நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 13 ஜனவரி, 2016

KANNANAI NINAI MANAME.. PART 47..கண்ணனை நினை மனமே!...பகுதி 47...சித்ரகேது உபாக்கியானம்... (தொடர்ச்சி..).​


சித்ரகேது, நாரதரால் மந்திர உபதேசம் அருளப் பெற்றான். ஆதிசேஷ ஸ்வரூபனான பகவானை திருப்தி அடையச் செய்ய வல்ல ஸ்தோத்திரத்தையும் பெற்றான். அவற்றின் மூலம், ஒருமுகமான மனதுடன் பகவானை நினைத்துத் தவம் புரிந்தான். அவனது தவம் ஏழு நாட்களில் மிகச் சிறந்த பலனை அளித்தது. வித்யாதரர்களுக்கு அதிபதியாகும் நிலையை அடைந்தான். ஆயினும், குறையாத பக்தியுடன் பகவானை சேவித்து வந்தான்.
அவனது பக்தி கண்டு மகிழ்வுற்ற ஸ்ரீ விஷ்ணுவானவர், வெண்மையான ஆயிரம் தலைகளுடன் கூடியவராக, தம்மைத் துதிக்கும் சித்த கணங்களால் சூழப்பெற்ற ஆதிசேஷன் வடிவில் சித்ரகேதுவின் முன் தோன்றினார். தம்மைத் துதித்த அரசனுக்கு, ஆத்ம தத்துவத்தை உபதேசித்தருளினார். அதன் பின், சித்ரகேது, பல லட்சம் வருடங்கள், பகவானின் புகழைப் பாடியபடி, பல்வேறு உலகங்களில் தன் விருப்பம் போல் சஞ்சாரம் செய்து வந்தான்.. ஆத்ம தத்துவத்தை அறிந்தவனாகையால், பற்றுதல்களில் அவன் அகப்படவில்லை..

ஆயினும், அவனிடம் இருக்கும் சிறிதளவு பற்றுதலும் அறவே நாசமடைவதற்காக பகவான் அவனை கயிலைக்குச் செல்லுமாறு பணித்தார். வெள்ளி மலையாகிய கயிலையில், பெரும் மகான்களின் முன்னிலையில், உமாதேவியாரை மடியில் இருத்திய திருக்கோலத்தில் சிவபிரான் இருப்பதைக் கண்டான் சித்ரகேது, 

அந்தத் தோற்றத்தின் தத்துவ நிலையறியாமல் பேசவே, உமாதேவியாரால் சபிக்கப்பட்டு விருத்திராசுரனாகப் பிறந்தான் ( சாபத்தைக் கண்டு அஞ்சவோ, அதிலிருந்து விடுதலையை யாசிக்கவோ செய்யாமல், சாபத்தை ஏற்றான் என்கிறார் பட்டத்திரி)...  அசுரர்களின் குல வழக்கப்படி, இந்திரனுடன் போர் புரிந்தான். அந்நிலையிலும், இந்திரனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்து, அவன் மதி மயக்கத்தைப் போக்கினான். பின் , இந்திரனால், தன் அசுரப் பிறவியின் முடிவை அடைந்து, வைகுண்டப் பதவியை அடைந்தான்.

( நிஸ்ஸம்ப்⁴ரமஸ்த்வயமயாசிதஸா²பமோக்ஷோ
வ்ருʼத்ராஸுரத்வமுபக³ம்ய ஸுரேந்த்³ரயோதீ⁴ | 
ப⁴க்த்யாத்மதத்த்வகத²னைஸ்ஸமரே விசித்ரம்ʼ
ஸ²த்ரோரபி ப்⁴ரமமபாஸ்ய க³த​: பத³ம்ʼ தே || (ஸ்ரீமந் நாராயணீயம்)).

பரம பக்தர்கள், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எம்பெருமானது கருணை, தொடர்ந்து வந்து அவர்களை ஆட்கொள்கிறது.. சித்ரகேதுவும், அசுரனாகப் பிறந்தாலும், அப்பிறவிக்கேற்ற செயல்கள் புரிந்தாலும், அவனது மனதில் பகவானின் உபதேசம் நிலைபெற்றிருந்ததால், தன் பிறவி முடிந்ததும்,  நல்ல கதியை அடைந்தான்.

அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ ழித்துநம்மை யாட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்
எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே.(திருமழிசையாழ்வார்).

ஸ்ரீமத் பாகவதம், 'நான் விஷ்ணு பக்தன், புலன்களை வென்றவன்!' என்ற சித்ரகேதுவின் ஆணவமே அவனது வீழ்ச்சிக்கு வழி செய்தது என்கிறது.. விஷ்ணு பக்தர்களில் சிறப்பான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறான் சித்ரகேது!..

(தொடர்ந்து தியானிக்கலாம்..)..

அடுத்த தசகத்தில், பக்தர்களுள் தலை சிறந்தவனாகப் போற்றப்படுகிற, மகாத்மாவாகிய பிரஹலாதனின் திவ்ய சரித்திரமும், பகவானின் நரசிம்மாவதார வைபவமும்!!...

அன்பர்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.. பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!!!..

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. இறுதியில் வைகுண்டப்பதவியை அடைந்த சித்ரகேது பற்றிய கதைச்சுருக்கம் அருமை.

    முதலில் காட்டியுள்ள கண்ணன் படத்தேர்வு பிரமாதம்.

    பிரஹலாத சரித்திரமும், நரசிம்ஹாவதார கதையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் மகர சங்க்ராந்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..