பகவான், வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த போது, அவனுடைய சகோதரனான ஹிரண்யகசிபு, 'என் சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை வதம் செய்வேன்!' என்று அசுரர்களின் கூட்டத்தில் சபதமெடுத்தான். சபதத்தை நிறைவேற்றுவதற்காக, பிரம்ம தேவரைக் குறித்துத் தவம் செய்து, தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியிலோ, எந்த விதமான ஆயுதங்களாலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ தனக்கு மரணம் நேரக்கூடாதென வரம் வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்ற பின், இவ்வுலகனைத்தையும் வென்று, பின்னர் தேவலோகத்தையும் கைப்பற்றினான். பின் பகவானைத் தேடி வைகுண்டம் சென்றான். அங்கு அவனால் பகவானைக் காண இயலவில்லை. உள்ளன்போடு உருகும் பக்தர்தம் உள்ளத்தில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் பரமாத்மா, ஆணவத்தோடு தம்மை வெளியுலகில் தேடுவோரின் கண்களுக்கு எவ்விதம் தென்படுவார்?!!..அனைத்துயிருள் ளும் அந்தர்யாமியாய் உறையும் பகவானை அறியாது வெளியில் தேடியும் கிடைக்காததால், அவர் பயந்து ஓடி விட்டார் என்று எண்ணிக் கொண்டான். தான் வென்று விட்டதாகக் கருதிக் கொண்டு திரும்பி விட்டான்.
இத்தகைய ஹிரண்யனுக்கு, மகா உத்தமனான பிரஹலாதன் புத்திரனாகப் பிறந்தான்.. தன் தாயிடம் கர்ப்பவாசம் செய்த போதே, நாரத முனிவர் வாயிலாக, பகவத்பக்தியின் மகிமையைக் கேட்டு, வளர்ந்தவன் பிரஹலாதன் .. எப்போதும், பகவானின் திருவடிகளில் மனதை வைத்து, பக்தர்களுக்கு ஒரு உதாரண புருஷனாக விளங்கினான்.
பிரஹலாதனது மனப்போக்கை அறிந்த அவன் தந்தை, அதை மாற்ற வேண்டுமென்று, பலவாறு, பல காலம் உபதேசித்தான். ஆனாலும் பிரஹலாதனது மனம் எப்போதும் பெருமானது திருவடிகளையே தஞ்சமடைந்திருந்தது.. அசையாத பக்தியுடனேயே அவன் வளர்ந்து வந்தான்.
ஒரு நாள், ஹிரண்யகசிபு, 'நீ படித்தவற்றுள் சிறந்த பாடம் எது?' என்று மகனை வினவ, பிரஹாலதன், 'பகவானிடம் பக்தி செய்வதே!' என்று பதிலளித்தான். இதனால் மனங்கலங்கிய ஹிரண்யகசிபு, பிரஹலாதனின் குருமார்களைக் கோபிக்க, அவர்கள், பிரஹலாதனின் பிறவிக் குணமே இது என்று சொன்னார்கள். இதனால் கோபமடைந்த ஹிரண்யகசிபு, பிரஹலாதனைக் கொன்று விட முயற்சி செய்யலானான்.
பக்தன், தன் மனதை சதா பகவானிடம் வைத்திருக்கிறபடியால், இகலோகத்தில் ஏற்படும் துன்பங்களை பொருட்படுத்துவதில்லை.. அவையனைத்தும் நிரந்தரமல்ல என்பதை அவன் அறிவான். அதே போல், இன்பங்களையும் பெரிதுபடுத்துவதில்லை.. பிரஹலாதன், சூலங்களால் குத்தப்பட்டும், அஷ்ட திக்கஜங்களான யானைகளால் மிதிக்கப்பட்டும், பாம்புகளால் கடிக்கப்பட்டும், விஷமளிக்கப்பட்டும், உணவளிக்கப்படாமலும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டான். ஆயினும், பகவானிடம் தன்னை ஒப்படைத்திருந்ததால், ஒரு கஷ்டத்தையும் அவன் உணர்ந்தானில்லை !!!!!..
(ஸ ஸூ²லைராவித்³த⁴: ஸுப³ஹு மதி²தோ தி³க்³க³ஜக³ணைர்
மஹாஸர்பைர்த³ஷ்டோ(அ)ப்யனஸ²னக³ரா ஹாரவிது⁴த: |
கி³ரீந்த்³ராவக்ஷிப்தோ(அ)ப்யஹஹ பரமாத்மன்னயி விபோ⁴
த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடா³வப⁴ஜத் || ( ஸ்ரீமந் நாராயணீயம்)).
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.
என்ற நம்மாழ்வாரின் திருவாக்கினை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்..
(தொடர்ந்து தியானிப்போம்!)..
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..