ஸ்ரீமந் நாராயணீயம், பகவானின் லீலைகளுடன் கூட, பிரசித்தி பெற்ற சில வம்சத்தவர்களின் கதைகளையும் சொல்லி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்த வம்சத்தவர்களின் கதைகளைச் சொல்லி வருகையில், பகவானின் லீலா விநோதங்கள் இவற்றுடன் இரண்டறக் கலந்திருப்பதையும் நம்மால் உணர முடியும்.
இந்த தசகத்தில், தக்ஷன், தன் வம்ச விருத்திக்காக பகவானை நினைத்துத் தவம் புரிந்ததும், சித்ரகேதுவின் பற்று அகன்ற கதையும், பின் அவன் உமாதேவியின் சாபத்தால் விருத்ராசுரனாகி, பின் அசுர பாவனை நிறைவடைந்து அவன் முக்தி எய்தியதும் விவரிக்கப்படுகின்றன... பாகவதத்தில் இவை மிக விரிவாக விவரிக்கப்படுகின்றன. பட்டத்திரி, மிகச் சுருக்கமாகவே இவற்றை விவரித்துச் செல்கிறார்.
பிரசேதஸர்களின் புதல்வனான தக்ஷன், தன் வம்ச விருத்திக்காக பகவானை ஆராதனை செய்தான். அதனால் மகிழ்ந்த பகவானும், எட்டுத் திருக்கரங்களுடன் அவன் முன்பாகத் தோன்றி, அவனுக்கு, 'அஸிக்னீ' என்ற மனைவியை அளித்தார். தக்ஷன், முதலில் பத்தாயிரம் பிள்ளைகளையும், அதன் பின், ஓராயிரம் பிள்ளைகளையும் ஈன்றான். அவர்கள் மூலமாக, பிரஜைகளின் சிருஷ்டி அதிகரிக்கும் என்று தக்ஷன் எதிர்ப்பார்த்திருக்க, நாரத முனிவர், அந்தப் பதினோராயிரம் பேருக்கும் உபதேசமளித்தார். அதன் காரணமாக, அவர்கள் மோக்ஷ மார்க்கத்தை தழுவினார்கள். இதனால் கோபமடைந்த தக்ஷன், நாரதருக்கு ஓரிடத்திலும் நிலையான வாசமில்லாது போகட்டும் என்று சபித்தான். ஆனால், நாரதர் இதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்றார்.
பின், அறுபது பெண் மக்களைப் பெற்றான் தக்ஷன். அவர்கள் திருமண வாழ்வில் ஈடுபட்டனர். இதன் மூலமாக, வம்சம் விருத்தியானது. தேவாசுர யுத்தம் நிகழ்ந்த போது, அவனுடைய பெண் வழிப் பேரனின் புத்திரனான விச்வரூபன் என்பவன், இந்திரனுக்கு, பகவானின் மகிமை கூறும் 'நாராயண கவசம்' என்னும் ஸ்லோகத்தால் பாதுகாப்பளித்தான். இதனால் இந்திரன் வெற்றியை அடைந்தான்.
இவ்விதம் தக்ஷனின் சரிதத்தைக் கூறிய பட்டத்திரி, இப்போது சூரசேன தேசத்தை ஆண்டு வந்த 'சித்ரகேது' என்பவனின் சரிதத்தைக் கூறத் துவங்குகிறார். சித்ரகேது, புத்திரனில்லாமல் வெகு காலம் துன்பத்தை அனுபவித்தான். ஆங்கீரஸ மஹரிஷி, சிறந்ததொரு யாகத்தைச் செய்து, சித்ரகேதுவுக்கும் அவன் பட்டத்து ராணியான கிருதத்யுதிக்கும் ஒரு புத்திரன் பிறக்குமாறு அனுக்கிரகம் செய்தார். சித்ரகேதுவுக்கு தன் புத்திரன் மேலிருந்த பிரியம் கண்டு கோபம் கொண்ட அவனது மற்ற ராணிகள், குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றனர்.
இதனால் மனங்கலங்கிப் போன சித்ரகேதுவிடம், நாரத மஹரிஷி வந்தார். அவருடன் ஆங்கீரஸ மஹரிஷியும் வந்தார். நாரதர், சித்ரகேதுவின் குழந்தையின் ஜீவாத்மாவை சித்ரகேதுவுக்குக் காட்டினார். அந்த ஜீவாத்மாவானது, 'நான் யாருடைய புத்திரன்?' என்று வினவியது.. (ஸ்ரீமத் பாகவதத்தில், இந்த நிகழ்வு விரிவாகக் காட்டப்படுகின்றது. ஜீவன், சித்ரகேதுவிடம், 'பொன் முதலான பொருட்கள், எவ்வாறு பண்ட மாற்று முறையில் மாறி மாறி வருகின்றனவோ, அவ்வாறே, ஜீவனும் வெவ்வேறு பிறவியில், வெவ்வேறு தாய் தந்தையரிடம் மாறி மாறி வருகிறது. எல்லாரும் எல்லாருக்கும், தொடர்ந்து பந்துக்களாகவும் மித்திரர்களாகவும் சத்ருக்களாகவும் மாறி மாறி ஆகின்றனர்' என்று தொடங்கி, நிலையாமையை விவரிக்கிறது..). இதன் காரணமாக , அரசனுடைய புத்திர மோகம் அகன்றது.. பகவானை ஆராதிக்கத் துவங்கினான் சித்ரகேது..
( தம்ʼ நாரத³ஸ்து ஸமமங்கி³ரஸா த³யாலு:
ஸம்ப்ராப்ய தாவது³பத³ர்ஸ்²ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கி³ரா விமோஹம்ʼ
த்யக்த்வா த்வத³ர்சனவிதௌ⁴ ந்ருʼபதிம்ʼ ந்யயுங்க்த || ( ஸ்ரீமந் நாராயணீயம்) )
" குலந்தா னெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்,
நிலம் தோய்நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா.,
அலந் தேன்வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே ".
என்ற திருமங்கையாழ்வார் திருவாக்கினை, இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்...
(தொடர்ந்து தியானிப்போம்..).
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
தங்களின் இந்தத்தொடர் பதிவினில் கதைகளும் உபகதைகளும் வாசிக்க வாசிக்க மனதுக்கு இதமாக உள்ளது. நிலையாமையை விளக்கிக்கூறும் மிகவும் அருமையான பதிவாக இது உள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு