நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART .31...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.31 தேவாதி தேவன் திருவடியே சரண்!!.

Image result for lord  devaki, vasudeva
பூர்ணாவதாரம்' என முக்தர்களும் பக்தர்களும் துதிக்கும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கான பூர்வ காரணங்களை முதலில் சொல்லத் துவங்குகிறார் பட்டத்திரி!.. முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில், காலநேமி முதலான அசுரர்கள், எம்பெருமானின் திருக்கரங்களால் கொல்லப்பட்டாரெனினும், அவர்களது புண்ணிய, பாப மிகுதிகளின் காரணமாக அவர்களால் உத்தம கதியை அடைய இயலவில்லை.. அதாவது, அவர்களது  இருவினைகள் முற்றிலுமாகத் தீராது, எஞ்சி நின்றன. அதன் காரணமாக, அவர்கள் பூமியில் மீண்டும் பிறந்தனர். இதுவும் எம்பெருமானின் திருவுளமே!!..
முன்பு எடுத்திருந்த அசுரப் பிறவிகளின் குணம், இப்பிறவியிலும் அவர்களை விட்டு அகலாததன் காரணமாக, அவர்கள் பல கொடுமைகளைச் செய்யத் தலைப்பட்டனர். விளைவு, பூ பாரத்தால்,  பூமி தேவி மிகவும் துன்புற்றாள். தேவர்களுடன் பிரம்ம லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரிடம் முறையிட்டாள்!!.

'கஷ்டம், கஷ்டம்!!.. துஷ்ட அசுரர்களுடைய  பாரம் தாங்காது, துன்பக் கடலில் விழ இருக்கும் என்னைக் காத்தருள வேண்டுகிறேன். என் நிலையை தாங்கள், இந்த தேவர்களிடம் கேளுங்கள்!' என்றெல்லாம் பலவாறாக புலம்பியவாறு நின்ற பூதேவியையும், தேவர்களையும் நோக்கிய பிரம்ம தேவர், பகவானைத் தியானிக்கலானார்.

பின் அவர் தேவர்களிடம், 'தேவர்களே, பூதேவி கூறியது முற்றிலும் மெய்யல்லவா!!.. நம்மையெல்லாம் காப்பாற்றவல்லவர், லக்ஷ்மிபதியாகிய பகவான் ஒருவரே!!.. ஆகவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, பரமேஸ்வரனை முன்னிட்டுக் கொண்டு, பாற்கடலுக்கு விரைவாகச் சென்று, அவரைத் துதிப்போம்!!' என்று கூறினார். அதன்படி, அனைவரும் திருப்பாற்கடலை சென்றடைந்தார்கள்.

யாவர்க்கும் புகலாய் விளங்குபவன் பரமாத்மா ஒருவனே!. அவன் சரணல்லால் ஏது சரண்?!!.. அதை உணர்ந்து,அனைவரும் ஒன்றிணைந்து, பகவானின் திருவடி தியானத்தில் மனதை நிலை நிறுத்தினார்கள்!. 

( 'பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே'

என்ற நம்மாழ்வார் திருவாக்கினை இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்).

அப்போது பிரம்ம தேவர், பகவானின் திருவாக்கினை மனதால் உணர்ந்தார். அனைவரும் மகிழும்படியாக, அதைக் கூறத் துவங்கினார்.  'நான் பரமாத்மாவால் இவ்விதம் கூறப் பெற்றேன். அந்தத் திருவாக்கினைக் கேளுங்கள்...'நான் தேவர்கள், பூதேவி முதலானவர்களின் துன்பங்களை அறிவேன். அதைப் போக்கும் பொருட்டு, எமது பூர்ண கலையுடன், யாதவ குலத்தில் அவதரிக்கிறேன். தேவர்களும் தத்தம் அம்சங்களுடன் விருஷ்ணி குலத்தில் பிறக்கட்டும். தேவ ஸ்திரீகளும், எம் சேவைக்காக, பூமியில் பிறக்கட்டும்' என்று பகவான் ஆக்ஞாபித்தார்' என்றுரைத்தார் பிரம்ம தேவர். 

( ஜானே தீ³னத³ஸா²மஹம்ʼ தி³விஷதா³ம்ʼ பூ⁴மேஸ்²ச பீ⁴மைர்ந்ருʼபை
ஸ்தத்க்ஷேபாய ப⁴வாமி யாத³வகுலே ஸோ(அ)ஹம்ʼ ஸமக்³ராத்மனா | 
தே³வா வ்ருʼஷ்ணிகுலே ப⁴வந்து கலயா தே³வாங்க³னாஸ்²சாவநௌ
மத்ஸேவார்த²மிதி த்வதீ³யவசனம்ʼ பாதோ²ஜபூ⁴ரூசிவான் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

செவிக்கு இன்னமுதம் போன்ற இந்த வார்த்தைகளைக் கேட்டு, அனைவரும் கவலை நீங்கிச் சென்றனர்.  

( பூலோகத்தில்,  எம்பெருமான் திருவுளப்படி) பகவானது ஸாந்நித்யத்தால், புண்ணியம் நிறைந்திருந்த மதுராபுரியில், சூரஸேன மன்னருடைய புதல்வரான வசுதேவர், பரம பாக்கியவதியான தேவகியை மணந்தார்.

விவாக தினத்தில்,  மணமக்களை, தேவகியின் சகோதர முறையான கம்சன் தேரில் அழைத்துச் சென்றான். தானே தேரோட்டிக் கொண்டு, அவன் புறப்பட்டுச் செல்கையில், எம்பெருமானது அசரீரி வாக்கை, ஆகாயத்தில் கேட்டான்!.. 'இவளது (தேவகி) எட்டாவது குழந்தை, உன்னைக் கொல்வான்!' என்றுரைத்த அசரீரி வாக்கைக் கேட்டு திடுக்கிட்ட அவன், தேவகியைக் கொல்வதற்காக, கத்தியை ஓங்கினான்!!!!!.

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..