பலவாறு பிரஹலாதனைத் துன்பப்படுத்திய ஹிரண்யகசிபு, அதனாலெல்லாம் அவன் மனங்கலங்காதிருக்கவே, என்ன செய்வதென்று தெரியாமல், குருவின் சொல்படி, வருண பாசத்தால், குருவின் வீட்டிலேயே பிரஹலாதனைக் கட்டி வைத்தான்..
நாராயணனின் நினைவன்றி வேறொன்றும் அறியா பாலகனோ, குரு அருகில் இல்லாத சமயங்களில், தன்னுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு, பகவத் பக்தியையும், ஆத்ம ஞானத்தையும் உபதேசம் செய்து வந்தான். இதையறிந்த பிரஹலாதனின் தந்தை, சினம் மிகக் கொண்டு, மைந்தனிடம் 'குலத் துரோகியே!, உனக்கு யார் பலம்?' என்று கேட்க, அதற்கு பிரஹலாதன், 'எனக்கும் உமக்கும், மூவுலகுக்கும் பலம், அந்த வைகுண்டநாதனே!!!' என்று பதிலளித்தான்.
கட்டுக்கடங்காத கோபத்துடன், ஹிரண்யகசிபு, தன் வாளை வீசிக் கொண்டு, ' எங்கே அவன்?, நீ சொன்ன ஹரி எங்கே?! ' என்று கூவி, எதிரிலிருந்த தூணைப் பிளந்தான்...
இவ்விதம் விளக்கி வந்த பட்டத்திரி, அடுத்து நடந்ததைக் கூற, தமக்கு சக்தியில்லை என்கிறார்!!!!!...அடுத்து நடந்த அவதார வைபவத்தின் தன்மையை மனதில் கொண்டு, 'கருணா மூர்த்தி!' என்று பகவானைத் தொழுகிறார்!..
ஆயிரம் வரங்கள் அசுரன் கேட்டாலும், அண்டங்கள் அனைத்தையும் ஆள்பவனுக்கு அவையெல்லாம் எம்மாத்திரம்?!.. துரும்பிலிருந்து தூண் வரை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன், பக்தனின் அன்பன்றி வேறெதற்குக் கட்டுப்படுவான்?!!..ஹிரண்யனின் வரங்களை முற்றிலும் நிறைவேற்றிய வண்ணம், தூணிலிருந்து அப்பொழுதே சீறிப் பாய்ந்தது நரசிம்மம்!!!...
கீழ்வருமாறு, அவதார வைபவத்தை விவரிக்கிறார் பட்டத்திரி!..
ஹிரண்யன் தூணை ஓங்கி அடித்தான்!.. உடனேயே அதனுள்ளிருந்து ஒரு சிங்க நாதம் கேட்டது!... அது, காதைப் பிளக்கும் அளவு ஓசையுடனிருந்தது!..உலகனைத்தையு ம் நடுங்கச் செய்யும் அதைக் கேட்டு, அசுரனின் உள்ளத்திலும் நடுக்கம் உண்டாயிற்று!.. பிரம்ம தேவர் கூட, இந்த கர்ஜனையைக் கேட்டு, தம் ஆசனத்திலிருந்து நழுவினார்...
தூணிலிருந்து செங்கட்சீயம் வெளிப்போந்தருளினார்!!!!...
அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி. ( பெரியாழ்வார்).
தூணிலிருந்து வெளிப்பட்ட பகவானின் ரூபத்தைக் கண்டு, 'இது என்ன..இது என்ன..' என்று சொல்லவொண்ணாத பிரமிப்புடன் ஹிரண்யன் பார்த்து நின்றான்!.. இப்போது, பட்டத்திரி, பகவானின்
ரூபத்தைத் துதிக்கிறார்!..
' உருக்கிய பொன் போன்று பிரகாசித்துச் சுழலும் திருவிழிகள். பிடரி மயிர்கள் அசையும் போது, அவை ஆகாயத்தையே மறைப்பது போல் தோன்றுகிறது. பெரிய குகை போன்ற வாய். கத்தியைப் போன்ற நாக்கு... இரண்டு பெரிய தெற்றிப் பற்கள்..இவ்வாறான, ஆச்சரியத்திலும் ஆச்சரியமான உமது திருவுருவம், வெற்றியுடன் விளங்கட்டும்!!..'..
தப்தஸ்வர்ணஸவர்ணகூ⁴ர்ணத³திரூக் ஷாக்ஷம்ʼ ஸடாகேஸர
ப்ரோத்கம்பப்ரனிகும்பி³தாம்ப³ ரமஹோ ஜீயாத்தவேத³ம்ʼ வபு: |
வ்யாத்தவ்யாப்தமஹாத³ரீஸக²முக²ம் ʼ க²ங்கோ³க்³ரவத்³க³ன்மஹா
ஜிஹ்வானிர்க³மத்³ருʼஸ்²யமானஸு மஹாத³ம்ʼஷ்ட்ராயுகோ³ட்³டா³மரம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
' மேலெழும்பும் மடிப்புக் கோடுகளைக் கொண்ட பயங்கரமான கன்னங்கள். பருத்து, குட்டையான கழுத்து, ஒளி பொருந்திய நகங்களை உடைய, பெருத்த கரங்கள், இடி போன்றதும், எதிரிகளின் கூட்டத்தை விரட்டக் கூடியதுமான கர்ஜனை..இப்படிப்பட்ட அந்த நரசிம்ம ஸ்வரூபத்தை, நான் நமஸ்கரிக்கிறேன்!..' என்கிறார் பட்டத்திரி.. நாமும் நமஸ்கரித்து, அருள் பெறுவோம்!!..
ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ.( நம்மாழ்வார்).
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். ( திருப்பாவை).
(தொடர்ந்து தியானிப்போம்!..).
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..