நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2012

தனுசுவின் கவிதைகள்..ஏன் ஆத்தி சூடிக்கு பள்ளியில்லை ?


இதோ
இந்த ஆதரவற்ற சிறார்களின்
கண்களைப் பாருங்கள்
அந்த பிஞ்சு விழிகளில் இருப்பது
சொல்லத்தெரியாத தேடல்!
அது
வீட்டுக்கு போகும் பாதையா?
விரும்பி அழைப்பவரையா?

தான் யார்?
தாய் யார்?
தன்
விலாசம் அறிய தத்தளிக்குதா
இந்த தளிர்கள்!

யாரை நம்பி எதை சாப்பிட?
எங்கே ஒதுங்கி யாரோடு இருக்க?
மாயம் செய்தது போல்
மறைவிலிருந்து
யாரும் அழைப்பாரா?
அணைப்பாரா?

ஏன்
கலக்கமும் பயமும்
அந்த விழிகளில்?
ஏன்
வீதியிலும் இடமில்லை
இந்த வெற்றுடம்புக்கு?
ஏன்
இந்த அனாதை சமுதாயத்துக்கு மட்டும்
ஜாதி சங்கம் இல்லை?
ஏன்
யாரோ செய்த தவறுக்கு இந்த
பிஞ்சுகள் பழி சுமக்கிறது?
ஏன்
தவறியும்
உயிர் சுமப்பதால்
இந்த ஊர் உமிழ்கிறது?
ஏன்
வயிறு மட்டும் கொடுத்தான்
யாரும் இல்லாத இவர்களுக்கு?
ஏன்
இந்த இளங்குருத்துகள்
விளைய
விளை நிலம் இல்லாமல் போனது?
ஏன்
இந்த சூரியன்கள்
உதயத்திலேயே
அஸ்தமித்தது?
ஏன்
இந்த ஆத்தி சூடிக்கு
மட்டும்
பள்ளியில்லாமல் போனது?

பருவமழையில்
பிறந்த காட்டாறு
அணையில் தங்கினால் பயனாகும்!
கடலில் சேர்ந்தால் சங்கமமாகும்!
கழிவுநீரில் கலந்தால் நாறாதோ?

ஏக்கத்தில் வளரும்
இந்த
காட்டுமரத்துக்கு வேலியில்லை!
வெட்டும் வேடனால்
வீட்டுக்கு உடைமையாகுமா?
அடுப்பில் எரிய விறகாகுமா?

எதையும் தர மறுக்கும்
இந்த உலகம்
அனாதை எனும்
பட்டம் மட்டும் தருவது ஏன்?

தானாய் வளரும்
இந்த
செடிகள்
எந்த வீட்டு தோட்டத்துக்கும்
குடியேறாதா?

இவர்களை மட்டும்
குறிவைக்கும்
அந்த தீவிரவாதம்
இவர்களை தத்தெடுக்கும் முன்
சிவப்பு விளக்கு அரவணைக்கும் முன்
இந்த பிஞ்சுகளை
நாம்
நம்மோடு சேர்த்துக் கொள்வோமா?

-தனுசு-

10 கருத்துகள்:

 1. தனுசுவின் படைப்பு நன்றக உள்ளது
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் ஒரு இடம் கொடுத்து என் ஆக்கத்தை வெளியிட்ட மதிப்பிற்குரிய சகோதரி பார்வதி அவர்களுக்கு நன்றிகள்.

  படித்த உதய குமார் அவர்களுக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 3. //எனக்கும் ஒரு இடம் கொடுத்து என் ஆக்கத்தை வெளியிட்ட மதிப்பிற்குரிய சகோதரி பார்வதி அவர்களுக்கு நன்றிகள்.//

  ஒரு இடமா!!. லேபிள் பாருங்க சகோதரரே!!. உங்கள் கவிதையை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள தனுசு! வணக்கம். தங்களுடைய கவிதை சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்ப‌ட்ட காவியம். 1800களுக்குப் பிறகுதான் நமது நாட்டில் அனாதை ஆசிரமங்கள்.தவறான உறவு முறைகளில் பிறந்த குழந்தைகள் என்பது எண்ணிக்கையில் அப்போது மிகச் சொற்பமே.அந்தக் குழந்தைகளுக்கும் ஊர் முறைச் சோறு கொடுத்து பொது ஆளாக வளர்த்தது.

  மேற்கத்திய தாக்கம் நமது நாட்டில் தோற்றுவித்தது அனாதை ஆசிரமங்க‌ளும்தான்.

  அழகு உணர்ச்சியும், காதலும், இயற்கையும் கவிதைகள் ஆனாலும், சமூகக்கவிதையால்தான் ஒரு கவிஞன் மானுடத்தை வெல்ல முடியும். வாழ்த்துக்கள்.
  கே எம் ஆர் கே

  பதிலளிநீக்கு
 5. kmr.krishnan said...அழகு உணர்ச்சியும், காதலும், இயற்கையும் கவிதைகள் ஆனாலும், சமூகக்கவிதையால்தான் ஒரு கவிஞன் மானுடத்தை வெல்ல முடியும். வாழ்த்துக்கள்.

  உண்மையுலும் உண்மை.தாங்கள் கொடுத்த ஊக்கத்தால் ரீசார்ச் ஆனது மாதிரி ஒரு உனர்வு வருகிறது, இன்னும் சமூக கவிதை எழுத ஆவல் வருகிறது.நன்றி சார் மிக்க நன்றி.

  ஒரு வேண்டுகோள் தாங்களின் ஆக்கங்களை படித்து அந்த சொல் நடையின் தாக்கம் எனக்கு வந்தது ஆச்சரியமில்லை.அதை மீண்டும் சுவைக்க ஆசைப்படுகிறேன். தாங்கள் இங்கும் அது போல் எழுதி என் போன்றோருக்கு விருந்து படைக்க கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. "சிறுபிள்ளைத்தனம்", "ஏன் ஆத்திசூடிக்கு பள்ளி இல்லை" என்ற இரு கவிதைகளுமே படித்தேன் தனுசு.
  "சிறுபிள்ளைத்தனம்" சிரிக்க வைத்தது.
  "ஏன் ஆத்திசூடிக்கு பள்ளி இல்லை?" சிந்திக்க வைத்தது.
  நன்றி தனுசு

  பதிலளிநீக்கு
 7. ///யாரை நம்பி எதை சாப்பிட?
  எங்கே ஒதுங்கி யாரோடு இருக்க?
  மாயம் செய்தது போல்
  மறைவிலிருந்து
  யாரும் அழைப்பாரா?
  அனைப்பாரா?///

  நெஞ்சைக் கனக்கச் செய்த வரிகள்...

  ஏன்? என்றக் கேள்வியே அவர்களின் வாழ்வின் மூலமாகிறது...
  அனாதையானவனின் குழந்தைகள் தாமே அவர்கள்..
  அவர்களை ஆனந்தப் படுத்தினால் அந்த அனந்தனையே ஆனந்தப் படுத்துவது தான்.
  நம்மால் முடிந்தளவு அவர்களின் வாழ்விற்கு உதவி செய்வோம்.

  அருமையான சிந்தனை மனதை ஆட்டிவைத்த கவிதை..

  நன்றிகள் கவிஞரே!

  பதிலளிநீக்கு
 8. தேமொழி said...சிறுபிள்ளைத்தனம்", "ஏன் ஆத்திசூடிக்கு பள்ளி இல்லை" என்ற இரு கவிதைகளுமே படித்தேன் தனுசு.
  "சிறுபிள்ளைத்தனம்" சிரிக்க வைத்தது.
  "ஏன் ஆத்திசூடிக்கு பள்ளி இல்லை?" சிந்திக்க வைத்தது.


  ஜி ஆலாசியம் said...ஏன்? என்றக் கேள்வியே அவர்களின் வாழ்வின் மூலமாகிறது...
  அனாதையானவனின் குழந்தைகள் தாமே அவர்கள்..
  அவர்களை ஆனந்தப் படுத்தினால் அந்த அனந்தனையே ஆனந்தப் படுத்துவது தான்.
  நம்மால் முடிந்தளவு அவர்களின் வாழ்விற்கு உதவி செய்வோம்.

  அருமையான சிந்தனை மனதை ஆட்டிவைத்த கவிதை..

  பெற்றோரின் ட்ரான்சரால் வேறு ஊர் சென்ற பள்ளிச்சிருவன் மீண்டும் உடன் படித்த நண்பர்களை சந்தித்தால் அடையும் மகிழ்ச்சியை உங்களின் பின்னூட்டங்களால் பெறுகிறேன்.

  இருவருக்கும் மிக்க நன்றிகள். மீண்டும் அடிக்கடி சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 9. "ஆத்திச்சூடி" என்று எழுதுவது பிழை.'த்' என்ற ஒற்று இங்கு கிடையாது.

  "ஆத்தி சூடி" என்பதுதான் சரி.தகவலுக்காகச்சொன்னேன். தவறாகக் கொள்ள வேண்டாம்

  பதிலளிநீக்கு
 10. //kmr.krishnan said...
  "ஆத்திச்சூடி" என்று எழுதுவது பிழை.'த்' என்ற ஒற்று இங்கு கிடையாது//

  பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி திரு.கே.எம்.ஆர் அவர்களே!!!. சரி செய்து விட்டேன்.

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..