நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU... PART 28. கண்ணனை நினை மனமே!!.. பகுதி.28..பரசுராமாவதாரம்!!.


Related image
ஸ்ரீ பரசுராமர் குறித்த நிகழ்வுகள், இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு பெருங்காவியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. பட்டத்திரி, பரசுராமரின் அவதார நிகழ்வை, தத்தாத்ரேயரின் மகிமையைத் துதிப்பதிலிருந்து துவங்குகிறார்.


மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான தத்தாத்ரேயர், அத்ரி மஹரிஷிக்கும், அனுசூயா தேவிக்கும் புத்திரராக அவதரித்தார். சிறந்த பக்தனான ஹேஹய மன்னன் கார்த்தவீர்யார்ஜூனன், அவரை தரிசித்தான். அவனது பக்திக்கு மெச்சிய தத்தாத்ரேயர், அவனுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வரங்களாக அளித்தார். கார்த்தவீர்யனின் முடிவும், தம்மாலேயே ஏற்படும் என்ற வரமும் தந்தார்.

பக்தனுக்கு அளித்த வரத்தை மெய்ப்பிக்க, பகவான், பிருகு மஹரிஷியின் வம்சத்தில், ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் கடைசி புதல்வனாக அவதரித்து, 'ராமன்' என்ற பெயருடன் விளங்கினார்!!.  கார்த்தவீர்யன்  மட்டுமல்லாது, பூமிக்கு பாரமாக ஆகி விட்ட அனைத்து அரச குலத்தினரையும் அழிக்கவே பகவான அவதரித்தார் என்று பட்டத்திரி கூறுகிறார்!!.​

இருநில மன்னர் தம்மை யிருநாலும் எட்டு மொருநாலு மொன்று முடனே,
செருநுத லூடு போகி யவராவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே. (திருமங்கையாழ்வார்) ).

பரசுராமர், பதினான்கு வயதிற்குள், வேத சாஸ்திரங்களைக் கற்றார்.  ஒரு நாள், கந்தர்வ ராஜன் ஒருவனின் ஜலக்ரீடையை, பரசுராமரின் தாயார் பார்க்க நேரிட்டது. அதனால் அவள் மனம் சிறிது சலனமடையவே, அவளைக் கொல்லுமாறு  தம் புதல்வர்களுக்குக் கட்டளையிட்டார் ஜமதக்னி முனிவர். பிதாவின் கட்டளையை நிறைவேற்ற, பரசுராமரின் சகோதரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பரசுராமர், தாயையும் சகோதரர்களையும் கொல்லுமாறு கட்டளையிட்ட ஜமதக்னி முனிவரின் ஆணையை நிறைவேற்றி, தம் தந்தை சாந்தமானதும்,  தம் தாயும் சகோதரர்களும் உயிர் பெற வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றார். அவரது தாயும் பரசுராமருக்கு வரங்களை அளித்தாள்!.

(லப்³தா⁴ம்னாயக³ணஸ்²சதுர்த³ஸ²வயா​: க³ந்த⁴ர்வராஜே மனா
கா³ஸக்தாம்ʼ கில மாதரம்ʼ ப்ரதி பிது​: க்ரோதா⁴குலஸ்யாஜ்ஞயா | 
தாதாஜ்ஞாதிக³ஸோத³ரை​: ஸமமிமாம்ʼ சி²த்வாத² ஸா²ந்தாத்பிது
ஸ்தேஷாம்ʼ ஜீவனயோக³மாபித² வரம்ʼ மாதா ச தே(அ)தா³த்³வரான் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

ஜமதக்னி முனிவர், தம் மனைவியான ரேணுகா தேவியைத் திருப்தி செய்யும் பொருட்டு, பிரார்த்தனையால், தேவலோக பசுவான காமதேனுவை, தம் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார். பரசுராமர், தம் தந்தையின் கட்டளைப்படி, இமய மலைக்குச் சென்று, அங்கு பரமேஸ்வரனை ஆராதனை செய்தார். அவரிடமிருந்து பரசு (கோடாலி) என்ற் ஆயுதத்தை அடைந்தார். சிவபெருமான் குறிப்பிட்ட அசுரனையும் வதம் செய்தார். 

பிரம்மாஸ்திரம் முதலான அஸ்திங்களையும் அடைந்து, அதன் பின், அக்ருதவ்ரணர் என்னும் முனிவரது நட்பைப் பெற்றவராக தம் ஆசிரமத்திற்கு திரும்பி வந்தார்.

(தொடர்ந்து தியானிப்போம்).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்


இது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..