நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 14 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 27..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.27. ஆத்ம ஜோதியில் புகுந்தார்!.

Related image
வானரர்களால் பல திக்குகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பாறைகளால் அணை கட்டி, ஸ்ரீராமர் இலங்கையை அடைந்தார்!. மரங்களும் குன்றுகளுமே ஆயுதங்களாகக் கொண்டு, வானரர்கள் போர் புரிந்தனர்!. ஸ்ரீ ராமர்  தம் இளையவருடன் சேர்ந்து போர்க்களத்தில் தமது பராக்கிரமத்தைக் காண்பிக்கும் பொழுது,  இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு, பின், கருடனின் சிறகுகளால் வீசப்பட்ட காற்றுப் பட்டு, விரைவில் விடுவிக்கப்பட்டார்!. பின் நடந்த போரில், சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்ட லக்ஷ்மணரின் சுவாசம் நின்று போக, பிறகு அவர், ஹனுமாரால் கொண்டு வரப்பட்ட ஔஷத மலையிலிருந்த சஞ்சீவினி மூலிகையால் பிராணனை அடைந்தார். மாயையின் பெருமையால் ஆணவம் கொண்டிருந்த இந்திரஜித்தை, லக்ஷ்மணர் முடித்தார். 

ஸ்ரீராமர், பூமி அதிருமாறு நடந்து வந்து, தம் வானர‌ சேனைகளையே உணவாக உண்ணத் தொடங்கிய கும்பகர்ணனை வதம் செய்தார். தேவேந்திரன் அளித்த கவசத்தையும் தேரையும் ஏற்று, ராவணனுடன் போர் புரிந்து, அவனுடைய கழுத்து வரிசையை வெட்டி, அவனை முடித்தார்!. அக்னி பிரவேசத்தால் புனிதமடைந்த சீதா தேவியை ஏற்றார் (ஸ்ரீராமரால், அக்னியிடம் சீதா தேவி ஒப்படைக்கப்பட்ட நிகழ்வும், சாயா சீதா குறித்தும் அத்யாத்ம ராமாயணம் விரிவாகப் பேசுகிறது).. போரில் மாண்ட வானரர்கள் அனைவரும், அச்சமயம் அங்கு வந்திருந்த தேவ கணங்களின் பிரசாதத்தால் மீண்டும் உயிர்த்தெழுந்தன. லங்காதிபதியான விபீஷணருடனும், வானர சேனையுடனும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு, ஸ்ரீராமர், அயோத்திக்கு எழுந்தருளினார்.

( குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே (குலசேகராழ்வார்) ).

திவ்யமான பட்டாபிஷேக வைபவத்திற்கு பின், ஸ்ரீராமர், பத்தாயிரத்திற்கும் அதிகமான வருஷங்கள் அயோத்தியில்  வசித்தார் (இதற்கு வேறு விதமான கணக்கும் சொல்லப்படுகிறது).. ஆயினும் சொல்லொணாக் கஷ்டம்!!.. மக்களின் அபவாதப் பேச்சால், வேறு வழியின்றி, சீதையைத் தியாகம் செய்தார்!.. லவணாசுரனை, சத்ருக்னனைக் கொண்டு அழித்தார். அப்போது, கர்ப்பிணியாக, வால்மீகி ஆசிரமத்தில் வசித்து வந்த‌  சீதை, குச லவர்களைப் பிரசவித்தாள்!!.

வால்மீகி முனிவரின் கட்டளையால், ஸ்ரீராமரின் யாக சாலையில், குச லவர்களால் ராமாயணம் கானம் செய்யப்பட்டது. அச்சமயம், ஸ்ரீராமர் சீதையை அங்கு காண விரும்பியதால், அங்கு வந்த சீதை, பூமிக்குள் பிரவேசித்தாள். பிறகு, ஸ்ரீராமர், காலதேவரால் வைகுண்டம் திரும்பும்படி பிரார்த்திக்கப்பட்டார். அந்த நேரத்தில், லக்ஷ்மணர், தம் பூலோக வாழ்வை நிறைவு செய்யும்படியாகவும் ஆனது!. பிறகு, தம் பரிவாரங்களுடன், ஸ்ரீராமர், தேவலோகத்திற்கு புறப்பட்டு, தம் ஆதி வாசஸ்தலமான ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளினார்!!!. இதை, ஸ்ரீமத் பாகவதம், 'தண்டகாரண்யத்தின் முட்களால் ரணப்பட்ட தமது திருவடிகளை, தியானம் செய்யும் பக்தர்களின் இதயத்தில், வைத்து விட்டு, ஸ்ரீராமர் ஆத்ம ஜோதியில் புகுந்தார்' என்று உருக்கமாக உரைக்கிறது.

இவ்வாறு சொல்லி வந்த பட்டத்திரி, ஸ்ரீராமாவதார வைபவத்தை இவ்விதம் கூறி முடிக்கிறார்!..'எம்பெருமானே, உமது இந்த மானிட அவதார லீலை, மனிதர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகவே ஆகும். பிரியமானவர்களை விட்டுப் பிரிவதால் துன்பம் வரும். தர்மத்தின் மீதிருக்கும் விருப்பத்தால், குற்றமற்றவர்களையும் தியாகம் செய்வது ஏற்படும்!!.. (இதை உணர்த்துவதற்காகவே இந்த அவதாரம்). இல்லாவிட்டால், ஆத்மாராமராகிய உமக்கு மனதில் விகாரம் எங்கிருந்து வரும்?.. கால சக்கரத்தை திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் சுத்த சத்வ ஸ்வரூபியே!!, நீர் எம் வியாதியால் விளைந்த துன்பங்களைப் போக்கியருளும்'  என்று பிரார்த்திக்கிறார்!.

( ஸோ(அ)யம்ʼ மர்த்யாவதாரஸ்தவ க²லு நியதம்ʼ மர்த்யஸி²க்ஷார்த²மேவம்ʼ
விஸ்²லேஷார்திர்-நிராக³ஸ்த்யஜனமபி ப⁴வேத்காமத⁴ர்மாதிஸக்த்யா | 
நோ சேத்ஸ்வாத்மானுபூ⁴தே​: க்வநு  தவ மனஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம்ʼ ஸத்த்வைகமூர்தே பவனபுரபதே வ்யாது⁴னு வ்யாதி⁴தாபான் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) )

(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
‍பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!.

3 கருத்துகள்:

  1. தண்டகாரண்யத்தின் முட்களால் ரணப்பட்ட தமது திருவடிகளை தியானம் செய்யும் பக்தர்களின் இதயத்தில் ..... ஸ்ரீராமபிரான் என்றும் குடியிருந்து காத்து அருளுவார் என்பது கேட்க மனதுக்கு மிகவும் உருக்கமாக உள்ளது.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..