அந்தக் குழந்தை எது என்று தெரியாத காரணத்தால், புதிதாகப் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்லும் எண்ணத்துடன், நாட்டில் சுற்றியலைந்தார்கள்.
மதுரா நகரம் இவ்விதம் இருக்க, ஆயர் பாடியோ ஆனந்த வெள்ளம் தன்னை மூழ்கடிக்கக் காத்திருப்பதை அறியாது,புலர்ந்த பொழுதினை எதிர் கொண்டது. நந்த பாலன், தன் குட்டிக் கால்களை சற்று அசைத்து, அழுதருளிய போது, யசோதையுடன், பிரசவ அறையில் படுத்திருந்த பெண்கள், உறக்கம் கலைந்து எழுந்திருந்தனர். சொல்லவொண்ணா உற்சாகத்துடன் அவர்கள், யசோதைக்கு புத்திரன் பிறந்த செய்தியை எங்கும் அறிவித்து மகிழ்ந்தனர்!..
யசோதை பெற்ற பேறு தான் என்னே!.. 'ஜகதி புண்யவந்தோ ஜிதா:' 'புண்ணியம் செய்தவர்களையெல்லாம் யசோதை வென்றவளாகி விட்டாள்!' என்று வர்ணிக்கிறார் பட்டத்திரி!!..தன் நெடு நாள் ஏக்கம் தீர்ந்தவளான யசோதை, காயாம்பூவின் நிறத்தில், மனதைக் கவரும் அழகுடன் விளங்கிய குழந்தையின் சௌந்தரியத்தை விழிகளால் பார்த்து மகிழ்ந்தாள்!..பின், குழந்தையின் மனங்கவரும் உடலைத் தொட்டு, தூக்கி, பாலூட்டினாள்!..
( அஹோ க²லு யஸோ²த³யா நவகலாய- சேதோஹரம்ʼ
ப⁴வந்தமலமந்திகே ப்ரத²ம-மாபிப³ந்த்யா த்³ருʼஸா² |
புன: ஸ்தனப⁴ரம்ʼ நிஜம்ʼ ஸபதி³ பாயயத்யா முதா³
மனோஹர தனுஸ்ப்ருʼஸா² ஜக³தி புண்யவந்தோ ஜிதா: || (ஸ்ரீமந் நாராயணீயம்)).
( தத்துக் கொண்டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான். (பெரியாழ்வார்) ).
இதைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கினார் நந்த கோபர். குழந்தையின் நலத்துக்காக, தான தர்மங்கள் செய்தார். யாதவர்களின் மகிழ்ச்சியோ அளவிட முடியாததாக இருந்தது.. ஸ்ரீமத் பாகவதம், யாதவர்கள், ஒருவர் மேல் ஒருவர் பாலும் தயிரும் நீரும் வாரியிறைத்து, தங்கள் அடக்க முடியாத ஆனந்தத்தைக் கொண்டாடியதாகத் தெரிவிக்கிறது!!... எங்கும் மங்கள வாத்தியங்கள் முழங்கின!!.. கோப கோபியர்கள் பிறவிப் பயன் எய்தினர். அன்பர்களுக்கு அன்பன் ஆயர் பாடியில் தன் லீலையைத் துவங்கினான்!!...
( ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே. (பெரியாழ்வார்) ).
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். (ஸ்ரீ ஆண்டாள்).
அடுத்து.. பூதனையின் மோக்ஷம்!
தொடர்ந்து தியானிப்போம்!!.
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்
இது அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..