நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

SONG # 7...THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 7...தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 7.
தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ
வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
  விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்
வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

 தூளேறு தூசுபோல் வினையேறு மெய்யெனுந்
    தொக்கினுட் சிக்கிநாளுஞ்
  சுழலேறு காற்றினிடை அழலேறு பஞ்செனச்
    சூறையிட் டறிவைஎல்லாம்
நாளேற நாளேற வார்த்திக மெனுங்கூற்றின்
    நட்பேற உள்ளுடைந்து
  நயனங்கள் அற்றதோர் ஊரேறு போலவே
    நானிலந் தனில்அலையவோ......"அழுக்கேறும் தன்மையுடைய ஆடையைப் போல், நாள்தோறும் வினையேறும் தன்மையுடைய, தேகமெனும் தோற்பையினுள் சிக்குண்டு, நெருப்பிடப்பட்ட பஞ்சானது, சுழற் காற்றில் சுற்றி அலைதல் போல்அறிவையெல்லாம்  பறி கொடுத்து, முதுமையென்னும் பெயரில், கூற்றுவனின் நட்பானது நாளுக்கு நாள் கூடுதலாகி நெருங்கி வர,  இதனால் உள்ளூர வேதனை மிகுந்து, கண்ணிழந்த பன்றியைப் போல், நானிலந்தனில் நான் அலைந்து திரிய வேண்டுமோ?!!.."

சற்றே விரிவாக..

ஆடையைத் துவைக்கும் போது அழுக்கு நீங்கினாலும், பின் மீண்டும் அழுக்கு ஏறவே செய்கின்றது.. இது ஆடையின் தன்மை.. (தூசு..ஆடை).

தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே. (சம்பந்தப் பெருமான்).

அது போல், இந்த உடலாகிய தோற்பையிலும் நாளுக்கு நாள் இருவினையாகிய அழுக்கு ஏறவே செய்கிறது...எத்தனை முறை இறைசிந்தனையில் ஈடுபட்டாலும் இத்தன்மை போவதில்லை.. இதனால், மதி மயங்குகின்றது..சுழற்காற்றில் அகப்பட்ட, தீப்பிடித்த பஞ்சு, எப்படி நாற்புறமும் சிதறிப் பறக்குமோ அவ்வாறு அறிவானது  எது உய்யும் வழியென்று புரியாமல் , நாற்புறமும் சிதறுகின்றது..

ஒவ்வொரு நாளும்  ஆயுள் குறைகிறது.. முதுமை வருவது வாழ் நாள் முடியப் போவதற்கான அறிகுறி..கூற்றுவன், நம்முடனான நட்பின் இடைவெளியைக் குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நெருங்கி வருகின்றான். இதனால் உள்ளூர வேதனை மிகுந்து, பார்வையிழந்த பன்றியானது எவ்விதம் இருப்பிடம் தெரியாது அலைந்து திரியுமோ அவ்வாறு, ஞானமாகிய பார்வையின்மையால், உயிர்கள் சென்று சேர வேண்டிய இருப்பிடமாகிய அம்பிகையின் திருவடிகளை அறியாமல், இவ்வுலகினில் தாம் அலைந்து திரிய வேண்டுமோ என்று அன்னையிடம் முறையிடுகின்றார் அடிகள்..

ஞானக் கண் பெற்றவர்களே கண் பெற்றவர்கள் என்னும் பொருளில், அவ்விதம் ஞானம் அடையாதவர்கள், இவ்வுலக வாழ்வே நிலையென்று அலைந்துழல்வார்களோ அது போல், தாமும் ஞானம் பெறாது, இவ்வுல வாழ்வில் உழலும்படியாக ஆகுமோ என்பதையே, இந்த உவமையின் மூலம் அடிகள் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்.

அன்னையின் கருணை இருக்க, இவ்வாறெல்லாம் நிகழாது என்பதும் பொருள்.. இதனையே அபிராமி பட்டர்,

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

என்று உரைக்கின்றார்.

வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி
விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்....  இந்த வரிகளில், அம்மையின் குழலழகு விவரிக்கப்படுகின்றது..

வேளேறு தந்தியைக் கனதந்தி யுடன்வென்று
    விரையேறு மாலைசூடி....'வேள்' என்பது காமவேளாகிய மன்மதனைக் குறிக்கும்.. மன்மதனின் யானை என்று இருளைச் சொல்வது மரபு.

இன்னணம் ஏகி. மன்னன்
   யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்து
   சயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும். மாதர்
   கொங்கையும். மாரன் அம்பும்.
தென்வரைச் சாந்தும். நாறச்
   சேனை சென்று. இறுத்தது அன்றே (கம்ப இராமாயணம்).

.மன்மதன் ஏறும் யானையாகிய இருளையும், பெரிய யானையையும் வென்ற கருமை நிறமுடையது அன்னையின் கூந்தல்...

கனதந்தி என்பது பெரிய யானை எனப் பொருள்படும்..

தாயுமானவடிகள், 'சித்தர் கண'த்தில்  

இரவுபக லிருளான கன தந்தி பட நூறி
    தயங் களித்திடுதலால்

என்று அருளியதை அடிப்படையாகக் கொண்டு, இங்கு கனதந்தியெனப்படுவதை,  அஞ்ஞானம் என்னும் கரிய பெரிய யானை என்று பொருள் கொள்ளலாம்.

விரையேறு மாலை என்றால் நறுமணம் மிகுந்த மாலை.. உமையவள் நறுமணம் மிகுந்த மாலைகளை கூந்தலில் சூடியிருக்கிறாள்... என்பது வெளிப்படையான பொருள்..ஆகாச தத்துவம் மறைபொருள்.

பூவிலிருந்து மணத்தை பிரிக்க இயலாதது போல் அம்பிகையையும் இறைவனையும் பிரிக்க இயலாது. இருவரது லீலையே பிரபஞ்ச இயக்கம்..

விண்ணேறு மேகங்கள் வெற்பேறி மறைவுற
    வெருட்டிய கருங்கூந்தலாய்....  விண்ணில் உலவும் கரிய மேகங்கள், அம்பிகையின் கூந்தலின் கருமை நிறம் கண்டு நாணி, உயர்ந்த மலைகளின் பின் மறைந்து கொள்ளுமாறு அவற்றை வெருட்டிய கருங்கூந்தலை உடையவள் அம்பிகை எனப் போற்றுகின்றார் அடிகள். இது வெளிப்படையான பொருள்.

இச்சைகளின் குறியீடாக, மன்மதனைக் குறிப்பிடுவதாகக் கொண்டு, விருப்பங்களையும் அஞ்ஞானத்தையும் நீக்கி வெற்றி வாகை சூட வல்ல மார்க்கம் அம்பிகையை அடிபணிதலே என்பதை குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம். கரிய மேகங்களை அன்னையின் கூந்தல் வெருட்டுதல் போல், ஆசையும் அஞ்ஞானமும் அன்னையைக் கண்டால் வெருளும் என்பது மறை பொருள்.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் 'வ்யோமகேசீ' என்னும் திருநாமத்தின் பொருளுணர்ந்து அதனை இங்கு பொருத்திப் பார்த்தல் அவசியமென்று தோன்றுகின்றது.

வாளேறு கண்ணியே விடையேறும் எம்பிரான்
    மனதுக் சிசைந்தமயிலே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.....

அம்பிகையின் திருவிழிகளை வாட்படைக்கு ஒப்பிடுகின்றார் அடிகள்.. "வாட்படை போன்ற நீண்ட திருவிழிகளை உடையவளே.. விடையேறும் எம்பிரானது மனம் உகக்கும் அழகிய மயிலே, வரையரசனாகிய இமவானுக்கு, அவனது இரு கண்ணின் மணி போன்று அருமையாக வந்து உதித்த மலைவளர் காதலிப் பெண் உமையே " என்று அம்பிகையைப் போற்றுகின்றார்...

விடையேறும் பெம்மானின் மனதுக்கிசைந்தவள் அம்பிகை என்று குறிப்பது, அம்மை, அப்பன் ஆகிய இருவரது சொரூபத்தை அறியும் வரம் வேண்டுவதன் குறியீடே என்று கருத இடமுண்டு.

முன்வரிகளையும் இவ்வரிகளையும் சேர்த்து நோக்கும் பொழுது,

"மெல்ல மெல்ல உடலாகிய தோற்பையில் வினையாகிய அழுக்கு ஏறவே செய்கின்றது.. அறிவானது நாற்திசையிலும் சுற்றி, எது உய்யும் வழியென்று புரியாமல் மயங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் கூற்றுவன் நெருங்கி வருகின்றான். பிறப்பிறப்பு சுழலிலிருந்து மீளும் வழி தெரியவில்லை...ஆசையாகிய இருளையும், அஞ்ஞானமாகிய இருளையும், தன் வாட்படை போன்ற நீண்ட விழிகளின் கடாக்ஷத்தாலேயே நீக்கி, இருவராயினும் ஒருவரேயான அம்மையப்பனின் உண்மை சொரூபத்தைக் காட்டியருளுக"வென மலைவளர் காதலிப் பெண் உமையிடம் அடிகள் விண்ணப்பிப்பதாகக் கொள்ளலாம்.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. மலைவளர் காதலி என்கிற பெயரே மிகவும் அழகாக இருக்கிறது, பார்வதி. பாடல் மனதை உருக்குகிறது. தாய்மானவடிகள் நமக்காகவும் அன்றோ உருகி உருகிப் பிரார்த்திக்கிறார்?

  அற்புதமான பாடலுக்கு அருமையான விளக்கம் எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி அம்மா!..தங்கள் பேராதரவும் நல்லாசிகளும் என்றும் எனக்கு வேண்டும்!..

   நீக்கு
 2. பாடலின் அருமையை உங்கள்
  பதிவுகளின் பொருளில் உணர முடிகிறது

  வாழ்த்துக்கள்
  வளமுடன் வாழ்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி ஐயா!..தங்கள் வாழ்த்துக்கள் என்னை பெரிதும் ஊக்குவிக்கின்றன.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..